Sunday, 23 October, 2011

பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ

இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.
2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, கொத்திப் போட்ட முட்டப் புராட்டா,சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு,சுருள் சுருளா புகை விட்ட கோல்ட் பிளாக் சிகரெட்டினை புகைத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவினை முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப் பாளைய நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?
அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?

3 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே.அருமையான இந்தக் கட்டுரையை என் தளத்திலும் நன்றியுடன் மீள் பதிவு செய்துள்ளேன்.இன்ஷா அல்லாஹ் நீங்கள் தமிழக முஸ்லிம்களின் நிலை மேம்பட - தலைமை ஏற்க சரியான நபர்.அதற்கு முயற்சிக்குமாறு வேண்டுகிறேன்.

  http://peacetrain1.blogspot.com/

  ReplyDelete
 2. இந்துக்களே இந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குங்கள் என்று மததுவேஷத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டது! இதற்கு மக்களே தரமான பொருட்கள் எங்கு கிடைக்கிறதோ அங்கு பொருட்களை வாங்குங்கள் மனித நேயத்தை நிலைநிறுத்துங்கள் என்று நம் சமுதாய அமைப்பு ஒன்று போஸ்டர் மூலம் பதிலளித்தது. இப்பொழுது நம்மிடையே முஸ்லிம்கள் முஸ்லிகளுக்கு ஒட்டளிக்க வேண்டும் என்ற கோஷம் வைத்து இது ஒற்றுமைக்கான முயற்சி என்ற விளக்கம் தரப்படுகிறது. இக்கோஷத்தைக் கொண்டு முஸ்லிம்களை ஒன்றினைக்க முடியவில்லை, ஆனால் இதே கோஷத்தை சுட்டிக்காட்டி சமூக விரோதிகள் முஸ்லிம் விரோதப் போக்கை வளர்க்கின்றார்கள். முஸ்லிம் பிரத்நித்துவம் இல்லை அதை பெறவேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அது இப்படியல்ல!. நமக்கும் நம் தேசத்திற்கும் எதிரி இந்துக்களல்ல, பாஸிஸ்ட்டுகள்தான் என்பதை உணர்ந்து நடுநிலையாளர்களையும் சமூக ஆர்வலர்களையும், தேசப்பற்றாலர்களையும் ஒருங்கினைத்து பாஸிஸ்ட்டுகளை அழித்து தேசத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
  மிக மிக அருமையான கருத்துக்களையும் பதித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் யாவரும் அதன்படி நடப்போமாக ஆமீன்!
  http://kayalpattinam.blogspot.com

  ReplyDelete