Friday 16 July, 2021

கப்பல் விடுவோம், நல் வாணிபம் செய்வோம்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

முஸ்லிம்களின் பல்வேறு துறைகளில் பிரதிநித்துவம், அரசியல் பங்கீடு, இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. ஒரு நகரத்தில் மதக் கலவரம் என்றால் முதலில் பாதிக்கப் படுவது பெரும், சிறு வியாபாரிகள் தானே. உதாரணத்திற்கு 1992-1993 மும்பையில் நடந்த கலவரத்தி லும், கோவையில் நடந்த 1998 கலவரத்தில் பாதிக்கப் பட்டது பெரும் கிளாத் ஸ்டோரான 'சோபா' போன்றவையும்,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலைய சம்பவத்திற்கு பின்பு குஜராத்தில் நடந்த சம்பவமும், 2013ல் உ.பியில் முஸாபிர் நகரில் நடந்த கலவரத்திலும் பாதிக்கப் பட்டது பெரிய மற்றும், சிறிய வியாபாரிகளும் தானே என்பதினை உங்களுக்குத் தெரியும். அந்த வியாபாரிகள், தொழிலதிபர்கள் நிலைகள் பற்றிய ஒரு ஆய்வினை குஜராத் அஹமதாபாத் பல்கலைக் கழகமும், விப்ரோ தொழில் நுட்ப கழக சேர்மன் ஆஜிம் பிரேம்ஜியும் இணைந்து  மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கையின் சாராம்சத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

2019ம் ஆண்டு சர்வேபடி இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை 19.5  கோடியாகும். அது மொத்த ஜனத்தொகையில் 14.2 சதவீதம். 2001-2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி முஸ்லிம்கள் 24.6 இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கை சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளில் 59.1 சதவீதம் தான். மிகவும் வேகமாக குறைந்து விட்டது. முஸ்லிம்கள் நிலை பற்றி ஆராய நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதன் அறிக்கையில் சராசரி இந்திய மக்களின் படிப்பறிவு 64.8 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம்கள் படிப்பறிவு 59.1 சதவீதம் தான். நீதிபதி சச்சார் கொடுத்த அறிக்கையினைத் தொடர்ந்து பேராசிரியர் அமிதாப் குண்டு அதனை அமல் படுத்த நியமிக்கப் பட்டு அவர் 4.12.2014ல் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். அதன் படி  பள்ளிப்படிப்பினை பாதியிலேயே நிற்பாட்டிய முஸ்லிம் மாணவர் மற்ற மத மாணவர்களைவிட அதிகம். அதுவும் பெண்பிள்ளைகள் பாதியிலேயே படிப்பினை நிறுத்துவது மிக

அதிகமாம். பள்ளியிலேயே சேராத முஸ்லிம் சிறுவர்கள் 17 சதவீதமும், சிறுமியர் 22 சதவீதமாக உள்ளது உங்களுக்கு அதிர்ச்சியாக தெரியவில்லையா?

            இந்திய தொழிலாளர்(LEP) வேலை வாய்ப்பு மக்கள் தொகையில் ஹிந்துக்கள், கிருத்துவர், சீக்கியர் அதிகமானோர் உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் 31 சதவீதம் தான். 2017-18 ஆய்வின் படி முஸ்லிம்கள் கிராமத்தில் வேலையில்லாமல் இருப்போர் 6.5 சதவீதம், ஆனால் நகரங்களில் 8.5 சதவீதம். அது மற்ற சமுதாயத்தினரை விட அதிகமாகும். சுய வேளையில் ஈடுபடுவோர் நகரங்களில் அதிகமாக உள்ளனர்.மற்ற மத பெண்கள் வீட்டுக்குள்ளே வேலை செய்வது 51 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம் பெண்கள் 70 சதவீதம் வீட்டுக்குள்ளேயே வேலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் சுய வேலைகளை செய்வது மற்ற சமுதாய தொழிலதிபர்கள் அவர்களை புறக்கணிப்பது தானாம். முஸ்லிம்கள் தொழில் தொடங்க வங்கிகளை நாடாததிற்கு காரணம், வங்கிகளின் வட்டி முறைகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாலேயே! ஆனால் முஸ்லிம்களுக்கு உதவ ‘இஸ்லாமிய டெவெலப்மெண்ட் பேங்க்’ இருந்த போதிலும், அதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி மிக, மிக குறைவே எனலாம். மற்றும் அதுபோன்ற வங்கிகள் ஒரு சில இடங்களில் இருப்பதும் ஒரு காரணம். தற்போது பல முகல்லாக்களில் ‘பைத்துல் மால்’ என்ற அமைப்புகள் உதவி செய்ய ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல வரவேற்பாகும்.

            2014ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப் படுகிறது. அதுபோன்ற சம்பவங்களில் 91பேர்கள் இறந்துள்ளதாகவும், 579பேர்கள் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. 2019 ஜூன் மாதத்திற்குப் பின்பு வந்த அரசின் அதிர்ச்சி தரும் நடவடிக்கைகளான முத்தலாக் சட்டம், காஸ்மீரின் தனி உரிமையான சட்டம் 370 மற்றும் 35A ரத்து செய்தது, ஜம்மு-காஸ்மீரை இரண்டு பகுதிகளாக பிரித்து காஷ்மீர்-லடாக் என்று மாநில அந்தஸ்தை    எடுத்துவிட்டு பாண்டிச்சேரி போன்ற ஒன்றிய பகுதியாக்கியது, பாபரி மஸ்ஜித் இடித்தவர்கள், 'தி கிரேட் எஸ்கேப்' என்று ஆங்கில படத்தில் வருவது போல தப்பித்தது, ராமர் கோவில் அந்த இடத்தில் கட்டுவதற்கு சாதகமான உத்தரவு பெற்றது, குடியுரிமை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் இடியாக அமைந்தது என்பது யாரும் மறுக்க முடியாது.

            முஸ்லிம்கள் ஆடைகள் தயாரித்தல், உணவு பதப் படுத்துதல், ஹோட்டல், பேக்கரி, கட்டிடம் கட்டுதல், சாப்ட் வேர் கம்பனிகள், ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ், நகை, கைபேசி, மளிகை, கறி, மீன்  ஏற்றுமதி-விற்பனை, பிளாஸ்டிக் மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், விற்பனை, இன்ஜினியரிங், கேன்வாஸ் மற்றும் தோல் தயாரித்தல்-ஏற்றுமதி, துணிக்கடை, நெய்தல், பாய் முடைதல் போன்ற 20 தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். முஸ்லிம் தொழில் அதிபர்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதிலும், தொழில் நுட்ப தொடர்பு ஏற்படுத்துவதிலும் அரசு புறக்கணிப்பும், மற்ற சமூக தொழிலதிபர்கள் ஆதரவு கிடைப்பதிலும் தொய்வுகள் உள்ளதாம். தொழில்கள் தொடங்குவதற்கு குடும்பத்தில் உள்ளவர்களும், பொருட்களை வாங்குவோர்களிடமும், பண உதவி பெறுவதிலும், தயக்கங்களும் சில சந்தேகங்களும் உள்ளதாம். வாடிக்கைகார்களுக்கு முதலில் நம்பிக்கையூட்ட மிக பெரிய சிரமம் இருக்கின்றது. முஸ்லிம் தொழிலதிபர்களின் பொருட்களின் தரங்களில் சந்தேகமும் உள்ளதாம். ஒரு தடவை நம்பிக்கை ஏற்படுத்தினால் மறுபடியும் எந்த சிரமும் இல்லையாம். தொழிலாளர் கிடைக்காத பட்சத்தில் 'network' மார்க்கெட்டின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வேலைப் பளுவினை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

பொருளாதார சவால்கள்: பல தொழிலதிபர்கள் தங்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறுகின்றனர். பொருட்களை வாங்கும் நபர்களை பண உதவிக்கு அணுகினால் முதலில் நீங்கள் தொழில் ஆரம்பிங்கள் பிறகு பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறதாம். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினால் அவர்களை வழிநடத்த பல தொழிலதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனராம். காரணம் எங்கே தங்களுக்கு போட்டியாக தொழிலை ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமாம். தொழில்களில் அனுபவம் நிறைந்த ஹிந்துக்கள், ஜெயின், பார்சி, சீக்கிய , கிருத்துவமக்கள் தங்களுக்கு பொருட்களை கொடுத்தும், வங்கிகளின் கிரிடிட் துணையுடன் வந்தால் தான் தருவோம் என்கின்றனர். ஆனால் முஸ்லிம் வியாபாரிகளுடன் வியாபாரம் செய்யும்போது அதுபோன்ற சிரமம் இருப்பதில்லையாம்.கொரானா ஊரடங்கால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வெளிநாட்டவர் தொழில் போட்டி, மற்றும் GST போன்ற வரி விதிப்புகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. Demonetisation போன்ற நேரங்களில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களுடைய பணத்தினை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று காலத்தினையும், நேரத்தினையும் இழந்ததாக கூறுகின்றனர். முஸ்லிம் வியாபாரிகளிடம் பணத்தினை குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை, கொடுக்கவேண்டியதினை கேட்டால் மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனராம்.  சில வியாபாரிகள் முஸ்லிம் பொருட்கள் தரமில்லை என்று வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனராம். முஸ்லிம் அல்லாத தங்கள் சமூக உறவினர்களிடமும் முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கினால் அவர்களை பகிஸ்கரிக்கின்ற்னராம்.

அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கு: முஸ்லிம்கள் நடத்தும் கறி, தோல் சம்பந்தமான தொழில்களை மூட முயற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இந்திய மக்கள் பெரும்பாலோர் அசைவு உணவு உண்பவராக இருந்து, ஹிந்துத்துவா துவேசம் உள்ளவர்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதையும், தோலால் உற்பத்தி செய்யப் படும் பொருட்களையும் புறக்கணிக்கின்றனர். கறி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள லைசென்ஸ்ஸை புதுப்பித்தலும் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே 2014ன் சர்வேபடி 50 சதவீத தொழில்கள் சரிவடைந்துள்ளன.  கோவில் திருவிழாக் காலங்களில் புனித ஆற்றில் தோல், டையிங் போன்ற தொழில்களால் ஆறுகள் புனித தன்மை இழப்பதாகக் கூறி அரசே அந்த ஆலைகளை மூடச் செய்கின்றன. ஹிந்துத்துவா வலது சாரி அமைப்பினர் டெல்லியில் தப்லீக் ஜமாத்தால் தான் கொரானா நோய் பரவியது என்றும், ஆகவே முஸ்லிம்கள் நடத்தும் பழ, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்காதீர் என்றும் பரப்புகின்றனராம்.

வலதுசாரி வன்முறை நடவடிக்கைகள் 2014ம் ஆண்டிற்கு பின்பு முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும், பசுமாடுகளை அறுப்பதிற்காக கடத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும், பொய்யான குற்றச் சாட்டுகள் சொல்லி தாக்கப் படுவதும், அவர்களுக்குப் பயந்து வீடுகளை துறந்து அகதிகளாக வேறு இடத்திற்கு இடம் பெயர்வதும் வாடிக்கையாகிவிட்டது. சமீப காலங்களில். தொரு வியாபாரிகளைக் கூட தங்கள் பகுதியில் வியாபாரம் செய்யக் கூடாது என்றதால், பலர் ஆட்டோக்கள் ஓட்டி காலந்தள்ளுகின்றனர்.

            சில பெரும் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களை இஸ்லாமிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தொடங்கினால் தங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிலர் தாங்கள் முன்பு செய்த தொழிலனை விட்டு புதுத் தொழில்களை தொடங்க முயல்கின்றனர். எல்லாவிதமான வெறுப்புகள் தங்கள் மீது எறியப் பட்டாலும் முஸ்லிம் வியாபாரிகள் மட்டும் தங்களுடைய மார்க்க கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுப்பதில்லையாம். சீனாவில் முஸ்லிம் வியாபாரிகள் பெருகக் காரணம் அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்திறது தானாம்.

            பொருளாதார முதலீடுகள்: பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களுடைய சுய சேமிப்பை வைத்தே தொழில் தொடங்குகின்றனராம். சிலர் அரசு உதவி கொண்டும், சிலர் கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தொழில் தொடங்குகின்றனராம். முஸ்லிம் வியாபாரிகள் சரியான கணக்கு, வழக்கு வைத்துக் கொள்ளாததால் சிலர் அபராதம் கட்ட நேருகின்றது என்று சில ஆடிட்டர்கள் சொல்லுகின்றார்கள். தங்கள் மூதாதையர் தொழில்களை தொடர்ந்து நடத்தும் சிலர் தற்போதைய அரசு வரிவிதிப்பு தெரியவில்லையாம். ஆகவே அவர்களுக்கு பொருளாதார, நிதி,அறிவு மற்றும் விழுப்புணர்ச்சி தேவையாம். முஸ்லிம் முதலீட்டாளர்கள் போடுகின்ற பங்குகளை அமானிதம் என்று கண்ணைப் போல பாதுகாக்கின்றனராம். கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம் தொழில் அதிபர்களிடையே இஸ்லாமிக் பைனான்ஸ், ஷரியத் பைனான்ஸ், ஹலால் செர்டிபிகேஷன் போன்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.

            சமூக ஊடகங்களின் உதவி: முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் உற்பத்தியினை விளம்பரப் படுத்த சமூக ஊடகங்களை நாடுகின்றனர். பல புது என்ஜினீரியங் பட்டதாரிகள் புதுத்தொழில்கள் தொடங்க ‘யு டூப்’ போன்ற ஊடகங்களை தேடி கண்டு பிடித்து தொடங்குகின்றனர். சிலர் தொழில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். சிலர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். கோஜா, போரா முஸ்லிம் சமூதாய மக்கள் தங்கள் சமூதாய மக்கள் தொழில் தொடங்க உதவி செய்கின்றனர். அந்த சமுதாய பெண்களும் தொழில் வியாபாரம், பொருளாதாரம் ஆகிவைகளில் ஆண்களுக்கு பெரும் உதவியாக உள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் பொருளாதார படிப்பறிவும் உள்ளது தானாம். அவர்களுக்கு RIFA chambar of commerce and Industry மற்றும் MIA ஆகியவை பெண்களுக்கு போதிய பயிற்சி அளிக்கின்றனராம்.

            இந்திய முஸ்லிம் பெரிய தொழிலதிபர்கள் சுமார் 72 கம்பனிகள் நடத்துகின்றனர். அதில் முக்கியமானவை, CIPLA, HIMALAYA, மெட்ரோ ஷூஸ், WIPRO, HAMRAD, WOCKHARDT முக்கியமாதனாகும். அந்த 72 நிறுவனங்களின் வருட வருமானம் சுமார் 20 லட்சம் கோடியாகும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.

            நான் எதற்கு மேலே குறிப்பிட்ட விவரங்களை சொல்கின்றேனென்றால் தொழில் தொடங்க பல தடைகள் இருக்கும், அதையெல்லாம் உடைத்தெறிந்து தொழில்கள் நடத்தினால் நிச்சயமாக நீங்கள் பெரும் பணக்காரர் ஆவீர்.

2) எப்படி ஆம் ஆத்மி பார்ட்டி டெல்லியில் பள்ளி பாடப் புத்தகங்களில் தொழில் சம்பந்தமான விபரங்களை சேர்த்துள்ளதோ அதேபோன்று முஸ்லிம் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்க வேண்டும்.

3) புதுவிதமான தொழில் தொடங்க போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும்.

4) தேசிய தொழில் கருத்தரங்குகளில் மாணவ, மாணவியரை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தொழில் நுட்ப மாணவர் எப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் முனைவோர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெறுவது என்று போதிக்க வேண்டும்.

5) ஒவ்வொருவரும் தங்களது 20 சதவீத ஜக்காத்தினை தங்களுடைய முகல்லா மூலம் தேவையானவர்களுக்கு தொழில் தொடங்க கொடுக்க வேண்டும்.

6) மேலே குறிப்பிட்ட 72 தொழில் அதிபர்களும் முஸ்லிம் தொழில் முனைவோருக்கு பயிற்சியளிக்க நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

7) NGO அமைப்பினர் எந்தந்த தொழில்கள் போலியானவை, எந்தெந்த தொழில் தொடங்கினால் நஷ்டம் வராது, தொழில் தொடங்க யார், யாரை அணுக வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும்.

8) முஸ்லிம் தொழிலதிபர்கள் தங்களுக்கு வேண்டிய ஆடிட்டர்களை அணுகி எப்படி கணக்கு, வழக்குகளை பராமரிக்க வேண்டும் என்று பயிற்சி எடுக்க வேண்டும்.

9) மத வெறியில்லாத மற்ற சமுதாய வியாபாரிகளை அணுகி ஆலோசனை பெறுவதினை தவிர்க்க கூடாது.

10) அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் பயன்பெற அமைக்கப் பட்ட நீதிபதி சச்சார் மற்றும் குண்டு கமிட்டிகளை அமல் படுத்தி அதனை கண்காணிக்க ஒரு தனி அமைப்பினை மத்தியிலும், மாநிலத்திலும் செயல் படுத்த வலியுறுத்த வேண்டும்  என்றால் சரிதானே சகோதரர்களே!

Comments: mdaliips@yahoo.com

No comments:

Post a Comment