Monday 22 August, 2022

மனித உரிமை எடுப்பார் கைப்பிள்ளையா?

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

உலகில் பல்வேறு அரசியல் அமைப்புகள் ஆட்சி பீடத்தில் இருந்தாலும், ஜனநாயகத்திற்கு ஆதரவு குரல் ஒலித்துக்கொண்டே உள்ளன. கொடுங்கோலர்கள் பல காலம் அரியணையில் நிரந்தரமாக இருந்ததில்லை. மக்களை மறந்த மன்னர்கள் நெஞ்சில் நிலைத்ததில்லை என்பது வெள்ளிடைமலை.

உங்களுக்கெல்லாம் தெரியும் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் பிரிந்து தனி நாடானது. அதனை அங்குள்ள ராணுவ தளபதி முகமது இர்ஷாத் பின்னாளில் அரசியல் வாதியாக மாறி 1983லிருந்து 1990 வரை ஆட்சி செய்த  அவர் ஆட்சியில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இருந்தது. மக்கள் அவைகளை வெளிக்கொணர பல்வேறு வழிகளை வெளிக்காட்டினர். அதில் ஒன்று தான் 1987ம் ஆண்டு நூர் ஹுசைன் என்ற 26 வயது இளைஞர் செய்த அரசுக்கு தெரிந்த மாபாதக செயல். அது என்ன தெரியுமா? தனது முதுகில், 'Gonotontra Mukti Pak' அப்படியென்றால், 'ஜனநாயகத்தினை விடுவிப்போம்' என்ற வாசம். விடுமா சர்வாதிகார இர்ஷாத் ஆட்சி. அந்த வாலிபர் நடு ரோட்டிலே பலர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த நூர் ஹுசைன் கொழுத்திப் போட்ட தீப்பொறி நாடு ஜனநாயக உரிமையினைப் பெற்றது ஒரு வரலாறு.

உலக அளவில் வல்லரசு நாடுகள் கூட தங்கள் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றவர்களை கூண்டுக் கிளியாக சிறையில் அடிப்பதும், கொடுமைக்கு ஆளாக்குவதும் நடந்து கொண்டுதான் உள்ளது என்பதினை சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்:

1) சீனாவில் சின்ஜியாங் என்ற மாகாணத்தில் துருக்கி மொழி பேசும் முஸ்லிம் மக்கள் உள்ளனர். அவர்களின் வழிபாட்டிற்கு தடை விதித்தும், மக்கள் கூடுவதற்கு கட்டுப் பாடு விதித்தும், அந்த இனம் தழைக்காது குடும்ப கட்டுப் பாடு நடவடிக்கை எடுத்தும், பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை சிறையில் அடைத்தும், சொல்ல முடியாத துன்பங்கள் 2017ம் ஆண்டு முதல் செய்து வருவதனை அமெரிக்கா மற்றும் ஐநா சபை கண்டித்தும் கண்டு கொள்ளவில்லை.

2) ரஷியாவில் புடின் ஆட்சி ஏற்ற பிறகு சுயாட்சிக்காக போராடிய செச்சென்யா மாநில முஸ்லிம்கள் அறவே ஒழித்துக் கட்டப் பட்டனர். அது மட்டுமா ரசியாவின் மிலிட்டரி அதிகாரி ‘சேர்காய் ஸ்க்ரிபால்’ இங்கிலாந்துக்கும் உளவு பார்க்கும் இரட்டை வேலை பார்த்தார் என்று இங்கிலாந்திற்கு மூன்று ரசியர்களை சுற்றுலா பயணிகள் போல அனுப்பி அடையாளம் தெரியாத விஷம் கொண்டு அவர் தங்கி இருந்த வீட்டு அருகே அவரையும் அவருடைய மகளையும் கொல்ல முயன்று மருத்துவ அதிசியத்தால் பிழைத்தனர். அதேபாணியில் எதிர் கட்சி தலைவரும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தினை நடத்தியவருமான ‘அலெக்ஸி நாவலனியினை’   ஒரு உள் நாட்டு விமான பயணத்தில் கொடிய விஷம் வைத்துக் கொல்ல முயன்று ஜெர்மன் சென்று பிழைத்து அங்கு அடைக்கலம் கேட்காமல் சொந்த நாட்டில் போராடுவேன் என்று ரசியா திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்து  வழக்குக்குமேல் பல வழக்குகள் தொடுத்து இன்னும் வெளியே வரமுடியாதது  மனித உரிமை மீறலல்லவா ?

3) சௌதி அராபியாவின் முடி சூடா மன்னராக திகழும் எம்.பி.எஸ். என்ற முகமது சுல்தான், சௌதி பணக்காரர்களான அல் வாலித் உள்பட 100 பேர்களை ஒரு ஸ்டார் ஹோட்டலில் அடைத்து வைத்து அவர்களின் சொத்தில் பாதியினை கறந்த பின்பு வல்லரசு நாடுகள் எதிர்ப்புக் குரல் எழுப்பிய பின்பு விடுதலை செய்தார். உங்களுக்கெல்லாம் தெரியும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான, 'வாஷிங்டன் போஸ்ட்'. அதில் உள்ள சௌதியின் எழுத்தாளரான ஹ்ரஜோகி. இவர் அதே பட்டத்து இளவரசர் எம்.பி.ஸ் என்ற முகமது சுல்தான் பற்றி காரசாரமாக கட்டுரை எழுதுகிறார் என்று துருக்கி நாட்டில் உள்ள சௌதி தூதரகத்திற்கு தந்திரமாக வரவழைத்து 6/10/2018ல் அடையாளம் கண்டு கொள்ளாத அளவிற்கு கொல்லப் பட்டார். அதற்காக உலக நாடுகளே கண்டனம் செய்தன.

 

4) நமது பக்கத்து நாடான பர்மாவில் தேசிய தலைவர் என்று அழைக்கப் படும் ‘ஆங் சன்’ அருமை மகள் ‘ஆங் சு கி’ பர்மாவினை ராணுவ ஆட்சிகளிடமிருந்து விடுவிக்க 15 வருடம் தனிமை சிறையில் அடைக்கப் பட்டார். உலக முழுவதும் கண்டத்தினை எழுப்பிய பின்பு  விடுதலை செய்யப் பட்டு உலகின் உயர்ந்த பட்டமான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. உலக எதிர்ப்பினுக்குப் பயந்த ராணுவம் தேர்தல் நடத்தி ஆங் சு கி யுடன் சமரசம் செய்துகொண்டு 2016லிருந்து 2021 வரை வெளியுறவு மந்திரியாக நியமிக்கப் படவும் செய்தார். ஆனால் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு ‘ராக்கினா’ மாநிலத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை நாட் டினை விட்டு துரத்தி அவர்கள் குடியிருப்பு பகுதிகளை தீக்கிரையாக்கினர். அந்த ரோகிங்கியினர் இந்தியா உள்பட பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தது உங்களுக்குத் தெரியும். அதன் பின்பு என்ன ஆனது பர்மா ராணுவ தளபதி ஆங் சு கியினை சிறையில் அடைத்து வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு வருகின்றனர். ஆனால் அதனை உலக நாடுகள் தடுக்க முடியவில்லையே!

நீங்கள் கேட்கலாம் நமது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல் சம்பந்தமாக எதுவும் சொல்லலையே என்று! Amnesty International என்ற மனித உரிமை ஆணையம் இந்தியாவினைப் பற்றி சொல்லும்போது, 'இந்திய அரசு எந்த மதத்தினவருக்கும், ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடற்ற சட்டங்கள் மற்றும் செயல் முறைகள் அமல் படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது ஒரு எடுத்துக் காட்டு. இந்திய அரசியல் சட்டம் 1951ம் ஆண்டு இயற்றப் பட்டபிறகு முதன் முதலில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? 1976ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி இதுதான் சமயம் என்று எமெர்ஜென்சி காலத்தில் எதிர் கட்சியினரை அடக்கி ஆள 42வது சட்ட திருத்தத்தினை கொண்டு வந்து, 'குடிமக்களின் அடிப்படை உரிமைகளை’ முடக்கி, அதன் மூலம் நீதிமன்றங்கள் தலையீடு இல்லாத வகையில் அவர்களுடைய நீதிபரிபாலன நடவடிக்கைகளை சஸ்பெண்டு செய்து, ‘ட்ரிபியூனல்’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் தனக்கு   வேண்டியவர்களை உறுப்பினர்களாக நியமித்து முன்மாதிரி சர்வாதிகாரியாக வலம் வந்தார். இந்த சட்ட திருத்தம் மூலம், 'குடிமகன் தனது கருத்தினை சுயமாக வெளிப்படுத்தினால் கைது நடவடிக்கையினில் ஈடு படலாம் என்பது தான்’ ஆனால் அவர் ஆட்சி நிலைத்திருக்க முடிந்ததா என்றால் இல்லையே என்பதினை அடித்துச் சொல்லலாம். குறைந்த காலத்திலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி புதிய ஆட்சியினை அமைத்தனர்..

அதனையடுத்து சட்டம் 1860 ல், செக்சன்  153 பி இ.பி.கோ விலும் செக்சன்  505 இ.பி.கோ படி யார் பயத்தினை ஏற்படுத்துகிறார்களோ, வேற்றுமையினை தூண்டுகிறார்களோ, சில காரணங்களுக்காக வன்முறையினை தூண்டுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சட்ட கமிஷன் 1986ல் பரிந்துரைத்தது.

ஆங்கிலத்தில் இரு  பழமொழிகள்  உண்டு, 'power  drunk a man', 'power corrupt a man' ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அதிகார போதையில் தன்னிலை மறந்தும், நாட்டின் செல்வம் எல்லாம் தன்னுடையது என்றும் ஒருவன் எண்ணுவானாம். அது தான் சர்வாதிகார செயலுக்கு முன்னுதாரணம். ஜனநாயகத்தில் 'checks and balance' வேண்டும். அதாவது ஆட்சியாளர்கள் நடவடிக்கைக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பது தான். தற்போது அதுபோன்ற செயல் முறைகள் இல்லாததால் அதிகார கும்பல் பொதுக் கூட்டம், பத்திரிக்கை, எலக்ட்ரானிக் மீடியா போன்றவற்றை அடக்கி அல்லது கைக்குள் கையூட்டு கொடுத்து மடக்கியும், மாணவர், வக்கீல், நடிகர், பொது நல ஆர்வலர்கள், பொது நல தன்னார்வ அமைப்புகள் என்று சகட்டு மேனிக்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர். அதற்கு ஆதரவாக சில நீதிமன்றங்களும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் உட்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வராமலே இழுத்தடித்தும், சிலவற்றில் அரசுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களில் தீர்ப்பும் வழங்கப் பட்டு அதனை நடுநிலையான ஊடகங்கள் கூட கண்டனம் செய்தன.அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1) ஆதிவாசிகள், பட்டியல் இனத்தவருக்காக சேவைசெய்த கிருத்தவ சாமியார் பேராசிரியர் ‘ஸ்டென்’ லூர்துசாமி தனது 84 வயதான காலத்தில் பார்க்கின்சன் நோயால் அவதிப் படுவரை தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்று சிறையில் அடைக்கப் பட்டு 5, ஜூலை, 2021ல் மரணம் அடைந்தது உலகத்தினையே உலுக்கியது. உலக நாடுகள் கண்டனத்தினையும் எழுப்பின.

2) எத்தனையோ நடிகர் நடிகைகளில் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் இளைஞர்களின் பணத்தினை கறந்தாலும்,   மும்பை ஆடம்பர ஜூஹூ கடற்கரை பகுதியில் ரூ 40 கோடிக்கு வீடு, ப ன்ஜ்ரா ஹில்ஸ் பகுதியில் ரூ 30 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கியதாக டமாரா அடித்து விளம்பர படுத்தினாலும், கொரானா நோய் காலங்களில் மனித நேயம் கொண்டு உணவு, தங்கும் இடம், இடம் பெயர்ந்த தொழிலாளர் சொந்த ஊர் செல்ல வாகன வசதி செய்த ‘சோனு சூடு’வினையும் விட்டு வைக்கவில்லை ரெய்டு  என்று.

3) அதேபோன்று மனித உரிமை ஆர்வலர் ‘ஹார்ஸ் மந்திர்’ நிறுவனத்தினையும் வருமான வரி ரெய்டு விட்டு வைக்கவில்லை.

4) கொரானா காலத்தில் பிரதமர் சேம நிதி எவ்வளவு வந்தது, அது யார் யாருக்கு கொடுக்கப் பட்டது என்ற தகவலையும் தரவில்லை என்றும், கொரானா காலங்களில் இறந்த கணக்கில் வராத ஆயிரக்கணக்கான பிணங்களை புனிதமான கங்கை ஆற்றில் அனாதையாக மிதக்கவிட்டுவிட்டனர் என்று செய்திகளை வெளியிட்ட 'July Dainik Baskar Group' மற்றும் 'நியூஸ் கிளிக், மற்றும் 'News Laundra' அலுவலகங்களிலும் வருமான வரி ரெய்டு நடத்தப் பட்டது.

5) புல்டோசர் பாபா என்ற புனைப்பெயர் பெற்ற மாநிலமான உத்தர பிரதேசத்தில்  ஒரு புது சட்டம் 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்துள்ளனர். 'Prohibition of unlawful religious conversion ordinances'. அதன் படி தண்டனை 10 வருடம் கடுங்காவல் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் உண்மையான மனமாற்றத்தோடு மதம் மாறினாலும், மதம் மாறி திருமணம் செய்தாலும், வழக்குத் தொடர்ந்து தண்டனை கொடுக்க முடியும். இந்த சட்டம் வந்ததிலிருந்து 79 முஸ்லிம்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். நமது நாடு சட்டங்களை எல்லாம் எப்படி தங்கள் இஷ்டப் படி தவறாக பயன் படுத்துகிறார்கள் என்று.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, 'Human Rights Watch' என்ற அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில், 'பிஜேபி' ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுதந்திரமான அமைப்புகளான போலிஸ், நீதிமன்றம், ஊடகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி வலதுசாரி அமைப்புகளுக்கு ஊக்கப் படுத்தி, சிறுபான்மையினரை பயமுறுத்தி, நீதிமன்றங்களில் வழக்குக்குமேல் வழக்குகள் போட்டு, மத அமைப்புகளில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப் பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக 23.2.2021ல் டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு 40 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும், அந்த வன்முறைக்கு காவல் துறை மற்ற துறைகள் உள்பட துணை போனதையும், சுட்டிக் காட்டியுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்ல விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் , பஞ்சாபில் 1980ல் போராடிய 'காலிஸ்தான்' தீவிரவாத அமைப்பினைச் சார்ந்தவர்கள் விவசாயிகள் என்று அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்  பட்டதாக கூறியுள்ளது' இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு பெரும் கவலை அளிக்கத் தானே செய்யும்.

காலம் ஒரு நாள் கனியும், அந்த காலம் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட கனியாதா என்று மக்கள் நினைப்பதும், இனியும் UAPA, ED, IT NIA  அமைப்புகள் கொண்டு மக்களின் உண்மையான எதிர்ப்பு குரலை அடக்க முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமல்லவா?