Wednesday 3 October, 2018

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த தீர்ப்புகள்!


             
            (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச். டி. ஐ.பீ.எஸ்(ஓ)

2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைசி வாரங்களில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஓய்வு பெறுவதினை முன்னிட்டு அவர் தலைமையில் விசாரித்த வழக்குகளின் தீர்ப்புகள் தான் இன்றைய இந்திய மக்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்களின் பரபரப்பான பட்டி,தொட்டிகளில் கூட பேசப் படும் தீர்ப்புகளாக அமைந்திருப்பதினை அனைவரும் அறிவோம்!
            முதன்மையாக அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடம் சம்பந்தமாக 1994 ல் குறிப்பட்ட தீர்ப்பினை ஒட்டியுள்ளது. அதாவது முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளிவாசல் அவசியமா என்ற கேள்விக்கு அவசியமில்லை என்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு சம்பந்தப் பட்டது. பள்ளிவாசல் அவசியமில்லை என்று இரண்டு நீதிபதிகளும், மத சம்பந்தமான தீர்ப்புகளை  சொல்லவேண்டியது ஐந்து அல்லது ஏழு நீதிபதிகளைக் கொண்ட சபை தான் முடிவு செய்யவேண்டும் என்று நீதிபதி நஷீர் அவர்களும் கூறியுள்ளனர்.
            நீதிபதி நஷீர் அவர்கள் கூறியுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 படி, உட்பிரிவு 25 26 ,27 ல்  ஒவ்வொரு குடி மகனும் சுதந்திரமாக தங்கு தடையின்றி அவரவர் சமயத்தினை வெளிப்படையாக மேற்கொள்ளுதல், மேலாண்மை செய்வதற்கு உரிமை உண்டு என்ற சரத்துக்கள் உள்ளடக்கியதாகும். எந்த தீர்ப்பும் அரசியல் சாசனத்திற்கு மாறுபட்டு இருக்குமேயானால் அதனை தீர்மானிப்பது ஐந்து அல்லது ஏழு  நீதிபதிகளைக் கொண்ட சபை தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நியதி!
            ஒரு விவாதத்திற்காக முஸ்லிம்களுக்கு தொழுவதற்கு பள்ளி வாசல் தேவையில்லை என்றால், அதே வாதம்,,வேப்ப, அரசமர,  குளக்கரைகள்  தோறும் வைத்தும், ரோடுகளினை ஆக்கிரமித்து எழுப்பப் பட்டிருக்கும்   இந்து கோயில்கள் தேவையில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
            பழங்காலத்தில் இஸ்லாத்தில் இறை இல்லமான மக்கமா  நகர் அல் ஹரமில் பள்ளி எழுப்பி வழிபட்டு வந்த மார்க்கம் இஸ்லாம் ஆகும் என்பதினை யாரும் மறுக்க முடியாது. ஏன் ஆரம்ப கால திண்ணையில் போதித்த குருகுலம் பின்பு பள்ளிக்கூடமான வரலாறு இங்கு இல்லையா? அப்படி இருக்கும்போது எப்படி இஸ்லாமியர் வழிபட பள்ளிவாசல் தேவையில்லை என்ற புது வாதத்தினை ஏற்க முடியும்?
            அடுத்த தீர்ப்பு கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வது சம்பந்தப் பட்டது. சபரிமலைக்கு செல்பவர்கள் பெரிய காட்டுப்பாதை, சிறிய பாதை என்ற இரு பாதைகளில் விரதம்  மேற்கொண்டு செல்வர். கடைசியாக பதினெட்டாம்படி என்று குறுகிய பாதையில் சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும். சாமி தரிசனம் செய்வதற்கு ஆண்களும், பத்து வயது முதல் ஐம்பது வரை உள்ள பெண்கள் தடுக்கப் பட்டும், அதற்கு மேல் உள்ள பெண்கள் அனுமதி செய்யப் பட்டும் வரும் முறை பழக்கத்தில் உள்ளது. ஏன் அவ்வாறு பெண்கள் ஐம்பது வயதினை தாண்டிய பெண்கள் அனுமதிக்கப் பட்டார்கள் என்றால், பெண்கள் மாத விடாய் காலங்களில் தரிசிப்பதினை தவிர்க்கவும். பெண்களினால் சில அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தானே ஒழிய அவர்களை முழுவது மாக புறக்கணிக்கவில்லை. இஸ்லாத்தில் கூட மாதவிடாய் காலங்களில் தொழுகை கூடாது என்று பெண்களுக்கு அறிவுரை கூறப் பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தான் பெண் உரிமை இயக்கம் சார்பில் ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொடர பட்டது.
            அவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் ஐயப்ப கோவிலுக்கு பெண்களும் வித்தியாசமில்லாமல் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அதே இருக்கையில் அமர்ந்த பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மத சடங்குகளினை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க முடியாது என்று ஆணித் தரமாக கூறியுள்ளார். அதனை வலியுறுத்துவதுபோல 1994 -1995 ஆண்டு பத்தானத்திட்ட  பகுதியில் பணியாற்றிய பெண் கலெக்டர் வத்சலா குமாரி கூறியிருப்பதாவது, 'ஐயப்ப கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்துள்ள வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட அங்கே கேரளா உயர் மன்ற ஆணையுடன் சென்றதாகவும், ஆனால் மதக் கோட்பாடுகளுக்கு கட்டுப் பட்டு பதினெட்டாம் படி ஏறவில்லை’ என்று சொல்லியுள்ளார். அவர் நினைத்திருந்தால் கலைக்டருக்குள்ள அதிகாரத்தினைப் பயன் படுத்தி பதினெட்டாம் படி ஏறி சாமியினை தரிசித்திருக்க முடியும். ஆனால் பெண்ணாக இருந்தாலும் மத கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து அந்த செயலை செய்யவில்லை.
            அயோத்தி விவகாரத்தில் நீதிபதி நஷீர்  அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழ பள்ளிவாசல் அவசியமில்லை என்ற தீர்ப்பிற்கு எதிரான மாறுபட்ட தீர்ப்பும், சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பினுக்கு எதிரான நீதிபதி இந்து மல்கோத்ரா எழுதிய தீர்ப்பும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மத. சமய கோட்பாடுகளின் மாண்பினை வலியுறுத்தவில்லையா?  தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேயென்று'. அயோத்தியில் பள்ளிவாசல் இடித்து விட்டு பள்ளிவாசல் முஸ்லீம் தொழுவதற்கு முக்கியமில்லை என்று சொல்லிவிட்டு, வருகின்ற மாதக் கடைசியில் அயோத்தி இட உரிமை பற்றி முடிவு செய்யப் படும் என்று கூறுவது, கடைசியாக முஸ்லிம்கள் தொழ பள்ளிவாசல் அவசியமில்லை என்று கூறி அந்த இடத்தினை ராமர் கோவில் கட்டும் ஒரு சதி செயலாக உங்களுக்குத் தோன்றவில்லையா. அதன் முன்னோடி தான் அக்டோபர் மாத முடிவில் ராமர் கோவில் கட்டப் படும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் செய்தி கூறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே தான் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றால் சரியா?
            அடுத்த அற்புதமான மான தீர்ப்பு ஓரினச் சேர்க்கை  ஈடுபடுவது குற்றமில்லை என்பது. இந்திய தண்டனை சட்டம் 377 என்ன கூறுகின்றது என்றால் இயற்கைக்கு மாறாக ஆணோ , பெண்ணோ கலவியில் ஈடுபடுவது குற்றம், அவ்வாறு குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது பத்து வருடம் மற்றும் அபராதமும் விதிக்கப் படும் என்று கூறுகின்றது. நாமெல்லாம் சமுதாயம் என்ற அமைப்புக்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம். அதில் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என்ற பிரிவுகளைக் கொண்டது. எப்படி சூரியக் குடும்பம் ஈர்ப்பு சக்தியால் ஒன்றைவிட்டு ஒன்று  விலகிச் செல்லவில்லையோ  அதேபோன்று தான் குடும்பமும் சுழன்று கொண்டுள்ளது. ஒன்றை விட்டு ஒன்று விலகும்போது அது அழிவினை தேடித் தரும்.
            ஒரு ஆணோ , பெண்ணோ கலவியில் ஈடுபடுவதற்கு இறைவனால் படைக்கப் பட்ட நேரான வழிகள் இருக்கும்போது, குறுக்கு வழியில் குறுக்கு சால் ஓட்டும் முயற்சியாக நீதிபதிகளின் தீர்ப்பு அமையாதா? ஒரு நிமிடம் மலக் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்பினை நினைத்துப் பாருங்கள். அதில் புணர்வதில்லை மனித இனம் விரும்புமா? மிருகங்கள் செய்யக் கூடிய செய்யக்கூடிய கலவிகளை மனித இனம் செய்யலாமா? ஆணுக்குத் துணை பெண் என்று இருக்கும்போது, ஆண் நெருப்பினைப் போன்றும், பெண் குளிர் நிலவு போன்றும், ஆண் பெண்ணிடம் அமைதி காண்கின்றான் என்று பகல் இரவினை எடுத்துக் காட்டாக கூறுவது நியதி இல்லையா?
            இயற்கைக்கு மாறாக வன் புணர்ச்சியில் ஈடுபடலாம் என்பது இயற்கைக்கு மாறுபட்டது அல்லவா? இந்த சட்டத்தினை எடுத்து விடுவது மூலம் ஆண் பாலகர்கள், மாணவர்கள், நண்பர்கள் வன் புணர்ச்சியில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, நடப்பதோ மட்டுமல்லாமல், ஆணோ, பெண்ணோ தனக்கு புணர்வில் ஈடுபட கணவன் அல்லது மனைவி தேவையில்லை ஆண் நண்பர் அல்லது பெண் நண்பர் போதும் என்ற மேலை நாட்டு கலாச்சரத்தினை இந்தியாவின் பாரம்பரியத்தில் புகுத்தலாமா? ஆப்பிரிக்க மக்கள் அதேபோன்று புணர்வில் ஈடு பட்டதால் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ் என்ற நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிக்கை அளிக்கவில்லையா? இதனை ஏன் நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இல்லையா? தமிழ் நாட்டு கிராமங்களில் விவசாயம், தறி நெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள் தங்களது உணர்வை தீர்த்துக் கொள்ள ஆடு, மாடு, கோழி போன்ற இனங்களை நாடுகின்றார்கள் என்ற செய்தி வந்த வண்ணம் தானே இருக்கின்றது. இனி அவைகளை எந்த சட்டத்தின் மூலம் தடுப்பது என்பது போன்ற கேள்விக்கு பிராணிகள் நல சங்கம் பதில் அளிக்குமா?
            அடுத்த தீர்ப்பு கள்ள உறவு குற்றமில்லை என்பதாகும். இந்திய தண்டனைச் சட்டம் 497  படி ஒரு மனிதன் அம்மி  மிதித்து அருந்ததி பார்த்து  ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்ட பின்பு அடுத்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டால் அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையோ, அல்லது அபராதமோ அல்லது இரண்டும்  சேர்த்தோ வழங்கப் படும். அந்த சட்டம் தான் தற்போது செல்லாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நீதிபதிகள் சொல்லும் காரணம் என்னவென்றால், 'அரசியல் சட்டப்படி மனிதனுக்கு உள்ள உரிமையினை முற்போக்குடன் நோக்க வேண்டும் என்பது தான்.   
            இந்த தீர்ப்பிற்கு முக நூலில் ஒருவர் கடுமையாக, 'தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் தங்கள் மனைவி, மகள்கள் அல்லது அவர்கள் கணவர்கள் இது போன்ற கூட கலவியலில் ஈடுபட அனுமதிப்பார்கள் என்று சில கணம் யோசித்திருந்தார்கள் என்றால் இதுபோன்ற தீர்ப்பினை எழுதி இருக்க மாட்டார்கள்' என்பது தான். நான் முன்பு எடுத்துக் கூறியபடி குடும்ப வாழ்வு, திருமண பந்தம் ஒரு சூரிய குடும்பத்தில் சுழலும் கிரகங்கள் போன்றது. அதனை விட்டு யார் விலகுகின்றார்களோ அவர்கள் பந்த, பாசத்தினை விட்டும் விலகி விடுகின்றார்கள் என்று அர்த்தம் தானே. மேலை நாட்டு கலாச்சாரத்தின் படி சாட்டிங், டேட்டிங் செய்து ஒன்றாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று பின்பு திருமணம் செய்யக்கூடிய சமுதாய அமைப்பினைக் கொண்டதா இந்திய கலாச்சாரம்? அல்லது பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவது என்றால் அந்த குழந்தைகளின் நிலை என்ன என்று யோசிக்க வேண்டாமா, வேற்று பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டு கர்ப்பமானாள் அந்த குழந்தை பற்றி சண்டை சச்சரவிற்கு, வழக்குகளுக்கு  வழி வகுக்காதா?
ஓசிப் பிரியாணிக்காக தன் உடலை விற்றது மட்டுமல்லாமல், இரண்டு அழகு தேவைதைகளான பிஞ்சு பாலகர்களை விஷம் வைத்து கொன்று விட்டு, ஓடி ஓடி குடும்பத்திற்காக உழைத்த கணவனையே கொல்ல எத்தனித்த கேளம்பாக்கம் அபிராமி கதைபோல பல குடும்பத்தில் நடந்த சம்பவங்கள்  படித்த உயர் பதவியுள்ள நீதிபதிகள் செய்யலாமா?
இந்திய தண்டனைச் சட்டம் 1860  ல் எழுதிய ஆங்கிலேயர் இந்திய கலாச்சாரத்தினை நன்கு புரிந்து தானே எழுதி உள்ளார்கள். அதனை பின் தொடர்ந்து வந்த இந்திய குடியரசில் ஆட்சி செய்த தலைவர்கள் என்ன பிற்போக்கு வாதிகளா அதனை மாற்றாமல் இருந்ததற்கு அல்லது இதற்கு முன்பு பணியாற்றிய நீதிபதிகள் அறிவீலிகளா என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? இப்போது மட்டும் இந்திய தண்டனை சட்டம் 377 , 497 ஆகியவைகளை மாற்றியதிற்கு அப்படி என்ன அவசரம்.
நமது சமுதாயம் எப்படி கட்டுக் கோப்பானது என்பதினை சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் மூலம் விளக்கலாம் என்று நினைக்கின்றேன். தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த ஒருவர் குடும்பத்துடன் கேரளா திருவனந்தபுரத்தில் மளிகைக்கு கடை நடத்தி வருகின்றார். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் அருகில் உள்ள சினிமா அரங்கத்திற்கு படம் பார்க்க சென்றுள்ளார். படத்தில் வருகின்ற கட்சியினைப் பார்த்து மனைவி சிரித்துள்ளார். அருகில் இருந்த ஒரு இளைஞனும் மனவியைப் பார்த்து சிரித்துள்ளார். இதனை கணவர் பார்த்து அங்கு ஒன்றும் கேட்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் மனவியினைப் பார்த்து 'ஏன் அந்த பையனைப் பார்த்து சிரித்தாய் என்று சண்டையில் ஆரம்பித்து மனவியினை சுத்தியலால் தலையில் அடித்து கொன்று விட்டு, வீட்டின் கதவை சாத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.  இதுபோன்ற சமுதாயத்தில் வாழும் நாம் மடையினை  திறந்து வெள்ளத்தினை வெளியில் விடுவதுபோல மூக்கணாம் கயிறில்லா காளைகளாக வெளியில் மேய அனுமதிக்கலாமா?
ஏன் மஹாபாரத யுத்தம் எப்படி ஏற்பட்டது. தருமர் ஒரு புது மாளிகை கட்டி இருந்தார். அதனை பார்வையிட துரியோதனனை அழைத்திருந்தார். துரியோதனனும் மாளிகை அடைந்து வாசல் படியில் தண்ணீர் போன்ற அமைப்பினை தெரியாமல், உண்மையான தண்ணீர் என்று தாண்டியுள்ளார். அதனை மாடத்திலிருந்து பார்த்த திரௌபதி சிரித்துள்ளார். அதனை கண்டு தன்னை ஏளனமாக பார்த்து சிரிக்கும் திரௌபதிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று தர்மரை தனது அரண்மனைக்கு அழைத்து சூதாட்டத்தில் தோற்கடித்து த்ரௌபதியினை அவமானப் படுத்தி பாரத யுத்தம் வந்ததாக இலக்கியம் கூறுகின்றது. நாகரீக பெண்கள் பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு இருக்க வேண்டுமேயொழிய கை   தட்டி கூப்பிடும் அளவிற்கு கீழ்த்தரமான ஆடை அணிந்தும், ஆண்களை பார்த்தால் சிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பெண்கள் சீரழிந்து போக வழி வகுக்கும் என்று  என்று ஒரு நடிகை சொல்லி இருக்கின்றார்.  தலை குனிந்து நடந்து பிறர் மனைவி நோக்கா சமுதாயம்   ஆண், பெண்  மக்களை அவிழ்த்து விட்ட காளைகளாக இந்த தீர்ப்பு அமையும் என்பதினை நீங்கள் ஏற்பீர்களா? இதுபோன்ற தீர்ப்பிப்புகள் பன்முக சமுதாயம், அமைதி, ஒற்றுமை, கட்டுக்கோப்பு, ஒழுக்கம் பிறழா வழி வகுக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமா?
இந்த தீர்ப்பு வந்த உடன் நடந்த உண்மை சம்பவத்தினை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன். 1 .10 .2018  சென்னை நெசப்பாக்கத்தில் பாரதி நகரில் வசிக்கும் பிராங்க்ளின் 2016 ல் தன் காதல் மனைவியினை கைபிடித்து ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வந்தார். பிராங்கிளின் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்க  மனைவி புஸ்பலதா கேட்டு சண்டை வந்துள்ளது. உடனே பிராங்க்ளின் நான் அப்படித்தான் எந்த சேற்றிலும் மிதித்து கால் கழுவும் ஆம்பிளை, நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை குற்றமில்லை என்று சொன்னபோது, நீ என்ன சொல்வது என்று கூறி உள்ளார். புஸ்பலதா, உங்களை நம்பி வந்த என்னை தவிக்க விடலாமா என்று அழுதபோது, அந்த கைக்குழந்தையினை தூக்கிக் கொண்டு பிராங்க்ளின் வெளியே சென்று விட்டாராம். கணவன் இரவில் கோபம் தணிந்து திரும்பி வராது கண்டு விரக்தியடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக 2 10 2018 செய்தித்தாள்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. இந்த பாவம் யாரைச் சாரும்.
            ஆகவே தலை குனிந்து நடந்து பிறர் மனைவி நோக்க சமுதாயம் பிராங்க்ளின் போன்ற ஆண் மக்களை அவிழ்த்து விட்ட காளைகளாக இந்த தீர்ப்பு அமையும் என்பதினை நீங்கள் ஏற்பீர்களா? இதுபோன்ற தீர்ப்புகள் பன்முக சமுதாயம், அமைதி, ஒற்றுமை, கட்டுக்கோப்பு, ஒழுக்கம் பிறழா வழி வகுக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டுமா?


No comments:

Post a Comment