Saturday 7 January, 2023

இஸ்லாம் விளையாட்டிற்கு எதிரானதா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

கத்தாரில் 2022 நவம்பரில் நடந்த உலக கால்பந்தாட்ட போட்டியில் சௌதி அராபியா, ஈரான் மற்றும் மொரோக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகள் முக்கிய பங்காற்றின. ஆனால் பல முஸ்லிம் நாடுகள் சிறப்பாக விளையாடததால்  முஸ்லிம்கள் விளையாட்டினை ஆதரிக்க வில்லையா என்ற கேள்விகள் பல திசைகளிருந்தும் எழும்பின. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. செமி பைனலில் பிரான்ஸ் அணியுடன் மொரோக்கோ விளையாடும்போது போராடி தோற்றது. பிரான்ஸ் நாட்டில் மொரோக்கோ நாட்டினர் குடியேறிகளாக உள்ளனர். பைனலில் அர்ஜென்டினாவுடன் விளையாடிய பிரான்ஸ் அணி போராடி தோற்றது. அந்த அணி தோற்றதை கொண்டாடும் விதமாக மொரோக்கோ குடியேறிகள் பாரிஸ் நகரில் இறங்கி கலவரத்தில் இறங்கியதால் காவல்துறையினர் உதவியுடன் அடக்கப் பட்டது. அப்போது ஐரோப்பாவில் முஸ்லிம்கள் விளையாட்டில் வன்முறையினை புகுத்தியுள்ளனர் என்ற ஒரு குற்றச்சாட்டும், அவர்கள் மார்க்கம் விளையாட்டினை ஆதரிக்காததால் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றும், முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுப்பதிற்கே எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாம். அதனால் இஸ்லாம் விளையாட்டினை பற்றிய கருத்துக்கள் என்னென்ன என்று விளக்கலாம் என்று எண்ணி இந்த கட்டுரை எழுதுகிறேன்.

இஸ்லாம் தனிப்பட்ட மனிதனுக்கு விளையாட்டு ஒரு மூலதனமாக உள்ளதைத்தான் தடை செய்கிறது. உதாரணத்திற்கு சௌதி அராபிய ‘அல் நாசர்’ அணிக்கு சமீபத்தில் 37 வயதான போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஸ்டார் வீரர் ரொனால்டோ ரூ.2478 கோடி சம்பளத்தில் ஒரு வருடத்திற்கு கணக்கிட்டு இரண்டரை வருடம் ஒப்பந்தம் செய்து உள்ளது. ஆனால் அவர் முந்தைய மாஞ்செஸ்டர் யுனைடெட் விளையாட்டு அணிக்கு ரூ 250 கோடி ஒப்பந்தத்தில் தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதனை காட்டுகிறது என்றால் அராபியாவில் செல்வம் கொழிப்பதால் இதுபோன்ற ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது என்ற குற்ற சாட்டும் எழுகின்றது. அராபியாவில் எத்தனையோ ஆதி 'படோவின்' இன மக்கள் மற்றும் மக்கா, மதினாவில் கூட ஏழ்மையில் இருக்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. ஆகவே இதுபோன்ற வயதான விளையாட்டு வீரருக்கு உச்சக் கட்ட விலை பேசப் பட்டதுபோன்ற செயலைத்தான் வெறுக்கின்றது.

உண்மையிலே இஸ்லாம் முஸ்லிம்கள் உடல் வலிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ரசூலுல்லாஹ், 'உங்களுடைய குழந்தைகளை நீச்சல், வில் வித்தை,  குதிரையேற்றம், போன்றவற்றில் திறமையுள்ளவர்களாக உருவாக்குங்கள்' என்று சொன்னதாக ஹதீதுகள் உள்ளன. வலிமையான உடல் கூர்மையான அறிவு கொண்டதாக இருக்கும் என்பது அறிவியலே. இதனை ‘பத்வா குரு ஷேய்க் அப்தியாவும்’ உறுதி செய்கிறார். இமாம் ‘இபின் கையும்’ தனது 'ஜாத் அல் மாட்' என்ற புத்தகத்தில் 'இஸ்லாம் என்பது ஒரு இயக்கத்தின் அதாவது moovement ல் உள்ள 'core of sports' விளையாட்டின் மையம் என்று கூறுகிறார். விளையாட்டானது உடலில் உள்ள கழிவுகளை வேர்வையாக வெளியேற்ற்றி, நோயின்றி சுறுசுறுப்புள்ளவனாக ஆக்கிற்னறது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் விளையாட்டு உடலில் உள்ள உறுப்புகள் உள்ளேயும், வெளியேயும் தனி தனி விளையாட்டுக்களை செயகின்றன. அதன் செயல்பாடு இல்லையென்றால் மனிதன் உயிரற்ற மரக்கட்டையாகி விடுவான் என்றும் சொல்கிறது பல போதனைகள்.

இஸ்லாமிய வழிமுறைகள்  ஒவ்வொன்றையும் புனிதப் பயணம், உற்றார் உறவினர் வீடுகளுக்குச்  செல்வது, நோயுற்றவர்களை நலம் விசாரிக்கச் செல்வது, ஐவேளை தொழுகை, நோன்பு, ஓதுவது, மற்றும் சமூக-சமூதாய சேவைகள் அத்தனையும் ஒரு விதமான உடற் பயிற்சியும், மன பயிற்சியும் தானே!.

விளையாட்டில் இஸ்லாம் போதித்த ஒழுங்கு முறைகள்:

1)                  விளையாட்டில் நன்னடத்தையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறது. அங்கே வன்முறைக்கு இடமில்லையாம். 2006ம் ஆண்டில் நடந்த உலக கால் பந்தாட்ட விளையாட்டில் இத்தாலி நாடும், பிரான்ஸ் நாடும் விளையாடின. ஒரு கட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடானேயும், இத்தாலி வீரர் மார்க்கோ மெட்ராஸியும் பந்தை எடுப்பதில் வேகம் காட்டினர். அப்போது மோதிக் கொண்டனர். அத்தோடு  நின்று விட்டால் பரவாயில்லை, மாறாக ஜிடானே சகோதரியினைப் பற்றி கேலியாக ஒரு அவதூறு சொல்லை மார்க்கோ சொல்லி விட்டார். அதனை அறிந்த ஜிடானே திரும்பி வந்து கோபத்தில் தனது தலையால் மார்க்கோவின் மூக்கில் முட்டியதால் மார்க்கோ காயத்துடன் கீழே விழுந்ததால் ஜிடானேக்கு சிகப்பு அட்டை கொடுக்கப் பட்டு வெளியேற்றப் பட்டார். அது போன்ற செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

2)                  இஸ்லாம்  விளையாட்டில் நெகிழ்வுடனும், அன்புடனு, பரந்த உள்ளத்துடன், நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. வெற்றி- தோல்வி என்பது மாறி, மாறி வருவது என்று கூறுகிறது. தோல்வி என்பது வருங்கால வெற்றிக்கு முதல் படி என்று கூறுகிறது. வெற்றிபெற்ற அணியினை அளவிற்கு அதிகமான புகழுரையினை அள்ளி பொழிவதும், தோல்வி பெற்றவர்களை இகழ்வதனையும் இஸ்லாம் வெறுக்கின்றது. பிரேசில் அணி தோற்று வருத்தத்துடன் நாடு திரும்பும் போது அவர்கள் சென்ற பஸ்ஸினை வழிமறித்து அழுகிய முட்டை, தக்காளி கொண்டு எறிவதுமான காட்சியினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. இஸ்லாத்தில் தோல்வியில் எவ்வாறு அன்புடனும், ஆதரவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதினை ரசூலுல்லாஹ் ஒட்டக பந்தயத்தில் கலந்து கொண்ட செய்தியினை உதாரணமாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு தடவை ரசூலுல்லாஹ் ஒட்டக பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஒட்டகம் மற்ற ஒட்டகங்களை விட பின் தங்கியிருந்தது தாங்கிக் கொள்ள முடியாத முஸ்லிம்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்ததினைக் கண்ட ரசூலுல்லாஹ் அவர்கள், 'முஸ்லிம்களை நோக்கி, 'உலகில் நிரந்தரமான வெற்றியுமல்ல, தோல்வியுமல்ல என்றும் , வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வரும்' என்றும் ஆறுதல் கூறினார்கள்.

3)                  ரசூலுல்லாஹ் போதித்த ஆறுதல் கூற்று உண்மைபோல 2022ல் நடந்த உலக கால் பந்தாட்ட கடைசி போட்டியில் போராடி அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ் அணியினை அந்த நாட்டின் ஜனாதிபதி மக்ரோன் தேற்றினார். என்பதினை உங்களக்கு விளக்கெல்லாம் என எண்ணுகிறேன். கடைசி ஆட்டத்தினை காண வந்த பிரான்ஸ் அணியின் ஜனாதிபதி பிரான்ஸ் அணி தோற்றவுடன் அவர்கள்  உடைமாற்றும் அறைக்குச் கவுரவம் பார்க்காது சென்று நெடு நேரம் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்பி பாரிஸ் நகரில் உற்சாகமூட்ட வந்த ரசிகர்களை சந்திக்காது ஹோட்டல் அறையினுள் முடங்கி கிடந்தனர். அதனை கேள்விப்பட்ட ஜனாதிபதி மாக்ரோன் வீரர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றியும் தோல்வியும் மாறி, மாறி வரும் அதற்காக உங்களை உற்சாகத்துடன் பார்க்க மணிக்கணக்கில் ஹோட்டல் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை பால்கனியிலாவது நின்று கையினை காட்டவும் என்றதும் அவர்கள் வெளியே ரசிகர்கள் கொடுத்த ஆறுதலை ஏற்றுக் கொண்டார்களாம்.

4)                  ரஸூலலல்லாஹ் அவர்கள், 'வழியில் இருக்கும், குப்பைக் கூளங்கள், கல் போன்றவற்றை அகற்றுவதும் ஒரு நன்மையே(பரகத்து)' என்று போதித்தார்கள். அது ஒரு ஒழுக்க நடவடிக்கையும் ஆகும். இந்த கால்பந்தாட்ட போட்டியில் வீரர்கள், மற்றும் ரசிகர்கள் எவ்வாறு பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொன்னதோ அதேபோன்று நடந்ததினை அனைத்து ஊடகங்களும் பாராட்டின. ஜப்பான் அணி கலந்து கொண்ட அரங்கில் 5.12.2022 கலீபா இன்டர்நெஷனல் ஸ்டேடியத்தில் ரசிக்க வந்த ஜப்பான் நாட்டினர் போட்டி முடிந்ததும் சென்று விடாது அரங்கில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து தங்கள் கொண்டுவந்த பெரிய, பெரிய பைகளில் பெருக்கி எடுத்துச் சென்று அதற்காகான வெளியே வைக்கப் பட்ட தொட்டில்களில் போட்டனர். அத்துடன் ஜப்பான் அணியினர் தங்கள் உடை மாற்றும் அறையினை போட்டி முடிந்து வெளியேறியபோது அங்குள்ள அறையினை சுத்தம் செய்து விட்டுத்தான் சென்றனர் என்பது மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டிய பண்பாடு தானே!

5)                  இஸ்லாம் ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் கலந்து கொள்கிற விளையாட்டினை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் பாலியல் குற்றங்களுக்கு ஆண்கள் ஆளாக நேரிடும்.

6)                   இஸ்லாம் பாலுணர்வை தூண்டுகிற விளையாட்டினை ஆதரிக்கவில்லை. உதாரணத்திற்கு பெண்கள் இறுக்கமாக உடை அணிந்து விளையாடுவதை.

7)                   சாலைகளை பாதசாரிகளுக்கு இடையூறு செய்யும் விளையாட்டை ஆதரிக்கவில்லை.

8)                  இஸ்லாமிய மார்க்க வழிபாடுகளுக்கு தடைபோடும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை.

9)                   கண்களை மூடிக்கொண்டு சில அணிகள், சிறப்பாக விளையாடும் அணிகளின் வீரர்கள் மீது அளவிற்கு அதிகமான தனிநபர் வழிபாடு(Hero worship) என்பதினை ஆதரிக்கவில்லை.

10)               இன வேறுபாடு காட்டும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை. அதேபோன்று ஆதிக்க உணர்வு காட்டும் விளையாட்டினை ஆதரிக்கவில்லை. உங்களுக்கெல்லாம் தெரியும் மூன்று முறை உலக ஹெவி வைட் குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த கேஷியஸ் கிளே என்ற முகமது அலி என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர். 1967ம் ஆண்டு அமெரிக்க கொள்கைப்படி ஒவ்வொரு அமெரிக்கனும் ராணுவத்தில் ஒரு முறை பணியாற்றியிருக்க வேண்டும். அதன் படி அவரை வியட்நாம் யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டது. அப்போது முகமது அலி உலக குத்துச் சண்டையில் வெற்றி பெற்றிந்தார். அதனை முகமது அலி, 'நான் ஒரு கருப்பு இனத்தவன், எங்கள் மக்களுக்கே இன்னும் சம உரிமை அந்தஸ்து கொடுக்கவில்லை, அத்துடன் அநியாயமாக அப்பாவி வியட்நாம் மக்கள் மீது அமெரிக்க ஆதிக்கத்தினை காட்டுவதிற்காக தொடுக்கப் பட்ட யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாது’ என்று மறுத்து விட்டார். அதன் பலன் குத்துச் சண்டை கழகம் அவருடைய பட்டத்தினை பிடுங்கியது. அவருக்கு 5 வருட நன்னடத்தை சிறை தண்டனையும், பத்தாயிரம் டாலர் அபராதமும் 4 வருடம் விளையாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற விதிகளுடன் தண்டனை விதிக்கப் பட்டது. அந்தக் காலம் முடிந்ததும் 1971ம் ஆண்டு மறுபடியும் குத்துச் சண்டையில் கலந்து கொண்டு வெற்றி கொண்டார் என்பது எவ்வாறெல்லாம் ஒரு இஸ்லாமியர் விளையாட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்டவில்லையா?.

 

ஆகவே இஸ்லாம் விளையாட்டினை வெறுக்கக் கூடியது, இஸ்லாமியருக்கும் விளையாட்டிற்கும் மலைக்கும், மடுவுக்கும் கொண்டது  இல்லை என்பதினை இஸ்லாமிய கத்தார் நாட்டில் 2022ல் நடந்த உலக கால் பந்தாட்ட போட்டி உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டுகிறது என்று சொன்னால் யாரும் மறுக்க முடியுமா?

 

No comments:

Post a Comment