Friday, 21 May, 2021

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி--'

 


( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப் படி இந்தியாவில் கொரானா தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர் இதுவரை 2.3கோடி என்றும், அதில் இறந்தவர் 2.57 லட்சம் என்றும் கூறுகின்றது. ஆனால் சாவின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் அவைகள் கணக்கில் கொள்ளாதவை என்றும், கங்கையில் உ.பி., ம.பி மற்றும் பிகாரில் மிதக்கும் நூற்றுக் கணக்கான பிணங்களை பார்த்து சொல்லுவது மனதினை உலுக்கும் செய்தியாக உங்களுக்குத் தெரியவில்லையா? 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே சீனாவில் கொரானா அறிகுறி தெரிந்தும் சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியதின் பயனாக லட்சக் கணக்கில் விலை மதிக்க முடியாத உயிரினை இழந்திருக்கின்றோம். அதனை விட்டுவிட்டு மாட்டு மூத்திரம், மாட்டு சாணம் தான் அதற்கு உண்டான தீர்ப்பு என்று நமது அறிவு சால் அரசியல் வாதிகள் பிதற்றியதின் பயனைக் கண்டு அமெரிக்க டல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் திகைத்த கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அதனை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிய செய்தித் தொடர்பாளர் பிலிப் சேர்வேல் படம் போட்டு காட்டியுள்ளார். டெல்லியிலிருந்து வாஷிங்டன் டல்லாஸ் விமான நிலையத்தில் ஒரு இந்திய பயணியின் பையினை அங்குள்ள அதிகாரிகள் சோதனை இட்டபோது ஒரு பையில் கனமான உருண்டையான பொருள் இருந்தது கண்டு வியந்து அவரிடம் கேட்டபோது அது காய்ந்த சாணத்தின் கட்டி என்றும் அது கொரானா நோயினை கட்டுப் படுத்தும் என்று சொன்னது ஆச்சரியாமலிக்காதா என்ன? Mucormycosis என்ற பூஞ்சை நோய் புதிதாக வந்துள்ளது என்றும் அது ஈரமான, காய்ந்த, காற்றில் பரவக்கூடிய கொரானா என்றும் கூறப்படும் போது அவர் இதனைக் கொண்டு வந்தது ஆச்சரியம் அளிக்காதா என்ன? அவ்வளவு தூரம் மக்கள் அறியாமையில் மூழ்கி உள்ளனர் என்பது எடுத்துக் காட்டவில்லையா? அதற்கு மேலாக 2021 மார்ச் மாதம் ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட கொரானா  நோய் பாதித்த சுனில் பாரேடா என்ற தலைவர் தொலைக் காட்சியில் தோன்றி பெருமையாக சொன்னதும், இன்னொரு ஸ்வாமி மாட்டு மூத்திரம் குடிக்கும்(gaumutra) விழா நடத்தியதும் பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டியுள்ளன. பின் ஏன் கொரானா நோய் பரவாமல் இருக்காது சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் சொல்லும்போது, 2019ல் கொரானா அறிகுறி வந்தபோது அரசும், மக்களும் அலட்சியம் காட்டியதால் அதன் விளைவுதான் லட்சக் கணக்கில் உயிரிழைப்பு மட்டுமல்ல மாறாக வெளி நாடுகளில் ஆக்சிஜென், வெண்டிலேட்டர்,  கொரானா அறிகுறி கண்டு புடிக்கும் கருவிகள், ஊசிகள் போன்றவைகளை இறக்குமதி செய்ய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா 120 நாடுகளுக்கு தடுப்பூசி சிரிஞ்சி தயாரித்து அரும்பியும், இந்த கொரானா காலத்தின் அவசரத்தினை பயன்படுத்தி  அவசியமான பொருட்கள் தரமற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப் படுவது இந்திய மருத்துவ உபகரண தொழிலை நசுக்குவதாக உள்ளதாக அதன் சம்மேள தலைவர் ராஜீவ் தத் சொல்லியுள்ளார். இதனை நிரூபித்து காட்டும் விதமாக திண்டிவனத்தில் மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு டாக்டர் பாண்டிச்சேரியில் விற்ற ரெம்டிசிவிர் ஊசியினை வாங்கி தனக்குப் போட்டுள்ளார். அதன் பின்பு அவர் இறந்து விட்டார். விசாரணை செய்ததில் பாண்டிச்சேரியில் விற்ற ஊசி மருந்து போலியானது என்று அறிந்து இரண்டு டாக்டர்களை கைது செய்துள்ளார்கள். சீன கம்பனிகள் கொரானா காலத்தின் அவசர தேவையினை பயன் படுத்தி மாஸ்க், வெண்டிலேட்டர் போன்ற தரமற்ற உபகரணங்களை போட்டி போட்டுக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளன. அவைகளை சில நாடுகளும் திருப்பி உள்ளன. தடுப்பு ஊசிகளை கடத்தி வந்து விற்றது சம்பந்தமாக 2 டாக்டர்கள், 10 மற்ற நபர்கள் கைது செய்துள்ளது வருத்தமளிக்காமலில்லை தானே! இது எதனைக் காட்டுகின்றது என்றால் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ஏரியிற வீட்டில் பிடுங்குவது லாபமென்று' அதுபோல அமைந்து விட்டதாக உங்களுக்குத் தெரியவில்லையா? அது மட்டுமல்லாமல் பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய், சௌதி, குவைத், கட்டார் போன்றவற்றில்  பஞ்சம் பிழைக்க  சென்ற தொழிலாளர்கள் நம்மவர் கூட அவசர தேவைகளுக்கு உற்றார் உறவினரை காண வரமுடியா தடையும் உள்ளது என்று அறியும் போது உண்மையிலேயே ஆளுநர்கள் மேல் கோபம் வரத் தானே செய்யும்.

திருடர்களை கல் நெஞ்சக் காரர்கள் என்று கூறுவோம். ஆனால் அந்த திருடன் கூட தான் திருடி வந்த பொருள் 1270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்ஸின் மருந்து குப்பிகள் என்று அறிந்து அந்த மருந்துக்காக கொரானா நோய்  பாதித்த ஹரியானா மக்கள் பேயாய் அலைவதினை அறிந்து தன் கைப்பட தனக்கு அவைகள் கொரானா நோய்க்கான மருந்து என்று தெரியாமல் எடுத்து வந்து விட்டதாகவும் அதற்காக மன்னிக்கவும் என்று ஒரு கடிதம் எழுதி வருத்தத்துடன்  திருடிய மருந்துக் கடைக்கு அதனை திருப்பி அனுப்பியது ஒரு மனிதாபிமான செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

 

உயிர் பலிகள் அதிகமானதாலும், நோயாளிகள் தனிமையில் மருத்துவனையிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்துததாலும் பல்வேறு பிரட்சனைகளை சந்திக்க நேருகின்றது. அவைகளில் சிலவற்றினை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அவைகள் பின் வருமாறு:

1) வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் 80 வயது முதியவர் மனைவிக்கு 70 வயது இருக்கும். அவருடைய இரு மகன்களும் பொறியாளர்களாக திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றார்கள். பெற்றோர் மட்டும் பள்ளிப் பட்டில் குடியிருக்கின்றார்கள். தந்தைக்கு கொரானா வந்து மருத்துவ மனையில் சேர்த்துள்ள தகவல் தெரிவிக்கப் படுகின்றது. அவர்கள் வரவில்லை. சமீபத்தில் தந்தை இறந்து விடுகின்றார். அதன் தகவலையும் பிள்ளைகளுக்கும், பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினருக்கும் தெரிவிக்கின்றார்கள், ஆனால் ஒருவர் கூட  வரவில்லை. சொந்த பிள்ளைகளோ  கொரானா நோயால் ஊர் மக்களே ஈமச் சடங்குகளை செய்து விடுங்கள் என்று கூறியதால் ஊர் மக்களே மகன்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்தார்களாம்.

2) சேலம் தாராமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது மகன் கொரானாவில் மருத்துவனையில் இறந்து விட்டானாம். அவருடைய தந்தை அந்த பிணத்தினை வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம், 'ஊர் மக்கள் கொரானா பிணம் என்று புதைக்க விடமாட்டார்கள், ஆகவே மருத்துவமனை நிர்வாகவே சேலத்தில் புதைத்து விடுங்கள்' என்று சொல்லி விட்டாராம்.

3) இதற்கு நேர்மறையாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆஸ்பத்திரியில் கொரானா நோயால் பாதிக்கப் பட்ட மகன் இறந்து விட்டான். அவனை ஈமக் காரியங்கள் செய்வதிற்காக எடுத்துச் செல்ல கையில் பணமில்லை. இவ்வளவிற்கும் ஜலந்தரில் 500 ஆம்புலன்ஸ் இருந்தும், தன்னார்வ நிறுவனங்கள் இருந்தும் ஓவருவரும் உதவி செய்யவில்லை. ஆகவே தந்தையே தனது தோளில் மகனுடைய பிணத்தினை சுமந்து சுடுகாடு எடுத்துச் செல்லும் காட்சி பத்திரிக்கை செய்தியாக வந்துள்ளது.

4)  ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் குழாயில் கோளாறுகளால் ஆக்ஸிஜன் சீராக வராமல் பலர் இறப்பு செய்திகள் மருத்துவ வசதிக்காக சென்றவர்கள் உயிர் பிழைத்து வருவார்களா  என்ற நம்பிக்கை மக்களிடமிருந்து மறைந்து போய் விடுகின்றது அல்லவா?

5) ஒரு மென் பொறியாளருக்கு கொரானா வந்து வீட்டில் தனிமை படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். அந்த பொறியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தான் நோயால் இறந்து விடுவோம் என்று மகனை காரில் அழைத்துச் சென்றவர் தனியாளாக வருவதினைப் பார்த்த மனைவி குழந்தை எங்கே என்று சண்டை போட, அப்போது தான் சொன்னாராம் குழந்தையினை நாடு ரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக. பெத்த மனது சும்மா இருக்குமா கணவர் சொன்ன இடத்திற்கு அவசரமாக சென்று அழுது கொண்டு இருந்த குழந்தையினை மீட்டு வந்தாராம்.

6 ) சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி  மருத்துவமனைகள் நோயாளிகளின்  படுக்கைகள் நிறைந்து வழிந்ததால் நோயாளிகளை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனை முன்பு நின்று நேரம் ஆக, ஆக ஒரு நோயாளி பின் ஒருவராக 10 பேர்களுக்குமேல் இறந்த சம்பவம் சென்னையில் நடந்தது அதிர்ச்சியூட்டும் செயல் தானே!

7) கொரானா வார்டுகளில் பெரும்பாலும் கூட உறவினர் இருப்பதற்கு அனுமதியில்லை. ஒரு வார்டில் ஒரு பெண் நோயாளி மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால் அந்த வார்டில் ஒரு ஆண் நர்ஸ் பணியமர்த்துப்பட்டுள்ளார். அந்த பெண் நோயாளியிடம் ஆண் நர்ஸ் தவறாக நடந்த சம்பவமும் நடந்து  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் கணவர் கொரானா நோயாளி, அவரை கவனிக்க அவர் மனைவி சென்றிருக்கின்றார். அவரிடம் அங்கு பணியில் இருந்த டாக்டர் பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். கொரானா களப் பணியாளர்களாக பணியாற்றிய 786 மருத்துவர்கள் முதல் அலையிலும், 270 மருத்துவர்கள் இரண்டாம் காலையிலும் இறந்தாலும், அதேபோன்று எண்ணற்ற நர்ஸுகள் பலியானாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவப் பெயர் ஏற்படுத்தி தருவது இயற்கைதானே!

கொரானா தொற்றுலிருந்து மீண்ட நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப் படுகின்றனர். அவர்களிடம் பயம், எரிச்சல், தனிமை மற்றும் கவலை பற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு தைரியம் ஊட்டி, அவர்களை புறக்கணிக்காது மறுபடியும் மனிதர்களாக வாழ வகை செய்ய வேண்டிய கடமை, பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக் காரர்களின் பொறுப்பு என்றால் மிகையாகுமா?

ஒரு மனிதன் சந்தோசமாக வாழ பொருள் மற்றும் ஆசை மட்டும் போதாது. பணத்தினை வைத்து விலையுயர்ந்த கார், உடை, செல் போன், வீடு, வித விதமான உணவு போன்றவையினை அடையலாம். அவைகளையெல்லாம் அதிர்ஷ்டத்தில் வந்தவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவையெல்லாம் தண்ணீர் போன்று கரைந்து விடும். ஒரு நாள் எங்களுடன் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு இளைஞருக்கு,  வசதியுள்ள வியாபாரி பேச்சு வாக்கில் கூறிய அறிவுரை என்ன தெரியுமா , 'எனக்கு பீரோவினை திறந்தால்  ரூபாய் நோட்டு கத்தையாக இருக்க வேண்டும், அப்போது தான் எனக்கு சந்தோசமாக இருக்கும்' என்பது தான். அவருக்குத் தெரியாது அது தண்ணீர் போல கரைந்து விடுமென்று. அவைகள்  இருந்தும் சில பணக்காரர்கள் நிம்மதியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வதினைக் காணலாம். மனம் என்பது அலை பாயும் தகுதி பெற்றது. மூளைக்கும், நெஞ்சுக்கும் இடையே இணைப்புப் பாலம் சீராக இருந்தால் தான் அமைதி பெறமுடியும். ஆனால் மனமுடைந்த கொரானா காலமான இந்த நேரத்தில் அவர்களுக்கு மன அமைதியும் சந்தோசத்தினையும் கொடுக்க வேண்டியது நமது கடமையல்லவா?

உங்களுக்கெல்லாம் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் பற்றி தெரிந்து இருக்கும். அவர் உலகை ஆள நினைத்த மகா சக்ரவர்த்தி அலெக்ஸ்சாண்டர் குரு என்று சொல்வீர்கள். ஆனால் அவர் ஒரு தத்துவ ஞானி என்பது பலருக்குத் தெரியாது. அவர் என்ன போதித்தார் என்றால், 'நீங்கள் சங்கடத்திலும் சந்தோசமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் என்றுதான். அவர் போன்று தான் மேற்கத்திய தத்துவ மேதைகளான Marcus Aurelius, Maichael De Montaigne, Friedrich மற்றும் Simon de Bevouir போன்றோர் துன்பத்திலும் இன்பமாக இருப்பது எப்படி என்று போதித்துள்ளனர்.

தத்துவ படிப்பில் Stoicism என்று சொல்லும்போது விருப்பு வெறுப்பில்லாத மனதினை அடைவது என்று பொருள். ஒருவருக்கு கொரானா நோய் தொற்று இருக்கலாம். ஆனால் அது ஒரு உடல் நலமில்லாதது அல்ல. கொரானா நோயால் ஏற்படுகின்ற அழிவு எண்ணத்தினை வெற்றி கொண்டு நாம் வாழ வேண்டும் என்ற Essententialism  மன கோட்டையினை உறுதியாக, அறிவுடன்  கட்ட வேண்டும். அதற்காக கொரானா என்ற பயம், கவலை, தனிமை ஆகியவற்றினை தூக்கி எறிந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரார் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையென்றால் கொரானா நோயால் பாதித்தவர், கவிஞர் கண்ணதாசன் பாடியதுபோல, 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ' என்று எண்ணி, எண்ணி, மனம் புழுங்கி நடைப்பிணமாக மாற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த உலகம் அவசரமானது, அதில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்னு விரக்தியாக இருக்கக் கூடாது. மாறாக நோயிலும் வென்று காட்டுவேன் என்ற மன உறுதி வேண்டும்.

வாழ்க்கையின் சிரமமான நேரத்தில் மனதினை இறைநோக்கி நிறுத்தி, கவலைகளை மறந்து, தான, தர்மம் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டாலும், அன்பு, பாசத்துடனும், அடுத்தவரிடம் வெறுப்பு காட்டாமல் வாழ பழகிக் கொண்டால் உண்மையிலே நீங்கள் சன்தோஷமாக வாழ்க்கை என்ற படகினை  வெற்றி கரமாக செலுத்துவீர்கள்!