Thursday 20 August, 2020

 

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப் பட்ட ஊரடங்கு இன்னமும் முடியாமல் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையை ரோடுரோலர் இயந்திரத்தின் சக்கரத்தில் போட்டு நசுக்கிய நேரத்தில் சில மனிதர்களின் தனிப் பட்ட முயற்சிகளால் மனித நேயம் இன்னும் மறையவில்லை என்பதினை எடுத்துக் காட்டவும், கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கி  தவித்த பயணிகள் தங்கள் தாய்நாடு திரும்ப ஏர் இந்திய வந்தே பாரதம் என்ற விமானத்தில் 10.8.2020 அதிகாலை இறங்க சந்தோசமான நேரத்தில் விபத்து ஏற்பட்டு விமான கேப்டன், உதவி பைலட் உள்பட 18 பேர்கள் இறந்தும், 129 பேர்கள் காயம் அடைந்தும் நிர்கதியாக நின்ற நேரத்தில் மலப்புர மக்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் ஈடு பட்டதையும் உங்களுக்கு படம் பிடித்துக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

1) ஹைதராபாதில் பாலன் நகரில் லேத் பட்டறை வைத்திருக்கும் கொடூரி பாலலிங்கம் மூன்று அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சொந்தக்காரர். அதில் குடியிருப்போர் 70 தொழிலாளர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர், அன்றாட கூலி வேலை பார்த்தும், வியாபார நிறுவனங்களில் வேலையும் செய்பவர்கள். கொரானா லாக் டவுனில் அணைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் வருமானமின்றி தவித்தனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி அவரிடம் தயங்கி, தயங்கி வந்து தான் வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அது திறக்கும் வரை வாடகை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்கு பாலலிங்கமும் அவருடைய நிலையை அறிந்து இருந்ததால், சரி என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவரும் ஒரு  காலத்தில் சிறு வயதில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் தான் என்பதால் அந்த தொழிலாளர்களின் கஷ்டத்தினை உணர்வார். 1995ம் வருடம் தன்னுடைய 16 வயதில் வறுமையில் சிர்சிலா என்ற கிராமத்திலிருந்து ஐராபாத் வந்து பிழைப்புத் தேடினார். மது பாரில் உள்ள மேஜைகளை சுத்தம் செய்வதிலிருந்து பல தொழில்களில் வேலைபார்த்து உழைத்து கையை ஊன்றி கர்ணம் பாய்ந்து இன்று ஒரு welding  பட்டறைக்கு அதிபதியாக இருக்கின்றார். அவர் அதனை நினைத்துப் பார்த்து வாடகைப் பணம் தர  வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். அவர் அவ்வாறு செயல்பட்டதால் லாக் டவுன் முடிந்து வீட்டில் குடியிருப்போர் வேலைக்கு சென்றதும் தாங்களாகவே முன் வந்து வாடகை செலுத்தியுள்ளனர். நாம் இங்கு சில பரிதாபமான சம்பவங்களை கண்டிருப்போம். வீட்டின் உரிமையாளர் வாடகை தாரர்களை வெளியே தள்ளி பூட்டி விட்டதும், போவதற்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காட்டின அதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதற்கு மத்தியில் பாலலிங்கம் போன்ற வர்கள் மனிதாபமிக்கவர்களில்லையா?

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா-கடார் பகுதிற்கு டி.எஸ்.பீ யாக ஜெஸ்வால் என்பவர் பணியாற்றுகிறார். அவர் கட்டுப்பாட்டிற்குள் தேசிய நெடுசாலை வருகின்றது. லாக் டவுனால் தன் சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் குடும்பத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியோர் தகதகக்கும் கோடை வெயிலையும் பொறுப்படுத்தாது சாரை  சாரையாக செல்வதினைக் கண்டார். அவர்களில் பலர் வெயிலைத் தாங்ககூட செருப்புகளுமில்லை என்று அறிந்து இரக்கப்பட்டு தனது சகாக்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பதேபாட், சம்சாபட் மற்றும் குவாலியர் பகுதிகளில் கூடாரம் அமைத்து அவர்கள் இளைப்பாறவும், தண்ணீர் பந்தல் அமைத்தும், உணவு பொட்டலங்கள் வழங்கியும் உதவி செய்ததோடு சிறு குழந்தைகள் பருக பாலும் கொடுத்து உதவினார். அவரின் உதவியினை இடம் பெயர்வோர் வாயார வாழ்த்தினர். ஆனால் அதே நேரத்தில் சில மாநிலங்களில் அப்படி இடம் பெயர்ந்தவர்களை இரக்கமில்லாமல் தடி கொண்டு தடுத்து நிறுத்தியதையும் பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் மத்தியில் இரக்ககுணம் கொண்ட போலீசும் ஜெஸ்வால் போல  நமது மத்தியில் பணி செய்கிறார்கள்.

 

 

மகாராஷ்டிரா மாநிலம் பூனா நகரைச் சார்ந்த தேசிய வேதியல் லாபரட்ரியில் ஆராய்ச்சி மாணவியான 23 வயது சாய்ஸ்ரீ அக்கோன்ட் தன்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழியினை பார்ப்பதற்கு கர்நாடக மாநிலம் மணிபாலுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் தேசிய லாக் டவுன் அறிவிக்கப் பட்டு தன் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். அந்த சமயத்தில் மே மாதம் 11ந்தேதி ரோட்டில் செல்லும்போது காவல் துறையினர் சுமார் 50 தங்கள் மாநிலத்திற்கு இடம் பெயர்பவர்களிடம் நிறுத்தி விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ரயில்வே ஒப்பந்ததாரால்  பணியமர்த்தப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னதால் கால் நடையாக தங்கள் சொந்த ஊரான 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெலுங்கானா மஹபூப் நகருக்கு செல்பவர்கள் என்றும் அறிந்தார். அவர்களில் 10 சிறுவர்கள்களும், ஒரு கற்பிணியும் இருந்தார்கள். உடனே ஆராய்ச்சி மாணவி துரிதமாக செயல்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உடுப்பி ரயில் நிலையத்தால் தங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் அந்த மாநிலத்திற்குள் சென்று வர 'இ' பாசும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்பு Humaanitarian Relief Society என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்க உதவி செய்தார். அது மட்டுமா, கர்ப்பிணிக்கு தேவையான சானிட்டரி பேடுகளையும் வழங்கினார்.

அதன் பின்பு சமூக தளங்கள் வாயிலாக தெலுங்கானா அரசிற்கு அவர்கள் நிலையினை எட்ட செய்து அனைவரும் தெலுங்கானா அரசு உதவியுடன் மே மாதம் 19 ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் ஊர் திரும்புமுன் நிர்கதியாக இருந்த தங்களுக்கு அடுத்த மாநிலத்தினைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவி அகோண்டி முயற்சியால் ஊர் திரும்புகிறோம் என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதற்கு பின்னரும் லாக் டவுன் முடிந்தாலும் தனது பூனாவிற்கு திரும்பாமல் வேலையிழந்த கிட்டத்தட்ட 3000 தொழிலாளர்கள் அஸ்ஸாம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு திரும்ப தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும், அந்தந்த அரசுகள் உதவியுடனும் ஏற்பாடு செய்தார். இது இதனை காட்டுகின்றது என்றால் மலைக்குன்றையும் சிறு எறும்பு அசைத்து விடும் என்று தானே!

            கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் 10.8.2020 இரவு ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்த கேரள மக்கள் 180 பேர்களை துபாயிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்த 'வந்தே பாரத்' ஏர் இந்திய விமானம் தரையில் இறங்கும்போது விபத்துக்குள்ளாகி மூன்றாக உடைந்து கேப்டன், உதவி விமானி உள்பட 18 இறந்தும், 172 பேர்கள் காயத்துடனும் தப்பினர் என்று பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள். அது சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது ஒரு புறம் இருந்தாலும், எவ்வாறு 3 பகுதிகளாக உடைந்த விமானத்தில் 172 பேர்கள் உயிர் பிழைத்தார்கள் என்று அறிந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆர்ச்சரியப் படுவீர்கள்.

             அந்த இரவில் மழையும் பெய்து கொண்டு இருந்தது. விமானம் பயங்கர சப்தத்துடன் விபத்துக்குள்ளாகி விட்டது என்று அறிந்த மலப்புர மக்கள் சிறிதும் தாமதிக்காது, ஆம்புலன்சுக்கு காத்திராமல் செயல் பட்டனர். சுதந்திர போராட்ட நேரத்தில் மாப்பிள்ளைமார் எவ்வாறு ஒருங்கிணைந்து ஆங்கிலேயரை 1921 ம் ஆண்டு எதிர்த்து நின்றார்களோ அதேபோன்று ஒரு தேசிய மீட்புப் படை போல  செயல் பட்டனர். உலகில் நம்பர் ஒன் நாடு அமெரிக்கா என்று பீற்றிக்கொள்ளும் அங்கே ஒரு கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் லாயிட் கழுத்து நெறிக்கப் பட்டு மின்னாடாபோலிஸ் என்ற நகரில் இறந்ததும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய அமெரிக்கர்கள் அங்குள்ள கடைகளை சூறையாடி கையில் கிடைத்ததெல்லாம் எடுத்துச் சென்றது நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

            ஆனால் இயற்கையிலேயே இறக்கக் குணம் கொண்ட மலப்புற மக்கள் அங்கே சிதறிக் கிடந்த பொருளினை ஒன்றையும் தொடவில்லை. மாறாக காயம் பட்டவர்களை ஆம்புலன்சுக்குக் கூட காத்திராமல், அவர்கள் தலையில் குல்லாய் போட்டவர்களா அல்லது நெற்றியில் பொட்டு வைத்திருப்பவர்களா என்று பாராமல், கடும் கொரானா நோய் பயம் இருந்தாலும், தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் விலையுயர்ந்தது என்றும் பாராமல், அல்லது தங்களது கார்களின் சீட் கவர் மிகவும் காஸ்டிலி என்றும் எண்ணாமல் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை தங்களது வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று அவர்களுடைய உயிர்களை காப்பாற்றினார். பெற்றோரை இழந்து அழுது கொண்ட குழந்தைகளை ஆறுதல் செய்து அவர்களை  நெஞ்சோட அணைத்து, அவர்களுடைய உறவினருக்கு தகவலும் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் காயம் பட்டவர்களை காப்பாற்ற தேவியான ரத்தங்களை கொடுக்க மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும்போது வரிசையாக நிற்பதுபோல நின்று ரத்தம் தானம் செய்தனர்.

            நான் மேற்கோள் காட்டின மனிதாபிமான செயல்கள் நமது நாட்டில் மத வேறுபாடுகள் இருந்தாலும், சாதிச் சண்டைகள் இருந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்தாலும் மனித நேயம் மக்களிடமிருந்து மறைய வில்லை என்றால் சரிதானே, சொந்தங்களே!

  

 

 

No comments:

Post a Comment