Tuesday, 5 March 2013

பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!


பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!

ஒவ்வொரு வருடம் மார்ச் மாதம் மனித உரிமை நாளும், பெண்கள் வலிமை நாளும் கொண்டாடப் பட்டு வருகிறது. உரிமை என்பது உறுதி செய்யப் பட்ட சுதந்திரமாகும். ஆனால் பெரும்பாலோருக்கு என்னன்ன உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை.
சமூதாயம் என்பது பல சிறு குழுக்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். சமூக விஞ்ஞானி ரோஸ்கோ பவுண்ட் என்பவர், 'பல குழுக்களை நடு நிலை குலையாது பாது காத்தல் அவசியம்' என்கிறார். பல சமூக குழுக்களில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், மற்றும் பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாது காக்கப் பட வேண்டியவராவர். ஒவ்வொரு நாகரீக சமூதாயமும் மனித உரிமையினை காக்க வேண்டியது கடமையாகும். 
இன்னொரு சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால், 'ஒரு சமூதாயத்தில் பிரபலமான சாதனைப் படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமூதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்' என்று கூறுகிறார்.
ஆண்களும் பெண்களும் சமூதாயம் என்ற அழகு கட்டிடத்தினைத்  தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களாகும்.  ஆனால் சமீப கால சம்பவங்கள் பெண்களை தரம் தாழ்த்தி அழகு பார்க்கும் ஒரு நிலையாக உள்ளது. பெண்கள் உடல் வாகு இலகுவானதுதான். ஏனெறால் அவர்கள் குழந்தை பெற்கும் திறனும், குழந்தையினை பாலூட்டி வளர்க்கும் சக்தியும் கொண்டதால் வலிமை இழந்தவர்களாக  காட்சி தருகிறார்கள். மிகவும் வலிமை மிகுந்த ஆடவர் பெண்களை காட்டில் புள்ளி மான்களை வேட்டையாடும் வலிமையான புலிகள் போன்று  இருக்கிறார்கள். ஆனால் நாகரீக உலகம் அவர்களை மென்மைப் படுத்த வேண்டும்.
ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமூதாயம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், ஆண்கள் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும், அத்துடன் தேவதாசி முறையும், விதவைத் திருமண மறுப்பும், பலதார மணமும்  நடந்து கொண்டுதான் உள்ளது. ஆகவே அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னன்ன என்பதினைப் போதிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்,மூத்த குடிமக்களாவோர் ஆவர். ஆகவே பெண்களின் நலன் ஐ.நா.சபையின் பட்டயத்தில் 1945 ஆம் வருடம் அதிகமாக காணப் பட்டது. 1946 ஆம் ஆண்டு உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில், சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு கமிசன் அமைக்கப் பட்டது. அதன் பலனாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது. பெண்களைப் பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்க முள்ள அந்நாளில் 1949 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடு பட்டவர்களை நல்வழிப் படுத்துவது அரசின் கடமை என்று அறிவிக்கப் பட்டது. 1952 ஆம் ஆண்டு பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பும் வழங்கி, பெண்களை ஓட்டுப்போடாமல் தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப் பட்டது . வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்து அவர்களை கணவர்மார்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையினை 1957 ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டுக் குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது. 1967 மற்றும் 1979 ஆண்டுகளில் அமைக்கப் பட்ட கமிசன்கள் பெண்கள் என்பதால் ஒதுக்குவது குற்றம் என்று அறிவிப்புச் செய்ததோடு அவர்களுடைய சுய கௌரவத்தினைப் பாதிக்கும் செயலாக அறிவிப்பு செய்தது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ வன்முறையில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க வகை செய்தது. இதில் ஒரு ஆச்சரியப்பட விஷயம் என்னவென்றால் கற்காலத்தில் ஸ்கன்டிநேவியன் நாட்டில் எடுக்கப் பட்ட ஆறு பெண்களின் மண்டை ஓடுகளில் ஒரு ஓட்டில் அடிபட்ட காயம் இருந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டுதான் வந்துள்ளது. ஏன் இன்றைய தமிழக முதல்வர் அவர்களை  1989ஆம் ஆண்டு சட்ட சபையிலேயே அந்நாள் மந்திரிகளும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் இரக்கமின்றி தாக்கிய நிகழ்ச்சி தொலைக் காட்சியில் ஆயிரக் கணக்கானோர் அதிர்ச்சியுடன் பார்த்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் கூடிய கூட்டத்தில் ஆண், பெண் ஆகியோரின் அனைத்து வேறுபாட்டினையும் களைந்து அறிவிப்பு வெளியானது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
அரசியல் சட்டம் பகுதி  நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில் ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கையினை வழிச் செலுத்தும் நெறிகள் என்ற  பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம்,கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவுப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமான காரியங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் போன்றன செயல் படுத்தப் பட்டன.

அதிலும் மனித உரிமைக் காப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதிலும் இந்திய நாட்டு நீதி மன்றங்களின் பல் வேறு தீர்ப்புகள்  மெச்சத்தகுந்தது என்றால் மறுக்க முடியாதது ஆகும்.
உதாரணத்திற்கு:
i ) கைதிகளுக்கு கைவிலங்கு இடுவது தடுக்கப் பட்டுள்ளது
ii ) இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேலையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப் பட்டுள்ளது.
iii ) பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப் பட்டுள்ளது.
iv ) உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப் பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது
v ) பாலியல் கொடுமை  மனித உரிமைக்கு எதிரானக் குற்றம் என்று அறிவித்தல்.
vi ) சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
vii ) இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது.
viii ) தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைச் சட்டத்திற்கு வழிவகை செய்தது.
ix ) தேசிய மனித உரிமை கமிசன் அமைப்பதிற்கு வழி வகுத்தது.
x ) தகவல் உரிமைச் சட்டம் இயற்றி சாதாரண குடிமகன் தகவல்ப் பெற சட்டம் இயற்ற வழிவகுத்தது.
xi ) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.
xii ) பிரிடிஸ்  காலனி போலீஸின் புரையோடிய சட்டங்களைத் திருத்த போலிஸ் சீர்திருத்த கொண்டு வர ஆணைப் பிறப்பித்தது.
சமூகத்தில் பெண்களுக்கு வலிமை சேர்த்தல்:
ஒவ்வொரு மார்ச் 8 ஆம் தேதியும் பெண்களுக்கு வலிமை சேர்க்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்திய தேசம் 1857 ஆம் ஆண்டு முதலாவது விடுதலைப் போரினைக் கண்டது. அதே வருடத்தில் நியூ யார்க் நகரில் மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக் கணக்கான வேலைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போலீஸாரால் ஓட, ஓட விரட்டி அடிக்கப் பட்டனர். அந்த நாளை குறிக்ககூடிய தனமே பெண்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு நிகரான ஊதியம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா ஜனாதிபதியான்ப் பின்புதான் வழங்கப் பட்டது என்றால் ஆச்சரியமாகத் தெரியவில்லையா? அப்படிப் பட்ட ஆணாதிக்க மிக்க உலகில் பெண்கள் உலா வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டிதால் கொடுமையினை அனுபவிக்கின்றனர்.
இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலக விலை வாசி உயர்வில் ஒரு வேலை உணவு உண்பது என்பதே பெண்களுக்கு அரிதாக இருக்கும்போது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாலூட்டமுடியும் என்பதினை சோமாலிய, மொசாம்பிக்,நைஜீரியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலையும், குழந்தைகள் நிலையினையும் தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. உலகில் படிக்காதவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், எச்,ஐ.வி. போன்ற நோயால் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவ மனைகளும் உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று மில்லியன் பெண் குழந்தைகள் பள்ளிகூடத்திலிருந்து நின்று விட்டன. காரணமென்ன என்று ஆராய்ந்தால் பள்ளிக்கூடத்தில் தனியான கழிவறை இல்லை என்பதுதான்.
ஆகவே பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற மைக்ரோ பினான்ஸ் என்ற சிறு பொருளுதவி தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற உதவி செய்தால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்.
இன்று இந்திய நாட்டில் பஞ்சாயத் ராஜ் என்ற மூன்றடுக்கு தேர்தல் முறையும் அதில் பெண்களுக்கான முப்பது சதவீத ஒதுக்கீடு மூலம் 80,000 மகளிர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று பிற்பட்டோருக்கும் மகளிரில் ஒதுக்கீடு செய்து சட்டமன்றம் மற்றும் மக்களவையிலும் ஒதுக்கீடு செய்து பெண்கள் குரல் அதிகமாக இந்திய ஜனநாயகத்தில் ஒலிக்க வழி வகை செய்ய வேண்டும்.
அனால் அவர்களுக்கு கல்வியும் உரிய உரிமையும் கொடுத்தால் அவர்கள் ஆண்களை மின்சுபவர்களாக இருக்கின்றார்கள் பல உதாரணங்களால் நிரூபிக்க முடியும்:
i ) இன்று உலகின் முக்கிய நாடுகளான ஜெர்மனி,தென் கொரியா,பிரேசில், கொசோவோ, ஐயெர்லண்ட், செர்பியா, மாளவி,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பெண் அதிபர்கள் உள்ளனர்.
ii ) உலகின் உயர்ந்த விருதான நோபெல் பரிசினை 40 பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வருடம் அமைதிக்கான நோபெல் பரிசினை கூட்டாக எமனைச் சார்ந்த தவக்கல் என்ற பெண்மணியும், கென்யாவினைச சார்ந்த மதாயும் கூட்டாகப் பெற்றுள்ளனர்.
iii ) பர்மாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை சென்றாலும் போராடி ஜனநாயகத்திற்கு நோபெல் பரிசுப் பெற்ற ஆங் சன் சூ கி வழி வகுத்துள்ளார்.
iv )  தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும் பரவாயில்லை என்று பெண் கல்விக்காக குரல் பாகிஸ்தானைச் சார்ந்த மலாலா கொடுத்துள்ளார்.
v ) வின் வெளிப் பயணத்தில் ஆண் துணையில்லாது விண்கலத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று திரும்பி இருக்கிறார் சுனித வில்லியம்.
vii ) லண்டன் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிதிரும்பி இருக்கிறார்கள் மேரி கொமும் மற்றும் சைனா நேஹ்வாலும்.
viii ) அண்டை நாட்டின் வாலாட்டத்தினை 1971 ஆண்டுப் போரில் ஒடுக்கியும், தேசிய ஒருபைப்பாட்டினை காளிஸ்த்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி தன உயிர் போனாலும் பரவாயில்லை என்று உலகிற்கு காட்டிய இந்திரா காந்தியாலும்
ix ) வல்லரசு அமெரிக்காவில் இந்திய வம்சா வழி பொருளாதார நிபுணராக பொருபேற்றிருக்கும் இந்திரா நூயி 
 x ) ஆணாதிக்க மிக்க தமிழகத்தில் சிறை சென்றாலும் மூன்றாவது முறையாக அரியணை ஏறிய தமிழக முதல்வர் ஆகியோராலும் பெண்கள் முன்னேற முடியும் என்று உலகிற்கு காட்டப் பட்டுள்ளது.

Saturday, 9 February 2013

கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!


கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!
விஸ்வரூபம் படம் வெளியாவதிற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனை அடுத்து கூட்டப் பட்ட முத்தரப்புப் பேச்சுகளில் முஸ்லிம் சமுதாய மக்கள் மனம் புண்படுமளவிற்கு உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கி விட்டு 7.2.2013 அன்று பல திரை அரங்குகளில் வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து கொடுக்கப் பட்ட பேட்டியில்  கமலகாசன் அவர்கள், 'இனிமேல் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குரல் எழுப்பினால் இந்திய நாட்டினை விட்டு வெளியேறுவேன்' எனக் கூறியிருப்பது விவாததிற்கு உள்ளானதாக  கருத வேண்டி உள்ளது. 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14 வின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சட்டத்தின் முன்பு சமம்.  அவர்களுக்கு அரசு சம பாதுகாப்பு வழங்க வேண்டும்  அந்தக் கருத்தினை வலியுறித்தி சட்டப் பிரிவுகள் 15-8, 38,39,46 ஆகியவற்றில் இன்னும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.அரசியல் பிரிவு 19 வின் படி  சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன  கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் நலனுக்கு, சமுதாய நலனுக்கு மற்றும் பொது மக்கள் நலனுக்கு எதிராக அமையக் கூடாது என்ற கட்டுப் பாடுகள் உள்ளன.
நடிகர் கமலகாசன் எங்களூர் இளையான்குடியின் அருகில் உள்ள பரமக்குடியினைச் சார்ந்த நல்ல கலைக் குடும்பத்தவர் என்பதினை மறுக்க முடியாது. . சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்தபோது, அவரை அழைத்து பெரிய விளம்பரத்துடன், 'மருதநாயகம்' என்ற சரித்திரக் கதையினை எடுக்க முதல் முயற்சியில் இறங்கினார். அந்த மருத நாயகம் யார் என்று உங்கள் பலருக்குத் தெரியும் . இருந்தாலும் சுருக்கமாக சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்..
ஆங்கிலேயரின் மதுரைப் பகுதி வரி வசூல் செய்யும் தளபதியாக இருந்து,  பின்பு ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னையே அர்பணித்த தென் தமிழகத்தின் தன்னிகரற்ற தானைத் தலைவன். அந்த மருதநாயகத்தின் பெயரில் படப் பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது. ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையில் அதற்கான காரணத்தினை ஒரு பேட்டியில்  கமலகாசன் , 'சில எதிர்பாராத எதிர்ப்புகளால் நிறுத்தப் பட்டு விட்டதாக' கூறியுள்ளார். . அந்த எதிர்பாராத எதிர்ப்பு என்ன என்று இதுவரை  சொல்ல வில்லை. . அந்த எதிர்ப்பு எங்கிருந்து வந்திருக்கும் என்று உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அப்போது பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு குடிபுகுந்து விடுவேன் என்று ஏன் சொல்லவில்லை?
முன்பெல்லாம் சினிமா படங்கள் இயற்கை சூழலில்,  கலைஞர்கள் மிகவும் சிரமப் பட்டு சினிமாப் படங்கள் எடுக்கப்  பட்டதால் படங்கள் தத்ரூபமாக இருந்தன. . நடிகர், நடிகைகள் தங்கள் சொந்தக் குரலில் பாடி , பேசி, ஆடி, நடித்து இருந்தார்கள்.  ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் டூப் போடும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ரோபோ போன்ற எந்திர உலகத்தில் கிராபிக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் மூலம் கழுதையினைக் கூட குதிரையாக்கி,கிழவிகளைக்கூட குமரிகளாக்கும்  நவீன அற்புத திறன்கள் உள்ளன படைப்பாளிகளிடம். நான் 2001 யில் அமெரிக்கா சென்றபோது லாஸ் எஞ்சலில் உள்ள யுனிவெர்சல் சென்று ஆஸ்கார் விருது வென்ற, 'ஜுராசிக் பார்க்' செட்டினைப்  பார்ததேன்.  ஒரு அரங்கிற்குள் அத்தனைப் படைப்புகளையும் தத்ரூபமாக எடுத்து உள்ளார்கள். ஆகவே கிராபிக் முறையில் படம் எடுப்பதால் அது பிரமாதம் போன்று தெரிகிறது.
விஸ்வரூபம் படத்தில் 'முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரானபோர்' என்ற அமெரிக்காவின் மறு பொய்யான முத்திரையில்  இந்தியாவிற்குள் நுழைய முயர்ச்சித்ததால் முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள் என்பதினையும், தமிழக அரசும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்தது என்பதினை மறுப்பதிற்கில்லை.
உண்மையிலேயே உலகில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற படம் எடுக்க வேண்டுமென்றால் மேலை நாடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட்டுப் படைகள் செய்த அத்துமீறல்களை உலக மனித உரிமைக் கழகம் படம் பிடித்து ஒரு அறிக்கையாக சமர்பித்து இருப்பதினை படங்களாக திரையிட்டிருக்க வேண்டும். அந்தத் தைரியம் யாருக்குத் தான் வரும்?
அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) அபுகாரிப், குவாண்டனாமா போன்ற சிறைகளில் கைதிகளை நடத்திய ஈவு இறக்க மில்லாத நடவடிக்கைகள். அந்த கைதிகள் செய்த பாவம் என்ன. அந்நிய படை எடுப்பினை எதிர்த்ததுதான் அவர்கள் செய்த பாவம். அதற்காக அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி மாக்களாக நடத்தியதுதான் பெரும் கொடுமையிலும் கொடுமை. பயங்கர நாய்களை கைதிகள் மீது ஏவி விட்டது.
2) லிண்டி இங்க்லண்ட் என்ற ஒரு பெண் ராணுவ அதிகாரி நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆண் கைதியை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவது, தன் சக அதிகாரிகளுடன் அந்தக் கைதியின் மீது அமர்ந்து ஆனந்தமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பது.
3) ஆப்கானிஸ்தான் நாட்டில் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் மீது மேலை நாட்டுப் படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது.
4) ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண விழாவில் கூடி இருந்த பெண்கள், சிறார்கள், பெரியவர்கள் என்ற வித்யாசம் தெரியாது வானத்தில் இருந்து குண்டு மாறிப் பொழிந்து அறுபதுக்கு மேலோரைக் கொண்டது.
5) பாகிஸ்தான் நாட்டில் தணிக்கைச் சாவடியில் பணியிலிருந்த அமெரிக்காவின் படை வீரர் மது அருந்தி போதையில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினையே அழித்து இன்று அமரிக்காவில் நீதி மன்ற விசாரணையில் இருப்பது.
6) லிபியா  நாட்டுப் பெண் பாத்திமா போசார் என்பவர் நாலரை மாத கர்ப்பிணி. அவரை 2004 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிடித்து பல காலம் வைத்து சித்திரவதை செய்தது. அதுவும் கர்பிணிப் பெண்ணான அந்தப் பெண்ணை சங்கிலியில் பிணைத்து ஐந்து நாட்கள் பட்டினிப் போட்டு கொடுமை செய்தது.
7) ஐ.நா.சபையின் ஜெனீவாவை சார்ந்த குழந்தைகள் உரிமைக் கழகம் சமர்ப்பித்த அறிக்கையில்,'அமெரிக்காவின் படைகள் தங்களது போர் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானில் நூற்றுக் கணக்கான குழந்தைகளை சாகடித்து விட்டதாக' குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்ற 136 சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் அறிக்கையாக தரப் பட்டுள்ளன. ஏன் அவற்றை எல்லாம் படமாக எடுக்க யாரும் முன் வரவில்லை என்ற கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைத் தானே!


ஒரு நாட்டினை நேசிப்பவர் என்ன இன்னல் வந்தாலும்  எதிர் கொள்ள வேண்டுமே  ஒழிய, அதற்காக யாரும் நாட்டினை விட்டு குடிபெயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருமில்லை இந்திய நாட்டில். சிறுபான்மை இனத்தினை சீண்டுவது அதன் பின்பு அதனை தீர்ப்பதிற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் என்ற ஆயுதத்தினை எடுப்பது எந்தளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை.
அடுத்தபடியாக முண்டாசு கட்டும் தலைவராக வி.எச்.பி. என்ற அமைப்பின் தொகாடிய ஒரு ஆட்சேபகரமான கருத்தினை மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டம் போகர் நகரில் தெரிவித்துள்ளது அனைத்து செய்தித் தாள்களிலும் 6.2.2013 வந்துள்ளது.
அதாவது, 24.2.2012 அன்று ஆந்திரா எம்.ஐ.எம். எம்.ஏ ஒவைசி பேசியதிற்கு பதிலடி என்று, 'இருபது ஆண்டுகளில் காவல்த் துறையினர், தாங்கள் போட்ட ஆட்டத்திணை வேடிக்கை பார்த்தனர். அதன் விளைவு தான் அஸ்ஸாமில் 3000 பேர் கொல்லப்பட்டனர், பிஹாரி மாநிலம் பகல்பூரிலும், மோராடபடிலும், மீரட்டிலும், 2002 இல் குஜராத்திலும் அதே நிலை தான் நடந்தது, அதாவது காவல் துறையினர் வேடிக்கை பார்த்து நிண்டார்கள்' என்கிறார். அவர் கூற்றை உண்மையாக்குவது போல மகாராஷ்டிரா மாநிலம் தூளே கலவரத்தில் தவறான நடவடிக்கைக்கு ஆறு காவலர்கள் கைது செய்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மலேகன், மெக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ அதிகாரி புரோஹிட் சம்பந்தப் பட்டிருப்பதினை பார்க்கும்போது சிறுபான்மை சமூகத்தாரை குறி பார்க்கும் ஒரு பெரிய கூட்டமே இவர் பின்னனியில் இருப்பதாக உங்களுக்குத் தோணவில்லையா? அப்படி பேசி இருக்கும் தொகடியாவினை இன்னும் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆகவேதான் ஆரம்பத்தில் சொன்னேன், சட்டத்தில் அனைவருக்கும் சமம், சட்டப் படி பாதுகாப்புக் கொடுப்பது அரசு கடமை என்று. அந்த சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உனிமைக் கொடுத்து மைனாரிட்டி சமூக மக்களை மதித்து, அவர்கள் மனம் யாருடைய பேச்சு, எழுத்து, காட்சிச் சுதந்திரத்திளால் பாதகம் வராது பார்த்துக் கொள்வது அரசி சட்டப் படி தலையாய கடமையாகும். எந்தக் கலைஞரும் அந்நிய மேலை நாடுகளின் கைகூலியாக மாறி மைனாரிட்டி சமூகத்தினை கலர்க் கண்ணாடி பார்வையில் சித்தரிக்கக் கூடாது, அத்துடன் அரசும், தொகாடிய போன்ற வி.எச்.பி. தலைவர்கள் வன்முறைத் தூண்டும் பேச்சினில் உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டில் வன்முறையினைக் கட்டுப் படுத்தலாம். அத்துடன் அரசு காவல் துறையினர் தங்கள் கைப்பாவை என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் நீங்கி அமைதிப் பூங்கா நம் நாடு என்ற பெயருக்கு வழி காட்டும் என்றால் சரியாகுமா?

Tuesday, 15 January 2013

தும்பிக்கையில்லா யானை சச்சார் கமிட்டி அறிக்கை?


யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும், உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டு, பரங்கியரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு துண்டாடப் பட்டு, இந்திய முஸ்லிம்கள் மைனாரிட்டி என்ற நிலைக்குத் தள்ளபட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்து அறுவதினைத் தாண்டிய பிறகு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் நிலை என்ன என்று ஆராய புது டெல்லி முன்னாள் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஆறு போர் கொண்ட குழுவினை பாரதப் பிரதமர் 2005 ஆம் ஆண்டு நியமித்தார்.
அந்தக் குழு சுமார் இருபது மாதங்கள் கழித்து 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையும் 30.11.2006 யில் பாராளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் பதினெட்டு சதவீத முஸ்லிம் மக்கள் கொண்ட அமைப்பு இந்தியாவில் பதினெட்டு சதவீத சலுகையுடன் இருக்கும் தலித் மக்கள், பழங்குடியினரைவிட கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தில் பின் தங்கி உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் உண்மையினை தெரிவித்தது.

ஒரு உண்மை அறியும் குழு அறிக்கை கிடைத்ததும் அதனை உடனே நிறைவேற்றும் கடமை அரசுக்கு உண்டு என்று எந்த ஜனநாயக, மத சார்பற்ற நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே நடப்பது என்ன என்று பார்ப்போமேயானால் மத்திய அரசில் மைனோரிட்டி அமைச்சராக இருந்து இன்று வெளிநாட்டு அமைச்சராக இருக்கும் மதிப்பு மிகு சல்மான் குர்ஷித் அவர்களே புலம்பும் அளவிற்கு இருப்பது வெட்ககேடு என்றால் அனைவரும் ஒத்துக் கொள்ளத்தானே செய்வார்கள்!
மாண்பிமிகு மத்திய அமைச்சர் ராஜேந்தர் சச்சார் கமிட்டி 2006 இல் அமைத்ததிற்குப் பிறகு முஸ்லிம்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் அடைந்த முன்னேற்றம் பற்றி நடந்த கருத்தரங்கில் பேசும்போது, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் சச்சார் குழுவினால் பரிந்துரைக்கப் பட்ட சிபாரிசுகள் நிறைவேற்றப் படமுடிய வில்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அவர் கூறும் குளறுபடிகள் பின் வருமாறு:
 ஆந்திரா மாநிலம் முஸ்லிம்களுக்கு நாலு சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்ததை உச்ச நீதி மன்றம் தடுத்து இடைகால உத்தரவு வழங்கப் பட்டதினை காரணமாக கூறுகிறார்.
இதேபோன்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் முன்பு ஆட்சி செய்த மாயா தேவி தலித் மக்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை தர சட்டம் கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் தடை செய்தது. அப்போது மத்திய அரசு மாயா தேவி கட்சியின் ஆதரவினைப் பெற பாராளு மன்றத்தில் மாநிலங்களவையில் வரிந்து கட்டிக் கொண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றவில்லையா? ஏன் அதுபோன்ற ஒரு சட்டத் திருத்தம் மத்திய அரசோ அல்லது எந்த ஒரு தனி முஸ்லிம் எம்.பியோ தனி பில்லாக கொண்டு வரவில்லை என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா?
தமிழகத்தில் பிற்பட்டோர் இட ஒதிக்கீடு 69 சதவீதம் என்று கொண்டு வந்தபோது உச்ச நீதி மன்றம் வரை சென்று அவ்வாறு கொண்டு வந்தது செல்லும் என்று மாநில அரசு வாதாடிப் பெற்றதுபோல் மத்திய அரசு ஏன் செய்ய வில்லை என்று உங்களுக்குக் கேட்கத்தோனுவது நியாயம்  தானே!
சச்சார் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கைக்குப் பின் முஸ்லிம்கள் நிலை பற்றி பொருளாதார நிபுணர் அபுசலே ஷரிப் கூறுவதாவது:
1) முஸ்லிம்கள் கல்வியில் மற்ற பிற்பட்டவரின் பிள்ளைகள் மெட்ரிகுலேசன் பள்ளி அனுமதியினைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள். உயர் கல்வியில் இந்து மத மாணவர்கள் மட்டுமின்றி மற்ற மைனோரிட்டி மாணவர் அட்மிசனைக் காட்டிலும் பின் தங்கி உள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
2) உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் மகாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.நூறு கொடுக்கப் படுவதும் அது இப்போது பாங்க் மூலம் வழங்கப் படுவதும். அந்த கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் முஸ்லிம்கள்  ஆரவே  பயன் பெறவில்லை என்று கூறுகிறார். 
ஏன் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களில்லையா என்று உங்களுக்குக் கேட்கத்தோன்றும். இது அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் புறக்கணிக்கும் வேலைதானே! எத்தனை முஸ்லிம்கள் மாட, மாளிகைகளில் வசிக்கின்றனர். வெள்ளிக் கிழமை பள்ளி தோறும் சென்று பார்த்தால் காலணா, அறையனாவிற்காக கையேந்தும் முஸ்லிம் வயோதிகர், பெண்கள், நோயாளிகள் போன்றோரைப் பார்க்கும் போது நெஞ்சில் ரத்தம் கசிவது இயற்கைதானே! ஏன் அவர் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் கிராம வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறக் கூடாதா?
3) முஸ்லிம்களுக்கு கடன் கொடுத்து உதவ ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திறக்காத கடிதங்களாகவே உள்ளன. அதனால் தான் முஸ்லிம் மாணவர் கல்விக் கடன் பெறவும், தொழில் முனைவோர் கடனுக்காகவும் வங்கிகளின் கதவுகளில் நாட்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாபமான நிலை ஏற்படுகிறது அன்றாட வாடிக்கையாக உள்ளது.
4) இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட மைனாரிட்டி மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களாக 93 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் அந்த மாவட்டங்கள் முன்னேற ரூ 37,800 கோடிகள் நிதி ஒதிக்கீடு செய்யப் பட்டுள்ளன. ஆனால் 
அதனில் ரூ. 856 கோடிகள் தான் மாநில ஆரசுகளால் செலவழிக்கப் பட்டுள்ளன. 
மேற்கூறிய எடுத்துக் காட்டு மூலம் மாநில அரசுகள் எந்த விதத்தில் மைனாரிட்டி மீது கருணை காட்டுகிறது என்று விளங்க வில்லையா உங்களுக்கு? ஏன் மத்திய அரசு மைனாரிட்டி திட்டங்களுக்கு செலவழிக்க ஒரு கண்காணிப்பு குழவினை அமைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உங்களுக்கு கேட்கத் தோனவில்லையா?
தலித்துகளுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வுக்கு மாநிலங்களவையில் கட்சி வேறுபாடு அல்லாமல் சமதாக் கட்சியினைத் தவிர ஆதரவுக் கொடுத்தனர். ஏன் தெரியுமா வருகின்ற பாராளுமன்றத்தில் தலித் மக்கள் ஓட்டுகள் இல்லையென்றால் கிடைக்காது என்பதால்தான்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமை இல்லாததால் பல்வேறு பிரிவுகளாக தனித் தனியாக இட ஓதிக்கீடுக்கான ஆர்பாட்டங்கள், மறியல்கள் ஈடுபட்டன. காரணம் அந்த  அமைப்புகள் பலத்தினைக் காட்டுவதிற்குதான். ஒதிங்கு இருந்த 
கண்ணியமிகு காயிதே மில்லத்தால் வளர்க்கப் பட்ட இயக்கம் பாராளுமன்ற தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக  இட ஒதிக்கீடு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டது  வரவேற்கப்பட வேண்டியது ஒன்றுதான் காலதாமதமானாலும்.
1971 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அலிகார் நகரில் பேசும்போது, முஸ்லிம்கள் வேறுபட்டு இருந்தால் வெற்றியினை பெறமுடியாது மாறாக ஒன்று பட்டால் வெற்றி காண முடியும் என்றார். அதனையேதான் ரசூலல்லாஹ் அவர்களும், 'முஸ்லிம்கள் ஒற்றுமை என்ற கயிறினை கட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்'.
தலித்துகளுக்கு வேலையில் பதவி உயர்வுக்கு வரிந்து கட்டிக் கொண்டு மாநிலங்களவையில் கைகலப்பு வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து மசோதா நிறைவேற மாயாதேவி பாடுபட்டார். இன்று ஆளும் கட்சியில் இருந்தாலும், உயர்  பதவிகள் வகித்தாலும்
முஸ்லிம்களுக்காக உரிமையினை பெற மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து பாடு படவேண்டும். இல்லை என்றால் நாளை எதிர் கட்சியில் அமர வேண்டிய நிலை வரும் என்று பயப் படவேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போன்று, 'பதவி என்பது மேலில் போட்டிருக்கும் துண்டாகக் கருத வேண்டும்'. முஸ்லிம்களுக்கு சாதகமான சச்சார் மற்றும் மிஸ்ரா குழு அறிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால். பதவியினை உதறித்தள்ள தயாராக வேண்டியது தானே என்று உங்களுக்கும் எனக்கு கேட்கத் தோணுவது நியாயம்  தானே!
கவிஞர் ஆதிரைத் தாகா சொன்னதுபோல், 'துணிவில்லாத சமுதாயம் பட்டுப் போகும்'.
அதேபோன்று கட்டுக் கோப்பு இல்லாத சமூதாயமும் வீழ்ச்சி அடையும் என்று முட்டையினை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை கெடாமல் இருப்பதிற்க்கும், குஞ்சு போரிப்பதிர்க்கும் எப்படி வெள்ளைக் கருவினையும்,மஞ்சள் கருவினையும் இணைக்கும் பாலமாக ஓடு இருக்கின்றதோ அதேபோன்று சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் நலனில் அக்கறையினை தங்களது மேலான கொள்கைகளாக கருதி ஒற்றுமைப் பட்டு குரல் கொடுத்தால் காணக் கிடைக்காத கமிசன் அறிக்கைகளுக்கும் காலம் வழி வகுக்கும். இல்லை என்றால் யானை தன் தலையில் மண்ணை அல்லைப் போட்ட கதையாகுமென்பது சரிதானே!


Tuesday, 1 January 2013

பாலியல் குற்றங்களும் பொது மக்கள் கருத்துகளும்!



16.12.2012 அன்று புது டெல்லியில் மருத்துவப் படிப்புத் மாணவி அம்ருதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அந்தப் பெண் லண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகும் பிழைக்க வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் நெஞ்சை உருக்கிய சம்பவம் தான். அதேபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவிகளுக்கும் தமிழ் நாட்டில் நடந்து அதனால் கண்டனங்கள் எழுப்பி , கவலையும் மக்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த சிலர் அதுவும் குறிப்பாக மகளிர், துபாய், சௌதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் போன்று  இயற்றப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு பெண்மணி கூறும்போது, 'தான் துபையில்  பல ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், அங்கே குற்றம் செய்தவர்களுக்கு மக்கள் மத்தியில், குற்றவாளிக்கு கசையடியும், மரண தண்டனையும் நிறைவேற்றுவதினைப் பார்த்ததாகவும் கூறினா' கூறினார். 
அது மட்டுமல்லாமல் சில அரசியல் தலைவர்கள் குறிப்பாக இந்திய நாட்டு ஜனாதிபதி மகனும், பாராளுமன்ற உறுப்பினரானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் மந்திரியும், மதுரை ஆதீனமும் பெண்கள் கண்ணியமான உடை அணிந்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று கூறி முற்போக்கு மகளிரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்னும் சிலர், பெண்கள் இரவு நேரத்தில் கணவரில்லாத ஆண்களுடன் செல்வதால் இதுபோன்ற குற்றம் நடக்கின்றது என்றனர்.
மதுரை ஆதீனம் ஒருபடி மேல் போய் பெண்கள் முஸ்லிம் மத பெண்கள் போல் உடை அணிய வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அப்போது தான் இசை முரசு நாகூர் அனிபா பாடிய பாட்டு, 'முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே, முகத்தினை மறைத்திடு முஸ்லிம் பெண்ணே' என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு மத்திய சமூக நலத் துறை அமைச்சர் பாலியல் குற்றம் செய்யும் மைனர் சிறுவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர் சினிமா, தொலைக் காட்சியில் வரும் பாலியல் தூண்டும் செய்திகள் தான் இளைஞர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று கூறுகின்றனர்.
மத்திய அரசும் இதுபோன்ற குற்றம் வராது தடுக்க அல்லது தண்டனை வழங்க என்ன செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி நியமித்துள்ளது.
நான் கூறிய அனைத்து தகவல்களும் தீ பற்றிய பின்பு அணைக்கும் செயலாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.
ஆனால் இஸ்லாமிய சரியாத் சட்டம் வருமுன் காக்கும் சட்டம் என்றால் மிகையாகாது.
ஏக அல்லாஹ் இறக்கி வைத்த திருக் குறானும், மனித வாழ்விற்கு நன்னெறி போதித்த நபி பெருமானாரின் நற்போதனைகளும் மனிதனை மாக்காளாக மாறாது பாதுகாத்துக் கொள்ளும் கேடையமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது. போதை தலைக்கேறிவிட்டால் தாயென்றும், தாரமென்றும் குடிகாரர்கள் பார்ப்பதில்லை என்பதால் குடியினை தடை செய்து உள்ளது, உடல் அங்கங்கள் கணவருக்கு மட்டும் தான் காட்டவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் பெண்கள் கண்ணியமாக இருக்க வழி  செய்துள்ளது, தனக்குத் திருமணமானவளைத் தவிர அடுத்தப் பெண்களைப் பார்க்கும்போது தலை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றும், பெண்களிடம் கண்ணியம் தவறும் மிருக குணம் படைத்தவர்களுக்கு அவர்கள் உணரும் படி கடுமையான சட்டங்கள் வரையறுக்க பட்ட சட்டப் பொக்கிஷம் தான் சரியத் சட்டம். 
அது சரி நமது நாட்டிலும் கற்பழிப்பிற்கு கடுமையான சட்டங்கள் குற்றவியல் சட்டத்தில் உள்ளதே பின் எப்படி இந்தத் தவறுகள் நடக்கின்றது எனக் கேட்கலாம்.  நமது நாட்டில் பாலியல் குற்றவாளிகளை முகத்தினை மறைத்து நீதி மன்றத்திற்கு அனுப்பும் செயலினைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சரியத் சட்டத்தில் குற்றம் செய்யும் நபர் வெட்கி தலை குனியும் அளவிற்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவதால் அவன் எங்கு என்றாலும் அவனை சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேருடுகிறது. அவ்வாறு செய்யாததினால் ஆழ்வார் திருநகரில் பள்ளிச் சிறுமியினை கற்பழித்து கொன்ற கயவன் ஏற்கனவே அதுபோன்ற குற்றம் செய்து ஜாமீனில் விடுதலையாகி மறுபடியும் குடி வெறியில் அதே தவறினைச் செய்திருக்கின்றான்.
மனிதனால் இயற்றப் பட்ட சட்டத்தினுக்கும், இறைவனால் வழங்கப் பட்ட சரியத் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உங்கள் முன் வைக்கலாம் என நினைக்கிறேன்:
1) மனிதனால் இயற்றப் பட்ட சட்டம் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவைகளின் கைப்பாவையாகி உள்ளது.அது காலப் போக்கில் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
ஆனால் சரியத் சட்டம் ஏக அல்லாஹ் அருளால் இறக்கி வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு நிலையான சட்டம். மனிதன் வாழ்வில் அத்தனை தேவைகளுக்கும் வழி காணப்பட்டுள்ளது.
2) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நிலையானதல்ல. உதாரணத்திற்கு மது காங்கிரசு தமிழகத்தில் ஆண்டபோது திறந்து விடப் படவில்லை. ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகள் மதுவினை ஒரு வருமானம் வரும் துறையாக கருதினர். இன்றைக்கு மது விற்பனையால் ஆண்டுக்கு பதினெட்டாயிரம்  கோடி வருமானம் என கணக்குக் காட்டப் படுகிறது.
ஆனால் சரியத் சட்டத்தில் மதுவினைக் குடிப்பதிற்கும், விற்பனை செய்வதிற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப் பாடு நேரத்திற்கு, அரசுக்கு ஏற்ப மாறுபட்டதில்லை.
3) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் வருங்கால சந்ததி பற்றி சிந்திப்பதில்லை. ஏனெறால் அந்தச் சட்டத்தினால் பயன் பெறுபவர் பெரும்பாலும் அரசியல் வாதிகள் என்பதால்.
ஆனால் அல்லாஹ்விற்கு வருங்கால சந்ததியினைப் பற்றிய சிந்தனை இருப்பதால் அவர்கள் பயன்படும் படி சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு பெண்கள் தங்கள் அங்க அடையாளங்கள் தன்னால் கைப்பிடிக்கும் கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டும் என்ற அளவிற்குத் தான் உடை உடுத்த வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. கணவனுடன் தான் பெரும்பாலும் பயணம் செய்யவேண்டும் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் ஆகியோருடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாடு உள்ளது. அதுபோன்று செய்யது தனிப் பட்ட ஆணுடன் இரவு நேரத்தில் பயணம் செய்ததால் டெல்லியில்  துரதிஷ்டமான சம்பவம் நடந்தது என்றால் மிகையாகாது.
4) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் குறிப்பிட்ட ஒரு நாடு, அதன் மக்களைச் சார்ந்து இருக்கும்.
ஆனால் இஸ்லாமிய நாடு அனைத்திற்கும் பொதுவான சட்டமாக சரியத் சட்டம் அமையும். இஸ்லாமில்லாத நாடுகளிலும் சரியத் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தினைத் தவிர கடைப் பிடிக்கப் பட்டு வருவதினைக் காணலாம்.
5) மனிதனால் இயற்றப் படும் சட்டம் பொது இடத்தில் நன்னடத்தையும், நாகரியத்தினை தடுப்பதாக அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைவதில்லை.
சரியத் சட்டம் நன்மையினைக் காத்து, தீமையினை தடுப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு ஜினா என்ற விபச்சாரம் இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் மனிதனால் ஏற்படுத்திய சட்டம் விபச்சாரத்திற்கு லைசென்ஸ் வழங்கும் அளவிற்கு உள்ளது.
6) மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் நீதிப் படிப்பினை போதிக்கும் சட்டமாக அமையவில்லை.
ஆனால் சரியத் சட்டம் நீதி படிப்பினை போதிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.
7) மனிதனால் வடிவமைக்கப் பட்ட சட்டம் பொது அமைதிக்குப் பங்கம் வராதவரை அல்லது அந்தக் குற்றம் வெளி உலகிற்கு தெரியாதவரை குற்றமாகாது. திருமணமாகாத இருவர் ஒப்புதலுடன் உடல் உறவு கொள்வது குற்றமில்லை. 
ஆனால் மறைவானவற்றை அறியும் திறன் கொண்ட அல்லாஹ்வால் இயற்றப் பட்டச் சட்டம் மறைவான தீய செயலிலிருந்தும் மனிதனை காக்கின்றது. கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உடல் உறவு கொள்வதினை சரியத் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை.
8) மனிதனின் சுயக் கட்டுப் பாடு தளரும்போது தவறுகள் நடக்கின்றன. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் சந்தர்ப்பம் கிடைக்காத பாலியல் குற்றவாளியாகத் தான் இருக்கின்றான். ஆனால் சரியத் சட்டமும், நபி பெருமானாரின் போதனைகளும் மனித ஒழுக்கத்தின் நீரூட்டாகும். ஆகவே தான் தனி மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் நிதானம் இழப்பதில்லை.


இஸ்லாமிய சரியத் தண்டனை என்று சிலவற்றினைப் பார்க்கலாம்:
1) ஜினா: மனவியினைத் தவிர கள்ள உடல் உறவு கொண்டவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அவன் வெக்கித் தலை குனியும் அளவிற்கு நூறு கசையடிகள் தரப்படும்.
ஹோமோசெக்ஸ் என்ற புணர்விற்கு மரண தண்டனை உண்டு. ஆனால் உலகில் பல நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன என்பது வெட்ககேடு என்றால் மிகையாகாது.
2) மது குடித்தால் இருபது முதல் நாற்பது வரையிலான கசையடி.
3) சரிக்: திருடளுக்கு வலது கை வெட்டப் படும். நான் மக்க மாநகருக்கு 1999 முதல் தடவையாக சென்றபோது சில வலது கை வெட்டப் பட்ட கருப்பினத்தவரினைக் கண்டேன். விசாரித்ததில் அவர்கள் திருடியதால் கை வெட்டப் பட்டதாக சொன்னார்கள். அதுபோன்ற தண்டனை கொடுத்ததால் தான் இன்றும் ஹரம் சரிப்பில் தொழுகைக்கு பாங்கு சொன்னதும் தங்கள் வியாபாரம் செய்யும் நகைக் கடையினை கூட மூடாமல் விட்டு விட்டு தொழுகையினை முடித்து வரும்போது திருடு போகாமல் இருப்பதினைக் காணலாம். 
ஆனால் நமது நாட்டில் திருடர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தும் சிறைச் சாலைகள் தான் அதிகம்.
4) காத் அல் டாரிக்: நெடுஞ்சாலைக் குற்றங்களுக்கு இடது கை, வலது கால் வெட்டப் படும்.

ஆகவே இஸ்லாமியர் மற்றவர்களுக்கு வழி காட்டும் நன்னடத்தை உள்ளவர்களாக திகழ வேண்டும். ஆனால் நம்மிடையே சிலர் மது குடிப்பிதினை பெருமையாகவும், ஜினா செய்வதினை உயர்ந்த அந்தஸ்து மனிதர் செய்யும் செயலாகவும், படித்த, பணக்கார இளைஞர்கள் மற்றவர்கள் போல் கண்ணியம் தவறும் உடை அணிவதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது.
மாற்று மதத்தினவர் கூட இஸ்லாமிய மார்க்க நற்பண்பு, ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றி புகழும் பொது இஸ்லாமியர் முறை தவறி நடக்காது காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமியருடைய கடமை என்பது சரிதானே தோழர்களே!