Sunday, 20 February 2022

கொரானா மனித குலத்தினை தனிமைப் படுத்தியதா?

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

2019ல் ஆரம்பித்த கொரானா என்ற கொடிய நோய் உலகில் இதுவரை 4கோடி 24 ஆயிரம் மக்களை பாதித்து 50 லட்சத்து ஐயாயிரம் பேர்களின் இன்னுயிரை பதம் பார்த்துவிட்டது. 'மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே' என்ற பாட்டு வரும், ஆனால் இந்த நோய் மனிதனை மனிதன் தனிமைப் படுத்தும் கொடிய பழக்கத்தினை வலுக்கட்டாயமாக புகுத்திவிட்டது. கொரானா வந்தவர் இறந்து விட்டால் அவருடைய துணைவர், பிள்ளைகள், உற்றார் கூட முகத்தினை காண முடியாது அடக்கமோ அல்லது ஈமக்கிரியை செய்யவது போன்ற நடைமுறைகள் மக்களை வெகுவாக உலுக்கி விட்டது. மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும்போது கூட நோயாளிகளை காண முடியாத இரும்புத்திரை மறைத்துவிட்டது.

மனிதனை 'social animal' (சமூக மிருகம்) என்று அழைப்பார்கள். இறைவன் படைக்கும்போது மனிதர்களை ஜோடி, ஜோடியாக மட்டும் படைக்கவில்லை, மிருகங்கள், பறவை இனங்களையும் ஜோடியாக படைத்துள்ளான். கணவன், மனைவியாக உள்ளவர்கள் குழந்தைகள் உற்றார், உறவினர் என்று குடும்பமாக வாழ்வதால் ‘சோசியல் அனிமல்’ என்று அழைக்கின்றார்கள். கிராமங்களில் உள்ள கூட்டுக் குடும்பம், நகர வாழ்க்கைக்கு வரும்போது கூட்டுவாழ்க்கை தனி அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டு பந்தம், பாசம் அற்றவர்களாக இருக்கும் நிலையினை பார்த்திருக்கின்றோம். இந்தியாவில் கொரானா நோயினால் 5கோடியே 30லட்சம் பேர்கள் வேலையில்லாமல் இருப்பதும், பட்டினிச்சாவால் 2851 பேர்கள் 2021ல் இறந்திருப்பதும், பல தொழில் முனைவோர் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தமுடியாமல் தொழில்களை மூடிவிட்டதும் சோகத்தினை ஏற்படுத்தி விட்டது என்றால் அது கொடிய நோய் தானே! அதற்கு உதாரணமாக கேரள மாநிலம் கொச்சியில் 'ராய் டூரிசம்' என்ற சொகுசு பேருந்து நிறுவனம் 20 பஸ்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ராய்சன் ஜோசப். லாக் டவுண் பிரச்சனையால் தனது 10 பஸ்களை விற்றுவிட்டார். மீதமுள்ள 10 பஸ்களை விற்க விலை பேசினார் முடிய வில்லை. ஆகவே தனது 10 பஸ்களையும் காயிலாங்கடைக்கு போடலாம் என்று பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளார். எப்படி என்று நினைக்கிண்றீர்கள். ஒரு கிலோ பழைய இரும்பு ரூபாய் 45/ தானாம். இப்படி பரிதாப நிலையில் நமது பொருளாதாரத்தினை கொரானா கொண்டு போய் படு பாதாளத்தில் தள்ளிவிட்டது. ஆனால் கொள்ளை அடித்த கம்பனிகள் பேங்க் கடன் வாங்கி தப்பித்த செய்தியினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குஜராத்தினைச்சார்ந்த ‘ரிஷி அகர்வால்’ நடத்தும் கப்பல் கட்டும் கம்பனி பல பேங்குகளில்  ரூபாய் 22, 852 கோடிகள் வாங்கி ஏப்பம் இட்ட கதையும் கந்தலாக உள்ளது.

கொரானா நோய் எங்கள் குடும்பத்தில் எப்படி தனிமை கொடுமையினை ஏற்படுத்தியது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன். எங்களுடைய 50 வருட மண நாள் 14.12.2021 என்றது எங்களுக்கே மறந்து விட்டது. அதனை என் அமெரிக்கா வாழ் மகள் எப்படியோ தெரிந்து வைத்துள்ளது. அது மற்ற இரு வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களுடன் கலந்துரையாடல் செய்துள்ளது. அவர்கள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த 15.12.2021 அதிகாலை திடீரென்று வீட்டினுள் நுழைந்து எங்களது கண்களில் நீரினை வரவழைத்தார்கள் . அந்த ஆனந்த கண்ணீர் காயும் முன்பு எங்களுக்குள்   இனந்தெரியாத கவலை கவ்விக்கொண்டது. அது என்ன தெரியுமா அவர்களை இங்குள்ள கொரானா பாதிப்பு தொற்றி விடக்கூடாதே என்று. அவர்கள் மூவரையும் அனாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தோம். அவர்கள் திரும்பும் நாட்கள் வந்தன. இங்குள்ள கட்டுப்பாட்டின் படி விமானத்தில் வெளிநாடு செல்ல 48 மணி நேரத்திற்குள் கொரானா தொற்று இல்லை என்ற RT-PCR டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை. அப்படி எடுத்ததில் அமெரிக்கா வாழ் மகளுக்கும், சிட்னி வாழ் மகனுக்கும் பாசிட்டிவ் டெஸ்ட். வந்தது அதிர்ச்சியினை தந்தது. மற்றொரு அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு நெகட்டிவ் டெஸ்ட் வந்ததால் அவன் பயணம் தொடர்ந்தான். கொரானா பாதித்த மகனும், மகளும் கலகலப்பான வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டனர். அவர்கள் அறிவுரைப் படி நானும், என் மனைவியும் டெஸ்ட் எடுத்த்தோம். எங்களுக்கு பாசிட்டிவ் அறிகுறி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. நாங்கள் சீனியர் சிட்டிசன் ஆனதினால் கீழ்பாக்கில் உள்ள ஆயிசா மருத்துவ மனையில் சேர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு திரும்பினோம். மகனும், மகளும் தனிமை 10 நாட்கள் முடிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு கொரானா நோய் இல்லை என்ற உறுதியான பின்பு அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள். அவர்களை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தோம். இவற்றை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பேயே அராபிய நாட்டில் ரசூலுல்லாஹ் அறிந்துள்ளார்கள் என்பதினை ஒரு ஹதீஸ் மூலம் உங்களுக்கு தெரியப் படுத்தலாம் என எண்ணுகின்றேன்.  ஒரு தடவை வியாபாரியான சஹாபி ஒருவர் ரஸூலல்லாஹ்விடம் வந்து 'பக்கத்தில் ஊரில் தொற்று நோய் இருப்பதாக சொல்கிறார்கள், அந்த வழியாக வியாபாரத்திற்கு செல்லலாமா' என வினவினார். அதற்கு ரசூலுல்லாஹ் எங்கு அவ்வாறான நோய் இருக்கின்றதோ அங்கு நீங்களும் போக வேண்டாம், அவர்களும் நமது ஊருக்குள் நுழைய வேண்டாம்' என்று அறிவுரை வழங்கியது  எப்படி இக்காலத்தில் வேத வாக்கானது என்பது ஆச்சரியமில்லையா?

உடன் பிறப்பு, உற்றார், உறவினர் ஆகியோர்களிடம் வாட்ஸப், பேஸ்புக், கைபேசி, இன்டர்நெட், போன்ற தொழிற்நுட்ப வசதிகளுடன் பேசி நலம் விசாரித்தாலும்  அவர்களுடன் உணர்வுப் பூர்வமாக இணைய முடியவில்லை. அண்டை வீட்டாரிடம் கூட நலம் விசாரிக்க முடியவில்லை. நாட்ச்சக்கரங்கள் சுழன்றாலும் 'ஆன் லைன்' வேளையில் மூழ்கி விடுவதால் அடுத்தவர் பற்றி கவலைப் படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களுடன் கூட பேச நேரமிருக்காது.

சமூக கட்டுக் கோப்பினை உடைக்கும் மூல காரணமே நவீன மின் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் போன்றவையாகும். அதுவும் கொரானா நோய் அதனை அதிகப் படுத்திவிட்டது. சில சாதனங்கள் தொடர்புக்கு எதுவும் காசு கொடுக்க வேண்டியதில்லையால் பேசுவதற்கு நேரமே தெரிவதில்லை. டிக், டாக் போன்ற தொடர்புகள் சமூக சீரழிவிற்கு, யூடூப் பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வேகமாக பரப்புவதற்கும் நேரம் பொன்னான நேரம் தெரிவதில்லை. ஆன் லைன் சூதாட்டத்திற்கு சிறுவர் முதல் பெரியவர் வரை ஈடுபட்டு செல்வத்தினை இழப்பதினையும், சிறுவர்கள் கூட திருட்டுக் குற்றம், போதைப் பொருள் உபயோகிப்பது, விற்பது என்ற செயல்களில் ஈடுபதினையும், குடும்ப சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, கொலைகள், தற்கொலைகள் போன்றவை நடப்பதினையும் அன்றாட செய்திகளில் பார்த்திருக்கின்றோம்.

கொரானா நோய் குடும்பத்தில் எப்படி பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது என்பதினை ஆராய Estonia எஸ்டோனியா நாட்டில் உள்ள 'Institute of social studies' ஒரு ஆய்வினை நடத்தி அறிக்கை சமர்பித்தார்கள். அதில் கொரானா நோயால் முதலில் பாதித்தவர்கள் குழந்தைகள் தானாம். காரணம் வெளியில் விளையாட வழியில்லை, பள்ளிக்கூடம் இல்லை, பூங்காக்கள், கேளிக்கை நிலையங்கள் மூடப் பட்டுவிட்டன, பீச் செல்ல கட்டுப் பாடு, சுற்றுலா ஸ்தலங்கள் மூடப் பட்டன. 2) லாக் டவுண் கட்டுப் பாடுகளால் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடந்தது சலித்து விட்டதாம், 3) பொருளாதார வளர்ச்சி குன்றி விட்டது, 4) வியாபாரிகள், தொழில் அதிபர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாது தற்கொலைக்கு தூண்டி விட்டது தான் கொரானா கொடுமைகள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே கொரானா நோயின் தாக்கத்திலிருந்த மனித சமுதாயத்தினை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்படி என்று சற்று யோசிக்க வேண்டுமல்லவா?

!) நமக்கு நாமே சுய கட்டுப்பாடு வைத்துக் கொண்டு தொலை தொடர்பு சாதனங்களை  தூங்கும்போதும், சாப்பிடும்போதும், குடும்பத்தினருடன் கலந்துரையாடல் செய்யும்போதும், நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதும், பூங்காக்களில் நண்பர்களுடன் இருக்கும்போதும்,  இறை வணக்கம் செலுத்தும்போதும் சற்று நேரம் ஒதுக்கித் தள்ளவேண்டும்.

2) மறந்துபோன விளையாட்டுகளை புதுப்பிக்க வேண்டும்.

3) விடுபட்ட நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று நட்பிற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

4) நல்ல புத்தகங்கள் படிப்பதினை வழக்கமாக கொள்ளவேண்டும்.

5) குழந்தைகளுக்கு அறிவினை அதிகப் படுத்த புத்தகங்கள், சாதனங்கள் ஆன் லைனிலே கிடைக்கின்றது, அவைகளை தருவித்து படிக்கச் சொல்லவேண்டும். கிட்ஸ் ஏஜ்(kids age) போன்ற பத்திரிக்கைகள் கூட தரமான செய்திகளைத் தரும் பத்திரிக்கைகளை குழந்தைகள் படிக்க வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

6) வீட்டில் உள்ள பெரியவர்களும் காலம், நேரம் தெரியாது டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் நாடகங்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கக் கூடாது.

7) வீட்டிற்கு விருந்தினர் வரும்போது டிவி, செல்போன் போன்றவற்றை இயக்குவதினை நிறுத்த வேண்டும்.

8) கொரானா தாக்கம் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க ஆரம்பித்து விட்டது. இது காரும் வீட்டிலேயே அடைந்திருந்த மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கட்க ஆரம்பிக்குமுன் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், ஓவியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களின் இறுக்க மனதினை கல்வி கட்க சூழ்நிலைக்கேட்ப முதலில் மாற்றுவது நல்லது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொல்வதினை தவிர்க்க வேண்டும்.

9) கொரானா தாக்கம் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க ஆரம்பித்து விட்டது. இது காரும் வீட்டிலேயே அடைந்திருந்த மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கட்க ஆரம்பிக்குமுன் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், ஓவியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களின் இறுக்க மனதினை கல்வி கட்க சூழ்நிலைக்கேட்ப முதலில் மாற்றுவது நல்லது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொல்வதினை தவிர்க்க வேண்டும்.

கொரானா காலத்தில் கிராமங்களில் சொந்தங்களை மறந்த நகர வாசிகள் கிராமங்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அங்கே கொரானா தொற்று குறைவாக இருந்ததே காரணம். பெரும்பாலான கிராமங்களில் கொரானா நோயே இல்லை எனலாம். மாசு இல்லாத காற்று, சுத்தமான தண்ணீர், கள்ளங்கபடமில்லா சொந்த, பந்தங்கள், விலைவாசி குறைவான காய், கறிகள் போன்றவகைகளால் மனிதன் மறுபடியும் கூட்டு வாழ்க்கைக்கு திரும்பியது கொரானா செய்த மிக பெரும் நன்மை என்றால் மறுக்க முடியாது. அதற்காக நகர வாழ்க்கையே வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக நகரத்தில் சொகுசாக வாழும்போது, கிராமத்தினையும் மறந்து விடாதீர்கள் என்பதினை உணர்த்துகிறேன்!