Friday 23 December, 2016

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா அறிவுரை!



ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா  அறிவுரை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)

நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் போது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது  இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது 2016 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்.
பின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.
ஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.
இத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர்  கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.
போலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.
        ஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.
பிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து,  தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப்படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.
            மெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.
            அமரிக்காவினைப் பொறுத்த மட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசினாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை  மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
            ஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.ஒரு தடவை ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி போக்குவரத்து விதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்த பொது, தான் அவ்வாறு மீறவில்லை என்று பொய் சொன்னதால் நான்கு வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட வரலாறும் உண்டு.
            சீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொன்று இருக்கின்றார்கள்  என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை  நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால்  நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.
            ஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைகளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.
            தாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள். அங்குள்ள புன்னைகைக்கும் புத்தர் சிலையினைப் பார்த்து, பார்த்து அவர்களுக்கு அமைதியுடனான வாழ்வு பழக்கப் பட்டுப் போய் விட்டது.
            நான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.

Monday 19 December, 2016

கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!



கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி(ஐ.பீ.எஸ்)
உங்களுக்கெல்லாம் தெரியும் 2003 ஆம் ஆண்டு இராக் நாடு அதிகம் ஆள் கொல்லி ஆயுதம் கொண்டு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளுக்கு எதிராக ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது என்ற வடி கட்டிய பொய்யினை உலக நாடுகளில் பரப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அந்த நாட்டின் மீது படையெடுத்தனர் என்று.
அத்தோடு நில்லாமல் அந்த நாட்டினைப் பிடித்து, அதன் எண்ணெய் வளங்களை, மற்றும் அரசு, தனிப் பட்டவர் சொத்துக்களை கொள்ளையடித்து, அல் மாலுக்கி என்ற பொம்மை ஷியா  அரசை அரியணையில் ஏற்றினர். சில நாட்களில் அதன் ஜனாதிபதி சதாம் ஹுசைனை வஞ்சகர் மூலம் கண்டு பிடித்து கண் துடைப்பு நீதி விசாரணை மூலம் தூக்கு மேடைக்கு ஏற்றினர். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆட்கொல்லி ஆயுதம் சிக்கியதா என்றால் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும், உலக நாட்டு மக்களுக்கும் தெரியும். 
ஆனால் அந்த இராக் நாட்டில் அமைதி திரும்பியதா என்றால் இல்லையே, அது ஏன்? அதனைத் தான் உலக நாடுகளும் கேட்கின்றன. அப்படி என்ன தாரகை மந்திரம் அதிபர் சதாம் ஹுசைனிடம். பல்வேறு இனத்தினவரையும் தன் ஆளுமையால் ஒருங்கிணைத்து வல்லரசுகளுக்கே ஒரு சவால் விடும் அரபு நாடு இராக் ஒன்றே என்று சொல்லும் அளவிற்கு தன் நாட்டினை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
இராக் நாட்டினை பிடித்த பின்பு, சதாம் ஹுசைன் கைது செய்து அக்கினி  விசாரணையில் அதனை விசாரித்த சி.ஐ.ஏ.என்ற அமெரிக்க உளவுப் படையின் அதிகாரி நிக்சன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதனை டெய்லி மிரர் என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனிடம், உளவுத் துறை அதிகாரி நிக்சன், 'உங்கள் மீது ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் உள்ளதேஎன்ற  என்ற கேள்விக்கு, நாங்கள் ஒரு  போதும் அவ்வாறு செய்ய எண்ணவில்லை, எங்களிடம் அதுபோன்ற ஆயுதமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அப்பாவி பொது அவ்வாறு அழிக்க கட்டளை இடவுமில்லை. உங்களிடம் கூட அதுபோன்ற ஆயுதம் இருந்தாலும் எங்கள் மீது அதனை உபயோகிக்கவில்லையே அது ஏன்' என்று கேட்டுள்ளார்.
 சதாம் தொடர்ந்து கூறும்போது, இராக் நாட்டினைப்   பற்றி அல்லது மொழியினைப் பற்றியோ அல்லது அராபிய நாட்டு மக்களைப் பற்றியோ உங்களுக்குத் அதிகம் தெரியாது. உங்களுடைய முயற்சி வெற்றி பெறாது, தோல்வியினை நீங்கள் அடையப் போவது நிச்சயம்' என்று கூறியதாகவும், அதன் படியே அமெரிக்க கூட்டுப் படை இராக் நாட்டிலிருந்து வெளியேறினாலும், இன்னும் கூட 5000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு இருந்து இராக் ராணுவத்திற்கு உதவியாக உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் சுன்னி முஸ்லிம்களை அழித்துக் கொன்று அதனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வியும் தந்துள்ளது என்றும் கூறுகிறார். இதனையே தான் சதாம் ஹுசைன் ஒரு தீர்க்கதரிசியாக எச்சரித்துள்ளார் என்று கூறுகிறார் நிக்சன்.
இதனைப் போன்று தான் கடாபியும் இங்கிலாந்து அப்போதைய பிரதமர் டோனி பிளேயரிடம் 2012 ஆம் ஆண்டு, 'நீங்கள் என்னை பதவியிலிருந்து நீக்கினால் லிபியாவில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இன்றும் அந்த நாட்டில் நிலையான ஆட்சி இல்லையே அது ஏன் என்று இப்போதாவது மேலை நாடுகள் சிந்திக்க வேண்டாமா தோழர்களே!

Tuesday 8 November, 2016

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை

பொது சிவில் சட்டம்-நேற்று, இன்று, நாளை
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச், ஐ.பீ.எஸ்(ஓ)
உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கில் அரசியல் சட்டம் 44ல் கூறியபடி சீரான சிவில் சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என்று ஆராய்ந்து ஒரு அறிக்கையினை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு  ஆணையிட்டதால் அது சம்பந்தமாக ஒரு மாபெரும் கிளர்ச்சியை முஸ்லிம் சமுதாய மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சட்டம் 44 என்ன சொல்கிறது என்றால், 'அரசு, இந்திய ஆட்சிப் பரப்பு எங்கனும் ஒரே ‘சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம்’ குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெரு முயற்சி செய்தல் வேண்டும்'. அதனையே தான் இன்று இருக்கின்ற பி.ஜே.பி மத்திய அரசு ‘பொது சிவில் சட்டம்’ வேண்டும் என்று கூறுகிறது.
ஆங்கிலேய ஆட்சியில் ஹிந்து சமுதாயத்தில் புரையோடிய சமூக பழக்க, வழக்கங்களான குழைந்தை பலியிடல், கணவன் இறந்து விட்டால் மனைவி உடன் கட்டையேறுதல், விதவை மறுமணம் புரியும் தடை, குழந்தை திருமணம் ஆகியவற்றை  தடை செய்ய சட்டங்கள் இயற்றப் பட்டன. மற்றபடி மத சம்பந்தமான பழக்க வழக்கங்களில், சட்டங்களில் நடுநிலைக் கொள்கையினையே கடைப் பிடித்து வந்திருக்கின்றது என்றே சொல்லலாம்.
சுதந்திர இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் கூடிய அரசிலமைப்பு சபை மத சம்பந்தமான சுதந்திரத்தினை சட்டம் 25 முதல் 30 வரையிலுள்ள சட்டங்களில் வழங்கியுள்ளது. சுயமான செயல் அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றம் சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் தலையிட்டது. அரசியல் அமைப்புச் சட்டம், தீண்டாமை ஒழிக்கவும், பலதார மணத்தினை தடுக்கக் கூடிய ஹிந்து சட்டத்தினையும், பெண்கள் சொத்துரிமைக்கும், கலப்பு திருமணங்களுக்கும் சட்டம் ஏற்ற வகை செய்து மத சுதந்திரம் வளர வகை செய்தது.

அரசியல் சட்டம் 25 மதங்கள் தங்கள் வழிபாடுகளையும், செயல் முறைகளையும், செயல்பாடுகளை நிறைவேற்ற உரிமை வழங்குவதோடு, அத்துடன் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு அரசு கட்டுப் பாடுகளுக்குட்பட்டு தங்கு தடையின்றி சமயத்தை வழி நடத்திச் செல்ல உரிமை வழங்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் 30ல் மைனாரிட்டி மதத்தினவருக்கும், மொழியால் மைனாரிட்டியானவர்களுக்கும் கல்வி  நிலையங்கள் அமைத்து அதனை பரிபாலனம் செய்வதற்கு உரிமை வழங்கப் பட்டுள்ளது.  ஒரு காலக் கட்டத்தில் டாக்டர்  அம்பேத்கார் அவர்களே மத சுதந்திரத்திற்கு மேலாண்மையாக சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லி பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். ஆனால் அதனை முஸ்லிம்கள் மட்டும் எதிர்க்கவில்லை, மாறாக ஹிந்து மகாசபா உறுப்பினர்களே எதிர்த்தார்கள் என்றால் ஆச்சரியமாக உங்களுக்கு தெரியவில்லையா? முஸ்லிம்கள் தங்களுடைய குடும்பச்சட்டம் மற்றும் சொத்துரிமையினையும்  தங்கள் மார்க்கத்தில் சொல்லியுள்ளபடியே கவனித்துக் கொள்வதாகவும், மொழி மைனாரிட்டுகளும் தங்கள் மொழியில் கல்வி நிலையங்கள் அமைத்து அதனை பரிபாலனை செய்ய தங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று கடுமையாக எதிர்த்ததினால் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதினை அப்போது விட்டுவிட்டார் டாக்டர் அம்பேத்கார்.
            மும்பையில் போஹ்ரா ஜாதியினரின் தலைவர் ஒரு உறுப்பினரை தன்னுடைய சமயத்திலிருந்து  நீக்கிவிட்டார். அதனை எதிர்த்து அந்த உறுப்பினர் உச்ச நீதி மன்றத்திற்கு சென்றார். அப்போது உச்ச நீதிமன்றம் தாவூதி போரா தலைவர் தன்னுடைய சமய தனி சட்டத்தினை அமல் நடத்த அவருக்கு உரிமை உண்டு என்று கூறி விட்டது.
            அதேபோன்று ஒரு சமயம் இந்தியா முழுவதும் பசுவதை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அப்போது உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் பசுவினை கொள்ளும் தடைச் சட்டம் மனித வாழ்விற்கு எதிரானது என்று அறிவித்து விட்டு, அதே நேரத்தில் இளமை மற்றும் திடகார்த்தமான பசுக்களை கொல்வது   விவசாயத்திற்கும், பால் பொருள் உற்பத்தியினை பாதிக்கும் என்று அதனை தடை செய்யலாம் என்று நடு நிலையான தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் மனுதார் ஒருவர் மாடுகள் பலியிடுவதினை தடுப்பது தாங்கள் பக்ரீத் பண்டிகைக்காலங்களில் அறுத்து பலியிடும் மார்க்க உரிமையினைப் பாதிக்கும் என்பதனையும் உச்ச நீதிமன்றம் ஏற்று அனுமதி வழங்கியது மூலம் ஒரு நடுநிலையானக் கொள்கையினை வழிவகுத்துள்ளது.
            அரசியலமைப்பு சட்டம் இயற்றும் போது ஏற்பட்ட அதே சர்ச்ச்சை இன்று மைனாரிட்டி மதத்தினர் தனிச் சட்டத்தில் கைவைக்கும் நிலை 65 ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்பட்டுள்ளது. அரசிலமைப்பு சட்டம் இயற்றும் போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்லும்போது மெஜாரிட்டி இனத்தினரின் ஆதிக்கம் மைனாரிட்டியினரின் மீது திணிக்கப் படும் முயற்சி என்று முஸ்லிம், கிருத்துவர்கள், பார்ஸீஸ் மற்றும் யூத மக்கள் எதிர்த்தனர். இன்றைய சர்ச்ச்சைக்கு காரணமே முஸ்லிம்கள் பலதார மனம் மற்றும் முத்தலாக் முறை எதிர்ப்பதாகும். மற்றொரு சர்ச்ச்சை என்னவென்றால் இஸ்லாமிய சட்டத்தில் உள்ள தலாக் சொல்லப் பட்ட பெண்ணுக்கு கணவன் ஜீவனாம்சம் அவள் ‘இத்தா’ இருக்கும் வரையும் மற்றும் அவர் கொடுக்க வேண்டிய ‘மகர்’ பற்றியும் தான். அது ‘ஷா பானு’ என்ற பெண் தன் ஜீவனாம்சம் கேட்டு முன்னாள் கணவரிடம் வழக்குத் தொடர்ந்ததால்(1980) ஏற்பட்டது.
            பலதார மணம் இஸ்லாமிய அமைப்பில் இருப்பதினை சாதகமாக பயன் படுத்தி ஒரு ஹிந்து மத நபர் ‘சரியா முட்கள்’ முதல் ஹிந்து மனைவி இருக்கும்போது இஸ்லாமிய மார்க்கத்தில் தழுவி இரண்டாம் திருமணம் செய்ததால் ஏற்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் குலதீப் சிங் முதல் ஹிந்து மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது மனைவியினை அடைவதிற்காகவே முஸ்லிமாக மாறி திருமணம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
            இது நாள் வரை முஸ்லிம்களின் மார்க்க சம்பந்தமான நடைமுறைகளில் மத்திய மாநில அரசுகள் தலையிட தயக்கம் காட்டியதுடன், ஒரு நடு நிலையான கொள்கையினை கொண்டிருந்தனர். ஆனால் மத்தியில், மற்றும் மாநிலங்களில் சிலவற்றில் பி.ஜே.பி அரசுகள் அமைந்த பின்னர் முந்தைய அரசுகள் முஸ்லிம்கள் ஓட்டு வங்கிக்காக அவர்களை தாஜா செய்யும் விதமாக அவர்கள் சட்டத்தில் அல்லது சடங்குகளில் தலையிடவில்லையென்று குற்றம் சாட்டி எப்படியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பொது சிவில் சட்டத்தினை கொண்டு வர முயல்வதால் இன்று முஸ்லிம்களிடையே ஒரு கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதினை மறுக்க முடியாது. ஆனால் சட்ட ஒழுங்குமுறை என்ன சொல்கிறது என்றால் மத வேறுபாடுகளிடையே அரசு நடுநிலையான கொள்கையினை பொறுமை உணர்வுடன் கடைப் பிடிக்கவேண்டும் என்று. ஆனால் அதற்கு நேர் மாறாக  அரசுகள் பள்ளிகளில் மத சம்பந்தமான கல்வி போதனைகளை எப்படியும் தடை செய்து விட வேண்டும் என நினைக்கின்றது.  அரசு எந்த கல்வி நிலையங்களில் தனது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென்றால், எந்த கல்வி நிலையம் அரசு முழு உதவியினைப் பெறுகின்றதோ அதில் தான் தலையிட முடியும். அரசின் பகுதி உதவி வழங்கப் பட்ட கல்வி நிலையங்களில் அரசு தலையிடமுடியாது.
            இதில் அதிகமாக பாதிர்ப்புக்கு உண்டானது கிருத்துவ மதம்  தான். ஏனென்றால் சங் பரிவாரினைச் சார்ந்தவர்கள் கிருத்துவர்கள் அரசு உதவியினை வாங்கி அதனை மதமாற்றத்திற்கு பயன் படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி கிருத்துவ வணக்க தளங்கள், அவர்கள் தங்கி போதனை செய்யும் நிலையங்கள் ஆகியவை ஜார்க்கண்ட், ஒரிசா, குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தாக்குதல் ஈடுபட்டனர். சில வலது சாரி அமைப்புகள் அங்குள்ள கிருத்துவ மக்களை மறுபடியும் ஹிந்து மதத்திற்கு மாற்றும் சடங்குகளிலும் ஈடுபட்டனர்.
            ஆனால் எப்போது அரசியல் அமைப்பில் மதத்திற்கு  சமமான பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதோ  அது வரை பொது சிவில் கோடு அமைப்பதில் சாத்தியமில்லை. இந்திய நீதித்துறையும் சமத்துவ சமுதாயத்திற்கு சமமான அளவு மரியாதை அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப் பட்டுள்ளதினை வலியுறுத்தியுள்ளது என்பதினை பல வழக்குகளில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை ‘ஜனதா தல்’ அரசு 1989 ஆம் ஆண்டு நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் பி.ஜே.பி ரத யாத்திரையினை தொடங்கியது. அதனை தடுக்கத் தவறியதால் கர்நாடக அரசு மத்திய காங்கிரசு அரசால் கவிழ்க்கப் பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டசபையில் பலத்தினை நிரூபிக்காமல் கவிழ்த்தது செல்லாது என்று அறிவித்ததுடன், மாநில அரசு மக்களிடையே மத சம்பந்தமான எந்த வெறுப்பினையும் ஏற்படாது, மதச்சார்பின்மையினைக் கடைப் பிடிப்பது அவசியம் என்று மாநில அரசுக்கும் ஒரு கொட்டு வைத்தது.
            முஸ்லிம்களின் தனிச் சட்டம்
முஸ்லிம்களின் தனிச் சட்டத்தினைப் பொறுத்தமட்டில்(ஷரியத்) கொள்கையளவில், கடைப் பிடிப்பதிலும் பல மாறுபட்ட கருத்துக்கள் ஷியா பிரிவினருக்கும், சுன்னி பிரிவான ஹனபி, மாலிகி, ஷாபி மற்றும் ஹம்பிளி பிரிவினருக்கும், அவர்களுடை உள்  பிரிவுகளான வஹாபி, அஹ்லேஹதித், டியோபண்ட் பரேலவி ஆகியோருடைய பண்பாடுகளுக்கும் உள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய தனி பண்பாட்டின் நடவடிக்கைகள் ஷரியத் சட்டங்களுக்கு முரணாகவும் உள்ளது என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும் பல பிரிவுகள் முஸ்லிம்கள் நலன்களில் ஒன்றிணைக்க ஆகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம்(AIMPLB)கூறும் தீர்ப்பிற்கு ஒரு மரியாதை, மதிப்பு உண்டு.
ஆங்கிலேய அரசு 1939ம் வருடம் ஷரியத் செயல்படுத்தும் சட்டம் கொண்டு வந்தது( Shariyat Application Act). ஆனால் இந்தியா ஒரு மத சார்பட்ட நாடு ஆனதாலும், இஸ்லாம் இந்திய நாட்டின் மதமில்லையானதாலும், கலீபா இல்லாததாலும், நீதிபதிகள் முஸ்லிம்கள் இல்லாததாலும் மேற்படி சட்டத்தினை நிறைவேற்ற முடியாமல் போனது.
            தற்போது உள்ள பிரச்சனையே ஒரே தடவை, முத்தலாக் சொல்வது செல்லுமா என்பது தான். அதனைக் காரணம் காட்டி பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்ற கொந்தளிப்புத்தான் முஸ்லிம்களிடையே.
தலாக் என்பது இஸ்லாத்தில் ஒரு வழக்கு நடவடிக்கைத் தொடக்கம் தான்.  இந்த நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரப்படும். அதுவும் சாட்சிகள் முன்னிலையில், சமரசத்துடன் நடத்தப்படும் செயல் முறை. அதனை ஒரே மூச்சில், சாட்சிகள் இல்லாமல் வழங்கப் படும் நடவடிக்கை என்பதினை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அதுவும் பெண்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் கொடுமை என்றால் மறுக்க முடியாது. அதனை பெண்களுக்கு உரிமை வாங்கித்தந்த இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் போதித்ததல்ல.
            இஸ்லாமிய மார்க்கத்தினர் மேலாக சொல்லப் படும் மற்றொரு குற்றச்சாட்டு பலதார மணம்.  இஸ்லாத்தில் பலதார மணம் புரிய வேண்டுமென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமானவர் தன் மாணவியருக்கு உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் திருப்தியான வாழ்க்கை முறையினை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப் பட்டது. அதனால் 95 சதவீத முஸ்லிம்கள் ஒரே மனைவியுடன் வாழவதினைக் காணலாம். அதே நேரத்தில் மெஜாரிட்டி மதத்தினர் பல மனைவிகள் சகிதமாக மனைவியாகவும், துணைவிகள் பலருடனும் பகிங்கரமாக வாழ்க்கை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை பெருமையோடும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். சமீபத்தில் மிசோராமினைச் சார்ந்த ஒரு ஹிந்து 39 மாணவிகளுடன், ஒரு பட்டாள  குடும்ப படத்துடன் பேட்டிக் கொடுத்தது பத்திரிக்கைகளில் வந்தது.
            சட்டங்கள் பாதுகாப்பு:
Special Marriage Act,1954, சட்டத்தின் படி அனைத்து முஸ்லிம் திருமணங்களும் பதிவு செய்யப் படுகின்றன. ஆகவே பதிவு செய்யாமல் துணைவியாக சிலரை வைத்துக் கொள்ள சட்டம் ஒரு போதும் அனுமதி வழங்க வில்லை.
அதே போன்று Muslim women(Protection of Rights and divorce) Act, 1986, அரசினை முஸ்லிம்களின் தனிச்சட்டத்தில்(ஷரியத்) உள்ளது படி விவாகரத்து செய்யப் பட்ட பெண்களுக்கு நியாயப் படி ஜீவனாம்சம் கிடைக்க வழி செய்கின்றது.
            இஸ்லாமிய அமைப்புகள் பலவாறு இருப்பதாலும், இந்திய நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் செயல் படுத்த முடியாததாலும், அரசும், நீதி மன்றமும் இஸ்லாமியர் நாடியினைப் பிடித்துப் பார்க்க செய்யப் படும் முயற்சிதான் பொது சிவில் கோடு என்ற முழக்கம். ஆனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண பிரச்சனை, சொத்துத் தகராறு, பலதாரத்தால் விளையும் குடும்ப தகராறு, பள்ளிகளை நிர்வகிப்பது போன்ற தகராறுகளை தீர்க்க நீதி மன்றங்கள் உள்ளனவே, பின் ஏன் பொது சிவில் கோடு என்று சிந்திக்க வேண்டு மத்தியில் உள்ள அரசு.
அறிஞர் பெருமகன் ஜார்ஜ் பெர்னாட்ஸா, 'ஆண் திருமண பந்தத்திற்காக வழக்கிடுகிறான் ஏனென்றால் அது ஒரு சுகத்திற்காக, மாறாக பெண் அது ஒரு ஜீவன ஆயுதமாகும் என்று கருதுகிறாள். சொத்தில்லாத மனைவிக்கும், தனித்திறன் இல்லா மனைவிக்கும் கணவன் என்ற அந்தஸ்து ஒரு நாயின் எஜமானைப் போன்றது தான்' என்று சொல்கிறார். 
            இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாது, கிருத்துவர்கள், சொராஸ்டரின் மக்கள், யூதர்கள் தங்களுக்கென்று தனிச் சட்டம் கொண்டுள்ளன.
மெஜாரிட்டி ஹிந்து மக்கள், ஜைன மதத்தவர், புத்த மற்றும் சீக்கியர் ஒரே குடும்ப சட்டமான Hindu Personal Law(25(2)(b) ல் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.  இது சம்பந்தமாக உச்சநீதிமன்றமும் 2005ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருத்துவர்களுக்கு Christian Marriage Act,1872 and Indian Divorce Act, 1869) ஆகிய சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஸ்ரஸ்ட்ரியனிசம் மதத்தினை வழிபட்டவர் பார்சி இனத்தவராக கணக்கிடப் பட்டார். அவர்களுக்கென்று Parsi Marriage and Divorce Act,1936 கொண்டு வரப்பட்டது.
            சைனா நாட்டு பேரறிஞர் கண்ப்ஸ்சிஸ் சட்டங்கள் பற்றி , 'இயற்கை சட்டமே மிகவும் சிறந்தது என்று கூறுகிறார்.
செயற்கையாக சட்டங்களான குழந்தைகள் நரபலி தடுக்க முடிந்ததா?
28.9.2016 கூட அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு குழந்தையை ஒரு டாக்டர் செல் போன் காணாவில்லை, கண்டுபிடித்துத் தர ஒரு மந்திரவாதியினை நாடியதும், அந்த மந்திரவாதி 4 வயது பெண் குழந்தையினை நரபலி இட்டதும் பத்திரிக்கை செய்தியாக வந்துள்ளது. 5 வருடங்களில் 132 நர பலிகள் நடந்துள்ளன.
அதுபோல குழந்தை திருமணங்கள் தடுக்க முடிந்ததா? ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த திருமண மேளாவில் வெறும் குழந்தைகளுக்கான திருமணம் ஒரு பி.ஜெ.பி மந்திரி தலைமையில் நடந்ததாக குற்றம் சுமத்தின எதிர்க்கட்சிகள். ஏன் நமது மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்  58.4% திருமணங்கள் குழந்தை திருமணம் என்று சர்வே கூறுகின்றது.
கோவிலுக்குள் இன்றும் தாழ்ந்த சமூதாயம் சரி சமமாக சட்டம் இருந்தும் மேல் ஜாதியினருடன் செல்ல முடிகிறதா?
ஆகவே இது போன்ற இருக்கின்ற சட்டங்கள் அமல் படுத்துவதினை விட்டு விட்டு, வேலை மெனக்கெட்டு பொது சிவில் சட்டம் கொண்டே தீருவேன் என்ற அரசியல் கோஷமிடுவதா நாட்டை ஆளும் முறை!
மற்றொரு சீன அறிஞர் லாவோ சி, சட்டம் அதிகமானால் திருடனும், போக்கிரியும் தான் அதிகம் ஏற்படுவர்'
ஆகவே கண்ப்ஸ்சிஸ் சொல்லியபடி ஏக அல்லாஹ்வால் இறக்கப் பட்ட இயற்கையான சட்டம் கொண்ட ஷரியத் சட்டம் தான் சிறந்தது என்று ஆட்சியாளர்களுக்கு ஏன் தோணவில்லை!
அதனால் தான் இஸ்லாமிய மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர். தமிழ் நாட்டில் ஏற்படுத்துகின்ற எழுச்சி பாராட்டத்தக்கது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, கையெழுத்து இயக்கம் என்று ஒன்று திரண்டுள்ளனர். ஆனால் ஒரு குழுவினர் மட்டும் எப்போதும் போல  'என் வழி தனி வழி' என்று பிரிந்து கோசம் எழுப்புகின்றனர்.
உலகில் தான் தான் அறிவாளி மற்றவனெல்லாம் மூடர்கள் என்று நினைக்காமல், ஈகோ பிரச்சனை பாராமல் ஒருங்கிணைந்து குரல் எழுப்புவதோடு, அகில இந்திய முஸ்லிம் சட்ட போர்ட் கூட இணைந்து உச்ச நீதி மன்றத்தினை  நியாயத்திற்கும், சமுதாய நன்மைக்காகவும் போராட வேண்டுமா அல்லது வேண்டுமா என்பதினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!
           

            

Sunday 30 October, 2016

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக்


          (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டிஐ.பீ.எஸ்(ஓ)
அரேபிய துணைக் கண்டத்தில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருண்ட காலம் என்பது அனைவரும் அறிந்ததே. அது குடும்பவியலில் நிறையவே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அரேபியர்கள் பலதார மணங்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்களை ஒரு அடிமைப் பொருளாகவே பாவித்தனர். அவர்களுக்கென  உரிமைகள் பறிக்கப் பட்டிருந்தது. ஆண்களை அண்டி வாழும் அடிமைகளாக கருதினர். சொத்து, சுகத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை. பெண் குழந்தை பிறப்பதே பாவம் என்று உயிருடன் பாவி நெஞ்சம் பதைபதைக்க, பிஞ்சுக் குழந்தை கதறக்  கதற புதைக்கும் அவலம்  அங்கே நடந்தது என்பதினை மக்கா  சென்றவர்கள் அந்த அடையாளத்தினைக் கண்டிருப்பீர்கள்.
அந்த நிலையினை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை புனித குர்ஆனில் எம்பெருமானார்(ஸல்) அவர்களுக்கு அன்னிசா அத்தியாயம் நான்கினை வஹியாக எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கியது மூலம் பெற்றுத் தந்தது. ஆண்களுக்கு நிகரானவர் பெண் என்ற பெருமை சேர்த்தது அல் குரான். திருமண ஒப்பந்தம் ஒரு சடங்கல்ல, மாறாக  அது ஒரு   சட்டம் என்றது ஷரியத் சட்டம். திருமணம் ஒரு சிவில் காண்டராக்ட் ஆகும். திருமணத்தினை பெற்றோர், ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு சாட்சிகள், வலியாக அமைந்துள்ள பெரிய மனிதர், மற்றும் இமாம், ஜமாத்து தலைவர் ஆகியரோடு மணமக்கள் கையொப்பம், மகர் தொகை ஆகியவை கண்டிப்பாக அமைந்துள்ளது தான் நிக்காஹ் பதிவேடு. இது போன்ற அமைப்பு வேறு மதத்திலோ, மார்க்கத்திலோ இருக்கின்றதா  என்றால் இல்லையென்றே சொல்லலாம். வரதட்சணை கொடுமை அறுத்தெறிந்து மணமகளை மணமகன் மகர் கொடுத்து மணம் முடித்து அந்தப் பெண்ணின் தன்மானத்தினை உயர்த்தியவன் எல்லாம் வல்ல அல்லாஹ். திருமண ஒப்பந்தம் ஆணையும், பெண்ணையும் கால், மனம் போன தறிகெட்ட போக்கில் வாழ விடாது, சமூதாயத்தில் கற்புடன் மாசு படாத தங்கம் போல வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வழி வகுத்தது ஷரியத் சட்டம். இஸ்லாமிய திருமணம் The Muslim personal law(shariat) application act, 1935 ல் தெளிவாக கூறப் பட்டு இஸ்லாமிய திருமணம் புனிதமானது, ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் உறவிற்கு முன்பு செய்யப் படும் சிவில் கண்டராக்ட் என்று சொல்லுகின்றது 
ஆகவே திருமண ஒப்பந்தம் ஆணும், பெண்ணும் மன மொத்த உடலுறவில் ஈடுபடவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், சமுதாயத்தில் கண்ணியத்துடன் திறம்பட வாழவும் வகை செய்தது அல் குரான். ஒவ்வொரு சுய சிந்தனை கொண்ட ஆணும், பெண்ணும் திருமண ஒப்பந்தம் இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம். ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்கு அது பொருந்தாது. இஸ்லாத்தில் அபிலாசைகளை அடக்கிக் கொண்டு திருமணமாகாமல் சாமியாராக இருந்து காலம் கடத்தி அதன் மூலம் அபிலாசைகளை அடிமையாகி தவறான கற்பொழுக்கமில்லாத வாழ்விற்கு இஸ்லாத்தில் வழியில்லை. காரணம் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ சைத்தான் ஒரு விதத்தில் வழிக் கேட்டுக்கு ஆளாக்கி விடுவானல்லவா?
அது சரி இதற்கு என்ன இப்போது வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அது தான் உச்சநீதி மன்றத்தில் முத்தலாக்கு முறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க நீதி மன்றம் மத்திய அரசை ஆணை பிறப்பித்துள்ளதால் அது விவாதப் பொருளாக்கி விட்டது. சிலர் புரிந்து கொள்ளாமல் அதனையே சிவில் சட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற விஷமமான விவாதத்தினையும் சேர்த்துக் கொண்டனர்.  முத்தலாக்கின் ஆரம்பமே சில இளைஞர்கள் தொலை பேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும்,, கைபேசி தகவல் மூலமும், தபால் மூலமும் தலாக்கை அனுப்பி விடுகிறார்கள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தெளித்து அனுப்புவது போல. சில இமாம்கள் அதனை செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். சிலர் மாப்பிள்ளை பக்கம் வெயிட் அதிகமானால் அந்தப் பக்கம் சாய்ந்து ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கி,  பெண்களையும், குழந்தைகளையும் அனாதையாக்கி விடுகிறார்கள் என்பதனை மறக்கவோ, மறைக்கவோ முடியாதல்லவா?
இன்று எந்த குடும்ப வழக்காடு மன்றங்களுக்கும் செல்லுங்கள் அங்கே நியாயத்திற்காக போராடும் 50 சதவீத பெண்கள் முக்காடு போட்ட முஸ்லிம் பெண்களாக இருக்கின்றார்கள். அந்தக் குறைகள் போக்க எடுக்க வேண்டிய கடமை முஸ்லிம் சமூதாயத்தினைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டல்லவா?  இஸ்லாத்தில் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் மூச்சுப் பிடித்துக் கொண்டு மூன்று தலாக் சொல்லும் முறை இடம் பெறவில்லை. அப்படி சாட்சிகளுடன் சொல்லப் படும் முத்தலாக்கே ஒரு தலாக் என்று தான் கருதப் படும்.           
விவாக ரத்து பெரும் ஒரு பெண் 3 மாதவிலக்கு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இரண்டு முறை தலாக் சொல்லப் பட்டு வேறு திருமணம் செய்ய வில்லையென்றால் அவள் தன் கணவருடன் சேர்ந்து வாழ வழியுண்டு. முதல் தடவை சாட்சிகள் சகிதம் தலாக் சொன்ன பின்பு பெரியோர், பெற்றோர் சமரசத்திற்குப் பின்பு தீர்வு காணவில்லையென்றால் இரண்டாம் தலாக் சாட்சிகள் முன்னிலையில் தலாக் சொல்லலாம். அதன் பிறகும் சமரச தீர்வு காணவில்லையென்றால் மூன்றாவது தலாக் சொல்லலாம்.
அது சரி மூன்றாவது தலாக் செய்த பின்பு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ வழிவகை உள்ளதா என்று கேட்டால் இருக்கின்றது. அது எவ்வாறென்றால் மணவிலக்கு பெற்ற பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஒப்பந்தம் செய்து, அவருடன் தாம்பத்திய உறவு கொண்டு, அதன் பின்பு மூன்று முறை நான் மேலே சொன்ன முறைப் படி மாத விலக்கு முடியும் வரைக் காத்திருந்து அவரை தலாக் செய்து விட்டு முன்னாள் கணவனுடன் வாழ்க்கை நடத்தலாம். இது ஒரு கடுமையான சட்டமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் இறைவனால் வழங்கப் பட்ட ஷரியத் சட்டம் இப்படி கடுமையாக்கியதிற்குக் காரணமே அவசர கோலத்தில் அள்ளி முடிந்து முத்தலாக்கு சொல்லி குழந்தைகள் போல அம்மா-அப்பா விளையாட்டு, விளையாட்டுக்குக்  கூட செய்யக் கூடாது என்பதிற்குத்தானே ஒழிய மணமக்களை வஞ்சிக்கவல்ல என்பதினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தில் தலாக் சொல்லப் பட்ட பெண்கள் அபலையாக உள்ளன என்று மாற்று மதத்தினர் நினைக்கின்றனர். ஆனால் ஷரியத் சட்டத்தில் தலாக் சொல்லப் பட்டப் பெண்ணை அவள் மானக் கேடானவள் என்று அறியாதவரை அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறுகின்றது.
அல் குரான் (65.1) தலாக்-விவாகப் பிரிவினையில், "நபியே!(விசுவாசிகளை நோக்கி நீர் கூறும் (உங்கள் மனைவியாகிய) பெண்களைத் தலாக் (விவாகப் பிரிவிரும்பினால் ,வினை) கூற விரும்பினால், அவர்களுடைய 'இத்தாவின்'(கரு அறியக் காத்திருக்கும் காலத்தின்) ஆரம்பத்தில் கூறி இத்தாவை கணக்கிட்டு வாருங்கள்.(இவ் விசயத்தில்) உங்கள் இறைவான அல்லாஹ்விற்கு நீங்கள் பயந்து(நடந்து)  கொள்ளுங்கள்.(நீங்கள் தலாக் கூறிய) பெண்கள்  யாதொரு மானக் கேடான செயலினை செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும்(உங்கள்) வீட்டிலிருந்து(இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதிக்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள்.  எவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.(இதிலுள்ள நன்மையை நீங்கள் அறிய மாட்டீர்கள், தலாக் கூறிய) இதன் பின்னரும் (நீங்கள் சேர்ந்து வாழ , உங்களிடையே சமாதானத்திற்குரிய)யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும் என்பதினை நீங்கள் அறிய மாட்டீர்கள்".
அல் குரான் இவ்வாறு கூறும் போது, இதற்கு நேர்மாறான   நேரில் அறிந்த ஒரு செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னையில் வசித்த ஒரு இளம் வயது இளைஞர் சமீபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். நானும் அந்த ஜனாஸா தொழுகைக்கும், அடக்கம் செய்வதற்கும் சென்றேன். இறந்தவருக்கு ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி மனைவி இருந்தாள். அந்த இளைஞர் மையத்து அடக்கம் செய்து விட்டு திரும்பிய பின்பு அந்தி மயங்கிய வேளையில் அந்த இளைஞனின் தாயார் அந்த கர்ப்பிணி மனைவியினை வீட்டைவிட்டு இரவே ஊருக்குச் செல் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக முயன்றாள். நல்ல வேலையாக இறந்த பையனுக்கு உறவினர் தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் வாங்கி ஊருக்கு இரவே அனுப்பி வைத்தார் என அறிந்து என்னைப் போல பலர் பதைத்தனர். இந்த சம்பவம் எதனைக் காட்டுகின்றது தோழர்களே, ஷரியத் சட்டத்திற்கு புறம்பானதாக தெரியவில்லையா உங்களுக்கு?  பெண்களுக்கு பெண்களாலேயே கொடுமைகள் இன்னும் சமூதாயத்தில் நடந்து கொண்டுதான் உள்ளதாக நீங்கள் கருதவில்லையா?
ஆண்களுக்கு உள்ள உரிமை போல பெண்களுக்கும் விவாகரத்து கொடுக்கும் உரிமை உள்ளது. அதனை குலா என்று அழைக்கின்றார்கள். ஒரு பெண் குலா கொடுக்க வேண்டுமென்றால் சாட்சிகள் முன்னிலையில் காஜியிடம் முறையிட வேண்டும். (Dissolution of Muslim Marriage Act, 1939) முஸ்லிம் விவாக ரத்து சட்டம் 1939 படி ஒரு பெண் தன் கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றோ, மானத்தை காக்கும் உடை, வயிற்றை நிரப்பும் உணவு போன்ற அத்தியாசிய பொருள்களை செய்ய வில்லையென்றாலோ, ஆண்மையற்றவன் என்று நினைத்தாலோ குலா கொடுக்கலாம் என்று சொல்கிறது. ஒருவன் காஜியினையே ஏமாற்றி குலா பெற்று விவாக ரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றான் என்ற வழக்கு 28.10.2016 அன்று சென்னை உயர் நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன்.
28.8.1987 அன்று செய்யாறினைச் சார்ந்த முகமது யூசுப் என்ற இளைஞருக்கும்- பாடியினைச் சார்ந்த பசேரிய என்ற பெண்ணிற்கும் பாடி ஜும்மா மஸ்ஜிதில் மணம் முடிக்கப் பெற்றது. யூசுப் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. யூசுப்பிவின் வியாபாரம் நஷ்டமாக நடந்தது. மனைவி பசேரிய தன் தந்தையிடம் சென்று ரூ ஒரு லட்சம் வாங்கி வந்து வியாபாரத்தினை பெருக்கச் சொன்னார். அதன் பின்னரும் வியாபாரம் நஷ்டத்தில் நடந்தது. யூசுப் தன் மனைவியிடம் நீ உன் தகப்பனார் வீட்டில் சில காலம் இரு, நான் செய்யார் சென்று வியாபாரத்திற்காக பணம் புரட்டி வருகிறேன் என்று புருடா விட்டு சென்று விட்டார். பசேரியாவும் கண்டதே கணவன், அவன் சொன்னதே வேத வாக்கு என்று கருதி தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் போன மச்சான் வருவான் பூமணத்தோடு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்த பசேரியாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால் யூசுப் வரவில்லை. விசாரித்த பொது தான் தெரிந்தது யூசுப் வேறு பெண்ணுடன் புது மாப்பிள்ளையாகி குடும்பம் நடத்துவது. கத்தினாள், கதறியாள் என்ன செய்ய பாவி பெண் நெஞ்சம் வழக்கு மன்றத்தினை நாடினாள். அப்போது தான் தெரிந்தது யூசுப் பசேரிய குலாக் கொடுத்தது போல ஒரு போலிக் கடிதத்தினை சென்னை தலைமை ஹாஜியிடம் கொடுத்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றார் என்று. இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் என்று. தலைமை ஹாஜி பெண் மற்றும் அவர்களுடைய பெற்றோர், மண சாட்சிகளை அழைத்து வரச் சொல்லி விசாரித்து விட்டுத் தானே குலா கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற மனிதர்களால் செய்கின்ற தவறுகளால் இன்று ஷரியத் சட்டமே சரியில்லை என்று மாற்று மதத்தினரால் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது அல்லவா? நேற்று கூட(29.10.2016) இரவு நடந்த தொலைக் காட்சி பேட்டியில் நேற்றுவரை முஸ்லிமாக இருந்து இந்து நடிகரை மணந்த 'இட்லி'நடிகை ஒருவர் ஷரியத் சட்டத்தில் உள்ள தலாக் முறை சரியல்ல என்றும், சிவில் சட்டம் வேண்டும் என்று கூறும் அளவிற்கு யார் பொறுப்பு, இது போன்ற சிலர் செய்யும் தவறுகளால் தலாக் பிரட்சனை பூதாகரமாக பார்க்கப் படுகிறது என்றால் சரியா சகோதரர்களே!
இஸ்லாத்தில் தலாக் செய்யும் முறை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்

1) ஆரம்பம்: கணவன் மனைவி முன்பு ஒரு முறை தலாக் சாட்சிகள் முன்னிலையில் சொல்லுவது. ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் ஒருவருடைய மனைவியை கால இடைவெளி விட்டு விவாக ரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். அது தெளிவாக அல் குரான் 65 1 அத்தியாத்தில் கூறுவதனை மேலே கண்டோம்.
2) சமரசம்: கணவனும் -மனைவியும் இரு வீட்டார் முன்னிலையில் சமரசம் செய்ய முயலுவது. இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படவில்லையென்றால் பொதுவான நீதிமான்களைக் கொண்டு சமரச முயற்சியில் ஈடுபடுவது( அல் குரான் அந்நிஸா சூரா 4:35) கூறப்பட்டுள்ளது.
இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை புனருவதிற்கு முன்னால் அவளை தலாக் செய்ய நேரிட்டால் அவளுக்கு பொருளுதவி செய்து விவாக ரத்து செய்யுங்கள் என்று அஹ்ஜாப் அத்தியாயம் 33:49 அல்  குரான் கூறுகின்றது.
3) நிறைவு : சமரசத்திற்கு மூன்று முறை தலாக் சொன்னால் தலாக் நிறைவேறும். அதன் பின்பு கணவன் மனைவியினைத் தொட அனுமதியில்லை.(சூரா  தலாக்  65:2) அதாவது அவர்கள் தங்கள் இத்தாவின் தவனையினை அடைந்தால் நேரான வழியில் மனைவியனை நிறுத்திக் கொள்ளுங்கள்.
தலாக் கூறப் பட்ட பெண் இத்தா முடிந்து மறுமணம் செய்து கொள்வதினை சூரா 2 232 பஹரா கூறுகின்றது
விவாக ரத்து செய்த பெண்களுக்கு கணவனிடமிருந்து மறுமணம் செய்யாதவரை தன் வாழ்க்கைக்கு தேவையான பொருளுதவியினை பெற அல் பஹ்ரா 2: 241 வழி வகை செய்கின்றது.
குழந்தைகள் பராமரிப்பது சம்பந்தமாக ரஸூலல்லா(ஸல்) அவர்கள் ஒரு வழக்கினை தீர்மானம் செய்த தகவலினை இமாம் அபு ஹுரைரா அவர்கள், ஒரு தடவை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து என் கணவர் எனக்கு விவாக ரத்திற்கு பின்பு பொருளுதவியும், அபு அன்பா கிணற்றிலிருந்தும் தண்ணீர் கொடுக்கின்றார். இப்போது எனது குழந்தையினை அவருடைய பராமரிப்பிற்கு கேட்கின்றார், எனக்கு என் பிள்ளையை விட்டுப் பிரிய மனமில்லை என்று நீதி கேட்கின்றார். அப்போது ரஸூலுல்லா(ஸல்) அவர்கள் அந்தக் குழந்தையை அழைத்து பெற்றோர் முன்னிலையில் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டபோது அந்தக் குழந்தை தாயின் கையினைப் பிடித்ததாம், உடனே குழந்தையினை தாயுடன் அனுப்பி வைத்ததாக' கூறுகிறார்.
இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் எங்கே முத்தலாக் இருக்கின்றது. அதாவது ஒரே நேரத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லுவதற்கு சட்டம் உள்ளது. இதனைத் தெரியாமல் சிலர் செய்யும் தவறினால் பல பெண்கள் நீதி மன்ற வாசலை மிதிக்கும் கதை கந்தலாக நிற்கின்றது.
சில சமுதாய இயக்கங்கள் சில இளசுகள் வழி தவறி காதல் வலையில் விழும்போது அவர்கள் பெற்றோர்களிடம் விவரம் கேட்காது தங்கள் இயக்கங்கள் புகழ் வர திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அதன் பின்பு அந்த இளம் தம்பதியினர் எப்படி இருக்கின்றார்கள் என்று திரும்பிக் கூட பார்க்காததால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று ஓடிய  பல முஸ்லிம் பெண்கள் அபலையாக இருக்கும் உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
சில தனிப்பட்டவர் திருமணம் நடத்தி வைத்து  விட்டு பெரிய விவகாரமான கதை 28.10.2016 அன்று சென்னை உயர் மன்றத்தில் வந்துள்ளது. ஒரு முஸ்லீம் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மதத்தினை கடைப்பிடிக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும்.  ஆனால் அதனை பார்க்காமல் ஒரு முஸ்லீம் வழக்கறிஞர் அமீர் பாட்சா ஈடுபட்டது உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னையில் மனித வள மேலாளர் முகமது பஹ்மியிடம் ஒரு ஹிந்து பயிற்சி பெண்மணி சேர்ந்துள்ளார். அவர் சென்னைக்கு வெளியே வேலை வழங்கப் பட்டது. அந்தப் பெண் மேலாளர் பஹ்மிய்யினை அணுகி தனக்கு  சென்னைக்கு மாற்றுதல் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக சில தாள்களில் அந்த பெண் இன்ஜினீரிடம் கையொப்பம் வாங்கியுள்ளார்.  சில நாட்களில் மாறுதல் வரும் என்று எதிர் பார்த்து உள்ளார் அந்த பெண்மணி.
மாறுதல் வரவில்லை. ஆகவே வேலையினை 2015 மார்ச் மாதம் விட்டு விட்டார். ஆனால் என்னே ஆச்சரியம்  2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்தப் பெண்ணின் பெயரினை தன்  மனைவி பகுதியில் சேர்த்துள்ளார் பஹ்மி. வழக்கு நீதி மன்றம் சென்றது. அப்போது வழக்கறிஞர் அமீர் பாட்சா அந்த பஹ்மிக்கும், அந்த ஹிந்துப் பெண்மணிக்கும் சுயமரியாதை திருமண முறைப்படி 7A Hindu Marriage Act, 1955 படி திருமணம் செய்து ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதியப் பட்டுள்ளது. பார் கவுன்சிலும் வக்கீல் அமீர் பாட்சா இதுபோன்ற பல திருமணம் செய்வதாக சொன்னதால், உயர் நீதி மன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்துள்ளது. ஆகவே இது போன்ற சட்ட சிக்கலுக்கு சமூதாய இயக்கங்களும் வருங்காலத்தில் சிக்கிக் கொள்ளாமல், அபலை பெண்களுக்கு நல்ல வழிக்கு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் எப்படி முத்தலாக்கு என்றும், சிவில் சட்டம் என்றும் சொன்னவுடன் ஒற்றுமையுடன் கொதித்தெழுந்தோமோ அதேபோன்று திருமணமான பெண்கள் புகுந்தவீட்டை விட்டு அனாதைப் பெண்களாக, குழந்தைகளுடன் வரும்போது அரவணைத்து சீரான வாழ்விற்கும்,  வழி காட்ட அனைத்து சமுதாயமும், சமுதாய புரவளர்களும், தலைவர்களும் அவர்கள்  மானத்தோடு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றால் சரிதானே சகோதரர், சகோதரிகளே!




Saturday 10 September, 2016

கர்ச்சிக்கும் சிங்கத்தினையும் எதிர்கொள்ளும் வழிகள்

கர்ச்சிக்கும் சிங்கத்தினையும் எதிர்கொள்ளும் வழிகள்

நம்மை திடீரென ஆபத்து கவ்விக் கொள்ளும்போது திக்குத் தெரியா காட்டில் தவித்தது போல செய்வதறியாது திகைத்து நின்று விடுவோம். அ து போன்ற சம்பவங்களில் எவ்வாறு நமது அணுகுமுறை இருக்க வேண்டும் என்று சில சந்தர்ப்பங்கள் மேற்கோள் காட்டி விளக்கலாம் என கருதி இதனை உங்கள் முன் வைக்கின்றேன்"

1) 2015 ஆம் ஆண்டு மட்டுமல்ல அதற்கு முன்பும் ஹஜ் பயணிகள் சைத்தான்  கல்லெறியும் மினாவில் ஒருவரோடு ஒருவர் முட்டி, மோதி, கீழே விழுந்து நசுங்கி அல்லாஹ்வின் கட்டளையான ஹஜ் நிறைவேறாமல் 717க்கும் அதிமானபேர் மடிந்ததினை அனைவரும் அறிவோம். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் கும்பமேளாவிலும் நடந்தது நினைவிருக்கும்.
கூட்ட நெரிசல் ஏற்படும்போது மடையினை திறந்து விட்ட தண்ணீர் போல மக்கள் கூட்டம் அலைமோதும். அப்போது நெரிசலில் மூச்சித் திறனரல் ஏற்படும். அதனை எப்படி எதிர் கொள்வது
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் எந்தக் காரணம் கொண்டும் நின்று விடக் கூடாது. ஏனென்றால் கீழே விழ ஏதுவாகும். நின்று விடுவதிற்குப் பதிலாக பக்க வட்டத்தில் ஒதுங்கி விட வேண்டும். அல்லது கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நகன்று  விட வேண்டும் என்று கூட்டத்தின் தன்மை பற்றி ஆராய்ச்சி செய்த க்ரீன்விச் பல்கலைக் கழக பேராசிரியர் எட்வின்  கூறுகிறார். ஒரு வேளை பக்க வாட்டில் ஒதுங்க முடியாமல் கீழே விழ நேரிட்டால் குப்புற விழ முயலவேண்டும். அத்துடன் இரு கைகளையும்  தாடையினை  தாங்கிப்பிடித்துக் கொண்டு மூக்கினால்  காற்றினை சுவாசிக்க வேண்டும்..இது  போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு மனிதன் 2003 ஆம் ஆண்டு ரோம் தீவின் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் மாண்டு போக அவன் உயிர் பிழைத்துள்ளான் என்றும் கூறுகிறார்.



தொற்று நோய்கள்

காலரா, ஸ்வைன் ஃப்ளு, பன்றிக் காய்ச்சல், சிக்கா, சிக்கின்குனியா போன்ற தோற்று நோய்கள் பரவுதல் பற்றி அறிந்தால் முடிந்த வரை பொது மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும். பாத்திரங்கள், துணிகள் சுடு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளலாம். விருந்தினர் வருகையினை கூடியமானவரை தவிர்க்கலாம். தடுப்பு ஊசிகளை தேடிச் சென்று போட்டுக் கொள்ளலாம்.
பாலின தொல்லைகளிருந்து தப்பித்தல்:

பெண்கள் என்றாலே பாலினப் பொருட்கள் என வேறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கும் ஆணாதிக்க உலகம் இது. ஆகவே தான் பல்வேறு பாலின வன்முறைகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து எப்படி தப்பிக்கலாம்
 உங்கள் உடை உங்கள் உடல் அந்தரங்களை வெளிக்காட்டாத வண்ணம் இருக்க வேண்டும்.
எப்போதும் நீங்கள் இருக்கும் இடம், உங்களை சுற்றி இருக்கும் நபர் எந்த நோக்குடன் அணுகுகிறார் என்று எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.
உங்கள் உள் மனது சொல்லும் எச்சரிக்கையினை காது கொடுத்துக் கேட்க வேண்டும். ஏனன்றால் உள் மனம் எப்போதும் உண்மையினையே உணர்த்தும்.
பெண்கள் சிறிது தற்காப்புக் கலை தெரிந்திருப்பது நல்லது.
மிளகாய் அல்லது மிளகுப் பொடியினை தூவி விடும் விடுப்பானை வைத்திருப்பதும், பயணம் மேற்கொள்ளும்போது ஏதாவது ஒரு ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும்.
கார், வீட்டின் ஜன்னல், கதவு போன்றவை எப்போதும் மூடி தாழ்ப்பாள் போட்டிருக்க வேண்டும். அழைப்பு மணி அடையாளம் தெரிந்தே கதவு திறக்க வேண்டும்.
எதிரி தாக்கும் போது கண், குரல் வலை, உயிர் நிலை போன்ற வற்றை கை, கால்களால் தாக்கி தப்பிக்கலாம்.
விமான விபத்துக்களில் நடந்து கொள்ளும் விதம்

சமீப காலங்களில் விமான விபத்துக்கள் நடப்பதும் பலர் முடிவதும் பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளன . விமானங்கள் ஆகாயத்தில் பறக்கும்போது சில அடர்த்தியான மேகங்களின் இடையே  கிழித்துக் கொண்டு செல்லும். அப்போது விமானம் குலுங்கி விபத்து ஏற்படும். விமானம் தொழில் நுட்பம் காரணமாகவும், விமானிகள் கவனக் குறைவாகவும் விபத்துக்கள், சண்டைகள் நடக்கும் நாட்டிற்கு அருகில் சென்றாலும், தீவிரவாதிகள் நடமாடும் இடங்களிலும் விபத்துக்கள் ஏற்படும். அது போன்ற 20 விமான விபத்துக்களில் இறந்தவர்கள், உயிர் பிழைத்தவர்கள் சொல்லும் உண்மை சம்பவங்களை ஆராய்ந்தபோது கீழ்கண்ட தகவல் வெளியாகியுள்ளது
1) விமானத்தில் பெல்ட் அணித்தவர்கள் தப்பித்துள்ளனர். காரணம் கடலில் விமானம் விழும்போது இருக்கையை ஓர் மிதப்பானாக இருக்கும்.
2) விமானத்தில் வால் பகுதியில் அமர்ந்திருந்தவர் தப்பித்துள்ளனர்.
3) விமானத்தில் காற்றழுத்தம் குறைவாக உள்ளபோது பணிப்பெண் கூறுவதுபோல சுபாச முகமூடியினை சொருகிக் கொள்ள வேண்டும்.
4)  விமானம் ஆபத்துக்குள்ளாகி என்று அறிவிப்பு வரும்போது அமைதி காக்காமல் ஒரு பக்கமாக ஓடுவதும், அங்கும் இங்கும் எழுந்து நின்று அலைவதும் கூடாது.
தீவிரவாத செயல்களில் தப்பிப்பது

சமீப காலங்களில் தீவிர வாத தாக்குல் சற்றும் எதிர்பாரா இடத்திலும், நேரங்களிலும் ஏற்படுகிறது அனைவரும் அறிந்ததே. அது போன்ற தாக்குதல் பொது மக்கள் கூடும் இடங்களான, பூங்கா, இரவு விடுதி, ஷாப்பிங் மால், பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையங்கள் போன்ற இடங்கள் தப்பிப்பதில்லை. அவ்வாறு நடந்தால் எவ்வாறு தப்பிக்கலாம்
1) கட்டிடங்களை தாக்குதல் நடக்கும்போது அவசர கதவுகள் எங்கே இருக்கின்றன என்று தேடி தப்பிக்கலாம்.
2) உங்களுடைய செல் போன் ஒலிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் முடியுமென்றால் செல்போனில் குறுந்தகவல் கொடுக்கலாம்.
3) நீங்கள் மறைவதிற்கு கான்க்ரீட் கட்டிடங்களை தேர்தெடுக்கலாம். ஏனென்றால் துப்பாக்கிக்குண்டு உங்களைத் தாக்காது என்று பாதுகாப்பு நிபுணர் 'ரீட்' கூறுகின்றார்.
4) நம்பிக்கையானவர் துணையுடன் எதிரியினை மடக்கலாம்.

காடுகளில், மலைகளில் தவிக்கும் போது

மேலை நாடுகளில் வாராந்திர ஓய்வு காலங்களில் மலையேறுவதும், காடுகளின் எழிலை ரசிப்பதிலும் ஆர்வங்கொண்ட நபர்கள் கால் நடையாகவும், சைக்கிளிலும் வலம் வருவதினைப் பார்க்கின்றோம். சில விமான, ஹெலிகாப்டர் விபத்துக்களில் காடுகளில், மலைகளில் விழுந்து வழி தெரியாமல் பயம் நம்மை கவ்வும். அது போன்ற சமயங்களில் எவ்வாறு செயல்படுவது:
1) தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம். அந்த நேரங்களில் மழை பெய்து குன்றுகளுக்கிடையில் கிடைக்கும் தண்ணீரை பருகலாம். மிருகங்கள், பறவைகள்  பசுந்தளிர்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நிச்சயமாக தண்ணீர் இருக்கும்.
2) எப்படி மிருகங்கள், பறவைகள் காடுகளில் விளையும் பழங்களை உண்டு வாழ்கின்றனவோ அதுபோன்று காட்டில் விளையும் கனி வர்க்கங்களை, கிழங்குகளை, சுத்தமான நீரில் வாழும் மீன்களை புசிக்கலாம். இப்படி ஒரு மனிதன் குறைந்தது 3 வாரங்கள் வாழலாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'பிழைக்கின்ற பிள்ளைக்கு மல்லியப்பும் நஞ்சா' என்று கூறுவார்கள். அதுபோன்று அன்று விளைந்த காய்,கனிகள் உயிரைக் காக்கும்.
3) பாம்பைத் தவிர மிருகங்களைப் பார்த்தால் ஓடக்கூடாது. அவ்வாறு ஓடினாள் நாம் மிருகத்திற்கு இரையாவோம். எப்படி துரத்தி வருகின்ற நாயினை, பூனை எதிர் கொள்கின்றதோ அது போன்று எதிர்கொள்ளவேண்டும். மிருகங்களின் கண்கள், தலை ஆகியவற்றினை கிடைக்கும் ஆயுதத்தால் பதம் பார்க்க வேண்டும். உங்கள் கை நகங்கள் கூட ஒரு ஆயுதம் தான் என்பதினை மறக்கக் கூடாது.. அஸ்ஸாம் மாநிலத்தில் குடிசையினுள்ளே  உறங்கிக் கொண்டு இருந்த 4 வயது மகளை வீட்டில் புகுந்த ஒரு சிறுத்தை கவ்வி இழுப்பதினைக் கண்ட தாய் வீட்டின் மூலையில் கிடந்த உலக்கையை எடுத்து அடித்து சிறுத்தையினை விரட்டியுள்ளாள் என்பது ஒரு அசட்டு துணிச்சல் தானே!
4) மலை, குன்றுகள் மேல் ஏறி நின்று உரக்க கூவி அழைப்பது மூலமும், வானத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியற்றின் பார்வையில் படும் அளவிற்கு நெருப்பு மூட்டலாம், துணிகளை கொண்டு சைகை காட்டலாம்.
5) இரவில் தங்க வேண்டுமென்றால் எப்படி ஆதிவாசிகள் குடில்கள் அமைத்தார்களோ அது போன்று அமைத்து ஓய்வு எடுக்கலாம்.


எல்லாவற்றிக்கும் மேலாக புரட்சிக்கவி பாடியது போல, 'பயங்கொள்ளளாகாது  பாப்பா'என்று மனதில் உறுதி கொண்டு, தைரியம் புருஷ லட்ஷணம் என்ற ஆயுதத்தினை கைக்கொண்டால் சீறி வருகிற சிங்கத்தையும் எதிர் கொள்ளலாம் என்பது உண்மைதானோ!