Wednesday 3 June, 2020

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்)
மனிதன் பண்போடு வாழ கல்வியும், கேள்வியும் அவசியம். கேள்வி என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், பெற்றோர், பெரியோர், ஆசான்கள், நண்பர் மற்றும்  அறிவு சான்றோர் கூறும் அறிவுரையாகும். அவ்வாறு அறிவுரை சொன்னால் அவர்  எல்லாம் தெரிந்தவரில்லை என்று  எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அறிவுரை சொல்பவர் செய்த தவறினால் படிப்பினை பெற்று அந்த தவறை நீங்கள் செய்யக்கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும். எவ்வாறு கட்டாந்தரையான தரிசுநிலத்தினை உழுது பயிரிட்டு வளம் செழிக்கும் பூமியாக மாற்றுகின்றோமோ அதேபோன்று தான் ஒருவரை நல் வழிப் படுத்தும் அறிவுரையாகும்.
1)    பரீட்சை நேரத்தில் சில மாணவர்கள் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பர். ஆனால் பரீட்சை நெருங்கும் போது அவர்களுக்கு பயத்தில் உடல் நிலை சரியாக இருக்காது. அப்படிப் பயப்படுபவர்களை வீட்டிலிருக்கும் பெற்றோர், பெரியோர், வயதில் மூத்தோர் அவர்களிடம் பக்குவமாக நீ நன்றாக படித்துள்ளாய், நீ படிப்பது தான் பரிட்சையில் வரும், உனக்கு தெரிந்ததினை எழுது, தெரியாததினைப் பற்றிக் கவலைப் படாதேயென்று தைரியமூட்டினால் நிச்சயமாக மாணவர்கள் தேர்வில் வெற்றி வாகை சூட்டுவர்.
2)    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை ஒளிந்திருக்கும். அதனை பெரியோர் தான் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு மயிலின் குரல் எரிச்சலூட்டக் கூடியதாக இருக்கும். ஆனால் அது தனது வண்ணமிகு தோகையினை விரித்து ஆடினால் மயங்காதவர் மனிதராக இருக்க முடியாது. அதேபோன்று தான் ஒரு மனிதன் ஒரு செயலில் சோடையாக இருந்தால் அவன் எந்தத் துறையில் திறமை வாய்ந்தவன் என்று அறிந்து அவனிடம் எடுத்துச் சொல்லி ஊக்கம் கொடுக்க வேண்டும்.
3)    சிலருக்கு தான் செய்யும் தவறு தெரியாது. அதனை பிறர் சுட்டிக் காட்டினால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவனுக்கு ஆங்கிலப் பாடம் மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட மாணவன் ஆங்கிலப் பரீட்சையில் குறைந்து மதிப்பெண் பெற்றிருந்தான். வீட்டில் வந்து வினாத்தாளை திருத்தியவர்களை திட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா, சரி, உன்னுடைய விடைத் தாளை வாங்கிப் பார்ப்போம் என்று அதனை வங்கியும் பார்த்து பின்பு மகனிடம் சொன்னார், ஆசிரியர் சரியாகத் தான் உன்னுடைய விடைத்தாளை திருத்தியுள்ளார் என்று தந்தை சொன்னது தான் தாமதம், அந்த மகன் தந்தைமேல் கோபப் பட்டு அறைக்கதவினை சாத்திக்கொண்டான். சிறிது நேரம் சென்று அப்பா அறைக்கதவினை தட்டி,'மகனிடம் சொன்னார், 'நீ உன்னுடைய தவறினை ஒப்புக் கொண்டு இனிமேல் அந்தத்தவறினை செய்யமாட்டேன் என்று நினைக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் செய்தது சரிதான் மற்றவர் செய்தது சரியில்லை என்று நினைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது' என்று சொன்னார். அன்று தந்தை சொன்ன அறிவுரை தன்னுடைய கல்லூரி வாழ்விலும், நிஜ வாழ்விலும் வழுக்கி விழவேயில்லையாம்.
4)    ரஸ்கின் பாண்ட் என்ற ஆங்கில எழுத்தாளர், 'உலகில் உள்ள பல குழப்பங்களை எண்ணிக் கொண்டே போனால் அது குப்பை மேடுபோல காட்சி தந்து வாழ்க்கையில் வெற்றியடைய தடைக் கல்லாக மாறிவிடும். அப்படி உங்கள் பாதையில் வரும் குழப்பங்களை நீர்குமிழிபோல எண்ணி மறந்து வீறு நடைபோட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
5)    ஒரு வாலிபன் தன் பெற்றோர், முன்னோர் சேர்த்து வைத்த செ ல்வத்தினை வைத்துக் கொண்டு பெருமை படக்கூடாது. மாறாக அந்த செல்வத்தினை கட்டி காப்பாத்தியும், அதனை பயனுள்ள வழியில் செலவு செய்து மட்டும் போதாது, தானும் உடல் வருத்தி உழைத்தால் தான் உயர்வு பெறமுடியும்.


6)    ஒரு வியாபாரிக்கு தனது வியாபாரத்தில் லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். லாபாக் கணக்கில் சந்தோசப் பட்டுவிட்டு, தொழில் நலிவடையும்போது இரண்டு கால் முட்டிக்குமிடையே தலையினை கவிழ்த்துக் கொண்டு இருக்காமல், அந்த தொழிலினை தூக்கி நிறுத்த என்னென்ன வழிகள் என்று ஆய்வு செய்ய வேண்டும். வானத்தில் கும்மிருட்டில் நட்சத்திரங்கள் பிரகாசமாகி மின்னும். ஆகவே நாம் இருட்டான வானத்தினைப் பார்த்து பாடம் படிக்காமல், மின்னும் நட்சத்திரங்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும்.
7)    இந்திய கிரிக்கட்டில் சிறந்த கேப்டனாக கருதும் விராட் கோலி சிறு வயதில் டெல்லி கிரிக்கட் அகடாமியில் சேர அவருடைய தந்தை பலரை பார்த்திருக்கின்றார். ஆனால் அவர்கள் எல்லாம் அவருடைய உருவத்தினைப் பார்த்து சந்தர்ப்பம் அளிக்கவில்லையாம். அப்போது அவருடைய அப்பா சொன்னாராம் நீ மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து பயிற்சி எடு பிற்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராகலாம் என்றாராம். அப்பா செய்த முயற்சி கண்டு பெருமைப் பட்ட விராட் கோலி நாம் ஊர் மெச்ச விளையாடவேண்டும் என்று முடிவெடுத்தாராம். இன்று அவரை உலகமே பாராட்டுகிறது.
8)    ஒரு சிலர் தனது தொழிலில் முன்னேற முடியவில்லையென்று குடும்பப் பொறுப்பினை விட்டுவிட்டு சந்நியாசம் போகிறேன் என்று ஒவ்வொரு வணக்கஸ்தலத்திற்கும் போய் காலம் கழிப்பர்  அப்படிப் பட்டவர்களுக்கு, 'ஆங்கிலேய பதினெட்டாம் நூற்றாண்டு கவிஞர் லார்ட் பைரோன், 'read the bible and mind your purse' ( அதாவது நீங்கள் மத புத்தகங்கள் படியுங்கள், ஆனால் உங்கள் பையில் காசும் இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்) என்ற அருமையான அறிவுரை வழங்கியுள்ளார்.
9)    தானம் செய்வதால் உங்களது செல்வம் குறைந்து விடுவதில்லை. அதேபோன்று பிறருக்கு உதவி செய்து விட்டு அதனை தண்டோரா போட்டுச் சொல்லும் பழக்கம் கூடாது. அதற்கான பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.
10) உங்கள் முகம் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதைத்தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். Harry Potter என்ற ஆங்கில நாவலை எழுதிய ஜே.கே.ரவ்லிங், 'வாழ்க்கையில் வழுக்கி விழாதவர் எவருமிலர். ஆனால் தோல்வியின் படிப்பினை தெரிந்துகொண்டால் நீங்கள் முன்பைவிட வலிமையானவர் ஆவீர்' என்று கூறியுள்ளார்.
11)  ஆங்கிலேய எழுத்தாளரும், நன்கொடையாளரும், 400 நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபருமான ரிச்சர்ட் ப்ரண்ட்ஸன் தாயார் அவருக்கு ஆரம்பத்தில் சொன்ன அறிவுரை என்னெவென்றால், 'நீ ஒரு தொழிலில் நஷ்டம் அடைந்தால் அதனை பற்றி கவலைப் படாது, உன்னுடைய முயற்சியில் மறு தொழில் தொடங்குவதில் ஈடுபட வேண்டும்' என்று சொல்வாராம். அவர் சொன்ன அந்த அறிவுரையினை வேத வாக்காக எண்ணி இன்று  400 தொழில்களுக்கு அதிபராக இருப்பதுடன், அந்த தொழிலில் கிடைக்கும் லாபத்தில் சிறந்த நன்கொடையாளர் என்றும் போற்றப் படுகிறாராம்.
12)  அமெரிக்காவில் கறுப்பின கூடைப் பந்து தலை சிறந்த வீரராக கருதப் படும் மைகேல் ஜோர்டன் தற்போது பதினைந்தாயிரம் கோடி செல்வந்த தொழிலதிபராக விளங்குகிறார். அவர் எப்படி தன்னுடைய விளையாட்டில் கொடிகட்டி பறந்தார் என்பதினை வாழ்க்கையில் உள்ள படிப்பினையாக கூறும்போது, 'தன்னுடைய கூடைப் பந்து விளையாட்டில் கிட்டத்தட்ட 9000 இலக்குகளை தவறவிட்டு 300 விளையாட்டுப் போட்டிகளில் தோல்வி யடைந்து உள்ளேன். ஆனால் அதனைப் பற்றி வீணான கவலை கொள்ளாது தொடர்ந்து விளையாடியதால் பிற்காலத்தில் புகழுடன் விளங்க முடிந்தது' என்று கூறியிருப்பது ஒரு உலக கூடைப் பந்து ஜாம்பவானும் பல தோல்வியை தழுவிதான் வெற்றிவாகை சூடியுள்ளான் என்று எடுத்துக் கொண்டு திருவள்ளுவர் சொன்னதுபோல, செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்-அச்செல்வம்
செல்வத்துளெல்லாம் தலை' யாக கருதி நல்ல அறிவுரைகளை புன்முறுவலுடன் ஏற்று நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறலாமா!

No comments:

Post a Comment