Wednesday, 2 October 2013

வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே ஏன்?



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய திருநாட்டில் மைனாரிட்டி சமூகம் என்றால் முதலில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம்களும், இரண்டாவது இடத்தில் 12.71 விழுக்காடு கொண்ட  கிருத்துவர்களும், மூன்றாவது இடத்தில் 10.13 விழுக்காடு கொண்ட சீக்கியவர்களும் உள்ளனர்.
நீதி அரசர்கள் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் உயர் சாதியினராக இருந்தாலும் நெறி தவறாது முஸ்லிம்கள் வாழ்க்கைத் தரத்தின் கடைகோடியில் இருப்பதாக தங்களது உண்மை கண்டறியும் அறிக்கையில் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையினை கையிலெடுத்து சமூதாய இயக்கங்கள் இட ஒதுக்கீடுகளுக்குப் போராடின. பாராட்டக் கூடிய செயல் என்பதால் மெச்சலாம், போற்றலாம். ஆனால் அந்த இயக்கங்கள் அரசு மைனோரிட்டி மக்கள் சுய வேலை திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தினை தங்களுடைய மக்களுக்குப் போய் சேர்ந்து அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தார்களா என்றால் மிகவும் குறைவே என்ற புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அவற்றினை கீழே காணலாம்:
மைனாரிட்டி சமூகத்தினவர் சுய வேலை கடன் திட்டத்தில் பயன் பெற ரூ 1,83,072.45 கோடிகள் ஒதுக்கப் பட்டன. இந்திய நாட்டில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் பெற்ற கடன் வெறும் ரூ.87,603 கோடிகள் தான். அவை வெறும் 50 விழுக்காடு தான்.
ஆனால் 12.71 விழுக்காடு கொண்ட கிருத்துவ மக்கள் அடைந்த பலன் 23.35 விழுக்கடுகளும், சீக்கிய மக்கள் 10.13 விழுக்காடு இருந்தாலும் ரூ. 47.577 கோடிகள் பெற்று இரண்டாவது இடத்தில் பலன் அடைந்துள்ளார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் 72 விழுக்காடு ஜனத்தொகை மைனாரிட்டியாக இருந்தாலும் மிகக் குறைவாகவே 50 விழுக்காடு கடன் உதவிப் பெற்றுள்ளனர். இதிலிருந்து அரசு பணம் மக்களுடையது. அதனைப் பெற்று நமது வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வரவில்லையே அது யாருடைய குறை?
பல்வேறு அரசியல், சமூகப் போராட்டங்களுக்காக மைனாரிட்டி மக்களைத் திரட்டிப் போராடும் சமூதாய இயக்கங்கள், தேர்தல் நேரத்தில் ஓரிரு இடத்திற்காக தன்மானத்தினை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் ஏன் ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை?
வாரந்தோறும் பள்ளி வாசல் முன்பும், வணிகத் தளங்களின் முன்பும், செல்வந்தர்கள் வீடு முன்பும் கையேந்தி யாசகம் செய்யும் ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற, சுயமாக சம்பாதிக்க, சொந்தக் காலில் நிற்க  ஏன் முஸ்லிம் சமூதாய இயக்கங்கள் முன் வரவில்லை?
மைனாரிட்டி சமூகத்தினருக்காக ஒதிக்கிய லக்ஷம் கோடி ரூபாயில் ஏன் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பெற்று வழங்க வில்லை?  என்று சுய சிந்தனை செய்ய வேண்டாமா?
தங்கள் இயக்கங்கள் வளரக் கொடிப் பிடிக்க முஸ்லிம் மக்களை எதிர் பார்க்கும் இயக்கங்கள் ஏன் அந்த புண் பட்ட கைகளுக்கு மருந்து போட, குழந்தைகள் படிப்பினிக்கு கல்விக் கடன் பெற, குடியிருக்க வீடு லோன் கிடைக்க, விவசாயம், தொழில் தொடங்க கடன் பெற, திருமண, முதியோர், ஊனமுற்றோர், விதவையினர் வாழ்க்கையில் ஒளியேற்ற ஏன் இயக்கங்கள் அதன் தொண்டர்கள் செயல் படக்கூடாது என்று சுய சோதனை செய்ய வேண்டும் என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா என் சமூதாய உள்ளங்களே!

No comments:

Post a Comment