Saturday 18 January, 2020

வாழ்க்கை ஓர் எதிர் நீச்சல்!(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
‘life is not a bed of roses என்று ஆங்கிலத்திலும் ‘வாழ்க்கை ஒரு மலர் படுக்கை இல்லை’ என்று தமிழிலும் சொல்லுவார்கள். நம்மிடையே பலர் ஓஹோ என்று ஒரு சமயத்தில் வாழ்ந்து  தாழ் நிலைக்கு வந்த பின்னர் அல்லது ஏழ்மையில் துவண்டோ உள்ளவர்கள்  இனி நமக்கு வாழ்வு ஒரு இருண்ட உலகம் என்று எண்ணி மூலையில் முடங்கி விடுவர். ஆனால் வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல், இடையில் வரும் சில தடுமாற்றங்களை எதிர்த்து  துணிவுடன் போராடினால் நிச்சயமாக வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்று சில உதாரணங்களால் விளக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
            ஒரு காலத்தில் மேற்கு வங்க நிழல் உலக தாதா நிஜ்ல் அக்காரா எப்படி பிற்காலத்தில் பிரபல நடிகராகி, சமூக சேவை நாயகனாக திகழ்கிறார் என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன். அக்காராவிற்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவருடைய தந்தையினை இழந்தார். அம்மா வீட்டு வேலைக்காக பல இடங்களுக்குச் சென்றார். அக்காரா கயிறு காட்டாத நாயைப் போல தெருவில் அலைந்தான் . தன் தாய் வீட்டு வேலை செய்துவிட்டு திரும்பும்போது அவன்  தூங்கி விடுவான். ஏழ்மையாக இருந்தாலும் அவனுடைய தாய் அவனை தூய சேவியர் பள்ளியில் படிக்க வைத்தார். நிஜ்ல் பத்தாவது தேர்வு முடிந்த பின்பு ஒரு நண்பன் தகராறுக்காக ஹாக்கி காம்பினை எடுத்து கிளம்பி தூள் பரத்தி விட்டான். பலன் காவல் நிலையத்தில் அடைபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டான். அங்கே வந்த தாயின் முகத்தினை ஏரெடுத்தும் பார்க்க முடியாத குற்ற உணர்வு. ஒரு தடவை காவல் நிலையத்தினை மிதித்த கால்கள் நின்று விடாமல் தொடர்ந்து சிறு சிறு தெரு சண்டையில் ஈடுபட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டு கொடுமையினை அனுபவித்தான். இருந்தாலும் அவனுக்கென்ற ஒரு இளைஞர் பட்டாளமே ஜெயிலில்  இருந்தது. பிறகு என்ன அவன் தான் அந்தக் கூட்டத்தில் தலைவன். சிறைக்குள்ளிலிருந்தே தனது குற்ற செயல்களை நிறைவேற்றினான்.
            திகார் ஜெயிலில் ஐ.ஜி. கிரேன் பேடி கைதிகள் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தது போல கல்கத்தா ஜெயிலில் ஐ.ஜி.யாக இருந்த பி.டி. சர்மா சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். நிஜ்ல் விக்கியின் திறமைகளைப் பார்த்து அவனை அலக்நந்தா என்ற நடன மாஸ்டர் குழுவில் சேர்த்து அவனை சிறந்த நடன கலைஞர் ஆக்கினார். அதன் பின்பு ஒரு நாடக குழுவில் சேர்த்து ரவீந்திர நாத் எழுதிய பால்மீகி பிரதிபா என்ற நாவலினை நாடகமாக்கி எப்படி  ரத்னாகர் என்ற குற்றவாளி பிற்காலத்தில் வால்மீகி என்ற சீர்திருத்தவாதியானான் என்ற பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதுவே பிற்காலத்தில் அவன் திருந்தி வாழ வழி வகுத்தது. சிறைச் சாலையில் ஒன்பது வருடம் கழித்தபின்பு அவனுடைய வழக்கில் நீதிபதி அவனை குற்றமட்டவன் என்று விடுதலை செய்தது. சிலையிலிருந்து விடுதலையான அவனை அவனுடைய தாயார் கொல்கத்தாவினை விட்டு சென்று விடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவன் தாயாரிடம், 'உறுதியாக தான் இழந்த மரியாதையினை  திரும்ப பெற்றுத் தருவேன்' என்று உறுதி கூறினான்.
            அவன் பல்வேறு வேலைக்கும் மனு செய்தான்ஆனால் அவனைப் பற்றி தெரிந்ததும் ஒருவரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. ஒரு வேலைக்காக நேர்முக தேர்வினுக்கு காத்துக் கொண்டிருக்கும்போது அவன் அந்த அலுவலகத்தில் சுத்தம் செய்யும் தொழிலாளியினைப் பார்த்தான். உடனே தனது முன்னாள் நண்பர்களையெல்லாம் சேர்த்து ஒரு சுத்தம் செய்யும் அலுவலகம் ஆரம்பித்தால் என்ன என்று யோசனை செய்து அதனையே தொடங்கிவிட்டான். பிற்காலத்தில் அந்த அலுவலகம் செக்யூரிட்டி, வீடுகள்-அலுவலகங்கள்   பராமரிப்பு, விடுதி, ஹோட்டல் போன்றவைகளுக்கு தேவைப் படும் ஆட்களை அனுப்பும் கம்பனியாக உருவெடுத்தது. அவனுடைய அலுவலகம் 500 தொழிலாளர்கள் கொண்டவையாக இருந்தது அதில் 80 பேர் முன்னாள் குற்றவாளிகள்.  அவனுடைய கம்பனி பற்றி கேள்விப் பட்ட IIM கொல்கத்தா அவனுடைய திறமையினை பற்றி ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் அதிசயம் தானே!
            அவனுடைய உடல் வாகு, நடன நயம் அறிந்த சினிமா தயாரிப்பாளர்கள் அவனை 2012ல் அணுகி சினிமாவில் நடிக்க வைத்தனர். முதலில் பெங்காலி சினிமாவில் ஆரம்பித்து பிற்காலத்தில் மலையாள சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தான். அவன் 2019ல் நடித்த Gotra என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. சினிமாவில் நடித்தாலும் அவன் சமூக சேவை நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பித்து அதில் முன்னாள் குற்றவாளிகள், பாலின தொழிலார்கள், போதைக்கு அடிமையானவர்களை நல்வழிப் படுத்தினான். ஒரு தடவை அவன் ஒரு மாளிகையில் சுத்தம் செய்யும் தொழில் செய்தபோது ஜன்னல் வழியே அங்கே இருந்த ஆடம்பரமான சோபா அமைப்புகளைப் பார்த்து தானும் அதுபோன்ற சோபாவில் அமரவேண்டும் என்று எண்ணினான். அவன் எண்ணப் படியே இரண்டு வருடத்திற்குப் பின்பு தனக்கென்று ஒரு அலுவலகத்தில் அதேபோன்று சோபா செட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் தகுதியினை எட்டிவிட்டான். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் , 'எண்ணம் போல வாழ்க்கை' என்று விக்கியின் எண்ணமும் தானும் சமுதாயத்தில் உயர்த்த மனிதனாக வாழ்வதோது நலிந்த பிரிவினருக்கும் உதவ வேண்டும் என்ற  புனிதமான எண்ணம் இருந்தால் இறைவன் அவனுக்கு  துணையாக இருந்தான் என்றால் மறுக்க முடியாதுதானே!
            இந்தியாவில் பெண்களை கோவில்களில் கடவுளுக்காக அர்ப்பணித்த முறை தேவதாசி ஆகும். அப்படி செயல்பட்ட பெண்கள் பிற்காலத்தில் பாலின தொழிலாளர்கள் ஆனார்கள். அந்த முறையினை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1930 ஆண்டு சென்னை மேல் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அந்த தீர்மானம் பெரியார் போராட்டத்திற்குப் பின்பு அப்போதைய சென்னை மாகாண பிரதான மந்திரியான ஓ.பீ . ராமசாமி ரெட்டியார் காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு அக்டோபர் 9, 1947 (மெட்ராஸ் தேவதாசி ஒழிப்பு சட்டம்) நிறைவேறியது. அந்த சட்டத்தினை பின்பற்றி பல மாகாணங்கள் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றின. அதுபோன்று   தேவதாசி முறையில் தள்ளப் பட்ட ஒரு ஏழைப் பெண்ணின் கண்ணீர் கதையினை இங்கே காணலாம்.
            கர்நாடகாவும்-கோவாவும் பக்கத்து மாநிலங்கள் என்று உங்களுக்குத் தெரியும். அப்படி கர்நாடக  மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கோவா வந்து குடிசைப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர்  தான் பிமாவா சாலவாடி குடும்பத்தில் மூத்த பெண். அவர் 15 வயதாக இருக்கும்போது வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க அவரது தாயார்  அந்த பகுதியில் உள்ள கோவிலின் சாமிக்கு தேவதாசியாக அர்ப்பணித்தார். அதன் பின்பு அவரை பாலின தொழில் நடத்தும் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டார். பல பாலின வியாபாரிகளிடம் கை மாறிய  பிமாவிற்கு இப்போது வயது33. அவர் பாலின தொழிலில் ஈடுபட்டிருந்தபோது Anyway Rahit Zindagi (ARZ ) என்ற தொண்டு நிறுவனம் 2003ம் ஆண்டு மீட்டு அரசு தொண்டு இல்லத்தில் சேர்த்தது. அங்குள்ள  தன்னைப் போல பாலின தொழிலில் துவண்ட பெண்களின் கண்ணீர் கதைகள் பிமாவின் உள்ளத்தை உருக்கியது. 
            அந்த அரசு புனர்வாழ்வு மையத்தில் பல்வேறு கைவினைப் பொருட்களை கற்றுத் தேர்ந்தார் பிமாவா. எங்கே அவளையும் மற்ற பெண்களையும் பாலின தொழிலில் ஈடுபடுத்தினார்களோ அங்கே எல்லாம் மற்ற பெண்களுடன் சென்று அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சில வருடங்களுக்குள்ளே பல நூறு பெண்களை நல்வழிக்குக் கொண்டு வந்தார். அத்துடன் நிற்கவில்லை, தன்னை நம்பி வந்த பெண்களுக்கு வழி காட்டவேண்டுமென்று ARZ அமைப்பின் உதவியால் 'Swift wash' என்ற சலவைத் தொழிலிலை ஆரம்பித்து  பெண்களுக்கு வேலை கொடுத்தார். பிற்காலத்தில் அந்த நிறுவன மேலாளராகவும் நியமிக்கப் பட்டார். தன்னுடைய விடாமுயற்சியால் தேவதாசி என்ற சாக்கடையிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினை காப்பாற்றுவதோடு , தான் படிக்காவிட்டாலும் தன்னுடைய சகோதரிகளை நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பினை பெற்று தந்துள்ளார்.
            ஆகவே குற்றப் பின்னெனி உள்ளவர்கள், குடிமக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வியாபார, தொழிலில் நலிவடைந்தவர்கள் தங்கள் வாழ்க்கை இருண்டு விட்டது என்று எண்ணாமல் இருளுக்குப் பின்பு ஒளி இருக்கின்றது என்று வாழ்க்கையே ஒரு சவால் என்று எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!

Monday 6 January, 2020

அடிக்க அடித்ததான் வீறுகொண்டு எழும் பந்து ஒடுக்க ஒடுக்கத்தான் பட்டொளி வீசும் தீன் கொடி!(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்.(ஓ )
அன்றாட செய்தி தாள்களும், தொலைக் காட்சியும் முஸ்லிம்கள் பல்வேறு நாடுகளில் வீடிலிழந்து, உணவிழந்து, உடுக்க துணியில்லாமல், அழும் பிள்ளைகளுக்கு கூட பால் கொடுக்கமுடியாத அவல நிலையும், காயத்திற்கும், நோய்களுக்கும் கூட மருத்துவ வசதியின்றியும், மழையிலும், ஓடும் தண்ணீரிலும், சகதியும், சேரும் கொண்ட கூடாரங்களில் புழுக்கள் போல வாழும் நிலையினைக் கண்டு மனம் வெதும்பி வேதனை கொள்ளச் செய்கின்றதல்லவா? அவைகளைப் பார்க்கும் போது முஸ்லிம் மக்களுக்கு பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது அதனால் இஸ்லாம் நலிவுற்றுடிமோ என்ற எண்ணம் உங்களிடையே ஏற்படலாம். ஆனால் இஸ்லாமிய வரலாறுகளை உற்று நோக்குவோமானால், இஸ்லாம் புவியில் சிறு குழந்தையாக பிறந்ததிலிருந்து பல இன்னல்களை சந்தித்து வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது என்பதினை சில உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என எண்ணுகின்றேன்.
            உஹது  யுத்தத்தில் ரசூலுல்லாஹ் ஆணைக்கு இணங்க மலைமேல் இருந்த அம்பு எறியும் வீரர்கள் குறைஷியர் அற்ப செல்வங்கங்களுக்கும், கேடயங்களுக்கும் ஆசைப் படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக உஹதுப் போரில் வெற்றி பெற்றிருப்பார்கள்  என்று என்று எல்லாம் வல்ல அல்லாஹ் 'அல் இம்ரான்' அத்தியாயத்தில் கூறியுள்ளான். மேலும் அல்லாஹ் 'தவறு செய்தவர்வர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான்' என்று அத்தியாயம் 3/140 ல் கூறியுள்ளான். ஆனால் அந்த உஹது யுத்தத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமான வீரமிக்க ஹம்சா,முசாபின் உமைர் போன்றவர்கள் மடிந்தாலும், உஹது போரில் குறைஷியர்களுக்கு வெற்றிக் கனியினை தேடித் தந்த தளபதிகளான அபுசுஃபியான் மற்றும் காலித் பின் வாலித் போன்றவர்கள் வல்ல நாயன் அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் பிற்காலத்தில் திருப்பியது இஸ்லாத்தினையும், இஸ்லாமியர்களையும் ஒருபோதும் அழிக்க முடியாது என்பதினை காட்டவில்லையா ?
            அலி(ரழி ) அவர்களுக்கு வழங்கப் பட்ட கலீபா பட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்களிடையே சிவில் யுத்தம் கி.பி. 656 ல் தொடங்கி கி.பி.661 ல் அலி(ரழி )கொல்லப் பட்டார்கள். அதன் பிறகு சிரியாவினை தலை நகரமாகக் கொண்டு முவாவியா கலீபா ஆனார். அவர் வம்சம் 90 ஆண்டுகள் ஆட்சி செய்து ஆப்பிரிக்கா , ஸ்பெயின், ரோம் , பைசான்டின் வரை நீண்டது. சுலைமான் மாக்னிபியின்ட் என்பவரால் பெல்க்ரேடு, வியன்னா , ரஸ்யா மற்றும் போர்துகீஸ் வரை இஸ்லாமிய ஆட்சி காலடி வைத்தது.
            இஸ்லாமிய பொற்காலம் என்று இபின் அபாஸிட் சாம்ராஜ்யம் கி.பி.750 லிருந்து கி.பி. 1258 வரை பாக்தாத்தினை தலைநகராக கொண்டு விளங்கியது. பெருளாதாரம், விஞ்ஞானம், கலாட்சாரம் மற்றும் அரசியலில் கொடிகட்டிப் பறந்தது. அதன் பின்பு மங்கோலியர் படையெடுப்பினால் சிறுக சிறுக மறையத் தொடங்கியது.  ஆப்கான், முகலாயர் போன்ற சாம்ராஜ்யங்கள் ஆசியாவில் தங்களுடைய ஆதிக்கத்தினை செலுத்தினாலும் பிற்காலத்தில் முஸ்லிம் மார்க்கத்தினிடையே ஷியா, சுன்னி பிரிவுகளில் யார் பெரியவர் என்ற போட்டியாலும், ஐரோப்பிய அரசுகளின் தொழில் புரட்சியில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் நவீன ஆயுதங்கள் கொண்ட போரினாலும் மங்கத் தொடங்கியது.
            இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இத்தாலி, ஆங்கிலேய அரசுகள் இஸ்லாமியர் வசமிருந்த நாடுகளை ஒவொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இத்தாலி, அரசு முஸ்லிம்களின் புனித தலங்களான மக்கா , மதினாவினை என்றும் பயமுறுத்தின. அவர்களுடைய பயமுறுத்தளுக்குப் பயந்து ‘கமால்  அத்தா துருக்’ துருக்கிய அரசினை மேற்கிந்திய கலாசாரத்திற்கு மாற்றம் செய்வதே ஒரே வழி என்ற நிலைக்கு தள்ளப் பட்டார். முஸ்லிம்களிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மேற்கத்திய நாடுகளால் இன்று இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தும் நிலை இல்லாமல் இருந்திருக்கும்.
            ஒற்றுமை பற்றி ரசூலுல்லாஹ் கூறியதாக அபு மூஸா(ரலி) அவர்கள், 'ஓர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தினைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது. அதன் உதாரணமாக தங்களுடைய கை விரல்களைக் கோர்த்து காட்டினார்கள், என்று கூறியுள்ளார். அந்த ஒற்றுமை இல்லாததால் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு இன்னல் ஏற்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க கண்டத்தில் செங்கடல் பகுதியினை யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டியாலும், துருக்கி அரசு, ஜெனம பகையாளிகளாக உள்ள ஈரான், சௌதி அராபிய அரசுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளினால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கிறது. சௌதி அராபிய நாடு மற்றும்  ஐக்கிய அரபு குடியரசுகளால் பொருளாதார தடையினை கத்தார் அரசின் மீது விதித்து நசுக்க முயன்றது. அதுவும் எந்த நேரத்தில் என்றால் 20202உலக கால்பந்தாட்ட நிகழ்ச்சிகளுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த  நிலையில். ஆனால் கத்தார் அரசின் சிறந்த நடவடிக்கையால் தன்னை நிமிர்ந்து நிற்க செய்துள்ளது என்பதினை அனைவரும் ஒப்புக் கொள்வர். செங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களை யார் ஆதிக்கம் செலுத்துவது  என்ற போட்டியில் வளமான ஏமன் நாட்டில் போரினால் களையிழந்து காணப் படுகிறது.
            வஹாபிஸ சௌதி அரசு தன்னுடைய ஆதிக்கத்தினை ஆப்பிரிக்க நாடுகளான சாட், சூடான், சோமாலியா, ஏரி ட்டேரியா, எத்தியோப்பியா  போன்றவற்றில் செலுத்த ஆரம்பித்தது. ஆனால் சௌதி அரசு எகிப்து அரசுடன் இணக்கமாக செயல் பட மு டியாத நிலை ஏற்பட்டது. காரணம் நைல்நதியின் கப்பல் போக்குவரத்தினை யார் ஆதிக்கத்தில் கொண்டுவருவது போன்ற போட்டியால் எகிப்து அரசின் ஜனாதிபதி சிசியுடன் ஒத்துப் போகமுடியவில்லை. அதேபோன்று சூடான் நாட்டின் புரட்சியால் ஜனாதிபதி பசீர் ஆட்சி விலக்கப் பட்டு புதிய அரசும் ஏற்பட்டது. அதற்கு போட்டியாக ஈரான் தனது ஆதிக்கத்தினை ஈராக், சிரியா, ஏமன் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் தலையிட்டது.  சௌதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு குடியரசுகள் தீவிரவாத அமைப்புகளான முஸ்லிம் பிரதர்ஹூட், இஸ்லாமிக் ஸ்டேட், அல் க்கைடா, போகோ ஹராம் போன்ற அமைப்பின் ஆதிக்கத்தினை விரும்பவில்லை.  அதேபோன்றே துருக்கியின் ஆதிக்கத்தினையும் விரும்பவில்லை. இவ்வாறு இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததால் முஸ்லிம் மக்கள் அகதிகளாக பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதிக்கப் பட்டுள்ளனர். பெண்கள் கற்பினை இழந்துள்ளனர்., குழந்தைகள் கடத்தப் பட்டுள்ளனர்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்  சேருக்குள்ளும், சகதிக்குள்ளும், மருத்துவ வசதியில்லாமல் வாழ்கின்ற காட்சிகளை தினந்தோறும் தொலைக்காட்சியில் காணும்போது கல் மனதும் கரையாமல் இல்லைதானே !
            இது வரையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் பட்டியலிட்டால் மாயாது, முடியாது. அவை :
1) சோமாலியா யுத்தத்தில் 5,50,000/
2) எத்தியோப்பியா எரிட்டோரியா யுத்தத்தில் 75,000/
3) அல்ஜீரியா யுத்தத்தில் 1,50,000/
4) அர்மேனியா அசர்பைசான் யுத்த்தில் 35,000/
5)  ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2,00,000/
6)  ஈராக் யுத்தத்தில் 2,00,000/
7)  சிரியா யுத்த்தில் 3,20,000/
8) தெற்கு   சூடான் யுத்தத்தில் 10,000/
9) உக்ரைன் யுத்தத்தில் 2,500/
10)  ஏமன் யுத்தத்தில் 10,000/        
உள்நாட்டுப் போர்கள், பக்கத்து நாடுகளுடன் நடந்த சண்டைகள் போன்றவை இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா, ருசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தலையீடுகள் அதிகரிக்கத் துடங்கியது. இஸ்லாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி குவிக்கச் செய்தன. எண்ணெய், மற்றும் கனிம வளங்கள் அந்த அரசுகளால் கொள்ளை போயின. அதனால் சொந்த மண்ணை விட்டு அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முஸ்லிம்கள் தலைப் பட்டனர். அப்படி செல்ல முற்பட்டவர்கள் பலர் கடலிலேயே சமாதியாயி விட்டனர் என்பதினை தொலைக் கட்சி நிறுவனங்கள் படம் போட்டுக் காட்டின. அப்படி அகதிகளாக சென்ற முஸ்லிம்கள் பக்கத்து நாட்டு முஸ்லிம் அரசுகளுக்கு பெரும் பொருளாதார சுமையாக அமைந்து விட்டனர்.
போரினால் அகதிகளாக இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் பின்வருமாறு:
1) சூடான்-5,00,000/
2) டார்பூர் -20,00,000/
3) பாலஸ்தீனம்-40,00,000/
4) ஈராக் -20,00,000/
5) ஆப்கானிஸ்தான்-30,00,000/
கிட்டத்தட்ட 1,40,00,000/ மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு அழிவுகள் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் ஜனத்தொகை 2006 ம் ஆண்டிலிருந்து 2011 வரை 1.8/ சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் உலக மக்கள் தொகை 1.1/ சதவீதம் தான் அதிகரித்துள்ளது. PEW(Centre for strategic and international studies) என்ற ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம் அல்லாதவர்களை விட முஸ்லிம்கள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அதற்கான காரணங்களாக 1) முஸ்லிம்களிடையே இளைஞர் பட்டாளம் அதிகம், 2) குழந்தைகள் பிறப்பது, 3) இஸ்லாமியா மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டும், 4) அகதிகளாக இடம் பெயர்வதினாலும் என்று கூறுகின்றனர்.
2013 ல் 49 முஸ்லிம் நாடுகளில் ஜனத்தொகை 150 கோடியாக இருந்தது. அது 2019 ல் 190 கோடியாக உயர்ந்து உலக மக்கள் தொகையில் 24.4 சதவீதமாக முஸ் லிம் ஜனத்தொகை உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
யானைப் படைகளுடன் மக்கா நகரைப் பிடித்து, அங்குள்ள புனித தலமான ஹரத்தினை அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு யானைப் படையில் வரும்போது வல்ல நாயன் பறவைகள் மூலம் சுடு கற்களைக் கொண்டு அந்தப் படையினை நிர்மூலமாக்கினான் என்ற வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியும். ஆகவே இஸ்லாத்திற்கு எதிராக களம் இறங்கியவர்கள் இறுதியில் இஸ்லாத்தினை வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது உங்களுக்குத் தெரியும். ஆகவே இஸ்லாத்தினையும், இஸ்லாமிய மக்களையும் எந்த ஆதிக்க சக்திகளும் அடக்கி விடமுடியாது, இஸ்லாம் அடிபட்ட பந்துபோல மென்மேலும் வளரும் என்பது சரிதானே!