Tuesday, 22 May 2012


பழமை காலம் பொற்காலமா?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,,பீ.எஸ்(ஓ)

வயதானவர்களுடன் இளைஞர்கள் தனிமையில் உரையாடினால் அவர்களுடைய ஐம்பது வருட கால அனுபவங்கள் சொல்லி அவைகளெல்லாம் மிக சிறந்தவை என்றும் , இன்றைய நடப்பினை தரம் குறைந்தது என்றும் கதை கதையாக தன் பொக்கை வாயினை ஆசைப் போட்டுக் கொண்டு கூறக் கேட்கலாம். ஒருவருடைய மனைவிகூட தன் பிறந்த வீட்டில் குறைந்த வசதி இருந்தாலும் அன்டிய கணவர் வீட்டிற்கு வந்தாலும், தன் வீட்டுப் பெருமையினை வாய் நிறைந்து சொல்வதினைக் காணலாம். ஆனால் அக்கரை எல்லாம் பசுமையில்லை, இன்றைய உலகம் தான் இனிமை, பசுமை நிறைந்தது என்ற கருத்துடன் இந்தக் கட்டுரை வரையப் பட்டுள்ளது.

வயதானவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை சிறந்தது என்று சொல்வதிற்கு கீழ்க்கண்ட காரணங்களை கூறுகின்றனர்:
1) பழைய பாட்டினை ரேடியோவில் அல்லது தொலைக் காட்சியில் கேட்டால் என்னோ அருமை என்று புகழுவர்.
ஆனால் அவர்கள் காலத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புலி ஏ.ஆர். ரஹ்மான் போன்று இருந்து உலக பரிசினைப் பெற்றார்களா என்றோ, அல்லது மெல்லிசை இசைப்புயல் இளையராஜா போன்று இங்கிலாந்துக்குச் சென்று சிம்பொனி இசை அமைத்தது உண்டா என்று கேளுங்கள் இல்லை என்று கையினை விரிப்பார்கள்.


2) முன்னாள் ஆசிரியர்கள் போன்று எவரும் பாடம் நடத்த இன்று முடியாது என்று ஆசிரியர் புகழ் பாடுவார்கள்.
ஆனால் அவர்கள் காலத்தில் இன்றைய திருநெல்வேலி 11 வயது சிறுமி சாலினி எம்.சி,ஏ. பட்டம் பெற்றும்திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலை மாணவர்களுக்கு நெட்வொர்க் பாடம் நடத்தி புகழ் மாலை சூட்டியது போல ஒரு நிகழ்ச்சி உண்டா என்றும், ,, டி.மெட்ராஸ் என்ஜிநீரியங் புதிய பட்டதாரி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் வருட சம்பளம் போன்ற வேலை அன்று கிடைத்ததா என்று  கேளுங்கள் இல்லை என்பார்கள். 
3) அந்தக் காலத்து கூரைப் பட்டுசேலை சிறந்தது என்று பெட்டியில் மூடி மூடி வைத்து பேத்திகளிடம் பீற்றிக் கொள்ளும் பெண்களிடம் இன்றைய ஐம்பது டிசைன் கொண்ட ரூபாய் ஐம்பது ஆயிரம் முதல்  ஒரு லட்சம் வரை மதிப்புள்ள பரம்பரா பட்டுச் சேலை போன்று அன்று தயார் செய்ய முடிந்ததா என்று கேளுங்கள் இல்லை என்பார்கள்.
4) சில நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கும் மத, ஜாதிக் கலவரம் போன்று அன்று இல்லை என்பார்கள். ஆனால் பல்வேறு மதம், ஜாதி மக்கள் வாழும் இடத்தில் அப்போதைக்கப்போது சிறு,சிறு தீப்பொறிகள் ஏற்படுவது எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை ஊதி பெரிதாக்கும் இன்றைய  ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று நிறைய மக்களிடம் போய்ச்சேராததால் அவர்கள் அறியாமல் இருந்து இருக்கலாம்.




5) தங்கள் காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் உள்ள குடும்ப பாசத்தினை அளவிற்கு அதிகமாக புகழ்வார். ஆனால் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த ஜோடிகளைக் கேளுங்கள் தாங்களின் புது திருமண வாழ்வின் சுவையினை இன்றைய இளம் ஜோடிகள்போல் அறிய முடிய வில்லை என்று புலம்புவார்கள்.
6) அந்தக் காலத்தில் குடிசை வீடானாலும் காற்றோட்டமும் இயற்கை சூழலும் நிறைந்ததாக கூறுவார்கள். ஆனால் அதே பெரியவர்கள் இன்றைய ஜன நெருக்கடியிலும்  கட்டில் மெத்தையும் வசதியான ஏ.சி. அறையினைத் தேடுவது ஏன் என்று கேளுங்கள் பாரக்கலாம், அசட்டுச் சிரிப்பினை உதிர்ப்பார்கள்.
7) அந்தக் காலத்தில் கிராமங்களில் மண் ரோடும், நிலக்கரி புகை கக்கும் ரயிலும், டீசல் புகை கக்கும் கம்பி வைத்து ஸ்டார்ட் செய்யும் பஸ்சும் தான், ஆனால் இன்று பசுமை நிறைந்த அகலப் பாதை ரயிலும், ஏசி மற்றும் ஏர் பஸ்சும், பேட்டரி காரிலும் தார் மற்றும் சிமிண்ட் ரோடுகளில் பயணம் செய்து சுகம் அனுபவித்தது உண்டா என்று கேளுங்கள். இல்லை என்பார்கள். 
என் தந்தை மலேசியாவில் உள்ள பினாங் துறைமுகத்திலிருந்து  1965 ஆம் ஆண்டு நாகை துறைமுகத்திற்கு கப்பலில் ஆறு நாட்கள் பயணம் செய்து களைத்துப் போய் வந்தார்கள். அவர்களை வரவேற்க நான் சென்றிருந்தேன். கப்பல் கடலில் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்தி பயணிகளை சிறு, சிறு போட்டுகளில் அழைத்து வந்து பொட்ட வெயிலில் உள்ள குவாரண்டின் என்ற முள் கம்பிக்குள் நிறுத்தி பல மணி சோதனைக்குப் பின் பயணிகள் வெளியே வந்தார்கள். ஆனால் இன்று மலேசியாவிலிருந்து குளு, குளு வசதியுடன் கூடிய விமானத்தில் மூன்று மணி நேரத்தில் சென்னை வந்து விடுகிறது, அது மட்டுமா பயணிகளுக்கும், அவர்களை வரவேற்க நிற்கும் உறவினர்களுக்கும் குளிர் வசதி செய்யப் பட்ட அறைகள்  உள்ளது போன்று அன்று இல்லையே என்று பழமை வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

8) அந்தக் காலத்தில் தகவல் ஒலி பரப்பு வசதிகள் எட்டாக் கனியாகவே இருந்தன. 1964 ஆம் வருடம் புயல் அடித்து தனஷ்கோடி தீவே அழிந்தும், ராமேஸ்வரம் ரயிலும் பாம்பனில் அடித்துச் செல்லப்பட்டது சென்னைக்கு சில மணி நேரம் தெரியவில்லையாம். தனஷ்கோடி போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய 'மோர்ஸ்' என்ற சங்கத மொழி தொழிலாளி அனுப்பிய  தகவல் மூலம் தான் தெரிந்து  மீட்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாம். 
சில தபால்கள் ஒரு வருடம் சென்று கூட கிடைத்ததாக சொல்லுவார்கள். ஆனால் இன்று மின் அஞ்சல் அடித்த அடுத்த நிமிடமே அறிந்து கொள்ளும் நிலை வந்து விட்டதே  என்று பெருமைப் பட வேண்டாமா?
9) அந்தக் காலத்தில் கிராமங்களில் தொலைபேசி கிராம தபால் நிலையத்திலும், டவுண் பஞ்சாயத்தில் ஓரிரு வீடுகளிலும் தான் டெலிபோன் சேவை வசதி இருந்தது. ஒரு முறை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் முதலாவது உலக யுத்தத்திற்கு பின்பு சாதாரண யாத்திரிகராக கொழும்பு சென்று விட்டு, சென்னையிற்கு வந்து அண்ணா சாலையில் ராஜாஜி ஹாலுக்குப் பின் உள்ள அட்மிராளிட்டி கட்டிடத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தாராம். சர்ச்சில் மதியம் தூக்கம் போடும் பழக்கத்தினை கொண்டவராக இருந்தார். அப்படித் தூங்கும்போது வரண்டாவில் பெரிய சத்தம் கேட்டு விழித்து இருக்கிறார் . அங்கு நின்ற காவலாளியினை அழைத்து யார் சத்தம் போடுவது என்று கேட்டிருக்கிறார். காவலாளியும் பக்கத்து அறையில் தங்கி இருக்கிற மிலிடரி சார்ஜெண்ட் இங்கலாந்தில் உள்ளவர்களுடன் வரண்டாவில் உள்ள போனில் பேசுகிறார் என்று சொல்லி இருக்கிறார். உடனே சர்ச்சில் அந்த காவலாளியிடம் அந்த சார்ஜெண்டிடம் சொல்லுங்கள் அவர் போனில் பேசுகிறார் என்று, அவர் முன்னாள் அவருடைய சேவகர் இருப்பதுபோல சத்த மிடுகிறார் என்று கேலியாக சொன்னாராம். இது எதற்கு சொல்கிறேனென்றால், அப்போதைக்கு போன் வசதி மிகக்குறைவே, ஆனால் இன்று தெருக்  கூட்டும் ஆயாவிலிருந்து, சாகக் கிடக்கும் பெரியவர் வரை இடுப்பிலும், தலை மாட்டிலும் கைபோன் வைத்துக் கொண்டு நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசும் அளவிற்கு வசதி வந்து விட்டதே!
10) முன்பு பக்கத்து நாடான சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவின் படை, மக்களின் மன வலிமை ஆகியவற்றினை 1965, 1971 போர்கள் மூலம் சோதித்தன. அதேபோன்று அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளும் இந்தியாவினை பஞ்ச நாடு என்றும், ஆட்டிப் படைத்தும் கொண்டிருந்தன. ஆனால் இன்று உணவில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்த படியாக உலகில் இடம் பிடித்து, அணு ஆயுத படைப்பிலும், விண்வெளிக்கு மேலை நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கோள்களை அனுப்பி ஆராச்சியில் மிஞ்சுகிற நாடு நம் நாடு. 
ஆகவே சிலர் பழமை பேசி தம்பட்டம் அடித்து புதிய வளர்ச்சியினை தங்களுடைய பேச்சின் மூலம் புறக்கணிப்பது, இக்கரைக்கு அக்கறை மேல் என்று சொல்வது போல் உள்ளதல்லவா? ஆனால் இன்றைய இந்தியாவே சிறந்த பொற்காலம் என்றால் மிகையாகுமா?

No comments:

Post a Comment