Saturday, 18 October 2014

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !

நான் சிறுவனாக இருந்தபோது இளையான்குடி  சுல்தான் அலாவுதீன் தெருவிலிருந்த இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் கட்டிடத்தில் ஊர் பெரியவர்கள் இளையான்குடி ஹை ஸ்கூல் சம்பந்தமாக கூட்டம் நடத்தி சிறுவர்களின் கல்வி   வளர்ச்சி சம்பந்தமாக பேசுவதினை ஜன்னல் வழியாக 1960 ஆம் ஆண்டுகளில் பார்த்துள்ளேன். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் யாரும் பட்டதாரிகளாக இருந்ததில்லை. மாறாக இளையான்குடி வருங்கால சந்ததியருக்கு கல்வியினைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் பேச்சில் இருந்ததுண்டு என்பதினைக் காண முடிந்தது.
சென்னை மாகாணத்தில் குலக் கல்வி முறை ஒழித்து குடிமக்கள் கல்வியினைத் தந்த பெருமை முன்னாள் ஆங்கிலேயக் கவர்னர் தாமஸ் மன்றோவினைச் சாரும். ஆகவே தான் அவருடைய ஆளுயுர கம்பீரமான குதிரை சிலையினை சென்னையில் ஐலண்டு மைதான அருகில் உள்ள மிலிடரி அகாடமி எதிரில்  வைத்து அழகு பார்க்கின்றோம்.

1945 ஆம் ஆண்டுஇளையான்குடியில்  நிறுவிய முஸ்லிம் கல்வி ஸ்தாபனத்தின் பயனாக இன்று நர்சரி,மிடில், உயர் நிலைப் பள்ளி, .டி .,கல்லூரி, ஆசிரியைப் போன்ற கல்வி நிலையங்கள் உள்ளன,போற்றத் தக்கதுதான். ஆனால் இளையான்குடி மக்கள் கல்வி அறிவில் மற்ற முஸ்லிம் ஊர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் மிகவும் பின்தங்கிதான் உள்ளனர் என்பதினைக் கீழ் கண்ட புள்ளி விவரத்துடன் கூறலாம் என நினைக்கின்றேன்.
ஊர்                              மக்கள் தொகை              கல்வியறிவு சதவீதம்        தேசிய அளவில்  

இளையான்குடி      109,160                                   70.16                                          74.04

கிழக்கரை                  38,355                                     82.63                                             -டூ-

காயல்பட்டினம்       32,664                                    88.67                                             -டூ -

அதிராம்பட்டினம்   31,066                                    74.21                                              -டூ-

முத்துபேட்டை       40,000                                    71.00                                              -டூ -



லிட்டரசி  என்றால் என்ன?

இந்திய லிட்டரசி மிசன் லிட்டரசி பற்றி சொல்லும்போது படிக்க, எழுத கணக்குபோட, படித்தக் கல்வியினை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த செயல் திறன் உள்ளதினைக் காட்டுவது.

அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய ஊர்களிலும் குறைந்த லிட்டரசி சதவீதம் இருப்பதிற்கு கீழ்கண்ட காரணங்கள் சொல்லலாம்:

1) பள்ளிக் கல்விக் கூடங்களில் சரியான கட்டமைப்பு இல்லாதது.

2) பெண்கள், ஆண்கள் கழிப்பிட வசதியில்லாதது.

3) பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்தாலும், பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்காதது. 'ஒரு பெண்ணுக்கு கல்வி கற்றுக்  கொடுத்தால் ஒரு தலைமுறைக்கு கல்வி கற்றுக் கொடுத்ததிற்கு சமம்’o என்ற பழமொழியினை மறந்தது'.

4)திறமையில்லாத ஆசிரியர்கள் போதிப்பது.

5) ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இல்லாதது.

6) பெற்றோர் தொழிலை க் கவனிக்க ஆளில்லை என்று பிள்ளைகள் படிப்பினை பாதியில் நிறுத்துவது.

7) குடும்ப வறுமை

8) படிப்பு வரவில்லை என்று பாதியில் நிறுத்துவது.

9) பள்ளிக்கூடம் வராத மாணவர்களை சந்தித்து அவர்கள் வராத காரணம் தெரிந்து அதனை நிவர்த்தி செய்ய மனம் இல்லா ஆசிரியர்கள் கொண்ட கல்விக்கூடம் அமைவது போன்றவைகள் ஆகும்.

இளையான்குடியில் நாகர்கோவிலைச் சார்ந்த     சௌகத் அலி என்ற தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் மாலை நேரங்களில் இளையான்குடி நகரில் மாலை நேரத்தில் வலம் வந்து தெருவில் படிக்காமல் சுற்றும் மாணவர்களைக் கண்டித்து வீட்டிற்கு படிக்க அனுப்புவார். நெய்வேலி ஜவஹர் பள்ளி தலைமை ஆசிரியர் மாலை நேரங்களில் எதாவது ஒரு வீட்டில் நுழைந்து மாணவர் யாரும் படிக்காமல் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து சினிமா பார்க்கிறார்களா என்று அறிந்து கண்டித்து படிக்க வைப்பதால் அந்தப் பள்ளியில் நூறு சதவீத வெற்றி இருப்பதினை நான் டி..ஜி.யாக இருந்தபோது அறிவேன். அவர்கள் போன்ற மாணவர்களுக்காக தியாகம் செய்யும் ஆசிரியர்களைக் காண்பது அரிதாக உள்ளது. ஏனென்றால் ஆசிரியர் வேலையில் அமரும்போது லட்சங்கல் கொடுத்துதான்  வேலையில் அமரும் கேவலமான நிலை இருப்பதால் தகுதியும், தியாகமும் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறுவதால் மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மத்திய அரசு படிப்பது மக்கள் உரிமை என்று 'ரைட் டு எஜுகேசன்' என்ற சட்டம் கொண்டு வந்ததால்  வயது ஆறு முதல் வயது 14 வரை கல்வி கற்பது அவசியம் என்றும், சிறார்களை படிக்கவிடாது வேலைகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்ற சட்டம் இருப்பதால் படிப்பது இன்று காலத்தின் காலத்தின் கட்டாயமாகும். அந்தக் கல்வியினை வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியாக அமைத்துத் தருவது முஸ்லிம் கல்வியாளர்களைச் சார்ந்தது ஆகும். அண்டை மாநிலம் கேரளாவில் லிட்டரசி சதவீதம் 93.91 ஆகும். அங்கு கல்வி கற்காத முஸ்லிம்களைக் காணுவது அரிது.

தமிழகத்தில் முஸ்லிம் சமூதாயம் அதிகமாக கொண்ட ஊர்களில் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் கல்வி நிலையங்கள் தான் அதிகம்.
தொழில் கல்வியினைக் கொடுக்கக் கூடிய பாலிடெக்னிக் அல்லது பொரியல் கல்லூரிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு மிகக் குறைவே!
கல்விக் கூடங்களில் நிர்வாகிக்கும் நிர்வாகிகள் ஒரு தடவை பதவிக்கு வந்தால் அந்தப் பதவி தன் வீட்டுச் சொத்து என்று ஏதோ ஒரு வழியினைக் கையாண்டு சிறந்த கல்விக் கூடங்கள் அமைவதிற்கு தடைக் கல்லாக இருப்பது.
கல்வி நிலையங்களில் அரசு வேலைக்கான பரிட்ச்சை எழுத பயிற்சி கொடுக்காததால் அரசு வேலைகளில் நமது சமூதாயம் மிகவும் பின் தங்கி உள்ளது. அதனால் முஸ்லிம் மக்களுக்கு அரசால் வழங்கப்படும் திட்டங்கள் முஸ்லிம் மக்களுக்குப் போய் சேராத நிலை ஏற்படுகின்றது. அத்துடன் பாதுகாப்பற்ற நிலைக்கும் தள்ளப் படுகின்றனர்.
முஸ்லிம் சிறார்களை இளமையில் கற்பித்து, வீட்டிற்கும்சமூதாயத்திற்கும், நாட்டிற்கும் தகுதி உள்ள குடிமக்களாக மாற்றுவது ஒவ்வொருவருடைய கடமையாகும்!




No comments:

Post a Comment