Monday, 18 May 2015

கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

இஸ்லாமியக் கட்டிடக் கலையின் எடுத்துக் காட்டாக இருப்பது வட்ட  வடிவமான கவிகை மாடம், உயர்ந்து காணப்படும் மினராவும் தான்  என்றால் மிகையாவது. அதுபோன்ற வடிவங்கள் அமைப்பதின் பின்னணியே தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அது பள்ளிவாசல் என்று சொல்லாமல் சொல்லும் முறைதான் அது என்பது இஸ்லாமிய வரலாறு படித்தவர்களுக்குத் .தெரியும்.
உலக அதிசயங்களின்  உச்ச பீடமான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலிருந்து அரேபியாவில் பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல்) அடங்கியிருக்கும் மதினாக் கோபுரம் வரை உள்ள கோபுரங்கள் இஸ்லாமியக் கட்டிடக் கலையின்  எடுத்துக் காட்டாகும். உலகின் ஒவ்வொரு நாகரியமும் ஒரு அடையாளத்தினை விட்டு சென்றுள்ளது. உதாரணத்திற்கு  சிந்துசமவெளி நாகரீக அடையாளமாக மோகன்ஜாதார-ஹரப்பாவும், கிரேக்க-ரோமன் அடையாளமாக கிரீக், இத்தாலியில் உள்ள உயர்ந்த தூனுகளுடன் அமைந்த கல் கட்டிடங்களும், துருக்கிய நாகரிகத்தின் கட்டிடக் கலையின் அங்கமாக அங்காராவில் உள்ள கட்டிடங்களும் எடுத்துக் காட்டாகும்.
ஆனால் சிலருக்கு மதினாவில் உள்ள பச்சைக் கலரில் உள்ள கவிகை மாடம்  மீது அலாதிய கோபம். அதுவும் தமிழ்நாட்டில் தான் அந்தக் கோபம். ஏனென்றால் யாரோ ஒருவர் எழுப்பிய விசமத்தனமான புரளியினை நம்பி அந்தக் கோபுரத்தினை உடைப்போம் என்று குரல் எழுப்பி முண்டாசு கட்டும் சிலரும், அதற்கு எதிர்ப்பு என்று இன்னொரு அமைப்பும் என்று கிளம்பி 2015 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு   தொலைக் காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களுக்குத் தீனி போட்டன. அத்தோடு நில்லாமல் மண்ணடி சுவர் எல்லாம் தங்களுடைய குடும்பச் சொத்து என்று பெரிய போஸ்டர்களும் ஓட்டப் பட்டன. இத்தனைக்கும் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்தால் தண்டனை என்று இருக்கும்போது அதனையும் மீறி விளம்பரம் செய்யப் பட்டுள்ளன. ஆனால் அந்த அமைப்பின் தலைவர்கள் நடத்தும் வணிக வளாகத்திலோ அல்லது வீட்டின் சுவரிலோ ஒட்டவில்லையே அது ஏன்?
ஏனென்றால் ஒரு அமைப்பினர் மண்ணடியில் மற்ற அமைப்பினருக்கு சவால் இடும் வகையில் காவல்த் துறையினர் முன்னிலையில் ஒலி பெருக்கியில் தமிழ்நாட்டில் உள்ள தர்காக்களை தகர்ப்போம் என்று அறைகூவல் இட்டது முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பும் தொலைகாட்சியில் ஒலி பரப்பப் பட்டது. அந்தத் தொலைக் காட்சியினை முஸ்லிம்கள் மட்டும் பார்ப்பதில்லை, அனைத்து சமூகத்தினவரும்  மதினாக் கோபுரத்தினை உடைப்போம் என்று சொன்னவர்களுக்கும், அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித் 500 ஆண்டுகால முஸ்லிம்கள்  ஆட்சியின் அவமானச் சின்னம் என்று திட்டமிட்டு கோபுரத்தில் ஏறி கோடாரி கொண்டு உடைத்த ஒரு கூட்டத்தினவருக்கும் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழும்பி இருப்பதாக முஸ்லிம்கள் பேசாமலில்லையே ! கோவையில் முஸ்லிம்களின் வியாபார தளமாக  இருந்தது ஒப்பனக்கரத் தெரு. அதில் இருந்த வியாபார தளங்களான  சோபா  கிளாத் செண்டர் உள்ள பல வியாபார தளங்கள் தரை மட்டமாக்கப் பட்டது 1998 ஆண்டு கலவரத்தில். இதற்குக் காரணம் சில தலைவர்கள் தூண்டுதலால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்று விடுதலையே கண்ணுக் கெட்டிய தூரத்தில் இல்லையே என்று வெஞ்சிறையில் வாடுகின்றனர், அவர்களை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் நடுத்தெருவில் உள்ளன. ஆனால் அந்தக் கலவரத்தில் வளைகுடா நாடுகளில் வேர்வை சிந்தி சம்பாதித்த சம்பாதியத்தினை வீடியோ, ஆடியோ கேசட்டுகள் விற்பனை மூலம்  பலனடைந்த சில தலைவர்கள் நல்ல வியாபார தளங்களோடு மஞ்சள் குளிக்கின்றனர் என்றால் மிகையாகாதே!
அதேபோன்ற  ஒரு நிலையினை முஸ்லிம்கள் வியாபாரத்   தளமான மண்ணடியிலும் இந்த அமைப்புகள் ஆர்பாட்டம், எதிர் ஆர்ப்பாட்டம் மூலம் வரவழைத்து விடுமோ என்ற உள்ளூர பயம் மண்ணடி  முஸ்லிம்களிடையே இல்லாமலில்லை என்பது சிலர் பகிர்ந்து கொண்டக் கருத்து. இது போன்ற அழிவு பேச்சு மூலம், இந்திய  நாட்டில்  வாழ வேண்டுமென்றால் ஹிந்து பண்பாடைக் கடைப் பிடிக்க வேண்டும், இல்லையென்றால் முஸ்லிம் நாடுகளுக்கு ஓடுங்கள் என்று சொல்லும்  அமைப்புகள் வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தக் கதையாகுமல்லவா? வளர்த்த கடா மார்பில் குத்தும் கதைதான் தமிழகத்திலும் நடக்கின்றது என்றால் ஆச்சரியமில்லை!  ஒரு  உதாரணம் மூலம் எவ்வாறு முஸ்லிம்கள்  ஒருவருக்கொருவர் கழுத்தில் கத்தியினை வைக்கின்றனர் என்று உங்களுக்கு உண்மைச் சம்பவம் ஒன்றை  சொல்லலாம் என நினைக்கின்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமன பட்டியல் தயாரிக்கப் பட்டதில், மதுரையினைச் சார்ந்த சிறந்த  முஸ்லிம் வழக்கறிஞர் அஜ்மல் கான் பெயரும் பரிசீலனையில் இருந்தது. அதனைத் தெரிந்து கொண்ட அவரைப் பிடிக்காத இன்னொரு முஸ்லிம் வழக்கறிஞர், அஜ்மல்கானை  பற்றி அவதூறாக ஒரு மனு கொடுத்தின் மூலம்  அவர் பெயர் விடுபட்டுப் போனதாம். அப்படி என்ன   அவதூறு என்று கேட்கலாம். அதாவது, வழக்கறிஞர் அஜ்மல்கான் மதுரையினச் சார்ந்த சில முஸ்லிம் அமைப்பினருக்கு ஜாமீன் வழங்க மனுத் தாக்கல் செய்து வாதிட்டாராம்'.  ப.ம.க, விடுதலை  சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் ஜாதியினருக்கு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி வேண்டும் என்று வாதிடும்போது முஸ்லிம் சமூதாயத்திலேயே ஒருவருக்கொருவர் காலைவாரும் செயல்தான் நடக்கின்றது என்று பார்க்கும் போது வேதனையாக இல்லையா? இது சம்பந்தமான எனது ஆதங்கத்தினை சகோதரர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்களுடன் கூட பகிர்ந்து கொண்டுள்ளேன்!
இன்று  தமிழகத்தில் முஸ்லிம்கள்  அரசியலில் செல்லாக்காசாகக் காரணம் என்னவென்றால்  நாங்கள் சமூக அமைப்புகள், அரசியலுக்கு வரமாட்டோம் என்றும் சொல்லுபவர்கள் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு தலைவரை வலிய சென்று தேடி ஒரு வாக்குறுதியும் எழுதி வாங்காமலே முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத் தான் என்று சொல்லி சோரம் போவது வாடிக்கையாகி விட்டது. அப்படிச்  சொல்வதின் பின்னணி என்ன என்று முஸ்லிம்கள் அறியாமலில்லையே! முஸ்லிம்கள் அதிகமாக  வாழும், மற்றும் பல்வேறு சமூதாய அமைப்புகள்  தலைமையிடமாக இயங்கும் ஹார்பார் சட்டமன்றத் தொகுதியில் கூட ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினரைத்  தேர்ந்தெடுக்க முடியவில்லையே அது ஏன்?  ஒற்றுமை முஸ்லிம்களின் எட்டாக்  கனியோ என்று சந்தேகம் எழாமலில்லையே! மற்ற அரசியல் கட்சிகள், மற்றும் ஜாதித் தலைவர்களுடன் கூட்டுக்காக  அலையும் தலைவர்கள் சமூதாய ஒற்றுமைக்கு, ஒருங்கிணைப்புக்கு வழிவகை செய்ய வில்லையே அது ஏன்?  ஆனால் அருகில் இருக்கின்ற ஆந்திர  மாநிலத்தில் உதயமாகி, சமீப மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் கால் பதித்திருக்கும் உவைசியின் எம்.ஐ.எம். கட்சியுடன் தமிழ்நாடு இயக்கங்கள் போட்டிப் போடமுடியவில்லையே அது ஏன்? எங்கே சுயநலம் மேலோங்கி, பொதுநலம் மறைக்கப் படுகின்றதோ அங்கே வெற்றியினைக் காணமுடியாதே!
மத்தியில் புதிய ஆட்சி பீடத்தில் அமைந்ததும் கல்வி, வரலாறு, கமிசன்கள், கவர்னர்கள், போன்றவற்றில் எல்லாம் காவிமயமாக ஆக்கப் பட்ட பின்பும், ஏழை முஸ்லிம்களின் வியாபாரமான மாட்டுகறியிலும் கைவைக்கும் காவி மய  அத்துமீறல்களை  சமீபகாலங்களில் பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல புது ..டெல்லியில் 14.5. 2015 அன்று ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையும் படம் போட்டுக்   காட்டியுள்ளது. அது என்ன தெரியுமா? புது டெல்லியினைத் தலைமை இடமாக முகலாய சாம்ராஜ்யம் 500 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர் என்று வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். அப்போது மன்னர்களான ஹுமாயுன்,அக்பர், ஜஹாங்கிர்,ஜாஜஹான் போன்ற பெயர்களைக் கொண்ட வீதிகளை அங்கு சென்றவருக்குத் தெரியும். ஏன் மிக முக்கியப் பிரமுகர்கள் வாழும் பகுதியும் அவைகள் தான். அந்த மன்னர்கள்  பெயர்கள் தாங்கிய பலகைகள் இந்தியாவின் அவமானச் சின்னம் என்று சிவ சேனா அமைப்பினர் தார் பூசி அழித்துள்ளார்கள். அவர்களுக்கும் மதினா டூம் இடிப்போம் என்று சொல்பவர்களும் ஒரு வகையில் தோழர்கள் தானோ!

அதே நேரத்தில் தனி மனிதனாக நின்று ஒரு முஸ்லிம்  சகோதரர் முஸ்லிம்களுக்கு வந்த அவப் பெயரினை களைந்து அமெரிக்காவில் நடந்த சர்வதேச ஆவணப் பட விழாவில் ரெமி பரிசினை பெற்றிருக்கின்றார். அவர்தான் கோம்பை அன்வர். அவர் 'யாதும்' என்ற ஆவணப் படம் எடுத்து பிரபல மறைந்த தமிழக எழுத்தாளர் சுஜாதாவின்  தவறான கருத்துகளுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். அப்படி என்ன சுஜாதா கருத்தினைத் தெரிவித்தார் என்று 15.5.2015 தேதியிட்ட ஹிந்து பத்திரிக்கை வெளியிட்டுள்ளதினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 'முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பின் மூலம் ஆயிரக்கணக்கான வைஷ்ணவர்கள் கொல்லப் பட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோம்பை அன்வர் எடுத்த ஆவணப் படம் மூலம் அதனைத் தவறு என்றும் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்துள்ளார்கள் என்று கீலக்கரையிலுள்ள 'கல்லுப்பள்ளி' யின் கட்டிடக் கலையினைக் கொண்டு நிருபித்துள்ளார்.அங்கே முஸ்லிம்-திராவிட பண்பாடுகளுடன் 17ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டுள்ளது. இன்றும் அங்கே உள்ள தூண்களின் அமைப்பு கோயில் தூண்களை ஒத்து இருக்குமாம். நான்  கூட இளையான்குடி-கீழாயூர்  பழைய பள்ளியினைப் பார்த்திருக்கின்றேன். அங்கே தூண்களில் சாமி வடிவங்கள் இருக்கும். நல்ல வேலை இந்த விபரமெல்லாம் கோடரி கொண்டு உடைப்போம் என்று கூக்கிரலிடும் அமைப்பினருக்குத் தெரியவில்லை என எண்ணவேண்டியுள்ளது. தம்பி கோம்பை அன்வர் சாதித்த சாதனைகள் போல சமூதாய இயக்கங்கள் சாதனை எத்தனையோ உள்ளது.`
உதாரணத்திற்கு தூத்துக்குடி வீரபாண்டிய பட்டிணம் ஊரில் அமைந்திருக்கும் ஆதித்தனார் கல்லூரியில்,சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ்.போன்ற பதவிகளுக்கேல்லாம் ஒருங்கிணைந்த பயிற்சி கொடுத்து நாடார் சமூகத்தினை முன்னேற வழிவகை செய்கின்றனர். ஆனால் அதுபோன்ற ஒரு அமைப்பு இது வரை முஸ்லிம் சமூதாயத்தில் இல்லை என்ற எனது ஆதங்கம் 'மியாசி' என்ற அமைப்பில் கூட கடிதம், உறுப்பினர் என்ற முறையில் வெளியிட்டுயுள்ளேன்.ஒரு தீர்மானத்தினையும் கொண்டு வந்தேன், அது வெற்றி பெற்றாலும் இதுவரை அது அமல் செய்யப் படவில்லை என்பது வருத்தமாகத் தானே உள்ளது.

ஆகவே சமூதாய இயக்கங்கள் தங்களுக்குள் தேவையில்லாமல் சண்டைகள் போடுவதினை விட்டுவிட்டு,  அழிவுப் பாதையினை கடைப் பிடிக்காமல், நலிந்த சமூதாயத்தினவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் சலுகைகள் பெற வழி வகுப்பதுடன், வேலை வாய்ப்பு, தொழில் முனைய வழிவகுப்பது  காலத்தின் கட்டாயமே!