Sunday, 29 August 2021

விளையாட்டுப் போட்டிகள் மனித பண்பின் இருப்பிடமா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்’ என்பது விளையாட்டுகளில் நட்பினை ஊக்குவிக்கின்றதினை எடுத்துக்காட்டாக சொல்வார்கள். ஆனால் 2021 ஆகஸ்ட் மாத ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு மனித பண்பின் அடையாளம் என்ற புது இலக்கணத்தினை போதித்துள்ளது என்று இரண்டு விளையாட்டுப் போட்டியில் நடந்த சம்பவங்களை எடுத்துக் காட்டி விளக்கினை பத்திரிக்கை செய்திகள். அவை பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்தது இல்லையா என்று நீங்கள் கேள்வியினை எழுப்பலாம். அதனை விளக்கவே இந்த கற்றுரையினை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

            2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரத்தாண்டும் போட்டியில் கடைசியாக கத்தார் தேசத்தின் மதாரும், இத்தாலி தேசத்தின் ஜெயனும் கலந்து கொண்டாரகள். அவர்கள் இருவரும் உயரத்தாண்டுதலில் 2.37 மீட்டர் 7அடி 9அங்குலம் தாண்டி விட்டனர். அதில் இத்தாலி வீரர் ஜெயன் காலில் அடிபட்டது. ஆகவே தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு நிச்சயம் சில்வர் மெடல் உண்டு என்று அவருக்குத் தெரியும். அதனை அறிந்த கத்தார் வீரர் மதார் அதற்கு மேல் தாண்டி கோல்ட் மெடல் வாங்க முடியும். இருந்தாலும் காலில் அடிபட்ட ஜெயனை பார்த்து வருத்தப் பட்ட மதார் நேராக நடுவரிடம் சென்று தானும் போட்டியிலிருந்து விலகினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நடுவர் தங்க மெடலை இருவருக்கும் பகிர்ந்து கொடுப்போம் என்றார். சற்றும் யோசிக்காத மதார் தானும் விலகுவதாக அறிவித்தார். அதனைக் கண்ட இத்தாலி வீரர் ஓடி வந்து மதாரை கட்டி அணைத்து விட்டார்.

            டோக்கியோ ஒலிம்பிக்கில் 'கிராஸ் கன்டரி' என்ற திறந்த வெளி ஓட்டத்தில் முதலாவதாக கென்யா வீரர் ஆபேலும் அதற்கு அடுத்ததாக ஸ்பெயின் நாட்டு வீரர் பெர்னாண்டஸ் ஆகியவரும் எல்லையினைத் தொடும் நோக்கத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தனர். எல்லைக் கோடு மூன்று இருக்கும், அதில் நடுவில் உள்ள கோடுதான் எல்கை ஆகும். ஆனால் கென்யா வீரர் ஆபேல் முதலில் வந்தவர் தவறுதலாக முதல் கோடுதான் எல்கை என்று நின்று விட்டார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த  பெர்னாண்டஸ் அதனை புரிந்து கொண்டு நினைத்து இருந்தால் கென்யாவீரரை முந்திச் சென்று தங்கம் வென்றிருக்காலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கென்யா வீரரைப் பார்த்து ஸ்பானிஸ் மொழியில் ஓடு என்று சொன்னார். அதனை கென்யா வீரர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் விடாத பெர்னாண்டஸ் கென்யா வீரரின் முதுகைப் பிடித்து தள்ளி தொடும் கோட்டிற்கு கொண்டு சென்று தங்கம் வெல்லச் செய்தார். அப்போது பத்திரிக்கைக் காரர்கள் ஏன் பெர்னாண்டஸைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள். நீங்கள் நினைத்து இருந்தால் உங்கள் நாட்டிற்கு தங்கம் வென்றிருக்கலாம் என்று கூறினர். அதற்கு பெர்னாண்டஸ், 'நான் முதிர்ச்சி அடைந்த உலகில் வாழ நினைக்கின்றேன். அவருடைய டோக்கியோ ஒலிம்பிக்கின் ஸ்லோகன், 'Let Live, Let others also Live' என்பது என்று சொன்னது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. (நீ வாழு மற்றவர்களையும் வாழ விடு)

            நீங்கள் கேட்கலாம் ஏன் இதுபோன்ற பண்பாடுகளின் இருப்பிடமே விளையாட்டு என்று மற்ற சர்வதேச போட்டிகளில் நடக்கவில்லையா என்று. ஏன் இல்லை, அதுபோன்ற சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:

1)    1932ம் ஆண்டு அமெரிக்க லாஸ் ஏன்ஜெல் நகரில் நடந்த உயரத் தாண்டுதலில் அமெரிக்காவினைச் சார்ந்த பாப் என்ற வீரரும் கனடாவினைச் சார்ந்த டங்கன் என்பவும் கடையில் இருந்தனர். பாப் ஏற்கனவே 2 மீட்டர் தனது நாட்டில் நடந்த போட்டியில் சுலபமாக தாண்டியுள்ளார். ஆனால் டங்கன் 1.94 மீட்டருக்கு மேல் தாண்டியதில்லை. முதலில் பாப் 1.94 மீட்டரையும் அடுத்து டங்கனும் தாண்டி விட்டார்கள். அதன் பின்பு 1.97 மீட்டருக்கு போட்டியாளர்கள் உயரத்திக்கு கொண்டு சென்றார்கள். அதனைப் பார்த்த டங்கன் தன்னால் தாண்ட முடியாது என்று நின்று விட்டார். தன்னுடன் கடைசிவரை வந்த டங்கன் மலைப்பதினைப் பார்த்து பரிதாப பட்டு அவரிடம் நேரில் பாப் சென்று, 'நீங்கள் ஓடிவந்து தாண்டும்போது  எல்லைக் கோட்டின் அருகில் உள்ள கட்டையில் மிதித்து தாண்டினால் நிச்சயம் உங்களால் தாண்ட முடியும் என்ற நம்பிக்கை ஊட்டினார்' அந்த அறிவுரையேற்று டங்கணும் ஓடிவந்து கட்டையில் கால் வைத்துத் தாண்டிக் குதித்தார். என்னே அதிசயம் அவர் இது வரை தாண்டாத 1.97 மீட்டரை தாண்டி விட்டார். அதன் பின்பு இருவரும் நம்பராகி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டனர். 1987 ம் ஆண்டு பாப் மனைவி டங்கனுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இறந்து விட்டதினை தெரியப் படுத்தியிருந்தது மிகவும் கவலைக்கு ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

2)    1936ம் ஆண்டில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் தடைகளை ஜாம்பவான் ஜெஸ்ஸி ஓவென் 100,200,4into 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முடி சூடா மன்னராக திகழ்ந்தார்.  அவரைப் பார்த்து ஜெர்மன் அதிபர் ஹிட்லரே அவர் போன்று ஒரு தடகள வீரர் தன்னுடைய நாட்டில் இல்லையே என்று வருத்தப் பட்டாராம். பெர்லினில் நீளத் தாண்டுதலில் 2 தடவை தவறிழைத்தாராம். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியினைச் சார்ந்த வீரர் லாங் ஜெஸ்ஸி ஓவனை அணுகி நீங்கள் நீலதாண்டுதல் எல்லையினை குறிக்கும் பலகையிற்கு அப்பால் இருந்து தாண்டினால் வெற்றி பெறமுடியும் என்று அறிவுரை கூறினாராம். ஜெஸ்ஸி ஓவன் மூன்றாவது முறையாக ஜெர்மனி வீரர் லாங் சொன்ன அறிவுரைபடி ஓடிவந்து தாண்டி வெற்றிகொண்டாராம். அந்த நேரத்தில் ஜெஸ்ஸி ஓவென் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'எனக்கு இது வரை கிடைத்திருக்கும் மெடல்களை எல்லாம் உருக்கி தங்கமாக லாங்கிற்கு கொடுத்தாலும் ஈடாகாது' என்று சொல்லி பெருமைப் பட்டாராம்.

3)    201ம் ஆண்டு நடந்த Rio  ஒலிம்பிக்கில் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹம்லின், மற்றும் அமெரிக்க வீராங்கனை டி அகஸ்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். அவரகள் 2000 மீட்டர் தூரத்தில் வரும்போது அமெரிக்க வீராங்கனை அகஸ்டோ தடுக்கி கீழே விழுந்து விட்டாராம். உடனே நியூஜிலாந்து வீராங்கனை இது தான் சமயம் என்று முந்தி ஓடவில்லை. மாறாக அமெரிக்க வீராங்கனையினை தூக்கி விட்டு இருவரும் ஓடினாராம். ஆகவே நியூஜிலாந்து வீராங்கனை ஹம்லினுக்கு 'Olympic Fairplay Award' வழங்கப் பட்டதாம்.

4)    விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதே தனித்தகுதியாகும். அதுவும் உலக அளவில் நடத்தப் படும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது அதைவிட சிறப்பாகும். அவ்வாறு கலந்து கொண்டபின்னர் வெற்றி பெறாவிட்டாலும் இலக்கை அடைவது மிகவும் சாலச் சிறந்தது என்பதினை ஒரு தந்தை தன் மகனுக்கு எடுத்துக் காட்டியுள்ளது  1994 ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து ஓட்டப் பந்தய வீரர் ரேமாண்ட் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டாராம். அவ்வாறு கலந்து கொண்ட போட்டியில் அவரது கால் தசை பிசகி கீழே விழுந்து விட்டாராம். அதனை பார்த்துக் கொண்ட அவரது தந்தை ஜிம் மைதானத்தில் இருந்து குதித்து மகனை கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு பந்தய எல்கையினை அடையச் செய்தாராம். ரேமாண்ட் அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் அந்த மைதானத்தில் கூடியிருந்தோர் எழுந்து ரேமாண்ட் தந்தையினை பாராட்டி கரஒலி எழுப்பினார்களாம். அவருடைய செயலினை பாராட்டி 2012ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் அவரை ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடச்செய்ததாம் ஒலிம்பிக் குழு.

விளையாட்டில் நியாயமாகவும், நேர்மையாகவும், நட்புடனும் நடந்து கொண்டாலும் விளையாட்டில் மிக மோசமான நடத்தைக்கும் குறைவில்லை.

1)    1994 ம் ஆண்டு அமெரிக்க ஸ்கேட்டின் வீராங்கனை டோனி ஹார்டிங்ஸ் நார்வேயில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார். அவரைப் பழிவாங்க அவரது முன்னாள் கணவர் ஒருவரை அணுகி விளையாட்டுப் போட்டியில் டோனியின் போட்டியாளரான கெரிகானை தாக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குக் காரணம் அமெரிக்க வீராங்கனை டோனி போட்டியில் வெல்லக் கூடாது என்பதேயாகும். அதேபோன்று கெரிகான் தொடையில் காயம்பட்டு சிகிச்சைப் பெற்று போட்டியிலும் வென்று விட்டார். அந்த வன்முறை சம்பவம் குறித்து ஒரு விசாரணை நடத்தப் பட்டது. அதில் அமெரிக்க வீராங்கனை மற்றும் மூவர்மீது குற்றம் கண்டுபிடித்து அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப் பட்டது.

2)    அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை அனைவருக்கும் தெரியும் அவர் தனது 20 வயதிலேயே பட்டம் வென்றவர். 1997ம் ஆண்டு மைக் டைசன் தனது பரம எதிர் விளையாட்டாளர் ஹோலிபீல்டு உடன் சண்டையில் கலந்து கொண்டார். அப்போது மைக் டைசன் ஆத்திரத்தில் ஹோலிபீல்ட்டின் காதினை இரண்டு முறை ரத்தம் கொட்டும் அளவிற்கு கடித்து விட்டதால், அவருடைய சாம்பியன் பட்டம் பிடுங்கப் பட்டது. 2002 ஆண்டு மைக் டைசன் குத்துச் சண்டை  பிரிட்டிஷ் குத்துச் சண்டை வீரர் லென்னாஸ் லீவிஸ் உடன் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டு அதற்கு ஆயத்தமாக இரண்டு விளையாட்டு வீரர்களையும் பத்திக்கையாளர் முன் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போதும் மைக் டைசன் பிரிட்டிஷ் வீரரை கடித்து விட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

3)    2006ம் ஆண்டு உலக கால் பந்தாட்டம் ஜெர்மனியில் நடந்தது. அதன் கடைசி போட்டியில் பிரான்சும், இத்தாலியும் மோதின. பிரான்ஸ் அணிக்கு ஜிடேன் கேப்டனாக இருந்தார். போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது இத்தாலி வீரர் மார்கோ மெட்ராஸி ஏதோ அபத்தமாக சொல்லிவிட்டார் என்று ஜிடேன் அவர் அருகே ஏதோ பேசுவது போல் வந்து தனது தலையால் மெட்ராஸி நெஞ்சில் முட்டி கீழே தள்ளி விட்டார். அதனை கவனித்த நடுவர் ஜிடேனை சிகப்பு அட்டை காண்பித்து வெளியே அனுப்பினார். அதில் இத்தாலி அணி வெற்றி வாகை சூடியது.

4)    2021 ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் மல்யுத்த Semi final ல் இந்தியாவினைச் சார்ந்த ரவி தஹியாவும், கசக்ஸ்தான் வீரர் நூருல் இஸ்லாமும் கலந்து கொண்டனர். அப்போது கசக்ஸ்தான் வீரர் ரவி தஹியாவின் கை புஜத்தில் கடித்து விட்டார். அந்த வலியையும் தாங்கிக் கொண்டு அந்தப் போட்டியில் சில்வர் மெடல் பெற்றார்.

அதேபோன்று தான் கால் பந்தாட்டம், கிரிக்கெட், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளில் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு எறிவதும், வீரர்களை நிறத்தால் வேறு படுத்தி திட்டுவதும், தோல்வியுற்றால் மைதானத்தில் நுழைந்து அராஜகம் விளைவிப்பதும் நாகரீகமான செயலாகுமா என்று சிந்திக்க வேண்டாமா?

 

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது விளையாட்டு வீரர்களின் திறமையினை மட்டும் காட்டுவதாகாது. மாறாக மனிதர்களுக்குள் நட்பையும், பண்பையும் வளர்க்கக் கூடியதாகும். மதம், ஜாதி, இனம், மொழி, பணக்கார, ஏழை நாடுகள் என்ற எல்கை கோட்டினைத் தாண்டி மனிதன் பண்புடனும், பாசத்துடனும், பரிவுடனும் கூடிய ஒரு சர்வதேச சமுதாயத்தினை நவீன உலகில் உருவாக்குவதே நமது எல்லோருடைய கடமையல்லவா?