Sunday 26 February, 2012

காயல் கடற்கரை நகர்: என் எண்ண அலைகள்!

நான் சென்னை புதுக்கல்லூரியில் 1966-1969 வருடங்களில் விடுதியில் தங்கி படித்தபோது எங்களுடன் அஹ்மத் தம்பி, புகாரி, மொஹிதீன் அப்துல் காதர் (மைனாகார்), செய்யது அப்துல் காதர், வெள்ளைத்தம்பி, லபீப் ஆகியோர் படித்தனர். எங்கள் கல்லூரியில் முதன் முதலில் திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தினை புகாரியும், நானும் சேர்ந்து ஆரம்பித்தோம். அப்போது புகாரி மூலம் காயல்பட்டண மக்கள் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என அறிந்தேன்.

1983 ஆம் வருடம் நான் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பியாக இருந்தபோது திருச்செந்தூர் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. காயல்பட்டணம் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற தி.மு.கவிற்கும், அ.தி.மு.கவிற்கும் கடும்போட்டி இருந்தது. காயல் நகரும், புன்னக்காயலும்தான் பதட்டமான இடங்களாக அறியப்பட்டு கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கல்லூரி நண்பர் மைனாகாரை காயல் நகர் சென்றபோது சந்தித்தேன். அவர் நண்பர் புகாரி சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டதாகவும், அவர் நினைவாக கடற்கரை அருகில் ஒரு நூலகம் [YUF] அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அங்கே சென்று நூலகத்தினைப் பார்த்து பரவசப்பட்டேன்.

தேர்தல் நேரத்தில் இரண்டு சம்பவங்கள் காயல் நகரில் நடந்ததை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு சவுக்கில் தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன், லீக் தலைவர் அப்துல் சமது ஆகியோர் பேச வந்திருந்தனர். கடற்கரை ஓரம் அ.தி.மு.க கூட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்தது. அ.தி.மு.க. முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொடுத்த தவறான தகவல் பேரில் முதல்வர் வாகனம் தி.மு.க கூட்டம் நடக்கும் சவுக் சந்தில் நுழைந்து விட்டது. கூட்டத்தில் இருந்த தி.மு.க. இளைஞர்கள் முதல்வர் வாகனம் மீது கல்வீச ஆரம்பித்து விட்டார்கள். தவறான பாதைக்கு வந்துவிட்டோம் என்பதனை உணர்ந்த எம்.ஜி.ஆர். உடனே காரை ரிவேர்ஸ் எடுக்கச் சொல்லி அ.தி.மு.க. கூட்டம் நடக்கின்ற இடத்திற்கு வந்து விட்டார்.

கல்வீச்சு சம்பவத்தினை கேள்விபட்டு கொதிப்படைந்த கட்சி தொண்டர்களை அங்கிருந்த கீழக்கரை தொழில் அதிபர் பி.எஸ்.ஏ. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அமைதிப்படுத்தினார். இல்லையென்றால் அன்று காயல் நகர் அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.

தேர்தல் முதல்நாள் இரவு காயல் வந்த அ.தி.மு.க அமைச்சர் குழந்தைவேலு குழுவினருக்கும், தி.மு.க.வை சார்ந்த வைகோ, கே.பி. கந்தசாமி குழுவினருக்கும் கடைத்தெருவில் தகராறு ஏற்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பதட்டத்தினை தடுப்பதற்காக நானும் அப்போது என்னோடு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி - காஷ்மீரைச் சார்ந்த - மகபூப் ஆலமும், அங்கு தங்குவதாக முடிவு செய்தோம். ஊர் பெரியவர்கள் எல்.கே.எஸ். வீட்டில் மேல்மாடியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

1985 ஆம் ஆண்டு நான் உதகை மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி. ஆக பணியாற்றிய போது ஹாங்காங் சென்றேன். என் கல்லூரி நண்பர் கீழக்கரையினைச் சார்ந்த முகமது இர்பான் ஒருநாள் இரவு காயல் மெஸ்ஸில் சாப்பிடலாம் வாருங்கள் என அழைத்துச் சென்றார். அங்கே முகமது அலி ஜின்னா என்ற காயல் நகரினைச் சார்ந்தவர் பார்த்து, ' சார் நீங்கள் மட்டும் டி.எஸ்.பி. யாக இல்லை என்றால் 1983 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க ஜெயித்து இருக்கும் என்ற ஆதங்கத்தினை தெரிவித்தார். இர்பானிடம் விசாரித்ததில் அவர் டி.எம்.கே. தீவிர தொண்டர் என்றார். வெளி நாட்டில் இருந்தாலும் தனது கட்சியில் எவ்வாறு பிடிப்புடன் இருக்கிறார் அவர் என்பது காட்டியது.

1988 ஆம் ஆண்டு நான் தருமபுரி எஸ்.பி.யாக இருந்தபோது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக வந்த இந்திய பிரதமர் மறைந்த ராஜீவ் காந்திக்கு மாநில பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருடன் பயணம் மேற்கொண்டேன். அவர் காயல் நகருக்கு குரும்பூர் வழியாக வந்தார். அப்போது அவருக்கு மௌலானா ஆசாத் மைதானத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த உற்சாக வரவேற்ப்பினைப் பார்த்து அங்குள்ள மக்களிடம் வாஞ்சையுடன் கலந்துரையாடியது அவர் இஸ்லாமியர் மீது எவ்வாறு பற்றுக் கொண்டுருந்தார் என்பதினைக் காட்டியது.

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடுமையாக ஈடுபட்டதிற்கு தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகள் புலிகளுக்கு இந்தியாவில் தடை இருந்தாலும் ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சார்ந்த காயல் மகபூப் மட்டும் தைரியமாக, விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா கிழக்கு மாவட்டத்தில் காத்தான்குடி கிராமத்தில் அதிகாலை ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கண்முன் தெரியாது சுட்டு வீழ்த்தினார்கள். கிழக்கு மாவட்ட மக்களுக்கு குடியுரிமைக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது யாழ்ப்பான விடுதலைப் புலிகள்தான் என்று அப்போதைய எம்.பி. மதிப்புமிகு கே.டி. கோசல்ராம் சொன்னதாக பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினை நடுவழியில் இறக்கிவிட்ட தோழமை கட்சிப் பற்றியும், அதற்கு தனிச் சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், மற்ற சமுதாய இயக்கங்களின் தேர்தல் நிலைப்பாடு சம்பந்தமாக நான் ஒரு கட்டுரையினை, 'ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே' என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதனைப் படித்த லீக் செயலாளர் தம்பி அபூபக்கர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட விளக்கத்தினைத் தந்து விட்டு, கூடிய விரைவிலே தாங்கள் தேர்தல் கமிசனில் அங்கீகாரம் பெற்று விடுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பியும் தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தார். அதன்படியே நடக்கின்ற உத்திரப் பிரதேச தேர்தலில் லீக் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

வியாபாரத்தில் முன்னோடி:

காயல் நகர மக்கள் பல்வேறு நாடுகளிலும், சென்னை போன்ற நகரங்களிலும் புகழ் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னை நகரில் நகை வியாபாரத்தில் நாணயமாக பல்வேறு போட்டிகளுக்கிடையே எல்.கே.எஸ்ஸும், வாவு சன்ஸ் போன்றோர் புகழ் பெற்று இருக்கிறார்கள். நண்பர் எல்.கே.எஸ் செய்யித் அஹ்மத் வியாபாரத்தில் சிறந்து விளங்குவதுடன், கல்விச் சேவையிலும் முன்னோடியாக இருக்கின்றார் என்பது அவர் நடத்தும் பள்ளிக் கூடத்திலும், புதுக் கல்லூரி நலனிலும் மற்றும் பல்வேறு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு உதவுதலிலும் அக்கறை காட்டுகிறார்.

அதேபோன்று திருச்சியில் உள்ள டாக்டர் அஷ்ரபும் சளைத்தவரல்ல என்று கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வருகின்றார் என்று நான் திருச்சியில் எஸ்.பி.யாக 1989 ஆம் ஆண்டு இருந்தபோது தெரிந்து கொண்டேன்.

வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இ.டி.ஏ.யில் ஆடிட்டராகவும், கணினி தொழிலில் வல்லவராகவும் இருக்கும் புகாரியை அறிந்து இருப்பார்கள். அவர் சிறந்த மேலாளர் மட்டுமல்ல; மாறாக மார்க்கத்தில் பற்றுள்ளவர் என்பதினை சில சமயங்களில் அவர் அனுப்பும் மின் அஞ்சல் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் மிகவும் பிசியானார் என்று ஹஜ் கமிட்டி கட்டிடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்த எனக்கு அவருக்கு நிமிடத்திற்கு ஒருமுறை வரும் போனில் இருந்து அறிந்து கொண்டேன்.

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள்:

காயல் நகரில் நுழையும் முன்பு ஒரு பெரிய விளையாட்டுத் திடல் இருக்கும். அதில் நூலகமும் உண்டு. வருடம் ஒருமுறை மௌலானா அபுல் கலாம் நினைவு கால்பந்து விளையாட்டு இந்திய அளவில் நடத்துவார்கள். எங்களூர் இளையான்குடி அணியும் அதில் கலந்து கொள்ளும். நான் 1990 இல் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்தபோது அப்படி நடந்த போட்டிக்கு பரிசு கொடுத்துள்ளேன். அந்தப் பழக்கம்தான் தம்புச் செட்டி தெருவில் கணினி சர்வீஸ் வைத்திருக்கும் தம்பி சக்கரியாவும் ஞாயிறு காலைதோறும் மெரினா பீச்சில் வாலிபால் விளையாட்டில் ஈடுபட்டு பின்பற்றுகிறார்.

மார்க்கப் பற்றுள்ளவர்கள்:

காயல் நகர மக்கள் ஈமானை, நோன்பினைத் தவற விடாதவர்கள். இளைஞர்கள் ஆனாலும் குறுந்தாடியுடனும் தலையில் தொப்பியுடனும்தான் காணலாம். வருடந்தோறும் புஹாரி சரிப் ஒரு திருவிழா போன்று அந்த மக்கள் அனைவரும் காயல் நகருக்கு வருவதினைப் பார்க்கலாம்.

பொது சேவை:

மருத்துவமனை, கல்வி நிலையம், அரபி மதரசா போன்ற அமைப்புகள் அங்கு மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமீபத்தில் (பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில்) கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் காயல் நகர் பஸ் நிலையம் எதிரே நோட்டீஸ் விநியோகித்திருந்து கொண்டிருந்ததாகவும், அதனை அறிந்த பொதுமக்கள் தினந்தோறும் எட்டு மணிக்கு மேல் மின்வெட்டு மூலம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நீங்கள் கூடங்குளம் மின் உற்பத்தி வேண்டாம் என்கிறீர்கள், எங்களுக்கு மின் உற்பத்தித் தேவை என்று விரட்டியதாக செய்தி அறிந்து எப்படி காயல் நகர் மக்கள் பொது நோக்குடன் நடக்கின்றார்கள் என பாராட்ட முடிந்தது.

காயல் நகர் மக்கள் சிறப்புடன் விளங்க இரு கையேந்தி எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ கேட்டு விடை பெறுகிறேன்.

2 comments:

  1. காயல் நகர் மக்கள் சிறப்புடன் விளங்க இரு கையேந்தி எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ கேட்டு விடை பெறுகிறேன்.

    ஆமீன்

    ReplyDelete
  2. காயல் நகரின் பல்வேறுசிறப்புக்களையும்,அவ்வூரின் தொழிழதிபர்களின் சமுக சேவைகள்பற்றி இந்த வலைப்பூ வழி தெரிந்துக்கொண்டேன்.நன்றி

    ReplyDelete