Sunday 15 September, 2013

என்னுடைய பெயர் கிங் கான்!

என்னுடைய பெயர் கிங் கான்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
பாலிவூட் நடிகர் சாருக் கான் சமீபத்தில் நடித்த 'என் பெயர் கான்' என்ற படம் வசூலில் சக்கைப் போடு போட்டதாக ஊடகங்கள் வெளியிட்டன. அந்தப் பணம் அதனை தயாரித்த, விநியோகித்த அத்தனை மனிதர்களுக்கும் கிடைத்து அவர்கள் செல்வத்தில் அதிக செல்வம் சேர்ந்திருக்கும்.
ஆனால் தன்னலமற்ற கணினி கல்வியினை உலக மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியது மூலம் 2012 ஆம் ஆண்டு உலக பிரபலங்கள் நூறு பேர்களில் ஒருவராகத் திகழும் ஒரு முஸ்லிம் இளைஞர் சல்மான் கான் தான் நான் குறிப்பிடும் கான்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லீன்ஸ் நகரில் பங்களா தேசிய தகப்பனாருக்கும் இந்திய தாயாருக்கும் மகனாகப் பிறந்தவர் சல்மான் கான். மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்த கான் கணிதத்திலும், கணினியிலும் மிகவும் சுட்டி .மாசாசுசெட்டஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் கணினி மற்றும் மின்சார சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்று, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ மேல் படிப்பினை முடித்தார். அதன் பின்பு போஸ்டன் நகரில் வேலை வாய்ப்பினைப் பெற்றார்.
கணினி உலகான சிலிகான் நகரில் கை நிறைய சம்பளம் . ஆனால் மனதில் உலக பாலகர்களுக்கு மன நிறைவான பேசும் படத்தில் பாடம் எடுத்துக் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசை.
அதற்கு அச்சாரமாக அமைந்தது.  2004 ஆம் ஆண்டு நியூ ஆர்லின்ஸ் நகரில் குடியிருக்கும் தனது சித்தி மகள் நாடியாவிற்கு தான் வசிக்கும் பாஸ்டன் நகரிலிருந்து கணிதம் மற்றும் சயின்ஸ் பாடங்கள் எடுத்தது.
நாடியாவின் அபார கல்வி முன்னேற்றத்தினைத் தொடர்ந்து  அவளுடை சகோதரர்களான அர்மானும், அலியும்   கல்வி கற்க கானின் உதவினை நாடினார்கள். 2006 ஆம் ஆண்டில் ஒரு பூனை பியானோவில் இசை வாசிப்பது போன்ற யு டூபில் வெளியிட்டார்.
விளையாட்டாக ஆரம்பித்த கணினி கல்விப் பாடம் யாஹூ, ஆராகுள், சிஸ்கோ , எச்.பி, கூகிள் போன்ற தொழில் நுட்பக் கம்பனிக் கிடையில் கான் முழு நேர உலக இலவச கணினிக் கல்வியினை ஆரம்பித்துள்ளார்.
நான் 55 ஆண்டுகளுக்கு முன்பு   பள்ளி மாணவனாக இருந்தபோது கணித டூசனுக்கு மாதம் ரூ 10/ கொடுத்த ஞாபகம். அதோடு   ரெமிங்டன் மெசினில் டைபிங் பழக ரூ 10/ கொடுத்துள்ளேன்.   அப்போது அந்தப் பணமே பெரிய விசயமாக இருந்தது. கணினி பழகியது எனது 57 வது வயதில் தான். ஆனால் இப்போது பாடங்களை 3 வயது குழந்தைகள் கூட கணினியில் கற்க முடிகிறது, ஐபெட் , ஐபாக் போன்ற ஸ்தானங்கள் உதவி செய்கின்றன.
ஆஸ்திரேலியாவின் நரம்பியல் நிபுணர் சூடி வில்ஸ் என்பவர், 'குழந்தைகள் தங்களது மதிய சாப்பட்டினைக் கூட மறந்து ஏன் வீடியோ பார்க்கின்றது என்றால் தங்களது வீட்டுப் பாடத்தினை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள்என்று கூறுகின்றார். வீடியோ கேம்ஸ் தங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்வதாகவும் கூறுகின்றார். குழந்தைகள் தங்கள் பழைய கல்வி கற்கும் முறையிலிருந்து புதிய முறை படம் பார்த்து கல்வி கற்கும் முறையினை ஆர்வத்துடன் பயில்கிறார்கள் என்று கூறுகிறார்.r நான் உயர் நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது வகுப்பில் ஆசிரியர் சயின்ஸ் பாடத்தினை வெள்ளை பலகையில் எழுதி போதிப்பதினை விட, ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டி விளக்கும்போது மிகவும் ரசித்து புரிந்து கொண்டேன். அதே போல் தான்  இன்று கான் தனது கல்வி முறையினை உலகத்தில் பரப்புகிறார்.
கான் தனது திட்டகளை, 'டெட்' என்ற சிறப்புரையில் விளக்கும்போது, வீடியோ மூலம் கல்விக்கு புத்துனர்வூட்டுவது.  அவற்றின் சிறப்பு அம்சம் கீழ் வருமாறு:
1) பள்ளியில் விடுபட்ட பாடங்கள் கற்பது
2) சிறந்த ஆசிரியர்கள் கொண்டு கணினியில் பாடம் கற்பிப்பது.
3) இலவச கல்விச் சேவை பாலகர்களுக்கு அளிப்பது.
சல்மான் கானின் அறிவுச் சோலையில்( khanacademy.org). 4000 கல்வி சம்பந்தமான வீடியோக்கள் உள்ளன. அதனை இது வரை 250 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
2) coursera.org ஆன் லைன் பட்டங்கள் சிறந்த ஆசியர், பேராசிரியர் மூலம் வழங்கப் படுகிறது.
3) TED Talks, ted.com மூலம் தலை சிறந்த அறிவு ஜீவிகள் கொடுத்த உரைகளை 1400 வீடியோ மூலம் தரப்படுகிறது.
4) ocwconsortium.org மூலம் சிறந்த பல்கலைகழகங்களின் சிறப்புரைகளை தரப்படுகிறது.
5) apple.com/education/tunes.u என்ற பாடத்தின் மூலம்
iPod, iPhone or iPad ஆகியவற்றின் உபயோகங்களை அறியலாம்.
6) en.wikiuniversity.org மூலம் விக்கி மீடியா ஸ்தாபனத்தின் திறந்த நிலை கல்வி பாடங்களை தெரிந்து கொள்ளலாம்.
7) textbookrevolution.org மூலம் உலக புத்தகங்களை இலவசமாக கணினியில் தெரிந்து கொள்ளலாம்.

சிலரிடம் இது போன்ற கணினி படிப்புகளால் ஆசிரியர்களின் துணை அறவே மறுக்கப் படும் என்று பயம் உள்ளது. ஆனால் கணினி கல்வியினை ஆசிரியர்கள் மூலம் மேற்ப் பார்வையிட்டால் இன்னும் சிறப்பாக குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்கிறார் கான்.
மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கான் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து அவரைப் மனமாரப் பாராட்டியதோடு அவரின் ரசிகரும் ஆகி விட்டதாக 2011 இல் கூறியுள்ளார் என்று நினைக்கும் போது நாமும் அவருடன் சேர்ந்து பாராட்டுவதோடு நில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு கல்வி சேவையினை உங்கள் குடும்பத்திற்கு, சமூதாயத்திற்கு, நீங்கள் பணிபுரியும் நாட்டு மக்களுக்கு, உங்கள் ஊர் ஜமாத்து மக்களுக்கு வழங்க உறுதி எடுத்துக் கொள்வோமாக!


Monday 9 September, 2013

கண்டதும்-கேட்டதும்

கண்டதும்-கேட்டதும் 

எனது புதுக் கல்லூரி நண்பர் அமீரும், நானும் அவர் ஊரைச் சார்ந்த ஒரு பணக்கார பெருமுகர் ஜனாஸா தொழுகைக்கு சென்னை ராயப் பேட்டையில் உள்ள அடக்கஸ்தலத்திற்கு சென்றிருந்தோம். அசர் தொழுகைக்குப் பின்பு அடக்கம் செய்வது  அறிந்து அசர் தொழுகைக்கு தயாரானோம். அப்போது அந்தப் பிரமுகரின் ஜனாசாவினை தொழும் உள்ளறைக்குள் வைக்கப் பட்டது. அசர் தொழுததும் ஜனாஸா தொழுகையும் வைக்கப் பட்டது.
ஆனால் ஜனாஸா தொழுகைக்கு என்று தனியாக பள்ளிக்கு வெளியே அதற்கான இடம் ஒதுக்கப் பட்டது அறிந்தும் ஜனாஸா உள்ளே வைக்கப் பட்டிருந்தது அவரின் பணக்கார அந்தஸ்து அறிந்து வைக்கப் பட்டது என்று கூறப் பட்டது.
சில நாட்களுக்கு பின்பு எனது நண்பர் அமீர் அவர் ஊரைச் சார்ந்த ஒரு மத்திய வர்க்க பிரமுகரின் ஜனாசத் தொழுகைக்குச் சென்றதாகவும் அப்போது அவருடைய ஜனாஸா தொழுகை பள்ளிக்கு வெளியே உள்ள இடத்தில் தொழுகை வைத்ததாகவும் கூறினார்.

அதே போன்று தான்  வாடியில் முக்கிய பிரமுகர், பணக்காரர் என்றால் முன்புறத்திலும், சாதாரண குடிமகனுக்கு மைய வாடியில் கடைசியிலும் இடம் அளிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அல்லாஹ்வின் படைப்பில் ஏழைப் பணக்காரன் பார்ப்பதில்லை. அவன் வளரும் போதுதான் உயர்நிலை, தாழ் நிலை பார்க்கிறான்.
எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும் ஒருவன் உயிருடன் இருக்கும்போது தான் அவன் மனிதனாகிறான். அவன் இறந்த பின்பு ஜனாசாவாகத் தான் கருதப் படுகிறான். ஜனாசாவிற்கு உரிய மரியாதைக் கொடுத்து அடக்கம் செய்ய வேண்டும் தான். ஆனால் உயிருடன் வாழ்ந்த படோபத்தினை ஜனாசவான பின்பும் நாம் காட்டத் தான் வேண்டுமா என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா?

புகாரி 6490 இல் அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக சொல்லப் பட்டது: அல்லாஹ்வின் தூதர் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

உயிரோடு இருக்கும்போதே மேற்கோள்காட்டிய பெருமானார்(ஸல்) அறிவுரை இருக்கும்போது ஒருவர் ஜனாஸா ஆனா பின்பு ஏன் இந்த வீண் ஜம்பம்?
சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியார் கட்சிப் பிரமுகர் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்ததும், அது சம்பந்தமாக சில இஸ்லாமிய இயக்கங்கள் உணர்ச்சி மேலிட மாற்று மதப்  பிரமுகர்களை சென்னைப் பிரதான பள்ளிவாசலுக்கு அழைத்து ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் போன்று வரவேற்புக் கொடுத்து அவருக்குக் கைரவப் படுத்தியதும் பத்திரிக்கை வாயிலாகப் படித்து விட்டு என்னுடைய ஒருக் கட்டுரையில், இஸ்லாமிய மார்க்கம் ஒரு கடல் போன்றது அதில் பல துளி மழை நீரும், ஆறுகளும் கலக்கலாம் அதற்காக ஏன் இந்த வீணான ஆர்ப்பாட்டம் என எழுதி இருந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னாள் முரசொலி அடியார் என்பவரும் இதுபோன்று இஸ்லாத்தினைத் தழுவி இஸ்லாம் சம்பந்தமாக பல கூட்டங்களில்  பேசியும், தனது கருத்துக்களை  புத்தகமாகவும் வெளியிட்டார். அவர் சொல்லிலும், செயலிலும் இஸ்லாத்தினை தழுவியதோடு தோற்றத்தில் இஸ்லாமியனாக தாடி வைத்துக் காட்சி அளித்தார். அவரை பாராட்டி பாகிஸ்த்தான் ஜனாதிபதியும் விருந்து கொடுத்தார்.
ஆனால் சமீபத்தில் இஸ்லாத்தில் சேர்ந்த அந்தப் பிரமுகரோ இஸ்லாத்தில் சேர்ந்ததோடு நின்று விட்டு தனது மாற்றத்தினை அரசு கெசட்டுவில் கூட மாற்றவில்லை. முக்கிய பத்திரிக்கையில் விளம்பரமாக தன்னுடைய பெயரினை மாற்றியதாக கொடுக்க வில்லை, அல்லது ஒரு நீதி மன்றத்தில் தான் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று ஒரு பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வில்லை. தன்னுடைய பழைய பெயரினையும் இஸ்லாமிய பெயரோடு அடை மொழியில் சேர்த்துக்  கொண்டார்.  நான்  நினைத்தேன் அவர் வேலூர்  பாக்கியாத்துஸ் சாலியா, தேவ பந்த் தாருல் உலூம், பெங்களூர் ஷபீலூர்  ரஷாத்  போன்ற அரபிக் கல்லூரிகளில்  சேர்ந்து முறையாக இஸ்லாமிய கல்வியினைப் புரிந்து, பின்பு இஸ்லாமியக் கூட்டங்களில் பேசுவார் என்று. ஆனால்  அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டார். தோற்றத்திலும் முரசொலி அடியார் போன்று தாடி  கூட இல்லாத ஒரு பிரமுகரானார்.
அவர் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார். அந்த ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலைப்  பள்ளியில் பலக் கட்சிப் பிரமுகர் படை சூழ நடத்தப் பட்டது. அந்தப் பள்ளியின் முக்கிய நிர்வாகிக் கூட அப்படி ஜனாஸாத் தொழுகை நடத்தப் படவில்லை என்று அவருடைய வாரிசுகள் என்னிடம் வருத்தப் பட்டுள்ளனர். அதன் பின்பு அவர் ஜனாஸா அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதில் சர்ச்சை வந்து அந்தப் பிரமுகர் வாய்மொழியாக சொன்னது என்று சிலக் கட்சிப் பிரமுகர்கள் சொன்னதால் தன்னால் சீரணிக்க முடியாத முடிவான ஒன்றினை எடுத்ததாக ஒரு சமுதாய வார இதழில் அதன் தலைவரே சொல்லி உள்ளார்.
மந்தவெளி தலைமை இமாம் மௌலவி இலியாஸ் அசரத்து அவர்கள் அந்தப் பெரியாரின் சீடர் ஜனாசா கொடுக்கப் பட்ட விதம் சரியா என்ற கேள்விக்கும் பதில் ஒரு  இஸ்லாமிய வாரப் பத்திரிக்கைக்கு பேட்டிக்  கொடுக்கும் பொது, அது' தவறான வழிக் காட்டுதல்' என்றும் அதற்குத் துணை போனவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இறந்த பிரமுகராவது இஸ்லாத்திற்கு வழிக் காட்டுதலாக தான் இஸ்லாத்தினை தழுவி விட்டேன், தான் வாழ்வது அல்லது மடிவது இஸ்லாமிய வழிமுறைப் படி தான் நடக்கும் என்று கூறியிருந்தால் இந்த குளறுபடி நடந்திருக்காது அல்லவா?


இது போன்ற நிகழ்வுகள் இனிமேயும் நடக்கலாம். தொப்பி அணியாத, கைலி அணியாத முஸ்லிம் நான் என்று ஒருவர் சொன்னார் என்றால் சமூதாய மக்கள் இனிமேலும் ஏமாற வேண்டாம் அவர் உண்மையிலேயே மார்க்கம் மாறி அதன் படி சட்ட நடவடிக்கைகளையும் மார்க்க நடவடிக்கைகளிலும் எடுத்திருக்கிறாரா என அறிந்து கொள்ளவேண்டும்  என்று சொன்னால் சரியா?