Saturday, 2 December 2017

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
 பல நபி மார்களை உருவாக்கிய மக்கமா நகரில் கி.பி . 570ஆம் ஆண்டில் நானிலம் போற்றும், உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரமான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உதித்தார்கள். அவர்கள் பிறந்த நாளினை ஏன் கொண்டாட வேண்டும், ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மை தான் பெருமானார் சில மதத்தின் தலைவர்கள் போல தன்னுடைய நிழலையே  அல்லது தனது அங்க அடையாளங்களையோ வைக்கக் கூடாது என்றும், தான் ஒரு கடவுள் இல்லை என்றும், தான் ஏக அல்லாஹ்வால் இறுதி நபியாக மட்டும் அடையாளம் காட்டப் பட்டு தனக்கு இறைவன் போதித்த வஹிக்களை மானிடர் பண் பட எடுத்துரைப்பவன் என்று எளிமையாக சொன்னார்கள் என்பதும் உண்மைதான். அவர்கள் அல்லாஹ்வின் பால் தஞ்சம் புகுந்து 1400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அவர்களுடைய உருவ சிறு கோடு கூட வரைந்து வெளிவந்தால் அதனை எதிர்க்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொண்ட சமுதாயம் தான் இஸ்லாம் என்றும் மறுக்க முடியாது தான்.
ஆனால் அந்த ரசூலுல்லாஹ் இல்லையென்றால் இன்று புனிதக் குரானை  கண்டிருக்க முடியாது, மக்கள் மாக்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்றால் மறுக்கமுடியாது. உலகினை நல் வழிப் படுத்த வந்த 1,24,000 நபிமார்களில் இறுதி நபியாக வந்த ரசூலுல்லாஹ் உலகில் உதித்த நபி மார்களையும், அவர்களுக்கு அளிக்கப் பட்ட தவ்ராத், சபூர் , இன்ஜீல் வேதத்தினைப் பற்றியும், அவர்களின் அருமை பெருமையினை என்றாவது மறைத்து சொன்னதுண்டா பெருமானார், இல்லையென்றால் அவர்கள் சரிதம் அகிலத்திற்கு தெரிந்திருக்குமா? தன்னை என்றாவது முன்னிலை படுத்தியதுண்டா? அல்லாஹ்வால் இறக்கிய முதல்  வஹியினை ஜிப்ரயில் அலைவ ஸல்லம் அவர்கள் மூலம் பெற்று ஹிரா குகையிலிருந்து உடல் நடுங்கி வந்தபோது என்றும் உண்மை பேசும் நபி அவர்களின் சொல்லை முதன் முதலில் ஏற்ற பெருமை கதிஜா பிராட்டியாரைத் தகும். அன்று ஒரு விசுவாசியாக இருந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று அகிலத்தில் 150 கோடி மக்களைக் கொண்டிருக்கின்றது என்றால் அவர்கள் பிறந்த தினத்தினை நினைவு கூறாமலே இருக்க முடியுமா?
பெருமானாரின் இளம் வயது வாழ்வு, வளர்ச்சியினை பார்த்த்தோமென்றால், இளம் வயதில் பெற்றோரை இழந்து, உறவினர் அரவணைப்பில் வளர்ந்து, உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரம், ஒழுக்கம் தவறாமை, நாணயம் குறையாமை போன்ற நல்ல ஒழுக்கங்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். மக்கமா நகரிலும், சுற்று வட்டாரத்திலும் நடக்கும் அனாச்சாரங்களை கண்டு மனம் வெதும்பி தனக்கு கொடுக்கப் பட்ட வஹிகளால் மக்களை நல்வழிப் படுத்த முயலும் போது விரட்டப் பட்டு, வந்தாரை வாழ வைக்கும் சங்கை மிகு மதினாவில் தஞ்சம் புகுந்து மக்கா நகருக்கு ஹஜ் செய்ய வரும்போது அரபாத் மலை உச்சியில் இருந்து கடைசி உரையாற்றும் போது மக்கள் வெள்ளம் ஒரு லட்சத்தினைத் தாண்டியது. இன்றைய நவீன ஒலி பெருக்கி சாதனமில்லாமல் சிங்கக் குரலில் தன் சங்கை மிக்க சொற்பொழிவினையாற்றினார்கள். இன்று அந்த உம்மத்தின் வானளாவிய வளர்ச்சி இனம், மொழி, எல்லை தாண்டி, உள் நாட்டு சண்டைகள், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உடல், உடமை, செல்வம் இழந்து பசியும் பட்டினியிலும், கடுங்குளிர், கடுமையான வெயிலிலும் வாடினாலும் முஸ்லிம்கள் ஈமானை இழக்காமல், நம்பிக்கை மோசம் போகாமல், 150 கோடி மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்றார்கள் உறுதியான ஆல மரம் போலவும், அகண்ட, ஆழமான கடல் போன்றும், வற்றாத ஜீவ நதி போலவும் வளர்ந்திருக்கின்றார்கள் என்றால் அதன் பெருமை  அதனை போதித்த எம்பெருமானின் புகழினையே சேரும்.
            இன்று பல மேலை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 2001 நியூ யார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பிற்கு பின்னர் முஸ்லிம் வழிபாட்டு தளங்களிலும், உடை, விசா, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பல கட்டுப் பாடுகள் இருந்தாலும் 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை மூன்று மடங்காக உயரும் என்று 30.11.2017 தேதியிட்ட 'பைனான்சியல் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது. அதனையே நியூ யார்க்கில் உள்ள 'பியூ' என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி சொல்கிறது. அதன் விவர அறிக்கையில் ஜெர்மனியில் முஸ்லிம் மக்கள் தொகை 6.1 சதவீதமாக இருப்பது 2050ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாகுமாம். இவ்வளவிற்கும் ஜெர்மனியில் வெள்ளை நிறவெறி அதிகமாவதுடன், முஸ்லிம்கள் அகதிகளுக்கு வாழ்வளிக்கும் கொள்கையினை ஜெர்மன் இரும்புப் பெண்மணி மார்க்கள் கையிலெடுத்தபோது அதனை அவருடன் கூட்டணி வைத்திருக்கும் காட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் அகதிகளுக்கு தங்கள் எல்கைகளை மூடினாலும் முஸ்லிம் மக்கள் தொகை கூடுமாம். அதே போன்று தான் இங்கிலாந்தில் 2016 மக்கள் தொகை கணக்குப் படி 6.3 சதவீத முஸ்லிம் மக்கள் 2050ம் ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரிக்குமாம்.
            அதற்கான காரணத்தினை சொல்லும்போது முஸ்லிம் மக்களிடையே இளைஞர் பட்டாளம் அதிகமாம், அதனோடு முஸ்லிம் மக்கள் இனப் பெருக்கமும் அதிகமாகுமாம். 2050 ம் ஆண்டில் முஸ்லிம் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகமாகுமாம். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத சிறுவர் எண்ணிக்கை 15 சதவீதம் தான் இருக்குமாம். 2010ல் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை ஒரு கோடியே 95 லட்சமாக இருந்தது 2016 ல் மக்கள் தொகை கனக்குப் படி ஐரோப்பாவின் 30 நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 2 கோடியே 58 லட்சமாக உயர்ந்து விட்டதினை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தான் சமீப காலங்களில் முஸ்லிம்கள் இந்தியாவில் முன்னேற  பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் 2050ம் ஆண்டில் முஸ்லிம் மக்கள் தொகை 31 கோடியே 10லட்சத்தினை தாண்டும் என்று அதே 'பியூ' ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.
            மேற்கூறிய உதாரணங்களை உங்கள் கவனத்திற்கு ஏன் எடுத்துச் சொல்கிறேனென்றால் பெருமானார் எடுத்தியம்பியது உண்மையான, உறுதி கொண்ட, இயற்கை நல்வழி மார்க்கமாகும். அதில்  ஆடம்பர, அலங்காரங்களுக்கு இடமில்லை. உண்மைக்கு புறம்பான செய்திகளும் இல்லை. மக்கள் எளிதாக கடைப்பிடிக்கும் வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்திருப்பதே அதன் சிறப்பாகும். இஸ்லாத்தினை யாரும் வாள்  கொண்டோ, பொன்னையும் புகழையும் அள்ளி இறைத்தோ வளர்க்க வில்லை மாறாக மனித உள்ளத்தினை நல் வழிப் படுத்தியே வளர்ந்திருக்கின்றது என்ற செய்திக்கு ஒரு சமீப கால உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.
கேரளாவில் ஒரு முஸ்லிம் அல்லாத அகிலா என்ற பெண்மணி தன் கணவர் முஸ்லிம்  மதத்தில் சேர்ந்ததினை ஒரு 'லவ் ஜிகாத்' என்ற முத்திரை குத்தி அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று, அந்த பெண் திருமணத்தினை செல்லாது என்று அறிவித்த கேரளா உயர் நீதி மன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்து அந்த பெண்ணுக்கு வாழ்வளித்து  நீதியினை நிலை நிறுத்தியது என்றால் அது மத துவேஷ சமீப கால அரசின் நடவடிக்கையில் பரபரப்பாக பேசப் பட்டது. 1.12.2017ல் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கூட பாரத பிரதமரை தனிப் பட்டமுறையில், 'இந்தியாவினை மதத்தின் பெயரால் துண்டாட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டதாக  பேட்டி கொடுத்துள்ளார்.
அகிலா என்ற சேலம் ஹோமியோபதி கல்லூரி மாணவி தான் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தின் பால் ஈர்க்கப் பட்டேன் என்று கூறும்போது, 'தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் முஸ்லிம் மாணவிகள் ஜெஸிலா, பசினா ஆகியோர் நாள் தோறும் புனித குரானை படிப்பதினையும், ஐவேளை தொழுவதையும், மற்ற மாணவியர் போலல்லாமல் ஒழுக்க சீலர்களாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தான் முதல் செமஸ்டர் பரிச்சையில் தோல்வியடைந்து மனமுடைந்து தற்கொலை செய்யுமளவிற்கு வந்தபோது தனது அறை முஸ்லிம் ஜெஸிலா தான் தைரியம் கொடுத்து மறுபடியும் பரீட்சை எழுதி தேர்ச்சி பெறச் செய்தார். நானும் புனித குரானின் மலையாள  மொழிபெயர்ப்பினை வாங்கிப் படித்தும் இன்னும் இணைய தளங்கள் மூலம் இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்கள் சேகரிக்கும்  போது ஷாபின் என்ற முஸ்லிம் வாலிபர் சிறந்த விளக்கங்களை தந்ததால் அவருடன் இணைய தளம் மூலம் தெளிவு பெற்றேன். என்னுடைய முஸ்லிம் தோழியர் நோன்பு பிடிக்கும் போது நானும்  நோன்பும் கடைப் பிடித்தேன். அதனை அறிந்த தனது பெற்றோர் எனது படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தனர். ஆனால் அதற்குள் எனக்குப் பிடித்த ஷாபினுடன் திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்பு தான் பட்ட கொடுமையையும், என் ஐ.ஏ. என்ற அமைப்பினர் விசாரணையும் என்னை கலங்க வைக்க வில்லை. எனக்கு உறுதுணையாக உச்ச நீதிமன்றமும் இருந்து எனது கல்லூரி படிப்பினையும் தொடர அனுமதித்தது' என்று கூறியிருக்கின்றார். அகிலா என்ற ஹதியாவின் இஸ்லாமிய பற்றும், குரானின் வரிகளும், பெருமானாரின் ஹதீஸுகளும் தான் அகிலாவினை இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்த்ததே அல்லாமல் வாள் , வன்முறை அதிகாரமோ ஈர்க்க வில்லை.

இதனை பார்க்கும் போது எவ்வாறு பெருமானார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும், சொல்லவேன்னா துன்பமும் அடைந்தாலும் ஏக இறைவன் என்ற கொள்கையிலிருந்து பிறழாது இஸ்லாமிய மார்க்கத்தினை போதித்ததால்தான் இன்று ஹதியா போன்ற மாற்று மதத்தினர் இஸ்லாத்தினை பின்பற்றி வருகின்றனர். அதனையே தான் 'பியூ' ஆராய்ச்சி கட்டுரையும் சொல்கிறது. ஆகவே தான் பெருமானாரின் புகழினை எடுத்துச் சொல்வது தவறில்லை என்று கூறுவதில் தவறில்லை என்று  நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அதே நேரத்தில் ஷிர்க்கான காரியங்களை விட்டு மீலாது நபி விழா என்று ஆடம்பரமாக கொண்டாட இஸ்லாமிய மார்க்கத்தில் இடமில்லைதானே !

1 comment:

  1. Good post. I learn something totally new and challenging on blogs I stumble upon on a daily basis. It will always be interesting to read articles from other authors and practice something from their websites...
    Logistics Software
    Fleet Management Software
    Logistics management software
    Warehouse Management Software

    ReplyDelete