Saturday 18 January, 2020

வாழ்க்கை ஓர் எதிர் நீச்சல்!



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
‘life is not a bed of roses என்று ஆங்கிலத்திலும் ‘வாழ்க்கை ஒரு மலர் படுக்கை இல்லை’ என்று தமிழிலும் சொல்லுவார்கள். நம்மிடையே பலர் ஓஹோ என்று ஒரு சமயத்தில் வாழ்ந்து  தாழ் நிலைக்கு வந்த பின்னர் அல்லது ஏழ்மையில் துவண்டோ உள்ளவர்கள்  இனி நமக்கு வாழ்வு ஒரு இருண்ட உலகம் என்று எண்ணி மூலையில் முடங்கி விடுவர். ஆனால் வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல், இடையில் வரும் சில தடுமாற்றங்களை எதிர்த்து  துணிவுடன் போராடினால் நிச்சயமாக வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்று சில உதாரணங்களால் விளக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
            ஒரு காலத்தில் மேற்கு வங்க நிழல் உலக தாதா நிஜ்ல் அக்காரா எப்படி பிற்காலத்தில் பிரபல நடிகராகி, சமூக சேவை நாயகனாக திகழ்கிறார் என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன். அக்காராவிற்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவருடைய தந்தையினை இழந்தார். அம்மா வீட்டு வேலைக்காக பல இடங்களுக்குச் சென்றார். அக்காரா கயிறு காட்டாத நாயைப் போல தெருவில் அலைந்தான் . தன் தாய் வீட்டு வேலை செய்துவிட்டு திரும்பும்போது அவன்  தூங்கி விடுவான். ஏழ்மையாக இருந்தாலும் அவனுடைய தாய் அவனை தூய சேவியர் பள்ளியில் படிக்க வைத்தார். நிஜ்ல் பத்தாவது தேர்வு முடிந்த பின்பு ஒரு நண்பன் தகராறுக்காக ஹாக்கி காம்பினை எடுத்து கிளம்பி தூள் பரத்தி விட்டான். பலன் காவல் நிலையத்தில் அடைபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டான். அங்கே வந்த தாயின் முகத்தினை ஏரெடுத்தும் பார்க்க முடியாத குற்ற உணர்வு. ஒரு தடவை காவல் நிலையத்தினை மிதித்த கால்கள் நின்று விடாமல் தொடர்ந்து சிறு சிறு தெரு சண்டையில் ஈடுபட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டு கொடுமையினை அனுபவித்தான். இருந்தாலும் அவனுக்கென்ற ஒரு இளைஞர் பட்டாளமே ஜெயிலில்  இருந்தது. பிறகு என்ன அவன் தான் அந்தக் கூட்டத்தில் தலைவன். சிறைக்குள்ளிலிருந்தே தனது குற்ற செயல்களை நிறைவேற்றினான்.
            திகார் ஜெயிலில் ஐ.ஜி. கிரேன் பேடி கைதிகள் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தது போல கல்கத்தா ஜெயிலில் ஐ.ஜி.யாக இருந்த பி.டி. சர்மா சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். நிஜ்ல் விக்கியின் திறமைகளைப் பார்த்து அவனை அலக்நந்தா என்ற நடன மாஸ்டர் குழுவில் சேர்த்து அவனை சிறந்த நடன கலைஞர் ஆக்கினார். அதன் பின்பு ஒரு நாடக குழுவில் சேர்த்து ரவீந்திர நாத் எழுதிய பால்மீகி பிரதிபா என்ற நாவலினை நாடகமாக்கி எப்படி  ரத்னாகர் என்ற குற்றவாளி பிற்காலத்தில் வால்மீகி என்ற சீர்திருத்தவாதியானான் என்ற பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதுவே பிற்காலத்தில் அவன் திருந்தி வாழ வழி வகுத்தது. சிறைச் சாலையில் ஒன்பது வருடம் கழித்தபின்பு அவனுடைய வழக்கில் நீதிபதி அவனை குற்றமட்டவன் என்று விடுதலை செய்தது. சிலையிலிருந்து விடுதலையான அவனை அவனுடைய தாயார் கொல்கத்தாவினை விட்டு சென்று விடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவன் தாயாரிடம், 'உறுதியாக தான் இழந்த மரியாதையினை  திரும்ப பெற்றுத் தருவேன்' என்று உறுதி கூறினான்.
            அவன் பல்வேறு வேலைக்கும் மனு செய்தான்ஆனால் அவனைப் பற்றி தெரிந்ததும் ஒருவரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. ஒரு வேலைக்காக நேர்முக தேர்வினுக்கு காத்துக் கொண்டிருக்கும்போது அவன் அந்த அலுவலகத்தில் சுத்தம் செய்யும் தொழிலாளியினைப் பார்த்தான். உடனே தனது முன்னாள் நண்பர்களையெல்லாம் சேர்த்து ஒரு சுத்தம் செய்யும் அலுவலகம் ஆரம்பித்தால் என்ன என்று யோசனை செய்து அதனையே தொடங்கிவிட்டான். பிற்காலத்தில் அந்த அலுவலகம் செக்யூரிட்டி, வீடுகள்-அலுவலகங்கள்   பராமரிப்பு, விடுதி, ஹோட்டல் போன்றவைகளுக்கு தேவைப் படும் ஆட்களை அனுப்பும் கம்பனியாக உருவெடுத்தது. அவனுடைய அலுவலகம் 500 தொழிலாளர்கள் கொண்டவையாக இருந்தது அதில் 80 பேர் முன்னாள் குற்றவாளிகள்.  அவனுடைய கம்பனி பற்றி கேள்விப் பட்ட IIM கொல்கத்தா அவனுடைய திறமையினை பற்றி ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் அதிசயம் தானே!
            அவனுடைய உடல் வாகு, நடன நயம் அறிந்த சினிமா தயாரிப்பாளர்கள் அவனை 2012ல் அணுகி சினிமாவில் நடிக்க வைத்தனர். முதலில் பெங்காலி சினிமாவில் ஆரம்பித்து பிற்காலத்தில் மலையாள சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தான். அவன் 2019ல் நடித்த Gotra என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. சினிமாவில் நடித்தாலும் அவன் சமூக சேவை நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பித்து அதில் முன்னாள் குற்றவாளிகள், பாலின தொழிலார்கள், போதைக்கு அடிமையானவர்களை நல்வழிப் படுத்தினான். ஒரு தடவை அவன் ஒரு மாளிகையில் சுத்தம் செய்யும் தொழில் செய்தபோது ஜன்னல் வழியே அங்கே இருந்த ஆடம்பரமான சோபா அமைப்புகளைப் பார்த்து தானும் அதுபோன்ற சோபாவில் அமரவேண்டும் என்று எண்ணினான். அவன் எண்ணப் படியே இரண்டு வருடத்திற்குப் பின்பு தனக்கென்று ஒரு அலுவலகத்தில் அதேபோன்று சோபா செட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் தகுதியினை எட்டிவிட்டான். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் , 'எண்ணம் போல வாழ்க்கை' என்று விக்கியின் எண்ணமும் தானும் சமுதாயத்தில் உயர்த்த மனிதனாக வாழ்வதோது நலிந்த பிரிவினருக்கும் உதவ வேண்டும் என்ற  புனிதமான எண்ணம் இருந்தால் இறைவன் அவனுக்கு  துணையாக இருந்தான் என்றால் மறுக்க முடியாதுதானே!
            இந்தியாவில் பெண்களை கோவில்களில் கடவுளுக்காக அர்ப்பணித்த முறை தேவதாசி ஆகும். அப்படி செயல்பட்ட பெண்கள் பிற்காலத்தில் பாலின தொழிலாளர்கள் ஆனார்கள். அந்த முறையினை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1930 ஆண்டு சென்னை மேல் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அந்த தீர்மானம் பெரியார் போராட்டத்திற்குப் பின்பு அப்போதைய சென்னை மாகாண பிரதான மந்திரியான ஓ.பீ . ராமசாமி ரெட்டியார் காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அக்டோபர் 9, 1947 (மெட்ராஸ் தேவதாசி ஒழிப்பு சட்டம்) நிறைவேறியது. அந்த சட்டத்தினை பின்பற்றி பல மாகாணங்கள் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றின. அதுபோன்று   தேவதாசி முறையில் தள்ளப் பட்ட ஒரு ஏழைப் பெண்ணின் கண்ணீர் கதையினை இங்கே காணலாம்.
            கர்நாடகாவும்-கோவாவும் பக்கத்து மாநிலங்கள் என்று உங்களுக்குத் தெரியும். அப்படி கர்நாடக  மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கோவா வந்து குடிசைப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர்  தான் பிமாவா சாலவாடி குடும்பத்தில் மூத்த பெண். அவர் 15 வயதாக இருக்கும்போது வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க அவரது தாயார்  அந்த பகுதியில் உள்ள கோவிலின் சாமிக்கு தேவதாசியாக அர்ப்பணித்தார். அதன் பின்பு அவரை பாலின தொழில் நடத்தும் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டார். பல பாலின வியாபாரிகளிடம் கை மாறிய  பிமாவிற்கு இப்போது வயது33. அவர் பாலின தொழிலில் ஈடுபட்டிருந்தபோது Anyway Rahit Zindagi (ARZ ) என்ற தொண்டு நிறுவனம் 2003ம் ஆண்டு மீட்டு அரசு தொண்டு இல்லத்தில் சேர்த்தது. அங்குள்ள  தன்னைப் போல பாலின தொழிலில் துவண்ட பெண்களின் கண்ணீர் கதைகள் பிமாவின் உள்ளத்தை உருக்கியது. 
            அந்த அரசு புனர்வாழ்வு மையத்தில் பல்வேறு கைவினைப் பொருட்களை கற்றுத் தேர்ந்தார் பிமாவா. எங்கே அவளையும் மற்ற பெண்களையும் பாலின தொழிலில் ஈடுபடுத்தினார்களோ அங்கே எல்லாம் மற்ற பெண்களுடன் சென்று அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சில வருடங்களுக்குள்ளே பல நூறு பெண்களை நல்வழிக்குக் கொண்டு வந்தார். அத்துடன் நிற்கவில்லை, தன்னை நம்பி வந்த பெண்களுக்கு வழி காட்டவேண்டுமென்று ARZ அமைப்பின் உதவியால் 'Swift wash' என்ற சலவைத் தொழிலிலை ஆரம்பித்து  பெண்களுக்கு வேலை கொடுத்தார். பிற்காலத்தில் அந்த நிறுவன மேலாளராகவும் நியமிக்கப் பட்டார். தன்னுடைய விடாமுயற்சியால் தேவதாசி என்ற சாக்கடையிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினை காப்பாற்றுவதோடு , தான் படிக்காவிட்டாலும் தன்னுடைய சகோதரிகளை நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பினை பெற்று தந்துள்ளார்.
            ஆகவே குற்றப் பின்னெனி உள்ளவர்கள், குடிமக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வியாபார, தொழிலில் நலிவடைந்தவர்கள் தங்கள் வாழ்க்கை இருண்டு விட்டது என்று எண்ணாமல் இருளுக்குப் பின்பு ஒளி இருக்கின்றது என்று வாழ்க்கையே ஒரு சவால் என்று எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!

No comments:

Post a Comment