இஸ்லாமிய போர் நெறிமுறை!
( (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
மற்ற மத அரசர்கள் போலல்லாது இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, நெறி தவறாது நடந்து கொண்டனர் என்று பெருமானார்(ஸல்) அவர்களும், அவர்களுக்குப் பின்னால் பதவியேற்ற கலிபாக்களும், அலி(ரழி) மற்றும் காலித்(ரழி) போன்ற தளபதிகளும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கொடியினை ஜெருசலத்தில் நிலை நாட்டிய வீரத் தளபதி சலாதீன் போன்றோர் போர்களில் மாற்று மதத்தினர் கவுரவம் பாதிக்காது நடந்து கொண்டார்கள் என்றும், இஸ்லாமியர் தங்கள் மார்க்கத்தினை வாள் கொண்டு பரப்பவில்லை, மாறாக மற்ற மதம், இனத்தினவரை அன்பு, பாசத்தால் அரவணைத்து பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து மார்க்கம் பரவ ஊன்று கோலாக இருந்துள்ளனர் என்பதினை வரலாற்று ஆசிர்யர்கள் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர்.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போரிட நேர்ந்த போதோ அல்லது தளபதிகளுக்கு வேற்று நாடுகளுக்குபோருக்காக கட்டளைகள் பிறப்பித்து அனுப்பும்போதோ, 'லக்ஷ்மன் கோடு' என்ற கடுமையான கட்டுப்பாடு மிகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்கள். உதாரணத்திற்கு, பயிர்களை, உணவினைதரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தாதும், முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொன்று குவிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கட்டளை இட்டார்கள். போருக்குச் செல்லும் தளபதிகள் முதலில் மார்க்க அழைப்பினை விடுப்பர். அதை ஏற்காது எதிர்த்து நின்ற இறை மறுப்பாலர்களைத் தான் இஸ்லாமிய படைகள் போரிட்டனர். ஆனால் இஸ்லாமிய படைகளின் வலிமை, மார்க்கத்தின் அருமை, பெருமை தெரிந்த இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள் மேற் கொண்டர் என்பதிற்கு எடுத்துக்காட்டு தான், வரலாற்று சிறப்பு மிக்க 'ஹுதைபியா' உடன் படிக்கையாகும்.
போரில் கைப்பற்றப் பட்ட செல்வங்களை போர் வீரர்களோ,தளபதிகளோ, கலீபாக்களோ அபகரித்துக் கொள்ளாது அத்தனை செல்வங்களும் அரசுடமை ஆக்கப் பட்டு, அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி சமவுடமை தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது இஸ்லாமியப் போர்கள். இஸ்லாமிய மார்க்கத்தினர் எதிரிகளுடன் நேருக்கு நேர் தங்கள் மார்க்கத்தின் கொடியினை தூக்கி நிறுத்த புனிதப் போரிடும் போது உயிரிழந்தவர்களுக்கு ஷஹீதானவர்கள் பட்டியலில் அல்லாஹுத்தாலா ஜென்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வான். ஆனால் ஏக இறைவன் கொடுத்த மனித உயிரினை, கோழைத் தனமாக எதிரிகளை தாக்குகிறோம் என்று சொல்லி, தற்கொலைப் படை அமைத்து, வெடிகுண்டு கலாச்சாரத்தில் தாக்குவதின் மூலம் எதிரிகள் மட்டும் அல்லாது மூமினான அப்பாவி சகோதர, சகோதரிகள், வயதானவர்கள், குழந்தைகள் மடிந்தும், காயம்பட்டும், கை, கால்கள், கண்கள் இழந்தும் கஷ்டப் பதுவதினை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்க வில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போதித்த போர் நெறிகளை மேலை நாடுகள் கடைப் பிடித்து இருப்பார்களேயானால் இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றில் மனித இனம் கொல்லி அணுகுண்டினை வீசி, அந்த நகரங்களை கூண்டோடு அழித்து இருக்க மாட்டார்கள், அது மட்டுமல்ல,தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆப்கானிஷ்தான், ஈராக்,லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆளில்லா விமானங்களை அனுப்பி பல்வேறு இடங்களில் வாழும் அப்பாவி மக்களை அழித்திருக்க மாட்டார்கள்,அத்துடன் மற்ற அரசுகளின் உள் விவகாரங்களில் தலை இடவோ அல்லது அந்த நாடுகளின் இறையான்மையினை நசுக்கவோ முயன்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அதுபோன்ற செயல்களில் ஈடு பட்டதால் அந்த நாடுகளின் தலைவர்கள் பதவி இழந்தும், பொருளாதார வீழ்ச்சியும் கண்டார்கள் என்பது இன்றைய உலகில் நடந்த உண்மை நிகழ்வு ஆகும்.
ஆகவே இஸ்லாமிய போர் நெறிமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்று அவைகளை மேலை நாடுகளும், மற்ற நாடுகளும் கடைப் பிடிக்கச் சொல்வதின் மூலம் சர்வதேச சமூதாயத்தின் அமைதியினை நிலை நாட்ட முடியுமல்லவா?