Wednesday 23 June, 2021

ஒரு கோப்பை மது மானிடத்தை ஆட்டி வைக்கும்!

 

 

  (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

கொரானா முதல் அலையில் மூடப் பட்டிருந்த அரசு மதுக் கடைகள் கொரானா இரண்டாம் அலையில் 14.7.2021 அன்று திறந்து விடப் பட்டுள்ளதனைத் தொடர்ந்து நடந்த குற்றங்கள், கொலைகள், குடும்பச் சண்டைகள், குடிகாரர்களின் குதுகூலங்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஏதோ பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததுபோல இருந்ததினை கண்டு பொது மக்களை முகம் சுளிக்கச் செய்து விட்டதினால்  பல இடங்களில் மதுக் கடைகளுக்கு எதிராக குரல்கள் எழுப்பதினை தொடர்ந்து  தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கையினை பற்றி ஆராயும் போது  வந்த தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சாலச் சிறந்ததாக கருதுகிறேன்.

இந்தியாவில் ஆண்ட குறுநில மன்னர்கள் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திற்கு சில மன்னர்கள் வீரக் குரல் எழுப்பி போரிட்டாலும், சிலர் அந்நிய மது, மங்கைகளுக்கு மயங்கி அடிமையாகி அவர்களுக்கு தங்கள் மண்ணையும் இழக்க நேரிட்டதினை சரித்திர வரலாறுகள் சொல்லுகின்றன. எப்படி கடலோர மக்கள் உப்பு எடுப்பதினை அரசுடைமையாக்க Salt Act கொண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்ததோ அதேபோன்று மக்கள் தன்னிச்சையாக மது தயாரித்து விற்க Madras Akbari Act, 1886 ல் ஒரு சட்டத்தினை கொண்டு வந்தார்கள்.

சங்க இலக்கியம், மற்றும் ரிக் வேதம் போன்றவற்றில் சோம பானம் மக்களிடையே புழக்கத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. 1913ம் ஆண்டு மாகாத்மா காந்தி இந்தியாவிற்கு வந்ததும் பிரிட்டிஷ் அரசில் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதனை கண்டு மனம் வெதும்பி மக்கள் மதுவினால் மயங்கி கிடப்பதையும், ஏழ்மையில் உழல்வதினையும் கண்டு 'Young India' என்ற பத்திரிக்கையில் 1913 முதல் 1932 வரை பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதனை துணை ஆசிரியராக இருந்த 'Badrul Hasan' தொகுத்து 'the drink and drug evil in India' ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில் ஹசன் அவர்கள் குடியினால் குடும்பத்தகராறு, குடும்பம் புறக்கணிப்பு, சமுதாயத்திற்கான கடமை புறக்கணிப்பு, வேலையின்ன்மை, பொருளாதார குற்றங்கள், கொலைகள் செய்ய வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு பழக்கப் பட்ட மது வகைகளாக கள்ளு, சாராயம், சுண்டிச்சோறு, மதுக் கசாயம், எத்தனால், வார்னிஷ், போன்றவைகள் ஆகும்.

1) கள்: விவசாய தொழிலார்கள் பனை, தென்னை மரங்களில் உள்ள குறுத்துக்களை சீவி பானையினை கட்டி அதில் வடியும் சாறு பானமாகும். பானையின் உள் புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அது பதநீராகும், சுண்ணாம்பு தடவாது விட்டு விட்டால் அது கள்ளாகும். சாதாரணமாக உடல் அலுப்பினைப் போக்க விவசாயத் தொழிலார்கள்.சுமார் ஒரு லிட்டர் கள்ளினை ஒருவர் குடித்து விடுவார். அதற்கு மேல் குடித்தால் போதை வந்து விடும். அந்த பானைக்குள் சில சமயம் தேள் கூட செத்து மிதக்கும்.

2) சாராயம்: ஒரு மொடா பானையில் நெல், வாழைப் பழத்தோல், கரு வேலம் பட்டை, கழிவு சக்கரை, ஹைட்ரொ குளோரைடு, அல்லது படிகாரம் போட்டு பூமிக்குள் புதைத்து அல்லது தோட்டம், வீடுகளில் வைத்து விட்டு மூன்று நாளைக்குப் பின்பு அதன் ஊறலை  எடுத்து பானையில் வைத்து சூடு செய்யும் போது நீராவியாகி வடிகிற தண்ணீர் தான் சாராயமாகும். வயல்கள், காடு, மலைகளில் வைக்கின்ற ஊறல் பானைகளில் சில சமையம் விஷ பாம்பு, தேள், பூரான் கூட புகுந்து செத்து மிதக்கும். காடு, மலைகளில் வைக்கின்ற ஊறல் பானைகளில்  உள்ள ஊறல்களை யானை கூட்டங்கள் கூட குடித்து விட்டு தள்ளாடும்.

3) சுண்டிச்சோறு: கடலோர மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் போதைப் பொருள் சுண்டிச்சோறு ஆகும். கடலில் பயணம் செய்யும் சிலருக்கு தலை சுற்றும், வாந்தி வரும். காரணம் கடலின் உப்புக் காற்று சுவாசித்தால், கடல் அலைகளில் படகு ஆடும்போதும்  அதுபோன்ற ஒரு மயக்க நிலை ஏற்படும். மீனவர்கள் சிலர் படகுகளில் ஒரு நாள் மீன் பிடிக்கச் செல்வர், சிலர் பல நாட்கள் தங்கி மீன் பிடித்து கடற்கரை சேருவர். அதுபோன்ற தங்கல் நிலையில் தொழில் செய்யும் மீனவர்கள் தங்களுக்கு சத்துத்தரும் உணவாக சுண்டிச்சோறும், வெங்காயமும், பச்சை மிளகாயும், கருவாட்டுக் குழம்பும் பயன் படுத்துவர். சுண்டிச்சோறு என்பது சோற்றினை வடித்து அதில் படிகார வில்லைகளை பானையில் போட்டு கடல் மணலில் புதைத்து விடுவர்.  மூன்று நாட்கள் சென்று அது கள்ளுப்போன்று பொங்கிய நீராகாதாரத்திடன் சேர்ந்த பொருளாக மாறும். அதனை ஒரு தூக்கு சட்டியில் ஊற்றி கடலுக்கு ‘தங்கல்’ தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஈடுபடுவர். அதனை கரையோர மக்களில் சிலர் சாப்பிட்டு போதையில் சிலுமிசத்தில் ஈடுபடுவர்.

3) மதுக் கசாயம்: இது ஒரு ஆயுர்வேத தயாரிப்பாகும். இதனை உடல் மெலிந்தவர்களுக்கும், களைப்பு, ரத்த சோகை, ரத்தப் போக்கு உள்ளவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனை படி வழங்குவர். ஆனால் அதனையே  சிலர் ஹைட்ரொ குளோரைடு கலந்து போதைக்காக தயாரித்து மதுப் பிரியர்களுக்கு வழங்குவர்.

4) இந்திய அந்நிய மது: பிராண்டி, விஸ்கி, ஒயின், ரம், போன்றவை பார்லி, கோதுமை, கரும்பு சாறு, தானியம், திராட்சை பழ சாறு போன்றவைகளால் ஸ்பிரிட் என்ற ஆல்கஹால் மூலம் தயாரிக்கப் படுவது ஆகும்.

5) ஊட்டி மலைப் பகுதிகளில் ஸ்பிரிட்டினை எலுமிச்சை பழத்தினை பிழிந்து விட்டு கலக்கி குடிப்பர். அது அங்கே 'கலக்கல்' என்று அழைக்கப் படும். அதே நேரத்தில் கொடைக்கானல் பகுதியில் ஒரு வித காளானில் தயாரிக்கப் படும் மது 'புல்லட்' என்று அழைக்கின்றார்கள்.

6) எத்தனால் என்பது ஒரு கலர் இல்லாத திரவமாகும். அதனைக் கொண்டு மது தயாரிக்கின்றார்கள். சிலர் அதனை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சில சமயம் வாந்தி பேதி ஏற்பட்டு மரணமும் ஏற்படுகின்றது.

சமூகத்தில் குடியால் வந்த பாதிப்பு: குடிப் பழக்கம் இந்தியாவில்  இந்தியாவில் 96 நிமிடத்தில் ஒரு சாவினை சந்திக்கின்றது. 2013 தேசிய குற்றப் பதிவேட்டில் படி ஒரு நாளைக்கு குடியினால் 15 பேர்கள் இறக்கின்றார்கள். உலக சுகாதார அமைப்பின் கணக்கின் படி இந்தியாவில் 2003-2005ல் 1.6லிட்டர் மதுவாக இருந்தது 2010-2012ல் 38 சதவீதம் அதிகரித்து 2.2 லிட்டர் மதுவாக உயர்ந்துள்ளது. உலக அளவில் குடிகாரர்கள் மக்கள் தொகையில் 16 சதவீதமாக இருந்த போது இந்தியாவில் மட்டும் அதிகமாக 11 சதவீத குடிகாரர்கள் உள்ளனர். ஒரு நாட்டின் 'குடி'க்கு மதிமயங்கும்  மக்கள் தொகை அதிகமானால் அந்த நாட்டின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, கல்வியறிவு பின்னோக்கி சென்று விடும். மகாத்மா காந்தி அடிகள், 'ஆயிரம் கள்ளுக்கடைகளை மூடியாவது ஒரு பள்ளிக்கூடத்தினை திறக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

எப்போது மது விலக்கு அமல் படுத்தப் படுகிறதோ அப்போதெல்லாம் கள்ளச்சாராயம் கிராமங்களில் குடிசை தொழிலாகும். தமிழ் நாட்டினை சுற்றி ஒரு ஆட்டுக்குட்டியினை வேட்டையாட எவ்வாறு நரிகள் வலம் வருகின்றதோ அதுபோன்று பக்கத்து மாநிலங்களான பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்றவைலிருந்து கள்ளு, சாராயம், இந்திய அந்நிய மது தமிழ் நாட்டுக்குள் கடத்தி வரப்படும். அதுபோன்ற சமயங்களில் தமிழ்நாட்டின் மதுவிலக்கு கொள்கை தோற்கடிக்கப் பட்டு கடத்தல் பேர்வழிகளும், கள்ளச்சாராய வியாபாரிகளும் தான் லாபம் பெறுவார்.

மது கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததை குடித்து பலர் சாவதினை பத்திரிக்கை வாயிலாக காணலாம். இந்தியாவில் கள்ள மது குடித்து இறந்தவர் பட்டியலில் மஹாராஷ்டிராவும், அதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசமும், தமிழ்நாடும் உள்ளதாக இந்திய குற்றப்பதிவேடு சொல்கிறது. இந்தியாவில் விஷ சாராயத்திற்கு ஒவ்வொரு நாளும் 5 பேர் பலியாகுகிறார்கள் என்றும் பதிவேடு கூறுகின்றது. 2015ல் மும்பை மேல்வாணி பகுதியில் விஷ சாராயத்திற்கு 100 பேருக்குமேல் பலியானதாக சொல்லப் படுகின்றது. சாராயத்தில் hydro chloride கலப்பதாலும், மற்றும் ஸ்பிரிட் போன்றவை கலப்பாதால்  பலி ஏற்படுகின்றதினை Tamilnadu Chloral Hydrate Rules 1984, Spirit Rules 1987, Rectified ஸ்பிரிட் ரூல்ஸ் 2000 போன்றவை கொண்டு வரப் பட்டன. தமிழ்நாட்டில் 1975-76, 1988-1990 ம் ஆண்டுகளில் கள்ளச்சாராய பலி அதிகமானதாக கூறப் படுகின்றது. கள்ளச் சாராய பலிகளை தடுக்க தமிழக அரசு The Bootleggers Act, 1982 வினை 12.3.1982ல் சட்டமாக்கியது. அதன் படி யார் விஷ சாராயத்தினை அல்லது மதுவினை தயாரித்து, மட்டும் கடத்துகின்றார்களோ அவர்களை விசாரணை இன்றி ஒரு வருடம் குண்டர் சட்டம் போல சிறையில் வைக்க சட்டம் இயற்றப் பட்டது. ஆனால் அப்படி இருந்தும் கள்ளச் சாராயம் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே அரசே தனியாருக்கு ஏலத்தின் மூலம் பாட்டிலில் சாராயம் விற்க அனுமதி அளித்தது. அதற்கு தேவையான சாராயத்தினை தனியார் Blending units மூலம் வழங்கப் பட்டது. ஏலத்தில் எடுத்த சாராயக் கடைகள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை gist என்ற வரியும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் excise duty யும் விதிக்கப் பட்டது. ஆனால் என்ன நடந்தது. சில பணமுதலைகள் மொத்தமாக மாவட்டங்களில் ஏலம் எடுத்து எந்த டுட்டியும் காட்டியதில்லை. மாறாக அரசியல் புள்ளிகளை கவனித்ததால் அவர்கள் இன்று பெரிய மெடிக்கல் காலேஜ், மருத்துவமனை, கல்லூரிகள், தொழிற்சாலை அதிபர்கள் என்று வலம் வருகின்றனர் என்பது உண்மையே! தமிழ்நாட்டில் விஷ சாராயம் சாவுகளை தடுக்கவும், மது விலக்கை மறுபடியும் அமல் நடத்தவேண்டுமென்று 59 வயதான காந்திய வாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் செல் போன் கோபுரத்தில் 31.7.2015ல் போராட்டம் நடத்தி தீயில் கருகி செத்ததினை இந்திய மக்கள் அனைவரும் கண்டு அதிர்ந்தனர்.

மக்கள் அதிகார அமைப்பு பி.பி.சி தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு எதிரான குற்றம், கொலை, கொள்ளை, குடிகாரர்களால் அதிகமாகிவிட்டதால் தமிழ் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விதவையாகி உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். இதில் என்ன அதிசயம் என்றால் மது விலக்கினால் பல குற்ற, கொலை, சாவுகள், உடல் உபாதை சம்பவங்கள் அதிகமானாலும், உலக சுகாதார அமைப்போ அல்லது பல விஞ்ஞானிகளோ மது விலக்கு கொள்கையினை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் மது குடிப்பது ஒரு சமுதாயம் சார்ந்த பிரச்சனையாக கருத்தில் கொண்டுள்ளது. அரசின் மாறி , மாறி எடுத்த மதுக் கொள்கையினால் இதுவரை நாம் ஐந்தில் இருவரை குடிகாரர்களாக்கி விட்டோம். சாவு, மண விழாக்கள் என்றால் மது ஆட்டம் இல்லாமல் இருந்தது உண்டா?

அது சரி வேறு மதுவினை ஒழிப்பது என்று கேட்பீர்கள். மக்களிடம் மதுவின் கொடுமையினை பற்றி எடுத்தியம்ப விளம்பர படங்கள், மக்கள் இயக்கம், சுவரொட்டிகள், சினிமா இடைவெளியில் மதுவின் கொடுமை பற்றி டாக்குமெண்டரி ஆகியவை காட்டப் படவேண்டும். மாணவர்கள், சுயநிதிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசு அதற்கு நிதிகள் அளித்து  ஊக்கம் கொடுக்க வேண்டும்.

2000ம் ஆண்டு விழுப்பரம் சரகத்தில் வன்னியர்-தலித் சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தபோது டி.ஐ.ஜி யாக பதவியேற்றேன்.. ஜாதி சண்டைகள் எதனால் வருகின்றது என்று ஆராயும் போது கிராமங்களில் கரும்பு, முந்திரி தோட்டங்களில் சாராயம் ஊறல் போட்டு, அதனை காய்ச்சி விற்பனை செய்வதில் பெரும் தகராறு வருவதினை அறிந்து கடுமையான நடவடிக்கையோடு, தன்னார்வ நிறுவனங்கள், மாணவர்களை ஒன்று திரட்டி, விழுப்புரத்தில் ஆரம்பித்த பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமாக சென்று கடைசியாக ஆன்மீக முனிவர் வள்ளலார் வாழ்ந்த வடலூரில் நிறைவு செய்யப் பட்டது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி சம்மட்டிபுரத்தில் அடிக்கடி ஜாதிச் சண்டை, கொலை, தீ வைப்பு போன்றவை நடந்தாதால் அங்கே மக்கள் விழிப்புணர்வு நாடகமும் மாணவர்களால் நடத்தப் பட்டு பொதுக் கூட்டமும் நடந்தது. அதில் தற்போதைய மந்திரியும், அப்போதைய மந்திரியுமான மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்கள். 19.9.2000அன்று வெளிவந்த தினமணி நாளிதழில், 'கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைதி திரும்பியது' என்று குறிப்பிட்டுள்ளது எங்களது நடவடிக்கையின் நிறைவான நடவடிக்கையாக கருதினோம். அதேபோன்ற மதுவின் கொடுமை  விழிப்புணர்வினை சிறு வயதிலிருந்தே புகுத்த வேண்டியது அரசு, தன்னார்வ இயக்கங்கள், கிராம மக்கள் நடவடிக்கை ;எடுப்பது சாலச் சிறந்தது அல்லவா?