Thursday, 28 June 2018

இந்தியாவில் அறிவிக்கப் படாத எமர்ஜென்சியா?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ .பீ.எஸ்(ஓ)
இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம் உள்ளடக்கிய, அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழும் உரிமை கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்று அரசியலமைப்பு சட்டம், 1950 சொல்கிறது. அந்த சட்டங்களை காலடியில் போட்டு மிதித்த எமெர்ஜென்சி என்ற அவசர காலம் 1975  -1977 வரை 21 மாத காலங்கள் இருந்தன. அந்த காலச் சுவடுகள் அழிந்து 41 ஆண்டுகள் ஆகின்றன. அதனைக் கொண்டாடும் விதமாக இன்றைய மத்தியில் ஆளும் அரசு ‘கருப்பு நாள்’ கொண்டாடுகிறது. ஆனால் அந்த நாட்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது என்று சமீபகால நடவடிக்கைகள் சொல்கின்றன. யார் எமெர்ஜென்ஸிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார்களோ அவர்களே இன்று  மக்கள் தங்கள் உரிமைக்காக, உயிர் வாழ்வதற்காக போராடும்போது அவர்களை தீவிரவாதிகளாக வர்ணம் பூச நிணைப்பது ஒரு அதிகார மமதையில் செய்யும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
            எதிர்க் கட்சியில் இருந்தபோது போராடியவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் அவர்களுடைய ஊரையடித்து உலையில் போடும் செயலையும், அடாவடி அரசியலையும் எதிர்க்கும் தன்னுடைய சொந்த மக்கள் மீது காவல் துறையினர், ராணுவத்தினர் கொண்டு அடக்குமுறை செயலில் ஈடுபடுவது உலகெங்கும் நடந்து கொண்டு தான்  உள்ளது. மக்கள் போராட்டங்களால் மகுடங்கள் உருண்ட பல சம்பவங்கள்  உள்ளன. அவை எவை எனப் பார்க்கலாம்:
1)    ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி 1760  ல் ஏற்பட்டு தொழிலாளி-முதலாளி என்ற வர்க்க யுத்தம் ஏற்படும் போ து முதலாளி வர்க்கத்திற்கான எதிரான  புரட்சிக்கு வித்திட்டது. 1789 ல் மன்னர் ஆட்சிக்கு எதிரான புரட்சி பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டு மன்னராட்சி அகற்றப் பட்டது. 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சி மூலம் ரஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
2)    1989 ம் ஆண்டு சீனாவில் மாணவர் எழுச்சியில் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘டினமென்’ மைதானத்தில் கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் 10000 பேர்களை ராணுவ டேங்குகளை கொண்டு நசுக்கியது ஒரு வரலாற்று அடக்குமுறையாக கருதப் படுகிறது.
3)    ஜப்பானில் உள்ள புகிஷிமாவில் அணு சோதனை நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தினைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அணு நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து அது ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் பரவியது.
4)    அதே போன்ற எழுச்சிகள்  வட அமெரிக்கா, ‘அரப் ஸ்பிரிங்’ என்ற புரட்சி டூனிஷிய, எகிப்த், சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டது. 2001 ம் ஆண்டு ஆப்கான் மக்கள் மன்னர் சாகிர் சாவிற்கு எதிராக புரட்சி செய்தார் என்பதும் வரலாறு.
5)    இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான புரட்சி 1857 ல் சிப்பாய் கலகமாக துவங்கி ஆட்சி மாற்றத்தினை 1947ல் காண முடிந்தது. சுதந்திரம் அடைந்த பின்பு 1975 ம் ஆண்டு எமெர்ஜென்சி என்ற அவசரகால நடவடிக்கை துவங்கியபோது அனைத்து மக்களும், எதிர்கட்சிகளும் போராட்டத்தினை துவங்கின. அதன் பயனாக 1977 ல் ஆட்சி மாற்றத்தினைக் காண முடிந்தது. அப்போது போராடிய தலைவர் கள் ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மேராஜி தேசாய்  யாரையும் தீவிர வாதிகள் என்று இன்றைய ஆட்சியினர் சொன்னதில்லையே அது ஏன்? அது மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தல் நெய்குடம் என்று சொல்லுவது போன்ற செயலாகாதா?
6)    2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ல் புது டெல்லி ஆம் ஆத்மீ  அரசினை கண்டித்து ப.ஜ.க ஆர்ப்பாட்டம் செய்ததே அது தீவிர வாத செயலா?
7)    அல்லது தற்போதைய ராஜஸ்தான் ப. ஜ. க அரசு டாக்டர்களை பழி வாங்குகிறது என்று போராடுகிறார்கள் அது தீவிரவாத செயலா?
8)    உ.பி.ஏ. என்ற காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருக்கும்போது அரசுக்கு எதிராக அண்ணா ஹஜாரே போராடியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் ஆர்ப்பாட்டம் செய்தும், பிரதமர், காங்கிரஸ் தலைவி வீட்டிலும் மறியலில் ஈடுபட்ட இன்றைய மக்கிய அமைச்சர் தளபதி வி.கே.சிங், இன்றைய புதுச்சேரி ஆளுநர் கிரேன் பேடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜராவால், ராம்தேவ் போன்றோர் தீவிர வாதிகளா?
9)    1)    கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு சேர மன்னர் ஆட்சியிலிருந்து. அதன் பின்பு கேரளா நம்பூதிரி நாயர்கள் ஆளுமையில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமைப் படுத்தப் பட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற குமரித் தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் பெரிய போராட்டம் நடந்தது. அவருக்கு தளபதியாக இருந்த வழக்கறிஞர் பொன்னப் நாடார் இருந்து மறுக்க முடியாது. அவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா? அவருடைய மாவட்டத்தினைச் சார்ந்த மத்திய அமைச்சர் அவர்கள் மட்டும் எப்படி தமிழ் மக்கள் கலாச்சார விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு ஆதரவானவர்களையும், தூத்துக்குடி மக்களை விஷ வாயு ஆபத்திலிருந்து காப்பாற்ற ஏற்பட்ட மக்கள் எழுச்சியாளர்களையும் தீவிர வாதிகள் என்று முத்திரை குத்த முடியும் ?
10)  அவ்வாறு மக்கள் போராட்டங்களை தீவிர வாத செயல்கள் என்றால் 1947 சுதந்திரத்திற்காக போராடியவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?
11) 1965 ல் ஹிந்தி திணிப்பினை எதிர்த்து போராடியவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தமுடியுமா?
12)  1972 ம் ஆண்டு தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். பொதுக் கூட்ட மேடையில் அந்தக் கட்சியின் வரவு செலவு கேட்டு தி.மு.காவிலிருந்து நீக்கப் பட்டபோது தமிழகம் முழுவதும் மக்களிடம் நீதியினை கேட்கப் போகிறேன் என்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அவர் என்ன தீவிரவாதியா?
இந்திய நாடு சுதந்திரத்திற்கு முன்பு 85 சதவீதம் விவசாயிகள் நாடாக இருந்தது. மக்கள் பசி,பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் இன்று வெறுமனே 55 சதவீத மக்களே விவசாயம் செய்யும் மக்களாக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் வாழ்வாதாரம், பருவமழை பொய்த்ததாலும், அதிக வட்டி வாங்கி விவசாயம் செய்வதாலும், அரசு விவசாயிகளை மானியம் மூலம் ஊக்குவிக்க முடியாததாலும், பம்ப் செட்டுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியாததாலும், மோட்டாருக்கு தேவையான டீசல் விலை அதிகரித்ததாலும், விவசாயத்திற்கான விதை, யூரியா போன்ற பொருள்கள் விலை ஏற்றத்தாலும், பல்வேறு சாலை அமைக்க விவசாயிகள் நிலம் கையகப் படுத்துவதாலும் விவசாயிகள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
விவசாயிகள் நிலங்கள் இயற்கை வாய்வு, நியூட்ரினோ போன்ற திட்டங்களால் கையாகப் பட்டபோது தங்கள் நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுமே என்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் தீவிரவாதிகளா?
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நடந்தபோதும், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முடக்கப் பட்டபோதும், ரயில் நிலையங்கள் மறிக்கப் பட்ட போதும் யாரும் அவர்களை தீவிர வாதிகள் என்று முத்திரை குத்தவில்லை
மத்திய பிரதேச 'கிசான் மஸ்துர் சங்கம்' அது ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் தலைவர் ‘திரிலோக கோதி’ தலைமையில் அங்கு விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கி சூட்டினை கண்டித்து நடத்தப் பட்ட ‘மண்டேசர்’ ரோடு மறியலை ஒரு தீவிரவாத செயலாக சித்தரிக்க வில்லையே, அது ஏன் என்று மக்களுக்கு கேட்க உரிமை இல்லையா?
ஆனால் தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு, சுற்றுப் புறசூழல் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை போன்றவற்றிக்கு எதிரான போராட்டங்களை பொறுப்பிலுள்ளவர்கள் தீவிரவாத செயல் என்று கொச்சைப் படுத்தலாமா?
நமது நாட்டின்  அரசியல் நடவடிக்கைகளாக நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து குஜராத் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 17 ,000 கோடி பழைய நோட்டுக்கள் மாற்றப் பட்டுள்ளன அதில் பி.ஜே.பி. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி செய்திகள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், தலித், கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம்கள் மீது பசுவைக் காப்பாற்றுகிறோம் என்று நடத்தப் படும் தாக்குதல், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை உலக அளவில் முதலிடம் பிடித்த பெருமை, நடு நிலை எழுத்தாளர்கள் மீது தாக்கப் படும் வன்முறை ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது அவர்களுடைய மனக்குமுறல் மற்றும் பத்திரிக்கை, தொலைக் காட்சிகள் மூலம் அறிந்துள்ளீர்கள். அதுபோன்று நடக்கவில்லை என்று எந்த நபரோ, அரசோ கூறுமேயானால் அது முழு பூசணிக்காயினை சோற்றில் மறைக்கும் செயலாகவே கருதவேண்டும்.
ப.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வத் சின்ஹா, 'இந்தியாவில் அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி நடக்கின்றது, அது ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று 25 6 .2018 பேட்டியில் கூறியுள்ளார். அதனை நிரூபிக்கும் விதமாக, 'இம் என்றால் கைது நடவடிக்கை, இச் என்றால் குண்டர் சட்டம்' என்று அடக்குமுறை ஆட்சி நடத்துவது நியாயம் தானா என்று நடு நிலையாளர்களும், மக்களும் கேள்வியினை எழுப்புவது நியாயம் தானே! மக்களிடம் முந்தைய ஆட்சி காலங்களில் குறைகளை சுட்டிக் காட்டி அரியணையில் ஏறியதும் அதே குறைகளை இன்றைய ஆட்சியினர் செய்ததும் அதனை தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற செயலாக என்ற கேள்விக்கு பதிலினை உங்களிடமே விட்டு விடுகிறேன்!

Monday, 4 June 2018

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே!



27.5. 2018 .அன்று உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை.
மேற்கு ஆப்ரிக்காவின்  குட்டித் தீவான மாலி சமீப காலங்களில் உள் நாட்டு போரில் உழன்று கொண்டிருக்கின்றது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன அதனைத் தடுக்க உலக நாடுகள் சபை அமைதி காக்கும் படையும் அங்கே நிறுத்தப் பட்டிருக்கிறது என்ற செய்தியும் அறிந்திருப்பீர்கள். மாலி தீவானது பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 ம் ஆண்டு மாலி தீவு பிரான்ஸ் பிடியிலிருந்து மீண்டு விடுதலை பெற்றது. அந்த நாட்டின் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் உள்நாட்டுப் போரில் பல மக்கள் கள்ளத் தோனியில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுகின்றனர். அப்படி தஞ்சம் புக வந்தவர்தான் 22 வயதான மோமோது கசமா என்ற இளைஞர்.
27 .5 .2018 அன்று பாரிஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்தவர் அனைவரும் மேல் நோக்கி கூக்குரலுடன் பார்த்துக் கொண்டு பரபரப்பாக இருந்தனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதியில் தனது முதுகில் ஏற்றப் பட்ட சிறிய பையுடன் ஹோட்டலில் தேநீர் அருந்த வந்திருந்த மோமது அவர்கள் பார்க்கும் திசை நோக்கி தனது கண்ணை நோக்கினார். அங்கே நான்காவது மாடியில் வெளியில் உள்ள கண்ணாடி பால்கனி விளிம்பை பிடித்துக் கொண்டு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டு இருப்பதனை பார்த்து அதிர்ச்சியுற்று சிறிதும் யோசிக்காது தனது முதுகுப் பையனை வைத்து விட்டு மட மட என்று 38 வினாடியில் நான்காவது மாடியினை எந்த உறுதுணையுமின்றி ஏறி அந்த சிறுவனை அலாக்காக தூக்கி பால்கனி உள்ளே இழுத்து காப்பாற்றி விட்டான். உலகில் 'ஸ்பைடர் மேன்' சாகசங்கள் என்று வரும் தொலைக் காட்சி செய்திகளை கண்டுள்ளோம். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்டு செய்யப் படுகின்ற அதிசயங்கள். மாலி தீவின் மோமோது செய்தது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் செய்த சாதனையாகும் என்றால் அதிசத்திலும் அதிசய சாதனைதானே. அதுவும் கள்ளத்தோணியில் தஞ்சம் புக வந்த வாலிபருக்கு உள்ள வீரமும் தீரமும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தானே.
            அந்த சிறுவனின் தாயார் தனது தாயாரைப் பார்க்க பக்கத்து நகருக்கு கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்றிருக்கின்றார். தந்தையோ தனது 4 வயது தனயனை வீட்டில் வைத்து  பூட்டிவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். கடையில் சாமான்கள் வாங்கி விட்டு நேரே வீட்டுக்கு வராமல் வரும் வழியில் உள்ள வீடியோ கேம்ஸ் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததால் சிறுவனைப் பற்றிய கவலை அவருக்கு தெரியவில்லை. சிறுவனோ எவ்வளவு நேரம் வீட்டில் அடைபட்டு இருப்பான். ஆகவே அந்த அறியா பாலகன் வேடிக்கை பார்க்க பால்கனியியை திறந்து கொண்டு வந்தவன் அதன் வழியே அப்பாவை தேடி போய் விடலாம் என்று எத்தனித்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. தொலைக் காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்து அலறிய தாய், தன் தாய் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து அன்பு மகனை அள்ளிக் கொஞ்சி அவனைப் காப்பாற்றிய மோமோதை வானளாவ பாராட்டியுள்ளார். அவர் மட்டுமா தொலைக் காட்சி நேரலையினைக் கண்ட லட்சோப லட்சோப  பாரிஸ் நகர மக்கள் பாராட்டியுள்ளனர். இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன், மோமோதை தன்னுடைய மாளிகைக்கு அழைத்து நாட்டின் உயர்ந்த விருது வழங்கி, குடியுரிமையும் கொடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்சி பணியில் ஒரு வேலையும் வழங்கி யுள்ளார்.  தமிழில் ஓர் பழமொழி உண்டு. 'கும்பிடபோன தெய்வம் கூரையினை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று. புகலிடம் தேடி கள்ளத்தோணியில் வந்த மோமோதுக்கு அந்த சிறுவன் உருவில் இறைவன் அருள் கிடைத்து அவன் புகழின் உச்சாணிக்கே சென்று விட்டான். அப்போது அங்கே வந்த நிருபர்கள் மோமோதை சூழ்ந்து கொண்டு, 'நீங்கள் எப்படி இந்த அதிசயத்தினை செய்தீர்கள்' என்று கேட்க, அதற்கு அவர், 'கூக்குரல் கேட்டு தேநீர் அருந்திய நான் ஓடி வந்து பார்த்தபோது அந்த சிறுவன் தொங்கி கொண்டு இருந்தான், எனக்கு உடனே அவனை காப்பாற்ற வேண்டும் என்று எந்த உறுதுணையும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஏறினேன், அதற்கு என் இறைவன் உறுதுணையாக இருந்தான்' என்று கூறி இருப்பது எப்படி ஒரு முஸ்லிம் இறைவன் மீது அசையா நம்பிக்கை வைத்து வாழவேண்டும் என்று ஒரு சிறந்த உதாரணமாக உங்களுக்கு தெரியவில்லையா? சிலர் ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்கின்றார்கள், சிலர் வசதி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்று வருத்தப் படுகிறார்கள் அவர்கள்  இறை பக்தியுடன் சோம்பேறித்தனமாக இல்லாமல் எந்த வேலையும் ஆரம்பித்தால், 'வெற்றிமேல் வெற்றி வந்து அவர்களை சேராதா சகோதர, சகோதரிகளே!
            உலகப் புகழ் கால்பந்தாட்ட வீரர் வெற்றி நேரத்தில் யாரை நினைத்தார்!
கால் பந்தாட்ட ரசிகர்களுக்கெல்லாம் தெரியும் ‘போக்பா’ என்ற வீரரை தெரியாமல் இருக்க முடியாது.. அவர் பிரான்ஸ் நாட்டில் 15 மார்ச் 1993 ல் பிறந்த ஆப்ரிக்க இனத்தவர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல அவர் உலக 21 வயதிற்குட்டபட்ட வர்களின் கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தினை பெற்றுத் தந்த சிறப்புப் பெட்டவர். அதன் மூலம் கோல்டன் பாய் விருதை 2013  னிலும், பிராவோ விருதினை 2014 லிலும் பெற்றவர். அவருடைய கால்கள் ‘ஆக்டொபஸ்’ போன்று நீளமாக இருப்பதால் எதிரிகள் கொண்டு செல்லும் பந்தினை லாவகமாக கைப்பற்றி அதனை எதிரி வீரர்கள் பறிக்காமல் தட்டி சென்று கோலில் தள்ளும் வெற்றி வீரரானதால் அவரை ‘பொலபொ பால்’ என்று பிரான்ஸ் மக்கள் அழைப்பார்களாம்.
அப்படி பெயரும், புகழும் பெற்ற வீரர் சமீபத்தில்(மே 2018)  இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி மக்காவிற்கு உம்ரா ஆர்ப்பாட்டமில்லாமல் சென்ற புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு கால்பந்தாட்டத்தில் விளையாட ரூ 811 கோடிகள் கொடுக்கப் படுகின்றது. இப்போது அவர் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற அணியில் விளையாடி வருகிறார். அவர் 29 3 2018 ல் ரசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான கோலினை அடித்ததும் தனது மேல் சட்டையினை கீழிலிருந்து மேலே தூக்கி காட்டினார். அதனில், என்ன எழுதியிருந்தது என்றால், தனது தந்தை பிறந்த தின வாழ்த்தும், அல்லாஹ் அவருக்கு கருணை காட்டும்படியும் எழுதியிருந்தது. அவருடைய தகப்பனார் தனது 80 வது வயதில் நோயால் இறைவனடி சேர்ந்ததினை நினைவூட்டுவதாகவும் அது இருந்ததாம்.
ஒரு சிறந்த விளையாட்டு வீரர் தான் எப்படியும் கோல் அடித்துவிடுவோம் என்றும் அதனை தந்தை நினைவாக இருக்க வேண்டும் என்றும், அவர் எல்லாம் வல்ல அல்லாஹ் கருணையுனடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டது  வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும் என்றால் சரிதானே!