(ஏ.பீ.முகமது அலி,
ஐ.பீ.எஸ்(ஓ)
கிராமங்களில்
ஒரு பழமொழி சொல்வார்கள், 'சாது மிரண்டால் காடு
கொள்ளாது' என்று, எதனால் என்றால் பசு போன்று அமைதியாக
இருப்பவர்கள் கூ'ட கோபம்
வந்தால் கொந்தளிப்பார்களாம்.'.
பெண்கள் அமைதியானவர்கள் தான், ஆனால் தலைக்கு ஏறினால் கொப்பளிக்கவும் செய்வார்கள். கற்புக்கரசி கண்ணகி தனது கணவன் கோவலன்
கொலைக்கு நீதிகேட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் முறையிட்டு மதுரை தீக்கிரையாகியது இலக்கிய வரலாறு.புத்தமத பிக்குகள் காவி உடை அணிந்து
சாதுவாக ஜப்பான், சீனாவில், தாய்லாந்து, பிலிப்பைன் போன்ற நாடுகளில் திரிவார்கள். ஆனால் அவர்கள் தான் தற்காப்பு கலைகளான
ஜூடோ, கராத்தே, ஜூஜூட்ஜு, அகிடொ, கெண்டு, கியோடோ போன்ற கலைகளில் வல்லுநர்கள். தாய்லாந்தில் புத்தபிக்குகள் சீரும் புலியைக்கூட சங்கிலிபோட்டு நாய்போல அழைத்து செல்வதினை பார்த்திருப்பீர்கள். ஆகவே நாம் யாரையும்
சுலபமாக எடை போடக்கூடாது. மக்கள்
அமைதி விரும்பிகள் தான், அதற்காக அவர்களை ஆட்சியாளர்கள் குறைத்து எடைபோடக்கூடாது. எப்படி நல்ல பாம்பு என்
வழி தனி வழி என்று
சாதுவாக சென்று கொண்டிருந்ததினை தடங்கல் செய்தால் படம் எடுத்து ஆடுமோ
அதேபோன்று சீறுவார்கள். சமீப காலங்களில் நம்மை
சுற்றியுள்ள நாடுகளில் மக்கள் வெகுண்டு எழுந்து ஆட்சி மாற்றத்தினை கொண்டு வந்தார்கள் என்பதினை விளக்கி சொல்வதிற்க்காக இந்த
கட்டுரையினை வடிவமைத்துள்ளேன்.
இலங்கையில் 2924ம் ஆண்டும் நடந்த
புரட்சியினை 'அரகாலயா' என்று அழைக்கின்றனர். அங்கே ஏற்பட்ட பொருளாதார சீரழிவு, விலைவாசி ஏற்றம், மின்சார தடைகள், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வரலாறு காணா தட்டுப்பாடு ஒன்றே
சேர்ந்தது. அங்கே அரியணையில் இருந்தது முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே இளைய சகோதரர் கோட்டாபய
ராஜபக்சேயும் அவர் குடும்ப உறுப்பினர்கள்
தான். மக்கள்
குப்பியெரிய அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தினர். ஆகவே 'கோரேவர் ராஜபக்சே' ராஜபக்சேயே வெளியேறுங்கள் என்று கோஷமிட்டனர். அதனை தாங்கிக் கொள்ளாத
அரசு அவசர நிலை பிரகடனம்
செய்தது. அதன் பிறகும் போராட்டம்
நிற்கவில்லை. ஆகவே ராஜபக்சே குடும்ப
உறுப்பினர் ராஜினாமா செய்தனர்.
போராட்டத்தின் உச்ச கட்டமாக ராஜபக்சே
நாட்டை விட்டு வெளியேறினார். மற்ற குடும்ப உறுப்பினர்களும்
துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்தனர். அதன்
பிறகு 56 வயது நிரம்பிய JVP இடதுசாரி
கொள்கைக் கொண்ட அனுரா குமாரா தசைநாயகா ஜனாதிபதி பதவி ஏறினார். நிலைமைசீராகி,
கொந்தளிப்பு நின்றது.
இந்திய பக்கத்து நாடான பங்களா தேசம் 1971 பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடான பின்னர்
முஜிபுர் ரஹ்மான் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு, பல
ஆட்சி மாற்றம் வந்தது அனைவருக்கும் தெரியும். கடைசியாக முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேய்க் ஹஸீனா
2009ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தார். அவர் சர்வாதிகாரி போல
எதிர் கட்சி தலைவர்களை எதிரி கட்சியினர் போல நினைத்து அதன்
தலைவர்களை கைது செய்தும், அலி
அன்காண் முஜாஹித், சலாவுதீன் சவுத்ரி, ஜமாஅத் தலைவர்கள் உட்பட தூக்கு
மேடைக்கு அனுப்பவும் செய்தார். எதிர் கட்சி தலைவர்களை பழி வாங்கும் கொள்கையிலே
ஆட்சி நடத்தியதால் அந்த நாட்டின் பொருளாதாரம்
சீரழிந்தது, வேலையின்மை தலை விரித்தாடியது. ஆங்காங்கே
அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தது. அதனை ராணுவம் கொண்டு
அடக்க முயன்றார். அவர்கள் அடாவடியால் பலர் கொல்லப்பட்டனர், அதனை
'ஜூலை கொலைகள்' என்று வர்ணித்த உலக மனித உரிமை
ஆணையமும், ரைட் ‘ என்ற
சர்வதேச அமைப்பும் வர்ணித்தது. ஆகஸ்ட் மாதம் 'ஒத்துழையாமை இயக்கம்' ஆரம்பித்தனர். அதன் பிறகும் ராணுவ
நடவடிக்கை நிற்கவில்லை. ஷைக் ஹஸீனாவின் அடக்குமுறை
வெறுத்த பாதுகாப்பு படையினரும், போராட்டக் காரர்களுடன்
ஒத்துழைப்பு செய்ததால், வேறு வழியில்லை என்று
விமானத்தில் பறந்து டெல்லி வந்து அடைக்கலமாகியுள்ளார்.
ஆவர்
ஆட்சி பீடத்தில் இருந்தவரை 'மைக்ரோ பைனான்ஸ்' என்ற கிராமப்புற மக்கள்
முன்னேற்றத்திற்காக கிராம வங்கிகள் ஆங்காங்கே அமைத்து பாடுபட்ட யூனுஸ் அவர்கள் நோபல் பரிசு 2006ம் ஆண்டு பெற்றும்
ஆட்சியாளர்களின் சர்வாதிகார நடவடிக்கையால் பங்களா தேசுக்குள் வர முடியவில்லை. ஆகவே
அவரை அழைத்து ராணுவ தளபதிகள் ஆதரவுடனும், மற்ற இளம் தலைவர்கள்
உதவியுடனும் தற்காலிக ஆட்சி நடத்துகிறார். அடுத்த 2026 பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப் படும் என்றும் அறிவித்ததால் ஆட்சி அமைதியாக நடந்து கொண்டுள்ளது.
இந்தியாவின் வடக்கே இமாசல மலைத்தொடரில், உலகப் புகழ் கொண்ட எவரெஸ்ட் மலை சிகரத்தினை உள்ளடக்கிய,
உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாள
நாட்டில் 2025ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 8ந்தேதி இளைஞர்கள் 'Gen Z' என்ற புரட்சி செய்தனர்.
அதற்குக் காரணங்கள்:
1) அரசின்
தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர்.
2) சாதாரண
குடிமகன் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தான்.
3) வேலையின்மை
,அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு குறைந்த வருவாய் நோக்கி படையெடுத்தான்.
4) அரசில்
ஊழல் அதிகரித்தது.
5) அதனையெல்லாம்
இளைஞர்கள் தங்களது சமூக வலை தலங்களான
பேஸ் புக், டிக் டாக், இன்ஸ்டாகிராம்,
யூடூப், வாட்ஸப் போன்றவைகள் மூலம் மற்றவர்களுக்கு விளம்பரப் படுத்துவதினை கட்டுப் படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.
ஆகவே
போராட்டங்கள் வெடித்தன. அதனை கட்டுப் படுத்த
ராணுவ நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதில் சில உயிர் பலியானதைனை
கண்டு போராட்டம் தீவிரமானது. அதனை கட்டுக்கு கொண்டுவர
தடுப்பு நடவடிக்கை ராணுவ மந்திரி 'ரமேஷ் லக்கர்' எடுத்தார். அதில் 51 பேர்கள் கொல்லப் பட்டனர். அதற்கு ஒரு இரங்கல் அல்லது
இழப்பீடு கூட அறிவிக்கப் படவில்லையென
அறிந்து இளைஞர்கள் வெகுண்டு எழுந்தனர். போராட்டம் தீவிரமானதால பிரதமர் சர்மா ஒலி மற்றும் மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
அதன்
பின்பு போராட்டம் அடங்கியது. போராட்ட தலைவர்கள் கூடி ஆலோசித்து தற்காலிய
அரசு தலைவராக சுசீலா கார்க்கி தேர்ந்து எடுத்தனர். அதற்கு காரணம் நேபாளத்தில் முதன் முதல் பெண் தலைமை நீதிபதியாக
பணியாற்றிய அவர் ஊழல் குற்றச் சாட்டுகளில் கடுமையான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் அப்போதைய காவல் துறை இயக்குனர் நியமனம்
செல்லாது என்று அறிவித்ததும், தற்போதைய செய்தி, ஒளி பரப்பு அமைச்சர்
ஜெயப் பிரகாசுக்கு ஊழல் குற்றச் சாட்டில்
தண்டனையும் அடங்கும்.
அவர்
பதவியேற்றதுடன் அறிவித்த முதல் அறிவிப்பு 2026ம் ஆண்டு மார்ச்
மாதம் நிச்சயமாக, நியாயமாக தேர்தல் நடக்கும் என்ற அறிவிப்பு தான்.
தற்போது நேபாளில் அமைதி திரும்பியுள்ளது.
தாய்லாந்து நாட்டிற்கும், பக்கத்துக்கு நாடான கம்போடியாவிற்கும் எல்லைத் தகராறு பல ஆண்டுகளாக இருந்து
வருகிறது. முன்னாள் பிரதமர் 'தக்சின் சீனாவத்ரா' ஓராண்டு சிறை தண்டனை அணுவிக்கின்றார்.
அவருடைய சகோதரி 'பிடோங்கட்ரான்' பிரதமர் பொறுப்பேற்றார். அவர் ஒரு நல்லெண்ணத்துடன்
கம்போடியா முன்னாள் அதிபரும், தற்போதைய செனட் தலைவருமான கம்போடியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் படும் 'குன் சென்னை' தொலை
தொடர்பில் தொடர்பு கொண்டு காலங்காலமாக நடந்து வரும் எல்லை சண்டையினை எப்படி தீர்த்துக் கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுவிட்டார். அதனை அறிந்த மக்கள்
ஒரு பெண் பிரதமராக இருப்பதினால்
மன உறுதியுடனும், பாதுகாப்பு படையினை ஊக்குவிப்பதிற்குப் பதிலாக கோழைத்தனமாக எதிரியிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டப் பட்டு அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதனை கட்டுப் படுத்த
வழியில்லாமல் பதவி விலகி, தற்போது
'சார்னாவிரகள்' பிரதமராக பதவியேற்றார்.
பிலிப்பைன் நாட்டின் தலைநகரான மணிலாவில் வரலாறு காணா வெள்ளம் 2025ம்
ஆண்டு ஏற்பட்டு வீடுகளில், தெருக்களில் புகுந்து வெள்ளம் வடியாமல் மக்கள் சேற்றிலும், சகதியிலும் வாழ்ந்தனர். அதற்குக் காரணம் வெள்ள தடுப்பிற்கான தற்காப்பு நடவடிக்கையிற்கு ஒதுக்கிய பணத்தினை ஆட்சியாளர்கள், கான்டராக்டர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு பொதுப்பணி வேலையினை அரைகுறையாக விட்டுவிட்டதால் சகதியில் மக்கள் மிகவும் சிரமப் பட்டனர். 2400 ஒப்பந்த பொதுப்பணி வேலை கொடுக்கப் பட்டதில்
15 ஒப்பந்தக்காரர்கள் மட்டும் தான் பதிவு செய்யப்
பட்டவர்கள். 7,921 கோடிகள் வெள்ள தடுப்பிற்காக கொடுக்கப் பட்டும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கொள்ளையடித்ததினை அறிந்து மக்கள் வெகுண்டு எழுந்து அரசு அலுவலகங்கள் மீது
சேரும், சகதியினையும் அள்ளி வீசினர். இதில் முன்னாள் ஜனாதிபதி 'ரோட்ரிக்ஸ் குடேறி' போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறேன் என்று அதிகார வரம்பு மீறி பல கொலை
நடவடிக்கையினை எடுத்ததும் சுட்டிக் காட்டாமல் இருக்கவில்லை. இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் பல கட்டிடங்கள் மண்ணில்
புதைந்து வீடு இல்லா நிலையும்,
பல உயிரையும் வாங்கியது. ஆனால் ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
மேக வெடிப்பால் ஏற்படுகிறதாம். ஆனால் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து மலைகளில் உள்ள மரங்களை வெட்டி
வீடுகளும், தங்கும் விடுதிகளும் அமைத்ததால் ஏற்பட்ட மனித தவறுகள் என்று
கூறுகிறது. பிலிப்பைனில் மக்கள் சேறையும், சகதியினையும் அடித்த செய்தி ஒரு பக்கம் ஆனால்
அதற்கு மேக வெடிப்பினை சொல்லும்
காரணம் மறு பக்கம்.
மற்றொரு ஆசிய முஸ்லிம் நாடான
இந்தோனேசியா அடிக்கடி பூகம்பத்தாலும், எரிமலையாலும், சுனாமியாலும் பாதிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும். பொருளாதார சீரழிவு அதிகமாகி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். அங்குள்ள
சாதாரண குடிமகன் கொந்தளித்துக் கொண்டு இருந்தான். 2005ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 25ந்தேதி மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உணவு
டெலிவரி கொடுக்கும் 'அபான் குளியவான்' என்ற வாலிபர் காவல்
துறை வாகனத்தால் அடிபட்டு பலியானது தீயாக மாறியது. எப்படி துனிசியா அரசிற்கு எதிராக ரோட்டோரத்தில் பழவண்டி வைத்திருந்த முஹம்மத் பவோச்சி 2010 டிசம்பர் மாதம் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டவர் 17ந்தேதி தீக்குளித்து உயிரை விட்டதால் புரட்சியாக மாறி ஆட்சி மாற்றம்
ஏற்பட்டதோ அதேபோன்று அபான் இறப்பிற்கு பின்பு மக்கள் எரிமலையாக வெடித்தனர். அப்போது சட்டமன்றத்தில் அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு மானியம்
மற்ற சலுகைகளை உயர்த்த விவாதம் நடந்து கொண்டிருந்தது பார்த்து போராட்டக்காரர்கள் குப்பி எரிய உங்களுக்கு கொண்டாட்டமா
என்று கொதித்து
எழுந்து சட்டசபை, அரசு மற்றும் காவல்
துறை அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். அதனை
பயன் படுத்தி சமூக விரோதிகள் வியாபார
நிலையங்களை வேட்டையாடினர். எப்படி 1998ம் ஆண்டு அதிபர்
'சுகர்தோ' ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி செய்தார்களோ அதேபோன்று இருந்தது. அதன் பிறகு முன்னாள்
ராணுவ தளபதியான 'பிராபோ' அனைவராலும் ஒத்துக் கொள்ளப் பட்டு ஆட்சி நடத்தி அமைதியினை நிலை நாட்டினார்.
நேபாலைப் போலத்தான் பக்கத்துக்கு ஐலாண்ட் நாடான மாலத்தீவிலும் பொருளாதாரம் சீர் கெட்டு இருப்பதனை
வெளிச்சம் போட்டு காட்டுகின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது இரண்டு தினங்கள்
மீது கட்டுப்பாடு விதிக்கப் பட்ட மசோதா நிறைவேறியது
கண்டு மக்கள் குமுறிக் கொண்டுள்ளனர் அது எப்போது எரிமலையாக
மாறும் என்று சொல்லமுடியாது.
இந்தியாவில் 1971ம் ஆண்டு பங்களா
தேஸ் வெற்றிக்குப் பின்பு பிரதமர் இந்திரா காந்தியினை இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்டார். ஆனால் அவருடைய கர்வம் அவர் இளைய மகன்
சஞ்சய் காந்தி போட்ட தூபத்தால் தலைக்கேறி 1975ம் ஆண்டு எமெர்ஜென்சி
கொண்டு வரப்பட்டது, இளைய மகன் அடாவடியால்
மக்கள் தொகையினை கட்டுப் படுத்த கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை செய்யப் பட்டது.
நான் மதுரை ரூரல்
டி.எஸ்.பியாக 1976ம்
ஆண்டு இருக்கும்போது தமிழ் நாட்டில் தி.மு.க
அரசு
இந்திரா அரசால் கலைக்கப் பட்ட பிறகு அப்போதைய
ஆளுநரின் ஆலோசகர் ‘டவே’ அவர்கள் மதுரை
வந்தார். அவர் மதுரை-ஒத்தக்கடை
ரோட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு
விஜயம் செய்து, மக்கள் குறைகள் கேட்டார். அங்கே இருந்த ஒரு 25வயது மதிக்கத்தக்க இளைஞர்
ஒருவர் ஆலோசகரிடம் தனது பனியனை தூக்கி,
'எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, ஆனால் என்னை வலுக்கட்டாயமாகி வண்டியில் மற்றவர்களுடன் ஏற்றி குடும்ப கட்டுப் பாடு செய்து விட்டார்கள்,
அதன் தழும்பு பாருங்கள் என்று இடது வயிற்றுக்கு கீழே
காட்டியதும், ஆலோசகர் ஒரு நிமிடம் மெளனமாக
இருந்து விட்டு ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டார் என்றால் பாருங்களேன், எமெர்ஜென்சியின் கொடுமையினை. புது டெல்லியில் துர்க்மேன்
கேட்டில் 1976ம் ஆண்டு மே 31ம்
தேதி 10 புல்டோசர்கள் பழைய கட்டிடங்கள் எல்லாம்
ஆக்கிரமிப்பு செய்தவை என்று இடித்து தள்ளப் பட்டது. அதனை எதிர்த்து போராடியவர்கள்
கொல்லப் பட்டனர் என்பதும் வரலாறு. ஆகவே எமெர்ஜென்சி கெடு
பிடிகளைக் கண்ட மக்கள் சுதந்திர
போராட்ட தலைவரும், பூதான இயக்க ஆதரவாளருமான ஜெயபிரகாஷ் நாராயணன், தொழிற்சங்க தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போனற தலைவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அதன் பின்பு எமெர்ஜெண்சி
விலக்கிக் கொள்ளப் பட்டு நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி தோல்வியடைந்து, ஜனதா அரசு வந்ததும்
ஒரு வரலாறு. ஆனால் அது போன்ற ஒரு
மக்கள் எழுச்சி இந்தியாவில் வருவது குதிரைக் கொம்புதான்.
இருந்தாலும் இந்தியாவில் ஆட்சி நடத்துகின்ற அரசுகள் தங்களை விதவிதமான தலையில் கிரீடமும், கலர் கலரான தலைப்பாவும்,
உடையும் அணிந்து, படகு வீடு போன்ற கார்களிலும்,
சொகுசு விமானங்களிலும் பயணம் செய்வதால் தங்களை முடிசூடா மன்னர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால் நல்லாட்சி நடக்கவில்லை என்றால் மக்கள் எரிமலையாக வெடித்துக் கிளம்புவார்கள் என்று மனதில் கொண்டு அடக்குமுறை, ஆணவம், ஊழல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஆட்சி நடத்தாமல் நீதமாக, நியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்றால் சரிதானே!
No comments:
Post a Comment