(டாக்டர்
ஏ. பீ. முகமது அலி, பி.எச், டி. ஐ.பீ.எஸ்(ஓ )
அமெரிக்காவின் மின்னாபோலிஸ் என்ற இடத்தில்
25.5.2020 அன்று ஒரு கடையில் கறுப்பின வாலிபர் 20 டாலர் நோட்டினை கொடுத்து பொருள் வாங்கும்போது
கடைக்காரர் நோட்டின் தரம் குறித்து சந்தேகம் வர அவசர காவல் துறையினருக்கு(911) தகவல்
கொடுத்துள்ளார். காவல் ரோந்துப் படையினர் விரைந்து வந்து ஜார்ஜ் பிளாய்டு என்ற வாலிபரை பிடித்து புறங்கையினில் விலங்கு மாட்டி காவல் வாகனத்தில்
ஏற்றுவதற்கு முன்பு கீழே குப்பறத்தள்ளி அவரின் கழுத்தில் முனங்காலை வைத்து மூச்சு விடமுடியாது
அழுத்த அவர் பரிதாபமாக இறந்தார். அந்தக் காட்சியினை சாலையில் நின்ற அனைவரும் கண்டு
வெகுண்டெழுந்தனர். அதன் விளைவு உலகில் பல இடங்களில் அதுவும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளில் போராட்டங்கள்
எழுந்ததினை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு 'Black
lives matter' என்று பெயர் இடப்பட்டுள்ளது. அது மக்கள் இன வெறிக்கு எதிரான அஹிம்சா வழியில் ஒத்துழையாமை
இயக்கம் என்று பொருளாகும். (Non violent civil disobedience ) அது எந்த அளவிற்கு போய்விட்டது
என்றால், 'No more corps' ' abolish the Police' எங்களுக்கு போலீசே தேவையில்லை என்று
சொல்லும் அளவிற்கு சென்று விட்டது.
இதேபோன்ற
சம்பவம் 2014ல் கிளீவேளாண்ட் என்ற இடத்தில் பொம்மை துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்த
14 வயது கறுப்பின சிறுவன் ட்டமிட் ரைஸ் என்ற சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜார்ஜியா மாகாணத்தில் பிப்ரவரி 23 ந்தேதியில் அஹமத் அர்பே என்ற கறுப்பின இளைஞரும்,
மே 13 ந்தேதி, கறுப்பின பெண் ப்ரகோன டயபே கொல்லப்
பட்டது மற்றும் அட்லாண்டா மாகாணத்தில் ரெசார்ட்
புரூக் என்ற கறுப்பினத்தவர் தனது மகனின் பிறந்த நாள் அன்று 14 ந் தேதி கொல்லப் பட்டார்.
ஒரு தொடர் கதையாக இருந்தது.
அமெரிக்காவில் ஐரோப்பிய
காலனி ஆதிக்கம் 1492 ம் ஆண்டுகளிலிருந்து ஆரம்பமானது. அதற்கு முன்னர் அங்குள்ள அமரிக்கர்கள்(Native
Americans or Indigenous Americans) 15000 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
என்று கூறப்படுகிறது. அவர்கள் 570 பழங்குடியினர்
என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை செவ்விந்தியர் என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பிய
காலனி ஆதிக்கத்திற்கு பின்பு அவர்கள் மலைப் பகுதிகளுக்கு விரட்டப் பட்டனர். தற்போது
அங்குள்ள மக்கள் தொகையில் 63 சதவீதம் வெள்ளை இனத்தவரும், 13 சதவீதம் கறுப்பினத்தவரும்,
17 சதவீதம் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களாக உள்ளனர்.
அது சரி, அமெரிக்காவில்
இருக்கும் கறுப்பினத்தவர் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஐரோப்பியர் மேற்கு
மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் தங்கள்
காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளிலிருந்து அமரிக்காவிற்கு பிணைக் கைதிகளாக
கொண்டு வந்து அடிமைப் படுத்த மக்களாவர். அப்படி பிடித்து வரப்பட்ட கறுப்பின மக்களைக்
கொண்டு அமெரிக்காவில், ரோடுகள், பாலங்கள் அணைக்கட்டுகள், விவசாய நிலங்கள், தோட்டத்
தொழிலாளர்களாக ஈடுபடுத்தப் பட்டனர். எந்த கறுப்பின மக்களை இன்று வெறுக்கின்றார்களோ
அவர்களால் தான் இன்று அமெரிக்கா வளம் மிக்க நாடாக திகழ்கின்றது என்றால் ஆச்சரியமில்லை
எனலாம். சுமார் 1.07 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப் பட்டனர். அவர்கள்
விடுதலைக்கு 1.1.1863 ல் வித்திட்டவர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் என்று சொல்லலாம்.
அதன் பின்பு அவர்களுக்கு Civil Rights Act, 1866ல் கறுப்பர்களுக்கு முழு பிரஜை உரிமையும்,
1870 ல் அவர்களுக்கு ஓட்டு போடும் உரிமையும் வழங்கப் பட்டது.
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு
கொடுக்கப் பட்டாலும் அவர்களை வெள்ளை அமெரிக்கர்கள் தீண்டத்தகாதவர்போலத்தான் நடத்தினர்.
ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவில்லாதவர்களாகவும், கடைநிலை ஊழியர் வேலைகளை
செய்து கொணடும், குற்ற செயல்களில் ஈடுபட்டும் இருந்தனர். ஆகவே அமரிக்க காவல் துறையினர்
கறுப்பின மக்களை பிரித்து நிறவெறி சட்டம் இருப்பதுபோல நடத்த ஆரம்பித்ததின் விளைவு தான்
இன்று காணும் ஆர்பாட்டமாகும். அதேபோன்று தான் ஆஸ்திராலியாவில் பழங்குடியினரை வெள்ளை
நிறத்தினவரினில் இருந்தும் மாறுபட்டு நடத்த ஆரம்பித்தனர். ஆகவே தான் அங்கும் ஆர்ப்பாட்டம்
ஆரம்பித்தது எனலாம்.
ஆபிரிக்க-அமெரிக்கா
மக்களின் உரிமைகளுக்காக போராடிய நோபல் பரிசு வென்ற மார்ட்டின் லூதர் கிங் 1968 ல் நிற
வெறியர்களால் கொல்லப் பட்டார். அதேபோன்றே கறுப்பின மக்களின் உரிமைக்குப் போராடி ஜெஸ்ஸி
ஜாக்சன் ஜனாதிபதியாக 1983-1984லிலும்
1987-1988 லிலும் முயன்று தோல்வியுற்றார். ஆனால் பாரக் ஒபாமா தனது முயற்சியால்
2008 ம் ஆண்டு ஜனாதிபதியாகி இராண்டாம் முறையும் வெற்றி கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!
எப்படி இந்தியாவில்
தாழ்த்தப் பட்டவர்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை என்று அரசியல் சட்ட அமைய காரணமான
டாக்டர் அம்பேத்கார் பௌத்த மதத்திற்கு மாறினாரோ
அதேபோன்று கறுப்பின மக்களும் உரிமை கிடைக்கவில்லை என்று கருதி இஸ்லாத்தில் தான் அனைத்து
மக்களுக்கும் இன வேறுபாடு இல்லாமல் கிடைக்கின்றது என்று முதன் முதலில், 'Nation of
Islam' என்ற அமைப்பினை யாகூப் என்பர் ஆரம்பித்து, வாளாஸ் பார்ட் முகமது ஒருங்கிணைத்து,
எலிஜா முஹமது விரிவு படுத்தி கறுப்பின மக்கள் இஸ்லாத்தின் பால் திரும்ப வழி வகை செய்தார்.
அமேரிக்காவில் முதன்
முதலில் 1838 ம் ஆண்டு பாஸ்டன் நகரில் காவல் துறை ஆரம்பிக்கப் பட்டது, அதன் பிறகு
1845ல் நியூயார்க் நகரில் ஆரம்பித்து பல மாநிலத்திலும் அமைக்கப் பட்டது. போலீசின் அத்து
மீறல்களை சட்டத்திற்குள் கொண்டு வர அமெரிக்க மக்கள் சபை 42 சட்டம், 14141 விதிகளின்
படி ஜஸ்டிஸ் துறை அவர்கள் மீது வழக்குப் பதிய உரிமை கொடுத்தது.
அமெரிக்காவில் மக்கள்
போராட்டம் எந்தளவிற்கு போய்விட்டடது என்றால், மேரிலாண்டில் உள்ள பால்டிமோர் நகரில்
உள்ள அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜெனெரல் ஜார்ஜ் வாஷிங்டன் சிலையில் சாயம் பூசுவதும்,
வாசிங்டனிலுள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் புகும் அளவிற்கு வந்து விட்டதும் மக்கள் எழுச்சியினை
இன வேறுபாடு இல்லா அமெரிக்கர்களின் கோபத்தினை காட்டுகின்றது. இங்கிலாந்து நாட்டிலும்,
இரண்டாம் உலகப் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் சிலையையும் கலங்கப் படுத்தி விட்டனர்.
காரணம் அவர்தான் உலகப் போருக்குப் பின்பு கறுப்பின
மக்களை அடிமைகளாக உலகமெங்கும் பரவ காரணம் என்று.
ஆர்ப்பாட்டங்கள் பலனாக
பல மாகாணங்கள் போலீஸ் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தன.
முதன் முதலில் டல்லாஸ்
மாகாணம் கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுத்தன:
1) துப்பாக்கி சூடு
நடத்துவதற்கு முன்பு எச்சரிக்கை விடுவது
2) மாதாந்திர வழக்குகள்
விபரம்
3) உடையில் பொருத்தப்
பட்டிருக்கும் கேமராவில் பதிவான தகவல் வெளியிடுதல்,
4) காவலரின் நடவடிக்கைகளை
மாநில காவல் துறையில் உள்ள மேலாளர் பரிசீலனை செய்வது.
5) காவலரின் அத்து
மீறலுக்கு எந்த விதத்தில் அவர்களை நடவடிக்கையிலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம்.
அமெரிக்கரில் சுப்ரீமாசிஸ்ட்
என்ற வெள்ளை இன மக்களிடையே ஒரு குழுவினர் உள்ளனர். அவர்கள் தாங்கள் தான் இனத்தில் முதன்மையானவர்கள்
என்ற தவறான எண்ணம் உள்ளது. அந்த எண்ணத்தில் உள்ள சிலர் காவல் துறையில் சேர்ந்திருப்பதால்
கறுப்பினத்தவரை கீழ்த்தனமாக நடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலான
அமெரிக்கர்கள் அதனை ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரிக்காததினால் தான் பாரக் ஒபாமா இரண்டு
தடவை ஜனாதிபதியானார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த பெரும்பாலான அமெரிக்கர்
எந்தவிதமான போலீஸ் சீர்திருத்தங்களை விரும்புகின்றார்கள் என்பதினை கீழே காணலாம்:
1) குற்றவியல் நிபுணர்
டேவிட் கென்னெடி, 'பொதுவாக போலீசுக்கும், கறுப்பின மக்களுக்கும் ஒரு விதமான நம்பிக்கையின்மை
நிலவுகிறது. அவர்களிடையே நம்பிக்கையூட்டும் செயலில் காவல் துறையினர் ஈடுபடவேண்டும்.
காவல் துறையினர் இன்னும் கறுப்பினத்தினவரை அடிமைகள் போல நடத்துவதினை விட்டு விட வேண்டும்.'
2) போலீஸ் பயிற்சியில்
கறுப்பின மக்களை மனிதர்களாகவும், சமஉரிமை உள்ளவர்களாகவும் மதிக்க வேண்டும் என்று போதிக்க
வேண்டும். படவேண்டும்.
3) போலீஸ் தங்களுடைய
பலபிரவேசம் வன்முறை குறையாத போதுதான் உபயோகிக்கவேண்டும் என்று பயிற்சி கொடுக்கப் படவேண்டும்.
4) காவல் துறையினர்
பலபிரவேசம் செய்யும் போது வெளிப்பட தன்மை வேண்டும்.
5) காவல் துறையினர்
சமுதாயத்தில் அமைதியை சீர் குழைக்கும் சம்பவங்களிலும், குற்றங்கள் தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
6) காவலருக்கு போதிய
ஓய்வு, கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
7) காவலர் செயலுக்கு
பொறுப்பு ஏற்கச் செய்யும் முறை வேண்டும்.
8) காவல் துறையினர்
செயல் மற்றும் அவர்கள் குற்றங்கள் தடுப்பதும், கண்டு பிடிப்பதிலும் எவ்வாறு திறமையுடன்
செயல் படுகின்றனர் என்று ஆராய படவேண்டும்.
9) காவல் துறைக்கு
சேரும் ஒவ்வொருவரும் ஒரு பட்டதாரியாக இருக்கவேண்டும்.
10) போலீஸ் பயிற்சியின்
போது மின்னாபோலிஸில் ஜார்ஜ் பிளாய்டு கழுத்து நெரித்து சாகடித்த, 'choke hold' என்ற
பயிற்சியினை கைவிடுவது.
இந்திய காவல் துறை
ஆங்கிலேய வழி முறைகளை பின்பற்றி கொள்கையினை வகுக்கப் பட்டுள்ளது எனலாம். ஆங்கிலேய உள்துறை
அமைச்சராக இருந்த சர் ராபர்ட் பீல் என்பவர் காவல் துறையினர் எவ்வாறு செயல் படவேண்டும்
என்று 1822 ல் வகுத்துள்ளார். அவைகளையே கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில்
கடைப் பிடித்து வருகின்றன. அதில் காவல் துறையினர் சீருடையில் இருக்கின்ற இந்த நாட்டின்
பிரஜைகள். அவர்களின் செயல் பாடுகள் வெளிப்படையாகவும், சட்டத்திற்கு உட்பட்டும், அவர்கள் பொறுப்பினை ஏற்ககூடியாதாகவும்
இருக்க வேண்டும் என்று ஒன்பது கொள்கையினை வகுத்தார்.
அவை பின் வருமாறு:
1)
காவல் துறையினர் குற்றங்களை தடுப்பதும்,
அமைதிக்கு பங்கம் விளைவிக்காது பார்த்துக் கொள்ளவும் செய்ய வேண்டும்.
2)
காவல் துறையினர் செயலை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்.
3)
சட்டத்தினை அமல் நடத்துவதினை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக
இருக்க வேண்டும்
4)
போலீஸ் பணியாற்றும் போது குறைந்த பலப்பிரவேசம் செய்ய வேண்டும்.
5)
இன, மொழி, மத பாகுபாடு இல்லாது செயலாற்ற வேண்டும்.
6)
பலபிரவேசம் எச்சரிக்கைகள் தோல்வி அடையும் போது உபயோகிக்க
வேண்டும்
7)
காவல் துறையினருக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து
சம்பளமும், வசதியும் செய்து தரப் படுகின்றது என்று எடுத்திறுரைக்க வேண்டும்
8)
காவலர் நீதிமன்ற அதிகாரங்களை கையில் எடுக்காது நீதியுடன்
நடந்து கொள்ள வேண்டும்.
9)
போலீசின் செயல் பாடுகளை ஆய்வு நடத்தும் போது அவர்கள் எவ்வாறு குற்றங்களை தடுத்தார்கள், மக்களிடையே
அமைதியின்மையினை தடுத்து அமைதி ஏற்படுத்தினார்கள் என்று ஆராய வேண்டும்.
இந்தியாவில்
போலீஸ் ஆங்கிலேயர் வகுத்துத் தந்த 'Police Act 1861' படி நடைமுறைப் படுத்தப் படுகிறது.
ஒவ்வொரு மாநிலமும் காவல் துறையினர் செயல் பட போலீஸ் மேனுவல் உள்ளது. National
Police Commission 1977 ல் அமைக்கப் பட்டு அதன் பரிந்துரைகளை 1979, 1981 ஆண்டுகளில்
8 அறிக்கையாக வழங்கப் பட்டது. இந்த நேரத்தில்
தான் இந்தியாவெங்கும் காவலர் வேலை நிறுத்தம் 1979 ம் ஆண்டு ஆரம்பித்தது. முக்கியமாக
காவலருக்கு .தொழிற்சங்கம் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. அவர்களுடைய கோரிக்கைகளை
கமிஷனும் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
அவர்கள் கொடுத்த அறிக்கைகள் போலீஸ் அமைப்பு, அதன் செயல், பொறுப்பேற்றுதல், மக்களுடன் அவர்கள்
தொடர்பு, காவல் துறையில் அரசியல் தலையீடு, குறைந்த பலபிரவேசம், காவலர் தவறான செயல்
பாடு, அவர்களின் செயல்பாட்டுக்கு தகுந்த அரையாண்டு மற்றும் ஆண்டு அறிக்கை ஆகியவை அடங்கும். இது தவிர முன்னாள்
இந்திய Attorney General சோலி சோராபிஜி தலைமையில் 2005 ல் ஒரு குழு அமைக்கப் பட்டு Model Police
Act 2006 அமலுக்கு வந்தது.
இந்தியாவில் காவல் துறையினருக்கு .303 ரைபிள்
கொடுக்கப் பட்டடது. அது மனித உடம்பை துளைத்துக் கொண்டு வெளியேறும். அதன் பின்னர் காவலர்
குறைந்த பால்பிரவேசம் செய்வதிற்காக .410 என்ற மஸ்கட் கொடுக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி
நகரில் ஸ்டெரிலைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்ட SLR(self loading gun) ஆயுதப் பிரிவினருக்குக்
கொடுக்கப் பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காவலருக்கு அல்லது போக்குவரத்து காவலருக்கு இல்லை.
இந்திய சட்டத்தில் ஒரு குற்றவாளி காவலர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் பலபிரவேசம்
செய்யக் கூடாது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று ஜெயராஜ் என்ற வியாபாரியும்,
அவருடைய பென்னிக்ஸ் என்ற மகனும் துன்புறுத்தப் பட்டு அதன் பின்பு ஒருவர் பின் ஒருவர் இறந்தது போன்ற செயல்களை
விசாரிக்க Executive Magistrate விசாரித்து, அவர்களுடைய மரணம் இயற்கையானதா அல்லது செயற்கையானதா
என்று ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனை மூன்று மருத்துவர் மூலம் செய்யப் பட்டு அதனை விடியோவும்
எடுக்கப் படும். அந்த Excutive Magistrate அவர்கள் மரணம் செயற்கையானது என்றாலே அவர்
பரிந்துரைமேல் கொலை வழக்காக மாற்றப் படும். அதுபோன்ற பல வழக்குகளில் காவல் துறையினர்
ஆயுள் தண்டனை கூட அடைந்துள்ளனர் தமிழ்நாட்டில். ஆனால் அமெரிக்காவில் அந்த நடைமுறை இன்னும்
அமல் படுத்தவில்லை. அதேபோன்று மக்கள் போராடும் போது வன்முறை ஏற்பட்டால் இந்தியாவில்
முதலில் எச்சரிக்கை ஒலி பெருக்கியில் செய்யப் படும், அதற்கு பிறகும் வன்முறை ஏற்பட்டால்
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும், அதற்குப் பிறகும் வன்முறை நடந்தால் லத்தி கொண்டு
அடக்கப் படும். அதன் பிறகும் நிற்கவில்லை காவலர் உயிருக்கும், பொது சொத்து சேதப் படுத்துதல்
போல ஈடுபட்டால் குறைந்தளவு துப்பாக்கி பிரயோகம் செய்யப் படும் அதுவும், இடுப்பிற்கு
கீழே தான் சுட வேண்டும். காரணம் காவலர் பயிற்சியிலேயே குறைந்த பலபிரவேசம், அதிக பலன்
என்று தான் இந்தியாவில் போதிக்கப் படுகிறது.
ஆனால்
அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள மக்களுக்கு கட்டுப் பாடு கிடையாது. ஆகவே
தான் அங்குள்ள காவல் துறையினர் ஒவ்வொரு சந்தேகிக்கும் நபரையும் துப்பாக்கியுடன் உள்ளவர்
என்று சுட்டு விடுகின்றனர். அது சட்டம், ஒழுங்கு சம்பந்தமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து
விதி மீறலானாலும் சரியே. நமதூரில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய்' என்று அதேபோன்ற கதை தான் அமேரிக்காவில் நடந்த கறுப்பின துப்பாக்கி சூடுகள். அது
மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்றாலோ குற்றம் செய்பவர்கள் என்ற காமாலை கண்
உள்ளவர்களாக காவல் துறையினர் உள்ளார்கள் என்பது
வேதனையிலும் வேதனையே. ஒரு இனத்தின் வண்ணத்தினை வைத்து அவனை எடைபோடுவதினை விட்டு விட்டு அவன் ஒரு தன்னைப்போன்ற மனிதன் அதுவும் இந்த நாட்டின்
குடிமகன், அவன் கொடுக்கும் வரிப் பணத்தில் தான் தனக்கு சம்பளமும் மற்ற வசதிகளும் செய்து
கொடுக்கப் படுகின்றது என்ற எண்ணத்தினை காவலரிடையே புகுத்த பயிற்சியிலேயே சொல்லிக் கொடுக்கவேண்டும்.
அத்துடன் மனநல ஆலோசகர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நியமனம் செய்து காவலர் மனம் பண் பட முயற்சி
எடுத்தால் அமெரிக்காவில் சமீப காலங்களில் நடந்த இனவெறி சம்பவங்களும், அத்து மீறல்களும்
நடக்காது என்பது திண்ணமே!