Sunday 20 May, 2018

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
தென்  கொரியா பியாங் சங்கில்  2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்பு தென் கொரியா-வட கொரியா இணைந்து பணியாற்ற முடிவெடுத்து விட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தது உலகமே அதிசயமாக திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால்  தென் கொரியா அமெரிக்கா ஆதரவுடன்  இருக்கும் நாடு. வட கொரியா கிம் ஜோங் என்ற ஒரு இரும்பு மனிதன் பிடியில் இருக்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சந்ததியார் நாடு. இரு துருவங்களை இணைத்தது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்றும் பறை சாற்றினர் என்று உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-வட கொரியா ஜனாதிபதிகள் வருகிற ஜூன் மாதம் 12 ந் தேதி சிங்கப்பூரில் சந்திக்கப் போவதாக அதிகாரப் பூர்வ செய்திகளும் அறிவிக்கின்றன.
இது எவ்வாறு நேர்ந்தது என்று சிறிது பின் நோக்கி பார்ப்போமேயானால் தெரியும் வட கொரியாவின் வலிமைப் பற்றி. நுகிளர் அணு ஆயுதங்கள் சோதனைகள் தடை இருக்கும் போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுத பரிசோதனைகள் எத்தனை முறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தாலும் அதனை நடத்திக் காட்டி,  அமெரிக்கா ஹவாய்  தீவினையே அழிக்கும் திறமை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று வெறும் பயமுறுத்தல் மட்டுமல்ல மாறாக அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதத்தினையும் வெடித்து உலகமே மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு மாபெரும் சக்தியாக வட கொரியா விளங்குகிறது. இவ்வளவிற்கும் அந்த நாடு பணக்கார நாடு அல்ல. மாறாக மக்கள் உடல் உழைப்பினால் முன்னேறி அமெரிக்கா எத்தனை தடை விதித்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாகா திகழ்கிறது. ஆகவே தான் அமெரிக்காவும் வட கொரியாவிடம் சமரச பேச்சுக்கு அழைப்பு விட்டுள்ளது.
இதனையே சற்று இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலைகளை எண்ணிப் பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் எண்ணெய் வளம் பெருக்கி ஓடுகிறது. வெளிநாடுகளுக்கு எண்ணெய்களை விற்பது மூலம் வருமானம் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல்களும், ஆடம்பர வில்லாக்களும், ஆடை ஆபரணங்களும், செல்வ குளிப்பில் மூழ்கிக் கிடக்கின்றனர். தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டினர் உதவி தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏன் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும்  கார்களை ஜொலிக்கும் தங்க-வைர வைடூரியங்கள் கொண்டு அலங்கரித்தும், தங்கள் கழிவு டாய்லட்டுக்கு தங்க முலாம் பூசும் அளவிற்கு கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண உலக முஸ்லிம் ஒருவேளை கஞ்சிக்கே தகிடு தத்தம் போடுகிறான் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பணக்கார முஸ்லிம் நாடுகள் கூட அணுவினை கொண்டு ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த முடியாத பரிதாப நிலை உள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் வெளி நாட்டுக் கல்விகள் கற்றாலும் அதனை பயன் படுத்துவதில்லை. ஏனென்றால் பாட்டன், பூட்டன் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது என்ற ஆணவத்தால். அவ்வாறு எண்ணியதால் தான் இராக், லிபியா போன்ற நாடுகள் அழிந்து கொண்டுள்ளது. சிரியா போன்ற நாடுகள் ஈரான், ரஷியா போன்ற நாடுகளின் உதவியால் நிலைத்து நிற்க முடிகிறது. வட கொரியா  போன்று சொந்தக் காலில் பலம் பெறமுடியா நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளை ஆட்டிப் படைக்க இரு துருவங்களாக ரஷியாவும், அமெரிக்காவும் திகழ்வதால் தான். சீன நெடுங்காலம் இரும்புத்திரையில் இருந்து இப்போது தான் தன் வலிமையினை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனாவும் மூன்றாவது வல்லரசுக்கு சி ஜின்பிங் தலைமையில் கோலோச்சும் என்றால் மிகையாகாது.
இரு துருவங்களாக இருந்த ரஷியாவும், அமெரிக்காவும் ஆயுத போட்டியில் இறங்கியதால் ‘கோல்டு வார்’ என்ற சகாப்தம் ஆரம்பமானது. அமரிக்காவினை ஆண்ட ரீகன் காலத்தில் அமெரிக்கா வல்லமை பெற்றதால் ரஷியா ஜனாதிபதி கோபர்ச்சேவ் ஈடு கொடுக்கமுடியாமல் டிசம்பர் 25, 1991அன்று சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதாக அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அமெரிக்கா உலக வல்லமை பெற்ற முடிசூடா மன்னராக திகழ்ந்தது. ஆனால் 2000 ஆண்டு புடின் ரசியாவின் ஆட்சிக்கு வந்த பிறகு பக்கத்து செச்சென்யா முஸ்லிம்  குடியரசு  ரசியாவால் கைப்பற்றப்பட்டது. அத்தோடு நில்லாமல் அமெரிக்கா ராணுவம் ஈராக்  சதாம் ஹுசைன் மனிதக்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈராக்கினை கைப்பற்றி, சதாம் ஹுசைன் சிறைப்பிடிக்கப் பட்டபோது ஜார்ஜ் புஸ்ஸை ரசிய புடின் உங்களது போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அண்டை நாடான  ஈரானுக்கோ, குவைத்துக்கோ, வட கொரியாவிற்கோ நீடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரசியாவினை வலிமை உள்ள நாடாக ஆக்கினார்.

இதுதான் சமயமென்று இரான் ரசியாவுடன் 27 பிப், 2005 அன்று அணு உற்பத்தி சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன் பின்பு அமெரிக்கா-பிரான்ஸ் கூட்டுப் படை லிபியாவின் மீது தன் கவனத்தினைத் திருப்பி 2011 லிபிய நாடு பிடிக்கப் பட்டதோடு அதிபர் கடாபியும் கொல்லப் பட்ட கதை உங்களுக்குத் தெரியும்.
ருசியாவின் புடின் தனது அண்டை நாடான உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014 ஆண்டு கைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், பக்கத்து நாடான  போலந்து நாட்டையும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் உங்கள் நாட்டினை ஒரு வார காலத்திற்குள் தன்னால் பிடிக்க முடியும் என்று அறைகூவல் விட்டது, அதனை கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்தது ஐ.நா.பொது சபை மட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தான் என்றால் மிகையாகாது.
ரசிய,அமரிக்கா ஆயுத போட்டியால் அழிந்தது ஈராக், லிபியா மற்றும் சிரியா நாடுகள். ஈராக்கில் ஷியா ஆட்சி ஈரான் ஷியா அரசு ஆதரவுடன் நிலை நாட்டியதையும், சிரியா நாடு  ஈரான் மற்றும் லெபனான் கொசுபுல்லாஹ் அமைப்புடன் கூடிய ஷியா ஆட்சி நடத்தியும், லிபியாவில் நிலையில்லா மகனே சமத்து என்று பல பிரிவு ஆட்சியையும் நடத்த வழிவகுத்தது.
ஐநா பொதுச்சபை 29 நவம்பர் மாதம், 1947 பாலஸ்தீன நாட்டினை இரண்டாக பிளந்து இஸ்ரேல் என்ற யூத நாட்டினை உருவாக்கியதில் மூலம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப் பட்ட பரிதாப நிலை வந்து விட்டது. இன்னும் பாலஸ்தீன தனி நாடாக ஐநா அங்கீகரிக்க முடியாத கை எழாத நிலை உள்ளது. இதுவரை ஜெருசலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொது வழிபாடும் இடமாக இருந்ததினை மாற்றி ஜெருசலத்தில் அமெரிக்கா தூதரகம் அமைத்தது மூலம் ஜெருசலம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தம் போல ஆக்கி விட்டது. அந்த முடிவை எதிர்த்த ஆயிதமில்லா நிராயுத பாணியா பாலஸ்தீன மக்களை 65 பேர்களை கொன்றும், ஆயிரக்கணக்கில் காயம் ஏற்படுத்தியும் செய்துள்ளது இஸ்ரேல், அதனை தட்டிக் கேட்க எந்த நாடும் முன் வரவில்லை. முஸ்லிம் செல்வ நாடான சவுதி அராபியா இளவரசரோ, பாலஸ்தீனர்களைப் பார்த்து ‘நீங்கள் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சொல்படி கேளுங்கள் இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு இருங்கள்  என்று அறிவுரை கொடுக்கின்றார்’. இதைவிட அந்த நாடு வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்கலாம்.

ரசிய ஆயுதப் போட்டியால் சிரியாவிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் ஷியா அரசு அங்குள்ள மற்ற பிரிவினரை மனித கொல்லி ஆயுதங்கள் மூலம் கொன்றும், குண்டு மழை பொழிந்தும், மாட மாளிகைகள் தகர்க்கப்பட்டும், காயம்பட்டோர் சிகிச்சை பெரும் மருத்துவ மனை தகர்க்கப்பட்டும், மின்சாரம் நிறுத்தப் பட்டும், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்ற நிலை உண்டாக்கியும், தன் நாட்டு மக்கள் கடலை நோக்கி ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு காடோ செடியோ என்று ஓடும் பரிதாப நிலை காண நேரும்போது கல்நெஞ்சையும் கரைக்கின்றது. இஸ்ரேல் குண்டு வீச்சில் பத்து மாத பாலஸ்தீன பிஞ்சு குழந்தை இறந்த செய்தி கேட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியுள்ளது. ஈராக், சிரியா, லிபிய, பலஸ்தீன மக்கள் படகுகளில் பொதிமூட்டைபோல ஆழமான கடலில் பயணம் மேற்கொள்ளும்போது படகு பாரந்தாங்காது கவிழ்ந்து கடலே கபர்ஸ்தானாக ஆகும் காட்சி காண்போர்  நெஞ்சை உறுக்கிவிடுகிறது.
அந்த நாட்டிலுள்ள பச்சிளம்  பாலகர்கள் தங்களுக்கென்று ஒரு புகலிடம் இல்லையே, நல்ல உடை இல்லையே, உண்ண ஒரு வாய் உணவு இல்லையே,' ஓதுக'  என்று அல்லாஹ் சொன்னானே அந்த கல்வியைக் கற்க ஒரு பள்ளி இல்லையே என்று ஏங்கி அழும்போது தாயுள்ளம் படைத்த யாருக்கும் இரக்கம் வரும் ஆனால் ஏன் அந்த அதிகார கும்பலுக்குத் தெரியவில்லை என்று இன்னும் புரியாத புதிராக உள்ளதே!
அந்த அதிகார கும்பலுக்குப் புரிய வேண்டும் என்று தான், வட கொரியா அதிபர் தானும் வல்லரசு நாடாக உருவெடுத்தால் தான் தன்னை மதிப்பார்கள் என்று தனது மக்கள் தேவையினை சுருக்கி நாட்டினை வலிமைப் படுத்த அதி நவீன ஆயுதங்களை தயாரித்து ஆதிக்க நாடான அமெரிக்காவிற்கு சவால் விட்டார். அதன் பயன் தான் அவருக்கு தென் கொரியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு, சிங்கப்பூரில் அமெரிக்கா ட்ரம்ப் அங்கே வந்து வட கொரிய அதிபரை சந்தித்து சமரச பேச்சு என்ற செய்தி.
முஸ்லிம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வட்டலப்பம் ஆகும். அது முட்டை, தேங்காய் பால், சீனி ஆகியவற்றினை கொண்டு சமைத்து சுவையாக உண்ணக்  கூடிய உணவு. அந்த உணவு போல உணவு உண்ணும் விதமாக வட கோரிய அதிபருக்கு சிங்கப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு. அதுவும் யார் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர். ஆனால் சொந்த வீட்டினை, நாட்டினை, உண்ண உணவு, உடுக்க உடை, படிக்க பள்ளிக்கூடம், காயம்பட்டோர் சிகிச்சை பெற மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு வயிறு முட்ட உண்டவன் செமிக்காமல் போடும் புளிச்சேப்பம் தான் என்றால் அந்த நிலை மாற வேண்டுமா என்று கேட்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது முஸ்லிம் நாடுகளுக்கு,
எவ்வாறு ரசூலுல்லாஹ் தனி மரமாக இருந்து இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி நிலை நிறுத்தி  அராபிய, ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகள் வரை முஸ்லிம் ஆட்சி நிலை நிறுத்தப் பட்டது என்று சிறிது சிந்திக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் 'ஓதுக' என்று கட்டளையிட்டான் எதற்காக, முஸ்லிம் நாடுகள் தங்களுடைய செல்வத்தினை விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுத்தி வட கொரிய நாடு  போன்று  நவீன ஆயுதங்கள் தயாரித்து, பொறியிலில் நவீனங்கள் செயல் படுத்தி தன்னிறைவு நாடுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மட்டும் தான் முஸ்லிம்கள் உலகில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்றால் மிகையாகுமா!