Monday 22 December, 2014

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே  மடிந்த இளந்தளிரே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
17.12.2014 அன்று எனக்கு இளங்கோ என்ற நடைப் பயிற்சியில் அறிமுகமான நபர் மூலம் 'தீபக் டிஜி' என்பவர் அனுப்பிய செய்தி 'வாட்ஸ் அப்' என்ற தகவல் பரிமாற்றம் மூலம் கிடைக்கப் பெற்றேன். அந்த செய்தி, 'இன்று பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலைக் கொண்டாடுங்கள், ஏனெறால் உலகின் ஜனத்தொகையில் 200 முஸ்லிம்கள் குறைந்தார்கள். இதுபோன்ற தாக்குதல் தொடரவேண்டும்'.
உடனே நான் இளங்கோவிற்கு, 'இதுபோன்ற சமூதாய நல்லிணக்கத்திற்கு உலை வைக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்' என்று தகவல் அனுப்பினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு, 'பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தீவிர வாதிகளை விட கொடியவன் இவன்' என்று தீபக்கினை சாடினார்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் ஸ்வாட் மற்றும் கைபர் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யுசுப்சி, தாலிபான் தீவிரவாதிகளால் 9.10.2012ல் சுடப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு நோபல் பரிசும், உலக ஐ.நா. சபையில் பேசும் முதல் சிறுமி என்ற புகழுக்கு சென்ற செய்தி அடங்குமுன்னரே 16.12.2014 அன்று பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து பச்சிளம் தளிர்களான 132 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் தீவிர வாதம் காவு கொண்டிருக்கின்றது என்ற கொடுமை வாய்விட்டு அழும் நிலைக்கு மனித இனத்தினை தள்ளி இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது. அத்தனை பிள்ளைகளும் ராணுவத்தில் பணியாற்றும், மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள். அந்த படுபாதக செயலுக்கு தீவிர வாதிகள் சொல்லும் காரணம் , 'ராணுவம் தீவிரவாத நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி' என்று கூறி இருக்கின்றார்கள். அந்தக்  கூற்றின் மூலம் அவர்களின் செயலினை நியாயப் படுத்தலாம், ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் அது போன்ற  எதிர் நடவடிக்கையினுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்.
`இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, போர்நெறி தவறாது நடந்து கொண்டனர் என்பதினை பெருமானார் முகமது(ஸல்) அவர்களும், அவர்கள் காலத்தில் போர் தளபதிகளாக இருந்தவர்களும், நபி பெருமானார் அவர்களுக்குப் பின்பு வந்த  கலிபாக்களும், அலி(ரழி), வாலித்(ரழி) அவர்களும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய படைகளை முன் நின்று நடத்திய தளபதி சலாவுதீன் அயுப் போன்றோரும் கண்ணியம் தவறாது போர்களை நடத்தினர் என்ற வரலாறு உள்ளது. பெருமானார் வேற்று நாடுகளுக்கு படையினை அனுப்பும்போது அதன் தளபதிகளுக்கு 'போரின்போது பயிர்களை, உணவு தரும் கனி மரங்களை அழிக்கக் கூடாது, நீர்நிலைகளையோ, குடியிருக்கும் வீடுகளையோ சேதப் படுத்தக் கூடாது, முதியோர், பெண்கள், குழந்தைகள், புறமுதுகிட்டு ஓடுவோர்  ஆகியோரையும், வளர்ப்புப் பிராணிகளையும் கொல்லக்கூடாது' என்று கடுமையான கட்டளைகளை' விடுத்தார்கள்.  ஆனால் ஏக வல்ல நாயன் அல்லாஹ் அளித்தத் திருக்கொடையான உயிரினை அநியாயமாக பழிக்குப் பழி வாங்குகின்றோம் என்று துப்பாக்கி, கை எறிகுண்டு, மனித எறிகுண்டு கொண்டு அழிக்க யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்பது தான் உண்மை.
உலகிலேயே இது போன்ற குழந்தைகள், இளைஞர்கள் கொடூர கொலை சம்பவம் நடக்கவில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோணலாம். அவற்றில் சில வற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) இப்போதெல்லாம் பிள்ளைகள் வீடியோ கேம்ஸ் முன்னாள் மணிக் கணிக்கில் அமர்ந்து அவர்கள் விருப்பப் படி பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் காட்சிகளைக் காண்கின்றனர். அதேபோன்று கனடா நாட்டில் 1989 ஆம் ஆண்டு மாட்ரிட் பல்கழை கழகத்தில் பயிலும் மாணவன்  போருக்கான வீடியோ கேம்ஸ் படங்களைப் பார்த்து அதுபோன்று தானும் துப்பாக்கி ஏந்தி எதாவது ஒரு இலக்கினை பதம் பார்க்க வேண்டும் என்று துப்பாக்கியோடு தன்னோடு படிக்கும் 14 மாணவிகளையே சுட்டுக் கொன்றான்.
2) 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தன்பிலாக் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நுழைந்த ஒருவன் 16 பள்ளி சிறார்களையும், அதன் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.
3) 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா கொலராடோ பள்ளியில் நுழைந்து துப்பாக்கியால் 13 மாணவர்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
4) 2009 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் 17 வயது இளைஞன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளியில் நுழைந்து 9 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை பலி கொண்டான்.
5) 2011 ஜூலை மாதம் நார்வே நாட்டில்  இளைஞர் முகாமில் காவல்த் துறை சீருடையுடன் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் 80 இளைஞர்கள், மாணவர்கள் என்று கண்மூடித் தனமாக சுட்டுப் பொசுக்கினான்.
6) 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா நியூட்டன் நகரில் உள்ள ஹுக் ஆரம்பப் பள்ளியில் நுழைந்து 20 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
7) 2014இல் மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கும்பல் ஆதிக்கப் போட்டியில்  கல்லூரி மாணவர் 43 கடத்தப் பட்டு, கொடூரமாக கொலை செய்து புதைக்கப் பாட்டும் மாண்டார்கள்.
இதுபோன்ற துப்பாக்கித் துறைத்தனத்திற்கு முக்கிய காரணமே மேலை நாடுகளில் காணுகின்ற துப்பாக்கிக் கலாச்சாரமும், ஆதிக்க உணர்வுகளும் தான் தூண்டுதல் என்றால் மிகையாகாது.
போர்களில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1) 'கன்வேன்சனல்' என்ற முறைப்படி அறிவித்து போர்
2)  'நான் கன்வென்சனல்' என்ற அறிவிக்காத போர் முறையாகும்.
உதாரணத்திற்கு கிராமங்களில் இரண்டு ஊர்களுக்கிடையே தகராறு இருக்கின்றது என்றால் அந்தக் கிராமத்தினர் கத்தி, கம்பு, கல் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்பதினை நீங்கள் அறிவீர்கள் .அது அறிவிக்கப் பட்ட போராகும்.
அதனை விட்டுவிட்டு ஒரு கிராமத்தினர் வேண்டாத அடுத்தக் கிராமத்து மக்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று குளங்கல், குடி தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலப்பது, மற்றும் வயலுக்கு செல்லும் கால்வாய், வரப்புகளை அழிப்பது போன்றவை தான் நான் 'கன்வென்சனல்' போர்முறையாகும்.
அதுபோன்ற ‘நான் கன்வென்சனல்’ போர் முறைகளை இரண்டாம் உலகப் போரில் மேலை நாடுகளின் கூட்டுப் படை  ஜப்பான் முக்கிய நகர்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றில் உயிர்கொல்லி ஆயதமான அணுகுண்டினை வீசி வயது வித்தியாசமில்லாது லக்சக் கணக்கில் அழித்தனர். அதன் தாக்கம் இன்னும் மறைய வில்லை என்பதினை ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை ஒழிக்கின்றோம் என்று ஆளில்லா விமானம் மூலம்
பள்ளத்தாக்கில் பழங்குடியினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியினைக் காட்ட ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் போது குண்டு வீசப் பட்டு 62 பேர்கள் மாண்டனர். அதற்கு கூட்டுப் படைத் தளபதியும் வருத்தம் தெரிவித்தார் என்பது கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகாதா?
2) துப்பாக்கி கலாச்சாரத்தின் தாக்கம் தப்பித்தக் குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதினை சமீபத்தில் பெஷாவார் ராணுவ பள்ளி துப்பாக்கி சூட்டில் காயத்துடன்  தப்பித்த ஒரு மாணவன் கூறும்போது குண்டு அடிபட்டு வகுப்பறையின் கீழே விழுந்தபோது தீவிர வாதிகள் நடந்து வந்த கருப்பு நிற ஷூ சத்தம் இன்னும் தன்னை பயமுறுத்துவதாக கூறியிருக்கின்றான் என்றால் எவ்வளவு தூரத்திற்கு பிஞ்சு மனது வன்முறையால் பாதிக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அவர்கள் அந்தப் பயத் தாக்கத்தினை விட்டு அகல நீண்ட நாட்களாகுமல்லவா?
3) மேலை நாடுகளில் தனி நபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவனது உரிமை. ஆனால் ஆசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
4) ஆசிய, அராபிய, ஆப்ரிக்கா   நாடுகளின் தீவிர வாத கும்பலுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது என்றால் மேலைநாடுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதிற்கென்றே பல தனியார் கம்பனிகள் உள்ளன. அவைகள் அந்த அரசின் ஆதரவு மூலம் அவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர் என்பது தான் உண்மை நிலை. பிள்ளையினை கிள்ளிவிட்டு அந்தக் குழந்தை அழுவதினை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தான் மேலை நாடுகள் உள்ளன.
5) இளைஞர்களை மயக்கி மூளைச் சலவை செய்யும் தீவிர வாதக் கும்பல் மன நோய்களாலும், உலச்ச்சல்களாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதினைத் தான் பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன என்றால் மிகையாகாது.
சிறுமி மலாலா துப்பாக்கிச் சூடு, பெஷாவர் பள்ளி துப்பாக்கிச் சூடு போன்றவை முஸ்லிம்கள் கல்விக்கு எதிரானவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உலக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பது யாரும் மறைக்க முடியாது.
இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் அராபியாவிலிருந்து சீனம் வெகு தூரத்திலிருந்தாலும் கல்வி கற்க அங்கே சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இஸ்லாமிய மார்க்கம்.
உலகிலேயே மிக சிறந்த நூலகம் அமைத்து உயர் கல்வியினைக் கொடுத்தது அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் இஸ்லாமியரினைச் சார்ந்தது. அப்படி இருக்கும் பொது எப்படி இஸ்லாமியர் கல்விக்கு எதிரானவர் என்பதினை ஏற்றுக் கொள்ள முடியும்?
உயிர் என்பது இறைவன் கொடுக்கும் அற்புத வரம். அதனை மனிதன் எடுப்பதிற்கு எந்த உரிமையும் இல்லை என்பது இஸ்லாம் போதிக்கும் நல்லுறையாகும். அதனை நிரூபிப்பது போன்று தற்கொலையினை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கும் போது இளந்தலிர்களான பள்ளி மாணவர்களைக் கொன்ற  தற்கொலைப் படை போன்ற  படுபாதகர்கள் எப்படி முஸ்லிம்களாக ஏற்கப் படுவார்கள்.
அந்த இளம் மொட்டுக்கள் மலர்ந்து உலகெங்கும் மனம் பரப்ப முடியாமல் செய்தது மாபாதகமாக செயலாகாதா?
இந்தத் தருணத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
கஸ்தூரி ராஜா என்ற ஒரு சினிமா டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் ஆவலோடு சில படங்கள் எடுத்து அவைகள் வெற்றி அடையவில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமம் படுவதினை விட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் அங்கே சென்றாராம். அங்கே சென்றும் சரியான வேலைக் கிடைக்காததால் ஒட்டு மொத்தக் குடும்பமே வறுமையில் வாடியதாம். ஒருநாள் தன் மனைவியிடம் சாப்பாட்டுக்கே சிரமப் படுவதினை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து விஷ  மருந்து வாங்கி வந்து விட்டாராம். அதனை இரவு மனைவியிடம் கொடுத்து கிடைத்த கொஞ்சம் சோற்றிலும் விசத்தினை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு நாமும் சாப்பிடலாம் என்றாராம். அப்போது பெற்றக் குழந்தைகளை சாகடிக்க மனசில்லாத பாசமுள்ள அவருடைய மனைவி, 'ஏங்க, நமக்கு இறைவன் இரண்டு ஆண்  குழந்தைகளைக் கொடுத்துள்ளான். அவர்கள் நிச்சயமாக பெரியவர்களாகி, நம்மையும் காப்பாற்றி மகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பி நாம் மறுபடியும் சென்னை சென்று பிழைப்போம்' என்று உறுதியான நம்பிக்கையினை அந்த மகராசி கணவனுக்குக் கொடுத்தாராம். அந்த அம்மணி சொன்ன வாக்கினை நம்பி சென்னை வந்து மறுபடியும் சினிமா  உலகில் பிழைப்பினைத் தொடங்கினாராம். அவருடைய மகன்களான சினிமா டைரக்டர் மற்றும் நடிகர் செல்வராகவன்,  தனுஸ் தலையெடுத்து இன்று அவர்கள் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கின்றதாம். இதனை ஒரு பேட்டியில் கஸ்தூரி ராஜாவே சொல்லியுள்ளார்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் பிள்ளைகள் மொட்டுக்கள் போன்றவர்கள் அவர்கள் வளர்ந்து, மலர்ந்து பெரியவர்களாகி, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும்,உலகிற்கும் நல்ல பல சாதனைகளை செய்ய மணக்கும் முன்னே பறித்து விடலாமா. ஆகவே தான் சில பூங்காக்களில் பூத்துக் குழுங்கும் மலர்களை பறிக்காதீர்கள் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள் . அதேபோன்று குழந்தைகளையும் இனியும் அழிக்காமல் வாழ விடுங்கள் என்று உரக்க கோசம் எழுப்பலாமா?

Monday 8 December, 2014

எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்!'

'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்!'
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, (பிஎச்டி,ஐ.பீ.எஸ் )
தனி நபர் சொத்து உரிமைகளில் பல்வேறு மதத்தினவர் சட்டப் படி உரிமை கொண்டாட வழிமுறைகள், பழக்க வழக்கங்கள் உண்டு. ஆனால் பொது நிறுவனத்திலோ அல்லது ஜனநாயக அரசிலமைப்பிலோ அதுபோன்ற வாரிசு உரிமைகள் இல்லை.   முற்காலத்தில் அரசர்களில்லை. அரசர்களில்லததால் போர்களில்லை. ஆனால் நாடுகளை ஆட்சி செய்ய அரசர்கள் வந்ததும் மன்னர்களின் மண்ணாசை ஆர்வத்தால் போர்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளில் மற்ற நாட்டு  மக்களில்லா மகிழ்ச்சி போலந்து நாட்டு மக்களுக்கு இருந்ததாம். காரணம் அங்கே மன்னர் ஆட்சி இல்லையாம். உலக ஆட்சி முறைகளுக்கு முன்னோடியான கிரேக்க நாட்டில் கடிவாளமில்லாத அதிகாரத்தினை சில ஆட்சியாளர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன என்று வரலாறு கூறுகின்றது.
 இரண்டாம் உலகப் போரில்  மன்னர் ஆட்சியின் மகுடங்கள் சரிந்து மக்கள் ஆட்சி பல்வேறு நாடுகளில் மலர்ந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்தப் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்வது தான் ஜனநாயகம்.  மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தலைவர்கள் அகிலத்தில் உண்டு. அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை வாரிசாக நியமனம் செய்ததில்லை. வாரிசுகள் அரசில் தலையீட்டால் பல்வேறு தலைவர்கள் பதவி இழக்கும் சம்பவங்களும் உண்டு. தலைமைப் பதவியினை ஏற்ற வாரிசுகள் சர்வாதிகாரிகளாக மாறி  சிம்மாசனங்களை இழந்தவர்களும் உண்டு.
அவ்வாறு பதவி இழந்ததிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது:
1)    வாரிசுகள் மைனர்களாகவும், முன் அனுபவமில்லாது குழப்பமான அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
2)     வாரிசில்லாத ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், மாட்சிமை அமைந்தவர்களாகவும் இருந்ததால் மக்கள் மற்றவர்களை தேர்ந்தடுத்தது.

வாரிசுகள் என்பது புகழுக்காகவோ, பதவி சுகத்திற்காகவோ , தங்களுக்குள்ளே இருக்கும் குரோதத்தினை பதவியால் பழி தீர்த்துக் கொள்வதிற்காகவோ அல்ல. மக்களை உண்மையான நேரான வழியில் நடத்திச் செல்லவே பயன் படும் என்றால் மிகையாகாது.
இறை வழி வந்த யூத, கிருத்துவத்திலோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்திலோ வாரிசு உரிமை இல்லை. எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூட தன் கடைசி வாழ்நாளில்  என் வாரிசு இவர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை. அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லும் திறமை அவர்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ்  வழங்கி இருந்ததால் பெருமானார் அவர்கள் யாரையும் வாரிசு என்று சுட்டிக் காட்ட வில்லை. ஆனால் இன்று பல்வேறு இஸ்லாமியர் ஆளும் அராபிய, வளைகுடா  மற்றும் ஆப்ரிக்க    நாடுகளில் அனுபவமில்லா வாரிசுகளை நியமித்ததால் உள்நாட்டுக்குள்ளே குழப்பம், வெளிநாட்டு மிரட்டல்,    அந்நிய நாடுகளின் ஆதிக்கம் ஆகியவைகளுக்கு வழிவிட நேருகிறது.
செல்வமிருந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் உதவிற்கு மேற்கத்திய நாடுகளை நாட வேண்டியிருப்பது கேவலமில்லையா? மக்கள் பணி மறந்து மயக்கத்தில் இருப்பதினால் இந்த பரிதாப நிலை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதினை துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படியெல்லாம் அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளார்கள் என்று.
அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களை தட்டி எழுப்பி, அவர்களுடைய உரிமைக்காக தன்னுயிர் கொடுத்த மார்டின் லூதர் கிங், சொந்த நாட்டில் வெள்ளை இன மக்களால் பல இன்னல்கள் பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த தென் ஆப்ரிகா சிங்கம் நெல்சன் மண்டேலா, காலனி ஆதிக்கத்திலிருந்து அன்னியப் படைகளை விரட்டிய துருக்கி நாட்டினைச் சார்ந்த முஸ்தபா  கமால் அட்டா  துர்க், எகிப்தினைச் சார்ந்த கமால் அப்துல் நாசர், இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா போன்றோர் தங்கள் வாரிசுகளாக யாரையும் சுட்டிக் காட்டவில்லை என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அதன் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அடையாளம் காட்டியதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதன என்பது நாம் அறிவோம்.
இந்திய அரசியலில் மற்றவர்களுக்கு முடிசூட்டும் தலைவராக இருந்த காமராஜர்,தாழ்த்தப் பட்ட மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கார், சிறுபான்மை மக்களுக்கு  அரணாக இருந்த கண்ணியமிகு காயிதே மில்லத், பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா போன்றோர் தங்களுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அந்தப் பெரியார்களின் பெயரில் கட்சி நடத்தும் சிலர் தாங்கள் தான் வாரிசு என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெரியார்களின் கொள்கைகளை காற்றில் பறக்கச் செய்யும் பரிதாபம் நீங்கள் காணலாம். எங்கெல்லாம் அரசியல் வாரிசாக தன் குடும்பத்தினைச் சார்ந்தவர்களை அடையாளம் காட்டுகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் தோல்விகளை அன்றாட அரசியல் வானில் காணலாம். உதாரணத்திற்கு ஹரியாணா மாநிலத்தில்முன்னாள் துணை பிரதமர்  தேவிலால் வாரிசு ஓம் பிரகாஸ் சௌட்டாலா, பீகார் முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முன்னால் முதல்வர் மனைவி ராபரி தேவி  , முன்னால் துணை பிரதமர்  சரண் சிங் மகன் அஜீத் சிங், கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவி கௌடா மகன் குமாரசாமி போன்றவைகர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய கட்சியின் செல்வாக்குகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கதையானது அனைவருக்கும் தெரியும்.
பிள்ளைகள் கேட்டு அடம் பிடிக்கின்றார்களே என்று தந்தைமார்கள் தின்பதிற்காக பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்,விளையாட பலூன், பார்பி பொம்மை அல்லது ஐ.பேட்  போன்றவை தந்தைமார்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதற்காக பிள்ளைகள் கேட்கின்றதே என்று படுக்க இலவம் பஞ்சு மெத்தை, ஏ.சி. மெசின் பெட் ரூம், கொப்பளிக்க பன்னீர், குளிக்க கழுதைப் பால், குடிக்க ஒட்டகப்பால், பயணம் செய்ய ஆடி.கார் போன்றவை சாதாரணக் குடிமகன் வாங்கிக் கொடுக்க முடியுமா? முடியாதல்லவா ? ஆகவே தந்தையார் உயர் பதவியில் இருந்தால் அவர் மகன் தந்தைபோன்று உழைத்து முன்னுக்கு வர ஆசைப் படவேண்டுமே தவிர தந்தையின் சிம்மாசனமே ஆசைப்பட்டதும் வேண்டும் என்று கூறுவது பேராசையில்லையா?
அதேபோன்று ஒரு இமாம் திருக்குரானை, ஹதிஸ்களை அதிகமாக தெரிந்தவர், சிறப்பாக பாயான் செய்பவர் தான். ஆனால் அதனைப் பயன் படுத்தி பத்வா கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தவரோ, அல்லது தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை அடகு வைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்தவரா என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு மேலாக பள்ளிவாசல்களில் தொழ வைக்க இரண்டு இமாம்கள்  என்ற வசதியினைப் பயன்படுத்திக் கொண்டு  தனது ஓய்வு நேரங்களில் மூட நம்பிக்கைக்கு புகழிடமான பேய், பிசாசு, காற்று, கருப்பு ஒழிக்கின்றேன் என்று கிளம்பி வசூல் வேட்டையில் ஈடுபடலாமா?
அதுபோன்ற சிர்க்கான காரியங்களை விட்டுவிட்டு இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும்  சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா தகவல்களை பயான்களில் சொன்னால்  முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா?  6.12.2014 ந் தேதி கர்நாடக மந்திரி சதிஸ் ஜார்கிஹோலி என்பவர் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களிடையே நிலவும் காற்று, கருப்பு, பேய், பிசாசு என்ற மூட நம்பிக்கையினை ஒழிக்க காலையிலிருந்து மறுநாள் காலைவரை தனிமையில் பெலகாவில் உள்ள சதாசிவ நகர் சுடுகாட்டில் தங்கி, உணவருந்தி, படுத்து தூங்கி எழுந்தாராம். அவரை எந்தப் பேயும், பிசாசும் அண்டவில்லை. இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கையில் இறங்கி முஸ்லிம்கள் சிலரின் மூட நம்பிக்கை ஒழிக்கப் பாடுபடுவதினை விட்டுவிட்டு, சிர்க்கான காரியங்களான பேய்,பிசாசு விரட்டுகிறேன் என்று பண அறுவடை செய்வது தகுமா?  இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும்  சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா அற்புதங்களை, கணினி உபயோகித்து, பத்திரிக்கை ஆதாரத்துடன்  பயான்களில் சொன்னால்  முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா?  அதனை விட்டு விட்டு  தொழவதிற்கு நியமிக்கப் பட்ட இமாம் பள்ளிவாசலுக்கு நானே எஜமான், எனக்குப் பின்பு என் சிறுவயது மகனே வாரிசு என்று 'உழுதவனுக்கே நிலம் சொந்தம்' என்ற அடிப்படையில் சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்தில் நியாயம்?
அரசியல் போன்றே மதத்தலைவர்களும் தங்கள் வாரிசுகளை நியமனம் செய்வதால் மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பதினை இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.
1) முகலாய பாரம்பரிய சின்னமாக தலைநகர் டெல்லியில் உள்ளது ஜும்மா மஸ்ஜித் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் முதல் முறையாக 1979 ஆம் ஆண்டு பார்த்துப் பரவசப் பட்டிருக்கின்றேன். அங்குள்ள இமாம் புஹாரி தனது 19  வயது மகனை தனது வாரிசாக நியமித்துள்ளார். அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதல்லவா? அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றது மக்களின் புருவத்தினை உயர்த்த வைத்தது.
2) பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஆசிரமம் அமைத்து ஆட்சிமை நடத்திய திவ்ய ஜோதி சுவாமி அவர்கள் சென்ற நவம்பரில் மரணம் அடைந்து விட்டார். அந்த ஆசிரமத்தினைச் சார்ந்த பலகோடி மதிப்புள்ள சொத்தினை சொந்தம் கொண்டாட அவருடைய மகன்களிடையே வாரிசு போட்டி ஏற்பட்டதால் இறந்த சாமியின் உடலினை ‘ப்ரீசர் பெட்டியில்’ வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சாமியார் மீண்டும் உயுர் பெற்று மக்களுக்கு பூஜைகள் நடத்த யார் வாரிசு என்று அடையாம் காட்டுவாராம்.. இந்த வழக்கும் பஞ்சாப் உயர் நீதிமன்ற வரை சென்று உயர் நீதிமன்றமும் சென்ற நவம்பர் மாதத்திற்குள் அவருடைய உடலை அப்புறப் படுத்தி தகனம் செய்யவும் என்று ஆணைப் பிரபித்தும் இன்னும் அந்த பிரேதம் பாதுகாக்கப் பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது என்னே வேடிக்கையான செயல்.
தமிழக முஸ்லிம் கட்சிகளில் சிலர் கண்ணியமிகு காயிதே மில்லத், அதற்குப் பின்பு வந்த சிராஜுல் மில்லத் ஆகியோருடைய உண்மையான வாரிசு நாங்கள் தான் என்று பெயரளவில் லெட்டெர் பேடு வைத்து அரசியல் நடத்தி தேர்தல் நேரத்தில் பத்தோடு பதினொன்றாக இருப்பது எந்த விதத்திலும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது தான் உண்மை. அந்தத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்கு அவர்கள் வாரிசாக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூதாயத்திற்கும் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?
அதேபோன்று தான் இமாம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணியாளர் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கே எஜமானவர்களாக ஒருபோதும் ஆக முடியுமா?
ஆகவே தனிப் பட்ட குடும்ப மற்றும் சொத்து பங்கீடு செய்வதில் வாரிசுகள் செல்லுபடியாகுமே தவிர அரசியல் வானிலோ, மத சம்பிராய சடங்குகளிலோ அதுபோன்ற செயல் போணியாகாது என்றால் சரிதானே!


Tuesday 25 November, 2014

எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!


இந்திய நாட்டில் நலிவடைந்த, பிற்படுத்தப் பட்ட  சமூதாயத்தின் மக்களை ஏமாற்றி தங்களைக் கடவுளின் மறு அவதாரம் என்று கூறிக்கொண்டு, மழைக் காலத்தில் முளைக்கும் காளான்கள் போல போலி பகவான்கள் உருவாகுவதிற்கு அரசுகளின் விஞ்ஞான முறையான அணுகுமுறை குறைவாக இருப்பதே காரணம் என்று சமீப கால   சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஒரு நாட்டின் உயர் பதவி வகித்த ஜனாதியான அப்துல் கலாம், உச்சநீதி மன்ற நீதிபதி பகவதி போன்றோர் புட்டபர்த்தி சாமியார் ஆசிரமம் சென்று சாமியார் அரியணையில் அமர்ந்திருக்கும் போது முக்கிய பிரமுகர்கள் அவர்முன் தரையில் பய பக்தியுடன் அமர்ந்து இருப்பது போன்ற படங்களும், மத்திய- மாநில மந்திரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களிடம் சென்று ஆசி பெறுவதும் பத்திக்கைகள் படம்போட்டுக் காட்டுகின்றன., அந்த பகவான்கள் ஆசிரமங்களில் சில சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடக்கும்போது அப்படிப் பட்ட  முக்கியப் பிரமுகர்கள்  மக்களிடையே தவறான பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. சாதாரண பாமரனும் முக்கிய பிரமுகர்களே அப்படிப் பட்ட பகவான்களை  தரிசனம் செய்யும் போது  அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி அவனும் அந்த சாமியார்களுக்கு அடிமையாகி விடுகிறான். அந்த பகவான்களும் சாமானியர்களிடம் இருப்பதினை எல்லாம் கறந்து படோபடமாக வாழ்வதோடு சில சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடு  படுகிறார்கள்  என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.
1) முன்னாள் பிரதம மந்திரிகள் நரசிம்ம ராவ் மற்றும் அவரது மந்திரி சகாபாக்கள் மற்றும் முன்னால் பிரதமர் சந்திர சேகர் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமாக சந்திரசாமி  என்ற சாமியார் இருந்ததினை பலர் அறிந்து இருப்பீர்கள். 1994 ஆம் ஆண்டு சந்திராசாமி பிறந்த தின விழாவிற்கு நரசிம்ம ராவ் மற்றும் பெரும்பாலான மத்திய மந்திரிகள் அவருடைய ஆசிரமத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு அவர் அரசு பவர் புரோக்கராகி ஆயித பேர ஊழலில் ‘அதான் கஸ்ரோகிக்கு’ உதவி செய்ததாகவும், லண்டன் தொழில் அதிபர் ‘பதக்’ இந்தியாவில் தொழில் சம்பந்தமாக சந்திராசாமியினை அணுகி ரூ 6/ கோடி கையூட்டு கொடுத்ததாகவும் அப்போது புகார் கொடுத்து, சந்திராசாமி ஜெயிலுக்குச் சென்றதும், அந்த வழக்கு   உச்ச்சமன்றத்திற்கும் சென்றது உங்கள் பலருக்குத் தெரிந்து இருக்கும்.
2) மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் என்ற இடத்தில் ஆசிரம் நடத்தி கற்பழிப்பு, வன்கொடுமை மூலம் 170 பேர்கள் காணாமல் போனது குறித்தக் குற்றச் சாட்டுக்கு ஆளான ‘கிரிப்பால் மகாராஜ்’ என்ற பகவான் அந்த வழக்குகள் சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை என்றுக் கேள்விப்பட்டதும் தலைமறைவானவர் இன்றுவரை என்னானார் என்று தெரியவில்லை.
3) இலங்கை அகதி  'பிரேம்குமார்' என்ற பிரேமானந்தா திருச்சி-புதுக்கோட்டை எல்லை அருகில் உள்ள விராலிமலை ஓரம் ஆசிரம் அமைத்து, ஆதரவு தேடி வந்த சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதகவும், அதனைப் பார்த்த ஒரு இளைஞரை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டு இரட்டை ஆயுள் தண்டனை அனுபவிக்கும்போது ஜெயிலில் இறந்தது அனைவரும் அறிந்ததே! அதோடு  மட்டுமல்லாது தமிழக  பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் அவரிடம் ஆசி வாங்கியது பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டின.
4) 1980-1984 ஆண்டுகளில் பஞ்சாபிற்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோஷமிட்டு, சீக்கியர் பொற்கோவில் வளாகத்தினையும் கோட்டையாக அமைத்து, காலிஸ்தான் என்ற படையினை அமைத்துப் இந்திய ராணுவத்தினையே எதிர்த்துப் போரிட்டு மடிந்த, 'பிந்தரன்வாலா' போன்றோரையும் சில சீக்கிய மக்கள் தியாகி என்று போற்றுகின்றனர். சீக்கிய மத குரு 'லோங்கோவால்' கூட ஆரம்பத்தில் 'பிந்தரன்வாலாவினை' ஒரு 'ஸ்கௌன்றல்' (போக்கிரி) என்றவர்  பிற்காலத்தில் அவரே 'பிந்தரன்வாலே ஒரு 'ஞானி' என்று அழைத்தார் என்றால் பாருங்களேன்.
5) பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களில் 'தேரா சச்சா' என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமும், ரஹீமும் ஒன்றுதான் என்ற கோசத்தினை எழுப்பி மக்களைக் கவர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைக்காக வாளும், துப்பாக்கியும் ஏந்தி மற்ற சீக்கியர்களுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்டையிட்டது நீங்கள் தொலைக்கட்சியில் பார்த்தும், பத்திரிக்கையில் படித்தும் இருப்பீர்கள். அதன் தலைவர் 'குர்மீத்' பத்திர்க்கையாளர் ராமச்சந்ராவினை கொலை செய்தது சம்பந்தமாக, 'தெகல்கா மற்றும் 'இந்தியா டி.வி.' சேகரித்த ரகசிய தகவல்கள் மூலம் வெளியிட்டது.
6) 6) 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரபரப்பாக பேசப் பட்டவர் 'ராம்பால்' என்ற பகவான். இவர் இன்ஜினியரிங் டிப்ளமா பட்டதாரி. ஹரியானா மாநிலம் நீர்பாசான துறையில் பணியாற்றி முறைகேட்டால் பணி நீக்கம் செய்யப் பட்டவர். ஹிசார் என்ற இடத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியில்லாத ஆசிரமம், 30 உயரம் கொண்ட கோட்டை போன்ற சுற்றுசுவர் எழுப்பி 'ராம்-ரஹீம்' என்ற கோசத்தின் மூலம் பாமரர்களை  ஏமாற்றி ஹரியானா அரசுக்கே ஒரு சவாலாக இருந்தது உங்களுக்குத் தெரியும். இவ்வளவிற்கும் அவர் மீது ஒரு கொலைவழக்கு நீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருப்பதும், உயர் நீதி மன்றம் அவரை ஆஜராகும்படி 48 தடவை உத்திரவிட்டும் அவர் ஆஜராகாததால் அவரை ஆஜர் படுத்தும் படி காவலர்களுக்கு கட்டளை இட்டும், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் அதனை துப்பாக்கி, பெட்ரோல் எறிகுண்டுகள் மூலம் எதிர்கொண்டு, பின்பு ஆறுபேர்கள் இறப்பிற்குப் பின்பு அவரை கைது செய்ய முடிந்தது என்றால் என்ன தைரியம் என்று நீங்கள் கேட்கலாம். சமீபத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அந்த பகவானிடம் ஆசி பெற்றதனால் அவர்கள் காப்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில்  அந்த பகவானின் கமாண்டோக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
7) புது டெல்லி அருகில் ரிசர்வ் பாரஸ்ட் இடத்தில் ஆக்கிரமித்து ஆசிரம் அமைத்து பக்தர்களைக் கவர்ந்த 72 வயது 'ஆசாராம் பாப்பு' என்ற பகவான் தற்போது கற்பழிப்புக் குற்றச் சாட்டிற்கு ஆளாகி சிறையில் இருக்கிறார். அப்படி ஆக்கிரமித்த இடத்தினை இடிக்கும்படி, 'தேசிய பசுமை ஆணையம்' கட்டளையிட்டும் இன்றும் கூட இடிக்கவில்லை.
இவையெல்லாம்  எதைக் காட்டுகின்றது என்றால் நலிவடைந்த பிற்பட்ட மக்கள் ஏழ்மையில் வாடும்போது ஏதாவது ஒரு வழிமூலம் ஏழ்மைக்கு விடிவெள்ளி கிடைக்காதா என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் அப்படிப் பட்ட பகவாங்களிடம் ஆசி பெற வரும்போது நாமும் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி உள்ளது என்றால் மிகையாகாது.
21.11.2014 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'சில மாதங்களுக்குமுன்பு  பிரதமர் நரேந்தர மோடி  அவர்கள் மும்பையில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில்  பேசும்போது, 'இந்திய நாட்டில் உள்ள விநாயகர் என்ற கணேச பெருமான் தலை தும்பிக்கையுடன் கொண்ட யானை முகம் மனித உருவத்தில் உள்ளதால், அந்தக் காலத்தே மனித உடலில் யானை முகத்தினைப் பொருத்தும்   பிளாஸ்டிக் சர்ஜெரி விஞ்ஞானிகள் இருந்ததினால் தான் அதுபோன்ற சாதனை நிகழ்த்த முடிந்திருக்கின்றது' என்று சொன்னதினை சுட்டிக் காட்டி மத நம்பிக்கை வேறு, விஞ்ஞானம் வேறு, அப்படி இருக்கும்போது மத நம்பிக்கையினை விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பேசியது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று ஹிந்துப் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது எதனை காட்டுகின்றது என்றால் பதவியில் இருப்பவர்களும், படித்தவர்களும் பாமர மக்களுக்குப் அறிவுப் பூர்வமாக பாது காப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏழை எளிய பிற்படுத்தப் பட்ட மக்கள் மோசடி பகவான்களிடம் தஞ்சம் அடைவதினைத் தடுக்க முடியாதல்லவா?
மோசடி பகவான்கள் ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா மதத்திலும், ஏன் சில சீர் திர்த்த மார்க்கங்களிலும்  இருக்கின்றார்கள். அவர்கள் தான் பில்லி, சூனியம், காற்று, கருப்பு, அதனை விரட்ட தாயத்து, பல நிறங்களில்  கயிறுகள்,விற்றும், பேய் விரட்டும் தந்திரங்கள் கையாண்டும், களிப்பு எடுக்க வேண்டும், ஆவி விரட்ட வேண்டியும் என்ற புருடா விட்டும், நரபலி கொடுக்கச் சொல்லியும் இளகிய மனங்களை மேலும்  பலவீனப் படுத்தி நாலு காசு சம்பாதித்து தங்களை சீமான்களாக மேம்படுத்தி, நம்பிய மக்களை மூடர்களாக்கும்  பகவான்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்கள் முகத்திரையினைக் கிழிப்பது ஒவ்வொரு படித்த, பகுத்தறிவாளர் கடமையல்லவா?


Wednesday 12 November, 2014

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது !


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
2014, நவம்பர் மாதம், கொச்சிக் கடக்கரையிலும், புது டெல்லியிலும் 'லவ் கிஸ்' என்ற அமைப்பு ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நேசத்தினைத்தினை பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்று விட்டது ஒரு செய்திக் குறிப்பு. அதுவும் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணும் ஓரினை சேர்க்கையினை வெளிப்படுத்தும் அளவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சிதான் உச்ச்சகாட்டம். ஏனென்றால் அறையில் நடக்க வேண்டிய செயல்கள் அந்தரத்திற்கு வந்து விட்ட அதிசயம் தான்.
சிறார்கள் உணவுப் பழக்க வழக்கங்களால் சமீப காலங்களில் இளம் வயதிலேயே பாலுணர்வு உச்சக் கட்டத்தினை எட்டும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதன் வடிகாலாய்’ லவ்’ என்ற ஒரு ஆயிதத்தினை கையில் எடுக்கின்றனர்.  பாலுணர்வு ஆராச்சியாளர் டாக்டர் நாராயண ரெட்டி கூறும்போது, 'பாலுணர்வு தவறல்ல, ஆனால் அவற்றினை அறிவுடன் கட்டுப் படுத்துவது புத்திசாலித் தனம்' என்று சொல்கிறார். சமீபகால சினிமாவும்,டிவியும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பாடல்களையும், தொடர்களையும், படங்களையும் வெளியிடுவதால், அதனை பெரியோரும், சிறார்கள் ஒருங்கே அமர்ந்து வீடுகளில், தியேட்டர்  போன்றவற்றில் அமர்ந்து பார்த்து ரசிப்பதால் பாலுனர்வினை மேலும் தூண்டுவதிற்கு வழி விடுகிறோம். பீச், தியேட்டர், பூங்கா, போன்ற பொது இடங்களில் சிறார்கள் தங்கள் பள்ளி, கல்லூரி சீருடையினைக் கூட மாற்றாமல் மெய்மறந்து அமர்ந்து லவ்வினைப் பரிமாறிக் கொள்வதினை நீங்களும் கண்டு மனம் வெதும்பி இருப்பீர்கள். பார்வை, சிரிப்பு, கடித பரிமாற்றம்,பரிசு அன்பளிப்பு என்றுத் தொடங்கி உரசுதல், அணைத்தல், முத்தமிடல், பின்பு பெண் சிறார்கள் தங்களையே உடல் ரீதியாக 'தியாகம்' செய்யுதல் என்று எல்லை மீறிப் போகும். அதால் பாதிக்கப் படுவது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும், அவர்களுடைய மான, மரியாதையும் தான். அதில் பாதிக்கப் பட்டவர்கள், 'கௌ ரவக் கொலை'என்ற ஆயுதத்தினைக் கடைசியாக கையாள்கின்றனர். அவையெல்லாம், 'கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம்' என்பது போன்ற செயலாகும்.
சிறார்கள் பாலுனர்விற்கு அடிமையாவதிற்கு என்ன முக்கியமான காரணம்:
1)    குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை சிறார்களை பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க வழிவிடுகிறது.பெற்றோர்கள் சிறார்களில் பராமரிப்பிளிருந்தும், வழி நடத்துவதிலிருந்தும் கவனம் செலுத்தாதது சிறார்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வளர்கிறார்கள். சில வீடுகளில் பெற்றோர்களின் ‘கூடா ஒழுக்கம்’ குழந்தைகளை வழிக்கேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
வளரும் சிறார்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய பாலுனர்விற்கு அடிமையாகி விட்டு வாழ்க்கையினை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் பெற்றோர், உற்றார், உறவினர் மிகக் குறைவே. சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் வரும் செயல்முறைகள் அலங்காரமானது மட்டுமல்ல மாறாக அபாயகரமான பொய்யானது, பாதுகாப்பற்றது  என்று சிறார்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் உதாரணமாக 10.11.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். சென்னை கொடுங்கையூரில் வினோத் என்ற 28 வயது வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிள்  மெக்கானிக். அவர் வித்யா(27) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து நான்குமாத கர்ப்பிணியாக்கி உள்ளார். அதன் பின்பு காதல் மனைவி மீது உள்ள பாசம் விலகி, அருகில் உள்ள பள்ளி சிறுமிகள் பக்கம் பார்வையினை செலுத்தியிருக்கின்றார். அவர் வலையில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நக்மா, 'காதல்' படத்தில் வரும் கதாயகி போன்று  விழுந்திருக்கின்றார். இருவரும் பொழுது போக்கு இடங்களில்  சுற்றியிருக்கின்றார்கள். இதனை அறிந்த நக்மாவின் பெற்றோர் நக்மாவினை சொந்த ஊரான டெராடூனுக்கு   அழைத்துச் சென்று இருக்கின்றார்கள். இதனை அறிந்த வினோத்தும்  டெராடூனுக்குச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் சென்னையில் திருமணம் செய்ய ஜி.டி. ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார். வினோத் டெராடூனுக்குச் சென்றதினை அறிந்து மனைவி வித்யா சென்னை சென்ரல் ரயில் நிலயத்தில் உறவினர்களுடன் காத்து அந்த இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளார். போலீசாரும் நக்மாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்கள் என்ற செய்தி எவ்வளவு சிறார்கள் பாலுணர்வுக்குப் பழியாகி விடுகிறார்கள் என்று தெரிந்திருக்கும்.
2) சுய மரியாதை, கவுரவம் இல்லாமை:
சுய மரியாதை மற்றும் கவுரவம் இல்லாத சிறார்கள், பெண்கள் மனோ இச்சைகளுக்கு காட்டுப் பட வேண்டியதுள்ளது. குழந்தைகள் வளரும் போதே வேற்று ஆடவர் கொடுக்கும் இனிப்புப் பண்டங்கள், அன்பளிப்பு போன்றவைகளை இலவசமாகப் பெறக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் சிறார்கள் பெரியவர்களாக வளரும்போது வேற்று ஆடவர் கொடுக்கும் செல்போன், பாக்கெட் மணி, பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் வாங்க மாட்டர்கள். அவ்வாறு சுய கவுரவுத்துடன் வளர்க்கப் பட்ட பெண் சிறார்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது பாலுணர்வுக்கு உந்தப் பட்டு தங்களது கற்பினை இழக்க மாட்டார்கள் என்றும், சுய கவுரவமில்லாது இருக்கும் பெண் சிறார்கள் தங்கள் கற்பினையும் இழந்து பால் வினை நோய்களையும் பெற்றுக் கொள்கிறார்கள் என்று டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறார். அது மட்டுமா, காதலன் பெண் சிறார்களின் கற்பினை சூறையாடி கரு உண்டாக்கி விட்டு அதனைக் கலைக்க யோசனைகளான கடுகுச்சாறு குடித்தல், கள்ளிப் பாலை பெண் உறுப்பில் செலுத்துதல், ஹேர்பின் மற்றும் குத்தூசி கொண்டு கற்பபையினை குத்துடல், போலி டாக்டர் உதவியுடன் கொடூரமான முறையில் கருக்கலைப்பது போன்ற கொடூரமான யோசனைகளுக்கும் அவர்களை வற்புறுத்துகிறான். அந்த விசப் பரிட்சையில் பெண் சிறார்கள் உயிர் இழக்கவும் நேருடுகிறது  உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் ஒரு பூவினில் தேனெடுத்து சுவை கண்ட காதலன்  தன் காதலியினைப் பார்த்து, 'நீ திருமணத்திற்கு முன்பு என்னுடன்  உறவு கொண்டது போல வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருப்பாய்' என்று சந்தேகமும் காதலியினை விட்டு ஒதுங்கும் பேர்வழிகளைப் கண்டுள்ளோம்.
3) நேசமும், பாசமும்:
காதலர்கள் காதலியின் உடல் உறவிற்காக நேசத்துடன் பழகுவர். ஆனால் காதலிகள் பாசத்திற்காக உடல் உறவினை ஒப்புக் கொள்கிறார்கள். என்று 1999 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இயங்கும், 'பவுண்டேசன் ஒப் ரிசர்ச் அண்ட் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரியும், நிர்மலா மூர்த்தி மற்றும் அகிலா வாசன் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள், 'பெண்கள் ஆண்களின் மேல் உள்ள பாசத்தினை  'பியார்,பிரேம்' என்று நவுன் ஆன பெயர் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் அதனை வினைச் சொல்லாக மாற்றி தங்களின் நேசம் வேண்டுமென்றால் அதற்கு பரிகாரமாக காதலியின் கற்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். புது டெல்லியின் ஒரு ஆய்வு அறிக்கையில், 'ஆண்களின் தோற்றத்தில் மயங்கும் பெண்கள் 57 சதவீதம்' என்று கூறுகிறது. சென்னையில் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், காதில் வலயம், கழுத்தில் கவரிங் செயின், கையில் வெள்ளி பிரேஸ்லெட், போன்று அணிந்து பெண்கள் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்ஸ் போன்ற வற்றில் வளம் வந்து தங்கள் வலையில் சிக்கும் கன்னிகள் சுற்றி  வட்டம் போடுவதினை நீங்கள் காணலாம். அதுபோன்ற வல்லூருகளிடமிருந்து பெண் சிறார்களை கண்மணியினை காக்கும் இமைகளைப் போல் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
4) ஆணாதிக்கம்:
காதலில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. ஒரு ஆய்வுக் கட்டுரையில், 'பெண்கள் சுகமில்லாது இருந்தாலும் ஆண் காதலர்கள் உடலுறவு கொள்ள வற்புறுத்தலுக்குப் பணிவதாக' சொல்கிறது. அதே அறிக்கையில் ஆண்கள் காதலிகளிடம் உடலுறவு கொள்ளும்போது தற்காப்பிற்கான ஆணுறைகளை 75 சதவீதம் பேர்கள் தவிர்ப்பதாக கூறுகிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக காதலர்களை கர்ப்பிணியாக்கி விட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?
5) உற்றார், உறவினர், ஆலோசகர் கடமை:
மும்பையினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும் பொது, 'பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கற்பமாவதிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப் படுகிறார்கள்'.
ஆகவே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் ஆலோசகர்கள் பெண் சிறார்களுக்கு பருவமடைடல், அதனால் உடலில் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள், கற்பு பிறழா ஒழுக்கம், பாலுணர்வு அதனை பாதுகாக்கும் விதம் ஆகியவற்றினை தன் நண்பர்களுக்கு சொல்லும் புத்திமதி போல் எடுத்துச் சொல்லி, குழந்தைகள் தேவைகள் குறிப்பறிந்து ஆடம்பரமில்லா செலவினங்களுக்கு உதவி செய்து அவர்களை காதல்  என்ற மாய வலையில் விழாமல், வாழ்க்கையில் வெற்றிகாண ஒவ்வொருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும் எனச் சொல்லி நல்வழியில்,  வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வீணாகாமல் நெல்லுக்குப் பாய எப்படி வழிவகை செய்கிறோமோ அதனைப் போன்று சமூதாய மக்களும்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமல்லவா? 


Monday 3 November, 2014

பரபரப்பு மத மாற்ற பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!

பரபரப்பு மத மாற்ற  பேச்சும், பத்திரிக்கை செய்திகளும்!
(டாக்டர் .பீ .முகமது அலி, .பீ.எஸ்()  
பத்திரிக்கைகள் இஸ்லாமிய மத மாற்றம் பற்றி சமீப காலமாக  தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது அனைவரும் அறிந்ததே! அதற்குக் காரணம் சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை பிரபலங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதுதான். சமூக, சமூதாயத்தில் புரையோடி இருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை நீக்கி, ஏக இறைக் கொள்கையினை பரப்பி, மனிதனைப் புனிதனாக்கக் கூடிய மார்க்கம் தான் இஸ்லாம் என்று அறியாத பலர் தான் இன்னும் இஸ்லாமிய மதமாற்றம் என்று சொல்கிறார்கள்.
இஸ்லாம் இந்தியாவில் இரண்டாவது பெரிய மார்க்கம். 2011 ஆய்வுப்படி 18 கோடி இஸ்லாமியர் கொண்ட மார்க்கமாக திகழ்கிறது. இஸ்லாமியர்  அஸ்ஸாம், மேற்கு வங்கம், .பி , பிகார்  மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகமாக வாழ்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் மலபார் கடற்கரை ஓரம் வர்த்தகத்திற்கு வந்த இஸ்லாமியர் மூலமாகவும், 11 மற்றும் 12 ஆம்  நூற்றாண்டில் வந்த துருக்கிய வம்ச படையெடுப்புகளால் இஸ்லாமிய மார்க்கம் வட இந்தியாவிற்கு தெரிய வந்தது. படைஎடுப்பிற்காக வந்தாலும், இந்திய நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், கல்வி, அரசியலில் பெரும் பங்காற்றினார் என்று பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக நூல்களில் எடுத்து இயம்பி உள்ளனர்.
இஸ்லாமிய மார்க்க மாற்றம் ஏழாம் நூற்றாண்டில் மலபார் மன்னர் சேரமான் பெருமாள் மூலம் மனமாற்றம் ஏற்பட்டு இஸ்லாமியத்தினை தழுவினர். அதன் பின்பு பல்வேறு காரணங்களால் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியதாகக் கூறப்படுகிறது வரலாறு. அவைகளில் சில பின் வருமாறு:

1) துருக்கிய வம்சா வழியினர் இந்திய மண்ணில் ஆட்சி செய்தபோது இஸ்லாமியர் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிற்காக வரி விதிக்கப் பட்டது. அந்த வரியிலிருந்து தப்பிப்பதிற்காக சிலர் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி உள்ளனர்.
2) இஸ்லாமிய ஏகத்துவ கொள்கைகளை சூபி மற்றும் சுன்னி மகான்கள் மூலம் அறிந்து பலர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்துள்ளனர்.
3) இந்திய நாட்டு ஜாதி துவேசத்தில் மனம் நொந்த தலித் மக்கள் புத்தமதத்திலிருந்து அம்பேத்கார் மறைவிற்குப் பின்பு இஸ்லாத்திற்கு வந்துள்ளனர்.
இந்திய அரசியல் வாதிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலராலும் இஸ்லாமிய மார்க்கம் வாளால் பரப்பப்பட்டுள்ளது என்றக் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டினை 12ஆம் நூற்றாண்டிலிருந்து முதலாம் இந்திய விடுதலைப் போர் நடந்த 1857 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களால் இந்திய மக்களில் பெரும்பாலோரை முஸ்லிமாக கட்டாயப்படுத்தி மாற்றவில்லையே அது எப்படி! இன்னும் இந்திய நாட்டு மக்கள் தொகையில் 15 சதவீதம் தானே இஸ்லாமியராக உள்ளனர்! அது மட்டுமா? இஸ்லாமியர் படையெடுக்காத பங்களா தேஷ்இலங்கை, பர்மா, தெற்கு தாய்லாந்து , மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியர் அதிகமாக வாழ்வதிற்கு  மன மாற்றம் தானே காரணம்.
உலகில் சமீபகால  இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவிய பிரபலங்கள் என்றால் அமெரிக்காவின் மால்கம் எக்ஸ்குத்துச்சண்டை சாம்பியன்கள் முகமது அலி, மைக் டைசன், எழுத்தாளர் ரிட்லே, விளையாட்டு வீரர்கள் ஜிடேன், யாயாடோரே, பிராங் போன்றவர்கள் முக்கிய மாணவர்கள்.
உலகில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர் ஆட்சி நடக்கவில்லை. இருந்தாலும் 10 வருடத்தில் இஸ்லாமியர் 137 சதவீதம் அதிகரித்துள்ளனர். அதிக நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கிருத்துவர்கள் 46சதவீதம் தான் அதிகரித்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இஸ்லாம் வாளால் பரவவில்லை என்ற உண்மைப் புலப்படுகின்றது அல்லவாஒரு வருடத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சம், ஜெர்மனியில் 4000, இங்கிலாந்தில் 25,000 பேர்கள் இஸ்லாத்திற்கு மாறி உள்ளனர்.


தமிழகத்தினைப் பொருத்தமட்டும் இஸ்லாமிய மார்க்கத்தில் மாற்றம் என்ற பேச்சு 1981ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாக்ஷிபுரம்  கிராமத்தில் ஜாதி துவேசத்தில் இணைந்தாதால் இந்திய அரசியல் வாதிகளையும் பத்திக்கையாளர்களையும் பரபரப்பாக்கியது. அதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் கூரியூர் கிராமத்தில் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்ததால்  அது போன்ற பரபப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் பக்கத்து ஊரில் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள் அந்த மக்களுக்கு வளைகுடா நாடுகளில் வேலை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியதினால் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவி உள்ளனர் என்று கூப்பாடு இட்டனர்.
1979 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இஸ்லாத்தினை ஏற்று பரபரப்பக்கினார். ஏனென்றால் அவர் ஏற்கனவே பிரகாஷ் கௌர் என்ற பெண்ணை திருமணம் செய்தவர். ஹிந்து திருமண சட்டப் படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாம் மனைவி திருமணம் செய்ய வழியில்லை. தர்மேந்திரா நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்ய முற்படும்போது ஹிந்து திருமணச் சட்டம் தடங்கலாக இருந்தது. ஆகவே முஸ்லிம் மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஹேமமாலினியை திருமணம் செய்தார். இஸ்லாமிய மார்க்கம்  வசதி, மற்றும் உடல் வாகு திடமாக இருந்தால்  நான்கு மாணவி வரை திருமணம் என்ற விதி விலக்கு இருந்ததால் அவருக்கு வசதியாகப் போய் விட்டது.
தமிழகத்தில் ஆஸ்க்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உண்மைப் பெயர் ஏ.ஆர். திலிப் குமார். அவர் இஸ்லாமிய மார்க்கப் பெயரான ரஹ்மான் என்பதினை தன் பெயருக்குச் சூட்டிக் கொண்டார். அதன் பின்பு இஸ்லாமிய குடும்பத்தில் திருமணமும் செய்து கொண்டார். இதுபோன்று தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2500 என்று புள்ளி விபரம் கூறுகிறது.
தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த  மூன்று பிரபலங்கள் பற்றி கேள்விப்பட்டதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். முன்னாள் திராவிட இயக்க பத்திரிக்கையாளர் இஸ்லாமிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு நாடுகளுக்குச் சென்று புகழோடு வந்தார். ஒரு தடவை சென்னை பர்மா பஜார் சங்கக் கட்டிடத்திற்கு வருகை தந்து அங்குள்ள நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். அதன் பின்பு சங்க நிர்வாகிகளிடம் தான் கஷ்டப் படுவதாகவும் தனக்கு ரூ.10 லக்ஷம் வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு சங்க செயலாளர் சாகுல் ஹமீது , ' ஆமா,இஸ்லாத்தில் நீங்க மட்டும் தானா மாறினீர்கள் அல்லது உங்க குடும்பமும் மாறியதா என்று கேட்டாராம்'. அதற்கு அந்த பத்திரிக்கையாளர், 'நான் மட்டும்தான் மாறி இருக்கின்றேன், குடும்பத்தினர் இஸ்லாமியத்திற்கு மாறுவது அவர்கள் விருப்பம் என்றாராம்'. உடனே சாகுல் ஹமீது ஒரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் வாழ்வது எங்கள் மார்க்கத்தில் அனுமதியில்லை, ஆகவே உங்கள் மனைவியும் இஸ்லாத்தில் மாறிய பின்பு வாருங்கள் உதவி செய்கிறோம்' என்றாராம். அதன் பின்பு அவர் வரவே இல்லையாம்.
 நான் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அப்போது மெல்போர்ன் நகருக்குச் சென்று விக்டோரியா பள்ளியில் ஜும்மா தொழுகைக்காக சென்றிருந்தேன். அங்கே தமிழ் முஸ்லிம் சங்க நிர்வாகி முஜிபுர் ரஹ்மானை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் இணைந்த பேராசிரியருக்கு வரவேற்ப்புக் கொடுத்து பட்ட சிரமத்தினை சொன்னார். அந்தப் பேராசிரியருக்கு அழைப்பு விடுக்கும்போது அவர் விதித்த நிபந்தனை அவருடன் மேலும் இருவர் வரவேண்டும் என்பது. அதற்கு ஒத்துக் கொண்டு அதற்காக செலவு செய்து வர வழைத்தார்களாம். அங்குள்ள பள்ளியில் அன்று அவர் பேச அழைத்தார்களாம். மேலை நாடுகளில் தமிழ் முஸ்லிம்கள்  வளைகுடா நாடுகளைத் தவிர குறைவாகவே உள்ளனர். அவர் பேசச் சென்ற இடத்தில் சுமார் 30 பேர்கள் இருந்தார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் வானத்திற்கும் பூமிக்கும்க் குதித்து, 'தான் 1000 பேர்கள் இல்லாத கூட்டத்திலே பேசியதே இல்லை ஆகவே நான் தங்கி உள்ள ஹோட்டலுக்குப் போகிறேன் என்று அடம் பிடித்தாராம்'. அதன் பின்பு சமாதானம் செய்து 50 பேர்கள் கூடிய பின்பு ஒரு வழியாக பேசி விட்டுச் சென்றாராம். அந்த நிர்வாகிகளுக்கே இவரை ஏன் கூப்பிட்டோம் என்றாகி விட்டதாம்.
சில நாட்களாக தமிழகத்தில் இசைக் குடும்பத்தில் உதித்து, இரு திருமண வாழ்வினைத் துறந்து இருந்த  இசை அமைப்பாளர் ஒருவர் மூன்றாவதாக ஒரு இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்கு அந்தப்  பெண்ணின் பெரிய தாயார் துவாச் செய்யுங்கள் என்ற  ஆடியோவும், அதனைக் கேலி செய்து மற்ற ஆடியோக்களும் வாட்சப்பில் வலம் வந்த வண்ணம் உள்ளன அனைவரும் அறிவர்.
இஸ்லாமியர் மத்தியில் எழுப்பப்படும் சிலக் கேள்விகளை உங்கள் முன் வைத்து அதற்கு விடை காணலாம் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது:
1) ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தில் சேர்ந்தார் என்றால் அவர் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டு அதற்கான அரசு  ஆவணங்களை பூர்த்தி செய்து நிறைவேற்றி உள்ளாரா என்று கவனிக்கத் தவறி விடுகிறோம்.
அதனால் அவர் பெயர் அளவிற்கு முஸ்லிமாக இருந்து வருகிறார். ஒரு பிரமுகர் இறந்தபோது அவர் தன் சட்டக் கடமைகளை சரிவரச் செய்யாததால் அவரை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வீணான  சர்ச்சை ஏற்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!.
2) சிலர் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்வதிற்காகவே இணைவதாக தர்மேந்திரா போன்றவர் திருமணத்திலிருந்து தெரிகிறது. அதுவும் புகழ் பெற்ற வீடுகளில் திருமணம் செய்து பெயரும் புகழும் அடைய விரும்புவதாகவும் பேசப் படுகிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர்கள் மறுமணம்  செய்பவர்கள் ஒரு விதவைக்கு அல்லது விவாகரத்தான ஒரு பெண்ணுக்கு  வாழ்வு கொடுத்தால் அல்லது தன்னைப் போன்று இஸ்லாத்தில் இணைந்த ஒரு வேற்று மதப் பெண்ணையோ மணமுடித்தால் நலமாக இருக்கும் என்ற ஆதங்கம் இஸ்லாமியரிடையே இல்லாமல்லில்லை.
3) சிலர் இஸ்லாத்தில் இணைந்தால் வலைகுடா நாடுகளில் வசூல் செய்யலாம், வேலை செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது.
4) சிலர் இஸ்லாத்தில் இணைந்து மக்கா, மதினா சென்று அங்கு அச்வத்க் கல்லினைத் தொடும் சடங்குபோல சில சடங்குகளை இஸ்லாமியர் அல்லாதவர் கேள்வி எழுப்ப வேண்டிய செய்திகளை சொல்லி அதனைப் பூதாகரமாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தினை முழு மனதுடன் ஏற்று, அதற்கானக சட்ட சம்பந்தமான காரியங்களை நிறைவேற்றி, புகழ் வாய்ந்த மதராசாக்களில் மாணவராக இருந்து  மார்க்கக் கல்வியினைக் கற்று  அதன் பின்பு முழு அளவு இஸ்லாமியர் ஆனால் போற்றப்பட வேண்டியக் காரியமாகும். அதனை விட்டு விட்டு ஏற்கனவே இரண்டு திருமண வாழ்வு நடத்தி, இரண்டு பெண்களையும் விவாக ரத்து செய்து, பின்பு  மார்க்கத்தினைத்  தழுவி சில நாட்கள் சென்று திருமணத் தகவல் தெரிவிப்பதால், ஒரு இஸ்லாமியப் பெண்ணை  திருமணம் செய்வதிற்காக மார்க்கத்தில் இணைந்ததாக வீணான பேச்சுக்கு ஆளாக நேரிடுகிறதல்லவா?