"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
2012
செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள்
உலக முஸ்லிம்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்திய வாரங்களாக அமைந்தது. அதற்கு காரணம், 'மனிதரில் புனிதர், கோமான்கள் போற்றிய சீமான், ஈருலக ஒளி விளக்கு எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள்
பற்றி அமெரிக்கா வாழ் படத்தயாரிப்பாளர்கள் 'ரெவ்.டோரி ஜான்', 'மோரிஸ் சாதக் மற்றும் கிஸ்மத் சக்லான' ஆகியோர் அவதூறு குறும் படம், "இன்னோசென்ஸ் ஆப் இஸ்லாம்" எடுத்து அதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் படி 'யு டுப்' என்ற வலை தளத்தில்
வெளியிட்டது அனைவருக்கும் தெரியும்.
அதனைப் பார்த்த முஸ்லிம்கள், 'தங்கள்
உயிருக்கும் மேலான ரசூலல்லாஹ் பற்றி ஏளனமும், அவமானமும் செய்கிறார்களே என்றால் பொறுத்துக் கொள்வார்களா? அது அமெரிக்காவில்
கருத்து சுதந்தரமாக அவர்கள் கருதலாம். அதே கருத்துச் சுதந்தரத்தினை உபயோகித்து
இயேசு பெருமானார் பற்றியோ அல்லது மோசஸ்
அவர்களைப் பற்றியோ தவறான குறும்படம் முஸ்லிம்
அல்லாதவர் கூட வெளியிட்டால் சும்மா இருப்பார்களா? ஏன் முஸ்லிம்கள்
கூட சும்மா இருக்க மாட்டார்கள் ஏனென்றால் இயேசு பெருமானாரும், மோசஸ் அவர்களும்
இஸ்லாமியர்களுக்கு நபிகளாக ஈசா(அலை ) என்றும் மூஸா(அலை ) என்றும் போற்றப் படுபவர்கள்
தானே!
இவ்வளவு நடந்தும் அந்தக் குறும்படம் தடை
செய்யப் படவில்லை, அந்த தயாரிப்பாளர்களை கைது செய்யப் படவில்லை. ஏன், அந்தப் படத்தில்
நடித்த இரண்டு ஹாலிவுட் ஆண் நடிகர்களும், ஒரு பெண் நடிகையும் எங்களிடம் படத்தயாரிப்பாளர்கள் பொய்யான காரணத்தினைச்
சொல்லி படம் எடுத்து விட்டனர் என்று நீதி மன்றம் வரை சென்றுள்ளனர். அதற்குப் பிறகாவது அந்தப்
படத்தினை தடை செய்திருக்கலாம். ஆனால் இது வரை அதற்கு முடிவில்லையே, அது ஏன் என்ற கோபம் இஸ்லாமியருக்கு இருக்கத்தானே செய்யும்!
ஆமாம் இவ்வளவிற்கும் அந்த தயாரிப்பாளர்களுக்கு
எவ்வாறு அப்படி படம் எடுக்கத் தைரியம் வந்தது என்று ஆராயும்போது கீழ்க்கண்ட
காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவது இயற்கை தானே:
1) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக வர்த்தக மையம் தகர்க்கபட்டதிற்கு
ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்டா தான் காரணம் என்று ஆப்கானிஸ்தானில் படை எடுத்து
நேட்டோ ராணுவம் அங்கிருது 2014 ஆம் ஆண்டில் தானே விலகியது.
2) மனித கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான காரணம் சொல்லி, இராக்கில் படை
எடுத்து சதாம் ஹுசைனை அகற்றி விட்டு, உள்நாட்டு கலவரத்திற்கு வித்திட்டு விட்டது.
3) அரேபிய, ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஆட்சி செய்யும் தலைவர்கள் கொடுமையாளர்கள், ஊழல் பேர்வழிகள்
என்று பறை சாற்றி மேற்கத்திய கல்வி கற்ற இளைஞர்களை தூண்டி விட்டு எகிப்து, லிபியா, டூனிஷியா போன்ற
நாடுகளின் தலைவர்கள் மாற்றப் பட்டனர்.
4) ஏன் இன்னும் சிரியா, ஏமன், பக்ரைன் போன்ற
நாடுகளில் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பிற்கு வித்திட்டு விட்டனர் என்றால்
மிகையாகாது.
ஆகவேதான் இஸ்லாமியர் கிள்ளுக் கீரைகள், அவர்களை குனியக்
குனியக் கொட்டலாம் என்று எண்ணி தூங்கிக் கொண்டிருந்த சமுதாய இளைஞர்களை சிலிர்த்து
எழ செய்து விட்டார்கள். அதன் விளைவு தான் உலகமெங்கும் ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை, வன்முறைக்கு 50 பேர்கள் இது வரை
பலியாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுக்கும்
தமிழக முஸ்லிம்களும் அதற்கு விதி விலக்கல்ல என்பதினைக் காட்ட 26 முஸ்லிம்
அமைப்புகளும் சென்னை அண்ணா சாலையினை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஆகா தமிழக
முஸ்லிம்களிடையே இத்தனை அமைப்புகளா என்று உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் 'அமைதிப் பூங்காவாக மாறிய' இன்னும் சில இயக்கங்களும் உண்டு என்றால் பாருங்களேன்!
நான் கூண்ட, முஸ்லிம்
அமைப்புகளிடம் வேற்றுமையினை மறந்து ஒற்றுமை காணுங்கள் என்று, 'ஒன்று பட்டால் உண்டு
வாழ்வு', சகோதர யுத்தம் சமுதாய தீங்கு',
'கண்கள் குலமாகுதம்மா', 'இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம்
வேண்டுமா', ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே',
'முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்' போன்ற கட்டுரைகள்
எழுதி முஸ்லிம் பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளி வந்துள்ளன என்பதினை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட
ஆசைப் படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமியர் ஒன்று படுவது காலத்தின் கட்டாயம். மைனாரிட்டி சமூகமாக இருக்கின்றது என்றெண்ணி குனியக் குனியக் கொட்ட
நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தின் அடக்கு முறைகளின் செயலுக்கு சவாலாக அமைந்து
விட்டது தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பு அலை. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'சாக்காடையில் விழுந்து எழுந்து வரும் பன்றியிடமிருந்து விலகி
இருங்கள்' என்று. அப்படி முஸ்லிம்களால் விலகி இருக்க முடியுமா இந்த விசயத்தில். முடியாது தானே!
தமிழில் மற்றுமொரு பழமொழி
சொல்வார்கள், 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று. அது என்ன என்று விளக்கலாம் என்று நினைக்கின்றேன்.
ஒரு ரிஷி இறைவனிடம் தனக்கு எதனையும்
பார்வையிலேயே சுட்டி எரிக்கும் வரம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். அதனை சோதனை
செய்ய ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அந்த வழியில் வானத்தில் பரந்த கொக்கினை கோபமாக
பார்த்தார். அது உடனே எரிந்து கருகி விழுந்தது. ஆகா நமக்கு யாரையும் வீழ்த்த தனி
தகுதி வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து ஒரு ஊரினை
அடைந்தார். அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா யாசகர்
வந்திருக்கின்றேன் சாப்பாடு வேண்டும்’ என்று குரல்
எழுப்பி இருக்கின்றார். வீட்டினுள் இருந்த பெண்மணி இந்தோ வருகிறேன் சிறிது
பொறுங்கள் என்று சொல்லி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் கணவருக்கு
பரிமாறிவிட்டு வெளியே சாதத்துடன் வந்துள்ளார். கோபம் அடைந்த முனிவர் ஏன் உடனே வரவில்லை என்று கேட்டார் அதற்கு கொஞ்சம் தூரம் சென்றால் ஒரு கறிக்கடை வரும்
அங்குள்ள முஸ்லிம் வியாபாரியிடம் கேளுங்கள் பதில் வரும் என்று சொல்லி விட்டாள். உடனே சாமியார்
வேக வேகமாக கறிக்கடைக்குச் சென்று யாசகம் கேட்டார். வியாபாரி அந்த நேரத்தில் கடையினை அவசர, அவசரமாக மூடி
விட்டு வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த வியாபாரியும் முனிவரிடம்
வாருங்கள் தருகிறேன் என்று கூறி விட்டு நடையினைக் கட்டினார். வியாபாரி வீட்டினில்
சென்று பசியுடன் இருக்கும் வயதான தன் தந்தைக்கு சாப்பாடு வழங்கி விட்டு அதன் பின்பு முனிவருக்கு சாதம்
எடுத்து வந்தார். உடனே முனிவர் கோபப்பட்டு ஏன் இந்த சாதம் கொண்டு வர இவ்வளவு நேரம் என்னை யார்
என்று நினைகின்றே என்று கேட்டு கோபப் பட்டார். அப்போது அமைதியாக அந்த வியாபாரி
சாமியாரே, உங்களை விட என் வயதான தகப்பனார் தான் முக்கியத்துவம் என்றாரே பார்க்கலாம்.
அப்போது தான் அந்த முனிவரும் தனது கோப வரத்திற்கு மேல் பாசமும் பற்றும் தான் முக்கியத்துவம் என்று உணர்ந்து
அமைதியானார்'.
இஸ்லாம் ஒரு உலக அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமூதாயம் படைக்கும்
மார்க்கம். அந்த மார்க்கத்தினை உலகினுக்கு அறிமுகப் படுத்திய இறுதி நபி
பெருமானாரைப் பற்றியோ அல்லது ஏக அல்லாஹ்வினைப் பற்றியோ எந்த ஏகாதிப்பத்திய
சக்திகளும் இழிவு படுத்தினால் முஸ்லிம்கள் பொறுக்க மாட்டார்கள், மாறாக பொங்கி எழுவார்கள் என்பதினை காட்ட அனைத்து இயக்கங்களும்
ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால் சரியா?