Monday, 26 January 2026

குரானின் அரு மருந்து நோன்பு

 

குரானின் அரு மருந்து நோன்பு

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ்.()

அல் குர்ஆனில் 2:163 வசனத்தில் , 'நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது, என்று அருளப்பெற்றுள்ளது. அதனுடைய மகிமையினைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ரஜப் மாதத்தில் விதை விதித்து, ஷபாஅன் மாதத்தில் தண்ணீர் ஊற்றி, ரமலான் மாதத்தில் உங்கள் நன்மைகளை அறுவடை செய்யுங்கள் என்பதால் நாம் நோன்பு நோக்குகிறோம். நோன்பின் தாரகை மந்திரமே, தனித்திரு, விழித்திரு, பசித்திரு, வணங்கிடு, வழங்கிடு என்றால் மிகையாகாது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது எவ்வாறு அறிவுபூர்வமான நன்மை என்பதினை அமெரிக்க நரம்பியல் இயக்குனர் 'மார்க் மாட்ஸன்' விவரித்துள்ளார்.  மனிதன் நோன்பு இருந்தால் அவனால் நீண்ட நாட்கள் வாழ முடியும், எவ்வாறு என்றால் உண்ணா நோன்பு இருந்தால் கலோரி மூளை நரம்பு மண்டலத்திற்குச் சென்று, 'பார்கின்சன்' என்ற நரம்பு நடுங்கும் நோயிற்கு, அல்லேமியர் என்ற ஞாபக மறதி நோய்களையும் வராது பாதுகாக்கும் என்கிறார்.

பார்கின்சன் நோயிற்கு  உதாரணமாக மறைந்த உலக ஹெவி வெயிட் சாம்பியன் முகமது அலி, பட்டத்தினை வென்றவுடன் அமெரிக்க சட்டப்படி ராணுவத்தில் பணியாற்றவேண்டும். ஆனால் அவரை வியட்நாம் நாட்டில் யுத்தத்திற்காக உத்திரவு வந்தபோது எனது இஸ்லாமிய மார்க்கம் அநியாயமாக மக்களைக் கொல்ல அனுமதிக்க வில்லை என்று மறுத்ததினால் அவர் பெற்ற பட்டத்தினை பிடிங்கினாலும் மறுபடியும் போட்டியில் பங்கேற்று வென்ற உடல் தகுதியினைக் கொண்டவர். அவர் முதுமை காலங்களில் கை, கால்கள், உடல் நடுக்கம் கொண்டார். அதேபோன்று எனது சென்னை புதுக் கல்லூரி தோழன் முகமது இருபான் படிக்கின்ற காலங்களில் கூடைப்பந்து, பூ பந்து போட்டிகளில் வெற்றி கொண்டவர். அவர் ஹாங்காங்கில் வியாபாரம் செய்தபோது எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அதே சுறுசுறுப்பாக இருந்தார். அவர் சென்னைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டதினை தொடர்ந்து நான் அவருடைய நுங்கம் பாக்கம் இல்லத்தில் பார்த்தபோது எனக்கே அழுகை வந்தது, ஏனென்றால் அவர் கை, கால் நடுங்கும் நோயால் பாதிக்கப் பட்டிருந்தாராம்.

அல்லேமிர் என்பதிற்கு உதாரணமாக எங்கள் ஊரில் பெரியவர் சிலர் மற்றும் சென்னையில் சிலர் ஞாபக மறதியால், வயது மூப்பதால் வெளியே வந்தவர்கள் திரும்பி வீடு வருவதிற்குத் தெரியாமல் அலைவதும் தெரிந்தது.

ஆயிஷா(ரலி) அவர்கள் ரசூலுல்லாஹ் ஷபாஅன் மாதத்தில் நீண்ட நேரம் நோன்பு வைப்பார்கள் என்று ஹதிதில் கூறப்பட்டுள்ளது  இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ரசூலுல்லாஹ் நோன்பு நோற்பதால் பலவீனமோ, சோர்வே அடைய மாட்டார்களாம். ரசூலுல்லாஹ் தோழர்கள் நோன்பு நேரங்களில் போரிடும்போது வயிற்றில் இறுக துண்டினை கட்டிக் கொண்டு போரிடுவார்களாம்.

நோன்பு நேரங்களில் கூட சிலர் வயிறு புடைக்க உண்டுவிட்டு ஏப்பம் விடுவதும், மது குடிப்பதும், சிகரெட்டு புகைப்பதும் இளைஞர்களிடையே இருப்பது வருந்தி கண்டிக்கத்தக்களல்லவா? நோன்பு நேரங்களில் கடைத்தெருவில் வீண் அரட்டை அடிப்பதும், வலிய சண்டை, சச்சரவு இழுப்பதும் தவிர்ப்பது நல்லது தானே!

ரசூலுல்லாஹ் நோன்பு பெருநாள் அன்று வீட்டிலிருந்து மஸ்ஜிதே ஹரத்திற்கு வரும் வழியில் ஒரு சிறுவன் அழுது கொண்டு இருந்தானாம். அவனிடம் விசாரிக்கும்போது தனக்கு புதிய உடை இல்லை என்று கூறியதினை அறிந்து வீட்டிற்கு அழைத்து சென்று அவனுக்கு உடை அணுவிட்டார்களாம். அதுதான் ஈகை. அதனை விட்டு, விட்டு பலர் அறியும் பொருட்டு பெருமைக்காக உதவுவது தான் தான தர்மமா? சிலர் ஜும்மா தொழுது விட்டு வெளியே வரும்போது இளம் வயது பெண்கள் சிறுவர்,சிறுமிகளை வைத்து கை ஏந்தச் சொல்வதும், அதற்கு தானம் செய்கிறேன் என்று ஒரு ரூபாய், இரண்டு என்று காசுகளை பலர்அறியக் கொடுப்பதும் தான் தான தர்மமா? ரசூலுல்லாஹ் சொல்லியிருக்கிறார்கள் உங்கள் கை எப்போதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும், மாறாக கீழே கை ஏந்தி நிற்க சொல்லலாமா அதுவும் சிறுவர்களை?

என்னை என் அன்னை சிறு வயதிலிருந்தே நோன்பு வைக்க பழக்கி விட்டது. அதனை காவல் துறை பணியில் இருந்தபோதும் கை விடவில்லை. சில சாப்பாடே கிடைக்காத இடங்களிலும், சற்றும் எதிர் பார்க்காத இடங்களிலும் நோன்பு வைக்கவும், திறக்கவும் உணவு கிடைத்திருக்கிறது என்பதினை இங்கே சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.

1)     நான் 1997ம் ஆண்டு கோஸ்டல் அதாவது கடற்கரை பாதுகாப்பில் இலங்கை விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கும் நுழைந்து விடாத படி தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணியில் இருந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும் இந்து மக்கள் அறுபது வயதினை கொண்டும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள நாகை மாவட்டம்  திருக்கடையூரில் கடற்கரை ஓரம் தணிக்கை சாவடி அமைந்துள்ளது. ஒரு நாள் அதிகாலை நோன்பு வைத்த பின்பு டி.ஜி.பி என்னை கூப்பிட்டு அங்கே உள்ள தணிக்கை  சாவடியில் ஒரு துப்பாக்கி காணவில்லையாம், ஆகவே அங்கு சென்று பாருங்கள் என்றார். உடனே அரசு ஜீப்பில் புறப்பட்டு சென்றேன். அங்கே சென்று விசாரித்ததில் சில விஷமிகள் தணிக்கை சாவடியினை விரும்பாமல் எடுத்திருக்கலாம் என தெரிந்தது. ஆகவே அந்த ஊரைச் சுற்றி ஒலி பெருக்கி வைத்து யாரும் எடுத்திருந்தால் அருகில் உள்ள காவல் நிலயத்திலோ அல்லது கிராம அலுவலகர்களிடத்திலோ ஒப்படைத்து விடுங்கள் என்று விளம்பரப் படுத்தப் பட்டது. அங்கே உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி  பண், பிஸ்கட் சர்பத் வைத்து நோன்பு திறந்தேன். அங்கே இரவு 8 மணிக்கெல்லாம் கடைகளை அடைத்து விடுவதால் எனது டிரைவரிடம் காலையில் நோன்பு வைக்க ரொட்டி, அல்லது பண் மற்றும் வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னேன். என்னுடைய டிரைவர் கடைகளில் விசாரித்துக் கொண்டு இருக்கும்போது அங்கு நின்ற கோவில் பூசாரி 'ஐயா’ எதற்கு என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் கேட்டுள்ளார். நீங்கள் கவலைப் படாதீர்கள் காலை 3.30 மணிக்கு எல்லாம் நான் தருகிறேன் என்று சொல்லியது மட்டுமல்லாமல் இதனை சாரிடம் சொல்லாதீர்கள் என்றும் கூறி இருக்கிறார். அதிகாலை சரியாக 3.30மணிக்கு அறை கதவு தட்டப் படுவதினை அறிந்து எழுந்து பார்த்தபோது பூசாரி ஒரு டிபின் கேரியருடனும்,பக்கத்தில் என்னுடைய டிரைவரும் நிற்கிறார்கள். அந்த பூசாரி,  'இவ்வளவு பெரிய அதிகாரி நோன்பு வைக்க சிரமப்படலாமா’ என்று கேட்டது எனது மனதில் இன்னும் மனித நேயம், சமுதாய ஒற்றுமை தமிழகத்தில் உள்ளது என்று இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு டிபான் கேரியரை திறந்து பார்த்தால் சுட சுட இட்லி,வடை, சாம்பார், சட்டினியும் இருந்தது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். நோன்பு வைத்து சில மணித்துளிகளில் காவலர் ஒருவர் ஓடி வந்து ஐயா, அருகில் உள்ள குளத்தில் யாரோ துப்பாக்கியினை போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள் அதனை குளிக்க சென்ற வயதான பெண் காலில் தட்டுப்பட்டதால் எடுத்துள்ளார் என்று கூறினார்.  நானும் அங்கே சென்று பாத்துவிட்டு இறைவனுக்கும், அந்த பெண்மணிக்கு, பூசாரிக்கும் நன்றி தெரிவித்து சென்னை திரும்பினேன்.

2)     2000ம் ஆண்டு நான் ஒரு வேலையாக டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டேன். அதே விமானத்தில் சக காவல் அதிகாரி துக்கையாண்டியும் வந்தார். நான் நோன்பு வைத்திருந்தேன். தமிழ்நாடு அரசு இல்லத்தில் நாங்கள் இருவரும் தங்கி இருந்தோம். டெல்லி சென்ற விமானம் இரவு 10 மணிக்கு அடைந்தது. விமானத்தில் நோன்பு திறந்த நான் மறு காலை நோன்பு வைப்பதிற்காக ஏதாவது பிரட் கிடைக்குமா என்று அங்குள்ளவர்களிடம் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டேன். என்னோடு தங்கியிருத்த துக்கையாண்டியும் 'பிரதர், நானும் உங்களுடன் இன்று நோன்பு வைத்துப் பார்க்கிறேன் என்று கூறி வைத்தார். நான் நோன்பு திறக்கும்போது தான் அவரும் சாப்பிட்டார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் ஒன்று நட்பு, மற்றொன்று ஒருவர் பசித்திருக்கும் போது   அருகில் உள்ளவர் வயிறு முட்ட சாப்பிடக் கூதாதல்லவா?

3)     2003ம் ஆண்டு டெல்லியில் உள்ள DCRB கிரைம் ரெகார்ட் அலுவலகத்தில் என்னை பயிற்சிக்காக அனுப்பி இருந்தார்கள். அப்போது நோன்பு வைத்திருந்தேன். ஒரு மாலை நேரத்தில் பயிற்சி நேரமானதால் நோன்பு திறக்க அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு செல் என்று ஹிந்தி பேசும் டிரைவரிடம் சொன்னேன். அவரும் ஒரு பள்ளி வாசல் அருகில் வண்டியினை நிறுத்தினார்.  பல்வேறு வகையான பழக்கடைகள், சர்பத்துகள் இரண்டு பக்கமும் வைத்திருந்தார்கள். நான் பள்ளிவாசல் உள்ளே சென்றேன். நமது ஊர் மாதிரி நோன்பு கஞ்சி கிடைக்குமா என்று பார்த்தேன் இல்லை. அங்கு பேரிச்சம் பழங்கள் மற்ற பழங்கள் ஒவ்வொரு குழு முன்பும் வைக்கப் பட்டிருந்தது, அதில் கலந்து கொள்ளலாமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது.   ஏனென்றால்  அவ்வளாக   சரளமாக ஹிந்தி பேச தெரியாது.  எனது சைரன் பொருத்திய வாகனத்தினைப் பார்த்து அந்த பள்ளிவாசல் நிர்வாகி டிரைவரிடம் யார் வந்திருக்கிறது என்று வாசலில் கேட்டுவிட்டு என்னிடம் வந்து, அழைத்துக் கொண்டு அவர், இமாம்,முவாஜின் மற்றும் மற்ற நிர்வாகிகள் உட்கார நோன்பினை திறந்தேன். இது எதனைக்  காட்டுகிறது என்றால் ஒன்று விருந்தோம்பல் மற்றொன்று இறைவன் கடமையினை நிறைவேற்ற உறுதி கொண்டால் எப்படியாவது உணவு நிச்சயம் கொடுப்பான் தானே!

இஸ்லாமிய சட்டப் படி சொத்தில், வருமானத்தில் இரண்டரை சதவீதம் தானம் செய்யலாம். அது தனது சொந்த பந்தங்கள் ஏழைகளாக இருந்தால், மற்ற  ஏழை, எளியவர் ஆகியோருக்கு வழங்குவது தான் சகாத் ஆகும். நான் ஆஸ்திராலியா சிட்னி நகரில் இருக்கும் லக்கம்பி பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கே ஒரு கட்டிடம் இருந்தது அதில், 'House of Zakat' என்று எழுதப் பட்டிருந்தது. அங்குள்ள நிர்வாகத்தினரிடம் விசாரித்தேன், அவர்கள் சொன்னார்கள் அங்கே உள்ள ஏழைகளை, தேவையானவர்களை கணக்கெடுத்து சகாத் கொடுப்பவர்களிடம் வசூல் செய்து விநியோகிக்கிறார்களாம். அது சிறந்த முறையாக இருந்தது. இதனையே மற்ற இஸ்லாமிய ஊர்களிலும் பின்பற்றினால் சிறப்பாக இருக்குமல்லவா?