Sunday, 26 June 2022

பற்றி எரிகிறதா அக்னிபாத் திட்டம்?

 

                 

               டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய முப்படைகளில் குறிகிய கால ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவது தான் அக்கினிபாத் திட்டமாம். அரசு அந்தத் திட்டத்தின் அடிப்படையே ராணுவ வீரர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்ற செலவுகளை குறைக்கவே இந்த திட்டம் என்று சொல்கிறது. ஆனால் எதிர்ப்பாளர்கள் சொல்லும் காரணம் ஒரு தலைமுறையினர் உயர் பதவிக்கு செல்ல தடை செய்யும் திட்டமே இது, அதுவும் உயர் ஜாதியினர் தவிர மற்ற சமூக அமைப்புனர் ராணுவத்தில் நிரந்தர பணியாற்ற முடியாமால் செய்வதே இந்த திட்டம் என்கின்றனர். ஆகவே அக்கினிபாத் திட்டத்தின் பாதக, சாதக நிலையிகளை கீழே காணலாம்.

            ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை என்ற 2 பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். குறுகிய கால சேவையில் 10 வருடம் முதல் 14 வருடங்கள் வரை பணியாற்றலாம். இவர்கள் அனைவருக்கும் ஓய்விற்குப் பின்னர் ஓய்யூதியம், ஓய்விற்குப் பின்னர் பென்ஷன் சலுகைகள் உண்டு. நடப்பு நிதியாண்டில்(2022-23)  ராணுவத்திற்கான செலவிற்காக ரூ 5,25,166 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் ஓய்யூதியத்திற்காக  1,19, 696 லட்சம் கோடியும் ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவிற்கு ரூ 2,33,000 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள தொகையினைக் கொண்டே ராணுவ தளவாடங்கள் மற்றும் பிற செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. சர்வதேச அளவிலும், அண்டை நாடுகளின் அச்சுறுத்துகளையும் சமாளிப்பதிற்காக இந்திய ராணுவத்தினை பலப் படுத்த தளவாடங்கள் தேவைப் படுவதால் பெரும்பகுதியினை அதற்கு செலவிட வேண்டும் என்ற நோக்கத்திலும், ஓய்யூதிய செலவுகளை நீக்குவதிற்காகவே அக்கினிபாத் திட்டமாம்.

            அக்கினிபாத் என்றால் 'turn of duty' என்ற புதிய வேலை தரும் திட்டமாம். இந்த திட்டத்தில் ஆண், பெண் இரு பாலாரும் 17-23 வயதுடைவர்களை வேளையில் சேர்ப்பார்களாம். அப்படி வேளையில் சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் 4 ஆண்டுகள் நியமிக்கப் படுவார்களாம். நடப்பு ஆண்டில் 46,000 பேர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். பயிற்சிக்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜூலையில் அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள். பணியில் சேர்ந்த முதல் மாதம் ரூ 30,000/ ஊதியம், இரண்டாம் ஆண்டு ரூ 33,000/ ஊதியம், மூன்றாம் ஆண்டு ரூ 36,000/ ஊதியம், நான்காம் ஆண்டு ரூ 40,000/ ஊதியமும் உண்டு. அப்படி கொடுக்கப் பட்ட ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப் படுமாம், மீதியுள்ள 70 சதவீதம் மட்டும் ஊதியமாக வழங்கப் படும். 

            ஒப்பந்தப் படி 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் அந்த வீரர்கள் நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமாம். அப்படி விண்ணப் பித்தவர்களில் 25 சதவீத வீரர்களுக்கு மட்டும் நிரந்தர பணியில் அவர்கள் திறமைக்கேட்ப நியமிக்கப் படுவார்களாம். மற்ற 75 சதவீத ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்கு சேரவேண்டிய சேவா நிதி வழங்கப் பட்டு ராணுவத்திற்குப் ‘போன மச்சான் பெட்டி படுக்கையோடு திரும்பி வந்தான் பூ மணக்க’ என்று ஊர் திரும்புவார்களாம். ஓய்யூதிய அடைப்படையில் அவர்கள் வேலைக்கு அமர்த்தப் படுவதால் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஓய்யூதியம் இல்லை. பணிக்காலத்தில் மட்டும் பங்களிப்பில்லாத ரூ 48 லட்சத்தில் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். அதேபோன்று பணிகாலத்தில் காயமுற்று நிரந்தர ஊனமுற்றால் ரூ 44 லட்சமும், 75 சதவீத ஊனமுற்றாள் ரூ 25 லட்சமும், 50 சதவீத ஊனமுற்றால் ரூ 15 லட்சமும் கிடைக்கும். ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் எந்த சலுகையுமில்லை.

            நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற ராணுவ குறுகிய கால சேவை எப்போதுமே இருந்ததில்லையா என்று. 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் OTA என்ற குறுகிய ராணுவ சேவை மையங்களை சென்னை பல்லாவரத்தில், பூனாவிலும் ஆரம்பிக்கப் பட்டது. சென்னை மையத்தினை அமைச்சர் சி சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். ஆனால் 1964ல் பூனா மையம் மூடப் பட்டு பல்லாவரம் OTA மட்டும் இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. அவர்களுக்கு 48 வாரங்கள் பயிற்சியளிக்கப் படும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி முடிந்த பின்பு ராணுவத்தில் சேராமல் வந்து விட்டாலும் அவர்களுக்கு மாதம் ரூ 30,000/ பென்ஷனாக கிடைக்கும்.

ராணுவத்தில் பென்ஷன் கிடைக்கவேண்டுமென்றால் குறைந்த பட்சம் 15 வருடங்கள் பணியாற்றிருக்க வேண்டும்.

           

சிவில் போலீசிற்கு உதவுவதிற்காக Home Guard(ஊர் காவல் படை) 1946ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1962ம் ஆண்டு சீன யுத்தத்திற்குப் பின்பு யுத்தத்தின் போது உள் நாட்டு பாதுகாப்பு பணியில் அவர்கள்  நியமிக்கப் பட்டார்கள்.

அவ்வாறு அவசரகால கால ராணுவ பணியாற்றி பின்னர் விலகி மத்திய ஐ.ஏ.எஸ்/ஐ.பீ.எஸ். மாநில சர்விஸ் கமிஷன் மூலம் வருவாய், காவல் துறையில் Lateral entry அடிப்படையில் வேலையில் சேர்ந்தார்கள். தமிழகத்தில் கூட இன்பசாகரன், மற்றும் கேப்டன் தங்கதுரை என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் டிஜி.பி ஆர்.ஆர்.ராஜகோபாலனும், கேப்டன் இக்பாலும், மேஜர் ஹபிபுல்லாஹ் போன்றவர்களும் அப்படி தேர்வாளர்கள் தான்.

எல்லை ஓர மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மேகாலயா, திருப்பூரா, மேற்கு வங்கம் ஆகிய வற்றிற்கு ராணுவத்திற்கு உதவுவதிற்காக 15 படைகள் நியமனம் செய்யப் பட்டனர். அவர்களுக்கு நிறுவன மற்றும் ஆயுத பயிற்சி செலவிற்காக 25 சதவீதம் மாநில அரசுகளும், 75 சதவீதம் மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அசாம் மாநிலம் மட்டும் 50-50 பங்களிப்புகள் மாநில அரசும், மத்திய  அரசும் ஏற்றுக் கொண்டன.

            உதாரணத்திற்கு 25.6.2022 அன்று தமிழக காவல் துறையில் S.I பணியில் காலியாக உள்ள 444 பதவிகளுக்கு 2.2 லட்சம் பேர்கள் விண்ணப்பித்தார்கள், சமீபத்தில் தமிழக தலைமை செயலகத்தில் கட நிலை ஊழியர் வேலைக்கு பல பட்டதாரிகள், பொறியாளர்கள் விண்ணப்பித்தார்கள் என்று அறியும் போது வேலையில்லா திண்டாட்டம் எவ்வளவு தலைவிரித்தாடுகிறது என்று தெரியவில்லையா. இந்தியாவில் வேலையில்லாதோர் 2014ம் ஆண்டு 5.6 சதவீதமாகும். அது படிப்படியாக உயர்ந்து 8.10 சாதமாக இன்று . ஒவ்வொரு வருடமும் வேலை தேடி அலையும் 35 வயதிற்குட்பட்டோர் 65 சதவீதமாம். அது கிட்டதட்ட ஒரு கோடியே 20 லட்சம் என்று பி.பி.சி. பொருளாதார அறிக்கை சொல்கிறது. 2017ம் ஆண்டு ரூ 1000/, ரூ 500/ செல்லாது என்று அறிவித்தபின்னர் பல தொழிற்சாலைகள் மூடு விழா நடத்திவிட்டன. அதனைத் தொடர்ந்து 2019முதல் கொரானா பாதிப்பால் பலர் பாதிக்கப் பட்டனர். GST (Goods service entry) புதிய திட்டம் அமல் படுத்திய பின்னர் வியாபாரங்கள் பாதிக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும்.

.

            Ex Service Men Board: இதனை ஹிந்தியில் Kendriy Sainik Board என்றும். இந்த அலுவலகம் முன்னால் ராணுவத்தினர், அவர்கள் குடும்பம், விதவைகள் நல் வாழ்விற்கும் வகை செய்கிறது. அந்த அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் இயங்குகின்றது. அவைகள் முன்னால் ராணுவத்தினர் பொது நிறுவனங்களில்  மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை ஆராய்ந்து அவர்களை பணியமர்த்த உதவி செய்கின்றது. மற்றும் அவர்கள் சுய வேலை தொடங்குவதற்கும் உதவி செய்கின்றது. ராணிவத்தினர் பயன் பாட்டிற்கு என்று ஸ்டோர்ஸ் உள்ளன, அதனில் ராணுவத்தினர் மற்றும் முன்னால் ராணுவத்தினருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கப் படுகின்றன. ஆனால் அது போன்ற சலுகைகள் அக்னி வீரர்கள் பெறமுடியாது என்பதும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குற்றச் சாட்டாகும். அந்த குற்றச் சாட்டிற்கு வலிமை கூட்டுவதுபோல சில பி.ஜே.பி நேட்டாக்கள் கூறும் கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணெயினை ஊற்றுவது போல உள்ளது. அக்னிவீரர்கள் பயிற்சியின் போது மற்ற வேலைகளுடன் முடி வெட்டுதல், துணிமணிகளுக்கு இஸ்திரி போடுதல்,சமையல் செய்தல் போன்றவைகளும் போதிக்கப் படும் என்று ஒருவர் கூறுகிறார். இது குலத்தொழில் தொடர்பதிற்கான செயல் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மற்றுமொருவரான விஜய் வர்ஜியா கூறும்போது, 'அவ்வாறு வேலையினை விட்டு வருகின்றவர்களுக்கு எங்கள் கட்சியில் வேலை கொடுக்கப் படும்' என்றும் கூறுகிறார். 

            உண்மையிலேயே ராணுவம், காவல் துறைகளில் முடி வெட்டுவோர், துணி துவைப்போர் மற்றும் சமையல் செய்வோருக்கு தனியான வேலை வாய்ப்புத் தேர்வு நடத்தப்படும். இதுபோன்ற வேலைகளுக்காக காவல் துறையிலும் தனியாக ஆட்கள் பணியமர்த்தப் படுகிறார்கள் அனால் சில நேட்டாக்கள் சொல்வது போல அவர்களை தரம் இறக்கி கூறும் போது கொதிப்பதாக சொல்கிறார்கள். இதுகாறும் கொரானாவில் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காத 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் போராட முற்பட்டுள்ளனர். அந்த போராட்டம் பிகாரில் ஆரம்பித்து, உ.பி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அமைதியாக நடை பெற்று பின்பு வன்முறையிக்கு வழிவகுத்துவிட்டது. ஜகானாபாத் எம்.எல் ஏ குமார் யாதவ், 'இதுகாறும் வேலைவாய்ப்பிற்காக ஏங்கி இருந்த இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது' என்று கூறியுள்ளார். பி.ஜே.பி எம்.பி.யும், இந்திரா காந்தியின் பேரனுமான வருண் காந்தி, 'பிரதமர் அவர்களே! நீங்கள் 2014ம் பதவியேற்ற போது 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்றீர்கள் ஆனால் இப்போது அக்னிபாத் மூலம் 40000 பேர்களுக்கு வேலை என்கிறீர்கள் அதுவும் தற்காலிக வேலை என்கிறீர்கள், அப்படி என்றால் மீதியுள்ள இளைஞர்களுக்கு எப்போது வேலை கொடுக்கப் போகிறீர்கள்' என்ற கேள்வியினை காட்டமாக எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டத்தினை அறிவித்துவிட்டு இன்னொரு குண்டையும் போட்டுள்ளனர் என்று போராடக் காரர்கள் சொல்கின்றனர். அதுதான், 'No rank, No pension, No direct recruitment for army' இரண்டு வருசத்திக்கும் என்ற அறிவிப்பும் அவர்களை பயமுறுத்தியுள்ளது. பல காலம் ராணுவ பணிக்காக தங்களை தயார் செய்து வரும் வேலையில்லா இளைஞர்கள் தலையில் விழுந்த பெரிய அடி என்று கதறுகிறார்கள். இந்த அக்னிபாத் திட்டத்தினை பற்றி மேதகு மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக் கூறும்போது, 'அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுதான் பணி என்றால் அக்னிவீரர்களுக்கு யார் தான் பெண் கொடுப்பார்கள். இது ராணுவ கவுரத்திற்கே எதிரானது. இதனால் ராணுவ கவுரவமும், மதிப்பும் பாதிக்கும்' என்கிறார்.

            ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தன்னுடைய கட்சி இளைஞர் கொண்டு Saal Sahuty என்ற  படையினை ராணுவத்தில் சேர்த்தார். அதுபோல ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள் கம்பு, கட்டத் துப்பாக்கி வைத்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கொண்டு பயிற்சி எடுக்கும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவது தான் இந்த அக்னிபாத் திட்டம் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. ஆகவே தான் இளைஞர்கள் போராட்டத்தில் குதிர்த்துள்ளார்கள். அக்னிபாத் திட்டம் மூலம் பயிற்சிக்குப் பின்னர் ராணுவத்தில் சேர்பவர்கள் 25 சதவீதம் தான் என்று சொல்லும்போது மற்ற ஆயுத பயிற்சி எடுத்த 75 சத வீத வீரர்கள் வீடுகளுக்கு அனுப்பும்போது அவர்கள் தீவிர வாத வலைகளில் விழுவதற்கு வாய்ப்பு கொடுப்பது போல ஆகாதா என்று அரசு தீர சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை நடுநிலையாளர்கள் சொல்லுவதினையும், கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு செயலாற்றினால் நலமாக இருக்காதா?