Wednesday, 29 April 2015

ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா!

ஆங்கிலேய  கிழக்கு இந்திய கம்பனி ஒன்றுபட்ட இந்தியர்கள் மீது நடத்திய அடக்குமுறையினை எதிர்க்க புறப்பட்ட மக்கள் புரட்சிதான் முதாலாம் விடுதலைப் போர், விடுதலைப் புரட்சி, சிப்பாய்க் கலவரம், என்று பல பெயர்களால் அழைக்கப் படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சியாகும் என்று நீங்கள் அறிவீர்.

மீரட் நகரில் முதலாவதாக ஆரம்பித்த கலவரம் படிப்படியாக இந்தியாவெங்கும் பரவியது. இந்திய குறுநில மன்னர்கள் பலர் கும்பனி துப்பாக்கிக்குப் பயந்து  ஒடுங்கிப் போயிருந்தாலும், சீக்கிய மன்னர்கள் பலர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய எழுச்சியினை  எதிர்த்தாலும், ஜான்சி நாட்டின் வீர மங்கை லக்ஷ்மி பாயும், அவுத் மாநில அரசியான பேகம் ஹசரத்தும், அவருடைய மகனார் பிர்ஜிஸ் காதிரும் கும்பனி ஆட்சியினை எதிர்த்துப் போரிட்டனர்.

அவுத் மாநிலத்தில் போரினை முன்னின்று நடத்தியவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு எல்லாம்  ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் மௌலவி அகமதுல்லா. இவர் சென்னையினைச் சார்ந்தாலும் அவுத் மாநிலத்தில் படைத் தளபதியாக இருந்து போரிட்டு இருக்கிறார்.

முதலாம் சுதந்திரப் புரட்சியில்  முக்கிய பங்காற்றியவர்களில் முகலாயிய சாம்ராஜ்ய  சக்கரவர்த்தி பகதுர்சா சபார் அவர்களின்  படைத்தளபதியான பக்த்கான், பெரேலி கான் பகதூர் கான், ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் 1859ஆம் ஆண்டுக்  கொல்லப்பட்டார்கள்.

வட இந்தியாவில் புரட்சிப் படைகளை இரும்புக் கரம் அடக்கி, புரட்சிப் படைத் தளபதிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுக் குவித்த கும்பனிக் கொடூரன் 'கர்னல் நீல்' ஆச்சரியமில்லை!
அந்தக் கொடூரனுக்கு எங்கே சிலை வைத்தார்கள் தெரியுமா ஆங்கிலேயர்கள். சென்னை மாநகர மத்தியில் அமைந்திருக்கும் ஸ்பென்சர் எதிர்புறத்தில் வெண்கலத்தால் சிலை அமைத்தார்கள். அந்தக் கொடூரனுக்கு தமிழகத்தின் தலைநகரில் சிலையா என்றுக் கொதித்து எழுந்த மதுரை இளம் சிங்கம் முகமது சாலியா தனது நண்பனான சுப்ராயளுடன்  சென்னை நோக்கி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டார்கள்  அவர்கள் கையில் துப்பாக்கியில்லை, வெடிகுண்டு இல்லை. மாறாக வெறும் சுத்தியலும், கோடாரியும் தான் அவர்கள் ஆயுதம். கையில் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஒரு ஏனியினை வைத்து கர்னல் நீல் சிலைமீது ஏறி பீடத்திலிருந்து வெட்டிச் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த 21 போராட்ட வீரர்களும் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றனர். அதன் பின்பு அந்த சிலை ஆங்கிலேயர் ஆட்சி செய்தது வரை நிறுவப் படவில்லை.
இப்போது அந்த சிலை எங்கே இருக்கின்றது தெரியுமா? சென்னை எழும்பூர் காட்சியகத்தில் ஆதிக்க ஆங்கிலேயரின் காட்சிப் பொருளாக இருக்கின்றது.
1858 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் புரட்சியினை அடக்கினாலும், அந்தப் புரட்சி கும்பனி ஆட்ச்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது.
டெல்லி செங்கோட்டை ஆண்ட   முகலாய சாம்ராஜ்யம், மற்றும் மராட்டிய சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தது.


அன்று முதல் சுதந்திரப் புரட்சிக் கனல் தெறிக்க அந்நிய சிலை உடைக்க முகமது சாலியா, அவரது தோழர் சுப்புராயலு ஆகியோர் அண்ணன் தம்பியாக இணைந்து செயலாற்றினர். ஆனால் சுதந்திரத்திற்கு ஒரு வேர்வை கூட சிந்தாத ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்களை அன்னியர் என்றும், ஓட்டுரிமையினை பறியுங்கள் என்றும், அரசியல் சாசனம் வழங்கிய சலுகைகளைப் பறியுங்கள் என்றும், ஒற்றுமையிக்கு ஊறு விளைவிக்கும் துவேசமான குரல் எழுப்பி வருவது வேதனையாக இல்லையா  உங்களுக்கு?