Tuesday, 22 July 2025

இடியென்ற இமிகிரேஷன், வெல்லுமா வரிவிதிப்பு!


(டாக்டர் .பீ.முகமது அலி, பிஎச்.டி()

அமெரிக்காவில் போதிய தஸ்தாவேஜுகள் இல்லையென்று பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களை கை விலங்கிட்டும், காலில் மாடுகளைப் போன்று சங்கிலி மாட்டியும், தலையினை மொட்டையடித்தும் வலுக்கட்டாயமாக விமானத்தில் அனுப்பிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்து படத்தப் படாத மக்கள் யாருமில்லை. அதில் இந்தியாவினைச் சார்ந்தவர்கள் ஆறு மாதத்தில் மட்டும் 1563 பேர்கள் நாடு கடத்தப் பட்டுள்ளனர்  என்ற செய்தி விவாத பொருளாக உள்ளது அல்லவாஅத்துடன் பரபரப்பாக பேசப் படும் Tariff(வரி) விதிப்பு என்றால் என்ன அதன் மூலம் எப்படி வளரும் நாடுகளுக்கு பாதகம் ஏற்படுகிறது என்பதனையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

            ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டில் குடியேறும்போது அதற்கான போதுமான தஸ்தாவேஜுகள் வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்கள் கள்ளத்தனமாக குடியேறிகள் ஆவர். அதனால் அங்குள்ள மக்களின் சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், மற்றும் சமூக அமைப்புகளிழும், சட்டம் ஒழுங்கிலும், உள் நாட்டின் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதில் பாதிக்கப் பட்ட நாடுகள் கடுமையாக சமீபத்தில நடந்து கொண்டுள்ளது. நான் அமரிக்கா சென்ற போது அங்குள்ள இந்தியர், சீனர் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்துள்ளவர்கள் உயர் படிப்பு படித்துவிட்டு கை நிறைய சம்பாதிக்கிறதினாலும், சொந்தமாக கார், வீடு வைத்திருப்பதினைப் பார்த்து பொறாமை படும் அமெரிக்கர்களை கண்டுள்ளேன். ஏன் இந்தியாவில் கூட அமெரிக்க மாப்பிள்ளை என்றால் தனி மதிப்பு தானே!

            குடிபெயர்வரது எதனால்  ஏற்படுகின்றது என்று பார்ப்போமேயானால் ஒரு நாட்டில் பருவ மழை பொய்த்து பஞ்சம் ஏற்படும்போதும், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப் படும்போதும், உள் நாட்டுப் போர், தீவிரவாத வன்முறை, ஆக்கிரமிப்பினை  நாடுகள் செய்யும்போதும் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஆதி சிகப்பு இந்தியர் இருந்ததினை, வளமான நாடு தேடி வந்த இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து போன்ற நாடுகள் குடியேறி அவர்களை மலைப் பகுதிகளுக்கு விரட்டியடித்ததாகவும் . ஆகவே தான் அங்கு உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன என்று  வரலாறு சொல்கிறது.

            உலக அளவில் முக்கிய பிரமுகர்கள் அதிகார துஷ்ப்பிரகாரம் செய்ததால் மற்றும் வேறு நாட்டின் ரகசியங்கள் வெளியிட்டதால், வேறு நாடுகளில்  குடி புகுந்த பட்டியலினை கீழே காணலாம்.

1) இடதுசாரி சிந்தனையாளர், பிரபல 'Das capital' என்ற பொருளாதார புத்தகத்தினை வடிவமைத்த கார்ல் மார்கஸ் ஜெர்மனியின் கெடுபிடியால் 1949ல் இங்கிலாந்தில் குடியேறினார்.

2) இந்தியாவின் பக்கத்து நாடான திபெத்தின் புத்தமத குருவான தலாய் லாமா சீனாவின் கெடுபிடியால் 1959ல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து இமயமலை அடிவாரத்தில் தனது தர்மசாலாவினை அமைத்து வாழ்ந்து வருகிறார்.

3) ஆஸ்திராலியாவின் பத்திரிக்கையாளர் ஜூலியஸ் அஸ்ஸாஞ் அமெரிக்காவின் ரகசியத்தினை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டப் பட்டதினால் துரத்தப் பட்டு இக்குடுவார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம்,அடைந்தார்.

4) பொலிவியா நாட்டின் ஜனாதிபதி கிபோ மொரேல் மெக்ஸிகோ நாட்டில் 2019ல் தஞ்சம் அடைந்தார். அண்டை நாடான பங்களாதேஷின் பிரதமர் ஷேய்க் ஹஸீனா 2024ம் ஆண்டு அங்கே புரட்சி நடந்ததால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளலாம்.

            அமெரிக்க நீயார்க் நகரில் உள்ள ஐநா சபையின் மனித உரிமை ஆணையும், 10.12.1948 அன்று நிறைவேற்றிய சட்டத்தில் குறியேறி கொள்கைகளை வகுத்துள்ளது. அவைகள்:

1) தீவிரவாத கொள்கையால் வெளியேறியர்வர்கள்,

2) ஒரு நாட்டில் அந்நிய படையெடுப்பினால் பாதிக்கப் பட்டவர்கள்

3) உள் நாட்டுப் போரால் விரட்டப் பட்டவர்கள்

போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.

1) அதுபோன்று அமெரிக்காவில் மெக்ஸிகோ, எல் சல்போடர், ஈகுடுவார், வெனிசுலா நாட்டினைச் சார்ந்தவர்  எந்தவித தஸ்தாவேஜுகளும் இல்லாமல் குடி வந்தவர்கள்.

2) ஆசியாவில் பங்களா தேசம், பர்மா ரோகிங்கோ, பாகிஸ்தானியர் மலேசியாவிற்கு குடிபுகுதல்,,

3) ஆஸ்திராலியா நாட்டிற்கு இலங்கை வாசிகள்

4) ஜேர்மன் நாட்டிற்கு இலங்கை நாட்டிலிருந்தும், ஆப்பிரிக்க நாட்டிலிருந்தும் குடி வந்தவர்கள் ஏராளம்.

அவ்வாறு குடியேறியவர் அமெரிக்காவில் 18 லட்சமும், ஜெர்மனியில் 16 லட்சமும், சவூதி அராபியாவில் 14 லட்சமும்,

5) ரஷியாவில் 11 லட்சமும் ஆகும் என்று ஆய்வுகள் சொல்கின்றனர்.

6) இங்கிலாந்து நாட்டில் பிரான்ஸ் நாட்டிலிருந்து பூமிக்கு அடியில் ஓடும் ரயில் பாதையில் வந்து விடுகின்றனர்.

7) கனடாவிலும் inclusive immigration and refugee settlement சட்டம் உள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கள்ளத்தனமாக குடியேறியவர்களை கண்டறிய சட்டங்கள் உள்ள. இந்தியாவில் வெளிநாட்டவர் சட்டம்,1946 மற்றும் குடியுரிமை(Passport) சட்டம் போன்றவை உள்ளன.

இவ்வாறு ஐநா சபையால் வழிக்கப் பட்ட சட்டங்கள் இருக்கும் பொது திடீரென்று குடியேறிகளை திருடர்களைப் போல் கைது செய்து, மொட்டையடித்து, விலங்கிட்டு பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவது நியாயமா என்று கேட்காத மக்களே இல்லைதானே! ஏனென்றால் அமேரிக்கா போன்ற நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது என்று ஆசை காட்டி,உள்ளூரில் இருக்கும் நாலு காணி நிலத்தையும் விற்று, மனைவி, மக்கள் போட்டிருக்கும் நகைகளையும் விற்று இடைத்தரகர்களுக்கு கொடுத்து ஏமாந்து, கள்ளத்தோணியிலும், கடும் காடுகளிலும், ஆறுகளிலும் கடந்து உயிர் தப்பிய சிலர் மட்டும் தப்பித்து நாலு காசுகள் வீட்டினுக்கு அனுப்புவதினை எண்ணி ஏங்கும் பெற்றோர், குடும்பத்தினர் பரிதாப நிலையினை எண்ணிப் பாருங்கள்! மனம் பதைக்கவில்லையா?

            அமெரிக்க அதிபர் 2025 ஆரம்பத்தில் பதவி ஏற்றதுமே பல நாடுகளை இறக்குமதி கொள்கையால் அடிபணிய முயற்சி செய்து வருகிறார். சராசரி இறக்குமதி வரியான 2.5 சதவீத வரியிலிருந்து 27 சதவீத வரிக்கு உயர்த்தியுள்ளார். ஸ்டீல், அலுமினியம்  போன்றவற்றிற்கு 50 சதவீதமும், கார் போன்றவற்றிக்கு 25 சதவீதமும் இயற்றியுள்ளார். அதற்காக சர்வதேச எமெர்ஜென்சி மற்றும் பொருளாதார சட்டத்தினை (IEEPA) அமல் படுத்தியுள்ளார். அதனை எதிர்த்த வழக்கும் பெடரல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. சர்வதேச சராசரி 10 சதவீத வரிகள் 57 பொருளாதார உறவு நாடுகளுடன் இருக்கும்போது அதனை அதிகப் படுத்த முயலும்போது அங்குள்ள பங்கு சந்தை வீழ்ச்சியடைந்தது. சீனாவிற்கு அதிகபட்சமாக 145 சதவீத வரி விதிக்கப் பட்டு பின்னர் பேச்சு வார்தைக்குப் பின்பு 30 சதவீதமாக குறைக்கப் பட்டது. இந்தியாவிற்கு பேச்சு வார்த்தை நடத்தி தாற்காலியமாக 20 சதவீதம் விதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தை ஈடுபடும் நாடுகளுடன் அந்தந்த நாடுகளுடன் உள்ள இயற்கை அபூர்வமான வளங்களை (rare earth minerals) அமெரிக்க பெற்றுக்கொள்வது என்ற கொளகையில் உள்ளது. பிரேசில் நாட்டில் இடதுசாரி ஜனாதிபதி லூலூ ஆட்சியினை அடிபணிய வைத்து வலது சாரி முன்னாள் ஊழல் குற்றச் சாட்டில் இருக்கும் ஜனாதிபதி பொலிஸனோராவிற்கு ஆதரவாக பிரேசிலை  50 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி நான் பல நாடுகளை ஆயுதம் கொண்டு வெல்லவில்லை,  மாறாக வரிவிதிப்பினால் பணிய வைத்திருக்கிறேன் என்று பெருமையடிக்கிறார்.

                        முதன் முதலில் வரி விதிப்பு கொள்கை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு சர்வதேச நாடுகள் கூடி ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் 30.10.1947ல் (GATT) அதில் 23நாடுகள் இணைந்தன. அதன் பின்பு பிரான்ஸ் அன்னசி என்ற இடத்தில் 13 மற்ற நாடுகளும் இணைந்து 5000 பொருட்களுக்கு வரி விதிப்பு பற்றிய கொள்கை முடிவானது. அதன் பின்பு இங்கிலாந்தில் 1951ல் 83 நாடுகள் இணைந்தும், அதன் பின்பு வியன்னாவில் 1956ல் நடந்தது. அந்த சமயத்தில் தான் பிரிந்த ஜெர்மனி இணைப்பது சம்பந்தமாக அமெரிக்காவிற்கும், ரசியாவிற்கும் பனிப்போர்(cold war) நடந்தது. அதன் பின்னர் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் உள்ள சரக்கு போக்குவரத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் காலத்தில் நடந்தது.

            1985ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும்,, ரசியாவிற்கும் இடையேயான பனிப்போர் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டியது. ஏனென்றால் அணுகுண்டுவிட பன் மடங்கு சக்தி வாய்ந்த  ஆயுதங்கள் இரண்டு நாடுகளுமே வைத்துள்ளதால் போர் ஏற்பட்டால் உலக அழிவு ஏற்படும் என்ற பயத்தினால் தானே என்றால் மிகையாகாது.

 வளர்ச்சியடையும் நாடுகள் தங்கள் நாட்டில் விளையும் பொருட்களை வளர்ந்த நாடுகளில் நல்ல விலைக்கு விற்க முயலும் போது இதுபோன்ற வரி விதிப்புகள் நடக்கின்றன. இறக்குமதி செய்யும் பொருட்களால் அந்த நாட்டு பொருளுக்கு விலை போகாது என்பதினாலும், தங்கள் நாட்டில் வேலை வாய்ப்பு குறைவாகி விடும் என்ற பயத்தினாலும் வரிகள் விதிக்கப் படுவது இயற்கை என்று சொன்னாலும், மற்ற நாடுகளை தனது கொள்கையால் பணிய வைக்க எடுத்த நடவடிக்கை என்பது ஏகபத்திய நடவடிக்கை என்றால் மறுக்க முடியாது. உப்பு என்பது கடலின் வரத்தால் அருளப்படும் விலையில்லா பொருள். அதற்கும் பிரிட்டிஷ் ஏகாபத்திய அரசு வரி   விதித்ததால் மகாத்மா காந்தி அவர்கள் இந்திய மக்களை தட்டி எழுப்பி உப்புக்கு கொடா இயக்கத்தினை தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 1930 ஆரம்பித்து தண்டி கடற்கரையில் முடித்து கும்பனி அரசால் கைது செய்யப் பட்டார். அந்த போராட்டம் தமிழகத்திலும் தொடர்ந்து வேதாரணியம் கடற்கரையிலும் நடந்தது. அதுபோன்ற ஏகாபத்திய நடவடிக்கை தானே எமெர்ஜென்சி சட்டத்தினை பயன்படுத்தி வரிவிதிப்பது என்று பல நாடுகள் எதிர்க்கின்றனரல்லவா? அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கையிலிருந்து தப்பிக்க இந்தியா போன்ற நாடுகள் ரசியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் வர்த்தக உறவு வைக்க முயல்கிறன, அதற்கு அமெரிக்காவிலுள்ள செனேட்டர் கிரஹாம் அது போன்று நடந்து கொண்டால் அந்த நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப் படுவது ஒரு  ஏகபத்திய நடவடிக்கை தானே!