Thursday 25 September, 2014

முஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்!

ஒரு மாதத்திற்கு(2014 செப்டம்பர் ) முன்பிலிருந்து தமிழ்நாடு முஸ்லிம்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட செய்தி சுவர்களில் ஒட்டப்பட்ட சவால், சவால் என்ற செய்தி தான். அதுவும் ரூ. 50 லட்சம் பந்தயச் சவால். சபாஸ் சரியானப் போட்டி என்று குதிரைப் பந்தய ரசிகர்கள் மத்தியிலே ஒரு ஆனந்தம். அது என்ன போட்டி என்றால் சூனியத்தில் வெற்றி பெற்றால் பந்தயப் பணம் தருவதாக வாக்களிப்பு தான். அல்குரானில்' ஐயமே ஜக்லியா' என்ற இருட்டுக் காலத்தில் ஏக இறைக் கொள்கையினை நிலை நாட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் நபி மார்களுக்கு சூனியத்தினை வெல்லக் கூடிய சக்திகளைப் படைத்தான் என்று கூறப் பட்டுள்ளது. அதில் ஒன்று தான் மூஸா அலைவசல்லத்திற்கு கைத்தடியினை வீசி எறிந்து அத்தனை பாம்புகளையும் விழுங்கக் கூடிய சக்தியினைக் கொடுத்தான் என்ற வசனம்(7.116) வருகின்றது. ரசூலல்லாஹ் சூனியக்காரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சூராவும் (113) உள்ளது. கண்ணேறு நாவேறு போன்றவற்றிளிருந்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரசூலுல்லாஹ் சொன்னதாக இப்னு அப்பாஸ்(முஸ்லிம் 5427) கூறியுள்ளார். 
கல்வி அறிவின் பயனாக விஞ்ஞான உலகில் சூனியம், கண்ணேறு நாவேறு போன்ற இருட்டுக் கால நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக கடலில் கரைந்த பெருங்காயமானது. இஸ்லாமிய மார்க்கத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை என்பதும், பில்லி சூனியம், ஒழித்து, கருப்பு, தாயத்து போன்ற அடையாளங்கள் பெரும்பாலும் மறைந்தாலும், சில இடங்களில் இன்னமும் கடைப் பிடித்து வருவது வேதனைக் கூறிய செயல்தான் என்றால் மறுக்க முடியாது. வேற்று மதத்தில் இது போன்ற செயல்களினை முறியடிக்க பெரியார் இ.வே.ரா.போன்றோர் தலை எடுத்தனர். அவரை எந்த சூனியக் காரனும் வெல்ல முடியவில்லை என்பது அவர் கடும் எதிர்ப்புக்கிடையே 94 வயது வரை வாழ்ந்து சாதனைப் படைத்தார். அப்படி இருக்கும்போது வேற்று மதத்து ஒருவர் சவால் விட்டுவிட்டார் என்றுரூ 50 லட்சக் கணக்கில் சவால் விடுவது சூது விளையாட்டில் பங்கெடுப்பது போன்ற செயலாகாதா? இஸ்லாமிய மார்க்கத்தில் வேற்று மதத்தினவரை வம்பிற்கு இழுக்க அனுமதி உள்ளதா? வேற்று மதத்தினவர் வழிபாட்டினை கேலி செய்வதிற்கும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதா? அவர்கள் மதம் அவர்களுக்கு, இஸ்லாமியர் மார்க்கம் இஸ்லாமியற்கு. ஒருவர் கொள்கையில் ஒருவர் தலையிடுவது இந்திய மத சார்பற்ற கொள்கைக்கு எதிரானது தானே! சூனியப் பிரச்சனையில் யார் வென்றாலும் ஊரெங்கும் தம்பட்டம் அடிப்பதால் மத  மோதல்கள், மன இறுக்கம் ஏற்படாதா என்று யோசிக்க வேண்டுமல்லவா? இனிமேலும் இதுபோன்ற விசப் பரிட்சையில் ஈடுபட்டு சமுதாயம் நிம்மதியுடன் வாழக்  கெடுதல்  செய்யக்கூடாது. சிலர் பள்ளி வாசல் அருகில் இருந்தாலும் சும்மாத் தொழுகைக்குக் கூட பள்ளிவாசல் நிழல் படக் கூடாது என்பவர்களைத் திருத்தினால்அல்லது அவர்களாவது திருந்தினால்  நலமாக இருக்குமல்லவா?
இரண்டாவது பிரச்சனையாக முஸ்லிம்கள் முன்பு வைத்தது , 'லவ் ஜிஹாத்' அல்லது 'ரோமியோ  ஜிஹாத் ஆகும்'.வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் 2014 ஆகஸ்ட் மாதம் நடந்தசட்டசபை இடைத் தேர்தலின் பொது  பி.ஜே.பி.எம்.பி. யோகி அதித்யனந்து ஓட்டுப் பெற குரல் எழுப்பி உள்ளார். அது 'பிலசிங் இன் டிச்கைஸ்' என்பது போல பூமராங்காகி, அந்தக் கட்சி படுதோழ்வி அடைந்த கதைப் படித்திருப்பீர்கள்.  லவ் ஜிஹாத் என்றால் முஸ்லிம் இளைஞர்கள் வேற்றுமதப் பெண்டிரை வலைவீசி மயக்கி முஸ்லிம் மார்க்கத்தில் மதமாற்றம் செய்து திருமணம் செய்வது.இதுபோன்றக் குற்றச் சாட்டு கேரளம் மற்றும் மங்களூர் பகுதிகளில் 2009ஆம் ஆண்டிலிருந்து கிளப்பப் பட்டது. கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கேரள சட்டசபையில் 26.06.2014 அன்று கூறும்போது 2006ஆம் ஆண்டு முதல் 2014 வரை முஸ்லிம் இளைஞர்கள் வேற்று மதத்துப் பெண்களை திருமணம் செய்தது 2667 நபர்கள் தான் என்று புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளார். காடு விட்டு காடு பறக்கும் பறவைகள் எல்லா மதத்திலும் இந்த நவீன உலகில் உள்ளனர் என்று சான்றோர் புரிந்து கொள்ளாமலில்லை என்று உ.பி. சட்டசபை உப தேர்தல் முடிவு காட்டி விட்டது எனலாம்.
பின் ஏன் இந்தக் கருத்து வேறுபாடு இந்த அரசியல் மற்றும் சமூதாய  கட்சிகளுக்கு என்ற காரணத்தினை இங்கே  பார்க்கலாம்:
1) சமீப காலங்களில் உணர்ச்சிப் பூர்வமான மனதுடன் வேற்று மதப் பெண்களை அழகு மற்றும் பணபலத்தால் கவர்வது.
2) இந்தியத் துணை கண்டம் 1947ஆம் ஆண்டு பிரிந்தபோது பாகிஸ்தானில் வாழும் இந்து பெண்களை முஸ்லிம்கள் சூறையாடியதாகவும், இந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களை இந்துக்கள் சூறையாடியதாகவும் அப்பொதுக் குற்றச் சாட்டுகள் எழுந்தன.

சமூக நிலைப்பாடு: 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90 சதவீதம் இந்தியாவில் பெற்றோர் பார்த்துத் தான் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு இளைஞர்களிடையே காதல் திருமணம் தான் பிரதானமாக தெரிந்தது. அதற்கு பச்சக் கோடி காட்டுவது போல 2012ஆம் ஆண்டில் உ.பி. மாநில அரசாங்கம் திருமணம் ரிஜிஸ்டர் செய்யும்போது மதத்தின் பெயர் பதியத் தேவையில்லை என்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இஸ்லாம் மார்க்கத்தில் திருமணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே செய்யப்படும் ஒரு காண்ட்ராக்ட் என்ற வாழ்க்கை ஒப்பந்தம். முஸ்லிம்கள் கிருத்துவப் பெண்களையோ அல்லது யூதப் பெண்களையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்துப் பெண்களை முஸ்லிம்கள் தங்கள் மார்க்க வழிபாட்டுக்குள் கொண்டு வந்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே தான் முஸ்லிம் இளைஞர்கள்  இந்துப் பெண்களை திருமணம் செய்யும்போது இஸ்லாமிய ஓரிறைக் கொள்கைக்குள் கொண்டுவந்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருப்பதால் அது போன்ற சர்ச்சைக்குள்ளான திருமணங்கள் நடக்கின்றன. அது ஒரு போதும் கட்டயத்திருமனமாகாது.
இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க வி.எச்.பி.இயக்கத்தினர் 'ஹிந்து ஹெல்ப் லைன்' வைத்துள்ளனர். அதுபோன்று கிருத்துவ மதத்தினவரும் 'கிறிஸ்டின் அசோசியேசன் ஆப் சோசியல் அக்சன்'என்ற அமைப்பினை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் தங்கள் கண் முன்னே தங்கள் வீட்டுப் பெண்கள் சிட்டாய்ப் பறக்கும் பறவைகளாக இருப்பதினை தடுக்க ஒரு இயக்கம் ஏற்ப்படுத்த வில்லையே ஏன் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. சூனியத்திற்கு சவால் விடும் சமூதாயத் தலைவர்கள் தனிக் கவனம் இதில் செலுத்துவார்களா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
மூன்றாவதாக அல்கடா இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்ற செய்தி:
வளைகுடா நாட்டில் 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற அமைப்பும்  அதன் தலைவர் அபூபகர் அல்பாக்தாதியு ஒரு சவாலாகி இருக்கிறது. மறு பக்கம் 'அல்கடா' என்ற அமைப்பின் தலைவர் 'சாவின் அல் சுவாரி' இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு அழைப்பும் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து பாரதப் பிரதமரும் இந்திய முஸ்லிம்கள் நாட்டுப் பற்றில் உள்ள பிடிப்பினை தனது அறிக்கையில் கூறியுள்ளார். இஸ்லாமிக்  ஸ்டேட் மற்றும் அல்கடா தலைவர்கள் 'உங்களுடைய உரிமைக்காகவும், மதிற்பிக்காகவும் போரிடுவது தவறில்லை’ என்று சொன்னாலும், மெஜாரிட்டி இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தங்களை அர்பனிக்கக் கூடியவர்கள் என்பதினை யாரும் மறுக்க முடியாது. காஸ்மீர், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களைக் காரணம் காட்டி இந்திய மக்களை மத வேறுபாட்டால் பிரிக்கமுடியாது. இஸ்லாமிய மார்க்கமும் அப்பாவி மக்களை கொல்வதிற்கும், நாசவேலை, மற்றும் சதி போன்ற ஐந்தாம் படை வேலைகளை ஒருபோதும் அனுமதித்ததில்லை.
இந்திய முஸ்லிம்கள் இந்திய மண்ணில் அன்னியப் படையினை எப்படி எதிர்த்து நின்று போரிட்டார்கள் என்பதினை வங்காள சிங்கம் சிராஜுட்தௌலா 1756 ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையினை ஆங்கிலேயரிடமிருந்துக் கைப்பற்றினார் என்பதினையும், மைசூர் புலியான திப்பு சுல்தான், ஔத் மாநில பெண்சிங்கம் பேகம் ஹஸ்ரத்,1857 ஆம் ஆண்டு முதலாம் விடுதலைப் போருக்கு வித்திட்ட பகதூர் ஜ ஜாபர் போன்றோருடைய வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் இந்திய முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அந்நிய அரசினை எதிர்த்துப் போரிட்டார்கள் என்று. அத்துடன் மகாத்மா காந்தியுடன் இனைந்து அலி சகோதரர்களும்,எ, எல்லைக் காந்தி என்று அழைக்கப் பட்ட கான் அப்துல் கபார்கானும்,ஷேக் அப்துல்லா, மாடர்ன் கல்வியின் தந்தை மௌலானா அபுல் கலாம் அஜாத், சாகிர் ஹுசைன் போன்றோரும், இந்திய நாடு எங்கள் நாடு என்று குரல் கொடுத்த கண்ணியமிகு காயிதே மில்லத் போன்றோரும் இந்திய நாட்டுப் பற்றுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

இந்திய சுதந்திரம், இந்திய தேசிய இயக்கமும், கிலாபாத் இயக்கமும் இனைந்து பெறப்பட்டது என்பதினை வரலாற்று ஆசிரியர்கள் புத்தகம், புத்தகமாக எழுதியள்ளனர். இந்திய முஸ்லிம்கள் வெறும், 'வந்தேமாதரம்' என்று சொன்னால் தான் தேசப் பற்று மிக்கவர்கள் என்று மாற்று மதத்தவர்கள் எண்ணக் கூடாது. மாறாக மற்ற மதத்தினவரை மதித்து,வெறுப்பினை விட்டொழித்து, மதத்தினை வைத்து அரசியல் லாபம் பெறாமலும், தீங்கிலைக்காமலும், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்தால், மெஜாரிட்டி, மைனாரிட்டி என்று வேறுபாடு கலைந்தால் இந்திய மக்கள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்றால் மறுக்க முடியாது. ஆகவே இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் துர்போதனைகளை ஏற்க மாட்டார்கள் என்று உரக்கச் சொல்லலாமா?.