Friday 11 September, 2015

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!
( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
உலகின் கால் பகுதி நிலப் பரப்பு, முக்கால் வாசி நீர்ப் பகுதியாகும்.. அந்த நிலப் பரப்பில் ஏற்றத்தாழ்வு வராமல் நிரந்தரமாக  நிலை நிறுத்தி வைப்பது மலைப் பகுதியாகும். ஐஸ்லேண்ட் பகுதியிலும், பாலை வனத்திலும் மரங்கள்,  செடிகொடிகள் வளர்வது மிகவும் அரிது. இறைவனின் வரப் பிரசாதத்தால் அவைகள்  நீர் பிடிப்பு, காடுகள், மலைகள் , மற்றும் மழைப் பகுதிகளில் வளர்கின்றது..
மனிதன் உயிர் வாழ அவசியமாக கருதப் படுவது தண்ணீர், காற்று. மழையினால் குளங்கள், ஆறுகள், ஊற்றுகள் ஏற்படுகின்றன. .மரங்கள், செடி கொடிகள் மூலம் சுத்தமான காற்றினை மனிதன் சுவாசிக்க முடிகிறது. அந்த இயற்கை செல்வங்களிடையே சற்று காலாற நடப்பது, அதன் அழகை ரசிப்பது, தென்றல் காற்றினை ஸ்வாசிப்பது எந்தந்த விதத்தில் நோயற்ற வாழ்வினைத் தருகின்றது என்று உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வின் முடிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
அவைகள் பின்வருமாறு:
1) கனடா நாட்டின்  குடும்ப மருத்துவர், மெலிசா ஏலம், 'மரஞ்செடி, கொடிகள் உள்ள பூங்காவில் 20 நிமிட நேரம் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் ஒரு மனிதன், அவனுக்கு  கொடுக்கும் மருந்து, ஊக்க மாத்திரையினை விட மேலானது' என்கிறார்.
2) 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆராச்சியாளர்களின் குழுத் தலைவர் 'விக்கி செர்பர்', ' ஒரு கருத்தரங்கில் பங்கு பெரும் ஒரு நபர் அந்தக் கருத்தரங்கில் பங்கு பெறுமுன் சில மணித்துளிகள் ஒரு பசுமையான சூழலில் நடைப் பயணம் மேற்கொண்டால் அவருக்கு புது விதமான சிந்தனைகள் 60 சதவீதம் கூடுகின்றது' என்று கூறுகிறார். இதனேயே தான் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மாஸ்கோவிலோ, பாரிசிலோ, பெர்லினிலோ அல்லது வாசிங்டனிலோ கூடும்போது ஒரு பார்க்கில் கூட்டாக நடந்து செல்வதினைப் பார்க்கலாம்.
3) 2009 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்திய ஆய்வில் 'வீட்டுகுள்ளிலில்லாது நடைப் பயிற்சியின் மூலம் வெளி உலகின் இயற்கைக் காற்றினை சுவாசித்தால் ஒரு மனிதனின் படபடப்பும், பதட்டமும் தணிந்து நிதானத்துடன் செயல் படுவான்' என்று சொல்கிறது. ஒரு மனிதன் ஒரு அறைக்குள் இருக்கும் ஜிம்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும், பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

4) அமெரிக்கா மற்றும் தைவான் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஆய்வு நடத்தியபோது, 'ஜன்னல்  இல்லாத குடியிருப்புகளில் தூங்கும் தொழிலாலர்களை விட ஜன்னல் திறந்திருக்கும் வீடுகளில் தூங்கும் தொழிலாளர்கள் 45 நிமிடம் நிம்மதியாக களைப்பு நீங்கத் தூங்குகிறார்களாம்'. நீங்கள் சென்னை போன்ற நகரங்களில் தெருவோரம் வசிக்கும் மக்களைப் பார்க்கலாம், அவர்கள் அருகில் கனரக வண்டி கூடப் போகும். ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் வசதியுடன் இருப்பவர்கள் ஏசி அறையில் படுப்பார்கள், ஆனால் தூக்கம் வராது புரள் வதினைக் கேள்விப் படலாம்.

5) ஜப்பானில் பூங்காக்களில் நடப்பவர்களை 'சின்ரின் யோக்கு' என்று அழைப்பார்களாம். அப்படியென்றால் அவர்களை காடுகளில் குழிப்பவர்கள் என்று அர்த்தமாம். பூங்காக்களில் நடப்பது மூலம் ரத்த ஓட்டம் சீராகவும், நாடித் துடிப்பு அதிகமாகவும், புற்று நோயினை தடுக்கும் அரு மருந்தாகும்' என்கிறார்கள்.

6) ஜப்பான் டோக்யோ நகரில் இயற்கை சூழலில் வாழும் 3144 நபார்களை பற்றி ஆய்வு நடத்தியதில் அவர்கள் இயற்கை சூழல் இல்லாது வாழும் நபர்களைவிட அதிக நாட்கள் வழ்கின்றனராம்.

7) ‘டச்’ நாட்டில் 2009ஆம் ஆண்டு 10,089 நபர்களிடம் நடத்திய ஆய்வில், 'இயற்கை சூழலில் வாழும் நபர்கள் தாங்கள் தனியாக வாழ்கின்றோம் என்ற உணர்வினையே  மரம், செடி, கொடி என்ற பசுமையினை கண்டதும் மறந்து விடுகின்றனராம்.

8) இங்கிலாந்து நாட்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் இரண்டு விதமான நபர்களிடம் ஆய்வு நடத்தினார்களாம். அவர்களில் ஒரு குழுவினர் கடைப் பகுதியில் பயிற்சியினை மேற்கொண்டோர். மற்றொரு பகுதியினர் பூங்காக்களில் பயிற்சியினை மேற்கொண்டோர். அவர்களில் இயற்கை சூழலில் பயிற்சியனை மேற்கொண்டோர் மிகவும் அமைதியாகவும், மூளை சிந்தனையினை உடனுக்குடன் செயல் படுத்துவர்களாகும் உள்ளனராம்.

9) 2001 ஆம் ஆண்டு அமெரிக்க வாசிங்டன் நகரில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியபோது, ஒரு நாளைக்கு 20 நிமிடம் பயிற்சியினை மேற்கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை கூடியவர்களாகவும், தோழ்வி மனப்பான்மை குறைந்தவர்களாகவும் இருந்தார்களாம்.
10) 2001ஆம் ஆண்டு அமெரிக்கா சிக்காக்கோ நகரில் இயற்கை சூழ கூட்டமாக அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் திருட்டுப் பயமில்லாமல், சுயக் கட்டுபாடுடன் நடந்து கொள்கிறார்களாம்.

11) 1984இல் அமேரிக்கா பென்சில்வேனியா நகர் மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியில் சிகிச்சை எடுக்க வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளின் ஜன்னல் பக்கம் மரம்,செடி, கொடிகள் இருந்தால் அவர்கள் நோயின் வலியினை மறந்து, சீக்கிரமே குணமாகி விடுகின்றார்கலாம். நான் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் சிட்டியில் உள்ள பிரசவ மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே பார்வையாளர் பகுதியில் ஒரு பெரிய மீன் தொட்டி வைத்து அதில் பல்வேறு மீன்கள் விளையாட விட்டிருந்தார்கள். அதன் நோக்கத்தினைக் கேட்டபோது, 'மீன்கள் வாலை அடித்து விளையாடும்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற்றில் விளையாடும் சிசுகளுக்கு இணையாக நினைத்து டாக்டரைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் இருக்கும் வலியினையே மறந்து விடுவார்களாம்.

11) ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ மரம், செடி, கொடிகள் அதிகமாக இருந்தால் தொழிலாளர்கள் லீவு எடுப்பது குறைவாகவும், தொழிற்சாலை உற்பத்தி அதிகமாக இருக்கின்றதாம்.

12) மேலை நாட்டில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவோருக்கும், நமது நாட்டில் பார்க்கில் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு காணலாம். அமெரிக்காவில் நடைப் பயிற்சியின் போது ஒரு அமெரிக்கரை பார்த்தால், 'ஹாய்' என்பதுடனும், சிட்னியில் பயிற்சி மேற்கொள்ளும்போது 'ஹலோ' என்று பெயரளவிற்கு சொல்லிவிட்டு  நகன்று விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அறிமுகமான நபரின் பூர்வீக சரித்திரத்தினையே பயிற்சி முடிவதிற்குள் கேட்டு விடுவார்கள். பந்த, பாச உணர்வுடன் நடந்து கொள்வார்கள். இன்பம், துன்பத்தினில் கலந்து கொள்வார்கள். அதில் சில நேரங்களில் சிரிப்பாகவும் மாறி விடும் என்பதினை ஒரு உதாணரம் மூலம் விளக்கலாம் என எண்ணுகின்றேன். எங்களுடன் பார்க்கில் நடைப் பயிற்சிக்கு வரும் தேவா என்ற நண்பர் அன்று பார்க்குக்கு வரவில்லை. அவர் வராதது பற்றி விசாரித்த ஒரு நண்பர் தவறாக அவருடைய மாமி இறந்து விட்டார்களாம், அவரை வரும் வழியில் சாவு வீட்டில் பார்த்தேன் என்றார். உடனே சில நண்பர்கள் ஒரு மாலையினை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றபோது அப்போது தான் தெரிந்ததாம் அவருடைய மாமி இறக்கவில்லை, மாறாக பக்கத்தில் குடியிருக்கும் ஒரு மாமி இறந்து விட்டது என்று. அந்த அளவிற்கு நடைப் பயிற்சியில் ஜாதி, மதம், இனம், வயது, உத்தியோகம், வசதி என்று பாராது ஒரு பழக்கக் கூட்டம் ஒன்று சேரும் இடம் நடைப் பயிற்சி பூங்காவாகும். சில நேரங்களில் சம்பந்த பேச்சும், வியாபார ஒப்பந்தமும் நிறைவேறும். எல்லா பார்க்கிலும் ஒரு அசோசியேசன் அமைத்து அந்த பூங்கா வளர்ச்சிக்கு யோசனையும், வழியும் செய்வார்கள். 
ஆகவே மேற்கூறிய ஆராய்ச்சிகள் பழமை காலத்தில் கிராமங்களில் வாழ்ந்தவர்களும், காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர், தவம் செய்த முனிவர், சித்தர் ஆகியோர் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்களுக்கு வாழ்ந்த ரகசியம் இயற்கையில் அவர்கள் வாழ்ந்ததால் தான். நாம் சரித்திரத்தில் அசோக சக்கரவர்த்தி குளங்கள், தோண்டினார், மரங்கள் வெட்டினார், ரோடுகள் அமைத்தார் என்றெல்லாம் படித்து இருக்கின்றோம். ஆனால் அந்த நீர் நிலைகள் தூந்து போனதிற்கும் காரணம் அவைகளில் வீட்டு மனைகள் அமைத்த மனிதன் தான் காரணம். மரங்கள், மற்றும் சாலைகள் வெட்டப் பட்டதிற்கு காரணம் போராட்ட காலங்களில் அரசியல் கட்சிகள் அவைகளை வெட்டியும்,   தோண்டியதும்  தான் காரணம்.  அதனால் மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும், வாழ்வாங்கு வாழ மரங்கள் அழிப்பதினை விட்டு விட்டு, மரங்கள் நட்டு அந்த மரங்களின் அழகினை ரசிக்க சிறிது காலாற நடப்போமா?

Friday 4 September, 2015

தேவையா தண்டுவடம் ?

                  
                   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்)
தண்டு வடம் ஒரு மனிதனுக்கு உயிர் வாழ அவசியம். தண்டு வடம் இல்லாத மனிதனை  வளையும் வெண்டைக்காயிற்கு ஒப்பிடுவார்கள்.
தண்டு வடம் ஏன் அவசியம் என்று இப்போது பார்க்கலாம்:
 தண்டு வடமானது மூளை  இடும் கட்டளையினை உடல் மூலம் செயலாற்றுகிறது. மூளை க்கு எடுத்துச் செல்லும் உணர்வு நரம்புகளை வழி நடத்துவது முதுகெலும்பாகும். நரம்புகள் துண்டிக்கப் பட்டால் உடல் செயழிழந்து விடும்.
அதற்கு இப்போது என்ன வந்தது என்று கேட்கலாம்?
இந்திய ஜனநாயக நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் முஸ்லிம் இயக்கங்கள் தண்டு வடத்தோடு உள்ளனவா என்ற கேள்விக்கு விடைகாணும் விதமாக இந்தக் கட்டுரையினை வரைகின்றேன்.
1) இந்தியாவின் 2015 ஜனத்தொகை கணக்கின் படி முஸ்லிம்கள் 14.2 சதவீதம் உள்ளனர். ஹிந்து மக்கள் தொகையான 79.8 சதவீதத்ததிற்கு அடுத்த இடத்தில்  உள்ளனர்.
2) 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் 545 உறுப்பினர் கொண்ட மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் வெறும் 22 பேர். இது தான் மக்களவை வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கை. 49 அதிகமான உறுப்பினர்களை 1980 மக்களவையில் முஸ்லிம்கள் பெற்றனர்.
3)  தமிழ்நாட்டின் ஜனத்தொகை 7,66,57,206/ படித்தவர் எண்ணிக்கை 81 சதவீதம்.
முஸ்லிம்கள் 42,56,199/ அது 5.9 சதவீதம். முஸ்லிம்கள் படிப்பறிவு 82.9 சதவீதம். ஹிதுக்கள் படிப்பறிவு 72 சதவீதம்.
4) தமிழ்நாடு சட்டசபை மொத்த உறுப்பினர் 234/
1935 இல் 215 உறுப்பினர் கொண்ட சட்டசபையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 28/
அப்போதைய தலித் உறுப்பினர்கள் 30/
ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஒரு கை ஐந்து விரல் கொண்டதாக மாறியது. இது 2006 சட்டமன்றத்தினை விட 2இடம்   குறைவானது வேதனையிலும் வேதனையல்லவா?
5) இன்று இந்திய அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் விடிவெள்ளியாக லண்டனில் பாரட் லா சட்டம் பயின்ற அசாத்தின் ஒவைசி உருவாகியுள்ளதாக ஹிந்து நாளிதழ் கூறுகின்றது. காரணம் ஆதிராவின் ஹைதராபாத் நகரின் மூன்றாது முறையாக மக்களவைக்கு 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மக்களவையில் பல்வேறு வகையிலும் சிறப்பாக பணியாற்றியதற்காக, 'சன்சாட் ரத்னா' விருதுனைப் பெற்றுள்ளார். அவர் எ.ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவராக உள்ளார்.அவர் சொல்லுவதெல்லாம் முஸ்லிம்கள் வறுமை அதிகமானதால் தீவிர வாதத்திற்கு தள்ளப் படுகின்றனர் அதனைப் போக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கை தேவை அரசிடமிருந்து என்பதுதான்.
இதனையே தான் இந்தியாவின் துணை ஜனாதிபதி மதிப்புமிகு அன்சாரி அவர்களும் 31.7.2015 அன்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், அரசு முஸ்லிம்களுக்கு ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று கூறி முடித்ததும் வி.எச் பி தலைவர்கள் அவர் எப்படி சொல்லலாம் என்று கூக்கிரல் விடுகின்றனர். உயர் பதவியில் இருக்கும் துணை ஜனாதிபதியே தான் உயர்ந்த பாதையில் இருக்கின்றோம், நம் இன மக்கள் வறுமையில், வேலையின்மையில் வாடுகின்றனரே என்று மனம் நொந்து கூறியிருக்கின்றார். அவர் கூறாமல் வேர் யார் கூறுவது? ஏனென்றால் முஸ்லிம்கள் நிலை பற்றி ஆய்வு அரசு உத்திரவுப் படி நடத்தி அறிக்கையினை சமர்ப்பித்த நீதியரசர்கள் ராஜேந்திர சச்சார், ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் அந்த அறிக்கைகள் வெறும் காகிதமாக போய் விட்டதே என்று பல தடவை வேதனைப் பட்டதாகச் சொல்லி பத்திரிக்கைகளிலும் வந்திருப்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்.
ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்கப் பட வேண்டிய இடம் சட்ட சபையும், பாராளுமன்றமும் தான் என உணர்ந்த ஒவைசி முஸ்லிம்கள் அரசியலில் சக்தி வாய்ந்தவர்களாக வரவேண்டும் என்று ஆந்திராவில் கால் பதித்து, பக்கத்து மாநிலமான மகாராஸ்ட்ராவில் சிவ் சேனா, பி.ஜே.பி எதிர்ப்பினையும் மீறி 2 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, உத்திரப் பிரதேசம், தற்போது தேர்தல் வரப் போகிற பீஹார் மாநிலங்களில் தன் சிறகுகளை விரித்திருக்கின்றார் என்று பத்திரிக்கைகள் ஆர்வத்துடன் பார்க்கின்றன.
இந்திய தேர்தல் ஆணைய பட்டியல் படி கீழ்கண்ட முஸ்லிம் அமைப்புகள் அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன:
1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(கேரளா)
2) மஸ்ஜிஸ்-இட்டடுல்-முஸ்லிமீன்(ஆந்திரா)
3) ஆல் இந்திய ஜனநாயக முன்னேணி(அஸ்ஸாம்)
4) வெல்பார் பாட்டி ஆப் இந்தியா(மே.வ)
5) சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(மே.வ)
6) மனித நேய மக்கள் கட்சி(த.நா)
7) ஆல் இந்திய உலமா கவுன்சில்(உ .பி)
8) பீஸ் பார்ட்டி(உ.பி)
9) இந்திய தேசிய லீக்(கேரளா )
10) பீபுள் டெமாக்ரடிக் பார்ட்டி(கேரளா)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்ணியமிகு காயிதே மில்லத் மறைவிற்குப் பின்பு வடநாட்டினை விட்டகன்று தென்னாட்டிற்குள் வட்டமிடுகின்றது. தமிழகத்தில் தி.மு.க, அதிமுக துணைகளோடு சட்டசபைக்குள் நுழைய முடிந்தது. தங்களுடைய இயக்கம் வளர திராவிட இயக்கத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்க நேர்ந்தது. அதனால் தமு.மு.க, தவ்ஹீத் இயக்கங்களுக்குப் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் அணி வகுக்க ஆரம்பித்தனர்.
இந்தியாவின் மேற்கே இருக்கின்ற குஜராத் மக்கள் தொகை 6 கோடி. அதில் ஹிந்துக்கள் 88.6 சதவீத மக்கள். முஸ்லிம் மக்கள் 9.7 சதவீதம். படேல் சமூக மக்கள் ஹிந்துக்களில் 27 சதவீதம் உள்ளனர். அந்த சமூகம் முன்னேறிய சமூகமாகும். படேல் சமூகம் பற்றி ஒரு ஜோக் சொல்லுவார்கள். அதாவது படேல் இன கல்லூரி விடுதியில் படிக்கும் மாணவர் ஒருவர் தன் தந்தைக்கு. 'கல்லூரி பாடத்திற்காக ஒரு லாக் டேபிள்' வாங்க வேண்டும்' அதற்காக ரூ 100/ அனுப்பச் சொன்னாராம். உடனே தந்தை லாக் புத்தகத்தினை தவறாக மேஜை என நினைத்து, 'நீ நல்ல திடமான தேக்கு மர மேஜையினை வாங்கிக் கொள் என்று ரூ 500/ அனுப்பி' வைத்தாராம். அது போன்ற செல்வ செழிப்பானவர்கள் படேல் சமூகத்தினவர்.  பெரும்பாலும் படேல் சமூகத்தினவர் சர்தார் வல்லபாய் படெலிலிருந்து மாதவ் ராவ் சோலங்கி வரை  காங்கிரஸ் சார்ந்தவர்களாகவே இருந்தனர். 1981 ஆம் ஆண்டு சோலங்கி முதல்வராக இருந்தபோது பிற்படுத்த மக்களுக்கு(ஒ.பி சி ) கோட்டவினை 27 சதவீதம் என்று அறிவித்ததும் படேல் சமூகத்தினவர் பெரும்பாலும் காங்கிரசை விட்டு பி.ஜே.பி பக்கம் சாய ஆரம்பித்தனர். 1985 ல் படேல் சமூகத்தினவர் ரிசர்வேசன் கேட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் அது ஹிந்து-முஸ்லிம் கலவரமானது. அதன் பின்பு வந்த அரசு ஜேசுபாய் படேல் அரசு படேல் சமூகத்தினவரை சார்ந்தே ஆட்சி நடத்தியது .  ஆனால் 22 வயதான ஹிர்திக் படேல் தன் இன மக்களை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டினுக்காக போராடியது குஜராத்தில் அரசியல் கட்சிகள் இருந்த இடமே தெரியாத வன்னம் செய்து விட்டது.
அதே போன்றே பி.ஜே.பி ஆட்சி செய்கின்ற மாநிலமான ராஜஸ்த்தானில் குஜ்ஜார் இனமக்கள் போராடி 5 சதவீத ஒதுக்கீடு பெற்றனர்.
அதே போன்று மூன்றரை சதவீத ஒதுக்கீடும் தமிழகத்தில் கொடுக்கப் பட்டது. ஆனால் அதனால் பயன் பெற்ற பயனாளிகள் எத்தனை என்று யாருக்காவது தெரியுமா? ஏனெறால் இட ஒதுக்கீடு ஒழுங்காக கொடுக்கப் படுகின்றதா என்று கண்காணிக்க ஒரு மானிட்டரிங் கமிட்டி நியமிக்காததே ஒரு காரணம்! 2011 ஆம் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இரண்டு திராவிட இயக்கங்களும் தற்போது இருக்கின்ற இட ஒதுக்கீடு கூடுதலாக்கப் படும் என்றன. ஆனால் மறு தேர்தல் 2016ல் வரப்போகிறது. அந்த உறுதி மொழி கானல் நீராகவே இருக்கின்றது.
2011 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்தத் தொகுதியும் பெறமுடியவில்லை. ஆனால் மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களைப் பெற்றது. இருந்தாலும் அது எதிர் கட்சி வருசையில் அமர்ந்து விட்டதால் எந்தப் பெரிய பலனும் அடைய முடிய வில்லை. தற்போது சேர்ந்திருக்கும் கூட்டணியால் 2016 தேர்தலில் ம.ம.க கிடைத்த 2 தொகுதியும் இழக்கும் அபாயமும் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.காவினை ஒட்டியே அரசியல் செய்வதால் பெரிய பலன் ஒன்றையும் இதுவரை அடைந்ததில்லை என்பதினை சென்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அவர்கள் எப்படி வேலை பார்த்தார்கள் என்பதினை மதிப்புமிகு அப்துர் ரஹ்மானைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தற்போதைய அதன் நிலை எப்படி இருக்கின்றது என்பதினை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என எண்ணி உள்ளேன்.
தி.மு.க தளபதி 2016 சட்டசபை தேர்தல் முன்னிட்டு 234 தொகுதிக்கும் சென்று தொண்டர்களை சந்திப்பதாக அறிவுப்பு வந்த உடனேயே, லீக் தலைவர் ஒரு அறிக்கை விடுகின்றார், அது என்ன தெரியுமா, தளபதி  234 தொகுதிகளுக்கும் செல்லும்போது லீக் தொண்டர்கள் கொடியுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று. பேரறிஞர் அண்ணா முதல்வர் பதவி 1967ல் ஏற்கும் முன்பு கண்ணிய மிகு காயிதே மில்லத் வீடுதேடி சென்று ஆசி பெற்று சென்றார் என்றது வரலாறு. இன்று முஸ்லிம் மக்கள் இன்னொரு கட்சி இளைய தலைவரை வரவேற்க அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏன் வந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதில் என்ன வேடிக்கை என்றால் இன்னும் கூட கூட்டணி பற்றி அறிவிப்பு வரவில்லை என்பதுதான்
 ஆகவே தமிழ்நாடு முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஹைதராபாத் ஒவைசி போன்று அரசியலில் ஒரு வலுவான கூட்டணியினை வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் உருவாக்க வேண்டும். அந்த கூட்டணிக்கு ஒ.ஐ.யு  அதாவது 'ஆர்கனைசேசன் ஆப் இஸ்லாமிக் யூனியன்' என்று பெயரிட வேண்டும்.
மனிதரில் இறைவன் வேற்றுமையினைப் படைத்துள்ளான். ஆனால் சமூதாய முன்னேற்றத்திற்காக வேற்றுமையினை மறந்து இஸ்லாமிய மக்கள் ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயமே!
சில முஸ்லிம் இயக்கங்கள் தங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று பூச்சாண்டிக் காட்டலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் திரைமறைவு காய் நகர்த்தும் செயல்களை அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் அறிந்தே உள்ளனர்.
முஸ்லிம்கள் ஓரணியில் திரளவில்லையானால் இனி புதுப் பள்ளிவாசல் கட்டுவதிற்கும், பழைய பள்ளிவாசல் விரிவாக்குவதிற்கும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் என்பதினை சமீப கால ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இட ஒதுக்கீடு அதிகம்  பெறவும், அரசியலில் சட்டசபை மற்றும் மக்களையில் அங்கம் வகிக்கவும் முடியாது.
உ.பி.மாநிலம் முசாபர் நகர் மக்கள் பட்ட துன்பங்கள் போன்று சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கும் நிலை ஏற்படும்
ஆகவே  முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ஒ ஐ சி அமைத்து பணியாற்றி இஸ்லாமிய மக்களின் தண்டு வடத்தினை வலுப் படுத்தலாமா அல்லது தண்டு வடமே இல்லாத ஜீவனாக வாழலாமா என்பது பற்றி தீர்மானிப்பதினை  உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்!