Saturday, 13 June 2015

மாப்பிள்ளை டே, புது மாப்பிள்ளை டே, யோகா டே!


12.6.2015 அன்று யோகா டே என்ற யோகா தினம் கொண்டாடப் பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என உத்திரவிடப் பட்டது அனைவரும் பத்திக்கை வாயிலாக அறிந்திருப்பீர். அதனை முஸ்லிம் அமைப்பினரும், கிருத்துவ அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததும், நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என்றும், அல்லாஹு நாமத்தினை சொல்லலாம் என்றும் கூறப்பட்டது.
கிரிராஜ் என்ற சர்ச்சையான பாராளுமன்ற உறுப்பினர் யோகா வேண்டாம் என்பவர்கள் வேறு நாட்டுக்குச் செல்லுங்கள் என்றும், இல்லை என்றால்  குதித்து மூழ்குங்கள் என்றும் சொல்லி சர்ச்சை எழுப்பி உள்ளார். தமிழ் சினிமா படத்தில் புது மாப்பிள்ளையினைப் பார்த்து 'மாப்பிள்ளை டே,புது மாப்பிள்ளை டே' என்று பாடும் பாடலை கேட்டிருக்கின்றோம். அதே போன்று தான் இந்த யோகாவினையும் கூவிக் கூவி மைனாரிட்டி சமூகத்தினரிடம் விற்கப் பார்க்கின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் அவர்களோ, 'இந்தியா ஒரே ஹிந்து நாடு என்பது பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை, ஏன் பாக்கிஸ்தானும், பங்களாதேசும் ஹிந்து நாடு தான்' என்று பேசி அதனால் சர்ச்சையினை கிளப்பியிருப்பது  13.6.2015 தினமணி பத்திரிக்கையில் வந்துள்ளது. இவை எல்லாம்  எதனைக் காட்டுகின்றது என்றால் எப்படியாவது முஸ்லிம்களை தங்கள் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து விடவேண்டும் என்று 2014 ஆண்டிலிருந்து கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றன என்று முஸ்லிம்கள் எண்ணுவது சரி என்று நினைக்கவில்லையா ?
யோகா என்ற சொல் 'யுஜ்' என்ற சான்ஸ்கிரிட் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் தனி மனிதனின் உள்ளத்தினை(ஜிகாத்மா) இறைவனிடம்(பரமாத்மா) ஒப்படைப்பது ஆகும். இந்தியாவின் குடிமக்களை மதம், மனம், உடல், ரீதியாக இணைக்கும் பல்வேறு செயல்கள் 2014 புதிய ஆட்சிக்கு வந்த பிறகு நடை பெற்று வருகிறது. அதில் ஒன்றே யோகா ஸ்லோகனாகும். இந்த யோகா முறை ஹிந்து, புத்த, ஜைன மத வழிபாடுகளில் ஹதா யோகா மற்றும் ராஜ் யோகா போன்ற செயல் முறைகளில் பின்பற்றப் பட்டு வருகிறது. ஹிந்து மத 'உபநிசாத்' மற்றும் புத்த 'பாலி கேனான்' மூன்றாம் நூற்றாண்டு பி.சி யிலிருந்து செயல் முறையில் இருந்தாலும் மேற்கித்திய நாடுகளுக்கு இருபதாம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தா அமெரிக்கா சென்ற பின்பு தான் தெரிய வந்தது. தற்போது பரபரப்பாக பேசப் பட்டு வரும் யோகா உடற் பயிர்ச்சி ஒரு காலத்தில்  அதனையே தற்போது பழைய தியானம், இறையருள் போன்றவற்றிக்குத்தான் முக்கியம் கொடுக்கப் பட்டது. அவைகள் அனைத்தும் ஹிந்து மத 'சம்கிய' தத்துவத்தினை  ஒட்டியதேயாகும். பழைய வேதங்களிருந்து பதாஞ்சலி யோகா சூத்ரா பாடல்களை வாழும் கலைஞர் என்று அழைக்கப் படும் ரவி சங்கர் போதிக்கிறார்.
கீழேக் கொடுக்கப் பட்ட யோகா முறைதான் தியான முறையினைச் சார்ந்தது
அதன் செயல் முறைகள் 'கியான் யோகா'(தத்துவம்), பக்தி யோகா ( இறைபாதை அடைதல்), கர்ம யோகா ( மகிழ்வான செயல்) மற்றும் ராஜ் யோகா (மனதிணை ஓர் நிலைப் படுத்துதல்) போன்றவையாகும். ஆனால்  தற்போது உடலை வருத்தி ஆண், பெண் அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அதற்கென்று உடலை ஒட்டிய யோகா டிரஸ் அணிந்து பொது இடங்களில் செயல்  முறையாக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் கூட அப்படி உடல் ஒட்டி அங்கங்கள் தெரியும் அளவிற்கு அணியும் யோகா உடை தடை செய்யப் பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் ஒரு யோகா குரு மீது பல்வேறு அமெரிக்க பெண்கள் கற்பழிப்பு புகார்கள் கொடுத்து அது விசாரணையில் இருப்பதும் பத்திரிக்கை வாயிலாக அறிந்திருப்ர்கள்.
யோகா பயின்றால் புற்று நோய், மனபிதற்றல், காச நோய், இருதய நோய் குணமாகும் என்றும் கூறப் படுகிறது. எப்படி 'வல்லாரை லேகியம்' விற்கும் வைத்தியர் தன் வார்த்தை ஜாலங்களால் லேகியத்தினை விற்கின்றாரோ அதே போன்றும் தான் மேற்கூறப்பட்ட நோய்களுக்கும் குணமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் பற்றி ஆய்வு நடத்தியவர்கள் புற்று நோய் சுகமாவதிற்கும், யோகப் பயிற்சிக்கும் மொட்டைத் தலைக்கும் முனங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு போன்ற பேச்சே அது என்றும் கூறுகிறார்கள். அது போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஒரு மனோ தத்துவ சிகிச்சையே என்றால் சரியாகும் என்று படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களே சொல்கிறார்கள்.
கீழே தரப்பட்ட யோகப் பயிற்சியினை காணுங்கள். இதில் பெண்கள் அணிந்திருக்கும் உடையினைப் பாருங்கள். அவர்கள் செயல் முறையினைப் பார்த்தால் எவ்வாறு உடல் நோய் நீங்கும் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்..

யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:
1) யோகா முறையினை ராம் தேவ் சொல்படி   அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும்,  போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள். அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும். அமெரிக்காவில் யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.
சில  ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வேயில் உள்ள லோன்ஸ்  ஸ்குயிர் பார்க்கில் ஆண்களுக்கான யோகவினை ஒருவர் செயல் படுத்தி வந்தார். அங்கு நடைப் பயிற்ச்சிக்கு வந்த கோசா முஸ்லிம் பெண்களையும் தூண்டி யோகப் பயிற்சியில் ஈடு படுத்தினார். தற்செயலாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டுக்கு வந்த ஒரு பெண்ணின் கணவர் ஆண்களுடன் தன் மனைவியும் யோகா பயிற்சியில் ஈடுபடுவதினைக் கண்டு அதிர்ச்சியுற்று, சண்டை போட்டு தன் மனைவினை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அதிலிருந்து அங்கே யோகாவும் நடக்க வில்லை.அதே போன்ற சமூதாயப் பிரச்சனை ஏற்பட வழி வகையாகி விடுமல்லவா? பின் ஏன் அமெரிக்காவில் உள்ளது போல கற்பழிப்புப் புகார்கள் வராது?
iநானும் 1982 ஆம் ஆண்டு ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் இருக்கும் காவல் அகாடமியில் 15 நாட்கள் யோகா பயிர்ச்சி பெற்று இருக்கின்றேன். ஆனால் ஒரு வயதில் தான் தற்போதிலுள்ள யோகா முறைகளை செய்ய முடியும். சென்னைக் கோட்டைக்கு வெளியே உள்ள பார்க்கில் குப்தா என்ற யோகா மாஸ்டர் பயிற்சி அளிக்கின்றார். ஆரம்பத்தில் நடைப் பயிற்ச்சிக்கு வந்தவர் யோகா ஆர்வத்தில் புது மாப்பிள்ளை போன்று பயிற்சி பெற்றனர். ஆனால் போகப் போக அந்தக் கூட்டம் குறைந்து யோகா மாஸ்டர் மட்டும் இன்று செய்து கொண்டு உள்ளார்.
ஆனால் தொழுகைக்கு ஏழு வயதிலிருந்து, மரணிப்பது வரை நின்று, உட்காந்து, படுத்துக் கொண்டு தொழ முடியும். தொழுகைக்கு தேவைப்  படுவது சுத்தமான இடம், உளுச் செய்ய சிறுது  வசதி. ஆனால் ஆணும், பெண்ணும் இணைந்து  தொழ வழியில்லை. ஏனென்றால் தொழும் இடத்தில் நப்பாசைகளுக்கும், கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால். ஐவேளை தொழுகை, சும்மாத் தொழுகை, பெருநாள் கூட்டுத் தொழுகை, தகஜாத் இரவுத் தொழுகை, இக்திகாப் தனித்துத்து இருந்து தொழல்.
உடல் திடகார்த்தமானவர் வீட்டிலிருந்து, அல்லது வியாபாரத் தளத்திலிருந்து நடந்தே தொழுகைக்கு வருவது ஒரு நடைப் பயிற்சி. வயதானவர், நோயாளி, கர்ப்பிணி, உட்கார்ந்து அல்லது படுத்துத் தொழல் வசதி. அதுவும் ஒரு பயிற்சியே! தொழுவதால் உளச் சுத்தம் ஏற்படுதல்  அதாவது மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.
தொழும் பொது இறைவனால் அருளப் பட்ட அழ குரானை ஓது கிறோம் என்ற பய, மதிப்பு மரியாதை ஏற்படுகின்றது.அத்துடன் கூட்டுத் தொழுகையால் ஒரு சகோதர பாசம் சுரக்கின்றது.
அல்குரான் சூரா மாய்தாவில்(5:3) இஸ்லாம் முழுமையும், முதிற்சியும் பெற்றது என்று கூறுகின்றது.
தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.
கபீர் எமண்ட் ஹெல்மின்ஸ்கி என்பவர், 'சூபி வே டு மைண்ட்புல்ன்ஸ் அண்ட் எசென்சியல் ஸெல்ப்' என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.

நமது முஸ்லிம் கிராமங்களில் அந்தக் காலங்களில் என்னைப் போன்ற சிறுவர்கள் கூட  கீழே காணும்  சிலம்பாட்டம், மடுக் கட்டை, மான் கொம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுக்களை பயிற்சியாக கொடுத்தார்கள். ஆனால் எந்தக்  காலத்திலும் முனங்காலுக்கு மேலே கைலி சென்றதில்லை. ஆனால் இன்று அரை குறை ஆடையுடன் மாணவர் மாணவியர் உடற்பயிற்சி எடுப்பது எந்த வகையில் நியாயம்?
ஆகவே யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து, பாரம்பரிய உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.


Monday, 18 May 2015

கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

இஸ்லாமியக் கட்டிடக் கலையின் எடுத்துக் காட்டாக இருப்பது வட்ட  வடிவமான கவிகை மாடம், உயர்ந்து காணப்படும் மினராவும் தான்  என்றால் மிகையாவது. அதுபோன்ற வடிவங்கள் அமைப்பதின் பின்னணியே தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அது பள்ளிவாசல் என்று சொல்லாமல் சொல்லும் முறைதான் அது என்பது இஸ்லாமிய வரலாறு படித்தவர்களுக்குத் .தெரியும்.
உலக அதிசயங்களின்  உச்ச பீடமான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலிருந்து அரேபியாவில் பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல்) அடங்கியிருக்கும் மதினாக் கோபுரம் வரை உள்ள கோபுரங்கள் இஸ்லாமியக் கட்டிடக் கலையின்  எடுத்துக் காட்டாகும். உலகின் ஒவ்வொரு நாகரியமும் ஒரு அடையாளத்தினை விட்டு சென்றுள்ளது. உதாரணத்திற்கு  சிந்துசமவெளி நாகரீக அடையாளமாக மோகன்ஜாதார-ஹரப்பாவும், கிரேக்க-ரோமன் அடையாளமாக கிரீக், இத்தாலியில் உள்ள உயர்ந்த தூனுகளுடன் அமைந்த கல் கட்டிடங்களும், துருக்கிய நாகரிகத்தின் கட்டிடக் கலையின் அங்கமாக அங்காராவில் உள்ள கட்டிடங்களும் எடுத்துக் காட்டாகும்.
ஆனால் சிலருக்கு மதினாவில் உள்ள பச்சைக் கலரில் உள்ள கவிகை மாடம்  மீது அலாதிய கோபம். அதுவும் தமிழ்நாட்டில் தான் அந்தக் கோபம். ஏனென்றால் யாரோ ஒருவர் எழுப்பிய விசமத்தனமான புரளியினை நம்பி அந்தக் கோபுரத்தினை உடைப்போம் என்று குரல் எழுப்பி முண்டாசு கட்டும் சிலரும், அதற்கு எதிர்ப்பு என்று இன்னொரு அமைப்பும் என்று கிளம்பி 2015 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு   தொலைக் காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களுக்குத் தீனி போட்டன. அத்தோடு நில்லாமல் மண்ணடி சுவர் எல்லாம் தங்களுடைய குடும்பச் சொத்து என்று பெரிய போஸ்டர்களும் ஓட்டப் பட்டன. இத்தனைக்கும் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்தால் தண்டனை என்று இருக்கும்போது அதனையும் மீறி விளம்பரம் செய்யப் பட்டுள்ளன. ஆனால் அந்த அமைப்பின் தலைவர்கள் நடத்தும் வணிக வளாகத்திலோ அல்லது வீட்டின் சுவரிலோ ஒட்டவில்லையே அது ஏன்?
ஏனென்றால் ஒரு அமைப்பினர் மண்ணடியில் மற்ற அமைப்பினருக்கு சவால் இடும் வகையில் காவல்த் துறையினர் முன்னிலையில் ஒலி பெருக்கியில் தமிழ்நாட்டில் உள்ள தர்காக்களை தகர்ப்போம் என்று அறைகூவல் இட்டது முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பும் தொலைகாட்சியில் ஒலி பரப்பப் பட்டது. அந்தத் தொலைக் காட்சியினை முஸ்லிம்கள் மட்டும் பார்ப்பதில்லை, அனைத்து சமூகத்தினவரும்  மதினாக் கோபுரத்தினை உடைப்போம் என்று சொன்னவர்களுக்கும், அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித் 500 ஆண்டுகால முஸ்லிம்கள்  ஆட்சியின் அவமானச் சின்னம் என்று திட்டமிட்டு கோபுரத்தில் ஏறி கோடாரி கொண்டு உடைத்த ஒரு கூட்டத்தினவருக்கும் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழும்பி இருப்பதாக முஸ்லிம்கள் பேசாமலில்லையே ! கோவையில் முஸ்லிம்களின் வியாபார தளமாக  இருந்தது ஒப்பனக்கரத் தெரு. அதில் இருந்த வியாபார தளங்களான  சோபா  கிளாத் செண்டர் உள்ள பல வியாபார தளங்கள் தரை மட்டமாக்கப் பட்டது 1998 ஆண்டு கலவரத்தில். இதற்குக் காரணம் சில தலைவர்கள் தூண்டுதலால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்று விடுதலையே கண்ணுக் கெட்டிய தூரத்தில் இல்லையே என்று வெஞ்சிறையில் வாடுகின்றனர், அவர்களை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளன. ஆனால் அந்தக் கலவரத்தில் வளைகுடா நாடுகளில் வேர்வை சிந்தி சம்பாதித்த சம்பாதியத்தினை வீடியோ, ஆடியோ கேசட்டுகள் விற்பனை மூலம்  பலனடைந்த சில தலைவர்கள் நல்ல வியாபார தளங்களோடு மஞ்சள் குளிக்கின்றனர் என்றால் மிகையாகாதே!
அதேபோன்ற  ஒரு நிலையினை முஸ்லிம்கள் வியாபாரத்   தளமான மண்ணடியிலும் இந்த அமைப்புகள் ஆர்பாட்டம், எதிர் ஆர்ப்பாட்டம் மூலம் வரவழைத்து விடுமோ என்ற உள்ளூர பயம் மண்ணடி  முஸ்லிம்களிடையே இல்லாமலில்லை என்பது சிலர் பகிர்ந்து கொண்டக் கருத்து. இது போன்ற அழிவு பேச்சு மூலம், இந்திய  நாட்டில்  வாழ வேண்டுமென்றால் ஹிந்து பண்பாடைக் கடைப் பிடிக்க வேண்டும், இல்லையென்றால் முஸ்லிம் நாடுகளுக்கு ஓடுங்கள் என்று சொல்லும்  அமைப்புகள் வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தக் கதையாகுமல்லவா? வளர்த்த கடா மார்பில் குத்தும் கதைதான் தமிழகத்திலும் நடக்கின்றது என்றால் ஆச்சரியமில்லை!  ஒரு  உதாரணம் மூலம் எவ்வாறு முஸ்லிம்கள்  ஒருவருக்கொருவர் கழுத்தில் கத்தியினை வைக்கின்றனர் என்று உங்களுக்கு உண்மைச் சம்பவம் ஒன்றை  சொல்லலாம் என நினைக்கின்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமன பட்டியல் தயாரிக்கப் பட்டதில், மதுரையினைச் சார்ந்த சிறந்த  முஸ்லிம் வழக்கறிஞர் அஜ்மல் கான் பெயரும் பரிசீலனையில் இருந்தது. அதனைத் தெரிந்து கொண்ட அவரைப் பிடிக்காத இன்னொரு முஸ்லிம் வழக்கறிஞர், அஜ்மல்கானை  பற்றி அவதூறாக ஒரு மனு கொடுத்தின் மூலம்  அவர் பெயர் விடுபட்டுப் போனதாம். அப்படி என்ன   அவதூறு என்று கேட்கலாம். அதாவது, வழக்கறிஞர் அஜ்மல்கான் மதுரையினச் சார்ந்த சில முஸ்லிம் அமைப்பினருக்கு ஜாமீன் வழங்க மனுத் தாக்கல் செய்து வாதிட்டாராம்'.  ப.ம.க, விடுதலை  சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் ஜாதியினருக்கு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வேண்டும் என்று வாதிடும்போது முஸ்லிம் சமூதாயத்திலேயே ஒருவருக்கொருவர் காலைவாரும் செயல்தான் நடக்கின்றது என்று பார்க்கும் போது வேதனையாக இல்லையா? இது சம்பந்தமான எனது ஆதங்கத்தினை சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்களுடன் கூட பகிர்ந்து கொண்டுள்ளேன்!
இன்று  தமிழகத்தில் முஸ்லிம்கள்  அரசியலில் செல்லாக்காசாகக் காரணம் என்னவென்றால்  நாங்கள் சமூக அமைப்புகள், அரசியலுக்கு வரமாட்டோம் என்றும் சொல்லுபவர்கள் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு தலைவரை வலிய சென்று தேடி ஒரு வாக்குறுதியும் எழுதி வாங்காமலே முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத் தான் என்று சொல்லி சோரம் போவது வாடிக்கையாகி விட்டது. அப்படிச்  சொல்வதின் பின்னணி என்ன என்று முஸ்லிம்கள் அறியாமலில்லையே! முஸ்லிம்கள் அதிகமாக  வாழும், மற்றும் பல்வேறு சமூதாய அமைப்புகள்  தலைமையிடமாக இயங்கும் ஹார்பார் சட்டமன்றத் தொகுதியில் கூட ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினரைத்  தேர்ந்தெடுக்க முடியவில்லையே அது ஏன்?  ஒற்றுமை முஸ்லிம்களின் எட்டாக்  கனியோ என்று சந்தேகம் எழாமலில்லையே! மற்ற அரசியல் கட்சிகள், மற்றும் ஜாதித் தலைவர்களுடன் கூட்டுக்காக  அலையும் தலைவர்கள் சமூதாய ஒற்றுமைக்கு, ஒருங்கிணைப்புக்கு வழிவகை செய்ய வில்லையே அது ஏன்?  ஆனால் அருகில் இருக்கின்ற ஆந்திர  மாநிலத்தில் உதயமாகி, சமீப மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் கால் பதித்திருக்கும் உவைசியின் எம்.ஐ.எம். கட்சியுடன் தமிழ்நாடு இயக்கங்கள் போட்டிப் போடமுடியவில்லையே அது ஏன்? எங்கே சுயநலம் மேலோங்கி, பொதுநலம் மறைக்கப் படுகின்றதோ அங்கே வெற்றியினைக் காணமுடியாதே!
மத்தியில் புதிய ஆட்சி பீடத்தில் அமைந்ததும் கல்வி, வரலாறு, கமிசன்கள், கவர்னர்கள், போன்றவற்றில் எல்லாம் காவிமயமாக ஆக்கப் பட்ட பின்பும், ஏழை முஸ்லிம்களின் வியாபாரமான மாட்டுகறியிலும் கைவைக்கும் காவி மய  அத்துமீறல்களை  சமீபகாலங்களில் பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல புது ..டெல்லியில் 14.5. 2015 அன்று ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையும் படம் போட்டுக்   காட்டியுள்ளது. அது என்ன தெரியுமா? புது டெல்லியினைத் தலைமை இடமாக முகலாய சாம்ராஜ்யம் 500 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர் என்று வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். அப்போது மன்னர்களான ஹுமாயுன்,அக்பர், ஜஹாங்கிர்,ஜாஜஹான் போன்ற பெயர்களைக் கொண்ட வீதிகளை அங்கு சென்றவருக்குத் தெரியும். ஏன் மிக முக்கியப் பிரமுகர்கள் வாழும் பகுதியும் அவைகள் தான். அந்த மன்னர்கள்  பெயர்கள் தாங்கிய பலகைகள் இந்தியாவின் அவமானச் சின்னம் என்று சிவ சேனா அமைப்பினர் தார் பூசி அழித்துள்ளார்கள். அவர்களுக்கும் மதினா டூம் இடிப்போம் என்று சொல்பவர்களும் ஒரு வகையில் தோழர்கள் தானோ!

அதே நேரத்தில் தனி மனிதனாக நின்று ஒரு முஸ்லிம்  சகோதரர் முஸ்லிம்களுக்கு வந்த அவப் பெயரினை களைந்து அமெரிக்காவில் நடந்த சர்வதேச ஆவணப் பட விழாவில் ரெமி பரிசினை பெற்றிருக்கின்றார். அவர்தான் கோம்பை அன்வர். அவர் 'யாதும்' என்ற ஆவணப் படம் எடுத்து பிரபல மறைந்த தமிழக எழுத்தாளர் சுஜாதாவின்  தவறான கருத்துகளுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். அப்படி என்ன சுஜாதா கருத்தினைத் தெரிவித்தார் என்று 15.5.2015 தேதியிட்ட ஹிந்து பத்திரிக்கை வெளியிட்டுள்ளதினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 'முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பின் மூலம் ஆயிரக்கணக்கான வைஷ்ணவர்கள் கொல்லப் பட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோம்பை அன்வர் எடுத்த ஆவணப் படம் மூலம் அதனைத் தவறு என்றும் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்துள்ளார்கள் என்று கீலக்கரையிலுள்ள 'கல்லுப்பள்ளி' யின் கட்டிடக் கலையினைக் கொண்டு நிருபித்துள்ளார்.அங்கே முஸ்லிம்-திராவிட பண்பாடுகளுடன் 17ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டுள்ளது. இன்றும் அங்கே உள்ள தூண்களின் அமைப்பு கோயில் தூண்களை ஒத்து இருக்குமாம். நான்  கூட இளையான்குடி-கீழாயூர்  பழைய பள்ளியினைப் பார்த்திருக்கின்றேன். அங்கே தூண்களில் சாமி வடிவங்கள் இருக்கும். நல்ல வேலை இந்த விபரமெல்லாம் கோடரி கொண்டு உடைப்போம் என்று கூக்கிரலிடும் அமைப்பினருக்குத் தெரியவில்லை என எண்ணவேண்டியுள்ளது. தம்பி கோம்பை அன்வர் சாதித்த சாதனைகள் போல சமூதாய இயக்கங்கள் சாதனை எத்தனையோ உள்ளது.`
உதாரணத்திற்கு தூத்துக்குடி வீரபாண்டிய பட்டிணம் ஊரில் அமைந்திருக்கும் ஆதித்தனார் கல்லூரியில்,சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ்.போன்ற பதவிகளுக்கேல்லாம் ஒருங்கிணைந்த பயிற்சி கொடுத்து நாடார் சமூகத்தினை முன்னேற வழிவகை செய்கின்றனர். ஆனால் அதுபோன்ற ஒரு அமைப்பு இது வரை முஸ்லிம் சமூதாயத்தில் இல்லை என்ற எனது ஆதங்கம் 'மியாசி' என்ற அமைப்பில் கூட கடிதம், உறுப்பினர் என்ற முறையில் வெளியிட்டுயுள்ளேன்.ஒரு தீர்மானத்தினையும் கொண்டு வந்தேன், அது வெற்றி பெற்றாலும் இதுவரை அது அமல் செய்யப் படவில்லை என்பது வருத்தமாகத் தானே உள்ளது.

ஆகவே சமூதாய இயக்கங்கள் தங்களுக்குள் தேவையில்லாமல் சண்டைகள் போடுவதினை விட்டுவிட்டு,  அழிவுப் பாதையினை கடைப் பிடிக்காமல், நலிந்த சமூதாயத்தினவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் சலுகைகள் பெற வழி வகுப்பதுடன், வேலை வாய்ப்பு, தொழில் முனைய வழிவகுப்பது  காலத்தின் கட்டாயமே!


Wednesday, 29 April 2015

ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா!

ஆங்கிலேய  கிழக்கு இந்திய கம்பனி ஒன்றுபட்ட இந்தியர்கள் மீது நடத்திய அடக்குமுறையினை எதிர்க்க புறப்பட்ட மக்கள் புரட்சிதான் முதாலாம் விடுதலைப் போர், விடுதலைப் புரட்சி, சிப்பாய்க் கலவரம், என்று பல பெயர்களால் அழைக்கப் படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சியாகும் என்று நீங்கள் அறிவீர்.

மீரட் நகரில் முதலாவதாக ஆரம்பித்த கலவரம் படிப்படியாக இந்தியாவெங்கும் பரவியது. இந்திய குறுநில மன்னர்கள் பலர் கும்பனி துப்பாக்கிக்குப் பயந்து  ஒடுங்கிப் போயிருந்தாலும், சீக்கிய மன்னர்கள் பலர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய எழுச்சியினை  எதிர்த்தாலும், ஜான்சி நாட்டின் வீர மங்கை லக்ஷ்மி பாயும், அவுத் மாநில அரசியான பேகம் ஹசரத்தும், அவருடைய மகனார் பிர்ஜிஸ் காதிரும் கும்பனி ஆட்சியினை எதிர்த்துப் போரிட்டனர்.

அவுத் மாநிலத்தில் போரினை முன்னின்று நடத்தியவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு எல்லாம்  ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் மௌலவி அகமதுல்லா. இவர் சென்னையினைச் சார்ந்தாலும் அவுத் மாநிலத்தில் படைத் தளபதியாக இருந்து போரிட்டு இருக்கிறார்.

முதலாம் சுதந்திரப் புரட்சியில்  முக்கிய பங்காற்றியவர்களில் முகலாயிய சாம்ராஜ்ய  சக்கரவர்த்தி பகதுர்சா சபார் அவர்களின்  படைத்தளபதியான பக்த்கான், பெரேலி கான் பகதூர் கான், ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் 1859ஆம் ஆண்டுக்  கொல்லப்பட்டார்கள்.

வட இந்தியாவில் புரட்சிப் படைகளை இரும்புக் கரம் அடக்கி, புரட்சிப் படைத் தளபதிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுக் குவித்த கும்பனிக் கொடூரன் 'கர்னல் நீல்' ஆச்சரியமில்லை!
அந்தக் கொடூரனுக்கு எங்கே சிலை வைத்தார்கள் தெரியுமா ஆங்கிலேயர்கள். சென்னை மாநகர மத்தியில் அமைந்திருக்கும் ஸ்பென்சர் எதிர்புறத்தில் வெண்கலத்தால் சிலை அமைத்தார்கள். அந்தக் கொடூரனுக்கு தமிழகத்தின் தலைநகரில் சிலையா என்றுக் கொதித்து எழுந்த மதுரை இளம் சிங்கம் முகமது சாலியா தனது நண்பனான சுப்ராயளுடன்  சென்னை நோக்கி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டார்கள்  அவர்கள் கையில் துப்பாக்கியில்லை, வெடிகுண்டு இல்லை. மாறாக வெறும் சுத்தியலும், கோடாரியும் தான் அவர்கள் ஆயுதம். கையில் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஒரு ஏனியினை வைத்து கர்னல் நீல் சிலைமீது ஏறி பீடத்திலிருந்து வெட்டிச் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த 21 போராட்ட வீரர்களும் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றனர். அதன் பின்பு அந்த சிலை ஆங்கிலேயர் ஆட்சி செய்தது வரை நிறுவப் படவில்லை.
இப்போது அந்த சிலை எங்கே இருக்கின்றது தெரியுமா? சென்னை எழும்பூர் காட்சியகத்தில் ஆதிக்க ஆங்கிலேயரின் காட்சிப் பொருளாக இருக்கின்றது.
1858 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் புரட்சியினை அடக்கினாலும், அந்தப் புரட்சி கும்பனி ஆட்ச்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது.
டெல்லி செங்கோட்டை ஆண்ட   முகலாய சாம்ராஜ்யம், மற்றும் மராட்டிய சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தது.


அன்று முதல் சுதந்திரப் புரட்சிக் கனல் தெறிக்க அந்நிய சிலை உடைக்க முகமது சாலியா, அவரது தோழர் சுப்புராயலு ஆகியோர் அண்ணன் தம்பியாக இணைந்து செயலாற்றினர். ஆனால் சுதந்திரத்திற்கு ஒரு வேர்வை கூட சிந்தாத ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்களை அன்னியர் என்றும், ஓட்டுரிமையினை பறியுங்கள் என்றும், அரசியல் சாசனம் வழங்கிய சலுகைகளைப் பறியுங்கள் என்றும், ஒற்றுமையிக்கு ஊறு விளைவிக்கும் துவேசமான குரல் எழுப்பி வருவது வேதனையாக இல்லையா  உங்களுக்கு?

Monday, 23 February 2015

ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்'

'ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்'
(டாக்டர்  ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ)
புனித குரான் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தில், 'இறை நேசிப்போரே, ஒற்றுமை என்ற கயிற் றினை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்காதீர்கள்' என்று ஒற்றுமையினை வழியுறுத்தி உள்ளது.' அதனையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக்  கடமைப் பட்டிருப்பது குரானின் கட்டளையாகும்' என்றும் ஆணித்  தரமாக கூறியுள்ளார்.
கீழே உள்ள போட்டோவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்:
Janata Parivar Wedding: PM Narendra Modi 'showstopper' at Saifai
இந்தப் போட்டோவில் இந்திய  அரசியல் வானின் இரு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடி அவர்கள்,  மற்ற இருவரும் ஹிந்துத்துவா  கொள்கைக்கு எதிரான  பீகாரினைச் சார்ந்த லாலுப் பிரசாத் யாதவும், உத்தரப் பிரதேசத்தினைச் சார்ந்த முலாயம் சிங் யாதவும் ஆகும். அரசியல் வானில் இரு துருவங்களானாலும், 20.2.2015 அன்று நடந்த குடும்ப நிகழ்வில் மூன்று தலைவர்களும் சிரித்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்  அதே போன்ற நிகழ்ச்சியில் நமது சமூதாய தலைவர்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் பேசி நட்புடன் பழகியதினை  நான் பார்த்ததில்லை,  நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற முடிவில் இந்தக் கட்டுரையினை வரைகிறேன்.
உள்ளன்புள்ள நட்பு என்பது ஒருவருக்கொருவர் முகமன் கூறுவது, பண்புடன் நடந்து கொள்வது, அன்பு பாராட்டுவது ஆகும்.
பலவகையாகும் உறவு:
1) நண்பருடன்  பழகுவது, சக ஊழியர்களுடன் பழகுவது, குடும்பத்தில் உறவு கொள்வது ஆகும்.
2) நண்பர்களுடன்  உறவு கொள்வது ஏனென்றால் ஒரு செயல் நல்லதா அல்லது கேடு விளைவிப்பதா என்று எடுத்துச் சொல்ல ஒருவரின் துணை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனால்.
3) நல்ல நட்பு வேலை பார்க்கும் இடத்தில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
4) பெற்றோர், உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவு குடும்பத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
சிலர் வானளாவிய ஒற்றுமையினைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுவர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எதனையும் கடைப் பிடிப்பதில்லை. நாமெல்லாம் ஒரு மரத்தில் உள்ள இலைகள் என்றோ, அல்லது  மொழி , இனம்  நிறத்தால் வேறு பட்டிருந்தாலும் மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கின்றோம் என்றோ நினைப்பதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கம் இருப்பதால் தான் பல்வேறு இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம், ஆகவே அந்த மார்க்கத்தினர் ந ல்வழி, நட்புடன், நலத்தோடு  வாழக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை என்று நினைத்துப் பணியாற்றுவதில்லையே, அது ஏன் என்று உங்களுக்கு கேள்வி கேட்கத்  தோனுமல்லவா?
22.2.2015 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.ஆர்.எஸ். சக்கா என்ற ஊழியர் பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத், 'அனைத்து ஹிந்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகள் அமைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விட்டிருக்கின்றார். அந்த ஒற்றுமை உணர்வினை ஒருவரும் குறை கூறமுடியாது. அதே ஒற்றுமை அறைகூவல் ஏன் சமூதாய இயக்கங்களிடையே அதன் தலைவர்கள் வேண்டுகோள் விடக்கூடாது. குறைந்தது பொது நன்மைக்காவது இனைந்து வேண்டுகோள் வைக்கக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு வைத்துக் கொண்டால் தானே அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கப் போகின்றார்கள் என்று கேள்வி கேட்க உங்களுக்கு தோனுகின்றதல்லவா?
21/22.2.2015 ஆகிய நாட்களில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள அலமாதி என்ற ஊரில் 'இஸ்த்திமா' நடந்தது.
மார்க்க செற்பொழிவினைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் திரண்டதாக அங்கே சென்று வந்த நண்பர்கள் சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாநாட்டின் நிறைவேற்றிய தீர்மானம் என்ன என வினவினேன். அதற்கு மார்க்க பயான்கள் நடந்தன, ஐந்து தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இறுதியாக துவா ஓதப் பட்டது என்றார்கள். ஏழு சதவீத தமிழ் மக்களில் ஆயிரக் கணக்கானோர் ஒரு சேரப் பார்ப்பதே அரிது. அந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி இன்று சிறுபான்மையினர் இந்தியாவில் எதிர் கொள்ளும் சவால்கள், உலக முஸ்லிம்களின் நிலைப்பாடு, இளைஞர்கள் சிறந்த வழியில் நடப்பதிற்கு   உரிய அறிவுரைகள் ஆகியவற்றினை போதித்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமல்லவா?
உதாரணமாக:
1) 1) முத்துபேட்டை தர்கா புது வருடப் பிறப்பு அன்று தாக்குதல், புது டெல்லி சர்ச், நாகர்கோவில் ஜெபக் கூடாரம் தாக்குதல் போன்ற சிறுபான்மையினர் வழிபடும் தளங்களை தாக்குதலிருந்து எவ்வாறு பாது காப்பது என்ற அறிவுரை.
2) உ.பி. போன்ற மாநிலம்  முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம், பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாக நேர்ந்த சம்பவம் போன்று சிறுபான்மையினர் வாழும் கிராமம், நகரங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது
3) முஸ்லிம்கள் தனிப்பட்ட விரோதங்கள், மொழி, இனத்தால், குடும்பத்தால் வரும் பிரிவினைகள் மறந்து ஒற்றுமையுடன் வாழ என்ன செய்யலாம்
4) இளைஞர்கள் தீவிர வாத கொள்கைகளுக்கு தங்களை பலிகிடாவாக்கக் கூடாது என்ற போதனைகள் சொல்லலாம். சமீபத்தில் பெங்களூரு நகர முஸ்லிம் பொறியியல் எஞ்சினீயர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கப் போய் பட்ட துன்பங்கள், இங்கிலாந்து நாட்டின் முஸ்லிம் பள்ளி சிறுமிகள் மூவர் ஐ.எஸ்.தீவிர வாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க பள்ளிப் படிப்பு, குடும்ப பாசத்தினை விட்டு சிரியா சென்றிருப்பதும், 22.2.2015 அன்று நைஜீரியா நாட்டில் ஏழு வயது சிறுமி வெடிகுண்டாக மாறி பலரை சாகடித்திருப்பது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தாமலில்லை! அதுபோன்ற தீய போதனைகளிடமிருந்து இளைஞர்களை காப்பது எப்படி என்று அறிவுரை புகன்றிருக்கலாம்.
5) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக இருந்தால் தான் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆகவே பிரிந்து கிடக்கும் சமூதாய தலைவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்று அங்கு கூடியிருந்த அமைப்பாளர்கள் சொல்லி இருந்தால் சாலச் சிறந்ததாக இருந்து இருக்கும்.
ஆகவே இனி வரும் காலங்களில்லாவது சமூதாய ஒற்றுமை, தலைவர்கள் ஒருங்கிணைப்பு, வழிபாடு தளங்கள் பாது காப்பு, முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு,   இளைஞர்கள் நல் வழிப் படுத்துதல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் கூடும் கூட்டங்களில் கொள்கை முடிவெடுத்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

                                   


Friday, 13 February 2015

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?

                    இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?
                {டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
சமீப காலங்களில் வெளியிலும், வீட்டிலும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் பற்றி பரபரப்பாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்பதினை அனைவரும் அறிவோம். அந்தப் பாலியக் குற்றங்கள் பற்றி சில ஆராய்ச்சித் தகவல்களை உங்களுடன் ஒரு வருமுன் காக்கும் விழிப்புணர்விற்காக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
அதுவும் மும்பையில் மூடிக் கிடந்த மகாலட்சுமி மில்லில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை பெண் 23.8.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பின்பும், புது டெல்லி உபேர் டாக்சியில் சென்ற பெண் பொறியாளர் 5. 12. 2014  அன்று பாலியல் பலாத்க்காரம் செய்யப் பட்ட நிகழ்விற்குப் பின்பு பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது, கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் குரல் எழுப்பப் பட்டது. 
ஆனால் வெளியில் நடக்கும் குற்றங்களை விட வீட்டுக்குள் நடக்கும் பாலியத் தொல்லைகள் அதிகம் என்று ஆராய்சிக் குறிப்புகள் சொல்கின்றன:

புதுடெல்லியில் நடந்த பாலியல் குற்றத்திற்குத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள 44 காவல் நிலையங்களில் பதிவு செய்யப் பட்ட பாலியல் குற்றங்கள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை என்ற ஒரு 'அபிடாவிட்' தாக்கல் செய்ய புதுடெல்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அபிடாவிட்டில் டெல்லி காவல்த் துறையினர், 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கல் ஆன குற்றங்கள் 2276 என்றும், அதில் 1375 புகார்கள் அதாவது 60 விழுக்காடுக் குற்றங்கள் வீடுகளிலேயே நடந்துள்ளதாம். 1767 பாலியப் புகார்களில் அதாவது 78 விழுக்காடு குற்றங்கள் குடும்பத்தில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பினரோ, அல்லது குடும்பத்தினவருக்கு நன்கு தெரிந்தவராகவோ இருந்துள்ளனர். பெரும்பாலான வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் காவல் நிலையம் வரை வருவதில்லை.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையே என்பதினைக் கூறும் அளவிற்கு, 'பிட்டர்  சாக்லேட்'(கசக்கும் மிட்டாய்) என்ற புத்தகத்தினை எழுதிய பிங்கி என்ற எழுத்தாளர், 'இந்தியா முழுவதிலும் நடுத்தர மற்றும் மேல் நிலைக்  குடும்பத்தில் வாழும் இளம் சிறார்கள் ஆண்களோ, பெண்களோ பாலியல் குற்றங்களால் பாதிக்கப் படுகிறார்கள். அதுபோன்றே குடும்பத்தினர் மிகவும் நம்பி இருக்கும் டிரைவர்களோ, தந்தையோ, மாமா என்று அழைக்கப் படுகிரவர்களோ, தாத்தாக்களோ, மதபோதகர்களோ, மருத்துவர்களோ, சமயல்க்காரர்களோ, பள்ளி ஆசிரியர்களோ, பள்ளிப் பணியாளர்களோ, நிர்வாகிகளோ சிறார்களிடம் பாலியல்க் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று விரிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார். அதனைப் பத்திரிக்கைகள், டி.வி. ஒளிபரப்புகள் மூலம் அறிந்துள்ளோம்.
காவல்த் துறையும், அரசும் வீட்டுக்கு வெளியே நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அல்லது கண்டு பிடிக்க அல்லது சட்டங்கள் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைத் யார் தடுப்பது என்றக் கேள்விக்கு விடை அல்குராணின் அல் நூர் 24 அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அகிலத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினை என்றால் மறுக்க முடியாது:
அத்தியாயம் 24(27-29) ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே, உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர் வீடுகளில் அந்த வீட்டாரின் அனுமதியின்றி நுழையாதீர்கள்'
அத்தியாயம் 24(30) ‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும், தங்கள் வெட்கத் தளங்களைப் பாதுகாத்துக்  கொள்ளும்படியும், பெண்கள் தங்கள் அழகை வெளிக் காட்டாதவாரும் பார்த்துக் கொள்ளவும்'
அத்தியாயம் 24(58-59) 'உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும், மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதிற்கு அனுமதியுங்கள், உங்கள் சிறுவர்கள் விபரம் தெரியும் பருவத்தை அடைந்து  விட்டால், அவர்களுடைய பெரியோர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும்'.
சிறுவர், சிறுமி ஏழு வயதினை அடைந்து விட்டால் தனித் தனியே படுக்கைக்கு அனுப்பும் வழிமுறையும் இருக்கின்றது என்றால் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் தொலை நோக்குக் கண்ணோடு எந்நாளும் பொருத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றது என்று தெளிவாகும்.
ஆகவே தான் உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பாலிய தொல்லைகள் இஸ்லாமியக் குடும்பத்திலும் நடக்காது பாது காப்போமாக!


Tuesday, 3 February 2015

அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!

                 அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!
          (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய பத்திரிக்கைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் இந்த ஆண்டு(2015) தொடக்கத்திலே ஒரு தொற்று நோய் ஏற்பட்டது போல பரபரப்பாக வெளியிடப் பட்ட செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகைதான் என்றால் மிகையாகாது. அதேபோன்ற பரபரப்பு பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலந்த் 14-2-2013 ல் வருகை தந்தபோதோ, பிரிட்டிஷ் அரசின் பிரதமர் டேவிட் கேமரோன்  19-2-2013 ல் வருகை தந்தபோதோ, சீனாவின் ஜனாதிபதி ஜிம் பிங் 17-9-2014 ல் வருகை தந்தபோதோ, அல்லது ரஷ்ய ஜனாதிபதி  புடின் 10-12-2014 ல் வருகை தந்தபோதோ ஏற்படவில்லையே, அது ஏன் என்று உங்களைப் போன்ற படித்த பெருமக்களுக்கு கேட்கத் தோணும். ஆனால் ஒட்டிய வயிறும், கட்டிய கையும், குழிவிழுந்தக் கன்னங்களும் கொண்ட பாமரனுக்குத்  கொண்டுள்ள சாதாரண பாமரனுக்குத் தெரியாதல்லவா?
அமெரிக்காவின் இந்திய தொடர்பு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டிஸ் அரசின் பிடியிலிருந்து இந்தியாவினை மீட்க நடந்த  விடுதலைப் போரின் பயனாக ஏற்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் கூட்டுப் படை செயல் பட்டது. இந்திய மக்களின், 'கத்தியின்றி, ரத்தமின்றி  சத்தியாகிரக யுத்தம்' பிரிடிஸ் அரசிற்கு எதிராக  தொடங்கியதினைக் கண்டு உலகமே வியந்தது. அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரிடிஸ் பிரதமரிடம் 1945 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பேசாமல் விடுதலைக் கொடுத்து விடுங்கள் என்று வலியுறித்தினார். அது தான் முதல் ஆரம்பம்.
சுதந்திர இந்தியாவிற்கு முதல் வருகை தந்த(1959) அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் ஆகும்.
இந்தியாவின் கூட்டுச் சேரா கொள்கை இந்திய நலனுக்கு பின்னடைவு ஏற்பட்டுது எதனால் என்றால் சீனா நம்மீது 1962 ஆம் ஆண்டு படை எடுத்தபோது  எந்த வல்லருசும் இந்தியாவிற்கு ஆதரவாக வரவில்லை. இந்திய மண்ணில் சீனா கண்ட வெற்றி அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இந்தியா பக்கம் சாய்ந்தது, காரணம் எங்கே சீனா ஆசிய கண்டத்தில் ஒரு வல்லரசாக ஆகிவிடுமோ என்ற அச்சம் தான். அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் எப் கென்னெடி காலத்தில் நட்புறவின் பயனாக ஏற்பட்டது தான் உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருக்கும் பிரசித்திபெற்ற பொறியியல் வல்லுனர்களை உருவாக்கிய  ஐ.ஐ.டி கல்வி நிறுவனமாகும்..   
அந்தக் கூட்டுறவு 1970 ஆம் ஆண்டு  நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது முறிய ஆரம்பித்தது. இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ராணுவ பலத்தினை நிரூபிக்க கிழக்கு பாகிஸ்தானில் நடந்த சுதந்திரப் போருக்கு ஆதரவு தெரிவித்து 1971 ஆம் ஆண்டு பங்களாதேஸ் என்ற நாட்டினை சுதந்திர நாடாக்கிய போது, அதனை தடுத்து நிறுத்தி, இந்தியாவினை பயமுறுத்த வங்காள கடல் பகுதிக்கு 'யு.எஸ்.எஸ். எண்டர்ப்ரைசெஸ்' என்ற விமானத் தாங்கிய போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. ஆனால் அமெரிக்காவினால் பங்களா தேஷ் உருவானதினைத் தடுக்க முடியவில்லை.
கோல்ட் வார்' என்ற பனிப்போர் இரண்டு நாட்டிற்கும் நடந்தது. 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா ராஜஸ்தான் மாநிலம் 'பொக்ரானில்' அணு ஆயுத சோதனை அமெரிக்க உறவில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா மீது  பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை விதித்தார். ஆனால் குதுகூலமிட்ட இந்திய பொருளாதார வளர்ச்சியாலும், கொந்தளித்த வர்த்தக வளர்ச்சியாலும், விஞ்ஞானிகளின் ஆர்ப்பரித்த கண்டு பிடிப்புகளாலும், அமெரிக்காவின் தடைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானைத் தவிர ஏனைய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப் பாடுகளைக் கடைப் பிடிக்கவில்லை. அதனை அறிந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு 2000 ஆம் ஆண்டு வருகை தந்து பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜுபாயுடன் நல்லுறவினை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில்  2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு வலுவான  ஆசிய நாடான இந்தியாவின் ஆதரவு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போதும், அதற்குப் பிறகு அந்த நாட்டின் கட்டுமானப் பணிக்கும்  தேவைப் பட்டதால் இந்தியாவினுடனான நல்லுறவினை அமெரிக்கா வளர்க்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்தபோது 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையால் பாக்கிஸ்தானுடன் உறவினை நெருக்கமாக வைத்துக் கொண்டு 'ஒசாமா பின் லேடன்' தேடுதல் வேட்டையினைத் தொடர்ந்ததால் இந்தியாவின் உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது.
2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்பு அமெரிக்காவின் உதவியினை இந்தியா நாட வேண்டி இருந்தது. இந்தியா அமெரிக்காவின் எதிரான பார்வையில் இருந்த ரஷ்யா, ஈரான், இலங்கை, மாலத்தீவு, பங்களா தேஷ் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்திருந்ததால் 2009 ஆம் ஆண்டு  ஒபாமா  அமெரிக்காக் கம்ப்யுட்டர் கம்பனிகள் இந்தியா கம்பனிகளுக்கு 'அவுட் சோர்சிங்' என்ற வெளிவேலை தொடர்பான காரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அமெரிக்காவின் பணம் இந்தியாவிற்குச் செல்கிறது, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்பதுதான். அந்த தொய்வான உறவினை சரி செய்ய 2010 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா முதல் தடவையாக இந்தியா வந்தபோது அவருக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டது. அவருக்குச் சிறப்பு மரியாதைக் கொடுக்குமளவிற்கு இந்தியப் பாராளுமன்ற கூட்டுச் சபையில் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐஸ்நோவருக்குப் பின்பு  பாரக் ஒபாமாவிற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன் பலன் தான் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொது வெள்ளை மாளிகையில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கு மில்லாத தனி விருந்து ஒன்றினை பாரக் ஒபாமா வழங்கினார். அதன் பின்பு அமெரிக்காவின் தூதரக அதிகாரி தேவயாணி வேலையாள் விசா சம்பந்தமான குற்றச் சாட்டில் மரபிற்கு நேர்மாறாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் யு.பி.ஏ  அரசின் கடைசி காலத்தில் அமெரிக்காவினுடனான உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதன் பின்பு பி.ஜே.பி அரசு வந்ததும் பிரதமர் நரேந்திரா மோடி மீது அமெரிக்கா விதித்திருந்த விசா தடை நீக்கப் பட்டு  'மோடிசன் ஸ்கயிர்' என்ற சதுக்கத்தில் இந்திய மக்களால் கொடுக்கப் பட்ட பிரமிக்க வைத்த வரவேற்புனைக் கண்ட அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக ஒபாமா வந்து இந்திய மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழில் அதிபர்களையும் கவர்ந்து விட்டார்.
பாரக் ஒபாமா வருகையினால் ஏற்பட்ட பலன்கள் மற்றும் பாதகங்கள்:

1) இந்தியாவின் வளர்ச்சியினைக் கண்டு மேலைய நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
2) அமெரிக்காவின் தொழில் அதிர்பர்கள் இந்தியாவின் திட்டங்களான, 'மேக் இன் இந்தியா'(இந்தியாவில் தொழில் முனைவோம்), 'ஸ்மார்ட் சிட்டிஸ்'(சுறுசுறுப்பான நகரங்கள்), 'ஸ்வாச் பாரத்'(சுத்தமான பாரதம்), மாற்று மின் உற்பத்தி  போன்றவற்றில்  பங்காற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் இடப் பட்டுள்ளது. அப்போது தொழில் அதிபர்கள் தாங்கள் தயார் ஆனால் அரசின் கட்டுப் பாடு இல்லா உதவி உடன் கிடைக்க வழிவகை வேண்டும் என்ற வேண்டுகோளும் இடப்பட்டுள்ளது.
3) அவுட் சோர்சிங் என்ற இந்திய கம்யுட்டர் கம்பனிகளுக்கு விதிக்கப் பட்டு இருக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோளும் இடப்பட்டது.
ஆனால் உண்மையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய கம்ப்யுட்டர் கம்பனி பொறியாளர்களால் அமெரிக்காவிற்குத் தான் ஒருவகையில் லாபம். ஏனென்றால் அவர்களுடைய வருமானம் மாதமொன்றுக்கு ஐந்து லட்சம் டாலருக்குக் குறைவாக இல்லாவிட்டாலும்  அவர்கள் 'சோசியல் செக்குரிட்டி' என்ற சமூக பாதுகாப்பிற்கான வரி மட்டும் வருமானத்தில் நாற்பது சதவீதமாகும் என்றால் பாருங்களேன். அவை அத்தனையும் அமெரிக்க மக்குளுக்குத் தான் போய் சேருகின்றது.
பாதகமான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால் :
1) இந்தியாவின் அமெரிக்க விசுவாசத்தினைக் காட்ட முதல் தடவையாக பாரதப் பிரதமரே புது டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவை வரவேற்று உள்ளார். அது ப்ரோடோகாலை விட்டு சற்று விலகி இருப்பதாக கருதப் படுகிறது.
2) நட்பு நாடான ரஷ்யா, அண்டை நாடான சீனா ஆகியவை கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் இந்தியாவினைப் பார்க்கத் தொடங்கி உள்ளன.
3) அணு ஆயுத உடன்படிக்கை வெளிவராத நிலையில் எங்கே இந்தியா அணு ஆலை சிதைவினால் இந்திய மக்களுக்கு'லயாபிலிடி' என்ற இழப்பு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்யவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் எதிர்க் கட்சிகள் உடன்படிக்கை இரகசியத்தினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என குரல் எழுப்பி உள்ளன.
4) ஒபாமாவின் தரிசனம் கிடைக்க ரட்டன் டாட்டா, முகேஷ் மற்றும் அணில் அம்பானி, பிர்லா போன்ற பிரபல தொழில் அதிபர்கள் க்யூவில் திருமண தம்பதிகளை வாழ்த்த வருசையில் நின்றது போல நின்ற காட்சி ள்ளது  பத்திரிக்கைக் காட்சி வெளிவந்ததினைப் பார்த்த பெரும்பாலான இந்திய மக்களை முகம்  சுளிக்கச் செய்துள்ளது என்றால் மறுப்பதிற்கில்லை.
எப்படி இருந்தாலும் பாரக் ஒபாமாவின் இந்தியப் பயணம் இந்திய மக்களைப் பற்றிய நல்லெண்ணம் இன்றுபோல் என்றும் இருந்தால் நலம்தானே!



Monday, 22 December 2014

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே  மடிந்த இளந்தளிரே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
17.12.2014 அன்று எனக்கு இளங்கோ என்ற நடைப் பயிற்சியில் அறிமுகமான நபர் மூலம் 'தீபக் டிஜி' என்பவர் அனுப்பிய செய்தி 'வாட்ஸ் அப்' என்ற தகவல் பரிமாற்றம் மூலம் கிடைக்கப் பெற்றேன். அந்த செய்தி, 'இன்று பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலைக் கொண்டாடுங்கள், ஏனெறால் உலகின் ஜனத்தொகையில் 200 முஸ்லிம்கள் குறைந்தார்கள். இதுபோன்ற தாக்குதல் தொடரவேண்டும்'.
உடனே நான் இளங்கோவிற்கு, 'இதுபோன்ற சமூதாய நல்லிணக்கத்திற்கு உலை வைக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்' என்று தகவல் அனுப்பினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு, 'பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தீவிர வாதிகளை விட கொடியவன் இவன்' என்று தீபக்கினை சாடினார்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் ஸ்வாட் மற்றும் கைபர் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யுசுப்சி, தாலிபான் தீவிரவாதிகளால் 9.10.2012ல் சுடப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு நோபல் பரிசும், உலக ஐ.நா. சபையில் பேசும் முதல் சிறுமி என்ற புகழுக்கு சென்ற செய்தி அடங்குமுன்னரே 16.12.2014 அன்று பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து பச்சிளம் தளிர்களான 132 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் தீவிர வாதம் காவு கொண்டிருக்கின்றது என்ற கொடுமை வாய்விட்டு அழும் நிலைக்கு மனித இனத்தினை தள்ளி இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது. அத்தனை பிள்ளைகளும் ராணுவத்தில் பணியாற்றும், மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள். அந்த படுபாதக செயலுக்கு தீவிர வாதிகள் சொல்லும் காரணம் , 'ராணுவம் தீவிரவாத நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி' என்று கூறி இருக்கின்றார்கள். அந்தக்  கூற்றின் மூலம் அவர்களின் செயலினை நியாயப் படுத்தலாம், ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் அது போன்ற  எதிர் நடவடிக்கையினுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்.
`இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, போர்நெறி தவறாது நடந்து கொண்டனர் என்பதினை பெருமானார் முகமது(ஸல்) அவர்களும், அவர்கள் காலத்தில் போர் தளபதிகளாக இருந்தவர்களும், நபி பெருமானார் அவர்களுக்குப் பின்பு வந்த  கலிபாக்களும், அலி(ரழி), வாலித்(ரழி) அவர்களும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய படைகளை முன் நின்று நடத்திய தளபதி சலாவுதீன் அயுப் போன்றோரும் கண்ணியம் தவறாது போர்களை நடத்தினர் என்ற வரலாறு உள்ளது. பெருமானார் வேற்று நாடுகளுக்கு படையினை அனுப்பும்போது அதன் தளபதிகளுக்கு 'போரின்போது பயிர்களை, உணவு தரும் கனி மரங்களை அழிக்கக் கூடாது, நீர்நிலைகளையோ, குடியிருக்கும் வீடுகளையோ சேதப் படுத்தக் கூடாது, முதியோர், பெண்கள், குழந்தைகள், புறமுதுகிட்டு ஓடுவோர்  ஆகியோரையும், வளர்ப்புப் பிராணிகளையும் கொல்லக்கூடாது' என்று கடுமையான கட்டளைகளை' விடுத்தார்கள்.  ஆனால் ஏக வல்ல நாயன் அல்லாஹ் அளித்தத் திருக்கொடையான உயிரினை அநியாயமாக பழிக்குப் பழி வாங்குகின்றோம் என்று துப்பாக்கி, கை எறிகுண்டு, மனித எறிகுண்டு கொண்டு அழிக்க யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்பது தான் உண்மை.
உலகிலேயே இது போன்ற குழந்தைகள், இளைஞர்கள் கொடூர கொலை சம்பவம் நடக்கவில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோணலாம். அவற்றில் சில வற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) இப்போதெல்லாம் பிள்ளைகள் வீடியோ கேம்ஸ் முன்னாள் மணிக் கணிக்கில் அமர்ந்து அவர்கள் விருப்பப் படி பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் காட்சிகளைக் காண்கின்றனர். அதேபோன்று கனடா நாட்டில் 1989 ஆம் ஆண்டு மாட்ரிட் பல்கழை கழகத்தில் பயிலும் மாணவன்  போருக்கான வீடியோ கேம்ஸ் படங்களைப் பார்த்து அதுபோன்று தானும் துப்பாக்கி ஏந்தி எதாவது ஒரு இலக்கினை பதம் பார்க்க வேண்டும் என்று துப்பாக்கியோடு தன்னோடு படிக்கும் 14 மாணவிகளையே சுட்டுக் கொன்றான்.
2) 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தன்பிலாக் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நுழைந்த ஒருவன் 16 பள்ளி சிறார்களையும், அதன் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.
3) 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா கொலராடோ பள்ளியில் நுழைந்து துப்பாக்கியால் 13 மாணவர்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
4) 2009 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் 17 வயது இளைஞன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளியில் நுழைந்து 9 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை பலி கொண்டான்.
5) 2011 ஜூலை மாதம் நார்வே நாட்டில்  இளைஞர் முகாமில் காவல்த் துறை சீருடையுடன் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் 80 இளைஞர்கள், மாணவர்கள் என்று கண்மூடித் தனமாக சுட்டுப் பொசுக்கினான்.
6) 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா நியூட்டன் நகரில் உள்ள ஹுக் ஆரம்பப் பள்ளியில் நுழைந்து 20 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
7) 2014இல் மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கும்பல் ஆதிக்கப் போட்டியில்  கல்லூரி மாணவர் 43 கடத்தப் பட்டு, கொடூரமாக கொலை செய்து புதைக்கப் பாட்டும் மாண்டார்கள்.
இதுபோன்ற துப்பாக்கித் துறைத்தனத்திற்கு முக்கிய காரணமே மேலை நாடுகளில் காணுகின்ற துப்பாக்கிக் கலாச்சாரமும், ஆதிக்க உணர்வுகளும் தான் தூண்டுதல் என்றால் மிகையாகாது.
போர்களில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1) 'கன்வேன்சனல்' என்ற முறைப்படி அறிவித்து போர்
2)  'நான் கன்வென்சனல்' என்ற அறிவிக்காத போர் முறையாகும்.
உதாரணத்திற்கு கிராமங்களில் இரண்டு ஊர்களுக்கிடையே தகராறு இருக்கின்றது என்றால் அந்தக் கிராமத்தினர் கத்தி, கம்பு, கல் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்பதினை நீங்கள் அறிவீர்கள் .அது அறிவிக்கப் பட்ட போராகும்.
அதனை விட்டுவிட்டு ஒரு கிராமத்தினர் வேண்டாத அடுத்தக் கிராமத்து மக்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று குளங்கல், குடி தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலப்பது, மற்றும் வயலுக்கு செல்லும் கால்வாய், வரப்புகளை அழிப்பது போன்றவை தான் நான் 'கன்வென்சனல்' போர்முறையாகும்.
அதுபோன்ற ‘நான் கன்வென்சனல்’ போர் முறைகளை இரண்டாம் உலகப் போரில் மேலை நாடுகளின் கூட்டுப் படை  ஜப்பான் முக்கிய நகர்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றில் உயிர்கொல்லி ஆயதமான அணுகுண்டினை வீசி வயது வித்தியாசமில்லாது லக்சக் கணக்கில் அழித்தனர். அதன் தாக்கம் இன்னும் மறைய வில்லை என்பதினை ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை ஒழிக்கின்றோம் என்று ஆளில்லா விமானம் மூலம்
பள்ளத்தாக்கில் பழங்குடியினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியினைக் காட்ட ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் போது குண்டு வீசப் பட்டு 62 பேர்கள் மாண்டனர். அதற்கு கூட்டுப் படைத் தளபதியும் வருத்தம் தெரிவித்தார் என்பது கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகாதா?
2) துப்பாக்கி கலாச்சாரத்தின் தாக்கம் தப்பித்தக் குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதினை சமீபத்தில் பெஷாவார் ராணுவ பள்ளி துப்பாக்கி சூட்டில் காயத்துடன்  தப்பித்த ஒரு மாணவன் கூறும்போது குண்டு அடிபட்டு வகுப்பறையின் கீழே விழுந்தபோது தீவிர வாதிகள் நடந்து வந்த கருப்பு நிற ஷூ சத்தம் இன்னும் தன்னை பயமுறுத்துவதாக கூறியிருக்கின்றான் என்றால் எவ்வளவு தூரத்திற்கு பிஞ்சு மனது வன்முறையால் பாதிக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அவர்கள் அந்தப் பயத் தாக்கத்தினை விட்டு அகல நீண்ட நாட்களாகுமல்லவா?
3) மேலை நாடுகளில் தனி நபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவனது உரிமை. ஆனால் ஆசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
4) ஆசிய, அராபிய, ஆப்ரிக்கா   நாடுகளின் தீவிர வாத கும்பலுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது என்றால் மேலைநாடுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதிற்கென்றே பல தனியார் கம்பனிகள் உள்ளன. அவைகள் அந்த அரசின் ஆதரவு மூலம் அவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர் என்பது தான் உண்மை நிலை. பிள்ளையினை கிள்ளிவிட்டு அந்தக் குழந்தை அழுவதினை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தான் மேலை நாடுகள் உள்ளன.
5) இளைஞர்களை மயக்கி மூளைச் சலவை செய்யும் தீவிர வாதக் கும்பல் மன நோய்களாலும், உலச்ச்சல்களாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதினைத் தான் பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன என்றால் மிகையாகாது.
சிறுமி மலாலா துப்பாக்கிச் சூடு, பெஷாவர் பள்ளி துப்பாக்கிச் சூடு போன்றவை முஸ்லிம்கள் கல்விக்கு எதிரானவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உலக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பது யாரும் மறைக்க முடியாது.
இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் அராபியாவிலிருந்து சீனம் வெகு தூரத்திலிருந்தாலும் கல்வி கற்க அங்கே சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இஸ்லாமிய மார்க்கம்.
உலகிலேயே மிக சிறந்த நூலகம் அமைத்து உயர் கல்வியினைக் கொடுத்தது அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் இஸ்லாமியரினைச் சார்ந்தது. அப்படி இருக்கும் பொது எப்படி இஸ்லாமியர் கல்விக்கு எதிரானவர் என்பதினை ஏற்றுக் கொள்ள முடியும்?
உயிர் என்பது இறைவன் கொடுக்கும் அற்புத வரம். அதனை மனிதன் எடுப்பதிற்கு எந்த உரிமையும் இல்லை என்பது இஸ்லாம் போதிக்கும் நல்லுறையாகும். அதனை நிரூபிப்பது போன்று தற்கொலையினை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கும் போது இளந்தலிர்களான பள்ளி மாணவர்களைக் கொன்ற  தற்கொலைப் படை போன்ற  படுபாதகர்கள் எப்படி முஸ்லிம்களாக ஏற்கப் படுவார்கள்.
அந்த இளம் மொட்டுக்கள் மலர்ந்து உலகெங்கும் மனம் பரப்ப முடியாமல் செய்தது மாபாதகமாக செயலாகாதா?
இந்தத் தருணத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
கஸ்தூரி ராஜா என்ற ஒரு சினிமா டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் ஆவலோடு சில படங்கள் எடுத்து அவைகள் வெற்றி அடையவில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமம் படுவதினை விட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் அங்கே சென்றாராம். அங்கே சென்றும் சரியான வேலைக் கிடைக்காததால் ஒட்டு மொத்தக் குடும்பமே வறுமையில் வாடியதாம். ஒருநாள் தன் மனைவியிடம் சாப்பாட்டுக்கே சிரமப் படுவதினை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து விஷ  மருந்து வாங்கி வந்து விட்டாராம். அதனை இரவு மனைவியிடம் கொடுத்து கிடைத்த கொஞ்சம் சோற்றிலும் விசத்தினை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு நாமும் சாப்பிடலாம் என்றாராம். அப்போது பெற்றக் குழந்தைகளை சாகடிக்க மனசில்லாத பாசமுள்ள அவருடைய மனைவி, 'ஏங்க, நமக்கு இறைவன் இரண்டு ஆண்  குழந்தைகளைக் கொடுத்துள்ளான். அவர்கள் நிச்சயமாக பெரியவர்களாகி, நம்மையும் காப்பாற்றி மகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பி நாம் மறுபடியும் சென்னை சென்று பிழைப்போம்' என்று உறுதியான நம்பிக்கையினை அந்த மகராசி கணவனுக்குக் கொடுத்தாராம். அந்த அம்மணி சொன்ன வாக்கினை நம்பி சென்னை வந்து மறுபடியும் சினிமா  உலகில் பிழைப்பினைத் தொடங்கினாராம். அவருடைய மகன்களான சினிமா டைரக்டர் மற்றும் நடிகர் செல்வராகவன்,  தனுஸ் தலையெடுத்து இன்று அவர்கள் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கின்றதாம். இதனை ஒரு பேட்டியில் கஸ்தூரி ராஜாவே சொல்லியுள்ளார்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் பிள்ளைகள் மொட்டுக்கள் போன்றவர்கள் அவர்கள் வளர்ந்து, மலர்ந்து பெரியவர்களாகி, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும்,உலகிற்கும் நல்ல பல சாதனைகளை செய்ய மணக்கும் முன்னே பறித்து விடலாமா. ஆகவே தான் சில பூங்காக்களில் பூத்துக் குழுங்கும் மலர்களை பறிக்காதீர்கள் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள் . அதேபோன்று குழந்தைகளையும் இனியும் அழிக்காமல் வாழ விடுங்கள் என்று உரக்க கோசம் எழுப்பலாமா?