Tuesday, 21 May 2013

சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!



சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!
வானத்தினையும், பூமியையும் படைத்து, அதனை ஆராய்வதிற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் எல்லாம் வல்ல அல்லாஹ் அளித்துள்ளான்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது.
ஆனால் கல்வியிலும், சாதனையிலும் இன்றும் நாம் பின்னோக்கித் தான் உள்ளோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஏன் நம்மிடம் திறமை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். திறமை இஸ்லாமியரிடையே பட்டை தீட்டப் படாத வைரம்போலவும், இலை மறை காயாகவும் உள்ளது. அதனைக் வெளிக்கொண்டு வருவது நமது கையிலேயே தான் உள்ளது என்றால் மறுக்க முடியாது என்பதினைக் கீழ்கொண்ட உதாரணங்களுடன் விளக்கலாம் என உள்ளேன்:
1) தமிழ் நாட்டில் பெண் ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் வருவது அரிது. அப்படி வந்தாலும் முக்காடுக்கு முழுக்குப் போடும் அதிகாரிகள் சிலர் வந்துள்ளனர். ஆனால் முழு முக்காடுப் போட்டு, அந்த முக்காடு என் பண்பாடுக்கு எடுத்துக் காட்டு என்றும் அதனை என்றும் கைவிடேன் என்று துணிச்சலாக சொல்லும் ஒரு பெண் ஐ. ஏ . எஸ். அதிகாரியாக   சென்னை சைதாபேட்டை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்ற தமீம் அன்சாரிய தேர்வாகி உள்ளார்.
2) அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் சமீப காலங்களில் வேட்டையாடப் படுகின்றனர் என்று நாம் பத்திரிக்கை வாயிலாக அறிவோம். அதில் முஸ்லிம்கள் உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிது. அந்த மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி பாக்ருதீன் அலி, முன்னாள் முதல்வர் டிமூர் போன்றவர்களுக்குப் பின்பு 60 ஆண்டுகள் சென்று ஒரு முஸ்லிம் பெண் உம்மெ பார்டினா ஆதில் 2012ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ். பரிச்சையில் வெற்றி பெற்றுள்ளார்.
3) இமயமலையில் ஏறி வெற்றிக் கொள்பவர்கள் என்று பார்ப்போமேயானால் முஸ்லிம்கள் சிலரே. ! . .. முதன் முதலில் துருக்கியினைச் சார்ந்த அலி மெஹ்ரக் என்ற முஸ்லிம் ஆணும், அதன் பின்பு மலேசியா பெண்மணியும், ஈரான் தேசத்தினைச் சார்ந்த இரண்டு பெண்மணிகளும் வெற்றி கொண்டுள்ளார்கள்.
ஆனால் அந்த இமயமலை சிகரத்தினையும் சௌதி நாட்டில் ஜெத்தாவினைச் சேர்ந்த ரஹா  மொபாரக் என்ற முஸ்லிம் பெண்மணி வெற்றி பெற்று இருக்கின்றார் என்று நினைக்கும்போது  நமது நெஞ்சமெல்லாம் இனிக்கும். அதே நேரத்தில் ஒரு கசப்பான செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னையின் பல பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத அல்லது பாதியில் விடுபட்ட சிறுவர்கள் 2000 பேர்கள் பட்டியல் எடுத்து அதில் எந்தப் பகுதியில் அதிகமான சிறுவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், ஆறு வயது முதல் பதினாலு வயதுவரை உள்ளவர்களில் தலா 192 பேர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனும், பெரம்பூரும் ஆகும்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனில் சிறார்கள் கல்வி கற்பதும், பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நிற்பதும் உண்மையாகிறது.
2) வறுமைக் கோட்டினுக்குக் கீழே உள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாது நாலு காசு சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார்கள்.
3) அப்படி அனுப்பப் படும் சிறார்கள் குற்றம் செய்யும் வேற்று சிறார்கள் துணைக் கிடைத்து வழி பிரண்டு போகிறார்கள்.
4) வசதி படைத்த பெற்றோர்கள் சிறார்களின் படிப்பில் கவனம் செலுத்தாது, அதிகம் செல்லம் கொடுத்து அந்த சிறார்கள் பாதியில் பள்ளிப் படிப்பினை விடும் நிலையும், படிக்காமல் அவர்களையும் தொழிலில் ஈடுபடுத்துவது.
ஆகவே சமூதாய மக்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கவும், சாதனை புரியவும் கீழ்க்கண்ட  வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது அவசியமே!
1) வயது ஆறிலிருந்து வயது பதினான்கு வரை பள்ளிப் படிப்பு சிறார்களுக்கு கட்டாயம். அதனை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாம்.
2) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முஸ்லிம்கள் பலன் பெற அரசு திட்டங்கள் கிடைக்க வழி வகை செய்யலாம். பைதுல் மால் போன்று அமைப்பினை ஏற்படுத்தி சுய வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்.  11.5.2013 அன்று சென்னை புதுக் கல்லூரியில் சிறுபான்மை துறை அமைச்சர் முகமது ஜான் அவர்களுடன், சகோதரர் ஜவஹிருல்லாஹ் சட்டமன்ற உறுப்பினருடன் நானும் கலந்துகொண்டேன்.அப்போது அமைச்சர் கூறும்போது, 'அரசு சலுகை பெற வரும் முஸ்லிம்கள் குறைவே' என்று குறை பட்டார். அதே நேரத்தில் இன்று(19.5.2013) நடைப் பயிற்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது மண்ணடியில் உள்ள வியாபார முஸ்லிம் நண்பர் கேட்டார், 'ஏன் அண்ணே, எங்கள் கடைக்கு தர்மம் கேட்டு முஸ்லிம்கள் தான் அதிகமாக வருகிறார்கள், எனக்குத் தெரிந்த ஏழ்மையான மற்ற மதத்தவர் தர்மம் கேட்டு வருவதில்லையே' என்றார்.
ஆகவே யாசகம் கேட்கும் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளதினையே அவர் கூற்றுக் கூறுகிறது.
3) அவர் கூற்று ஏழை மக்களிடம் கௌரவத்துடன் 'கால் கஞ்சியானாலும் மூடிக் குடி' என்ற நிலை மாறி கோழையாக கையேந்தும் நிலை ஏற்படுகிறது. அதனை சமூதாய இயக்கங்கள் போக்க வேண்டும்.
4) உயர்தர கல்வி நிலையங்கள் மூலம் படித்தால் தான் உயர் பதவி அடைய முடியும் என்ற நிலையினை மாற்றி சென்னை கார்ப்பரேசன் பள்ளியில் படித்த தமிம் அன்சாரியா போன்று நீங்களும் மாநகராட்சிப் பள்ளியில் படித்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
5) சாதனை பெண்களுக்குத் தடையில்லை என்பதினை உயரமான இமயமலையினை அடைந்த பெண்களின் கதையினை எடுத்துச் சொல்ல வேண்டும். 
6) முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கவும், கல்வி, சமூக, அரசியல் அமைப்புகளில் பங்கு பெறவும் வழி வகுக்க வேண்டும். முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குவைத், எகிப்து, ஈரான் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் பங்கு பெறும்போது பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ள நமது நாட்டில் பெண்களின் சேவையினை ஒதுக்கித் தள்ளக்கூடாது. தென் இந்திய கல்வி சங்கத்தில் சென்னையில் 2012 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அமைப்பில் ஐ.ஐ.டி தொழில் கல்வி நிலையங்களில் சேர முஸ்லிம் மாணவர்களுக்கு பயிர்ச்சி கொடுக்க ஒரு குழு அமைத்தார்கள். அதில் சிலர்  மாணவிகளைச் சேர்த்தால் பண்பாடு கெட்டுவிடும் என்றார்கள். அவர்களுக்கு சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பரிச்சையில் 1200 விழுக்காடுக்கு ஒரு முஸ்லிம் மாணவி 1190 எடுத்துத் தெரியிருக்கின்றார். அவர் கணிதம், கணினி, வணிக வியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்ணுக்கு 200 வாங்கி உள்ளார். அவர் ஐ.ஐ.டியில் சேர ஆசைப் பட்டால் அவருக்கு நாம் மத அடிப்படியில் பயிற்சிக் கொடுக்க ஏன் மறுக்க வேண்டும். 
ஆகவே முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் சாதனைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்கள் வளர்ச்சிக்குத் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது.




Sunday, 12 May 2013

எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி 'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா பெண்மணி




எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி  'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா  பெண்மணி

'காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் நோய்' மற்றும் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள்.
11.9.2001 நியுயார்க் இரட்டைக் கோபுர சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்கர்கள் உலக முஸ்லிம்களை அக்னிக் கக்கும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர்கள் சாருகான்,அமீர்கான், உ.பி.மாநில அமைச்சர் ஆஜம் கான் போன்றோர் முஸ்லிம் பெயரினைத் தாங்கியதாலேயே அமெரிக்கா செல்லும் பொது அங்குள்ள விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் அவமானப்படுத்த  பட்ட சம்பவங்கள் வேதனையாக இருந்திருக்கும்.
ஆனால் அதே அவமானத்தினை அமெரிக்க ராணுவத்திலேயே பணியாற்றும் ஒரு அமெரிக்கக் கிருத்துவப் பெண்மணி.' நொய்டா ஹோசென்' பெயர் ஒரு முஸ்லிம் பெயர் போன்று இருப்பதாலேயே தன சக ராணுவ வீரர்களால் அவமானப் பட்டுள்ளார்.
40 வயதான விமானப் படையில் முதல் வகுப்பு சார்ஜெண்டாக உள்ள நோய்டா ஹோசென் ஒரு கத்தோலிக்க கிறிஸ்டியன் பெண்மணி. ஆனால் அவர் பெயர் முஸ்லிம் பெயரான ஹுசைன் போன்று இருப்பதால் ஒருக் கேலிப் பொருளாக தன சக ராணுவ வீரர்களிடம் காணப் படுவதாக வேதனையுடன் புலம்பியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அப்படி என்ன கேலிப் பொருளாக சக ராணுவ வீரர்கள் கூப்பிடுகிறார்கள் என்றால் ,'சார்ஜெண்ட்  ஹுசைன் நீங்கள் எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்' என்று கேலி செய்வார்களாம்'.  சார்ஜெண்ட் ஹோசென் கூறும்போது, 'உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல'. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல ' என்றும் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமாகக் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியாற்றித் திரும்பியிருக்கும் நிலையில் சொல்லியிருக்கிறார் என்றால் எத்தனை உண்மை என்று உலகிற்குப் புரிந்திருக்கும். யார் கண்டது பிற்காலத்தில் சார்ஜெண்ட் நொய்டா ஹோசென் எல்லா வல்ல அல்லாஹ்வால் ஹுசைனாக மாறினாலும் மாறலாம் என்று நம்புவோமாக.
இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு எதிரானது, பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருந்தால் தான் மட்டும் வயிறு முட்டச் சாப்பிடுவது சரியல்ல, மதத்தால் எந்த மனிதரையும் வெறுக்ககூடாது, பிற மத வழிபாடு தளங்களை சேதப் படுத்துதல் கூடாது, வழிச் சண்டைக்குப் போகக் கூடாது, சாந்தியும், சமாதானமும் மனிதனுக்குக் கேடையங்கள் என்று மனிதனைப் புனிதனாக்கும் ஒரு அற்புத மார்க்கம் தான் இஸ்லாம். .   அதே சமயத்தில் எலித் தொல்லைக்குப் பயந்து அழகான வீட்டினையே கொளுத்தும் செயலாக இஸ்லாமிய நாடுகளையும், அங்குள்ள மக்களையும் அல்லது பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களையும்  அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் வஞ்சகக் கண்ணோடு பார்க்குமேயானால் சார்ஜெண்ட் நோய்ட ஹோசென் போன்ற மேலை நாட்டுப் படை வீர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களும் தீவிரமாக பரவி வரும் இஸ்லாமிய மார்கத்திற்கு வருவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகாது!

பங்களா தேசத்தில் 24.4.2013 அன்று எட்டு மாடிகள் கொண்ட அமெரிக்கர் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனக் கட்டிடம் இடிந்தது அதில் 1000 பேர் மாண்டதினையும், நூற்றுக் கணக்கானோர் காயம் பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதினையும் பத்திரிக்கைகளும், 'எலெக்ட்ரானிக் மீடியாக்களும் வெளிச்சம்  போட்டுக் காட்டின அனைவருக்கும் தெரியும். பங்களா தேஷ் அரசாங்கம் மீட்புப் பணிக்கு எந்த அந்நிய நாட்டு உதவியும் தேவையில்லை என்று தன் ஊழியர்களை வைத்தே மீட்புப் [பணியினை மேற்கொண்டது. அவ்வாறு 10.5.2013 ஈடுபடும்போது என்னே அதிசயம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியருக்கு யாரோ ஒருவர் இடிபாடுகளிடையே தட்டுவது போன்ற ஓசைக் கேட்டு சக ஊழியர்களை அழைத்து அந்த இடத்தில் தோண்டும்போது, சுபானல்லாஹ், ஒரு பெண்மணியின் முகம் தென்பட்டது. உடனே அவசரமாக செயல்பட்டு அவரை உயிருடன் 17 நாட்களுக்குப் பின்பு மீட்டிருக்கிறார்கள் என்றால் அதிசியத்திலும் அதிசயம்.
அந்தப் பெண்மணி 19 வயதான முஸ்லிம் பெண்மணி ரேஷ்மா ஆகும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் அவர் கூறும்போது,'தான் மாட்டிகொண்ட இடம் தொழும் அறையாகும்.  தன்னோடு வேலைப் பார்த்தவர்கள் சிலர் மாண்டு அருகில் கிடப்பதினை பார்த்திருக்கிறார். அந்த அறையின் மூலையில் சில காய்ந்த பேரித்தம் பழங்களும், ஒரு குடுவையில் தண்ணீரும் இருந்தது. அதனை சிறுக, சிறுக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன் எப்படியும் தன்னை மீட்டு விடுவார்கள் என்று உறுதியுடன் அங்கே கிடந்த ஒரு இரும்புத் துண்டையும், இடிபாடுகள் கிடந்தக் கல்லையும் எடுத்து 17 நாட்களும் வெளியே இருப்பவர்கள் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தட்டியுள்ளார். ஆனால் 16 நாட்கள் ஆகியும் பலனில்லை என்று சோர்ந்திருக்கும் போது 17ஆம் நாள் தட்டும்போது சத்தம் கேட்டு மீட்டார்கள்' என்று சொல்லியுள்ளார்.
இதிலிருந்து கீழ்கண்டவை புலனாகிறது:
1) புகலிடம் தேடி இறை இல்லத்தில் புகுந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் கை விட்டதில்லை.
2) 'எந்தத் துன்பம் தீர்ப்பதிற்கும் என்னிடம் கையேந்துங்கள்' என்ற கூற்று உண்மையாகி இன்னல் பட்ட ரேஷ்மாவினை ஏக இறைவன் காப்பற்றியதுபோல ஈமான் கொண்ட அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவான்.
3) பெருமானார் ஸல்லலாகு அலைவ ஸல்லம் அவர்களும் அவர்கள் தோழர்களும் பல நாட்கள் பேரித்தம் பழத்தினையும், கொஞ்சம் தண்ணீரையும் வைத்தே பல போர்களை வென்றிருக்கிறார்கள் என்பது வெறும் கதை அல்ல. மாறாக நிஜமான நிகழ்வு என்று உங்களுக்கு தற்போதுத் தெளிவாகுமல்லவா?.
4)பெண்கள் அல்லது குழந்தைகள் தனிமையில் இருந்தால் பேய்,பிசாசு , முனி, பூதம் பிடித்துக் கொள்ளும் என்ற சாத்தான் வேதம் ஓதும் பூச்சாண்டிக் புலம்பல் எல்லாம் இனி எடுபடாது. ஏனென்றால் ஒரு பெண்மணி தனிமையில் 17 நாட்கள் 90 டிகிரி வெப்பத்தில் மனத் தைரியத்துடன் வாழ்ந்து இருக்கிறாள். 
5) பயத்தினாலேயே செத்து மடியும் இந்த நவீன உலகத்தில்  மனதில் 'தில்' இருந்தால் எப்படியும் வாழலாம் என்று உலகிற்கு, குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் காட்டகத் திகழ்கிறாள் ரேஷ்மா என்ற முக்காடுப் போட்ட முஸ்லிம் பெண்மணி.

'தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது'. தாயார் தின நினைவுக் கட்டுரை!





13.5.2013 அன்று தாய்மார் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஏனன்றால் கணவனின் அல்லது தன்னைக் கவர்ந்தவனின் நினைவாக பிள்ளையினைத் தன் வயிற்றில் தாங்கி, தான் உண்ணும் உணவுகளை அதற்கு தொப்புழ்க் கொடி மூலம் பகிர்ந்துக் கொடுத்து,வயிற்றில் வளரும் பிள்ளை செய்யும் சேட்டைகளை இன்ப சேட்டையாக தாங்கிக் கொண்டு, பிள்ளை பெறும்போது தான் சில வேளையில் இறக்க நேரிடும் என்ற பயம் இருந்தாலும் பிள்ளையினைப் பெற்றெடுத்து, பெற்றெடுத்த பிள்ளையினை தன உதிரத்தில் பாலூட்டி,தாலாட்டி, சீராட்டி  வளர்க்கும் மகிமையினைக் கொண்ட தாயினை கௌரவிக்க தாய்மார்கள் நாள் உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. ஒரு தாய் எப்போது முதல் தடவையாக சிரிக்கிறாள் என்றால் தனது பிரசவத்தின் போது குழந்தை அழும் சத்தத்தினைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பாளாம். 'ஆகவே தான் தாயில் சிறந்த கோவிலுமில்லை' என்ற தமிழ் பழமொழியும் உள்ளது.
1912 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் அண்ணா ஜார்வின் என்ற பெண் தன தாய் நினைவாக 1908ஆம் ஆண்டு ஒரு விழா எடுத்தாள். 1912 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் தாய்மார்களின் நினைவு நாளினை ஒரு விடுமுறை நாளாக அறிவித்தார். அதன் பின்பு உலகில் பல்வேறு இடங்களில் தன் தாய்மார்களுக்கும், பாட்டிமார்களுக்கும் விழா எடுத்தும், பரிசுப் பொருள் வழங்கியும் பெருமைப் படுத்தப் படுகிறார்கள். நமது நாட்டில் சரஸ்வதி பூஜை நேரத்தில் மாதா பூஜையும் நடத்துகிறோம்.
'தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்று சொல்கிறது திருக்குர்ஆன்'. ஆனால் எத்தனையோ மனிதர்கள் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாயினையே தனக்கு ஒரு மனைவிக் கிடைத்ததும் எட்டி உதைக்கும் அகங்கார நிலையினை இன்றைய நவீன உலகத்திலேயே கண்கூடாகக் காணலாம்.
அதுபோன்ற ஒரு சம்பவம் எகிப்து நாட்டிலே நடந்துள்ளது. அதாவது ஒரு விதவைத் தாய் தன் மகனை நன்றாகப் படிக்க வைத்து, டாக்டராக ஆக்கி அழகு பார்த்தாள். அவனுக்கு அழகான ஒரு துணைவியையும் தேடி திருமணம் செய்து வைத்தாள். அதன் பின்பு அவன் தன் தாயினை அவன் உதாசீனப் படுத்த ஆரம்பித்தான். அதனைக் கேள்விப் பட்ட முஸ்தபா அமீன் என்ற பத்திரிக்கையாளர், 1943 ஆம் ஆண்டு 'சிரிக்கும் அமெரிக்கா' என்ற(அமெரிக்காவினைக் காப்பி அடிக்கும் கலாசாரம்) ஒரு நூலினை எழுதினார். அதன் எழுச்சியின் பயனாக 1956ஆம் ஆண்டு ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் 'தாயார் தினத்தினை' கொண்டாடும் நாளாக அறிவித்தார். பெற்ற தாயினை, 'கோபத்தில் கூட, "சீ" என்று சொல்லகூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
பெற்ற தாய், தந்தையினை சொத்துக்களை நயவஞ்சகமாக அபகரித்து விட்டு, அவர்களை நடுத்தெருவில் அபலைகளாகவும், முதியோர் இல்லத்திலும் தள்ளி விடும் அநாகரிக காலத்தில் தாயார்மார்களுக்கு கௌரவப் படுத்தும் விதமாக தாயார் தினம் கொண்டாடப் படுகிறது பாராட்டக் கூடிய ஒன்றேயாகும்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் வாழும் கென்னெத் ஹைடன் என்ற பெண்மணி, கைவிடப் பட்ட தாய்மார்கள், தனியாக வாழும் பெண்மணிகளுக்கு உதவ சிறார்களைத் திரட்டி நிதி வசூல் செய்து அவர்களைக் காப்பாற்ற ஒரு நிறுவனத்தினை நிறுவினார். இலை உதிர் காலத்தில் அங்கே பூக்கும் 'கிரிச்தோமம்' என்ற பூக்களினை தங்கள் சட்டையில் குத்தி தாய்மார்களுக்கு அஞ்சலி செய்வார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 1986 முதல் 1904ஆம் ஆண்டு வரை குழந்தைப் பிறப்பது குறைவாக இருந்ததால் பெண்கள் அதிகக் குழந்தைகள் பெறவேண்டும் என்று தலா ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்த பத்துத் தாய்மார்களுக்கு 1906ஆம் ஆண்டு, 'அதிக குழந்தை பெற்ற தாய்மார்கள்' என்ற பட்டம் சூட்டி கௌரவப் படுத்தப் பட்டார்களாம்.

அமெரிக்காவில் கிளீவ்லாந்து மாநிலத்தில் மூன்று பள்ளிச் சிறார்களை 2002 முதல் 2004 ஆம் ஆண்டுகளில் கடத்தி, கட்டி வைத்து, சித்திரவதை செய்து சிதைத்த காமக் கொடியவனிடமிருந்து 8.5.2013 அன்று மீட்கப் பட்ட நாளினை அந்தக் குழந்தைகளின் தாயார்கள் தங்கள் நாட்களாக கொண்டாடுகிறார்களாம். அதேபோன்று நமது நாட்டில் பாலியல் கொடுமையில் சிதைந்தது பெரும்பாலும் சிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அவர்களின் தாய்மார்கள் வேதனையிலிருந்து விடுபட இந்த தாய்மார்களின் நாளினை அவர்களுக்கு அர்ப்பணிப்பது  சாலச் சிறந்ததாகும். 
இந்த ஆண்டு இந்திய பெண்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். என்னவென்றால், பெண்களுக்கு சொத்துரிமை சட்டமாக்கப் பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொடியவர்கள் தாக்கி ஒன்று கொலை செய்வது அல்லது அவர்களைத் தாக்கி ஆபரணங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகவே தனியாக இருக்கும் பெண்கள் பகுதியில் வாழும் ஆண், பெண், இளைஞர்கள் அத்தனை பேர்களும் அவர்களைக் காக்கும் கேடையமாக வாழ்ந்தால் நாடு செழிப்போடு இருக்கும் என்றால் மிகையாகாது  

ஒரு குழந்தை நல்லவனாகவோ அல்லது நல்லவளாகவோ வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் தாயைப் போல சேலை என்று சொல்வார்கள். அந்தப் பெருமை தாயினைச் சேரும்  அதே பெருமையினை இந்த நாளில் நமது தாய்மார்களுக்குச் சேர்ப்போமாக.