(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
நமது குழந்தை பருவத்தில் தாய் நமக்கு உயிர் கொடுத்த நண்பன், பள்ளி பருவத்தில் பள்ளித் தோழன் நண்பன், கல்லூரி காலங்களில் கல்லூரிக்காளைகள் நண்பர்கள், திருமணம் ஆனதும் மனைவியும் நண்பி, அலுவல் காலங்களில் அலுவலர்கள் நண்பர்கள், பயண காலங்களில் பயண நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் உற்ற நண்பர்களா என்பதினை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கிருத்துவ 384 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் நண்பனுக்கு உதாரணமாக, 'இரண்டு உடல்களில் இருக்கும் ஓருயிர்' என்று கூறியுள்ளார். அது தான் உற்ற நண்பனுக்கு பொருளாகும்.
இத்தாலியன் அறிஞர் மைக்கேல் கார்லோன், 'நண்பன் அருகில் இருப்பான், ஆனால் கூடவே இருந்து கொலை அறுக்கும் நண்பனும் உள்ளனர். ஆங்கிலத்தில் 'friend' என்பது நண்பன் என்றும், Frenemies' கூடவே இருந்து கொலை அறுப்பவனை சொல்வார்கள்.
திருக்குறளில் நட்பு பற்றி கூறும்போது, 'உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு' என்று கூறுவார்கள். அதற்கு என்ன பொருள் என்றால், ஒருவன் ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும்போது அவனுடைய வேஷ்டி அல்லது கைலி அல்லது துண்டு ஓடுகிற ஆற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டால் எவ்வாறு தனது அந்தரங்க உறுப்புகளை கைகளைக் கொண்டு மறைத்துக் கொள்வானோ அதேபோன்று உற்ற நண்பன் ஒருவனுக்கு துன்பம் வந்தால் ஓடி ஒளியாது ஓடோடி வந்து தோள் கொடுத்து உதவுவான் என்பதாகும். நல்ல நண்பன் ஒரு குடும்பத்திற்கு சமமானவன். ஒருவனுடைய உண்மையான பண்புகளை வெளிக்கொணருவதும் அவனேயாகும்
நாம் குழந்தை பருவத்தில், பள்ளி பருவத்தில், கல்லூரி காலங்களில், அலுவல் இடங்களில் பலரினிடம் பழகியிருப்போம், ஆனால் மனதில் நிலைத்து இருப்பவர்கள் சிலரே! தினந்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகளை படித்திருப்போம், ஆனால் மனதில் நமக்கு பிடித்த செய்தியினை மட்டும் நிலை நிறுத்துவதில்லையா? அதேபோன்று தான் நட்பும்
கூடா நட்பு பற்றிய குரல் கூறும்போது
,'சீரிடம் காணின் எறிதற்கு பட்டாடை
நேரா நிறைந்தவர் நட்பு' என்பதாகும்.
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பயணிப்பவனின் நட்பானது, பொருளை தாங்குவது போல தோன்றினாலும், பொருளை வெட்டி எறிவதற்கு துணை செய்யும் பட்டடை போன்றதாகும்.
நல்ல நண்பன் விலை மதிக்க முடியாதவன், நம்முடைய ரகசியம் அறிவான் ஆனால் குழிதோண்டி புதைக்க மாட்டான், நம்முடைய கனவினை அறிவான், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நம்மை விரும்புவான், நம்மைப் பற்றி பொறாமை கொள்ளாதவன், இன்ப துன்பங்களில் பங்கேற்பான்.
டென்னிஸ் விளையாட்டில் ஸ்விஸ் நாட்டினைச் சார்ந்த ரோஜர் பெடெரரும், ஸ்பெயின் ரபேல் நாடாரும் விளையாடும் போது மைதானத்தில் எதிரிபோல விளையாடுவார்கள் ஆனால் விளையாடி முடிந்ததும் நண்பர்களாக பழகுவார்கள்.
உயிர் தோழன் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு கதையுண்டு. சோழ மன்னன் கோப்பெருந்தசோழனும், பாண்டிய சாம்ராஜ்யத்தில் புலவராக இருந்த பிசிராந்தையாரும் நண்பர்கள். ஆனால் அவர்கள் அடிக்கடி சந்திப்பதில்லை. ஒரு சமயத்தில் கோப்பெருஞ்சோழனின் மகன்களுக்குள். தந்தை இறந்த பின்பு யார் முடி சூட்டுவது என்று சண்டை வந்து விட்டது. அதனை தீர்க்கமுடியாமல் மன்னன் வடக்கிருந்தான். அதாவது சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தான். மன்னன் தனது நண்பர் பிசிராந்தையாருக்கு இது பற்றி கடிதம் எழுதி மகன்களுக்குள். நடக்கும் சண்டைக்கு தீர்வு காண விரைய வேண்டுமென்று கடிதம் எழுதினார். அதனை பெற்றவுடன் பதறிக் கொண்டு பிசிராந்தையார் சோழ மண்டலுக்கு விரைந்தார். ஆனால் அதற்கு முன்பே மன்னர் இறந்து விட்டார். அது மட்டுமல்லாமல் பிசிராந்தையார் வந்தால் அவர் அங்கேயே தங்கி இறந்து விட்டால் அவருக்கும் தனது குழிக்கு அருகில்
ஒரு குழி செய்தார் என்பதும் நட்பிற்கு ஒரு இலக்கிய வரலாறு உண்டு.
கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பன், ஆங்கிலத்தில் 'Frenemies' உதாரணத்திற்கு முகலாய
சக்ரவர்த்தி சிராஜுத்
தவுலா காலத்தில் நடந்ததினை உதாரணமாக கூறலாம். வங்கத்தில் பிரிட்டிஷ் கம்பனி கவர்னராக ராபர்ட் கிளைவ் இருந்தார். அவர் முகலாய மன்னருக்கு கடிதம் எழுதி தனக்கு கப்பம் கட்டச் சொன்னார். ஆனால் முகலாய மன்னர் மறுத்துவிட்டார். மிர் ஜாபிர் என்ற போர் தளபதி முகலாய படையில் இருந்தார். அவர் சிறு சிப்பாயாக இருந்து பல சாகசங்களை செய்ததால் மன்னர் அவருக்கு படைத்தளபதி வரை அந்தஸ்து கொடுத்தார். அவருக்கு ஒரு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. அது என்னவென்றால் ஆங்கிலேய படையுடன் தான் கைகோர்த்தால் வருங்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தினை கைப்பற்றலாம் என்று. அதனை செயல் படுத்துவதில் மும்முரமாக செயல் பட்டார். முகலாய மன்னர் பிரிட்டிஷ் படையுடன் சண்டையிட சிராஜுட் தவுலாவை அனுப்பினார். ஆனால் பிரிட்டிஷ் படையுடன் சண்டையிடாது அவர்களுடன் தன் படையையும் சேர்த்தார். ஆகவே தான் பிரிட்டிஷ் முகலாய சாம்ராஜ்யத்தினை பிடிக்க முடிந்தது. அதற்காகத்தான் மிர்ஜாபார் துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக சரித்திரத்தில் உதாரணத்திற்கு கூறுவர்.
நல்ல நட்பிற்கு சில உதாரணங்களை சொல்லலாம் என நினைக்கின்றேன்.
1) இந்திய சுதந்திர போராட்டத்தில் ஹிந்துத்வ கொள்கையினை தீவிர பக்தர் 'பால் கங்காதர திலக்' இருந்தார். முகமது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம் லீக்கு கட்சியில் தலைவர் மட்டுமல்லாமல் சிறந்த வழக்கறிஞரும் ஆகும்.. ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக பல வழக்குகளில் இங்கிலாந்து வரை சென்று வாதிட்டவர். திலக்கும், ஜின்னாவும் உற்ற நண்பர்களாக இருந்தனர். சுதந்திரமும் பெற முடிந்தது.
2) இந்திய இளம் வயது கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் தனது அறிவு கட்டுரைகளை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஹெரால்டு சார்டி அவர்களுக்கு அனுப்பினார். ராமானுஜத்தினை நேரில் ஹெரால்டு பார்க்காவிட்டாலும் அவருடன் நட்புக் கொண்டார்.
3) இங்கிலாந்து ராணி விட்ட்டோரியா உருது மொழிப் பெயர்ப்பாளர் அப்துல் கரீமின் தீவிர ரசிகை. அத்துடன் அவரிடம் சமையல் குறிப்புகளையும் கற்றுக் கொண்டாராம்.
4) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், எழுத்தாளர் புபுல் ஜெயகரும் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். உற்ற நண்பர்கள். இந்திரா காந்தி பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தார். ஆனால் அவர் உயிரோடு இருக்கும்போது அதனை வெளியிட முடியவில்லை. இந்திரா அம்மையார் இறந்ததும் அது வெளி வந்தது.
இஸ்லாத்தின் வழிமுறைப் படி ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களை ஒரு காமப் பொருளாக நோக்கக் கூடாது. வரம்பு மீறக்கூடாது. இஸ்லாமிய சமூக வரலாற்றில் பிறருடன் நட்புடன் இருக்க வலியுறுத்துகிறது. அண்டை வீட்டார் பசியினை போக்க வலியுறுத்துகிறது. ரஸூலல்லா இறை அருள் இறங்கிய பின்பு நடுங்கிய உடம்புடன் வந்தவர்களை அரவணைத்து முதலில் கொள்கையினை ஏற்றுக் கொண்டது கதிஜா பிராட்டியார் என்பது வரலாறு. மக்கா வாசிகள் ஓரிறை கொள்கையினை ஏற்றுக் கொள்ளாது மட்டுமல்லாமல் ரஸூலல்லாவினை கொல்லவும் முடிவு செய்தார்கள். அதனை அறிந்த ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மதினா புறப்பட்டார்கள். அவர்களுடன் தோழர் அபூபக்கரும் வருகிறேன் என்று குடும்பத்தினை விட்டு புறப்பட்டது இஸ்லாத்தில் நட்பிற்கு ஓர் இலக்கணம் ஆகும்.
இஸ்லாத்தில் நிலையான நட்பிற்கு வரம்பிரை சொல்லியுள்ளார்கள்:
1) நண்பர் சொல்வதை மறுத்து சொல்லக் கூடாது. நண்பரை பகைத்துக் கொள்ளக்கூடாது.
2) நண்பனை கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
3) நண்பனை வெறுத்து பார்க்கக்கூடாது.
4) நண்பனுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்
இந்து சமயத்தில் முஸ்லிம்களுக்கும் மரியாதை கொடுக்கும் உதாரணத்திற்கு கேரள மாநிலம் சபரிமலை வழிபடும் பக்தர்கள் சபரிமலை அடியில் இருக்கும் ‘வாவர்’ பகவானை வணங்கி செல்கினறனர். அதற்கு ஒரு வரலாறு உண்டாம். அய்யப்பன் என்ற மணிகண்டன் தியான அடிப்படையில் வாவர் பகவானுடன் நட்புடன் இருந்தாராம். அய்யப்பன் மலைமேலில் குடிகொண்டும், வாவர் அடிவாரத்தில் தங்கியதால் பக்தர்கள் இருவரையும் வணங்குவதாக சொல்லப் படுகிறது.
ஆனால் இன்று நமது நாட்டில் தேர்தல் நேரத்தில் ஹிந்து-முஸ்லிம்களின் வேற்றுமைக்கு தூபம் போடும் பிரச்சாரங்கள் தலை விரித்து ஆடுகிறது என்பதினை பத்திரிக்கை, காணொளி மூலம் அறிகிறோம். அரசியலில் நண்பர்கள் என்று கூறும்போது, 'அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை, நிரந்தர பகைவர்களுமில்லை' என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ‘அதிகாரி’ கட்சி தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பி.ஜெ.பி, யில் உள்ளார். ஆனால் அவர் தனது முன்னாள் தலைவரை தரம் தாழ்ந்து விமரிசத்தது பத்திரிக்கையில் வந்துள்ளது. பிகாரில் இரண்டு முறை லாலு பிரசாத் கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட நிதிஸ் குமாரை அரியணையில் லாலு பிரசாத் யாதவ் அமர்த்தினார். என்னானது இன்று நிதிஸ் குமார் பி.ஜெ.பி யுடன் கூட்டு சேர்ந்து மந்திரி சபை அமைத்துள்ளார்.
காஸ்மீரில் யாருக்கும் அறுதி பெருமான்மை கிடைக்காத பட்சத்தில் மகமூதா பி.டி பி கட்சி அதிக எண்ணிக்கை இல்லாவிட்டாலும் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தர காங்கிரஸ் தயார் என்று கூறியது. ஆனால் பி.ஜே.பி யுடன் மகமூதா கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இன்று என்னானது ஆட்சி பதவியிழந்து மகமூதா வீட்டு காவலில் வைக்க வேண்டிய நிலை வந்தது. ஆகவே தான் அரசியலில் இதெல்லாம் சகசமய்யா என்று சிரிப்பு நடிகர் கவுண்ட மணி கதை கந்தலாகி கூத்தும் நடைபெறுகிறது.
உலக அளவில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர்(1939-1945) இரு அணிகளாக இருந்தன நாடுகள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரசியா ஒரு அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றுமொரு அணியிலும் இருந்தது. ஆனால் இன்று அமெரிக்காவும், ரசியாவும் எதிரும் புதிருமாக இருக்கின்றதினை அறியலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்லும் அளவிற்கு அமெரிக்காவும், ஜப்பானும் உள்ளன.
நாட்டு மக்கள் மத, இன, ஜாதி வேறுபாடுகளை களைந்து போராடியதால் தான் சுதந்திரம் பெற்றோம், ஆனால் இன்று அந்த வேறுபாடுகளுக்கு தூபம் போட்டால் எப்படி நாம் வளர்ந்த நாடாக முடியும், எதிரியினை எப்படி சந்திக்க முடியும் என்று யோசிக்க வேண்டாமா?.
நீதி கதை ஒன்றினை உங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம் என எண்ணுகிறேன். ஒரு காட்டில் நான்கு காளை மாடுகள் ஒற்றுமையுடன் காட்டில் மேய்ந்தன. அந்த காட்டில் வாழும் புலி அந்த கொழுத்த காளைகளை தனக்கு இரையாக்க தகுந்த சமயம் பார்த்ததாம். காளைகளை பிரிக்க புலி ஒரு காளை மாட்டிடம் மற்ற மாடுகள் அதிகம் விளைந்த புல்லை அவசரமாக, அவசரமாக உனக்கு இல்லாமல் சாப்பிட்டு விடுகின்றன என்று தூண்டி விட்டதாம். இப்படியே மற்ற மாடுகளையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி பிரித்து விட்டதாம். கெட்ட வார்த்தைகளை கேட்ட மாடுகள் பிரிந்து தனித்தனியே புல்லை மேய ஆரம்பித்தனவாம். புலியும் இது தான் சமயம் என்று ஒவ்வொரு மாடாக தனக்கு இரையாக்கியதாம். பழமொழி ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவது காளைகள்-புலி கதையில் உண்மையாகி விட்டது அல்லவா? ஆகவே குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் மனித ஒற்றுமை-நட்பு வளர்ப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். 1960ம் வெளிவந்த தமிழ் படத்தில் 'ஒற்றுமையால் வாழ்வதாலே உண்டு நன்மையே' என்று மறுபடியும் 64 ஆண்டுகளுக்கு பின்புறமும் சொல்லும் அளவிற்கு நமது நாட்டு நடப்பு இருக்கின்றது வெட்கமாகத் தானே இருக்கின்றது.
. நாம் குழந்தை பருவத்தில், பள்ளி பருவத்தில், கல்லூரி காலங்களில், அலுவல் இடங்களில் பலரினிடம் பழகியிருப்போம், ஆனால் மனதில் நிலைத்து இருப்பவர்கள் சிலரே! தினந்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகளை படித்திருப்போம், ஆனால் மனதில் நமக்கு பிடித்த செய்தியினை மட்டும் நிலை நிறுத்துவதில்லையா? அதேபோன்று தான் நட்பும்.