Wednesday 17 April, 2024

தலையீடு இல்லா தேர்தல் சாத்தியமா?

 


(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ எஸ்.()

ஒரு நாட்டின் தேர்தல் அந்த நாட்டின் மக்கள் தலை விதியினை நிர்ணயிக்கும்; அந்த நாட்டில் குடியாட்சி வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா அல்லது சர்வாதிகார ஆட்சி வேண்டுமா என்பதினை நிர்ணயிக்கப்படும் முயற்சியே ஆகும். முன்பெல்லாம் முடியாட்சி இருந்தது. அதன் படி 'மன்னர் எவ்வழி அதுபோன்றே மக்கள் வழி' என்று சொல்வார்கள். ஆனால் 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் எப்போது அணுகுண்டு வீச்சில் அழிவு ஏற்பட்டடுதோ அப்போதே முடிவிற்கும் வந்து மறுபடியும் ஒரு பேரழிவுப்  போர் வரக்கூடாது என்ற பெரும் முயற்சியில் உலக நாடுகள் மக்களாட்சிக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் மக்களாட்சியிலும் சில கொடுங்கோலர்கள் தலைவர்களாகி சொல்லவொண்ணா துன்பம் ஏற்படுத்தினர். ஆனால் அவர்களையும் மற்ற நாடுகளின் முயற்சியால் பதவிறக்கம் செய்தனர். தற்போது நான் மேலே குறிப்பிட்ட மூன்று விதமான ஆட்சிகள் தான் உள்ளன. தேர்தல் மூலம் குடியாட்சியையும், முடியாட்சியையும் மக்கள் அமைக்கின்றனர். அந்த தேர்தல் நியாயமாகவும், எந்த தலைடையீடுகள் இல்லாமல் நடக்கின்றனவா என்பதினை இந்த கட்டுரையில் காணலாம்.

            உலகில் மிக வலிமையான ஜனநாயக நாடு என்று அழைக்கப் படும் அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், அன்றைய ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் தோல்வி முகம் காணும்போது எப்படியாவது தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டுமென்று பல மாநிலங்களின் ஆளுநர்களுக்கு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தும் அவர்கள் மறுத்ததின் பேரில், அன்றைய துணை ஜனாதிபதி மைக் பென்சிடம் சென்ட் சபையில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் மறுத்ததுடன், தனது சொந்த நாட்டின் பாராளுமன்றத்தினையே தனது ஆதரவாளர்களைக் கொண்டு தாக்கியும் தோல்வி அடைந்ததும் நீங்கள் அறிவீர்கள்.

            ரஷ்யா கம்யூனிஸ்ட் நாட்டில் ஜனாதிபதி புடின் 2000ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கிறார். ரஷ்யாவிற்கும், பக்கத்துக்கு நாடான உக்ரைனுக்கும் ஒரு வருடமாக போர் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச்சில் நடந்த தேர்தலில் தனக்கு எதிரான மாற்றுக் கட்சி வேட்பாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஜெயிலில் அடக்கியும், அதன் தலைவர்கள் என்று சொல்லக் கூடிய அலெக்ஸி நாவலனி போன்றவர்கள் மர்மமான முறையில் இறக்க வைத்தும் மறுபடியும் தான் தான் முடி சூடா மன்னன் என்று கூறுகிறார்.

            இது ஒரு புறமிருக்க எவ்வாறு வெளிநாடுகள் உள்நாட்டு தேர்தலில் தங்களுக்கு சாதகமான தலைவர்களும், கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டுமென்று அந்தந்த நாடுகளில் தங்களுடைய கைங்காரியங்களை காட்டின என்று பல உதாரணங்கள் மூலம் விளக்கலாமா?

1)      உங்களுக்குத் தெரியும் அமெரிக்காவும், பிடெல் காஸ்ட்ரோ தலைமையான கியூபாவும் பக்கத்துப் பக்கமான நாடுகள், ஆனால் அவர்கள் இருவருமே கீரியும், பாம்பும் போன்ற பகைமையானவர்கள். 1964ம் ஆண்டு கியூபாவில் நடந்த தேர்தலில் அன்றைய ஆளும் கட்சி எப்படியும் தோற்க வேண்டுமென்று, கியூபாவின் பக்கத்து நாடான பொலிவியாவின் துணையுடன் முயற்சி செய்தது.

2)      1966ம் ஆண்டு பொலிவியா நாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர் 'செகுறா' ஆதரவு கட்சி ஆட்சி பீடம் ஏறக்கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு பொலிவியா நாட்டின் ஜெனெரல் பாரின்டன் ஆதரவு அமைப்பிற்கு பொன்னும், பொருளும் கொடுத்தது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் தலைவர் 'செகுறா' வினையே கொல்லும் அளவிற்கு துணை போனதும் ஒரு வரலாறு.

3)      1962-1963ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் பக்கத்து நாடான கனடாவில் 'ஜான்' என்பவர் ஜனாதிபதியாக இருந்தார். அவர் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி கென்னடியுடன் நட்புடனில்லை. ஆகவே கனடா நாட்டின் எதிர்கட்சி வேட்பாளர் 'பியர்சனை' வெள்ளை மாளிகைக்கு அழைத்து தனி விருந்தும் கொடுத்தும், ஜானை தோற்கடிக்க தனது தனி செயலாளர் ஹாரிஸை மாற்று அலுவலில் கனடாவுக்கு அனுப்பியதினை ஒரு கட்டத்தில் 'ஹாரிசே' சொல்லியுள்ளார்.

4)      1970ம் ஆண்டு சிலி நாட்டின் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கும், அமெரிக்காவிற்கும் இரண்டாம் பொருத்தமாம். ஆகவே 1970ம் நடந்த தேர்தலில் மறுபடியும் கம்யூனிஸ்ட் தலைவர் 'அலென்டி' வரக்கூடாது என்று அவரைக் கடத்தி பின்பு

 மூன்று நாட்கள் கடந்த பின்பு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது ஒரு தோல்வியின் முயற்ச்சியே என்று அன்றைய அரசியல் ஆலோசகர் 'ஹென்றி கிசிங்கர்' அறிவித்திருப்பது அனறைய காலத்தின் 'cold war' என்ற நிழல் யுத்தத்தின் ஒரு அங்கமே.

5)      1971ம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து பங்களா தேசத்தினை விடுதலை செய்த பெருமை இந்தியாவினைச் சாரும். 1973ம் ஆண்டு நடந்த தேர்தலில் பங்களா தேச அவாமி கட்சிக்கு, ரசியா உதவி செய்ததாம்.

6)      1991ம் ஆண்டு அல்பேனியா நாட்டின் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அமெரிக்கா பண உதவி, வாகனங்கள், ஆலோசர்கள் வழங்கியது.

7)      ஜெர்மானிய நாட்டில் 40லட்சம் துருக்கியர் பிரஜையாக இருந்தனர். 2017ம் ஆண்டு ஜெர்மானிய நாட்டில் நடந்த தேர்தலில் அந்த துருக்கிய ஜெர்மானியர்களை 'கிரீன்' கட்சிக்கு ஓட்டுகளை போடுங்கள் என்றும் கூறியது வெளிப்படையான அந்நியர் தலையீடு தானே!

8)      2019ம் ஆண்டு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோவினை தோற்கடிக்க அமெரிக்கா எதிர்கட்சியினருக்கு பண உதவி செய்ததாக அந்த நாட்டின் உளவுத்துறை கூறியது. அதேபோன்று தான் 2021ம் தேர்தலிலும் அவரை தோற்கடிக்க சீனா உதவியதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

9)      2007ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த 'சர்கோசி' தான் தேர்தலில் வெற்றி பெறவும், லிபியாவின் ஜனாதிபதி கடாபி ஆட்சியில் நிலை நிறுத்த லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு மூன்று தடவை பயணம் மேற்கொண்டு காடாபியிடம் கையூட்டாக 200, 500 யூரோ கரன்சிகளை தனது விமானத்தில் கொண்டு சென்றாராம். ஆனால் அதற்கு மாறாக லிபியா ஜனாதிபதி பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்புடன் 2011ம் ஆண்டு கொல்லப் பட்டார் என்பது ஒரு துரோகத்தின் எடுத்துக்காட்டாகும்.

10)  சீன நாடு எப்போதுமே 'தைவான்' நாட்டினை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொல்லி வருகிறது. 2024ம் ஆண்டைய தேர்தலில் அன்றைய National Security Bureau' கட்சியினை தோற்கடிக்க எதிர் கட்சியான 'Mainland Affairs Council' கட்சிக்கு ஆதரவு கொடுத்து தனக்கு சார்பான முயற்சியில் ஈடுபட்டதும் ஒரு குற்ற சாட்டு தான்.

இதுவரை வெளி நாட்டு தேர்தலில் நடந்த குறுக்கீடுகளை உங்களுக்கு பட்டியலிட்டேன். தற்போது நமது நாட்டின் பொது தேர்தலைப் காணலாம். இந்திய நாடு 143 கோடி மக்களைக் கொண்ட ஜனநாயக நாடு. அதில் தேர்தலில் வாக்காளர்கள் மட்டும் 97 கோடிகள் உள்ளனர். முதன் முதலில் இந்திய தேர்தல் 25.10.1951ல் நடந்தது. இந்திய தேர்தலை ஒரு தலைமை தேர்தல் கமிஷனர், மற்றும் 2 கமிஷனர்கள். உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுக்க பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குழுவினர் இருந்தனர். சமீபத்தில்  மத்திய அரசால் 2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் படி பிரதமர், எதிர் கட்சி தலைவர்,மற்றுமொரு மத்திய மந்திரி குழு அடங்கும். அந்த குழு பரிந்துரைக்கப் பட்ட நபர் ஜனாதிபதியால் நியமிக்கப் படுகிறார். இந்த சட்ட திருத்தத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியினை நீக்கியது மத்திய அரசுக்கு சாதகமான  நபர்களை நியமிக்கத் தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

            ஒட்டுச் சீட்டு மூலம் வாக்களிப்பது 1990 வரை இருந்தது. அப்போது 10,000 ஆயிரம் டன் தாள்களில் அச்சிடுவதிற்கும், அதனை ஒட்டுச் சாவடிகள் வரை கொண்டு செல்வத்திற்கும் அதிகமான செலவு இருந்தது. மற்றும் பதிவான வாக்கு சீட்டு அடங்கிய பெட்டிகளை வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வத்திற்கும் கூடுதல் செலவு வந்தது. அந்த ஓட்டுக்களை எண்ணுவதிற்கும் பல நாட்கள் ஆகின.வாக்குச் சீட்டுகளில் மக்கள் கல்வி அறிவு குறைவாக இருந்ததால் செல்லாத வோட்டுகளும் அதிகமாகின. ஆகவே 1990ம் ஆண்டு இந்தியாவில் கணினி உபயோகம் அதிகமாக வந்ததால்-வோட்டு சீட்டுக்குப் பதிலாக கணினி மூலம் வாக்குப் பதிவு நடந்தால் என்ன என்று ஆலோசனையில் உதித்தது தான் EVM(Electronic voting machine)

            இந்த EVM மெஷின்களை கொண்டு வந்த பெருமை அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனை சாரும். அவர் கொண்டு வந்ததிற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. 1951ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் படிப்பறிவு உள்ள மக்கள் 18.33 சதவீதம் தான். ஆனால் இன்று நமது நாட்டின் மக்கள் படிப்பறிவு 77.70 சதவீதமாக உள்ளது என்பது பாராட்டாக் கூடிய செய்தியாகும். கேரளாவில் மட்டும் அதிக பட்சமாக 94 சதவீதமாகும். தமிழ் நாட்டில் 80 சதவீதமாகும்.

            EVM மெஷின் அரசு ELCOT நிறுவனமும், பாரத் எலக்ட்ரோனிக் நிறுவனமும் கூட்டாக தயாரிக்க ஆரம்பித்தன.

EVM மெஷின் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ஓட்டுப் போடும் பட்டன் உள்ள எந்திரம், அடுத்தது control unit ஆகும். EVM மெஷின்களை கையாளுவதில் பல வகைகளில் சிரமம் உள்ளது.

1) தேர்தலில் பங்கேற்கும் அதிகாரிகள் பல்வேறு அரசு நிர்வாகத்திலிருந்து நியமிக்கப் படுகின்றனர். அவர்கள் அந்த மெஷின்களை கையாளுவதற்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கான வகுப்புகள் நடத்தப் பட்டாலும் சில அலுவலகர்களுக்குப் புரியாமல் பூத்துக் களில் குழப்பமும், கால தாமதமும் ஆகுவதினை சமீப காலங்களில் அறியலாம்.

2) சமீப காலங்களில் கணினிகளில் வைரஸ்கள் ஊடுருவச் செய்து வாக்குப் பதிவில்  மாற்றம் செய்ய முடியும் என்ற பயமும் உள்ளது.

3) சமீபத்திய தேர்தல் ஏப்ரல் 19ந் தேதியிலிருந்து ஜூன் முதல் தேதி வரை 7 கட்டமாக நடப்பதும், ஒட்டு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு சொல்லும் காரணம், அனைத்து இடங்களிலும் குறைந்த தேதிகளில் நடத்துவதற்கு போதுமான பாதுகாப்பு படைகள் இல்லாது என்று கூறுவது நொண்டிச் சாக்காக தெரியவில்லையா? அப்படி என்றால் எவ்வாறு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பாராளுமன்றத்திற்கு, சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பாமலில்லை.

            அடுத்தது வாக்காளர்கள் யாருக்கு ஒட்டு போட்டோம் என்ற உறுதி செய்ய ஒரு கணக்கு ரசீது கொடுக்கும் VVPAT (Voters Verified  Paper Audit Trial)வாக்காளர் சரி பார்க்கப் பட்ட காகித சீட்டு) முறை வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். அது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் 9.4.2019ல் ஒரு வழக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் தேர்தல்களில் 2 சதவீத சரி பார்க்கும் சீட்டு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப் பட்டது. அப்படி கொடுப்பதிலிரும் ஹார்ட் டிஸ்கில் பல குளறுபடிகள் செய்யலாம் என்று நிபுணர் Vermu hari prasad குழு கூறுகின்றது. ஆகவே மறுபடியும் வாக்குச் சீட்டுமுறையினை அமல் படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்த போது நீதிமன்றம் அது பெரிய குழப்பத்தினை உருவாக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க அனைத்துத் தரப்பினரும் கவலை கொண்டுள்ளது நியாயமானது தானே என்பது இதிலிருந்து தெரிகிறது.

            அதற்கு மேலாக 'பணம் பாதாளம் வரை பாயும்' என்ற பழமொழிக்கிணங்க தேர்தல் கமிஷனே இந்தியாவில் தேர்தலில் பணப்புழக்கம் தான் மிகப் பெரிய தலைவலி என்று சொல்லியுள்ளது. அவர்கள் எண்ணியது போல பல்வேறு மாநிலங்கள் ரூ 4650கோடி பணம் பறக்கும் படையினரும், வருமான வரி துறையினரும் கைப்பற்றியுள்ளது உறுதியாகுகிறது. அத்தோடு பழைய வழக்குகளை தேர்தல் நேரத்தில் தூசி தட்டி எடுத்து விசாரணை என்பதின் பேரில் முக்கியமான தலைவர்களை சிறையில் தள்ளி அவர்களை தேர்தலில் பங்கெடுக்காமல் செய்வதும் ஒரு அதிகார துஸ்பிரயோகம் என்றால் மறுக்க முடியுமா?