Wednesday, 16 October 2024

மத சார்பின்மை ஐரோப்பியர்களால் உருவானதா?

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

சில பெரிய பதவியில் இருப்பவர்கள் தாங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்ம வேண்டும் நினைக்கின்றனர். அதுவும் தமிழக மக்களின்  மத  வேறுபாடுகளை தூண்டி விட்டு பிரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல பொய்யிகளையும், புரட்டுகளையும் அவிழ்த்து விடுகின்றனர். அதில் சமீபத்தில் 'இந்தியாவில் மத சார்பின்மையினை என்பது ஆங்கிலேயரால் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்று என்று கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.. அது போன்று  தமிழக மக்கள் மதத்தால் பிரிந்து இருந்தார்களா என்றால் இல்லவே இல்லை என்று கடந்த கால நிகழ்களும், சமீபத்திய நிகழ்வுகளும் எடுத்துக் காட்டியுள்ளன.

            மேலை நாட்டு  வரலாற்று ஆசிரியர்கள், இந்திய வரலாற்று ஆசிரியர்களான  கிரேக்க கி.மு நான்காம் நூற்றாண்டு இந்தியன் வரலாற்று பற்றி எழுதிய மெகஸ்தனிஸ், இந்திய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு சான்ஸ்க்ரிட் ஆசிரியர் பனினி, அதேபோன்று கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு சான்ஸ்க்ரிட் ஆசிரியர் ஆரியப்பட்டா, கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஜெயின் கணித மேதை மஹா வீர், கி.பி.12ம் நூற்றாண்டு காஸ்மீரி வரலாற்று ஆசிரியர்கள் கல்காணா, பில்காணா, வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா, ஆர்.சி.மஜூம்தார், ரொமிலா தாப்பர், நீல கண்ட சாஸ்திரி போன்றோர் கூட இந்தியர்கள் மதத்தால் பிரிந்து சண்டையிட்டனர் என்று சொல்லவில்லை. நிலத்தினை கைப்பற்றுவதில் தான் மன்னர்கள் ஆர்வம் காட்டினர். அதனை விட்டுவிட்டு மக்களை மதத்தின் பெயரை பயன் படுத்தி தூண்டி விடவில்லை. ஆனால் சமீப காலங்களில் ஆட்சி அதிகார போதையில் மதத்தின் பெயரால், ஆங்கிலேயர் பெயரை பயன் படுத்தி இந்திய மக்களை பிரிக்கும் சதியில் ஈடுபடுவது அவர்களின் பேச்சிலிருந்து தெளிவாகிறது.

            தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹரப்பா நகரில் 1921ம் ஆண்டு ராவ் பகதூர் தயா ராம் சாஹ்னி என்பவர் முயற்சியில் ஆங்கிலேய தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர் சர் குபேர்ட் மார்ஷல், மற்றும் ஆர்.டி பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவால் அகழ் ஆராய்ச்சியில் திராவிட மக்கள் நாகரீக வளர்ச்சியான 'Indus civilisation' கண்டு பிடிக்கப் பட்டு உலகிற்கு அறிவித்த பின்னரும் அது ஆரியர் நாகரீகம் என்று கூக்குரலிடும் பெரியவர்களும் நம்மிடையே இருக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமான செயலாகவும், வம்பான பிதற்றலாகவும் உங்களுக்குத் தெரியவில்லையா?

            உங்களுக்கெல்லாம் தெரியும் இந்திய மண்ணை ஆண்ட ஆங்கிலேயரை விரட்ட 1857ல் ஏற்பட்ட முதலாம் சுதந்திரப் போரிலும், அதன் பின்பு நடந்த பல்வேறு போராட்டங்களிலும் இந்திய மக்கள் மத வேறுபாடுகளைக் களைந்து சுதந்திர வேட்கையில் இணைந்து செயலாற்றினர். கிழக்கு இந்திய கம்பனி நிர்வாகத்தினால் ஏற்பட்ட குழப்பதினை அறிந்த பிரிட்டிஷ் அரசி விக்டோரியா 1857ல் அதிகாரத்தினை கையிலெடுத்தது மட்டுமல்லாமல் 1858ம் ஆண்டு ஒரு (Decree) ஆணை வெளியிட்டார். அது என்னவென்று தெரியுமா, பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் மதங்களான இந்து மதம், இஸ்லாமிய மார்க்கம், கிருத்துவ, சீக்கிய மதம் போன்றவற்றில் தலையீடாது என்பது தான்.

            இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த இந்திய அரசியலமைப்பு குழு தனது பரிந்துரையில் கீழ்கண்ட சரத்துகளை சேர்த்தது.

அவை கீழ் கண்டவை:

1) தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்கிறது

2) சிறு பான்மையினர் மத சுதந்திரத்தினை பாதுகாக்கிறது.

3) பிறப்பால் ஏற்படும் தீண்டாமையினை வேரறுக்கிறது.

4) குழந்தை திருமணத்தினை தடுக்கிறது.

5) இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் மத சார்பின்னையில்லாமல், விஞ்ஞானத்துடன் கூடிய பகுத்தறிவு கொண்டவனாக இருக்க அறிவுறுத்துகிறது.

6) அரசு எல்லா மதத்திற்கும் சமமான அந்தஸ்து கொடுக்கிறது.

7) அரசு மத சம்பந்தமான காரியங்களில் தலையிடாது.

8) அரசு அரசியல், பொருளாதாரம், சமூக, பண்பாடு சம்பந்தப் பட்ட காரியங்களில் மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடாது.

போன்றவையாகும்.

உலகில் இந்திய நாடு, அமெரிக்கா, துருக்கி, மெக்சிகோ, தென் கொரியா போன்ற நாடுகளுடன் மத சார்பற்ற நாடாக திகழ்கிறது. ஆனால் சமீப காலங்களில் அரசியல் சட்டமே அந்நியர் புகுத்தியது என்றும் டாக்டர் அம்பேத்கார் குழு கூறிய அரசியலமைப்பே தவறு அதனை மாற்றி அமைக்க வேண்டுமென்று  சிலர் கூறுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

            உங்களுக்கெல்லாம் தெரியும் பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரசில் உள்ள சீக்கிய கோல்டன் கோவிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து ஆக்கிரமித்து இந்திய ஒருமைப் பாட்டிற்கும், ராணுவத்திற்கும் விடும் சவாலாக இருந்தது. ஆகவே இரும்பு பெண்மணி பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தினை அனுப்பி கோவிலையும், பஞ்சாப் மாநிலத்தினையும் மீட்டார். புது டெல்லியில் உள்ள பிரதமர் இந்திரா காந்தி இல்லத்தினை நான் 1980ம் ஆண்டு .பி(உளவுத்துறை) பயிற்சிக்காக, ரவி ஆறுமுகம் .பி.எஸ்.என்பவருடன் பார்த்திருக்கிறேன். அப்போது ஒவ்வொரு கேட்டுகளிலும் பலத்த பாதுகாப்பு இருந்தது அதில் அந்த வீட்டில் உள்ள உள் கேட்டுகளில் சீக்கியர் பாதுகாப்பு இருந்தது.

1984 பஞ்சாபில் இந்திய ராணுவம் கோல்டன் டெம்பிள் வளாகத்தில் நுழைந்து சீக்கிய தீவிரவாதிகளை களை எடுத்ததில் உலகமெங்கும் இருக்கும் சீக்கிய மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது இந்திய உளவுப் படை அமைப்பு இந்திரா காந்திக்கு ஒரு குறிப்பு அனுப்பியது, அது என்னவெனில் பஞ்சாபில் புனித கோவில் சம்பவத்திற்குப் பின்பு சீக்கியர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள், ஆகவே உங்கள் வீட்டினை பாதுகாக்கும் சீக்கியர்களை நீங்க்கலாமா என்று கேட்டிருந்தார்கள். அதற்கு இந்திரா காந்தியின் ஆலோசகர் ஆர்.கே.தவான் பரிந்துரையும் செய்திருந்தாராம். ஆனால் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி "நீங்கள் என்ன நினைக்கிண்றீர்கள் சீக்கியர்கள் எல்லாம் இந்தியர்களில்லையா" என்று கேட்டுவிட்டு அதனை திருப்பி அனுப்பி விட்டாராம். ஆனால் அந்தோ பரிதாபம் அந்த சீக்கிய பாதுகாப்பு குழுவில் கொலையாளிபியந் சிங்கும்’ இருந்தானாம். இந்திரா காந்தி ஏன் அப்படி சொல்லியிருப்பார் என்றால் பாதுகாப்பு படையினரை மதத்தால் பிரிக்கக் கூடாது என்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டத்தான். இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதி(LOC) பாதுகாப்பில் முஸ்லிம் படை வீரர்களும் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களை மதத்தின் பெயரால் பிரிக்கக் கூடாது என்ற கொள்கையினால் தான். இந்த போதனை ஆங்கிலேயர் போதித்ததா அல்லது இந்தியரால் கடைப் பிடிக்கப் பட்டதா என்று நீங்களே சொல்லுங்கள்:

இன்னொரு மத சார்பின்மைக்கு எடுத்துக் காட்டு ஒரு நீதித்துறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1994-1997  இருந்த .எம். அஹமடி(A.M.Ahamadi) காலத்தில் நடந்ததினை  எழுத்தாளர் (Insiyah Vahanvaty) இன்சியா வாஹன்வடி எழுதிய 'The Fearless Judge' பயமில்லாத நீதிபதி என்ற புத்தகத்தில் தலைமை நீதிபதி அஹமடி வாழ்க்கையில்  நடந்த ஒரு நீதி தவறா சம்பவத்தினை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

1984ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள  பொற்கோவிலில் இந்திய ராணுவ அதிரடி நடவடிக்கைக்கு தலைமையேற்று நடத்தித்தந்த ராணுவ தளபதி வைத்யா பதவி ஓய்வு பெற்ற இரண்டு வருடத்திற்குப் பின்பு காரில் செல்லும்போது சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற இரண்டு சீக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகளும் முன்னாள் இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மா மகள் கீதாஞ்சலி, மருமகன் லலித் மக்கான் ஆகியோரை 31.7.1985 அன்று கொலை செய்திருந்தார்களாம்.

அந்த ஜிந்தா மற்றும் சுகா என்ற இரண்டு சீக்கியவாதிகளும் கைது செய்யப்பட்டு கீழ் கோர்ட்டில் ஆஜர் படுத்தபோது, நாங்கள் தான் அந்த கொலைகள் செய்தோம்,  அதற்காக சீக்கியர்களாகிய நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று மார் தட்டினார்களாம். அவர்களுடைய அடாவடித் தனத்தினைப் அறிந்து கீழ் கோர்ட் நீதிபதி இந்த வழக்கு மிகவும்அரிதானதிலும் அரிதானது’ என்று அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை அளித்தாராம். அந்த வழக்கு உயர் நீதிமன்றம் சென்று பின்பு உச்ச நீதிமன்றத்திற்கு அப்பீலுக்கு சென்றதாம். அதனை தலைமை நீதிபதி அஹமடி மற்றும் நீதிபதி ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததாம். இதற்கிடையில் சீக்கிய தீவிரவாதிகளிடையே காலிஸ்தான் தலைவராக இருந்து பொற்கோவில் ஆக்கிரமிப்பில் தலைமை தாங்கி ராணுவத்தால் கொல்லப் பட்ட பிந்தரவாலாவிற்கு பிறகு, கடவுள் போல போற்றப்படும் தலைவர்களாக  கருதப் பட்டனர்.

            1992ம் ஆண்டு சீக்கிய தலைமை பீடமான அகாலி தக் தலைவர் சிம்ரஜித் சிங் மான் அந்த இவர்கள் மரண தண்டனையையும் நிறுத்தி வைக்க மனு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து 50 சீக்கிய தலைவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் உச்ச நீதி மன்றம் முன்பு கூடினர். எதற்காக கூடினர் என்றால் தலைமை நீதிபதியினை நேரில் சந்தித்து மரண தண்டனையினை எப்படியாவது நிற்பாட்ட வேண்டும் ஆர்வ உந்தலால். 31.10.1986ம் ஆண்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது மஹாத்மா காந்தி நினைவு நாளின் போது மலர் வளையம் வைக்க சென்ற போது சீக்கிய தீவிரவாதி திட்டமிட்டு துப்பாக்கியால் ராஜீவை சுட்டார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக அவர் தப்பிப் பிழைத்தார். அதில் குற்றம் சாட்டப் பட்டு ஆறு வருசமாக சிறையில் இருக்கும் ஜிந்தா மட்டும் சுக்கா எனது நண்பர்கள் ஆகவே அவர்களுடைய மரண தண்டனையினை நிறுத்த வேண்டும் என்று இன்னொரு மனுவும் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி பார்வைக்கு வந்தது. இந்த சமயத்தில்  உச்ச நீதிமன்ற பாதுகாப்பினை ஏற்று நடத்துகிற தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒரு வேண்டுகோள் தலைமை நீதிபதியிடம் வைத்தார். அது என்ன தெரியுமா? நீங்கள் மிகவும் உணர்ச்சிகரமான வழக்கினை விசாரிக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு சீக்கியர் செயலாளராக இருக்கின்றார், அவரை மாற்றி விடுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு ஆபத்து கூட வரலாம் என்றார். அதற்கு தலைமை நீதிபதி எனது செயலர் மீது முழு நம்பிக்கையுள்ளது, ஆகவே அவரை மாற்ற தேவையில்லை என்று நிராகரித்தார். சீக்கியர்களின் அழுத்தத்திற்கு அஞ்சாத தலைமை நீதிபதி தனது சக நீதிபதியான ராமசாமி அவர்களை இரவோடு அழைத்து மரண தண்டனையினை உறுதி செய்து தீர்ப்பு வெளியிட்டு 6.10.1992 அன்று மரண தண்டனையும் நிறைவேற்றப் பட்டது என்றால் மத சார்பில்லாத போதனையை யார் இந்திய மக்களுக்குப் போதித்தது. மைனாரிட்டி சமுதாயத்தினைச் சார்ந்த ஒரு தலைமை நீதிபதிதானே!

            இன்னொரு மத சார்பற்ற இந்தியருக்கு எடுத்துக் காட்டாக உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள பள்ளிவாசலில் உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்று 6.12.1992 இடிக்கப் பட்டு அந்த வழக்கு சவ்வாக இழுத்து அது முடிவாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு உச்ச நீதிமன்றத்தில் 9.11.2019ல் விசாரணைக்கு வந்தது. அதனை தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் சக நீதிபதிகள் பாப்டே, சந்திரச்சுட், அசோக் பூசன், நசீர் ஆகியோர் அமர்வில் வந்தது. அப்போது மத நல்லிணக்கம் வேண்டி அணைத்து நீதிபதிகளும் ஒரு மித்த கருத்தாக அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதியும், அதே நேரத்தில் அரசு 5 ஏக்கரை முஸ்லிம் சன்னி குழுவிற்கு ஒதுக்கி அவர்கள் மசூதி கட்ட உதவி செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. அந்த நீதிக் குழுவில் இருந்த நஷீர் ஒரு முஸ்லிம் இருந்தாலும் ஏன் ஒப்புக் கொண்டார் என்றால் இந்திய மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதால் தானே. அந்த தீர்ப்பிற்கு பின்னர் இந்திய மண்ணில் கலவரம் ஏதும் மூண்டதா. இல்லையே? இந்திய மக்கள் 'மறப்போம் மன்னிப்போம்' என்ற கொள்கையில் பலமான நம்பிக்கை கொண்டவர்களில்லையா? இப்போது சொல்லுங்கள் இந்தியருக்கு மத சார்பின்மை ஆங்கிலேயர் போதித்ததா அல்லது இந்திய மக்களின் பரந்த மனப்பான்மையா என்று?