Thursday, 13 April 2023

நாகாக்க-காவாக்கால் சோகப்பார் சொல்லிழுக்குப்பட்டு!

 

              (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லா சமுதாயத்திற்கும், எல்லா காலத்திலும் பொருந்தும் விதமாக, 'ஒருவர் மனித உறுப்புகளில் பாதுகாப்பது இரு உறுப்புகள் அவசியம், அவை ஒன்று நாக்கு, மற்றொன்று மர்ம உறுப்பு' ஆகியவையாகும் என்று அறிவுரை கூறியுள்ளது. அந்த இரண்டு உறுப்புகளையும் பாதுகாக்கத் தவறினால் தனக்கும், தனது குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும், ஏன் நாட்டினுக்கும் கூட இழுக்காக முடியும் என்பதினை அறிந்தே சொல்லி உள்ளது எப்படி சாலச்சிறந்தது இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதினை விளக்கவே இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

            உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அமெரிக்க கோல்ப் மைதானத்தில் பந்துகளை எடுத்துப் போடும் சேவகராக இருந்த ஒருவரின் மகனாக பிறந்து பிற்காலத்தில் உலக கோல்ப் விளையாட்டில் பல்வேறு பந்தயங்களில் வாகை சூடிய ‘டைகர் வூட்ஸ்’ பிற்காலத்தில் ஒரு போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டார் என்பதினை அறிந்த  அமெரிக்க மனைவி அவர் அமெரிக்கா திரும்பியதும் அவருடன் சண்டை போட்டதால் அந்த வெறுப்பில் மது அருந்தி தன் சுய நிலை இழந்து ஒரு விபத்தினை ஏற்படுத்தி வழக்கினையும் சந்தித்து விவாகரத்தில் உழன்றார். அதே நிலை தான் கல்லூரி படிப்பில் பாதியில் நிறுத்தி, பின்பு தனது கல்லூரி தோழனுடன் 'மைக்ரோ சாப்ட்ஸ்' என்ற கணினி மையம் ஆரம்பித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் ஐந்திற்கும் இடம் பிடித்தவர் 'பில் கேட்ஸ்'. ஆனால் அவர் தன்னுடைய தொழில் பங்குதாரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தார் என்ற தகவல் அறிந்து தொழில் தோழனின் நட்பையும் இழந்தார். மனைவியுடையான குடும்ப வாழ்க்கையும் மணமுறிவில் முடிந்தது. இதுபோன்ற நபர்களிடம் யார் தான் வாழ முடியும் மட்டுமல்ல, சம்பாதித்த புகழ் அனைத்தையும், உலக நன் மதிப்பையும் இழந்தது தான் மிச்சம்.

            தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ராணுவ வீரர் விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இரு குழுவினர் தகராறில் காயமடைந்த ராணுவ வீரர் இறந்து விட்டார். அந்த குற்றவாளிகளில் ஒருவர் ஆளும் கட்சியைச் சார்ந்தவர். ஆகவே ப.ஜ.க கட்சியியைச் சார்ந்தவர்கள் 22.2.2023 அன்று ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி, 'பாண்டியன்' எங்களுக்கு துப்பாக்கியால் சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும்' என்று வீர வசனம் பேசியது சர்ச்சைக்கு ஆளாகி வழக்கு பதிவும் செய்யப் பட்டது. உடனே அவர் ஜாமீனுக்காக உயர் மன்றத்தில் மனு செய்தபோது உயர் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் செய்து அவர் கூறியதிற்கு மன்னிப்பும் கோரச் செய்தது. அதேபோன்று சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 13.2.2023 அன்று பட்டியலின ‘அருந்ததியர்’ மக்களை கேவலமாக பேசியதால் அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆளாகி, அந்த கட்சி வாங்க வேண்டிய வோட்டுகளும் குறைந்தன என்பது நீங்கள் அறிந்தீர்கள். ஆகவே தான் நம் முன்னோர்கள் ஒருவர் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதினை உணர்ந்து பேச வேண்டும், ஏனென்றால் ஒருவர் நாக்கிலிருந்து புறப்படும் வார்த்தை வில்லிலிருந்து புறப்படும் அம்பைப் போன்றது, அந்த வார்த்தைகளை திரும்பப் பெறமுடியாது என்றும், நாவினை காத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். பெண்கள் கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தால் வயதான பெண்கள் 'ஏம்மா வாயை மூடுங்கள் ஸலாமத்து' பெறுவீர்கள் என்று சொல்லி அடக்குவார்கள்

            அமெரிக்க 2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்கும், ஜோ பிடனுக்கும் நேரடி போட்டி அதில் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தனது சொந்த நாட்டு பாராளுமன்றத்தினையே தாக்கச் செய்து, பெண் விவகாரத்திலும் கைது செய்யப் பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்பது அவர் வாயாலும், பெண் ஆசையாலும் அவமானப் பட்டார். அதேபோன்று தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2022 ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ‘போல்சாரா சில்வா’  தோற்றாலும் தற்போதைய  ஜனாதிபதி ‘லூலூ’ அவர்களை அங்கீகரிக்க மறுத்து தனது ஆதரவாளர்களை பாராளுமன்றத்தினை தாக்கும் படி உத்தரவிட்டார். அதன் விளைவு தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொண்டு தன் சொந்த நாட்டினைவிட்டே ஓடினார் என்பதும் ஒரு வரலாறு. ஆகவே வார்த்தை, நடத்தையில் கண்ணியம், நாணயம்  வேண்டும் என்பதே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

            இந்திய தேசிய காங்கிரசில் தலைவர் பதவி வகித்த ராகுல் சமீபத்தில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழந்து நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டுள்ளார் என்பதிற்கு காரணம் என்னவென்றால் அவர் 2019ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் சொல்லிய ஒரு வார்த்தைக்காக குஜராத்தில் ஒரு நீதிமன்றத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 153(பி)(சி), 506(1) போன்றவைகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பேசினார் என்ற மான நஷ்டஈடு வழக்கில் இரண்டு வருடம் தண்டனை கொடுக்கப் பட்டு அதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் மக்கள் சபை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார். அந்த வார்த்தை என்னவென்றால் ‘மோடிகள்’ எல்லோரும் திருடர்கள் அவர்கள் திருடிவிட்டு நாட்டினை விட்டு ஓடிவிடுவார்கள் என்று. ஆனால் மோடி என்பது ஒரு குஜராத்தி ஜாதியினைக் குறிக்கும் என்பதால் அதனால் பாதிக்கப் பட்ட ஒருவர் தொடரப் பட்ட வழக்கில் தான் தண்டனை பெற்றுள்ளார். அவர் குறிப்பிட்டதாக சொல்லப் படும் ‘மோடி’ என்பது சூதாட்டத்தில் தொடர்புடைய 'லலித் மோடி' லண்டனுக்கு ஓடிப் போனதும், பாங்கில் கடன் வாங்கி கட்டமுடியாமல் லண்டனுக்கு ஓடிய ‘நிராவ் மோடி’யினை குறித்தாலும், இந்திய நாட்டு பிரதமரையும் அவர் சார்ந்த மோடி வகுப்பினரையும் குறிவைத்து சொல்லப் பட்ட வார்த்தை என்று வழக்குத் தொடரப் பட்டு தண்டனையும் வழங்கப் பட்டது.

            பாரத நாட்டினில் சுதந்திரத்திற்காகவும், நாட்டிற்காகவும் அதிக தியாகம் செய்தவர்கள் நேரு குடும்பம் என்பதினை யாரும் மறுக்க முடியாது. இரும்பு மனுசி என்று போற்றப் பட்ட ‘இந்திரா காந்தி’ நாட்டின் ஒருமைப்பாட்டினை காக்க 1984ல் உயிர் தியாகம்  செய்தார். நாட்டில் வேகமான இளம் தலைமுனரின் எடுத்துக் காட்டாக வருவார் என்று எதிர்பார்த்த ‘சஞ்சய் காந்தி’ போதிய அனுபவம் இல்லாமல் விமானம் ஓட்டியதால் 1980 ல் இறந்தார். இலங்கை தமிழர்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று கருதி தீவிர நடவடிக்கை எடுத்த ராஜிவ் காந்தி அந்த இலங்கை தமிழர்களாலே 1991ல்  கொல்லப் பட்டார். அதன் பின்பு இளம் ரத்தம் ராகுல் முன்னேறிவருவார் என்று உ.பி. அமேதி மக்கள் சஞ்சய், ராஜிவ், சோனியாவிற்குப் பின்பு ராகுலை 2004லிலிருந்து 2019 வரை மக்களவை உறுப்பினராக தேர்தெடுத்தார்கள். ஆனால் அவர் தனது தொகுதியில் அதிக கவனம் செலுத்தாது, தேர்தல் நேரத்தில் ஹிந்து மக்களை கவருவதிக்காக மடாதிபதிகள், கோவில்கள் போன்ற வழிபாடு தளங்களில் சென்று கவனம் செலுத்தினார். அடிக்கடி இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டார். ஆகவே அந்த மக்கள் தன்னை மறுபடியும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதி நேரு குடும்பம் மீது பாசமிக்க முஸ்லிம்கள் என்று அங்கே நின்று வாகை சூடினார். ஆனாலும் அவரால் அந்த வயநாடு மக்கள் பலன் அடையவில்லை என்று பரவலாக பேசப் படுகிறது. அவர் அடுத்தது தமிழ்நாடு கன்னியாகுமரி, அல்லது சிவகங்கை  மாவட்டத்தினை குறி வைப்பதாகவே சொல்லப் படுகிறது. இவை எல்லாம் அரசியல். ஆனால் இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் காங்கிரஸ் உதவி தலைவர், பின்பு தலைவர் என்று பதவி வகித்தாலும் அதற்கு முதிர்ந்த செயல்கள் இல்லையே என்று சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என்று கருதுகிறேன்.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1),(2),(3) ஆகியவற்றின் படி மன நலம் பாதிக்கப் பட்டவர், கடன் பிரச்சனையால் திவாலானவர், தேசியக் கொடியினை அவமதித்தவர், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பாலியல் போன்ற பெண்களுக்கான குற்றங்கள், தேர்தலில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர் போன்ற பதவிகளில் நீடிக்க முடியாது என்பது தான் அந்த சட்டம். அவர்கள் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையும் கூறியுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 உட்பிரிவு 4ல் அப்படிப் பட்டவர்கள் உடனேயே பதவி இழக்காமல் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து தண்டனையினை நிறுத்தி மேல் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் அவர்கள் பதவி தொடரலாம். இந்த சட்டப் பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கே விரோதமானது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘லில்லி தாமஸ்’, ‘சுக்லா’ ஆகியோர் மனு செய்திருந்தனர். அவர்கள் சொல்லுவதினை ஏற்று சட்டம் 8 உட்பிரிவு 4 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

            அந்த நேரத்தில் பிஹார் பிற்பட்டோர் சமுதாயத்தினைச்சார்ந்த லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் எம்.பி மசூத், சமாஜ்வாடி எம்.பி. ஆசம் கான், டி எம்.கே மந்திரி ராஜா, எம்.பி. கனிமொழி ஆகியோர் தங்கள் வழக்குகளில் தண்டனை எதிர் நோக்கி இருந்தனர். அவர்கள் கட்சிகள் மத்தியில் மன்மோகன் அரசினை ஆதரித்து இருந்தனர். அந்த சமயத்தில் ராகுல் துணை தலைவராக இருந்தார். மத்தியில் மந்திரி சபை தீர்மானித்து 2013ம் வருடத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தனர். அதில் தண்டனை பெற்றாலும் ஒருவர் முழு மேல்முறையீடு முடியும் வரை பதவி இழக்க வேண்டியதில்லை என்பதாகும். அதன் பின்னர் மன்மோகன் சிங் ஐ.நா சபையில் பேசுவதிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ராகுல் வெளிநாடு சென்று திரும்பியிருந்தார். காங்கிரஸ் சார்பாக சட்ட திருத்த மசோதாவை பற்றி விளக்க ஒரு நிருபர் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நிருபர் கூட்டத்திற்கு வந்த ராகுல் என்ன மசோதா என்று கேட்டுவிட்டு, அதனை பார்வையிட்டபின்பு 'நான்சென்ஸ்' அது குப்பையில் போடவேண்டுமென்று கிழித்து போட்டுவிட்டார். அது அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டப் பட்டது. அதனை அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் மன்மோகன் சிங்கிடம் அவர் காரியதரிசி சொன்னதும், சில நிமிடம் மெளனமாக இருந்த மன்மோகன் சிங் 'காரியதரிசியிடம்' 'do you think I must resign' அதாவது 'நான் ராஜினாமா செய்ய வேண்டுமா' என்று கேட்டுள்ளார். அதற்கு காரியதரிசி அனைத்தையும் டெல்லி சென்று சோனியாவினை கலந்த பின்பு முடிவு எடுங்கள் என்று கூறியதாக அவர் காரியதரிசி Sanjaya Baru ஓய்விற்கு பின்பு எழுதிய சுய சரிதையில் கூறியுள்ளார். அதன் பிறகு டெல்லி திரும்பியதும் சோனியா காந்தியை சந்தித்து விவாதத்திற்குப் பின்பு அந்த திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டதால் லாலு பிரசாத் யாதவ், மசூது, ராஜா, கனிமொழி, ஆசாம் கான் ஆகியோர் சிறைவாசம் சென்றனர். காங்கிரஸ் யு.பி.ஏ. கூட்டணி அரசும் பதவி இழந்து 2014ல் பி.ஜே.பி அரசு பதவி ஏற்று இன்று வரை பதவியில் இருப்பதால் மதத்துவேசம், மத கலவரம், சிறுப்பான்மையோர் பாதிப்பு, பசுவின் பெயரால் கொல்லப் படுதல், சமூதாய ஒற்றுமைக்கு வேட்டு வைத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுள்ளன என்பதினை யாரும் மறுக்கமுடியாது. இதேபோன்று தான் 2019ல் ராகுல் பிரதமந்திரியை ரபேல் விமானம் வாங்கிய விககாரத்தில், 'பிரதமரை குறிக்கும் விதமாக 'சவுக்கிடா சோர்' அதாவது காவலாளி திருடன் என்று குறிப்பிட்டு பேசியதால் உச்ச நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டு, 'நிபந்தனையற்ற மன்னிப்பும்' பெற்றார்.

            ‘ராஜா வீட்டு கன்றுக் குட்டி’ என்ற நினைப்பில் மனம்போன போக்கில் காரியங்களை நடத்துவதால்  மிகவும் விசுவாசிகளான குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, ஜோதிர்மயி சிந்தியா, ஜெட்டின் பிர்சாடா அசாம் ஹேமந்த் சர்மா, அசோக் சவான், கர்நாடக கிருஷ்ணா,அம்ரிந்தர் சிங்   போன்றவர்கள் கட்சியில் இருந்து ஒன்று விலகினர்  அல்லது தாமரை இலை தண்ணீராக இருந்து வருகின்றனர். தவளையும் தன் வாயால் கெடும் என்பதால் ராகுல் தன் வாயால் கெட்டுவிட்டு கன்னியாகுமரியிலிருந்து காஸ்மிர் வரை மராத்தான் நடை போட்டால் தனக்கு 2024 தேர்தலில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார். மராத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் மாரத்தான் போட்டியினை நடத்துனருக்கு எல்லா நேரத்திலும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கக் கூடாது. ராகுல் பதவிநீக்கம் தன் வினை தன்னைச் சுடும் என்பதிற்கு எடுத்துக் காட்டு என்று  இப்போதாவது உணர்ந்தால் சரிதானே!

           

           

           

தாழ்த்தப் பட்ட மக்களின் எழுச்சி நாயகர் அம்பேத்கர்!.


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நாளை சித்திரை முதல் நாள், தமிழ் மக்கள் கொண்டாடும் சித்திரை திருவிழாவிற்கு ஆரம்பம் நாள். அத்தோடு அனைவராலும் அண்ணல் என்று புகழைப் பட்ட அம்பேத்கர் பிறந்த நாளாகும். அவருக்கு மாலை போடுபவர்களுக்கு அவர் ஏன் ‘அண்ணல்’ என்று அழைக்கப் படுகிறார் என்று கேட்டால் இந்திய அரசியல் சட்டத்திற்கு தலைமையேற்றவர் என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் அவர் இந்திய ஜாதியக் கொடுமையினை காலில் போட்டு மிதித்துவிட்டு பீனிக்ஸ் பறவையாக உயர்ந்தவர் என்று பலருக்கும் தெரியாது.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா,உயர் தாழ்வு உயர்வு சொல்வது பாவம்’ என்றார் சுப்ரமணிய பாரதி. அந்த ஜாதிய கொடுமைகளை வேரறுக்க சட்டத்தின் மூலம் அடித்தளம் அமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். 14.04.1891 அன்று பிறந்தவர். அவருடைய தந்தை ராம்ஜி காரெகோன் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றினார். அவர் ‘மகர்’ என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய, தீண்டத்தகாத இனத்தில் பிரிவில் பிறந்தவர். ராம்ஜிக்கு இரண்டு மகன்கள். அதில் இளையவர் அம்பேத்கர் ஆகும். 1901 ம் ஆண்டு அவர்களுக்கு ராம்ஜி ஒரு கடிதம் எழுதியிருந்தார். தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு கோடை விடுமுறை கழிக்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதனை அறிந்த அம்பேத்கரும், அவருடைய சிறு வயது அண்ணனும் ‘சட்டாரா’ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி ‘மசூர்’ வந்திறங்கினர். அவர்களின் தந்தை வேலை காரணமாக ரயில் நிலையம் வரவில்லை. அங்கிருந்து தந்தை வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும். ஆகவே சிறுவர் இருவரும் ஒரு மாட்டு வண்டியை  வாடகைக்கு அமர்த்த முயன்றனர். ஒரு மாட்டு வண்டி உரிமையாளர் அந்த சிறுவர்கள் கீழ் ஜாதி என்று தெரிந்து அவர் வர மறுத்து விட்டார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு நல்ல மனம் கொண்ட ரயில் நிலைய மேலாளர் வேறொரு மாட்டு வண்டி ஓட்டுனரிடம் அந்த சிறுவர்கள் பரிதாப நிலையினை எடுத்து கூறி அவர்களை தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு வேண்டினார். சிறிது தயக்கத்திற்குப் பின்பு அந்த மாட்டு வண்டிக்காரர், 'என் வண்டியில் அவர்கள் வரலாம், ஆனால் அவர்கள் தான் ஓட்ட வேண்டும், நான் அவர்கள் பக்கத்தில் உட்கார மாட்டேன், வாடகையும் அதிகம் வேண்டுமென்றார்’. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டடது. வண்டி உரிமையாளர் அவர்கள் தீண்டத்தகாதவர் ஆனதால் அவர்கள் பக்கத்தில் உட்காராது வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.

போகும் வழியில் அந்த சிறுவர்களுக்கு பசி எடுத்தது, ஆகையால் அவர்கள் கொண்டு வந்த உணவை தின்றார்கள். தாகம் தீர்க்க வழி நெடுக தண்ணீர் கேட்டார்கள் ஆனால் யாரும் கொடுக்க வில்லை. அதே போன்று அம்பேத்கர் படித்த பள்ளியில் அவரை மற்ற பிள்ளைகளுடன் அமர அனுமதிக்க வில்லை. அவருக்கு உட்கார ஒரு சாக்குப் பை கொடுத்தார்கள். அதேபோன்று பள்ளி தண்ணீர் தொட்டியில் அவரை தாகம் தீர்க்க விட வில்லை. மாறாக பள்ளி காவலாளி  உயரத்தில் நின்று கொண்டு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அம்பேத்கரை கையில் ஏந்தி தண்ணீர் குடிக்க வைத்தாராம். ஏதாவது ஒரு நாள் காவலாளி அலுவளுக்கு வரவில்லையென்றால் அம்பேத்கர் தாகத்தினை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். மற்ற மாணவர்களுக்கு ‘சமஸ்க்ரிதம்’ போதனை செய்தால் அவருக்கு மறுக்கப் பட்டதாம். மேற்கொண்ட சமுதாய கொடுமைகள் கண்டு மனம் வெதும்பி நாமும் மற்றவர்களுக்கு மேல் சமுதாயத்தில் உயர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து படிக்க தொடங்கினாராம். வகுப்பில் முதல் மாணவராகி, இங்கிலாந்தில் மேல் படிப்பிற்கு இலவச சலுகை பெற்று உயர்ந்த பொருளாதார பட்டம் பெற்றார், அத்துடன் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி டாக்டர் பட்டமும் பெற்றார். பின்பு லண்டனில் பாரிஸ்டர் சட்டம் பட்டமும் பெற்றார். எந்த சமுதாயம் அவரை ஒதுக்கியதோ அதே சமுதாயத்தில் உள்ள புரையோடிய ஜாதிய முறையினை ஒழித்து பின் தங்கிய, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சலுகைகள் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1950 அரசியலமைப்பு சபையின் தலைவராகி முதன் முதல் சட்ட மற்றும் நீதி அமைச்சரானார். ஆகவேதான் இன்றும் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆளுயர சிலை உள்ளது. அதனால் தான் அவர் பிறந்த நாளை சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.