Sunday 19 March, 2023

கண்ணைத் திறந்து விட்டதா-நீதிதேவதை!

 

                      

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய அரசியலமைப்பு சபை முதன் முதலில் 9.12.1946 அன்று கூடியது. மறுபடியும் 14.8.1947 அன்று ஆங்கிலேய அரசிடமிருந்து விலகி முழு அதிகாரம் பெற்ற சபையாக மாறியது. ஆங்கிலேய அரசின் இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு திட்டத்தின் படி பாகிஸ்தான் என்ற தனி நாடாக 3.6.1947 அன்று தீர்மானிக்கப் பட்டது. இந்திய அரசிலமைப்பு சபை பி.ஆர். அம்பேத்கார் தலைமையில் முன்ஷி, முகமது சாதத்துல்லாஹ், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார். கெய்ட்டான், பீட்டர் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழுவினை 29.8.1947 அன்று இந்திய மக்கள் ஜாதி, மத, இன , மொழி உணர்வின்றி வேற்றுமையில் ஒற்றுமையாக, உரிமை பெற்று வாழ ஒரு அரசிலமைப்பை ஏற்படுத்தித்தர பணித்தது. 29.11.1949 இந்திய அரசிலமைப்பினை அனறைய அரசிலமைப்பு சபை ஏற்றுக் கொண்டு சட்டம் இயற்றப் பட்டது. அதன் படி 26.11.1950 அன்று அரசிலமைப்பு அமலுக்கு வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீதிமன்றம், பார்லிமெண்ட், நிர்வாகம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும், அரசிலமைப்பு சட்டம் 13ன் படி நீதிமன்றம் சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்கள் உரிமையினை பறிக்கக் கூடியதாக இருந்தால் அவற்றை சட்டப்படி செல்லாது என்று உரிமை வழங்கப் பட்டுள்ளது. அனைவரும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் கறுப்புத் துணியினை கண்ணில் கட்டி கண்ணை மறைத்தும், இடது கையில் சமமாக இருக்கக்கூடிய தராசும், வலது கையில் ஒரு நீண்ட வாளும் இருப்பதனை. அந்த சிலை கிரேக்க நீதி தேவதை, 'தேமிஸ்' என்பதினை பிரதிபலிப்பாகும், அதாவது நீதி மன்றங்கள் தீர்ப்புகள் வழங்கும்போது அரசியல், பொருளாதாரம், சமூக ஏற்றத் தாழ்வு அந்தஸ்து பார்க்காது, சட்டப்படி மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென்ற அறிகுறியாகும்.

சமீப வருடங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு பெரும்பான்மை மக்களின் பால் ஈர்க்கப் பட்டு, நீதி தேவன்களும் தங்கள் ஓய்விற்குப் பின்னால், கூலிங் பீரியட் என்ற சில ஓய்வு தினங்களுக்குப் பதிலாக கவர்னர் அல்லது ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளை பெற்ற சம்பவங்கள் சாதாரண மக்களுக்கு சந்தேகமெழுப்புவது இயற்கைதானே!

உதாரணத்திற்கு, சொல்ல வேண்டுமென்றால் அரசியலமைப்பின் படி ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மார்க்கம், மத சம்பந்தமான வழிபாடுகளை நடத்திட அனுமதி அளிக்கப் படுகிறது. அதற்கு மாறாக அயோத்தியில் பாபரி என்ற பெயருள்ள பள்ளியில் இருக்குமிடத்தில் தான் புராணத்தில் கூறிய படி ராமர் பிறந்தார் என்று சொந்தம் கொண்டாடி,  'கர் சேவக்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து 6.12.1992 அன்று சதி செய்து இடித்து விட்டார்கள் என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் 30 பேர்கள் மீது வழக்கினை சி.பி யை தொடர்ந்தது, இடித்ததினை அறிந்த உலகமே அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று லக்னோ நீதிமன்றம் விடுதலை செய்தது அதைவிட பெரிய அதிர்ச்சியுடன் கலந்த தீர்ப்பாக ஆனது. அதன் மீது மேல் முறையீட்டில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. எல்லோரும் அரசிலமைப்பின் படி நேர்மையான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தபோது அந்த எண்ணத்தில் மண் விழுந்ததுபோல, அந்த இடம் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தும், முஸ்லிம்கள் தொழுகை நடத்த 20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடம் சமீபத்தில் தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறியும்போது நடுநிலையாளர்களை  கொதிக்க விட்டது. அத்தோடு நில்லாமல் ஒரு நீதிபதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும், இன்னொருவருக்கு கவர்னர் பதிவையும் அளித்து கவுரவப் படுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை என்று நடு நிலையார் சொல்லியது பத்திரிக்கையில் வந்துள்ளது. அந்த தீர்ப்பு எப்படி இருந்தது என்றால் 'கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த செயலாகவே தானே கருத முடியும். இந்தியாவில் வெவ்வேறு சமூகத்தினர் பக்கத்தப் பக்கத்து வீடுகளில் குடியிருக்கும்  இந்த நவீன உலகில் இரு சமூகத்தினரை இரும்புத் திரை போட்டு மறைத்த 'உத்தமபுர நடுச்சுவர்' செயலாகவேதானே கருத  முடிகிறது. இந்த சமயத்தில் சமூக ஒற்றுமை பற்றி காஞ்சி பெரியவர் 'சந்திரசேகர ஸ்வாமிகள்' காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன்  சங்கர மடத்திற்கு பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை 4.15 மணிக்கு தொழுகைக்காக அழைக்கப் படும் பாங்கு ஒலியினை கேட்டுத் தான் ஸ்வாமிகள் எழுந்து அருகில் உள்ள குளத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவாராம். ஒரு நாள் அந்த பாங்கு ஒலி கேட்காததால் அவர் தூங்கி விட்டாராம். அப்போது மடத்து ஊழியர்களை அழைத்து ஏன் அந்த பள்ளிவாசலில் அதிகாலை பாங்கு சொல்லவில்லை என்று கேட்டாராம். அதற்கு ஊழியர்கள், 'சுவாமிகளே, உங்கள் தூக்கம் கெடுகிறது என்று நாங்கள் தான் புகார் செய்ததால் அவர்கள் குறைத்து வைத்து விட்டார்கள் என்றார்களாம். அதனை கேட்ட சுவாமிகள் 'அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பணிக்கு செல்லாதவர்கள் சோம்பேறியாவார்கள்' என்று சொல்லி பள்ளிவாசல் குழுவினரை மடத்திற்கு அழைத்து தன்னுடைய வருத்தத்தினை தெரிவித்து எப்போதும் போல அதிகாலை பாங்கினை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம். ஆகவே மதசார்பற்ற நமது நாட்டில் மத வேறுபாடுடன் கூறிய அயோத்யா  தீர்ப்பு நடுநிலை மாறியது தானே!

1)    இந்திய சமூகம் பாரம்பரிய நாகரீகமிக்க கலாச்சாரத்திற்கு புகழ் பெற்றது.  ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற ஏக பத்தினி விரத கொள்கை கடைபிடித்து ஓரின சேர்க்கையினை இந்திய கிரிமினல் சட்டம் பிரிவு 377 படி குற்றமாக்கப் பட்டது. அதற்கு தண்டனையாக அதிக பச்சமாக 10 வருட கடுங்காவல் தண்டனையும் பரிந்துரைக்கப் பட்டது. அது மேலை நாடுகளை விட நமது நாடு பண்பாட்டில் வேறுபட்டது என்ற ஒரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அதற்கு மாறாக 6.9.2018 அன்று நீதிமன்றம் இ.பி.கோ. 377 குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் மூலம் நமது பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு கெடுகிறது என்பது ஒருபக்கம், சிறார்கள் பாலின குற்றங்கள் அதிகரிக்க வழிவகை செய்யாதா?

2)    அடுத்த வினோதமான தீர்ப்பு எந்த ஆணும் எந்த பெண்ணும், அல்லது இரு வெவ்வேறு பெண்கள் சேர்ந்து வாழ வகை செய்யும் தீர்ப்பேயாகும். குஷ்பு மற்றும் கன்னியம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் 'இரண்டு வயது வந்தோர் பாலின வேறுபாடு இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று அனுமதி அளித்தது. அவ்வாறு செய்தால் சமூகத்தில் விவாகரத்து வழக்குகள் கூடாதா? கொடூர குற்றங்கள் நடக்க வழிவகை செய்யாதா?

தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொது நல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு மத்திய அரசு, 'இந்திய சமூகம், பாரம்பரியம் அதுபோன்ற திருமணங்களை அங்கீகரிக்க வில்லை' என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதே பதில் தான் இருபாலினர் ஒரே இடத்தில் உறவு மீறி தங்கலாமா என்ற கேள்வி வந்தபோது தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ததினால் நீதி மன்றமும் அனுமதியளித்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

3)    உதாரணத்திற்கு டெல்லியில் ‘ஆர்பிட் பூனேவாலா’ என்ற வாலிபர் தன்னுடன் நெடுநாளைய தோழியும், தங்கியிருந்தவருமான வால்க்கர் என்ற பெண்ணை கூறு போட்ட சம்பவங்கள் தொடர் கதையாகிய வழி செய்யாதா? இன்னொரு சமீபகால சம்பவம் கூர்கிராமில் நடந்துள்ளது. கணினி பொறியாளர் ஒருவர் ம.பி. பிரதேச குவாலியர் பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வந்தார். அவர் மனைவி கர்பிணியானதும் பிரசவத்திற்காக ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால் அதன் பின்னர் தன்னுடன் கணினி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். மனைவியினை மறந்து விட்டார். மனைவி திடீரென்று கூர்கிராம் வீட்டிற்கு வந்தது பேரதிர்ச்சியாக இருந்து காவல் நிலையம், கோர்ட்டு  வரை சென்றிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா, 'கூர்கிராம் பெண் கணவருடன் மூன்று நாட்களும், குவாலியர் பெண் கணவருடன் மூன்று நாட்களும் பகிர்ந்து கொண்டு விடுபட்ட நாள் அவர் விருப்பப் பட இருவரில் ஒருவடன் வாழலாமாம். அப்போது  இ.பி.கோ 497 என்ற ‘அடல்ட்ரி’ சட்டம் காற்றில் பறக்க விடலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லை தானே!

4)    ஆனால் புது உச்ச நீதிமன்ற தலைமை ஏற்ற பிறகு நீதி, நேர்மையாக வழங்கப் படும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது என்று கீழே கொடுக்கப் பட்ட தீர்ப்புகளில் ஏற்பட்டிருக்கிறது என்று பரவலாக பேசப் படுகிறது:

1) பி.ஜே.பி தலைவர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வினிக் குமார் உச்ச நீதிமன்றத்தில் 5.12.2022 அன்று தாக்கல் செய்த மனுவில், 'மத மாற்ற சட்டம் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டிருந்தார்'. ஏனென்றால் மத்தியில் அதன் அரசு ஆட்சியில் இருக்கும் என்ற தைரியமா என்னவோ! அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், அரசியல் சட்டப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தள்ளுபடி செய்துள்ளது.

2) அதே வழக்கறிஞர் 18.12.2019ல் தாக்கல் செய்த மனுவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் ஹிந்துக்கள் மைனாரிட்டி என்ற நிலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'இதுபோன்ற கோரிக்கையினை 'National Commission of Minorities Act 1992 அன்றே பரிசீலனை செய்து 23.10.1993 அன்று அறிக்கை வெளியிட்டது. ஆகவே தேவையுள்ளது என்று தள்ளுபடி செய்துள்ளது.

3) 10.12.2018 அன்று மேகாலயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் 'இந்தியா பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக இல்லாமல், முஸ்லிம் நாடாக மாற்றி அறிவிக்கப் பட்டதோ அதேபோன்று இந்தியாவினையும் ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்' என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து, 'மேகலைய உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசிலமைப்பு சட்டத்திற்கும், அதன் நோக்கத்திற்கும் நேர் மாறானது என்று நெத்தியடி தீர்ப்பு வழங்கியது' பாராட்டாமல் இருக்க முடிவதில்லையா?

4) அதேபோன்று தான் உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் சச்சின் குப்தா ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியர் மாட்டுக் கறி தின்பதினை தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் 'இந்திய மக்களில் பெரும்பான்மையோர் மாட்டுக் கறி தான் சாப்பிடுகின்றனர், குறிப்பாக பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள் அதைத்தான் உணவாகவும் கொள்கின்றனர், வேலைவாய்ப்பும் அவர்களுக்கு மாட்டுக் கறி வியாபாரம் மூலமே உள்ளதால், அவ்வாறு செய்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என்றும், மக்களுக்கு எந்த உணவினை சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க உரிமையுண்டு' என்றும் பரபரப்பான தீர்ப்பும் வழங்கியுள்ளது. இதுபோன்ற தீர்ப்பு மாட்டுக் கறி வியாபத்திற்காக மட்டுமல்லாமல், மாட்டுக் கறி சமையலுக்காக சேகரித்து வைத்துள்ளார்கள் என்றும், மாடுகளை அறுவைக்காக கொண்டு செல்கிறார்கள் என்று மாட்டு வியாபாரிகளை கொல்லக் கூடிய 'cow vigilant' என்ற பாசிச குழுவின் வாலை ஓட்ட அறுத்த செயலாகத் தானே கருத வேண்டியுள்ளது.

5) இன்னொருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'இந்தியாவினை ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உட்பட மற்ற வெளிநாட்டு ஆட்சியாளர்களை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று அறிவிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார். அந்த மனு விசாரணைக்காக நீதியரசர்கள் ஜோசெப் மற்றும் நகரத்தானா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மத சார்பற்றது, எங்கள் இருவரில் ஒருவர் கிருத்துவர், ஒருவர் ஹிந்து, அப்படி ஒற்றுமையான சமூகத்தினை  உருக்குலைய வைத்து வருங்கால சந்ததியினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், அது போன்ற செயல்களால் முன்னேயரால் எழுதப் பட்ட உண்மை சரித்திரத்தினை மாற்றி எழுத வேண்டுமா என்று தள்ளுபடி செய்துள்ளனர்.

6) அதேபோன்று 15.06.1949 அரசியமைப்பு சபை தேர்தல் கமிஷனின் தலைமை கமிஷனர், மற்றும் உறுப்பினர் பற்றி சட்டப் பிரிவு 289, 324ல் விரிவாக கூறியுள்ளது. ஆனால் சமீப காலங்களில் மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் அரசு அதிகாரிகளை  அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அவர்கள் ஓய்வு காலம் 'cooling period' முடியுமுன்பே தேர்தல் கமிஷனர்களை நியமனம் செய்து அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் தேர்தல் அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் பல குற்றச் சாட்டுகளுக்கு வழி வகுத்து விட்டது. ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசெப் தலைமையில் கூடி தேர்தல் கமிஷன் தனி (Independent commission) உரிமை உள்ளதாக இருக்க வேண்டும், அதனை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர் குழு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

8) சமீபத்திய மகாராஷ்ட்ரா கவர்னர் மகாராஷ்டிரா மந்திரிசபை குழப்பத்தில் தலையிட்டு நம்பிக்கை ஒட்டு நடத்த வேண்டும் என்று உத்தரவு அரசு கவிழ்ப்பில் துணை போவதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இந்திய மக்கள் மனதில் இன்னும் நீதி மறுக்க வில்லை என்றும், இனியும் நீதி தேவதை கண்ணை மூடிக் கொண்டு இருக்கப் போவதில்லை என்றும் ஒரு தடாலடி நடவடிக்கை என்றால் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை தானே. அதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்ற நீதியரசர்கள் வசை பாடுகள் வந்தாலும் அதனை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு நடு நிலை இந்தியனின் கடமை என்றால் அது சரிதானே! சமூபத்திய ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும் புது டெல்லியில் கலந்து கொண்டார்கள். அதில் சட்ட அமைச்சர் நீதிபதிகள் தேர்வு குழு(Collegium) தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது, தகுதியான நீதிபதிகள் தேர்வு செய்ய அரசு தான் சரியான அமைப்பு என்றும் சொல்லியுள்ளார். அவர் நோக்கமே அரசுக்கு வேண்டியவர்ளகளை உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளார். அதற்கு பதிலடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களோ 'நீதிபதிகள் தேர்வுக் குழு(Collegium) நேர்மையாகத் தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்கிறது என்று சட்ட அமைச்சர் கூறியதிற்கு பதிலடியாக  பதிலடியாக கூறியது உண்மையிலே நடுநிலையானவர்களும், ஊடகங்களும் பாராட்டுகின்றன. ஆனால் மாண்புமிகு சந்திரசூட் போல எவ்வளவு தலைமை நீதிபதிகள் இனிமேலும் வருவார்கள் என்ற கேள்வி எழாமலில்லை தானே!,