மக்கள் குரலே மகேசன் குரலாகுமா!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )
உலக வல்லரசு நாடானதும், ஜனநாயகக் காவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்காவில் 3.11.2020 ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்வுக் குழுவினரால் யார் 270 ஓட்டுக்களை வாங்குகின் றாரோ அவர் வெற்றி அடைந்தவராக கருதப் படுவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ‘டொனால்டு டிரம்ப்’ வெறும் 230 ஓட்டுக்களே வாங்கினாலும், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடென் அபரிமிதமாக 306 வாக்குகளைப் பெற்றாலும் அந்த வெற்றியினை ஏற்றுக் கொள்ள மறுத்து தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தன்னை எதிர்ப்பவர்களை தான் வசிக்கும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பே தாக்கத் தூண்டி விடுகிறார், மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தால் மார்சல் சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று யோசித்தார் என்ற செய்திகள் வரும்போது எங்கே அமெரிக்காவின் ஜனநாயக அறிவுரைகள் கை கழுவுமோ என்ற அச்சமும் அங்கே மட்டுமல்ல, மாறாக உலகம் பூராவிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பதினை மறுப்பதிற்கில்லை.
அதேபோன்று தான் ஆப்பிரிக்க கண்டத்தின் காம்பியா தேர்தலில் அதன் ஜனாதிபதி ‘யஹ்யா’ தனது எதிர்க்கட்சி வேட்பாளர் ‘ஆடம்’ வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்.
ஐவரி கோஸ்ட் என்ற நாடு காபி மற்றும் சாக்கலேட் தயாரிக்க பயன்படும் கோகோ பயிர்கள் விளைவிக்கும் நாடாகும். அந்த நாட்டின் ஜனாதிபதி ‘கிபாகோ’ பதவி மாற்றத்திற்கான தேர்தல் 2005ம் ஆண்டு நடக்க வேண்டும் ஆனால் அதனை 6 தடவை தள்ளிப் போட்டு 2010ல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ‘ குட்டாரா’ வெற்றி வாகை சூட்டினார். ஆனால் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண கவுன்சில் கிபாகோ வெற்றி பெற்றதாகவும், ஆனால் தேர்தல் கமிஷன் குட்டாரா வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. அதனை ஐ.நா.சபையும் அங்கீகரித்தது. ஆனால் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு ஒரே நாட்டில் ஜனாதிபதி இருவர் பணியாற்றினர். அங்கே வன்முறையால் இதுவரை 300 உயிர்பலி ஏற்பட்டுள்ளது. அதன் முடிவு குட்டாராவிற்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டு படைகள் கால் பதித்தும், அந்த நாட்டின் ராணுவமும் புரட்சியில் ஈடுபட்டு கிபாகோ கைது செய்யப்பட்டு குட்டாரா 21.11.2011 அதிகாரப்பூர அதிபரானார். அதே நிலையும் அமெரிக்க நாட்டின் ட்ரம்பிற்கும் ஏற்பட்டாலும் ஆச்சரியப் படக்கூடாது.
அதே நிலை தான் மடகாஸ்கர் நாட்டிலும் நடக்கின்றது. 2001-2002 ஆண்டுகளில் அங்கே ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போதைய ஜனாதிபதி ‘டிடிஆர்’ மற்றும் ‘மார்க்’ ஆகியோர் போட்டி போட்டனர். அதில் மார்க் வெற்றி வாகை சூடியார். ஆனால் அதனை ஜனாதிபதி டிடிஆர் ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் அங்கே இரண்டு அரசுகள் மற்றும் இரண்டு தலைநகரங்களில் ஆட்சி செய்கின்றன.
காங்கோ நாட்டில் ‘ ஜோசப் கபிலா’ என்பவர் ஆட்சி செய்கிறரர். 2019ல் அவருடன் கூட்டணி வைத்திருந்த ‘பெலிஸ்’ என்ற கூட்டமைப்பு அவரை பதவி நீக்கம் செய்தது. ஆனால் கபிலா கூட்டணியை கலைத்து விட்டார். அதன் விளைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நாற்காலி, மேஜைகளை கவிழ்த்து கலவரம் செய்தது வரலாற்று படிப்பினையாக உள்ளது. அதேபோன்று தான் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் (CAR) வரலாறு காணா ஊழல் நடைபெறுவதால் அங்கே மக்கள் புரட்சி வன்முறையாக வெடித்துள்ளது. பாபுவா கினியா நாட்டில் கூட்டணியை தலைவரும், 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகி நாட்டின் பிரதமர் ‘ பீட்டர் ஓ நீல்’ ஊழல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி ஆட்சியினை கைப்பற்றியுள்ளனர்.
போலந்து நாட்டில் ஜனாதிபதி ‘ஜோசப்’ சூழ்ச்சி செய்து கைப்பற்றினார். அது மட்டுமல்லாமல் அவரே பிரதமராகவும், படைத்தளபதியாகவும் தன்னை அறிவித்துள்ளார்.
மலேசியா நாட்டில் பல காலம் ஆட்சி செய்த பிரதமர் ‘மகாதீர்’ முன்னாள் பிரதமர் ‘நஜிப்’ ஊழல் செய்தார் என்று எலியும் பூனையுமாக இருந்த ‘அன்வர் இப்ராஹிம்’ உடன் சேர்ந்து ஆட்சி 2018ல் அமைத்து 95 வயதில் பிரதமரானார். உடன் படிக்கைபடி 2020ல் பதவி விலகி இருக்க வேண்டும், ஆனால் ஆசை யாரை விட்டது, பதவி விலக மறுத்து விட்டார். ஆகவே அன்வர் இப்ராஹிம் தற்போதைய பிரதமர் ‘மொஹிதீன்’ உடன் சேர்த்து ஆட்சி அமைத்தார். ஆனால் அவர் ஆட்சி முறை சரியில்லை என்று தன்னை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று மன்னரிடம் முறையிட்டார். ஆனால் அது இது வரை கைகொடுக்க வில்லை. ஆகவே மைனாரிட்டி அரசு இன்னும் தொடர்கின்றது.
2010ம் ஆண்டிற்கு பின்பு அராபிய கண்டத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்தது. முதலில் டூனிசியா நாட்டில் ஆரம்பித்தது. நடைபாதை வியாபாரிகளை அகற்றுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதினை கண்டித்து நடைபாதை கடை வைத்திருந்த ‘முஹமது பௌஸிர்’ என்ற இளைஞர் தீக்குளித்தது பெரிய வைக்கோல் போரில் விழுந்த பொறியாக மாறி அராபிய கண்டம் முழுவதும் பற்றிக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக நீண்ட நாள் ஆட்சி செய்த எகிப்து அதிபர் ‘கோஜினி முபாரக்’ தூக்கி அறியப்பட்டார். அதன் பின்பு வந்த ‘மோர்சி’ ஆட்சி அயல் நாட்டினர் கைப்பாவையாக மாறியதால் அந்த நாட்டின் ராணுவ தளபதி ‘சிசி’ ஆட்சியினை கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றார். சூடான் நாட்டின் நீண்ட நாள் ஜனாதிபதி ‘உமர் பஷீர்’ ஊழல் மிகுந்த ஆட்சியானதால் 2019ல் ‘அப்டேல் பாட்டா’ ஆட்சி செய்கிறார்.
லிபியா நாட்டில் ராணுவ கர்னல் ஆக பணியாற்றிய ‘கடாபி லிபிய’ நாட்டில் ஆட்சியினை 1969ல் கைப்பற்றி அனைத்து பழங்குடி மக்களையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் 42 வருடம் அசைக்க முடியா ஆட்சியினை நடத்தினார். ஆனால் அவரை வெல்ல முடியா வெளிநாட்டு சக்திகள் மற்ற பழங்குடி மக்களை தூண்டி விட்டு புரட்சி செய்து பிரான்ஸ் படையின் துணையுடன் 2011ல் அவரை சுட்டுக் கொன்று ஆட்சி மாற்றம் செய்தனர். ஆனால் இன்றும் அங்கே நிலையான ஆட்சி அமைக்க முடிய வில்லை.
அரேபிய கண்டத்தில் நடந்த புரட்சியின் விளைவாக சிரியா நாட்டிலும் அதிபர் ‘ஆசாத்’ ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி புரட்சி செய்தனர். அதில் ஆசாத் அரசுக்கு ரஷியா துணை வந்தது. புரட்சிப் படைக்கு அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகள் ஈடுபட்டனர். அதன் விளைவு சொந்த நாட்டிலே மக்கள் அகதிகளாக ஆக்கப் பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சொத்து, சுகங்களை இழந்து அல்லல் படுகின்றனர் என்பதினை பார்க்கும் பொது பரிதாபமாக உள்ளது.
அராபிய கண்டத்தில் மிகவும் வறுமை, வேலையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, ஊழல், ஜனநாய அமைப்புகளின் குறைபாடு நிறைந்த நாடாக ஏமன் இருக்கின்றது. அரேபிய புரட்சியின் விளைவாக அங்கே ஆட்சி செய்த ‘சாலே’ என்ற ஜனாதிபதி ராஜினாமா செய்தார். அதன் விளைவு ஷியா சமுதாயத்தினை சார்ந்த ஹௌதி புரட்சியாளர்கள். தலைநகரான சனாவினை 2015 ஜனவரி மாதம் கைப்பற்றி தங்கள் தலைவராக ‘ஹாதி’ என்பவரை ஜனாதிபதியாக்கினார். அவர்களுக்கு ஷியா அரசான ஈரானும் உதவி செய்தது. ஆனால் ஹாதி அரசால் புரட்சியாளர்களின் தலையீடு அதிகமானதால் ஹாதி மார்ச்சில் ராஜினாமா செய்துவிட்டு ஓடி விட்டார். ஹௌதி புரட்சியாளர்களுக்கு எதிராக சுன்னி நாட்டின் 8 நாடுகளின் கூட்டமைப்பு சௌதி அராபிய தலைமையில் களம் இறங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் உத வியால் முக்கிய துறைமுகமான ஏடேனை கைப்பற்றி ஹௌதி புரட்சியாளர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். ஏமெனில் 2017ல் நடந்த கலவரத்தில் முன்னாள் ஜனாதிபதி சாலே கொல்லப் பட்டார். செப்டம்பர் 2019ல் ஹௌதி அமைப்பினர் சௌதி அராபியாவின் முக்கிய எண்ணைக் கிணறான அபிகாக் மற்றும் குறைஷ் போன்றவற்றினை ஏவுகணைகள் மூலம் தாக்கி நிர்மூலமாக்கினதால் சௌதி அரசின் 50 சத வீத எண்ணெய் உற்பத்தியும், உலக உற்பத்தியில் 5 சத வீதமும் குறைந்து விட்டது. ஏமெனில் நடந்த யுத்தத்தால் இதுவரை ஒரு லட்க்ஷம் பேர்கள் இறந்து இருப்பார்கள் என்று 2020 மார்ச் மாதத்தில் அமெரிக்கா அறிவித்துள்ளது என்பதினை பார்க்கும்போது இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலை கண்டு மன வருத்தம் அடையாமில்லை அல்லவா.
இந்தியாவில் விவசாய சீர்திருத்த சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் 27.9.2020 அன்று இயற்றப்பட்டது. அன்றிலிருந்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி-ஜெய்ப்பூர் பாதையினை வழி மறித்து கடுங்குளிர் என்றும் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது வரை 33 போராட்டக் காரர்கள் இறந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தினைச் சார்ந்த ஒரு சீக்கிய மதகுரு போராடும் இடத்தில் வந்து விவசாயிகளுக்காக தன்னை தானே கை துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது செய்தியாக வந்துள்ளது. மத்திய அரசும் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப் படவில்லை. பிரதமர் விவசாயிகளை சந்திக்காமல் சீக்கிய விவசாயிகளை சாந்தப்படுத்த டெல்லியுள்ள சீக்கிய மதகுரு ராம்தேவ் விழாவிற்கு 2014ல் இருந்து ஆட்சி செயதும் இந்த வருடம் மட்டும் திடீர் விஜயம் செய்துள்ளார்.
அகில இந்தியா கிசான் காங்கிரஸ் 1936ல் சுவாமி ஸஹ்வானந்த் சரஸ்வதியால் ஆரம்பிக்கப் பட்டது. அதில் என்.ஜி. ரங்கா பொதுச் செயலாளராக இருந்தார். அதனை ஹைதரபாத் நிசாம் நில சட்டத்திற்கு எதிரான தெலுங்கானா அமைப்பு என்ற தீவிர வாதிகள் தலையெடுத்து வன்முறை வெடிக்க ஆரம்பித்தது. நமது நாட்டு விவசாயம் வற்றாத நதிகள் கொண்ட கேரளா, கர்நாடகா, பிஹார், வங்காளம், உ.பி மாநில கிழக்கு மாவட்டங்களும், தமிழ்நாடு போன்ற வானம் பார்த்த பூமிகளை கொண்டது. இந்தியாவில் மொத்தம் விவசாய நிலம் 189.7 மில்லியன் ஹெக்டார் ஆகும். ஒரு ஹெக்டார் 2.47 ஏக்கர்கள் ஆகும்.
இந்திய விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் அல்லல் படுகின்றனர்:
1) விவசாயிகளுக்கு வங்கிகள் அவ்வளவு எளிதில் கடன் கொடுப்பதில்லை, மாறாக பொய்யான செக்யூரிட்டி கொடுத்து பத்தாயிரம் கோடி லோன் வாங்கி நாட்டினை விட்டு ஓடிப்போகும் விஜய் மல்லையா, சோஸ்கி, நீரவ் மோடி போன்ற வியாபாரிகளுக்குத் தான் எளிதில் கொடுக்கின்றனர். ஆகையால் விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவர்கள் விளைச்சல்களை அடி மாட்டு விலைக்கு வாங்கும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2) இந்திய விவசாயிகள் தங்கள் மகன்களுக்கு சரிசமமாக நிலத்தினை பங்கு போடுவதால் அரை ஏக்கர் நிலத்திலும் வாய்க்கால் வரப்பு என்று மிக குறுகிய இடத்திலே பயிரிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
3) குறிகிய நிலத்தில் மிஷினரி கொண்டு விவசாய வேலைகள் செய்யாது இன்றும் உடல் உழைப்பினையே நம்பியுள்ளனர்.
4) உரம், பெர்டிலைசர், பூச்சி மருந்துகள் உற்பத்தியினை அதிகப்படுத்தினாலும் நெல், கோதுமை தரம் குறைந்ததாக கருதப் படுகிறது.
5) அரசுகள் கொள்முதல் செய்தாலும் அதனை சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால் மழைக் காலத்தில் நெல் மூடைகள் முளைப்பு ஏற்படுவதுடன், கெட்டும் விடுகிறது.
6) அறுவடை செய்த நெல்களையோ அல்லது கோதுமைகளையோ கொண்டு செல்வத்திற்கு சரியான போக்குவரத்து, சாலையும் இல்லாததால் மாட்டு வண்டிகளையே விவசாயிகள் நம்ப வேண்டியுள்ளது.
7) தரமான விதைகள் கிடைப்பது அரிதாக உள்ளது.
8) விவசாயிகளின் விளைச்சலுக்கு அரசு ஒரு விலையினை நிர்னயித்து அதற்கு குறைவாக கொள்முதல் செய்யக் கூடாது என்ற கட்டுப் பாடு குறைவாகவே உள்ளது.
9) இயற்கை சீற்றத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு சோளப்பொரி போன்றும், சரியான நேரத்தில் கிடைக்காததால் வட்டிக் காரர்கள் துன்புறுத்ததில் பலர் தற்கொலை செய்தும் கொள்கின்றனர்.
10) அரசு வங்கிகளும் விவசாயிகளுக்கு கொடுத்த கடனை வசூல் செய்ய தனியார் வசூல் செய்யும் நிறுவனத்தினை நாடுவதால் அவர்கள் விவசாயிகளின் டிராக்டர்கள், ஏன் வீட்டின் நிலைக் கதவினையே பெயர்த்து எடுத்துச் செல்லும் பரிதாப செயலினை பத்திரிக்கை. தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துள்ளோம்.
ஆகவே தான் விவசாயிகள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பல நாட்களாக கடும் குளிரினையும் தாங்கிக் கொண்டு போராடுகின்றனர். ஆனால் அரசு நாங்கள் கொண்டு வந்த சட்டம் மாற்றப் போவதில்லை என்று பாராளுமன்ற மெஜாரிட்டி தைரியத்தினை வைத்து மறுத்து வருகின்றது. அரசு காவல் துறை, ராணுவம் உதவி கொண்டு விவசாயிகள் குரலினை ஒடுக்கி விடலாம் என்று எண்ணுகின்றது. ஏனென்றால் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீர் கொண்டு பீச்சி அடித்தும் நாங்கள் கும்பனி ஆட்சியினையே ஜாலியன் வாலாபாக் போன்ற அடக்குமுறை வந்தாலும் எங்கள் கோரிக்கையினை விட்டு விடப் போவதில்லை என்று உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். எப்படி சி.ஏ.ஏ. என்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடந்ததோ அதே போன்று கத்தியின்றி, ரத்தம் சிந்தவும் விவசாயிகள் தயாராகி விட்டனர். இந்த போராட்டம் பெரிதாக இந்தியா முழுவதும் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பாமல் இருக்க விவசாய மக்களின் குறைகளை உடனே களைவது மகேசனின் கட்டாயமே!
No comments:
Post a Comment