Tuesday 25 August, 2020

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே! !

 

                        

         ( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார் போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை கையில் வைத்துக் கொண்டு சிரி இந்த சாக்கிலேட்டு தருகிறேன் என்பார். அந்த குழந்தையும் சிறிது சிரித்தவுடன் ஒரு க்ளிக் என்ற சத்தத்துடன் அவர் காரியம் முடிந்து விடும். இதேபோன்று தான் சிலர் எப்போதும் முகத்தினை கடு கடுப்பாக வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து நண்பர்கள் விளையாட்டாக சொல்வார்கள், அவருக்கு சிரிப்பதற்கு காசு கொடுக்க வேண்டுமென்று. அப்படிப் பட்டவர்களிடமிருந்து கவலையை எப்படி விரட்டி சாதாரண மனிதராக செய்வது என்று அறிவு சார்ந்த மனோதத்துவ அறிஞர்கள் சில வழிமுறைகளை சொல்லியுள்ளார்கள், அவைகள் என்னென்ன என்று கிழே பட்டியலிடுகிறார்கள். அவைகளை நாம் காணலாம்.

            கவலைகளுக்கு மனோதத்துவ நிபுணர் கிறிஸ்டின் புஹார் தன்னுடைய 'The worry workout' என்ற புத்தகத்தில் மூன்று காரணங்களை சொல்லியுள்ளார். அவைகள் : 1) கவலை 2) மன அழுத்தம், 3) பதட்டம் ஆகியவற்றினை குறிப்பிடுகிறார்.

1) கவலை ஏற்பட முக்கிய காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லது ஏற்படுகின்ற நேர்மறை எண்ணெங்கள் ஆகும்

2) மன அழுத்தம்: நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் நமது செயல் முறைகளில் மாற்றம் ஏற்படுகின்றது.

3) பதட்டம் எவ்வாறு ஏற்படுகின்றது என்றால் நமது அன்றாட வாழ்க்கையில் கவலை ஏற்படும்போது மனதளவில் மற்றும் உளவியல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு அதனால் ஒரு பாதுகாப்பின்மை பின் தொடரும்போது பதட்டம் ஏற்படுகின்றது.

கவலை மனதளவில் இருக்கும்போது மன அழுத்தத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. அதனுடைய பக்க விளைவுகள் தூக்கமின்மை, மற்றும் அன்றாட நடவடிக்கையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கையாக பதட்டம் ஏற்படுகின்றது.

            கவலையின் அளவு: ஒரு மனிதனுக்கு கவலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அளவிடவேண்டும்என்றால், உங்களுடைய அலுவகத்தில் ஒரு முக்கியமான பெரிய கருத்தரங்கு வைத்திருப்பார்கள். அதற்காக நீங்கள் இரவு, பகல் என்று பாராமல் கண் விழித்து அறிக்கை தயார் செய்யும்போது இரவு தூக்கத்தினை மறந்து, காலம்தாழ்த்தி உணவருந்தி, நோய்களுக்கான அன்றாட மருந்து வகைகளை காலந்தாழ்த்தி எடுக்கும்போது படபடப்பு ஏற்பட்டு சில சமயங்களில் உடல் சுகவீனமாவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்துவிட்டால் உலகமே  இருண்ட மாதிரி நினைத்து கவலை கொள்வீர்கள். அவைகள் எல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் நடப்பது தான் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையினை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் கவலைகளால் நன்மையையும் நடக்கக் கூடும், அவைகள் என்னெவென்றால் உணவினை நேரத்தோடு உண்பீர்கள், மருந்தினை காலம் தாழ்த்தாது எடுத்துக் கொள்வீர்கள். கார் ஓட்டும்போது சீட் பெல்ட்டினை காவலர்கள் பிடிப்பார்கள் என்று மாட்டிக் கொள்வீர்கள். இரு சக்கர வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிவீர்கள். வெளியில் நடமாடும் போது முகக் கவசம் மறக்க மாட்டீர்கள். நீங்கள் படுக்கப் போகுமுன் தேவையான லைட்டுகளைத் தவிர மற்றவையினை அனைத்து விடுவீர்கள். சமையல்  கேஸினை மூடி விடுவீர்கள். வெளியூர் செல்லும்போது பூட்டு சரியாக பூட்டினோமா என்று பூட்டினை பல தடவை இழுத்துப் பார்ப்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர் புஹார் கூறுகின்றார்.

சில சமயங்களில் தேவையில்லாமல் கவலைப் படுவீர்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து சிந்திப்பீர்கள் என்றால் ஆகா நாம் அப்படி கவலை கொண்டிருக்கக் கூடாது என்று தெளிவாகும்.

கவலைகளை எவ்வாறு சமாளிப்பது:

சில சமயங்களில் பல வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதனால் ஒரு வித படபடப்பு ஏற்படும். அதேபோன்று ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென்றால் ஒரு பட்டியலிட்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என்று அமைதியாக தீர்மானியுங்கள். அப்படி தீர்மானித்தால் உங்கள் படபடப்பு குறையும் என்று, மனோதத்துவ நிபுணர், 'வந்திதா துபே' கூறுகிறார்.

  சில சமயங்களில் நமது சக்திக்கு மேல் உள்ள காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக கவலை ஏற்படும். அதனைத் தொடர்ந்து பயம் ஏற்படுவதும் இயற்கையே. அதுபோன்ற நேரத்தில் எப்படி எட்டாமல் இருக்கும் திராட்சை கனியினை தாவி, தாவி களைத்து பலிக்காத நரி ,'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' என்று சென்று விடுகின்றதோ அதேபோன்று அப்படிப் பட்ட சமயங்களில் அகலக் கால் வைக்காமல் இருப்பது நன்று.

நம்மை சுற்றி குழப்பமான சம்பவங்கள் ஏற்படும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனை முன்னிட்டு தொலைக் காட்சியினை பார்ப்பதும், செல்போன் தகவல்கள் பார்ப்பதும் என்ற அமைதியின்னைக்கு ஆளாக நேரிடும். அந்த நேரத்தில் எது சரியான தகவல் என்று பகுத்தறிந்து அமைதியாக செயலில் இறங்க வேண்டும் என்று கொல்கத்தா மனநல ஆஸ்பத்திரி சீனியர் டாக்டர் ஜாய் ரஞ்சன் கூறுகிறார்.

நமக்கு வயதாகும்போது நோய்களால் சங்கடப் பட வேண்டுமே, அப்படி வந்தால் நமது மருத்துவ செலவிற்கு என்ன செய்ய முடியும் என்று இப்போதே நினைத்து குழம்பி இருக்கக் கூடாது. அது காலன் செய்யும் செயல் என்று அதனையும் எதிர் நோக்க தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் கோபம், ஏமாற்றம் போன்ற எதிர் மறையான செயல்கள் எதிர் கொள்ள நேரிடும். அவைகளெல்லாம் ஒவ்வொரு சராசரி மனிதனும் எதிர்கொள்ளும் செயல்கள் தான் என்று எண்ண வேண்டும். அவைகள் எல்லாம் நீங்கள் மட்டும் தான் சந்திக்கின்ரீர்கள் என்று எண்ணக் கூடாது என்று மனோதத்துவ நிபுணர் துபே கூறுகின்றார். ஒரு காகிதத்தை எடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் என்னென்ன காரியங்களுக்காக கவலைப் பட வேண்டியிருக்கும் என்று பட்டியலிட வேண்டும். அவைகளில் ஒரு சில தான் நீங்கள் கவலைப் பட வேண்டியதாக இருக்கும். ஆகவே வாழ்க்கையினை கவலைப் பட்டே காலந்தாழ்த்தக் கூடாது.

கனடா நாட்டில் , 'Quiet company' என்ற தியான கூடத்தினை நடத்தும், 'எமிலி திரிங்'(Emily Thring) என்ற நிபுணர் சொல்லும்போது உங்கள் கவலையைப் போக்கும் மருந்து என்னெவென்றால் தியானம் மூலம் மனதினை ஓர் அமைதி நிலைக்கு கொண்டு வருவதுதான் என்கிறார். மூச்சினை இழுத்து வெளியே விடுவதும், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியினையும் அவர் சிறந்த மருந்தாக சொல்கின்றார்.

நீங்கள் சமீப காலமாக செய்தி தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் கொரானா நோய், அதனால் பாதித்தவர், இறந்தவர் என்ற பட்டியல் உலகிலே நீண்டு கொண்டே போகின்றது என்று அறிவீர்கள். கொரானா நோய் பாசிட்டிவ் என்றால் நாம் செத்து விடுவோம் என்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் இறங்கி சிலர் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்து விடுவதினையும் காணலாம். மனிதனைப் படைத்த இறைவன் நோய்களுக்கான மருந்துகளையும் கண்டு பிடிக்கும் திறமையையும் கொடுத்திருக்கின்றான் என்ற போது பின்பு ஏன் அந்த கோழைத் தனமான முடிவையும் எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் மரணத்தினையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் பழங்குடியினரிடையே voodu என்ற ஒரு பழக்கம் இருக்கின்றது. அது என்னவென்றால் ஒரு குற்றம் நடந்து விட்டால் அந்த பழங்குடியின் தலைவர் தலைமையில் கிராம மக்கள் கூடுவர். தலைவர் ஒரு பொம்மையினை கொண்டு வரச் சொல்லுவார். பொம்மை வந்ததும் ஒரு நீண்ட ஊசியினை எடுத்து அந்த பொம்மையின் நெஞ்சுப் பகுதியில் செலுத்துவார்.  அதன் பின்பு அவர், 'குற்றம் செய்தவர் வருகிற ஞாயிறு இரவுக்குள் இறந்து விடுவார்’ என்று சொல்லுவார். பின்பு ஊர் மக்கள் களைந்து செல்வார்கள். அவர் சொல்லியபடி குற்றம் செய்தவரும் ஞாயிறுக்குள் இறந்து விடுவார். அவர் உடம்பினை பரிசோதனை செய்தால் அதில் எந்த வித விஷமும் இருக்காது. பின்பு எப்படி இறக்கின்றார் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தும்போது குற்றம் செய்தவர் தவறு செய்து விட்டோம் என்ற மன நிலையில் பயத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகி இறந்து விடுகின்றார் என்று கண்டு பிடித்தனர்.

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அப்போது அந்த கைதியினைக் கொண்டு விஞ்ஞானிகள் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அதற்கான அனுமதியும் பெற்றார்கள் அந்த கைதி தூக்கிலப் படுவார் என்பதிற்குப் பதிலாக விஷ கருநாகம் தாக்கிக் கொல்லப் படுவார் என்று அறிவிக்கப் பட்டது. அதனை கைதிக்கும் தெரிவிக்கப் பட்டது. ஒரு விஷப் பாம்பினையும் கைதிக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. அதனைத் தொடர்ந்து கைதியின் கண்ணை இறுக மூடி கட்டப் பட்டது. கைதியினை ஒரு நாற்காலியில் அமரவைத்து நாகமும் அவருடைய கையில் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப் படும்படி அமைக்கப் பட்டது. அதன் பின்பு நாகம் கைதியின் கையில் கொத்துவது போல சிறிய ஊக்கால் குத்தப் பட்டது. அந்தக் கைதி அலறியபடி இரண்டு நிமிடங்களில் இறந்து விட்டார்.

மருத்துவர் அவரது பிரேதத்தினை பரிசோதித்தார்கள். என்னே ஆச்சரியம் அவர் உடம்பில் பாம்பு கொத்துவதுபோல  ஒரு விஷம் இருந்தது. அந்த விஷம் எங்கிருந்து வந்தது, அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு நடத்தப் பட்டது. என்னே ஆச்சரியம் அந்த விஷம் அவர் உடம்பிலிருந்தே தயாரிக்கப் பட்டதாகும் என்றால் நம்புகிறீர்களா

இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நாம் எடுக்கும் ஒவொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உள்ளுக்குள்  உருவாக்கின்றது. அதன் படி உங்கள் உடல் ஹார்மோனை உருவாகின்றது. 90 சதவீத நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணெங்களால் உருவாகும் நோய் எதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் இப்போது கொரானா கால நெருக்கடியில் இருக்கின்றோம்  நோய் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே என்று அஞ்சாமல், சிறு நோய் வந்தாலும் நமக்கு கொரானா நோய் வந்து விட்டது என்று பதட்டப் படாமல், இவ்வளவு காலம் நாம் நோய்களை, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டோம், இதுவும் அதுபோன்ற ஒன்று தான் என்று நினைத்து நமது வாழ்க்கை வாழவதிற்கே, பயந்து சாவதற்கு அல்ல மாறாக சிரித்து மற்றும் சிந்தித்து வாழ்வதிற்கே என்ற மன தைரியத்தோடு வாழ வேண்டும் என்று வீறு நடைபோடுவோமா?

 

 

Thursday 20 August, 2020

 

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப் பட்ட ஊரடங்கு இன்னமும் முடியாமல் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை ரோடுரோலர் இயந்திரத்தின் சக்கரத்தில் போட்டு நசுக்கிய நேரத்தில் சில மனிதர்களின் தனிப் பட்ட முயற்சிகளால் மனித நேயம் இன்னும் மறையவில்லை என்பதினை எடுத்துக் காட்டவும், கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கி  தவித்த பயணிகள் தங்கள் தாய்நாடு திரும்ப ஏர் இந்திய வந்தே பாரதம் என்ற விமானத்தில் 10.8.2020 அதிகாலை இறங்க சந்தோசமான நேரத்தில் விபத்து ஏற்பட்டு விமான கேப்டன், உதவி பைலட் உள்பட 18 பேர்கள் இறந்தும், 129 பேர்கள் காயம் அடைந்தும் நிர்கதியாக நின்ற நேரத்தில் மலப்புர மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடு பட்டதையும் உங்களுக்கு படம் பிடித்துக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

1) ஹைதராபாதில் பாலன் நகரில் லேத் பட்டறை வைத்திருக்கும் கொடூரி பாலலிங்கம் மூன்று அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சொந்தக்காரர். அதில் குடியிருப்போர் 70 தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர், அன்றாட கூலி வேலை பார்த்தும், வியாபார நிறுவனங்களில் வேலையும் செய்பவர்கள். கொரானா லாக் டவுனில் அணைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் வருமானமின்றி தவித்தனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி அவரிடம் தயங்கி, தயங்கி வந்து தான் வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அது திறக்கும் வரை வாடகை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்கு பாலலிங்கமும் அவருடைய நிலையை அறிந்து இருந்ததால், சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவரும் ஒரு  காலத்தில் சிறு வயதில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் தான் என்பதால் அந்த தொழிலாளர்களின் கஷ்டத்தினை உணர்வார். 1995ம் வருடம் தன்னுடைய 16 வயதில் வறுமையில் சிர்சிலா என்ற கிராமத்திலிருந்து ஐராபாத் வந்து பிழைப்புத் தேடினார். மது பாரில் உள்ள மேஜைகளை சுத்தம் செய்வதிலிருந்து பல தொழில்களில் வேலைபார்த்து உழைத்து கையை ஊன்றி கர்ணம் பாய்ந்து இன்று ஒரு welding  பட்டறைக்கு அதிபதியாக இருக்கின்றார். அவர் அதனை நினைத்துப் பார்த்து வாடகைப் பணம் தர  வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். அவர் அவ்வாறு செயல்பட்டதால் லாக் டவுன் முடிந்து வீட்டில் குடியிருப்போர் வேலைக்கு சென்றதும் தாங்களாகவே முன் வந்து வாடகை செலுத்தியுள்ளனர். நாம் இங்கு சில பரிதாபமான சம்பவங்களை கண்டிருப்போம். வீட்டின் உரிமையாளர் வாடகை தாரர்களை வெளியே தள்ளி பூட்டி விட்டதும், போவதற்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காட்டின அதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதற்கு மத்தியில் பாலலிங்கம் போன்ற வர்கள் மனிதாபமிக்கவர்களில்லையா?

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா-கடார் பகுதிற்கு டி.எஸ்.பீ யாக ஜெஸ்வால் என்பவர் பணியாற்றுகிறார். அவர் கட்டுப்பாட்டிற்குள் தேசிய நெடுசாலை வருகின்றது. லாக் டவுனால் தன் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் குடும்பத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியோர் தகதகக்கும் கோடை வெயிலையும் பொறுப்படுத்தாது சாரை  சாரையாக செல்வதினைக் கண்டார். அவர்களில் பலர் வெயிலைத் தாங்ககூட செருப்புகளுமில்லை என்று அறிந்து இரக்கப்பட்டு தனது சகாக்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பதேபாட், சம்சாபட் மற்றும் குவாலியர் பகுதிகளில் கூடாரம் அமைத்து அவர்கள் இளைப்பாறவும், தண்ணீர் பந்தல் அமைத்தும், உணவு பொட்டலங்கள் வழங்கியும் உதவி செய்ததோடு சிறு குழந்தைகள் பருக பாலும் கொடுத்து உதவினார். அவரின் உதவியினை இடம் பெயர்வோர் வாயார வாழ்த்தினர். ஆனால் அதே நேரத்தில் சில மாநிலங்களில் அப்படி இடம் பெயர்ந்தவர்களை இரக்கமில்லாமல் தடி கொண்டு தடுத்து நிறுத்தியதையும் பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் மத்தியில் இரக்ககுணம் கொண்ட போலீசும் ஜெஸ்வால் போல  நமது மத்தியில் பணி செய்கிறார்கள்.

 

 

மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரைச் சார்ந்த தேசிய வேதியல் லாபரட்ரியில் ஆராய்ச்சி மாணவியான 23 வயது சாய்ஸ்ரீ அக்கோன்ட் தன்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழியினை பார்ப்பதற்கு கர்நாடக மாநிலம் மணிபாலுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் தேசிய லாக் டவுன் அறிவிக்கப் பட்டு தன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். அந்த சமயத்தில் மே மாதம் 11ந்தேதி ரோட்டில் செல்லும்போது காவல் துறையினர் சுமார் 50 தங்கள் மாநிலத்திற்கு இடம் பெயர்பவர்களிடம் நிறுத்தி விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ரயில்வே ஒப்பந்ததாரால்  பணியமர்த்தப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னதால் கால் நடையாக தங்கள் சொந்த ஊரான 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெலுங்கானா மஹபூப் நகருக்கு செல்பவர்கள் என்றும் அறிந்தார். அவர்களில் 10 சிறுவர்கள்களும், ஒரு கற்பிணியும் இருந்தார்கள். உடனே ஆராய்ச்சி மாணவி துரிதமாக செயல்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உடுப்பி ரயில் நிலையத்தால் தங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் அந்த மாநிலத்திற்குள் சென்று வர 'இ' பாசும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்பு Humaanitarian Relief Society என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்க உதவி செய்தார். அது மட்டுமா, கர்ப்பிணிக்கு தேவையான சானிட்டரி பேடுகளையும் வழங்கினார்.

அதன் பின்பு சமூக தளங்கள் வாயிலாக தெலுங்கானா அரசிற்கு அவர்கள் நிலையினை எட்ட செய்து அனைவரும் தெலுங்கானா அரசு உதவியுடன் மே மாதம் 19 ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் ஊர் திரும்புமுன் நிர்கதியாக இருந்த தங்களுக்கு அடுத்த மாநிலத்தினைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவி அகோண்டி முயற்சியால் ஊர் திரும்புகிறோம் என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதற்கு பின்னரும் லாக் டவுன் முடிந்தாலும் தனது பூனாவிற்கு திரும்பாமல் வேலையிழந்த கிட்டத்தட்ட 3000 தொழிலாளர்கள் அஸ்ஸாம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு திரும்ப தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும், அந்தந்த அரசுகள் உதவியுடனும் ஏற்பாடு செய்தார். இது இதனை காட்டுகின்றது என்றால் மலைக்குன்றையும் சிறு எறும்பு அசைத்து விடும் என்று தானே!

            கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் 10.8.2020 இரவு ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்த கேரள மக்கள் 180 பேர்களை துபாயிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த 'வந்தே பாரத்' ஏர் இந்திய விமானம் தரையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி மூன்றாக உடைந்து கேப்டன், உதவி விமானி உள்பட 18 இறந்தும், 172 பேர்கள் காயத்துடனும் தப்பினர் என்று பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள். அது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது ஒரு புறம் இருந்தாலும், எவ்வாறு 3 பகுதிகளாக உடைந்த விமானத்தில் 172 பேர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று அறிந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆர்ச்சரியப் படுவீர்கள்.

             அந்த இரவில் மழையும் பெய்து கொண்டு இருந்தது. விமானம் பயங்கர சப்தத்துடன் விபத்துக்குள்ளாகி விட்டது என்று அறிந்த மலப்புர மக்கள் சிறிதும் தாமதிக்காது, ஆம்புலன்சுக்கு காத்திராமல் செயல் பட்டனர். சுதந்திர போராட்ட நேரத்தில் மாப்பிள்ளைமார் எவ்வாறு ஒருங்கிணைந்து ஆங்கிலேயரை 1921 ம் ஆண்டு எதிர்த்து நின்றார்களோ அதேபோன்று ஒரு தேசிய மீட்புப் படை போல  செயல் பட்டனர். உலகில் நம்பர் ஒன் நாடு அமெரிக்கா என்று பீற்றிக்கொள்ளும் அங்கே ஒரு கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் லாயிட் கழுத்து நெறிக்கப் பட்டு மின்னாடாபோலிஸ் என்ற நகரில் இறந்ததும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய அமெரிக்கர்கள் அங்குள்ள கடைகளை சூறையாடி கையில் கிடைத்ததெல்லாம் எடுத்துச் சென்றது நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

            ஆனால் இயற்கையிலேயே இறக்கக் குணம் கொண்ட மலப்புற மக்கள் அங்கே சிதறிக் கிடந்த பொருளினை ஒன்றையும் தொடவில்லை. மாறாக காயம் பட்டவர்களை ஆம்புலன்சுக்குக் கூட காத்திராமல், அவர்கள் தலையில் குல்லாய் போட்டவர்களா அல்லது நெற்றியில் பொட்டு வைத்திருப்பவர்களா என்று பாராமல், கடும் கொரானா நோய் பயம் இருந்தாலும், தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் விலையுயர்ந்தது என்றும் பாராமல், அல்லது தங்களது கார்களின் சீட் கவர் மிகவும் காஸ்டிலி என்றும் எண்ணாமல் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை தங்களது வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று அவர்களுடைய உயிர்களை காப்பாற்றினார். பெற்றோரை இழந்து அழுது கொண்ட குழந்தைகளை ஆறுதல் செய்து அவர்களை  நெஞ்சோட அணைத்து, அவர்களுடைய உறவினருக்கு தகவலும் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் காயம் பட்டவர்களை காப்பாற்ற தேவியான ரத்தங்களை கொடுக்க மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும்போது வரிசையாக நிற்பதுபோல நின்று ரத்தம் தானம் செய்தனர்.

            நான் மேற்கோள் காட்டின மனிதாபிமான செயல்கள் நமது நாட்டில் மத வேறுபாடுகள் இருந்தாலும், சாதிச் சண்டைகள் இருந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்தாலும் மனித நேயம் மக்களிடமிருந்து மறைய வில்லை என்றால் சரிதானே, சொந்தங்களே!

  

 

 

Tuesday 4 August, 2020

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.(ஐ.பீ.எஸ் (ஓ )

உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும்,  இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால் அதற்கான மருந்தும், ஊசியும் பல கோடிகள் செலவு செய்து கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளன, ரஷ்யா நாடு ஊசியினை கண்டு பிடித்து விட்டோம் என்று கூறினாலும் அதன் பயன்பாட்டிற்கு அக்டோபர் மாதம் ஆகும் என்று கூறுகிறது. ஆக  இந்த வருட கடைசியாகும் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலக சுகாதார சேர்மன் டாக்டர் டெட்ரஸ் அதனான் அவர்கள் 3.8.2020 ல் கொடுத்தப் பேட்டியில் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்காமலும் போகலாம் என்றும் ஆகவே மக்கள் கை கால்கள் சுத்தம், மனித இடைவெளி, முகக் கவசம், மக்கள் கூடுவதினை தடுப்பதும்,  ஆரோக்கியமாக வாழப் பழகிக் கொள்வதோடு, மூச்சுப் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

            பிறகு எப்படி கொரானா ஆபத்திலிருந்து மீண்டார்கள் என்று சொல்கின்றார்கள் என்றால், பழங்கால சித்தா, ஆயுர்வேதிக், யுனானி, மருந்துகளாலும், ரம்டசிவர் என்ற நோய் எதிர்ப்பு மாத்திரையாலும், தனிமைப்படுத்துதலாலும், தனிமனிதர் இடைவெளியினாலும், உடல் வெளி சுத்தத்தினாலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியாலும், முகக்கவசம் அணிவதாலும் கட்டுப்படுத்தமுடிகிறது என்று சொல்லலாம்.

            இதனையே தான் நமது முன்னோர்கள் தங்களுக்கு அருகில் கிடைக்கும் பல மூலிகைகளால் பல நோய்களை விரட்டி உள்ளார்கள். உதாரணத்திற்கு கொரானா ஒருவருக்கு இருக்கின்றது என்றால் வேப்பிலை, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் பவுடர், கல் உப்பு,கலந்து சூடாக்கி உள் நாக்கு தொண்டை வரை படும் படி வாய் கொப்பளிக்கும் படியும், ஆவியினை மூக்கின் வழியாகவும், வாய் வழியாகவும் சுவாசிக்கவும், நாட்டு பருந்துகள் கலந்த கபசுர நீர் அருந்தியும், வெளியில் சென்று வந்தால் கைகால்கள் தண்ணீரால் சுத்தம் செய்யவும், சாவு வீட்டுக்கு சென்று வந்தால் ஆடைகளை துவைக்கச் சொல்லியும், வெளி காற்று உள்ளே வரும்படி வீடுகள் அமைத்து வாழ்ந்து, வயல்களில் இறங்கி குடும்பமே வேலை பார்த்தும், வயல்களில் கிடைக்கும் காய் கறிகள், கனி வகைகள், கம்பு, சோளம், கேப்பை போன்ற தானியங்களில்  சமைத்த உணவுகள் அதிகமாக உபயோகித்ததாலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.  ஆனால் அவைகளை எல்லாம் மறந்ததினாலும் நாகரீக வாழ்க்கையும், துரித உணவு பழக்கங்களாலும் உடல் வலுவிழந்து  இன்று கொரானா நோய் பாதிப்பில் இந்தியாவில் டாக்டர்கள் 43 பேர்கள் உள்பட 38, 249பேர்கள்  மடிந்துள்ளனர் என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறவில்லையா?

            அவ்வாறு நாம் மறந்ததினால் நோயினைக் கட்டுப் படுத்த அரசே 'லாக் டவுன்' என்று கட்டுப் பாடுகளை விதித்துள்ளது நான்கு மாதங்களாக. இந்தியா தன்னிறைவு அடைய வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது இந்த கொடிய நோய் பாதிப்பு அதனைத் தொடர்ந்த கட்டுபாடால், பொருளாதாரம், பிள்ளைகளின் படிப்பு பாதித்து, உடல் உழைப்பின்றி வீட்டினில் முடங்கிக் கிடந்து உடல் பாதித்து, பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தும், பாலின தவறுகளும், கொலை, கொள்ளை, வழிப்பறி, மதுக்கடத்தல் போன்றவற்றில் மாணவர்கள் உள்பட சம்பந்தப் பட்டிருப்பது சமூக பிரட்சனையாக இருக்கவில்லையா? அது மட்டுமா, லாக் டவுனால் 43 சதவீத மக்கள் மன உளைச்சலில் உள்ளனர் என்று மன நல ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். இந்தியாவில் மார்ச் மாதம் கொரானா நோய் பரவ ஆரம்பித்ததுமே உலக சுகாதார நிறுவனம், மும்பையிலுள்ள தாராவியில் அதிக பாதிப்பும், இறப்பும் ஏற்படும் என்று கூறின. ஏன் அவர்கள் அப்படி கூறினார்கள் என்றால் 2.5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தாராவியில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதனால் மஹாராஷ்டிரா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. ஆனால்அதற்கு மாறாக அங்கு பாதிப்பு குறைவே. அதற்கு காரணம் என்ன என்று ஆய்வாளர்கள் கூறும்போது 57 சதவீத மக்கள் உழைப்பாளர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தாராவி மக்கள் கொரானா பாதிப்பில் பெரிதும் பாதிக்கவில்லை.

            சென்னையில் தான் தமிழ்நாட்டிலே பாதிப்பு அதிகம். ஆனால் பாதையோர மக்களை நோய் பாதித்ததா அல்லது அவர்கள் மிகக் கவசம் அணிகிறார்களா என்றால் குறைவே எனலாம். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலும் உடல் உழைப்பால் வாழ்க்கை நடத்துபவர்கள், ஏதாவது நோய் ஏற்பட்டால் அருகில் கிடைக்கும் பொருளை வைத்து சுகமாக்கிக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்களால் எங்கே ரூபாய் ஐநூறு ஆயிரம் என்று டாக்டர் பீஸ் கொடுக்க முடியும்? அல்லது லக்ஷ கணக்கில் செலவழித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியும்? ஆகவே நாமும் வருமுன் காப்பாற்றிக்கொள்ள என்னென்ன நடவடிக்கையோ அவைகளை நமது தாத்தா -பாட்டி எப்படி கடைப் பிடித்தார்களோ அதேபோன்று நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்னென்ன  பொருள்களைக் கொண்டு நோய்களை தடுத்தார்கள் என்று கீழ்கண்டவாறு காணலாம்:

1) இருமல், கக்குவான், சளித்தொல்லை என்றால் வீட்டின் முன்போ அல்லது, வீட்டின் பின்போ வளர்க்கும் ஓம வள்ளி இலை, துளசி இலை ஆகியவற்றை கொதிக்க வைத்துதேனுடன் கலந்து  சாப்பிட்டும் , ஆவி பிடித்தும் வந்தால் இருமல், சளித்தொல்லை படிப்படியாக குறையும்.

 2) மனிதனுக்கு மலம், ஜலம் சரியான நேரத்தில் வந்து விட்டால் உடலில் கழிவு ஓடிவிடும். ஆனால் மலச்சிக்கல் ஏற்பட்டால் அவஸ்திப் படுவதுடன், மூல நோய்க்கும் வழிவகுக்கும். ஆகவே  அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் புசிவிஸ் ஆளி விதைகளை பொடி செய்து ஒரு நாளைக்கு  2 அல்லது 3 தேன் கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் ஆளி விதையில் நார் சத்து இருப்பதினால் மலச்சிக்கல் குறையும் என்று கூறுகிறார்.

3) மனச்சோர்வு அல்லது மனக்கவலையுடன் இருந்தால், ஏலக்காய் பவுடரில் கொதிக்க வைத்த டீயினை 2 அல்லது 3 தடவை குடித்து வந்தால் மனசோர்வு குறையும் என்று மும்பையில் இருக்கும் தலை சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் சார்மின் டி. ஸ்யோசா கூறுகின்றார்.

4) டெல்லியினைச் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் லங்கேட் பத்ரா அவர்கள் டயாரியா வயிற்றுப்போக்கினை தவிர்க்க வாழைப் பழம் சாப்பிட பரிந்துரைத்துள்ளார். ஏனென்றால் வாழைப் பழத்தில் 'பெக்டின்' என்ற வேதியம் இருப்பதால் குடலில் உள்ள நீரை உறுஞ்சி டயாரியாவினை கட்டுப் பாட்டுக்குள் வைப்பதுடன், மலச்சிக்கலையும் சரி செய்யும் என்று கூறுகிறார்.

5) அதிக நேரம் விழித்திருந்தால் கண்ணெரிச்ச ஏற்படும். அப்போது வெள்ளரிக்காயினை நறுக்கி இரண்டு கண் இமையின் மேல் வைத்து 15 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தகள் கண்ணுக்கு ஓய்வு கொடுத்ததுடன், கண் எரிச்சலும் சரியாகும்.

6) காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் வந்தால், வெந்தயத்தினை வறுத்து, மிளகு, கருஞ்சீரகம், இலவங்க பட்டை பவுடர்  ஆகியவற்றினை கலந்து கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் பறக்கும் என்று மும்பை நிபுணர் டி.சோஸா கூறுகின்றார்.

7) சிலருக்கு ஜீரணிக்காமல் சாப்பிட்ட உணவு வயிற்றிலிருந்து தொண்டை வரை reflux என்று சொல்லுவது போல வந்தால் அமிர்த வள்ளி இலை, கொய்யா இலை ஆகியவற்றினை கொதிக்க வைத்து குடித்து வந்தால் மேல் நோக்கி சாப்பிட்டது வருவதனை தடுக்கலாம். அத்துடன் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

8) கவுட்' என்று ஆங்கிலத்தில் சொல்லப் படும் யூரிக் ஆசிட்  கை, கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வேதனை ஏற்பட்டால் கோகிலாக்ஸ்சா என்ற நீர் முள்ளி இல்லை, பூவினை கொதிக்க வைத்து குடித்தால் கவுட் குறைந்து விடும்.

9) வேலைப் பழு, மன அழுத்தம் ஏற்படும்போது பருப்புக் கீரையினை சமைத்து சாப்பிட்டாலும், அதன் எண்ணெயினை நெற்றியில் தடவினாலும் குறைந்து விடும்.

10) விக்கல் ஏற்படும்போது ஒரு கட்டி சீனியினை சாப்பிட்டால் அது ஈரலுக்கும், குடலுக்கும் இடையே உள்ள சவ்வில் பரவி விக்கலை நிறுத்தும் என்று அமெரிக்கா கலிபோர்னியா ஓக்லாண்ட் ஊட்டச்சத்து நிபுணர் கிளார் மார்ட்டின் கூறுகின்றார்.

 

11) சாப்பிட்ட பொருள் ஜீரணமாவதற்கு பெரும்சீரகத்தினை கொஞ்சம் சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட்டால் இலகுவாக ஜீரணிக்கும். பெரும்பாலான பெரிய ஹோட்டல்களில் இதனை பில்லுடன் சேர்த்து தருவதினைக் காணலாம்.

12) தூக்கமின்றி தவிக்கும்போது அமுக்கிரா செடியிலிருந்து தயாரிக்கப் படும் அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் நரம்பினை இலகுவாக்கி சீக்கிரத்தில் தூக்கம் வரும்.

13) கிட்னியில் கால்சியம் சேராமல் தடுப்பதற்கு ஒரு நாளைக்கு 100-120 மில்லி எலுமிச்சை சாறு சாப்பிட்டால் கால்சியம் சேருவதினை தடுக்கலாம்.

14) பெண்களின் ரத்தப் போக்கு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை, மிளகு பவுடர், சீரகம், மஞ்சள் பவுடர் ஆகியவற்றினை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் ரத்தப் போக்கு சீராகும் என்று டாக்டர் டி சோசா கூறுகிறார்.

15) மயக்கம் வருவதுபோலோ அல்லது கற்பிணி  பெண்கள் 'மார்னிங்' சிக்கன்ஸ் என்ற மயக்கம் ஏற்பட்டாலோ இஞ்சியினை சாராக்கி சிறிது தேன் கலந்து சாப்பிட்டால்  மயக்கம் சரியாகும்.

16) சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குருதி நெல்லி அல்லது சீமை களாக்காய் என்று அழைக்கப் படும் 'கிரேன் பெரி' என்ற பழத்தின் சாறை குடித்து வந்தால் சிறு நீரக பாதையில் ஏற்படும் நோய் தடுக்கப் படும் என்று 373 பாதிக்கப் பட்ட பெண்களிடம் ஆய்வு செய்ததில் நல்ல பலன் கிட்டியதாக சொல்லப் படுகிறது.

17) சித்த, ஆயுர்வேத மருத்துவங்களிலும் ஆப்ரிக்கா, சீன மருத்துவத்தில் பெரிதும் பயன் படத்தப் படும் மூலிகை Gotukola என்ற வல்லாரையாகும். இந்த செடியின் இலையை எடுத்து வேகவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் குட்டம், கால் நரம்புகள் சுருங்கி முடிச்சு விழுவது(vericos vein) தடுக்கப் பட்டும், நினைவு சக்தி குறைவு, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மருந்தாகும்.

19) கண் பார்வை சீராக அமைய மீன்கள் சாப்பிடுவது அவசியம். அது மட்டுமல்லாமல் டூனா,வஞ்சரம், நங்கூர மீன், சால்மன் என்ற கிழங்கன் என்ற மீன்களில் தயாரிக்கப் படும் 'cod liver oil' கண்ணில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகப் படுத்தும்.

20) தேன் பலவகைகளில் மருத்துவ குணங்கள் கொண்டது. தீக்காயம் பட்டால் அந்த இடத்தில் தடவவும், தீட்டு நின்ற நடுத்தர பெண்களுக்கு சத்துக் குறைவினை ஈடு கட்டவும், வாய், பெண் உறுப்பில் அரிப்பு ஏற்பட்டால் தடுத்து நிறுத்தவும் உதவும். ரத்தத்தில் சுகர் அளவினை சீராக்க ஸ்வீட்ட்னர் என்ற சீனி கட்டிக்கு பதிலாகவும், கிட்னியில் ஏற்படும் கேன்சர் நோய் பரவாமல் கட்டுப் படுத்த, மூல நோய், மலத்தில் ரத்தம் பரவாமல் தடுக்க, காயங்கள் ஏற்படும் போது குணமாக, கர்ப்பம் உண்டாக்க ஆண் மற்றும் பெண் அணுக்கள் உற்பத்தியாக, தோல் அரிப்பு நோயை தடுக்கவும் தேன் சிறந்த மருந்தாகும்.

21) வைட்டமின் சி அடங்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறு இருமல், வயிற்றுப் போக்கு, மூச்சுத்திணறல் போன்றவற்றை தடுத்து நிறுத்தும்.

22)  காட்டு சீதா பழங்கள் புற்று நோயிக்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.

            நான் மேலே சொன்ன தகவல் ஆய்வுக்குப் பின்னர் குணமடைந்து வெளியிட்ட தகவல்கள். அவை அனைத்தும் நம் கண்முன்னே கிடைக்கின்றன. நம் முன்னோர்கள் எத்தனை பேர்கள் ஆங்கில மருந்துக்காக ஆஸ்பத்திரி நோக்கி படையெடுத்தார், சொல்லுங்கள் பார்ப்போம். நான் சிறு பின்னையாக இருந்தபோது கபடி, கால்பந்து விளையாட்டில் அடிபட்டால் என்னுடைய தாய் அம்மிக்கல்லில் மஞ்சள் அரைத்து அதன் மேல் போட்டால் அடுத்த நாள் சரியாகிவிடும். சளி தொல்லையிருந்தால் துளசி செடி  சாற்றை பிழிந்து தேன் கலந்து கொடுத்து சரி செய்து விடுவார்கள். அல்லது அருகில் உள்ள நாட்டு வைத்தியரிடம் காட்டி மருந்து வாங்கி சரி செய்வார்கள். அதனையெல்லாம் நாம் நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல மறந்தோம் ஆகவே நம்

 பிள்ளைகள் மருத்துவமனை மருத்துவமனையாக அழைத்து கொண்டுள்ளார்கள். நமது வீட்டின்கொல்லைப் புறத்திலோ, மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ துளசி, ஓமவல்லி, அலோ வேரா என்ற கத்தாழை போன்ற

 செடிகள் வளர்க்க வேண்டும். வீட்டில் தேன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும், துரித உணவு வகைகளை ஊக்குவிக்கக்கூடாது. கம்பு, கூலு, கேட்பை போன்ற  உணவுகளை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்து உடலில் ஊட்டச்சத்தினை கொடுத்தால் எந்த நோயையும் எதிர் கொள்ளலாம்.