Thursday 19 January, 2017

ஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு!

   
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)
சென்றேன், கண்டேன், ஆர்ப்ரியும் கடலென
பொங்கியெழுந்த ஜல்லிக் கட்டு
இளைஞர் அடலேறுகள்-மெரினா கடலோரம்
கல்லூரி மாணவப் பருவ அறுபத்தைந்தில்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்
நானும் பங்கு கொண்டு குண்டாந்தடி
தழும்பினைப் பெற்ற அனுபவம் 

அன்று எழுப்பியது ஹிந்தி ஒழிக என்ற கோசம்
இன்று எழுப்பியது வேண்டும் ஜல்லிக் கட்டு கோசம்
மூன்று நாட்களாக  கொட்டும் பணியிலும்
வீசும் கடுங்குளிர் கடற் காற்றிலும்
துவண்டு விடாத இளஞ்சிங்கங்களை-கண்டேன்
அவர்கள் எழுப்பிய ஜல்லிக் கட்டு கோசம்
ஆர்ப்பரியும் கடல் அலையினைத் தோக்கடித்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே, தங்கம்
பாடியது அன்று, இன்று தை பிறந்து வழிபிறக்கவில்லை
ஏறு பிடித்து உழவன் வாழ்ந்தான் அன்று- இன்று
ஒட்டிய வயிறும்-கட்டிய கையுமாக வாடிய பயிறுமாக
திருவிழா எடுக்க கையில் நாலு காசில்லாமல்
கண்ணீர் சிந்தி செத்து மடிகிறான் கடனில்
தட்டிக் கேட்க நாதியில்லை-இளைஞர்களைத் தவிர

உழைக்கும் மாடுகளுக்கு வணக்கம் செலுத்த
அலங்கரித்து மாலையிட்டு வயல் பக்கம் வரும்-மஞ்சுவிரட்டு
அந்தக் காளைகள் கால் பாதிக்கும் வயல்கள் செழிக்கும்
ஆனால் பருவமும் பொய்த்தது-பவிக் கர்நாடகமும்
காவிரித் தண்ணீர் தராது மறுத்தது
கருகியது விளை நிலமட்டுமல்ல
விவசாயிகள் வாழ்வும் தானே
கொழுத்த யானையின் கொம்பையும் எதிர்கொண்டு
போர்க்களத்தில் எதிரியின் கொட்டத்தினை முறியடிக்கும்
யானைப் படையினைக் கொண்டவன் தமிழன்

வடபுலத்தில் படை செலுத்தி அரசர்களை
சிறைப் பிடித்து கோயில் கட்ட
மலைக் கற்களை சிரசில் சுமக்கச் 
செய்தவன் தமிழன்
திமிரும் காளைகள் திமிலை 
தாவிப் பிடித்துசீவிய கொம்புகளை 
மடக்கி பரிசுகள் பல பெறுவான் -வீரன்
அலங்காநல்லூரில் நான் கண்ட காட்சி

காளை விளையாட்டில் கூறிய கத்தி பாய்ச்சி
கொடூரமாக கொல்வர்  ஸ்பெயின் நாட்டில்
 வீதிகளில் காளைகளை ஓட விட்டு கிளித்தட்டு 
ஆடுவர் இளங்காளைகள்  தென் அமெரிக்காவில்
ஒட்டக வயிற்றில் அடிப்பக்கம் சிறு 

அனாதைக் குழைந்தைகளைக் கட்டி 
பந்தயம் ஓடச் செய்வர் அரேபியாவில் 
ஆட்டுக் கிடாயினை ஓடச் செய்து-குதிரையில் சவாரி
செய்து கொல்வார் ஆப்கானிஸ்தானில்-வடபுலத்தில்
எருமையினை குன்றிலிருந்து தள்ளி குதுகூலம் கொள்வர்

குதிரை நுரை தள்ளி நோகடிப்பர் பந்தயத்தில்
யானை அங்குசம் குத்து பட்டு ஓடும் கேரள பந்தயத்தில்
சுமை தாங்காது கழுத்துப் புண் நோக கலங்கடிப்பர்
பிராணிகளின் பசியினை போக்காமல்  
சுற்றுலா தளங்களில்பிக்கினி உடையுடன்  
கொட்டமடிக்கும் 'பீட்டா'
காளைகளை குழந்தைகள் 
போல காக்கும் தாக்க பயன்படுத்தும் 
ஆயுதம்-ஜல்லிக் கட்டுக்கு தடையா

இளிச்ச வாயனல்ல இரும்புத் தமிழன்-குனியக்
 குனிய கொட்டு வாங்க மாட்டான் இனியும்
'போக்கிரி' என்கிறான் போக்கற்ற மனுவாடி
பூச்சாண்டி காட்டாதே அதிகார ஆணவத்தில்
பொங்கி எழுந்து விட்டான்- வீராத் தமிழன்
இனியும் பொறுக்க மாட்டான் துன்பத் தமிழன்
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்

போர் முரசு கொட்டிவிட்டான் தமிழன் -ஓயமாட்டான்
வெற்றி முரசு கொட்டும் வரை!