Monday 23 February, 2015

ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்'

'ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்'
(டாக்டர்  ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ)
புனித குரான் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தில், 'இறை நேசிப்போரே, ஒற்றுமை என்ற கயிற் றினை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்காதீர்கள்' என்று ஒற்றுமையினை வழியுறுத்தி உள்ளது.' அதனையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக்  கடமைப் பட்டிருப்பது குரானின் கட்டளையாகும்' என்றும் ஆணித்  தரமாக கூறியுள்ளார்.
கீழே உள்ள போட்டோவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்:
Janata Parivar Wedding: PM Narendra Modi 'showstopper' at Saifai
இந்தப் போட்டோவில் இந்திய  அரசியல் வானின் இரு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடி அவர்கள்,  மற்ற இருவரும் ஹிந்துத்துவா  கொள்கைக்கு எதிரான  பீகாரினைச் சார்ந்த லாலுப் பிரசாத் யாதவும், உத்தரப் பிரதேசத்தினைச் சார்ந்த முலாயம் சிங் யாதவும் ஆகும். அரசியல் வானில் இரு துருவங்களானாலும், 20.2.2015 அன்று நடந்த குடும்ப நிகழ்வில் மூன்று தலைவர்களும் சிரித்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்  அதே போன்ற நிகழ்ச்சியில் நமது சமூதாய தலைவர்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் பேசி நட்புடன் பழகியதினை  நான் பார்த்ததில்லை,  நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற முடிவில் இந்தக் கட்டுரையினை வரைகிறேன்.
உள்ளன்புள்ள நட்பு என்பது ஒருவருக்கொருவர் முகமன் கூறுவது, பண்புடன் நடந்து கொள்வது, அன்பு பாராட்டுவது ஆகும்.
பலவகையாகும் உறவு:
1) நண்பருடன்  பழகுவது, சக ஊழியர்களுடன் பழகுவது, குடும்பத்தில் உறவு கொள்வது ஆகும்.
2) நண்பர்களுடன்  உறவு கொள்வது ஏனென்றால் ஒரு செயல் நல்லதா அல்லது கேடு விளைவிப்பதா என்று எடுத்துச் சொல்ல ஒருவரின் துணை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனால்.
3) நல்ல நட்பு வேலை பார்க்கும் இடத்தில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
4) பெற்றோர், உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவு குடும்பத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
சிலர் வானளாவிய ஒற்றுமையினைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுவர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எதனையும் கடைப் பிடிப்பதில்லை. நாமெல்லாம் ஒரு மரத்தில் உள்ள இலைகள் என்றோ, அல்லது  மொழி , இனம்  நிறத்தால் வேறு பட்டிருந்தாலும் மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கின்றோம் என்றோ நினைப்பதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கம் இருப்பதால் தான் பல்வேறு இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம், ஆகவே அந்த மார்க்கத்தினர் ந ல்வழி, நட்புடன், நலத்தோடு  வாழக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை என்று நினைத்துப் பணியாற்றுவதில்லையே, அது ஏன் என்று உங்களுக்கு கேள்வி கேட்கத்  தோனுமல்லவா?
22.2.2015 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.ஆர்.எஸ். சக்கா என்ற ஊழியர் பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத், 'அனைத்து ஹிந்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகள் அமைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விட்டிருக்கின்றார். அந்த ஒற்றுமை உணர்வினை ஒருவரும் குறை கூறமுடியாது. அதே ஒற்றுமை அறைகூவல் ஏன் சமூதாய இயக்கங்களிடையே அதன் தலைவர்கள் வேண்டுகோள் விடக்கூடாது. குறைந்தது பொது நன்மைக்காவது இனைந்து வேண்டுகோள் வைக்கக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு வைத்துக் கொண்டால் தானே அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கப் போகின்றார்கள் என்று கேள்வி கேட்க உங்களுக்கு தோனுகின்றதல்லவா?
21/22.2.2015 ஆகிய நாட்களில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள அலமாதி என்ற ஊரில் 'இஸ்த்திமா' நடந்தது.
மார்க்க செற்பொழிவினைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் திரண்டதாக அங்கே சென்று வந்த நண்பர்கள் சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாநாட்டின் நிறைவேற்றிய தீர்மானம் என்ன என வினவினேன். அதற்கு மார்க்க பயான்கள் நடந்தன, ஐந்து தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இறுதியாக துவா ஓதப் பட்டது என்றார்கள். ஏழு சதவீத தமிழ் மக்களில் ஆயிரக் கணக்கானோர் ஒரு சேரப் பார்ப்பதே அரிது. அந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி இன்று சிறுபான்மையினர் இந்தியாவில் எதிர் கொள்ளும் சவால்கள், உலக முஸ்லிம்களின் நிலைப்பாடு, இளைஞர்கள் சிறந்த வழியில் நடப்பதிற்கு   உரிய அறிவுரைகள் ஆகியவற்றினை போதித்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமல்லவா?
உதாரணமாக:
1) 1) முத்துபேட்டை தர்கா புது வருடப் பிறப்பு அன்று தாக்குதல், புது டெல்லி சர்ச், நாகர்கோவில் ஜெபக் கூடாரம் தாக்குதல் போன்ற சிறுபான்மையினர் வழிபடும் தளங்களை தாக்குதலிருந்து எவ்வாறு பாது காப்பது என்ற அறிவுரை.
2) உ.பி. போன்ற மாநிலம்  முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம், பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாக நேர்ந்த சம்பவம் போன்று சிறுபான்மையினர் வாழும் கிராமம், நகரங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது
3) முஸ்லிம்கள் தனிப்பட்ட விரோதங்கள், மொழி, இனத்தால், குடும்பத்தால் வரும் பிரிவினைகள் மறந்து ஒற்றுமையுடன் வாழ என்ன செய்யலாம்
4) இளைஞர்கள் தீவிர வாத கொள்கைகளுக்கு தங்களை பலிகிடாவாக்கக் கூடாது என்ற போதனைகள் சொல்லலாம். சமீபத்தில் பெங்களூரு நகர முஸ்லிம் பொறியியல் எஞ்சினீயர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கப் போய் பட்ட துன்பங்கள், இங்கிலாந்து நாட்டின் முஸ்லிம் பள்ளி சிறுமிகள் மூவர் ஐ.எஸ்.தீவிர வாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க பள்ளிப் படிப்பு, குடும்ப பாசத்தினை விட்டு சிரியா சென்றிருப்பதும், 22.2.2015 அன்று நைஜீரியா நாட்டில் ஏழு வயது சிறுமி வெடிகுண்டாக மாறி பலரை சாகடித்திருப்பது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தாமலில்லை! அதுபோன்ற தீய போதனைகளிடமிருந்து இளைஞர்களை காப்பது எப்படி என்று அறிவுரை புகன்றிருக்கலாம்.
5) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக இருந்தால் தான் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆகவே பிரிந்து கிடக்கும் சமூதாய தலைவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்று அங்கு கூடியிருந்த அமைப்பாளர்கள் சொல்லி இருந்தால் சாலச் சிறந்ததாக இருந்து இருக்கும்.
ஆகவே இனி வரும் காலங்களில்லாவது சமூதாய ஒற்றுமை, தலைவர்கள் ஒருங்கிணைப்பு, வழிபாடு தளங்கள் பாது காப்பு, முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு,   இளைஞர்கள் நல் வழிப் படுத்துதல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் கூடும் கூட்டங்களில் கொள்கை முடிவெடுத்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

                                   


Friday 13 February, 2015

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?

                    இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?
                {டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
சமீப காலங்களில் வெளியிலும், வீட்டிலும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் பற்றி பரபரப்பாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்பதினை அனைவரும் அறிவோம். அந்தப் பாலியக் குற்றங்கள் பற்றி சில ஆராய்ச்சித் தகவல்களை உங்களுடன் ஒரு வருமுன் காக்கும் விழிப்புணர்விற்காக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
அதுவும் மும்பையில் மூடிக் கிடந்த மகாலட்சுமி மில்லில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை பெண் 23.8.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பின்பும், புது டெல்லி உபேர் டாக்சியில் சென்ற பெண் பொறியாளர் 5. 12. 2014  அன்று பாலியல் பலாத்க்காரம் செய்யப் பட்ட நிகழ்விற்குப் பின்பு பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது, கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் குரல் எழுப்பப் பட்டது. 
ஆனால் வெளியில் நடக்கும் குற்றங்களை விட வீட்டுக்குள் நடக்கும் பாலியத் தொல்லைகள் அதிகம் என்று ஆராய்சிக் குறிப்புகள் சொல்கின்றன:

புதுடெல்லியில் நடந்த பாலியல் குற்றத்திற்குத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள 44 காவல் நிலையங்களில் பதிவு செய்யப் பட்ட பாலியல் குற்றங்கள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை என்ற ஒரு 'அபிடாவிட்' தாக்கல் செய்ய புதுடெல்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அபிடாவிட்டில் டெல்லி காவல்த் துறையினர், 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கல் ஆன குற்றங்கள் 2276 என்றும், அதில் 1375 புகார்கள் அதாவது 60 விழுக்காடுக் குற்றங்கள் வீடுகளிலேயே நடந்துள்ளதாம். 1767 பாலியப் புகார்களில் அதாவது 78 விழுக்காடு குற்றங்கள் குடும்பத்தில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பினரோ, அல்லது குடும்பத்தினவருக்கு நன்கு தெரிந்தவராகவோ இருந்துள்ளனர். பெரும்பாலான வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் காவல் நிலையம் வரை வருவதில்லை.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையே என்பதினைக் கூறும் அளவிற்கு, 'பிட்டர்  சாக்லேட்'(கசக்கும் மிட்டாய்) என்ற புத்தகத்தினை எழுதிய பிங்கி என்ற எழுத்தாளர், 'இந்தியா முழுவதிலும் நடுத்தர மற்றும் மேல் நிலைக்  குடும்பத்தில் வாழும் இளம் சிறார்கள் ஆண்களோ, பெண்களோ பாலியல் குற்றங்களால் பாதிக்கப் படுகிறார்கள். அதுபோன்றே குடும்பத்தினர் மிகவும் நம்பி இருக்கும் டிரைவர்களோ, தந்தையோ, மாமா என்று அழைக்கப் படுகிரவர்களோ, தாத்தாக்களோ, மதபோதகர்களோ, மருத்துவர்களோ, சமயல்க்காரர்களோ, பள்ளி ஆசிரியர்களோ, பள்ளிப் பணியாளர்களோ, நிர்வாகிகளோ சிறார்களிடம் பாலியல்க் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று விரிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார். அதனைப் பத்திரிக்கைகள், டி.வி. ஒளிபரப்புகள் மூலம் அறிந்துள்ளோம்.
காவல்த் துறையும், அரசும் வீட்டுக்கு வெளியே நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அல்லது கண்டு பிடிக்க அல்லது சட்டங்கள் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைத் யார் தடுப்பது என்றக் கேள்விக்கு விடை அல்குராணின் அல் நூர் 24 அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அகிலத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினை என்றால் மறுக்க முடியாது:
அத்தியாயம் 24(27-29) ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே, உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர் வீடுகளில் அந்த வீட்டாரின் அனுமதியின்றி நுழையாதீர்கள்'
அத்தியாயம் 24(30) ‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும், தங்கள் வெட்கத் தளங்களைப் பாதுகாத்துக்  கொள்ளும்படியும், பெண்கள் தங்கள் அழகை வெளிக் காட்டாதவாரும் பார்த்துக் கொள்ளவும்'
அத்தியாயம் 24(58-59) 'உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும், மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதிற்கு அனுமதியுங்கள், உங்கள் சிறுவர்கள் விபரம் தெரியும் பருவத்தை அடைந்து  விட்டால், அவர்களுடைய பெரியோர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும்'.
சிறுவர், சிறுமி ஏழு வயதினை அடைந்து விட்டால் தனித் தனியே படுக்கைக்கு அனுப்பும் வழிமுறையும் இருக்கின்றது என்றால் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் தொலை நோக்குக் கண்ணோடு எந்நாளும் பொருத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றது என்று தெளிவாகும்.
ஆகவே தான் உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பாலிய தொல்லைகள் இஸ்லாமியக் குடும்பத்திலும் நடக்காது பாது காப்போமாக!


Tuesday 3 February, 2015

அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!

                 அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!
          (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய பத்திரிக்கைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் இந்த ஆண்டு(2015) தொடக்கத்திலே ஒரு தொற்று நோய் ஏற்பட்டது போல பரபரப்பாக வெளியிடப் பட்ட செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகைதான் என்றால் மிகையாகாது. அதேபோன்ற பரபரப்பு பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலந்த் 14-2-2013 ல் வருகை தந்தபோதோ, பிரிட்டிஷ் அரசின் பிரதமர் டேவிட் கேமரோன்  19-2-2013 ல் வருகை தந்தபோதோ, சீனாவின் ஜனாதிபதி ஜிம் பிங் 17-9-2014 ல் வருகை தந்தபோதோ, அல்லது ரஷ்ய ஜனாதிபதி  புடின் 10-12-2014 ல் வருகை தந்தபோதோ ஏற்படவில்லையே, அது ஏன் என்று உங்களைப் போன்ற படித்த பெருமக்களுக்கு கேட்கத் தோணும். ஆனால் ஒட்டிய வயிறும், கட்டிய கையும், குழிவிழுந்தக் கன்னங்களும் கொண்ட பாமரனுக்குத்  கொண்டுள்ள சாதாரண பாமரனுக்குத் தெரியாதல்லவா?
அமெரிக்காவின் இந்திய தொடர்பு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டிஸ் அரசின் பிடியிலிருந்து இந்தியாவினை மீட்க நடந்த  விடுதலைப் போரின் பயனாக ஏற்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் கூட்டுப் படை செயல் பட்டது. இந்திய மக்களின், 'கத்தியின்றி, ரத்தமின்றி  சத்தியாகிரக யுத்தம்' பிரிடிஸ் அரசிற்கு எதிராக  தொடங்கியதினைக் கண்டு உலகமே வியந்தது. அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரிடிஸ் பிரதமரிடம் 1945 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பேசாமல் விடுதலைக் கொடுத்து விடுங்கள் என்று வலியுறித்தினார். அது தான் முதல் ஆரம்பம்.
சுதந்திர இந்தியாவிற்கு முதல் வருகை தந்த(1959) அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் ஆகும்.
இந்தியாவின் கூட்டுச் சேரா கொள்கை இந்திய நலனுக்கு பின்னடைவு ஏற்பட்டுது எதனால் என்றால் சீனா நம்மீது 1962 ஆம் ஆண்டு படை எடுத்தபோது  எந்த வல்லருசும் இந்தியாவிற்கு ஆதரவாக வரவில்லை. இந்திய மண்ணில் சீனா கண்ட வெற்றி அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இந்தியா பக்கம் சாய்ந்தது, காரணம் எங்கே சீனா ஆசிய கண்டத்தில் ஒரு வல்லரசாக ஆகிவிடுமோ என்ற அச்சம் தான். அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் எப் கென்னெடி காலத்தில் நட்புறவின் பயனாக ஏற்பட்டது தான் உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருக்கும் பிரசித்திபெற்ற பொறியியல் வல்லுனர்களை உருவாக்கிய  ஐ.ஐ.டி கல்வி நிறுவனமாகும்..   
அந்தக் கூட்டுறவு 1970 ஆம் ஆண்டு  நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது முறிய ஆரம்பித்தது. இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ராணுவ பலத்தினை நிரூபிக்க கிழக்கு பாகிஸ்தானில் நடந்த சுதந்திரப் போருக்கு ஆதரவு தெரிவித்து 1971 ஆம் ஆண்டு பங்களாதேஸ் என்ற நாட்டினை சுதந்திர நாடாக்கிய போது, அதனை தடுத்து நிறுத்தி, இந்தியாவினை பயமுறுத்த வங்காள கடல் பகுதிக்கு 'யு.எஸ்.எஸ். எண்டர்ப்ரைசெஸ்' என்ற விமானத் தாங்கிய போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. ஆனால் அமெரிக்காவினால் பங்களா தேஷ் உருவானதினைத் தடுக்க முடியவில்லை.
கோல்ட் வார்' என்ற பனிப்போர் இரண்டு நாட்டிற்கும் நடந்தது. 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா ராஜஸ்தான் மாநிலம் 'பொக்ரானில்' அணு ஆயுத சோதனை அமெரிக்க உறவில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா மீது  பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை விதித்தார். ஆனால் குதுகூலமிட்ட இந்திய பொருளாதார வளர்ச்சியாலும், கொந்தளித்த வர்த்தக வளர்ச்சியாலும், விஞ்ஞானிகளின் ஆர்ப்பரித்த கண்டு பிடிப்புகளாலும், அமெரிக்காவின் தடைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானைத் தவிர ஏனைய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப் பாடுகளைக் கடைப் பிடிக்கவில்லை. அதனை அறிந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு 2000 ஆம் ஆண்டு வருகை தந்து பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜுபாயுடன் நல்லுறவினை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில்  2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு வலுவான  ஆசிய நாடான இந்தியாவின் ஆதரவு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போதும், அதற்குப் பிறகு அந்த நாட்டின் கட்டுமானப் பணிக்கும்  தேவைப் பட்டதால் இந்தியாவினுடனான நல்லுறவினை அமெரிக்கா வளர்க்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்தபோது 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையால் பாக்கிஸ்தானுடன் உறவினை நெருக்கமாக வைத்துக் கொண்டு 'ஒசாமா பின் லேடன்' தேடுதல் வேட்டையினைத் தொடர்ந்ததால் இந்தியாவின் உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது.
2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்பு அமெரிக்காவின் உதவியினை இந்தியா நாட வேண்டி இருந்தது. இந்தியா அமெரிக்காவின் எதிரான பார்வையில் இருந்த ரஷ்யா, ஈரான், இலங்கை, மாலத்தீவு, பங்களா தேஷ் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்திருந்ததால் 2009 ஆம் ஆண்டு  ஒபாமா  அமெரிக்காக் கம்ப்யுட்டர் கம்பனிகள் இந்தியா கம்பனிகளுக்கு 'அவுட் சோர்சிங்' என்ற வெளிவேலை தொடர்பான காரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அமெரிக்காவின் பணம் இந்தியாவிற்குச் செல்கிறது, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்பதுதான். அந்த தொய்வான உறவினை சரி செய்ய 2010 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா முதல் தடவையாக இந்தியா வந்தபோது அவருக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டது. அவருக்குச் சிறப்பு மரியாதைக் கொடுக்குமளவிற்கு இந்தியப் பாராளுமன்ற கூட்டுச் சபையில் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐஸ்நோவருக்குப் பின்பு  பாரக் ஒபாமாவிற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன் பலன் தான் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொது வெள்ளை மாளிகையில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கு மில்லாத தனி விருந்து ஒன்றினை பாரக் ஒபாமா வழங்கினார். அதன் பின்பு அமெரிக்காவின் தூதரக அதிகாரி தேவயாணி வேலையாள் விசா சம்பந்தமான குற்றச் சாட்டில் மரபிற்கு நேர்மாறாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் யு.பி.ஏ  அரசின் கடைசி காலத்தில் அமெரிக்காவினுடனான உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதன் பின்பு பி.ஜே.பி அரசு வந்ததும் பிரதமர் நரேந்திரா மோடி மீது அமெரிக்கா விதித்திருந்த விசா தடை நீக்கப் பட்டு  'மோடிசன் ஸ்கயிர்' என்ற சதுக்கத்தில் இந்திய மக்களால் கொடுக்கப் பட்ட பிரமிக்க வைத்த வரவேற்புனைக் கண்ட அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக ஒபாமா வந்து இந்திய மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழில் அதிபர்களையும் கவர்ந்து விட்டார்.
பாரக் ஒபாமா வருகையினால் ஏற்பட்ட பலன்கள் மற்றும் பாதகங்கள்:

1) இந்தியாவின் வளர்ச்சியினைக் கண்டு மேலைய நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
2) அமெரிக்காவின் தொழில் அதிர்பர்கள் இந்தியாவின் திட்டங்களான, 'மேக் இன் இந்தியா'(இந்தியாவில் தொழில் முனைவோம்), 'ஸ்மார்ட் சிட்டிஸ்'(சுறுசுறுப்பான நகரங்கள்), 'ஸ்வாச் பாரத்'(சுத்தமான பாரதம்), மாற்று மின் உற்பத்தி  போன்றவற்றில்  பங்காற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் இடப் பட்டுள்ளது. அப்போது தொழில் அதிபர்கள் தாங்கள் தயார் ஆனால் அரசின் கட்டுப் பாடு இல்லா உதவி உடன் கிடைக்க வழிவகை வேண்டும் என்ற வேண்டுகோளும் இடப்பட்டுள்ளது.
3) அவுட் சோர்சிங் என்ற இந்திய கம்யுட்டர் கம்பனிகளுக்கு விதிக்கப் பட்டு இருக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோளும் இடப்பட்டது.
ஆனால் உண்மையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய கம்ப்யுட்டர் கம்பனி பொறியாளர்களால் அமெரிக்காவிற்குத் தான் ஒருவகையில் லாபம். ஏனென்றால் அவர்களுடைய வருமானம் மாதமொன்றுக்கு ஐந்து லட்சம் டாலருக்குக் குறைவாக இல்லாவிட்டாலும்  அவர்கள் 'சோசியல் செக்குரிட்டி' என்ற சமூக பாதுகாப்பிற்கான வரி மட்டும் வருமானத்தில் நாற்பது சதவீதமாகும் என்றால் பாருங்களேன். அவை அத்தனையும் அமெரிக்க மக்குளுக்குத் தான் போய் சேருகின்றது.
பாதகமான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால் :
1) இந்தியாவின் அமெரிக்க விசுவாசத்தினைக் காட்ட முதல் தடவையாக பாரதப் பிரதமரே புது டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவை வரவேற்று உள்ளார். அது ப்ரோடோகாலை விட்டு சற்று விலகி இருப்பதாக கருதப் படுகிறது.
2) நட்பு நாடான ரஷ்யா, அண்டை நாடான சீனா ஆகியவை கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் இந்தியாவினைப் பார்க்கத் தொடங்கி உள்ளன.
3) அணு ஆயுத உடன்படிக்கை வெளிவராத நிலையில் எங்கே இந்தியா அணு ஆலை சிதைவினால் இந்திய மக்களுக்கு'லயாபிலிடி' என்ற இழப்பு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்யவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் எதிர்க் கட்சிகள் உடன்படிக்கை இரகசியத்தினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என குரல் எழுப்பி உள்ளன.
4) ஒபாமாவின் தரிசனம் கிடைக்க ரட்டன் டாட்டா, முகேஷ் மற்றும் அணில் அம்பானி, பிர்லா போன்ற பிரபல தொழில் அதிபர்கள் க்யூவில் திருமண தம்பதிகளை வாழ்த்த வருசையில் நின்றது போல நின்ற காட்சி ள்ளது  பத்திரிக்கைக் காட்சி வெளிவந்ததினைப் பார்த்த பெரும்பாலான இந்திய மக்களை முகம்  சுளிக்கச் செய்துள்ளது என்றால் மறுப்பதிற்கில்லை.
எப்படி இருந்தாலும் பாரக் ஒபாமாவின் இந்தியப் பயணம் இந்திய மக்களைப் பற்றிய நல்லெண்ணம் இன்றுபோல் என்றும் இருந்தால் நலம்தானே!