Sunday, 20 December 2015

தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பி.எச்டி; ஐ.பீ.எஸ்(ஓ)
தமிழகத்தில் 2015 நவம்பர் 14ல் பிடித்த வட கிழக்கு அடை மழை டிசம்பர் 11 வரை நீடித்தது மட்டுமல்லாமல், பள்ளி  செல்லாமல் இருந்த பிள்ளைகள் மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் மக்களும் 'ரெயின், ரெயின் கோ எவே' அதாவது ,'மழையே, மழையே நீ எப்போது போவாய்' என்று பாட்டுப் படிக்கும் அளவிற்கு, அண்டை மாநில அரசுகள் தண்ணீர் தரமறுத்து தரிசு நிலமான தமிழகத்தில்   சொல்லவென்னா துயரத்தினையும், துன்பத்தினையும் ஏற்படுத்தி விட்டது என்றால் மிகையாகாது
உலகத்தில் கி.மு.2500லிருந்து கி.மு.2300க்குள் அதாவது கி.மு.2348ம் ஆண்டு இறை தூதர் நோவா அல்லது நூஹு என்று அழைக்கப் படும் நேசரை அங்குள்ள மக்கள் துன்புறுத்தியதால் இறைவன் கட்டளைப் படி ஒரு மரக் கப்பலை தயார் செய்து தன் அடியார்கள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றினை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் போது, துரத்தி வந்த எதிரிகள் கடல் பொங்கி மூழ்கடிக்கப் பட்டதாக வரலாறு. அப்போது ஏற்பட்ட மாற்றத்தால் தான் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை, அண்டார்டிகா, ஆல்ப் மலை போன்றவை கடலிலிருந்து மேலே வந்ததாக கூறப் படுகிறது.
20ஆம் நூற்றாண்டு, மற்றும் இந்த நூற்றாண்டில் நடந்த வெள்ளங்களில் முக்கியமாக கருதப் படுவது 1931 ஆம் ஆண்டு சீனாவின் வெள்ளமாகும். அந்த வெள்ளம் 1,04,000 மக்களை பலி வாங்கியது.
2) 2004 ஆம் ஆண்டு ஆசியா கண்டத்தில் பல நகரங்களை புரட்டிப் போட்டு 2,80,000 மக்களை காவு கண்டது சுனாமி ஆகும்.
3) 2005 ஆண்டு அரேபியக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாக்கத்தால் மும்பை நகரம் ஸ்தம்பித்து வெள்ளத்தில் 1094 பேர்கள் உயிரிழின்தனர்.
4) ஜப்பான் நாட்டில் 2011 மார்ச் மாதத்தில் புகிஷிமா தீவு நகரத்தில் ஏற்பட்ட பூகம்பும், பெரு வெள்ளமும் 15,893 உயிர்களை பலி வாங்கியது.
5) பூனா நகரில் பைரோபா நல்லா, வகதி நல்லா, வகோலி நல்லா, ராம் நதி, அம்பில் ஓடை, நந்துகி போன்ற  ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மறைக்கப் பட்டு 2010, 2013 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் சேதத்தினை உண்டாக்கியது.
2015 ஆண்டு நவம்பர் 13,14 தேதிகளில் ஆரம்பித்த அடை மழை டிசம்பர் 11 வரை வெளுத்து வாங்கி செம்பரம்பாக்கம், பூண்டி,புழல், போரூர் போன்ற ஏரிகள் நிரம்பி 1918 ஆண்டு108.8 செ.மீ பெய்த மழையின் அளவினை விட 119.73 செ.மீ தாண்டியது.
2015 ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மழை பெய்த பொது 30, 000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றாலும், நீர் வரத்து அதிகமானதாக இருந்ததால் ஒரு லட்சம் கன அடியினைத் தாண்டியிருக்கும் எனக் கூறப் படுகிறது. அப்படி திறந்து விடப் பட்ட நீர் அடையார், பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு நிறைந்து தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, நீலாங்கரை, பெரும்பாக்கம், தாம்பரம்,பல்லாவரம், வளசரம் பாக்கம், விருகம் பாக்கம், போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விட்டததினால் மாதவரம், அம்பத்தூர், ஆவடி, முகப்பையூர், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, நேத்தாஜி நகர் போன்றவை பாதிக்கப் பட்டு மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தனர். ஏழை, பணக்காரன், குடிசையில் வாழ்பவன், கோபுரத்தில் குடியிருக்கும் கோமான் போன்றோர் தண்ணீரில் தத்தளித்தது ஒரு பிடி சோற்றுக்காகவும் , ஒரு மடக்கு தண்ணீருக்காகவும் ஏங்கும் பரிதாப நிலை கண்டு நெஞ்சை உருக்கியது. பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்களும், பத்திரப் படுத்திய பத்திரங்களும், பகட்டான உடைகளும் களி மண்ணோட, மண்ணானது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் 172 கிலோ மீட்டர் சுற்றலளவுள்ள ஜார்ஜ் டவுண், ராயபுரம், வண்ணாரபேட்டை போன்ற பழைய சென்னை நகரத்தில் வெள்ள நீர் வடிய  ஆங்கிலேய காலத்தில் கட்டப் பட்ட கால்வாய்கள் உள்ளன. ஆனால் 254 கிலோ மீட்டர் சதுர பரப்பிலுள்ள தென் சென்னையில் அபரிமிதமான மழை நீர் ஓடி நதிக் கரைகளில் கலக்கும் திட்டம் எதுவுமில்லாததால் சேதம் அதிகமானது. தற்போது உள்ள நிலையில் சென்னை நகரம் 3 செ. மீ. மழைத் தண்ணீரைத் தான் தாங்கும் சக்தி கொண்டது. நெதர் லாந்து, ஐரோப்பிய நாடுகள் இணைந்து  ரூ 1000/ கோடி உலக வங்கிக் கடனுடன் அடியார், கூவம் நதிகளை சீரமித்து 6.8 செ.மீ. மழையினை வடிகாலுக்குக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளது. ஆனால் கோசல் தலையார், கோவளம் நீர்நிலை ஆகியவைகளில் மழைநீர் வடிய திட்டம் தீட்டப் பட்டும் எந்த நிறுவனமும் அமல் படுத்த முன்வரவில்லை.
ஒரு மாத அடை மழையின் தாக்கம் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் மாவட்டம் கடல் பகுதியானதால் வட கிழக்கு பருவமழை பெய்யும் போது எப்போதுமே பாதிப்பதினை சந்திக்கும் மாவட்டமாகும். சுனாமி காலத்தில் பல் வேறு துன்பங்களை சந்தித்தது இந்த மாவட்டம். அத்துடன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் பக்கத்து பயிர் நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையில் அதிகமாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக கருதப் படுவது பின் வருமாறு:
1) வழக்கம் போல வட கிழக்கு பருவ மழை பெய்யாமல், இந்தத் தடவை வானம் பொத்துக் கொண்டு கொட்டியது போன்ற கன மழை 'எல் நினோ' காற்று சுழற்சியால்  பெய்தது.
2) சென்னையில் ரோடு, தண்ணீர், மின்சாரம், கட்டமைப்புக்கு பஞ்சமில்லை என்று வெளி முதலீட்டார்களை இழுக்க அபாயகரமான கட்டமைப்புகளை சென்னை புறநகரில் ஏற்படுத்தியது.
3) அதனால் நீர் நிலைகள், குழாங்கள், ஏரிகள்,பெரும்பாக்கம், பள்ளிக் கரனை போன்ற சதுப்பு நிலங்களில் வானளாவிய கட்டிடங்கள் எழுப்பியது சிறிய மழைக்குக் கூட வடி வாய்க்கால் அமைக்காமல் இருந்ததால் வெள்ள சேதம் அதிகமானதாக சுற்றுப் புற சூழல் கட்டமைப்பு மைய டைரக்டர் சுனிதா நாராயணன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் 1980 இல் 600 நீர் நிலைகள் 1130ஹெக்டார் ஏக்கர் நிலம் சென்னையினை சுற்றி இருந்தது. அது 2000 ஆம் ஆண்டு 645 ஹெக்டார் நிலமாக மாறியது.
பள்ளிக் கரனை, போரூர், நந்தம் பாக்கம், மணப்பாக்கம், முகைப்பையூர் ஏரி போன்ற பல கட்டமைப்பு வரைவு திட்டங்கள் நீர் நிலைகளை மறைத்து விட்டது. அதில் சில அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் தங்கள் பலத்தினை உபயோகித்து பக்கத்து நிலையங்களைக் கூட வளைத்துப் போட்ட சம்பவங்களும் உண்டு என்பதிற்கு ஒரு உதாரணத்தினை உங்களுக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்.
மணப்பாக்கத்தில் உயர் காவல் அதிகாரிகள் இல்லத்திற்கு கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்தி நிலங்கள் கைப்பற்றப் பட்டு போரூர் ஆறு ஓரத்தில் உள்ள தனியார் நிலத்திலும் கை வைக்க ஆரம்பமானதால் அதனை தடுக்க வந்த நில உரிமையாளர் தள்ளி விடப் பட்டு மரணமானதால் ஒரு உயர் காவல் அதிகாரி மீது அந்த நில சொந்தக் காரர் மகன் கொடுத்த புகாரில் விசாரணையே நடந்தது 2002 ஆம் ஆண்டு. ஆனால் அந்த மணப்பாக்கம் கிராமம் கூட வெள்ளத்தில் தத்தளித்தது. பலர் உடுத்திய துணியோடு படகில் வெளியேறிய காட்சியினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
சென்ற மழை 280 உயிர்களை பலி கொண்டது, 20.000/ கோடிக்கு மேல் சேதம் ஏற்படுத்தியது. வீடு இழந்த 1,64,000/ மக்கள் 460 முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.
பாதிப்பு உண்டான செய்திகளில் நெஞ்சை உருக்கும் சம்பவம் சில மட்டும் உங்கள் முன்பு வைக்கலாம் என நினைகின்றேன்:
1) வெள்ளம் வருகின்றதே என்று வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு கணவனும், மனைவியும், பெஞ்ச் மேல் ஏறி நின்றனர், ஆனால் வெள்ளம் அதன் மேலும் வந்ததால் ஒரு மேஜை அதன் மேல் போட்டு ஏறி நின்றனர். ஆனாலும் வெள்ளம் அவர்கள் முனங்காலுக்கு வந்ததால் மேலே உள்ள காற்றாடியினைப் பிடித்துக் கொண்டு நின்றனர். அந்தோ, மனைவி கைப்பிடி நழுவி விடுகிறது தண்ணீரில் விழுந்து மூழ்கிறாள், கணவன் கண் முன்னாள். வயதான அவர் மனம் எப்படி பதைத்திருக்கும் என்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
2) நந்தம்பாக்கத்தில் ராணுவ குடியிருப்பில் ஓய்வு பெற்ற ஒரு கர்னலும், அவர் மனைவியும் வெள்ளம் வருகின்றதே என்று கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறார்கள், அவர்களால் தப்ப முடியவில்லை. அதன் பின்பு மீட்புக் குழுவினர் கதவை உடைத்து உள்ளே செல்லும்போது இருவரும் இறைவனிடம் சேர்ந்தது கண்டு சோகமே உருவானது.
3) சென்னை புறநகர் பகுதியில் தாயும், மகனும் தரைப் பாலத்தினைக் கடக்கும் போது தண்ணீரின் வேகத்தில் தாய் கண் முன்னே மகன் இழுத்துச் செல்லப் படும் தொலைக் காட்சி பாழும் நெஞ்சை  உருக்கியது.
4) கோயிலம்பாக்கத்தில் பேங்க் ஊழியர், தனது உதவி தலைமை ஆசிரியையான மனைவியை டெல்லியில் நடக்கும்  ஒரு கருத்தரங்கிற்கு வழியனுப்ப, இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு வாடைகைக் காரில் விமான நிலையம் இரவில் செல்லும்போது, அங்கே சென்றதும் தான் தெரியும் அடை மழையால் விமான நிலையமே ஒரு சிறு குளமாக இருந்து, விமான சேவை ரத்து செய்யப் பட்டு, 1500 பயணிகள் அங்கேயே காத்திருந்தனர் என்று. பின்பு அவர்கள் வீடாவது  போய் சேரலாம் என்று கேளம்பாக்கம் வரும்போது அங்கே வெள்ளம் கடை புரண்டு ஓடியது. வாடகை கார் டிரைவர் தான் வண்டி ஓட்ட முடியாது என்று சொல்லி விட்டதால், பிள்ளைகள் இரவில் வீட்டில் தனியாக இருக்குமே, நடந்தாவது வீடு போய் சேருவோம் என்று பொடு நடையாய் வீடு திரும்பும்போது வெள்ளம் அவர்களை காவு கொண்டது. பிள்ளைகள் வீட்டில் பெற்றோரைக் காணாது தவியாய் தவித்தன. 5 நாட்கள் பிறகு தான் அவர்கள் உடல் மீட்கப் பட்டது என்று சொல்லும்போது 'பாச மலர்' பட ஞாபகம் வந்து உங்கள் நெஞ்சம் பதைக்க வில்லையா உங்களுக்கு?
5) மணப்பாக்கத்தில் அமைந்திருக்கும் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிட்சைப் பிரிவில் சேர்ந்து சிகிட்சை செய்ய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயிக்கு மேலாகும். எப்படியும் உற்றார், உறவினர் பிழைத்து விடுவார்வளே என்று கடனை, உடனை வாங்கி வைத்தியம் செய்த 18 நோயாளிகள் பிராண வாய்வு இல்லாமல் இறந்தது பரிதாபமில்லையா?
6) ஏழை மக்கள், நடுத்தர வகுப்பினர், சொகுசு பங்களாவில் வாழும் மக்கள் வித்தியாசமில்லாமல் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 30 விற்கவேண்டியது ரூ 150 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ 50க்கு விற்கப் படுவது ரூ 100 க்கும் விற்றாலும் கிடைக்காமல் அவதிப் பட்டக் கொடுமைமையிலும், கொடுமையில்லையா?
ஈர நெஞ்சங்கள்:
தமிழக மக்கள் படும் பாட்டினைக் கண்ட அனைத்து சமூகத்தினவரும் தங்களால் முடிந்த அளவு போட்டிப் போட்டுக் கொண்டு உதவ முன் வந்தது பாராட்டத் தக்கது. 'தானத்தில் சிறந்தது அன்ன தானம்' என்பார்கள். வெளி மாநில நல்ல உள்ளங்கள் கூட ஓடோடி வந்து சமைத்து மக்களுக்கு வழங்கினர். வெளி நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூட உதவி செய்யத் தவறியதில்லை. 'கவலைப் பட்டவரின் கண்ணீரைத் துடைப்பதும் ஒரு வணக்கம் தான் என்று இஸ்லாம் சொல்லுவது பொய்க்கவில்லை.
அல்குரான் 23:52 இல் 'நிச்சயமாக உங்கள் சமூதாயம் ஒரே சமூதாயம் தான்' என்றும் கூறுகிறது. அனைத்து ‘சமூகமும் ஒற்றுமை’ என்று  இந்த நிவாரண வேலையில் எடுத்துக் காட்டியது.
நிவாரண உதவியினைத் தடுக்க சில சம்பவம் நடந்தாலும் அதையெல்லாம் பெரிதாகக் கவலை கொள்ளாது 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கத்துடன்  உதவி செய்தது போற்றத் தக்கது.



நிவாரணப் பணியில் சிறப்பு வாய்ந்தவை:

1)  தொழிலதிபர் யூனுஸ் தன் சகாக்களுடன் நிவாரணப் பணியில் ஈடுபட்டபோது, அவருக்கு ஒரு தகவல் கிடைக்கின்றது. என்னவென்றால் ஒரு நிறைமாதக் கற்பிணிப் பெண் மொட்டை மாடியில் காப்பாற்ற கத்திக் கொண்டு இருக்கிறாள் என்று. உடனே ஒரு படகு  ஏற்பாடு செய்து வெள்ளத்தில் அந்த வீட்டிற்க் சென்று அந்தப் பெண்மணியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றார். அந்தப் பெண்ணுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. அந்தக் குழந்தைக்கு தன்னைக் காப்பாற்றிய தொழிலதிபர் யூனுஸ் பெயரையே வைக்கின்றார் அதனுடைய தாய், அவர் வேற்று மதத்தினரானாலும். உடனே அந்த அதிபரும் அந்தக் குழந்தை படிப்புச் செலவு முழுவதும் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.
2)  பேரிடர் மீட்ப்புக் குழுவினர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஒரு மொட்டை மாடியில் ஒரு பெண் பிரசவ வலியால் அவதிப் படுவது அறிந்து அந்தப் பெண்ணை மிகவும் சிரமப் பட்டு மீட்டு போரூர் மருத்துவ மனையில் மீட்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இந்திய ஏர்-மார்சலே அங்கு சென்று பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து சொன்னதாக தகவல் கூறுகிறது.
3)  பெரு வெள்ளத்தால் வீட்டை விட்டு சென்ற ஒரு குடும்பத்தினர் வெள்ளம் சிறிது வடிந்ததும் வீடு திரும்பி நனைந்த பொருட்க்களை வெளியே தூக்கிப் போடும் பொது ஒரு பழைய துணிப் பையையும் தூக்கி வெளியே எறிந்துள்ளார்கள். அப்போது கழிவுகளை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சமூக சேவை அமைப்பினர் அந்தப் பையினை மீட்கும் போது அதனில் ஒரு டிபன் கேரியர் இருந்துள்ளது. அதனை திறந்து பார்க்கும் போது 10 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும் இருந்ததாம். அருகில் விசாரிக்கும் போது பையினை போட்ட வீட்டுக் காரர்கள் சரியாக அடையாளம் காட்டி தனது பிள்ளை படிப்பிற்காக சேர்த்து வைத்திருந்ததினை தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டதாக சொல்லி கண்ணீர் மல்க நன்றி செல்லி பெற்றுக் கொண்டார்களாம்.
4)  திருவெற்றியூர் நகரைச் சார்ந்த இம்ரான் என்ற பிளஸ் 2 படிக்கும் மாணவன் பள்ளி விடுமுறையானதால் காய்ச்சலோடு இருந்துள்ளான். கார்கில் நகரில் மக்கள் படும் துயரம் கேட்டு மனசு கேட்காமல் தாயாரிடமும் சொல்லாமல் மழையோடு மழையாக நிவாரணக் குழுவினருடன் சென்று முனங்காள் அளவு தண்ணீரில் சென்று உதவி, இரவில் வீடு வந்தவன் ஜன்னி கண்டு அவதிப் பட்டுள்ளான். உடனே அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அவனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பயனில்லாது இறந்தது கண்டு திருவெற்றியூர் நகரமே சோகத்தில் மூழ்கியது.
தமிழ் நாட்டு மக்கள் சிலர் சினிமா கதாநாயகர்களை தங்கள் ஹீரோக்களாக கருதுவார்கள். 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு தமிழகம், புதுச்சேரி கடலோர மக்கள் சொல்லவொன்னா துன்பம் அனுபவித்தபோது வடநாட்டில் மிகப் பிரபலமான நடிகர் விவேக் ஓபராய் தன் காதலி தடுத்தும் கேட்காது இங்கே ஓடி வந்து 3 மாதங்கள் தங்கி இருந்து வீடுகள் கட்டித் தந்தார்.  அனைத்து பத்திரிக்கை உலகமே பாராட்டியது.
சமீபத்தில் பெய்த மழையில் இளம் நடிகர்கள் பல வெள்ள  நிவாரணம் செய்தும், நிதியாக ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் வரை கொடுத்தார்கள் முன்னணி நடிகர் உள்பட. ஆனால் உடலில் ரத்த கேன்சருடன் போராடி, அனாதை இல்லம் நடத்தும், டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ரூபாய் ஒரு கோடியும், வடநாட்டு நடிகர் அக்ஷை குமார் ரூபாய் ஒரு கோடியும் வெள்ள நிவாரணம் கொடுத்து அசத்தியதும், இங்கே உள்ள முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், அந்த அளவிற்கு தாராளமாக அள்ளிக் கொடுக்க மனம் வராததும், விவேக் ஓபராய் மாதரி முன்னணி நடிகர்கள் வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் சந்திக்காது, வெளி நாட்டில் படப் பிடிப்பிற்காக இடம் தேடுவதும் வெட்கமாக தெரிய வில்லையா உங்களுக்கு?
பெரு வெள்ளம் ஒரு மன நிறைவினைத் தந்துள்ளது. என்னவென்றால் எங்கே மழை பெய்யாது நிலத்தடி தண்ணீர் முழுவதும் உப்பாகி விடுமோ என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கும்போது வர்ண பகவானாக இறைவன் வந்து மழையினைப் பொழிந்து தள்ளியது மூலம் ஏற்கனவே இருந்த உப்பு நிலத்தடி தண்ணீரும் சுவை மிக்க தண்ணீர் ஆனது.
'விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியணுத்து உன்னின்று ஊற்றும் பசி' வள்ளுவர்.
கடல் நீர் சூழ்ந்து உலகமாயினும் மழை பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை தாளாது என்றும் பொருள். ஆகவே தான் அண்டை மாநிலத்தவர் விவசாயத்திற்கும், குடிப்பதிற்கும் தமிழகத்திற்குக் கொடுக்காமல் வஞ்சகம் செய்வதினைப் பார்த்த இறைவன் அடை மழை வெள்ளம் தந்தான்.

குறை என்று சொல்லும் போது ஒன்றே ஒன்றை பதிவு சொல்லாமல் இருக்க முடியவில்லை:
பெரு வெள்ளத்தினைத் தடுத்து நிறுத்தி கல்லணை கட்டிய கரிகால் சோழனையும், முல்லைப் பெரியார் அணையினை கட்டிய பென்னி குகையும் பின் பற்றாது. வெள்ள நீர் அநியாயமாக கடலில் கலந்தது மனத்தினை வருடியது. வடத் தமிழகத்தில் பாலார் என்ற மணல் நதியும், தென் தமிழகத்தில் வைகையும் இந்தத் தடவை கரைப் புரண்டு ஓடியது. அந்த வெள்ளத்தினைக் கூட இடை, இடையே தடுத்து செக் டேம்ஸ் கட்டாது விட்டது காலத்தின் கொடுமையா அல்லது மனிதத் தவறா, மழை நீர் வடிகால் அமைக்காது வீதிகள் தோறும் மழை நீர் கண்ணீர் மல்கிய சோக கதைகள் சொன்னது யார் தவறு என்று கருத்து சொல்லும் கடமையினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!.