(டாக்டர்
ஏ.பீ.முகமது அலி,
ஐ.பீ.எஸ்.(ஓ)
சுதந்திர
இந்திய வானில் கல்வி மேன்பட வால் நட்சத்திரமாக திகழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தின் 11.11.1888 ம் ஆண்டின் பிறந்த
தினத்தினை தேசிய கல்வி தினமாக இன்று கொண்டாடுகிறோம். ஆஜாத் அவர்கள் பத்திரிக்கையாளராகி, எழுத்தாளராக, மார்க்க அறிஞராக, சுதந்திர போராட்ட வீரராக, தேச பக்தராக, புரட்சியாளராக பண் முகம் கொண்ட அறிஞராக திகழ்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
பிரிடிஷ்
சாம்ராஜ்யத்தின் வைசிராய் லார்ட் கர்ஷன் முதன் முதலில் முஸ்லிம்களையும், இந்துக்களையும் பிரித்தாளும் கொள்கையின் மூலம் வங்கத்தினை பிரிக்க முடிவு செய்தார். அதனை எதிர்த்த புரட்சியாளர்கள் சுந்தர்
சக்கரவர்த்தி, அரபின்டோ ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று அவர்களுடன் தானும் ஒரு புரட்சியாளர் ஆனார். தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக முஸ்லிகளிடையே கொண்டு செல்ல, 'அல் ஹிலால்' என்ற உருது பத்திரிக்கையினை 1912ல் கல்கட்டாவில் ஆரம்பித்தார்.
என்னே ஆச்சரியம் அந்தப் பத்திரிக்கை ஒரு வாரத்தில் 20,000 பிரதிகளை விற்று வரலாறு படைத்தது.அதனைக் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு அவரது பத்திரிக்கையினை முடக்கியதோடு மட்டுமல்லாது, அவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்து 1919 வரை ஜெயிலில் வைத்து 1920ல் விடுதலை செய்தது.
சி.ஆர்.தாஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றினார். இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் அரசு கூட்டிய முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள மகாத்மா காந்தி அவர்களை சம்மதிக்க
வைத்தனர். காங்கிரசுக்குள் உட்பூசல் இன்றைய தமிழக காங்கிரசில் இருப்பதுபோல இருந்ததால் சி.ஆர்.தாஸ்,
மோதிலால் நேரு, ஹக்கீம் அஜ்மல் கான் போன்றோர் பிரிந்து, 'சுவராஜ் பார்ட்டி' என்று தனிக் கட்சியினை ஆரம்பித்தனர்.
பிரிவை
தடுக்க அனைவரும் ஒத்துக்கொண்ட மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தினை 35 வயதில் ‘ராஜ்கார்கில்’ நடந்த காங்கிரஸ் மஹாசபைக்கு தலைமை ஏற்று நடத்தச் சொன்னார்கள். இரு பிரிவினையும் ஒன்று சேர்த்த பெருமை ஆஜாத்தினை சாரும் .
பிரிட்டிஷ்
அரசு மாநில சுயாட்சி கொடுக்கும் திட்டத்தினை 1935 சட்டம்
மூலம் அறிவித்தது. அந்த சட்டம் ஆளுநர்களுக்கு அதிகாரம் கொடுத்துவிடும் என்று காந்தி உள்பட தேர்தலில் பங்கு பெற மறுத்தனர். ஆனால் ஆஜாத்து, 'தேர்தலில் பங்கு பெறுவதில் ஒரு பலன் உள்ளது, அது என்னவெனில் மக்களிடம் தங்களுடைய பிரச்சாரம் மூலம் காங்கிரசின் கொள்கையினை எடுத்துச் சொல்லலாமே' என்று எடுத்துச் சொல்லி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்தார்.
3.9.1939 ல் காந்தி
கேட்டுக் கொண்டதிற்கிணங்க காங்கிரசின் தலைவரானார். ஆனாலும் பல்வேறு கொள்கை முடிவுகளில் காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரசின் தலைவராக 1946 வரை நீண்ட காலம் பணியாற்றியது ஆஜாத் ஒருவரே. சுபாஷ் சந்திரா போஸ் கூட காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்குள் ராஜினாமா செய்தது இங்கு குறிப்பிடவேண்டும்.
சுதந்திரம்
அடைந்த பின்பு 1947ல் முதலாவது கல்வி
அமைச்சர் ஆனார். 1947 ல் நாடு இரண்டாக
பிரிந்த போது, இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட பின்பும் ஒரு முஸ்லிமுக்கு கல்வி அமைச்சர் கிடைக்கப் பெற்று இருக்கின்றது என்றால் அவர் எவ்வாறு திறமை வாய்ந்தவர், அப்பழுக்கற்றவர், அனைவரும் ஒப்புக் கொண்டவர் என்று ஆச்சரியமாக இல்லையா உங்களுக்கு. அதுவும் 1958 ல் தன் கடைசி
மூச்சு வரையும் கல்வி அமைச்சராக இருந்தது எல்லோருக்கும் பெருமைதானே!
அவருடைய
பிறந்த நாளை ஏன் தேசிய கல்வி நாளாக அறிவித்திருக்கின்றார்கள் என்று சிறிது பார்க்கலாம்:
1) இந்திய
மாணவர் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வியும், கற்ற கல்வி வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகவும், நன்னடத்தினை போதிப்பதாகவும், இருக்கவேண்டுமென்று பல்வேறு சீர் திருத்தங்களைக் கொண்டு
வந்தார்..
2) கல்வி
போதிக்கும் ஆசிரியர்களும் தங்களை நவீன கல்வி போதிக்கும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்.
3) எல்லா
சிறார்களுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும், பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தொழில் கவிக்கு முன்னுரிமை அவசியம் என்று நினைத்தார்.
4) நவீன
விஞ்ஞான கல்விக்கு முன்னோடியானார்.
5) ஐ.ஐ.டி யினை,
டெல்லியில் கட்டிடக் கலை கல்லூரியினை நிறுவினார்.
6) உயர்
கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் யு.ஜி.சி
என்ற நிறுவனத்தினை அமைத்தார்.
7) படிப்பு
மட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரமும் மங்கி விடக்கூடாது என்று சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி, இலக்கிய சாகித்திய அகாடமி ஆகியவற்றினை நிறுவினார்.
அவர்
தேசிய கல்விக்கு அரும்பாடு பட்டார் என்பதற்காக அஜாதிற்கு 1992ம் ஆண்டு இந்திய
தேசத்தின் உயர்ந்த விருதான, 'பாரத் ரத்னா' 1992ம் ஆண்டு வழங்கப்
பட்டது. ஆகவே தான் ஆஜாத் அவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு நவம்பர் மாதமும் 11ந் தேதி, 'தேசிய
கல்வி தினமாக' கடைப் பிடிக்கப் படுகிறது.
ஆனால்
ஏன் இன்னும் முஸ்லிம்கள் கல்வி,கேள்வியில், வேலைவாய்ப்பில் பின்தங்கி இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தோன வில்லையா? சமுதாய தலைவர்கள் அரசியலில் முன்னிலை நிறுத்தும் அளவிற்கு, சமுதாய கல்வி,கேள்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வழிவகை செய்யவில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றும். ஆகவே சமுதாய மக்கள் அடுத்தவர் ஆட்சியினை பிடிக்க ஏணியாக இல்லாமல், தனது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏணிப் படியாக இருக்கவேண்டும் என்று கூறுவது சரியா!