Monday, 4 June, 2018

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே!27.5. 2018 .அன்று உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை.
மேற்கு ஆப்ரிக்காவின்  குட்டித் தீவான மாலி சமீப காலங்களில் உள் நாட்டு போரில் உழன்று கொண்டிருக்கின்றது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன அதனைத் தடுக்க உலக நாடுகள் சபை அமைதி காக்கும் படையும் அங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது என்ற செய்தியும் அறிந்திருப்பீர்கள். மாலி தீவானது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 ம் ஆண்டு மாலி தீவு பிரான்ஸ் பிடியிலிருந்து மீண்டு விடுதலை பெற்றது. அந்த நாட்டின் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் உள்நாட்டுப் போரில் பல மக்கள் கள்ளத் தோனியில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அப்படி தஞ்சம் புக வந்தவர் தான் 22 வயதான மோமோது கசமா என்ற இளைஞர்.
27 .5 .2018 அன்று பாரிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் அனைவரும் மேல் நோக்கி கூக்குரலுடன் பார்த்துக் கொண்டு பரபரப்பாக இருந்தனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதியில் தனது முதுகில் ஏற்றப் பட்ட சிறிய பையுடன் ஹோட்டலில் தேநீர் அருந்த வந்திருந்த மோமது அவர்கள் பார்க்கும் திசை நோக்கி தனது கண்ணை நோக்கினார். அங்கே நான்காவது மாடியில் வெளியில் உள்ள கண்ணாடி பால்கனி விளிம்பை பிடித்துக் கொண்டு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டு இருப்பதனை பார்த்து அதிர்ச்சியுற்று சிறிதும் யோசிக்காது தனது முதுகுப் பையனை வைத்து விட்டு மட மட என்று 38 வினாடியில் நான்காவது மாடியினை எந்த உறுதுணையுமின்றி ஏறி அந்த சிறுவனை அலாக்காக தூக்கி பால்கனி உள்ளே இழுத்து காப்பாற்றி விட்டான். உலகில் 'ஸ்பைடர் மேன்' சாகசங்கள் என்று வரும் தொலைக் காட்சி செய்திகளை கண்டுள்ளோம். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு செய்யப் படுகின்ற அதிசயங்கள். மாலி தீவின் மோமோது செய்தது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் செய்த சாதனையாகும் என்றால் அதிசத்திலும் அதிசய சாதனை தானே. அதுவும் கள்ளத்தோணியில் தஞ்சம் புக வந்த வாலிபருக்கு உள்ள வீரமும் தீரமும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே.
            அந்த சிறுவனின் தாயார் தனது தாயாரைப் பார்க்க பக்கத்து நகருக்கு கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்றிருக்கின்றார். தந்தையோ தனது 4 வயது தனயனை வீட்டில் வைத்து விட்டு பூட்டிவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். கடையில் சாமான்கள் வாங்கி விட்டு நேரே வீட்டுக்கு வராமல் வரும் வழியில் உள்ள வீடியோ கேம்ஸ் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததால் சிறுவனைப் பற்றிய கவலை அவருக்கு தெரியவில்லை. சிறுவனோ எவ்வளவு நேரம் வீட்டில் அடைபட்டு இருப்பான். ஆகவே அந்த அறியா பாலகன் வேடிக்கை பார்க்க பால்கனியியை திறந்து கொண்டு வந்தவன் அதன் வழியே அப்பாவை தேடி போய் விடலாம் என்று எத்தனித்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தொலைக் காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்து அலறிய தாய் தன் தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து அன்பு மகனை அள்ளிக் கொஞ்சி அவனைப் காப்பாற்றிய மோமோதை வானளாவ பாராட்டியுள்ளார். அவர் மட்டுமா தொலைக் காட்சி நேரலையினைக் கண்ட லட்சோப லட்சோப  பாரிஸ் நகர மக்கள் பாராட்டியுள்ளனர். இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன், மோமோதை தன்னுடைய மாளிகைக்கு அழைத்து நாட்டின் உயர்ந்த விருது வழங்கி, குடியுரிமையும் கொடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்சி பணியில் ஒரு வேலையும் வழங்கி யுள்ளார்.  தமிழில் ஓர் பழமொழி உண்டு. 'கும்பிடபோன தெய்வம் கூரையினை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று. புகலிடம் தேடி கள்ளத்தோணியில் வந்த மோமோதுக்கு அந்த சிறுவன் உருவில் தெய்வமாக வந்து புகழின் உச்சாணிக்கே சென்று விட்டான். அப்போது அங்கே வந்த நிருபர்கள் மோமோதை சூழ்ந்து கொண்டு, 'நீங்கள் எப்படி இந்த அதிசயத்தினை செய்தீர்கள்' என்று கேட்க, அதற்கு அவர், 'கூக்குரல் கேட்டு தேநீர் அருந்திய நான் ஓடி வந்து பார்த்தபோது அந்த சிறுவன் தொங்கி கொண்டு இருந்தான், எனக்கு உடனே அவனை காப்பாற்ற வேண்டும் என்று எந்த உறுதுணையும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஏறினேன், அதற்கு என் இறைவன் உறுதுணையாக இருந்தான்' என்று கூறி இருப்பது எப்படி ஒரு முஸ்லிம் இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று ஒரு சிறந்த உதாரணமாக உங்களுக்கு தெரியவில்லையா? சிலர் ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்கின்றார்கள், சிலர் வசதி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்று வருத்தப் படுகிறார்கள் அவர்களுக்கு இறை பக்தியுடன் சோம்பேறித்தனமாக இல்லாமல் எந்த வேலையும் ஆரம்பித்தால், 'வெற்றிமேல் வெற்றி வந்து உங்களை சேராதா சகோதர, சகோதரிகளே!
            உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்!
கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியாமல் இருக்க முடியாது.. அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப் பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013  னிலும், பிராவோ விருதினை 2014 லிலும் பெற்றவர். அவருடைய கால்கள் ‘ஆக்டொபஸ்’ போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள் கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை ‘பொலபொ பால்’ என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.
அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018)  இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது. இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3 2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம் என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது  வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!
Sunday, 20 May, 2018

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
தென்  கொரியா பியாங் சங்கில்  2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்பு தென் கொரியா-வட கொரியா இணைந்து பணியாற்ற முடிவெடுத்து விட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தது உலகமே அதிசயமாக திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால்  தென் கொரியா அமெரிக்கா ஆதரவுடன்  இருக்கும் நாடு. வட கொரியா கிம் ஜோங் என்ற ஒரு இரும்பு மனிதன் பிடியில் இருக்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சந்ததியார் நாடு. இரு துருவங்களை இணைத்தது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்றும் பறை சாற்றினர் என்றும் உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-வட கொரியா ஜனாதிபதிகள் வருகிற ஜூன் மாதம் 12 ந் தேதி சிங்கப்பூரில் சந்திக்கப் போவதாக அதிகாரப் பூர்வ செய்திகளும் அறிவிக்கின்றன.
இது எவ்வாறு நேர்ந்தது என்று சிறிது பின் நோக்கி பார்ப்போமேயானால் தெரியும் வட கொரியாவின் வலிமைப் பற்றி. நுகிளர் அணு ஆயுதங்கள் சோதனைகள் தடை இருக்கும் போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுத பரிசோதனைகள் எத்தனை முறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தாலும் அதனை நடத்திக் காட்டி,  அமெரிக்கா ஹவாய்  தீவினையே அழிக்கும் திறமை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று வெறும் பயமுறுத்தல் மட்டுமல்ல மாறாக அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதத்தினையும் வெடித்து உலகமே மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு மாபெரும் சக்தியாக வட கொரியா விளங்குகிறது. இவ்வளவிற்கும் அந்த நாடு பணக்கார நாடு அல்ல. மாறாக மக்கள் உடல் உழைப்பினால் முன்னேறி அமெரிக்கா எத்தனை தடை விதித்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாகா திகழ்கிறது. ஆகவே தான் அமெரிக்காவும் வட கொரியாவிடம் சமரச பேச்சுக்கு அழைப்பு விட்டுள்ளது.
இதனையே சற்று இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலைகளை எண்ணிப் பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் எண்ணெய் வளம் பெருக்கி ஓடுகிறது. வெளிநாடுகளுக்கு எண்ணெய்களை விற்பது மூலம் வருமானம் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல்களும், ஆடம்பர வில்லாக்களும், ஆடை ஆபரணங்களும், செல்வகுளிப்பில் மூல்கிக் கிடக்கின்றனர். தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டினர் உதவி தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏன் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும்  கார்களை ஜொலிக்கும் தங்கங்கள் வைர வைடூரியங்கள் கொண்டு அலங்கரித்தும், தங்கள் கழிவு டாய்லட்டுக்கு தங்க முலாம் பூசும் அளவிற்கு கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண உலக முஸ்லிம் ஒருவேளை கஞ்சிக்கே தகிடு தத்தம் போடுகிறான் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பணக்கார முஸ்லிம் நாடுகள் கூட அணுவினை கொண்டு ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த முடியாத பரிதாப நிலை உள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் வெளி நாட்டுக் கல்விகள் கற்றாலும் அதனை பயன் படுத்துவதில்லை. ஏனென்றால் பாட்டன், பூட்டன் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது என்ற ஆணவத்தால். அவ்வாறு எண்ணியதால் தான் இராக், லிபியா போன்ற நாடுகள் அழிந்து கொண்டுள்ளது. சிரியா போன்ற நாடுகள் ஈரான், ரஷியா போன்ற நாடுகளின் உதவியால் நிலைத்து நிற்க முடிகிறது. வட கொரியா  போன்று சொந்தக் காலில் பலம் பெறமுடியா நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளை ஆட்டிப் படைக்க இரு துருவங்களாக ரஷியாவும், அமெரிக்காவும் திகழ்வதால் தான். சீன நெடுங்காலம் இரும்புத்திரையில் இருந்து இப்போது தான் தன் வலிமையினை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனாவும் மூன்றாவது வல்லரசுக்கு சி ஜின்பிங் தலைமையில் கோலோச்சும் என்றால் மிகையாகாது.
இரு துருவங்களாக இருந்த ரஷியாவும், அமெரிக்காவும் ஆயுத போட்டியில் இறங்கியதால் ‘கோல்டு வார்’ என்ற சகாப்தம் ஆரம்பமானது. அமரிக்காவினை ஆண்ட ரீகன் காலத்தில் அமெரிக்கா வல்லமை பெற்றதால் ரஷியா ஜனாதிபதி கோபர்ச்சேவ் ஈடு கொடுக்கமுடியாமல் டிசம்பர் 25, 1991அன்று சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதாக அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அமெரிக்கா உலக வல்லமை பெற்ற முடிசூடா மன்னராக திகழ்ந்தது. ஆனால் 2000 ஆண்டு புடின் ரசியாவின் ஆட்சிக்கு வந்த பிறகு பக்கத்து செச்சென்யா முஸ்லிம்  குடியரசு  ரசியாவால் கைப்பற்றப்பட்டது. அத்தோடு நில்லாமல் அமெரிக்கா ராணுவம் ஈராக்  சதாம் ஹுசைன் மனிதக்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈராக்கினை கைப்பற்றி, சதாம் ஹுசைன் சிறைப்பிடிக்கப் பட்டபோது ஜார்ஜ் புஸ்ஸை ரசிய புடின் உங்களது போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அண்டை நாடான  ஈரானுக்கோ, குவைத்துக்கோ, வட கொரியாவிற்கோ நீடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரசியாவினை வலிமை உள்ள நாடாக ஆக்கினார்.

இதுதான் சமயமென்று இரான் ரசியாவுடன் 27 பிப், 2005 அன்று அணு உற்பத்தி சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன் பின்பு அமெரிக்கா-பிரான்ஸ் கூட்டுப் படை லிபியாவின் மீது தன் கவனத்தினைத் திருப்பி 2011 லிபிய நாடு பிடிக்கப் பட்டதோடு அதிபர் கடாபியும் கொல்லப் பட்ட கதை உங்களுக்குத் தெரியும்.
ருசியாவின் புடின் தனது அண்டை நாடான உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014 ஆண்டு கைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், பக்கத்து நாடான  போலந்து நாட்டையும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் உங்கள் நாட்டினை ஒரு வார காலத்திற்குள் தன்னால் பிடிக்க முடியும் என்று அறைகூவல் விட்டது, அதனை கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்தது ஐ.நா.பொது சபை மட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தான் என்றால் மிகையாகாது.
ரசிய,அமரிக்கா ஆயுத போட்டியால் அழிந்தது ஈராக், லிபியா மற்றும் சிரியா நாடுகள். ஈராக்கில் ஷியா ஆட்சி ஈரான் ஷியா அரசு ஆதரவுடன் நிலை நாட்டையும், சிரியா நாடு  ஈரான் மற்றும் லெபனான் கொசுபுல்லாஹ் அமைப்புடன் கூடிய ஷியா ஆட்சி நடத்தியும், லிபியாவில் நிலையில்லா மகனே சமத்து என்று பல பிரிவு ஆட்சியையும் நடத்த வழிவகுத்தது.
ஐநா பொதுச்சபை 29 நவம்பர் மாதம், 1947 பாலஸ்தீன நாட்டினை இரண்டாக பிளந்து இஸ்ரேல் என்ற யூத நாட்டினை உருவாக்கியதில் மூலம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப் பட்ட பரிதாப நிலை வந்து விட்டது. இன்னும் பாலஸ்தீன தனி நாடாக ஐநா அங்கீகரிக்க முடியாத கை எழாத நிலை உள்ளது. இதுவரை ஜெருசலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொது வழிபாடும் இடமாக இருந்ததினை மாற்றி ஜெருசலத்தில் அமெரிக்கா தூதரகம் அமைத்தது மூலம் ஜெருசலம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தம் போல ஆக்கி விட்டது. அந்த முடிவை எதிர்த்த ஆயிதமில்லா நிராயுத பாணியா பாலஸ்தீன மக்களை 65 பேர்களை கொன்றும், ஆயிரக்கணக்கில் காயம் ஏற்படுத்தியும் செய்துள்ளது இஸ்ரேல், அதனை தட்டிக் கேட்க எந்த நாடும் வரவில்லை. முஸ்லிம் செல்வ நாடான சவுதி அராபியா இளவரசரோ, பாலஸ்தீனர்களைப் பார்த்து ‘நீங்கள் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சொல்படி கேளுங்கள் இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு இருங்கள்  என்று அறிவுரை கொடுக்கின்றார்’. இதைவிட அந்த நாடு வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்கலாம்.

ரசிய ஆயுதப் போட்டியால் சிரியாவிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் ஷியா அரசு அங்குள்ள மற்ற பிரிவினரை மனித கொல்லி ஆயுதங்கள் மூலம் கொன்றும், குண்டு மழை பொழிந்தும், மாட மாளிகைகள் தகர்க்கப் பட்டும், காயம்பட்டோர் சிகிச்சை பெரும் மருத்துவ மனை தகர்க்கப் பட்டும், மின்சாரம் நிறுத்தப் பட்டும், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்ற நிலை உண்டாக்கியும், தன் நாட்டு மக்கள் கடலை நோக்கி ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு காடோ செடியோ என்று ஓடும் பரிதாப நிலை காண நேரும்போது கல்நெஞ்சையும் கரைக்கின்றது. இஸ்ரேல் குண்டு வீச்சில் பத்து மாத பாலஸ்தீன பிஞ்சு குழந்தை இறந்த செய்தி கேட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டுயுள்ளது. ஈராக், சிரியா, லிபிய, பலஸ்தீன மக்கள் படகுகளில் பொதிமூட்டைபோல ஆழமான கடலில் பயணம் மேற்கொள்ளும்போது படகு பாரந்தாங்காது கவிழ்ந்து கடலே கபர்ஸ்தானாக ஆகும் காட்சி பாலும் நெஞ்சை உறுக்கிவிடுகிறது.
அந்த நாட்டிலுள்ள பிஞ்சிலம் பாலகர்கள் தங்களுக்கென்று ஒரு புகலிடம் இல்லையே, நல்ல உடை இல்லையே, உண்ண ஒரு வாய் உணவு இல்லையே,' ஓதுக'  என்று அல்லாஹ் சொன்னானே அந்த கல்வியைக் கற்க ஒரு பள்ளி இல்லையே என்று ஏங்கி அழும்போது தாயுள்ளம் படைத்த யாருக்கும் இரக்கம் வரும் ஆனால் ஏன் அந்த அதிகார கும்பலுக்குத் தெரியவில்லை என்று இன்னும் புரியாத புதிராக உள்ளதே!
அந்த அதிகார கும்பலுக்குப் புரிய வேண்டும் என்று தான், வட கொரியா அதிபர் தானும் வல்லரசு நாடாக உருவெடுத்தால் தான் தன்னை மதிப்பார்கள் என்று தனது மக்கள் தேவையினை சுருக்கி நாட்டினை வலிமைப் படுத்த அதி நவீன ஆயுதங்களை தயாரித்து ஆதிக்க நாடான அமெரிக்காவிற்கு சவால் விட்டார். அதன் பயன் தான் அவருக்கு தென் கொரியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு, சிங்கப்பூரில் அமெரிக்கா ட்ரம்ப் அங்கே வந்து வட கொரிய அதிபரை சந்தித்து சமரச பேச்சு என்ற செய்தி.
முஸ்லிம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வட்டலப்பம் ஆகும். அது முட்டை, தேங்காய் பால், சீனி ஆகியவற்றினை கொண்டு சமைத்து சுவையாக உண்ணக்  கூடிய உணவு. அந்த உணவு போல உணவு உண்ணும் வித மாக வட கோரிய அதிபருக்கு சிங்கப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு. அதுவும் யார் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர். ஆனால் சொந்த வீட்டினை, நாட்டினை, உண்ண உணவு, உடுக்க உடை, படிக்க பள்ளிக்கூடம், காயம்பட்டோர் சிகிச்சை பெற மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு வயிறு முட்ட உண்டவன் செமிக்காமல் போடும் புளிச்சேப்பம் தான் என்றால் அந்த நிலை மாற வேண்டுமா என்று கேட்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது முஸ்லிம் நாடுகளுக்கு,
எவ்வாறு ரசூலுல்லாஹ் தனி மரமாக இருந்து இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி நிலை நிறுத்தி  அராபிய, ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகள் வரை முஸ்லிம் ஆட்சி நிலை நிறுத்தப் பட்டது என்று சிறிது சிந்திக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் 'ஓதுக' என்று கட்டளையிட்டான் எதற்காக, முஸ்லிம் நாடுகள் தங்களுடைய செல்வத்தினை விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுத்தி வட கொரிய நாடு  போன்று  நவீன ஆயுதங்கள் தயாரித்து, பொறியிலில் நவீனங்கள் செயல் படுத்தி தன்னிறைவு நாடுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மட்டும் தான் முஸ்லிம்கள் உலகில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்றால் மிகையாகுமா!

Thursday, 26 April, 2018

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!(டாக்டர் . பீ. முகமது அலி, பிஎச்.டி, .பீ.எஸ்()

களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்' என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7)
'மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்' அல் குரான்(35:11)
'அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா' என்றும் சொல்லியுள்ளது குரானில்(36:77)
காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்(  1809-1882)   மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப்  பட்ட புத்தகம், 'மனிதப் படைப்பின் ஆரம்பம்'( on the origin of species)    
அதனில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று நம்பும்படி எழுதியுள்ளார்.
அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட  முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.
ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, 'நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை' என்கிறார்.
            இதனையே தான் அல் குரானும் மனிதப் படைப்பான ஆதமையும்-ஹவ்வாவையும் எவ்வாறு படைத்தான் என்று விளக்கமாக கூறுகின்றது.
அதனை உறுதிப் படுத்தும் விதமாக விஞ்ஞானி டாக்டர் கெல்லிஸ் சில்வர், தனது, 'மனித இனம் தோன்றியது பூமியிலல்ல' என்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளார்.
            இஸ்லாம் வானுலகில் பல கண்டங்கள் உள்ளது என்றும், அதில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மலக்குகளும், ஜின்களும் உள்ளன என்று கூறுகின்றது. இதன் மூலம் கோள்களில் வேற்றுக் கிரக வாசிகள் வாழ்வது சாத்தியமே என்று கருத வேண்டியுள்ளது. சமீபத்தில் நாசா விண்கல சோதனை மையத்தின் அருகிலேயே மூன்று அதி நவீன ஒளி கொண்ட உருவ அமைப்புகள் கொண்டவை தெரிந்ததாக தரையில் உள்ள நாசா மையம் தொலைக் காட்சியில் தெரிவித்தது.
            அத்தோடு பூமி ஒரு சிறை போன்றும் அதனில் மனிதன் தனது ஆரம்பக் காலத்தில் இயற்கை, விலங்குகளோடு போராடி வெற்றியடைய வேண்டியிருந்தது என்றும் கூறுகின்றார், டாக்டர் கெல்லிஸ் சில்வர்.
            இஸ்லாத்தில் ஆதம்(அலை) அவர்களை மனிதனின் தந்தையாகவும், ஹவ்வா (அலை) அவர்களை  தாயாகவும் கருதப் படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் பூமியிலுள்ள ஒரு பிடி மண்ணை எடுத்து வர மலக்கு மார்களிடம் கட்டளையிட்டு, பல மலக்குகள் மலைத்த போது ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மட்டும் பூமியின் பல்வேறு இடங்களில், பலவிதமான மண்களை சேகரித்து ஒரு பிடி மண்ணினை இறைவனிடம் கொடுத்து, அதனை இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான். அதனால் தான் ஆதம் அவர்களின் சந்ததி மனிதர்கள் பல நிறத்தில் இருக்கின்றார்கள் என்ற கூற்றும் உள்ளது.
            ஆதமைப் படைத்த அல்லாஹ் மற்ற மலக்குகளிடம் ஆதம் அவர்களின் கட்டளைக்கு கீழ்பணிய கட்டளையிட்ட போது இப்லிஸ் மட்டும், தான் நெருப்பினால் படைக்கப் பட்டவன், எப்படி மண்ணால் படைக்கப் பட்ட மனிதருக்கு கீழ்ப் பணிவேன் என்று மறுத்து விட்டதாகவும் சொல்லப் பட்டுள்ளது அல் குரானில்.
ஆதம் அவர்கள் நித்திரையில் இருக்கும்போது அல்லாஹ், அவரின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா(அலை) அவர்களைப் படைத்ததாகவும் கூறப் பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழங்களை பறித்து திண்ணாதீர்கள் என்ற கட்டளையினை செவி மடுக்காது இப்லிஸ் வழி கெடுத்தல் மூலம் பழத்தினைப் பறித்து அதனை உண்டு இறைவன் கோபத்திற்கு ஆளாகி பூமி என்ற சிறை அனுபவிக்க அனுப்பப் பட்டதாக கூறப் பட்டுள்ளது(2 .36 ) அதன் பின்பு ஆதம்(அலை) மற்றும் ஹவ்வா(அலை) அவர்கள் பூமியில் தனித்தனியே பிரிந்து இறுதியில் அரபாத் மலையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப் பட்டுள்ளது.
ஆகவே பூமி பல கோளங்களின் ஒரு பிரிவாக அமைந்து, அதில் மனித இனம் எதிர் நீச்சலடிக்கும் ஒரு பிறவியாக
அல்லாஹ் படைத்து வாழ்க்கை ஒன்றை அமைத்து அதில் இன்பம், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்றும், மற்ற விலங்குகள் போலல்லாது மனித இனம் புனிதமானது என்ற அந்தஸ்தினை வழங்கிய ஏக நாயனுக்கு நன்றி செலுத்த மட்டும் நாம் ஏன் மறுக்க வேண்டும்!

Saturday, 7 April, 2018

என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்!(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
கி.பி.634 லிலிருந்து கி.பி.644  வரை அராபியாவில் இரண்டாவது கலிபாவாகி முஸ்லிம்கள் ஆட்சியினை அரேபியாவிலிருந்து மெசபொமோடோமியா, சிரியா, இரான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தியவர். முஸ்லிம் அல்லாத மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் உமருடைய நீதி நிறைந்த ஜனநாயக ஆட்சி முறை பற்றி பாராட்டப் பட்டவர். அவருடைய சீரிய புகழ் பற்றி சென்ற  6 4 2018 அன்று மண்ணடி செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளியில் சேலத்தினைச் சார்ந்த ஒரு இமாம் ஆற்றிய உரை மிகவும் சிறப்புடையதாக இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
            இன்று காவேரி தண்ணீருக்காக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. அது ஆட்சியினர் குறையே என்றால் மறுக்கமுடியாது. ஒரு தடவை கலிபா உமர் அவர்கள் பக்ரா என்ற ஊருக்கு வருகை  தந்தார்கள். அங்கே தண்ணிர் பஞ்சம் தலை விருத்தாடியது. அந்த ஊரில் தனது நீண்ட நாள் நண்பரினை சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பரிடம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் படுகிறதா கேளுங்கள் தருகிறேன் என்றாராம், அந்த நபர் வறுமையில் வாடும் நிலை கண்டு. ஆனால் அந்த நண்பரோ தனக்கும் தனது குடும்பத்திற்கும் பொன்னும், பொருளும் கேட்கவில்லை. மாறாக அந்த நகருக்கு தண்ணிர்  பஞ்சத்தினைப் போக்கும் விதத்தில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாராம். உடனே அந்த நகர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவும் படி பக்ரா அணையினை காட்டினாராம். அதனை இன்றும் ஹஜ், உம்ரா செல்பவர்கள் காண முடியும்.
            உமர் அவர்கள் மக்கள் குறை தீர்ப்பவராக இருந்ததால் ஒரு தடவை அதிகாலை நேரத்தில் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு பள்ளியில் சில இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர்களை பார்த்து ஏன் தொழுகை முடிந்து உடனே விரைந்து சென்று குடும்பத்திற்கு தேவையான பொருள் சம்பாதிக்க வில்லை என்று கேட்டார்களாம். அந்த இளைஞர்களோ, நாங்கள் ஏமன் நாட்டிலிருந்து நேற்று இரவு வந்து தங்கி காலையில் வியாபாரத்திற்காக செல்ல வேண்டும் என்று கூறினார்களாம். அதனைக் கேட்ட உமர் அவர்கள் நல்ல வேலையாக தப்பித்தீர்கள், இந்நேரம் இந்த நகர வேலை செய்யாமல் சோம்பேறியாக வெறுமனே கதை பேசும் இளைஞர்களாக இருந்தால் இந்தக் கல்லைக் கொண்டு தாக்கியிருப்பேன் என்கிறார்களாம். இது எதனைக் காட்டுகின்றது என்றால் பள்ளியில் தொழுகை முடிந்ததும் வீண் பேச்சுகள் குறைத்து குடும்பத்தினை காப்பாற்ற தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையினைத் தானே காட்டுகின்றது. ஆனால் ஒரு மாத, மூன்று மாத, ஆறுமாத ஜமாத்து என்று இளைஞர்களை படிப்பு, வியாபாரம், குடும்பத்தினை புறக்கணித்து அழைத்துச் செல்வது  நியாயமா என்று கேட்காத தோனவில்லியா உங்களுக்கு. எனக்குத் தெரிந்த ஒரு ஜாமத்திற்கு சென்ற இளைஞர் தாய் நோயாய் இருக்கும்போது வயதான தந்தையினை அருகில் விட்டு விட்டு 15 நாள் ஜமாத்திற்கு சென்றதும், தாய் மவுத்தானதும் அந்த இளைஞர் எங்கே இருக்கின்றார் என்று கூட அறிய முடியா ஜமாத்தின் நிலை இருந்த ஒரு நிகழ்வுனை அறிவேன். ஜாமத்திற்கு சென்ற அந்த இளைஞரின் கைபேசியினை அந்த குழுவின் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டாராம் என்ற பரிதாபமான நிலையினைப் பாருங்கள். சில பள்ளியில் அஸர் தொழுது விட்டு வெட்டியாக இஷா வரும்வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து வீனே வம்படிக்கும் சிலரைக் காணலாம். இதுபோன்ற நிகழ்வு தேவைதானா. ஏன் அந்த நேரத்தில் வீட்டிற்கு தேவையான காரியங்களை செய்யக்கூடாது.
            உமர் அவர்கள் மக்களிடம் குறை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் ஆளுமை படைத்தவராக இருந்தார்கள். ஒரு தடவை மக்கள் குறை கேட்கும் நேரத்தில் ஒரு கவர்னர் பற்றி, 'அவர் தனது வீட்டிற்கு மிகவும் அதிகமான பொருட்ச் செலவில் கதவு அமைத்துள்ளார்' என்ற புகார் வந்ததாம். உடனே அந்த கவர்னரை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாராம். அங்கே கலீபா உமர் அவர்களுடைய வீட்டின் முன் வாசலில் கதவு எதுவுமில்லாமல் ஒரு கோணிப் பை மறைப்பாக தொங்கியதாம். உடனே அந்த கவர்னர் வருந்தி தனது ஆடம்பர கதவினை நீக்கி விட்டாராம். ஆனால் இன்றைய ஜனநாயக நாட்டில் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தனது காலைதேநீருக்காக ரூ 3 .5 கோடி இரண்டரை வருடத்தில் செலவு செய்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப் பட்டுள்ளது.
            இன்னொருமுறை ஒரு கவர்னர் பற்றி மூன்று புகார்கள் சொல்லப் பட்டதாம். 1 ) காலையில்   குறிப்பிட்ட நேரத்தில் அலுவலுகத்திற்கு வராமல் காலந்தாழ்த்தி வருகிறார், 2 ) விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வருவதில் லை, 3 ) இரவு நேரங்களில் அலுவல்கள் பார்ப்பதில்லை என்பதான  குற்றச் சாட்டாகும் . ஒரு தடவை உமர் அவர்கள் சபைக்கு அந்த கவர்னர் வருகை தந்ததும் மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் பற்றி கேள்வி கேட்கப் பட்டதாம். அந்த கவர்னர் முதலாவது குற்றச் சாட்டிற்கு ப் பதிலாக, 'கலீபா அவர்களே, என் மனைவி நோய் வாய்ப் பட்டவள், அவளுக்கும் என் பிள்ளைகளுக்கும் சமையல் செய்து, அவளுக்கு நோய்க்கான மருந்துகள் கொடுத்து விட்டு வர தாமதமாகிறது என்றாராம். உடனே கலீபா அவர்கள் அந்த கவர்னர் நெற்றியில் முத்தமிட்டாராம். இரண்டாவது குற்றச் சாட்டிற்கு, எனக்கு உடுத்த ஒரே ஆடை தான் உள்ளது அதனை விடுமுறை நாட்களில் துவைத்துப் போட்டு காயவைத்து உடுத்திக் கொள்வதிற்க்காக வருவதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவருடைய நெற்றியில் இரண்டாம்முறையாக முத்தமிட்டு, 'நான் கூட இரண்டு ஆடை வைத்துள்ளேன்' என ஆதங்கப் பட்டாராம். மூன்றாம் குற்றச்சாட்டிற்கு 'நான் பகல் நேரத்தில் படைப்பினங் களுக்கு சேவை செய்து விட்டு இரவு நேரங்களில் படைத்தவனுக்கு எனது நன்றி செலுத்தி தொழுவதால் இரவு அலுவல் செய்வதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு அவர் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எவ்வளவு அளவிற்கு விசுவாசமாக இருக்கின்றார் என்று சபையினரை நோக்கிச் சொன்னார்களாம்.
            நமது இளைஞர்கள் தற்போதைய நிலையினை மேற்கூறிய கருத்துக் களோடு ஒப்பிட்டுப் பார்க்க கடமை பட்டுள்ளோம். பெற்றோரை பேனிக் காப்பதில்லை, மனவியினை தன் உடலின் ஒரு உறுப்பாக கருதாமல் தனக்கு நோய் வந்தால் அவள் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும், அவள் நோய் பட்டு விட்டால் பிறந்த வீட்டிற்கு அனுப்பி அங்கே வைத்தியம் பார்த்து விட்டு வா என்று மூட்டை முடிச்சுடன் அனுப்பும் செயலும் இருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஒரு மணமக்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அந்த மணமகள் திடீரென்று மயக்கம் அடைந்து கணவன் வீட்டில் விழுந்து விடுகிறாள். உடனே கணவன் வீட்டார் அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் லோ சுகரினால் மயக்கம் அடைந்துள்ளார் என்று கூறி மருந்து கொடுத்தாராம். வீட்டிற்கு வந்ததும் மணமகன் வீட்டார் பெண்ணிடம் உனக்கு ஏற்கனவே சுகர் நோய் இருக்கின்றதா என்று கேட்டதிற்கு அந்தப் பெண்ணும் வெகுளியாக ஆம் என்று சொல்லி விட்டதாம். உடனே அந்தப் பெண் மீது ஆதங்கம் படாமல் கோபப் பட்டு ஏன் திருமணத்திற்கு முன்னே அதனை சொல்லவில்லை என்று சண்டைப் போட்டு ஆடு,மாடு போல வீட்டிற்கு அனுப்பி விட்டதோடு, தலாக்கும் சொல்லி விட்டார்களாம். என்னே பரிதாபம். சக்கரை ஒரு நோய் அல்ல மாறாக அது ஒரு குறைபாடே என்று அவர்களுக்கு யார் எடுத்துக் காட்ட வேண்டும். படித்த மணமகன் தானே செய்ய வேண்டும். ஆனால் அவன் தன் பெற்றோருடன் சேர்ந்து ஒரு பெண்ணை சுவைத்து விட்டு மறு மணமகளை தேட ஆரம்பித்து விட்டானாம். 
            இஸ்லாமிய கவர்னர் உடுத்த ஒரே உடை தான் வைத்து விடுமுறை நாட்களில் துவைத்து உடுத்தினாராம். ஆனால் இந்திய பிரதமர் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோட்டு அணிந்த செய்தியும் படித்திருப்பீர்கள். அதுவும் எந்த நாட்டில் மகாத்மா காந்தி இடுப்பில் ஒரு துணியும், மேலங்கி ஒரு துணியோடு வாழ்ந்து காட்டிய வரலாறு உள்ளது. ஏன் தமிழ் நாட்டிலே சுதந்திர போராட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவாவும், நல்லக்கண்ணும் வாழ்ந்தவர் மற்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான். அவர்கள் ஆடையினை அவர்களே தான் துவைத்துக் கொள்வார்களாம். தலைக்கு கூட எண்ணெய் தேய்க்க மாட்டார்கள். ஆனால் நமது சமுதாய தலைவர்கள் கூட தற்போது தங்களை மதிக்க வேண்டுமென்று திருமண நிகழ்ச்சிக்கு கூட கோட்டு, சூட்டு அணிந்து வருகிறார்கள் என்று எதனை காட்டுகின்றது என்றால் அவர்கள் சாமானிய இஸ்லாமிய மக்களை கீழ்த்தரமாக நினைக் கும் போலியான நடவடிக்கை  என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நமது சமுதாயத்தில் பணம், புகழ், படிப்பு பெரும் வரை இறைவனை வணங்குகிறோம். ஆனால் அந்த மூன்றும் கிடைத்ததும் அகம்பாவம் அடைந்து தன்னுடைய திறமையினால் தான் அத்தனையும் கிடைத்தது என்று எல்லாம் வாரி வழங்கும் வல்ல அல்லாஹ்வினை தொழ மறந்து விடுகின்றோம். ஆகவே தான் கலீபா உமர் அவர்களும், அவர் கீழ் பணியாற்றிய அலுவலர்களும் சிறப்பாக மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக ஆட்சிமுறை நடத்திக் காட்ட முடிந்தது. ஏன் அது போன்று இன்றை இஸ்லாமிய இளைஞர் படையினால் முடியாத, இழந்த பெருமை திரும்பப் பெற முடியாதா?