Wednesday, 21 September 2022

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

 

யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றன்.

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ )

தழிழ் இலக்கியம் புறநானூறு -192 அத்தியாயத்தில் வரும் சில பொன்னான வார்த்தைகளை இந்திய ஒற்றுமைக்காக சிவகங்கை மாவட்ட புலவர் கனியன் பூங்குன்றன் கூறியுள்ளார். அதன் பொருள், 'எமக்குள் எல்லாமும், எல்லாரும் சுற்றத்தார்--- யாம் வெறுப்பால் வாழ்வு இனிதன்று என்று இருப்பதுமில்லை' என்று அழகாக, ஆழமான கருத்துடன் இந்திய துணை கண்டத்தின் அடிப்படை உரிமையான, 'unity in diversity' என்ற கொள்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

Guberman, 'தேசம் என்றால் என்ன என்பதினை, 'மனித இனம் உணர்வுப் பூர்வமான பண்பாடுதான் இணைந்து வாழும் வாழ்க்கை கொண்ட வரையறுக்கப் பட்ட எல்கைக்குள் வாழும் மக்கள்' என்று கூறுகிறார். ஒரு நாடு என்பதற்கு,'நிலையான மக்கள், வரையறுக்ககப் பட்ட நிலம் கொண்டது, நிலையான அரசு, மற்ற அரசுகளுடன் தன்னிச்சையான உறவு கொள்ளும் வலிமை' கொண்ட நான்கு கொள்கைகளை அடக்கியதாகும்.

            பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியர் வருவதற்கு முன்பு இந்திய பழமை பண்பாடுகளை கொண்டு பொருளுள்ளவர், பிறப்பால் மேன்மக்கள், கற்றலில் சிறப்பு வாய்ந்தவர் என்ற வேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் வந்த பின்னரும், பிரிட்டிஷ் அறிஞர் லார்ட் மெக்காலே கொண்டு வந்த ஆங்கிலேய பாட திட்டங்களால் இந்திய மக்கள் வெளியுலக உரிமை, சுதந்திரம், இனம்- மொழி -ஜாதியில் வேற்றுமை  போன்றவற்றை தெரிந்து கொண்டனர் என்ற உண்மையினை மறுக்க முடியாது. அதுவும் கல்வி கற்ற மக்களின் எழுச்சி இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றாலும்  மறுக்கமுடியாது அது காந்திய அகிம்சா வழியானாலும் சரி, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தீவிரமானாலும் சரியே! எப்படி இஸ்லாமிய மார்க்கத்தில் படித்த மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய இளைஞர்களால் புரையோடிய சீதனம், சீர் சீராட்டு, திருமண ஆடம்பரம், வழிபாடுகளில் ஆடம்பர ஆர்ப்பாட்டம் அரவே வெறுக்கப் பட்டதோ அதே போன்று இந்திய அடிமைத்தனத்தினையும், ஜாதியக் கொடுமையினையும், ஆண்டான்- அடிமை என்ற வேற்றுமையையும் இளைஞர்கள் உணர்ந்து சுதந்திர வேட்கை அவர்களை தட்டி எழுப்பியது.

            இந்திய துணைக் கண்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு வேறு நாதுகளாக 14-15 ஆகஸ்ட் 1947 அன்று உருவானபோது இந்திய துணைக் கண்டத்தில் 584 பெரு மற்றும் குறுநில மன்னர்கள் 584 சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். அதில் பெரும்பாலான முஸ்லிம் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தன ஹைதராபாத் நிஜாம் தவிர.  இந்தியா சுதந்திரக் கொடியினை ஏற்றியபோது முதல் பிரதமர் பண்டிட் ஜவாஹர்லால் நேரு, 'on the midnight of 15th August 1947 Indiya woke up to life and freedom' என்று கூறியது இந்திய மக்கள் இப்போதுதான் சுதந்திர காற்றினை நுகர்ந்து உயிர் பெற்றுள்ளனர் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது ஆகும் என்று தெரிகிறதா? நமது சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி வாங்கிய சுதந்திரம் என்று ஒரு வாதத்திற்காக சொன்னாலும் ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையும், பிளாக் கோல் ஆப் கல்கத்தா, மாப்பிலா கைதிகளை மூச்சு திணறி வேனில் சாகடித்த சம்பவங்களும், சுதந்திர தியாகிகள் தூக்கு மேடையில் ஏறி உயிர்கொடுத்தும், இருட்டு தொழுவ சிறையில் பல்லாண்டுகள் வாடியும், செக்கிழுத்த வீர தழும்புகளும் வீர நெஞ்சங்கள் கொண்டு தாங்காமல் பெறவில்லை சுதந்திரம்.

            இந்தியாவுடன், காஷ்மீர், மைசூர், ஹைதராபாத் இணைய மறுத்து விட்டன. இந்திய ராணுவம் ஐராபாதிற்கு 'operation polo' என்ற ரகசிய மொழியுடன் அனுப்பப்பட்டு 13-18 செப்டம்பர் 1948 வரை போர் தொடுத்து சுமார் 30000 நிசாம் வீரர்கள் பலியாகி ஹைதராபாத் பிடிக்கப் பட்டது. ஹைதராபாத்தினை இணைத்த தினமாக 17ந்தேதி செப்டம்பர் மாதம் 2022 ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் ஹைதராபாத்தில் விழாவாக கொண்டாடினார். இரும்பு மனிதர் என்று அழைக்கப் பட்ட அன்றைய உள்துறை மந்திரி வல்லபாய் படேல் குஜராத்தில் கத்தியவார் தீபகற்பம் என்று அழைக்கப் பட்ட 222 சமஸ்தானங்களை இணைத்து 1948 ஜனவரியில் சவ்ராஷ்டிரா என்ற மாநிலமாகவும், குவாலியர், இண்டூர் மற்றும் 18 சமஸ்தானங்களை இணைத்து மத்திய பாரத் ஆகவும், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப் ஆகியவற்றை இணைத்து 15 ந்தேதி ஜூலை மாதம் 1948ல் பஞ்சாப் மாநிலமாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சமஸ்தானங்களை இணைத்து 15ந்தேதி மே மாதம் 1949ம் ஆண்டு தனி மாநிலமாகவும் உருவாக்கப் பட்டது.மைசூரும், ஹைதராபாதும் மத்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் காஷ்மீரை ஆண்ட மன்னர் மஹாராஜா ஹரி சிங் மட்டும் சுவர் மீது உள்ள ஓணானாக எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவு எடுக்கப் படாமல் இருக்கும்போது பாகிஸ்தான் பலுசிஸ்தான், மற்றும் ஆசாத் காஷ்மீரை இணைத்தது. பிறகு உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா என்று அறிந்து இந்தியாவுடன் 27ந்தேதி அக்டோபர் மாதம் 1947 ம் வருடம் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீர் மட்டும் constituent assembly என்ற தனித்தன்மையுடன் அரசியல் சட்டத்தில் பிரிவு 370 தனித்தன்மை கொண்டதாக அமைந்தது. இந்திய அரசியல் சட்டம் 1950 நிறைவேற்றிய பிறகு இந்திய மாநிலங்கள் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்தியாவுடன் இணைந்த மன்னர்களுக்கு மாநில கவர்னர் பதவிகளும், வெளி நாட்டு தூதர் பதவிகளும் கொடுக்கப் பட்டது. அப்படி முதன் முதலில் மெட்ராசிற்கு வந்த கவர்னர்  தான் பவநகர் மஹாராஜா. 1956ம் ஆண்டு மாநிலங்களை மொழிவாரி மாநிலமாக பிரிக்க 'reorganisation of states' குழு அமைத்தது அதன் படி அமல் நடத்தப் பட்டது. கடைசியாக தெலுங்கு பேசும் தனி மாநிலமாக ஹைதராபாத், தெலுங்கானா பிரிக்கப் பட்டது உங்களுக்குத் தெரியும்.

நேபாள் மற்றும் சிக்கிம் ஹிமாலய தேச நாடுகள். பிரிட்டிஷ் நேபாளுடன் செய்து கொண்ட 1923 ஒப்பந்தப்படி அது சுதந்திரம் பெற்றது.ஆனால்  பூடான் தனி மன்னராட்சியானாலும் அதன் வெளிநாட்டுக் கொள்கையினை இந்திய ஒப்புதலுடன் தான் செய்ய வேண்டும். சிக்கிமுடன் செய்து கொண்ட 1950ம் ஆண்டு ஒப்பந்தப் படி அது சுயாட்சியாக முடிவு செய்யப்பட்டது.

            அந்நிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பிரான்ஸ் ஆட்சி செய்த பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனம், மாகி, சந்திரநாகூர் போன்றவையும், போர்ச்சுகல் ஆட்சி செய்த டாமன், டையூ, டாட்ரா, நாகர் காவாலி, கோவா போன்றவை தனியாக இருந்தது  பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை 1948ம் ஆண்டு நடத்தப் பட்டது. அதன் முடிவில் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் மக்களின் விருப்பத்தினை அறிய ஓட்டெடுப்பு நடத்தி அதன் படி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது. 1949ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் 1954 வரை ஓட்டெடுப்பு நடத்தப் பட்டது. வாக்களித்த 7463 பேர்களில் 114 பேர்கள் மட்டும் இந்தியாவுடன் இணைய விருப்பமில்லை என்று தெரிவித்ததினைத் தொடர்ந்து மெஜாரிடி மக்கள் விருப்பத்தின் படி பிரான்ஸ் பகுதிகள் 1961ல் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் போர்ச்சுகல் மட்டும் இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்து வரவில்லை. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் தன்னுடைய படையினை அனுப்பியது. ஆனால் இந்திய ராணுவம் அதற்குள் 1961ம் அவைகளை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

            கர்னாடிக் நவாப் குலான் பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணைந்து இந்திய சமஸ்தானங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததலால் அவருக்கென்று தனி மரியாதை பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. ஆனால் அவர் 1855ம் ஆண்டு இறந்த பின்பு 'Doctrine of Lapse' படி கர்னாடிக் சமஸ்தானத்தினை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவருக்கு பின்பு வந்த ஆற்காட் நவாப் வாலாஜா தன்னை ஒரு தனிக் காட்டு ராஜாவாக நினைத்து அரசு வருமானத்தின் ஒரு பகுதியினை பிரிட்டிஷ் கும்பனி ஆட்சிக்கு செலுத்தாமல் பல தான தர்மங்களை செய்ய ஆரம்பித்தார். உதாரணத்திற்கு சௌதி அராபியாவில் தமிழ்நாடு ஹஜ் பயணிகள் தங்க மக்கா மதினாவில் தங்கும் இல்லங்கள் கட்டினார்,  அவர்கள் சென்று வர இலவச கப்பல் பயணங்களுக்கு உதவினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் உள்ள மதரசா இ ஆசம் என்ற இலவச பள்ளி அமைத்தார், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்த சாரதி கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் போன்ற இடங்களில் பக்தர்கள் வசதிக்காக குளங்கள் அமைத்தார்,  பிஷப் ஹீபர் பள்ளி, திருச்சி ஜெயண்ட் ஜோசெப் கல்லூரி போன்றவைகள் நிறுவ காரணமானார். அவைகள் எல்லாம் அரசு பணமட்டுமல்லாமல், பிரிடிஷ் தன்வந்தர்களிடமும் கடன் வாங்கி நல்ல காரியங்கள் செய்தார். அதன் மூலம் அரசு கஜானா திவாலானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு நவாபின் சமஸ்தானைத்தினை தானே எடுத்துக் கொண்டது. நவாப்பினை வெறும் ஆண்டு தோறும் ரூ 1.50 லட்ச மானியத்துடன் மதிப்புமிக நவாபாக நியமனம் செய்தது. நவாப்பின் அமீர் மஹால் மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு CPWD மத்திய பொதுப் பணி துறை சீர் செய்யவும் பணிக்கப் பட்டது. ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி, 'ஆற்காட் இளவரசர் பட்டம் ஒரு கவுரவ பதவி என்றும், அவருக்கென்று தனி அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அவருக்கென்று தனி அணிவகுப்பில்லை என்றும்' தெளிவாக குறிப்பிட்டது கவனிக்கத் தக்கது. எந்த நவாபிற்கு, 'பிரிட்டிஷாருடன் இணைந்து புலித்தேவன், மருது நாயகம் என்ற யூசுப் கான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியார் போன்ற சுதந்திர வேங்ககைகளை வீழ்த்தி பல் வேறு சமூகத்தினவருக்கும் உதவி செய்த நவாபின் பரிதாப நிலை பார்த்தீர்களா?

            இப்போது புறநானூறு கவிஞர் பூங்குன்றன் கவிதை படி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலை படி நாட்டின் நிலைமை உள்ளதா என்று பார்க்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரும், தலித் மக்களும் தங்களை பெரும்பான்மையான சமூகத்தினரிடமிருந்து பாதுகாப்பற்ற நிலையினை உணர்வாக நினைக்கின்றனர். அதற்கு மூல காரணமே என்று 1992ல் அயோத்தியில் உள்ள பாபரி பள்ளி இடிக்கப் பட்டதோ, என்று அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றமும் ஒரு தலையான தீர்ப்பு வழங்கப் பட்டதோ அன்றிலிருந்து முஸ்லிம் சமூதாய மக்களிடையே பயம் கலந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாரணாசியுள்ள பள்ளிவாசலுக்கும் ஆபத்து வந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற ஒருமைப்பாட்டுடன் கூடிய சிந்தனையில்லாமலும், உனக்கு உன் மதம், எனக்கு என் மார்க்கம்’ என்று சொல்லும் வரம்பு இல்லாமல் மெஜாரிட்டி சமூகத்தினர் தான் வாழ வேண்டும், வழிபட வேண்டும், அவர்கள் கட்டளைப் படிதான் வழிபாடு, வணக்கஸ்தலங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்.

அரசியல் சட்டபடி இந்திய நாட்டினர் அவரவர் பண்பாடுதான் நடந்து கொள்ள அனுமதித்தும்,  பெண்கள், ஆண்கள் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் கொள்ள பயன்படும் ஹிஜாப் அணிவதற்கும் தடை வழக்கு உச்சநீதிமன்ற  கதவையும் தட்டியுள்ளது. இஸ்லாமியர் ஒழுக்க சிந்தனை தூண்டும் மதராசாவினையும் கண்காணிக்கும் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது. உதாரணத்திற்கு 18.9. 2022 அன்று மாலை அசோக் நகர் பள்ளிவாசலில் உள்ள மதரஸாவில் ஓதி விட்டு திரும்பும் தொப்பி போட்ட எட்டாம் வகுப்பு சிறுவனை ஒருவன் ஏன் தொப்பி போட்டுள்ளாய் என்று மிரட்டி அதனால் அசோக்நகர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மனம் இணைந்த இளம் ஜோடிகளை இஸ்லாத்திற்கு இழுக்கும் ‘லவ் ஜிஹாத்’ என்று மிரட்டும் சட்டத்தில் அனுமதியில்லா 'மாரல் போலீசிங்' நடந்து கொண்டுள்ளது பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. தாரை தப்பட்டை அடித்து தெருவெங்கும் அலறும் திருவிழாக்கள் நடக்கும்போது அமைதியாக தொழுகைக்கு அழைக்கும் பள்ளிவாசல் பாங்கு சொல்வதையும் தடை செய்யவேண்டும் என்று கூக்குரல்.

அத்துமீறல்களை படம் பிடித்துக் காட்டும் பத்திரிக்கைகளுக்கு எச்சரிக்கை, பத்திரிக்கையாளர்கள் சிலர் கைது, பத்திரிக்கை அலுவலங்கள், அதன் பொறுப்பாளர் வீடுகளில் சோதனை போன்ற நடவடிக்கைகளும் நடுநிலையாளர்களை அச்சுறுத்தும் செயலாக நீங்கள் கருதவில்லையா?

தலித் மக்கள் தேசியக் கொடியினை ஏற்றவிடாமல் தடுப்பது, அவர்கள் குடியிருப்புகளை சுவர் அமைத்து தனிமைப்படுத்துவது, பள்ளிகளில் கழிவறையினை தலித் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யச் செய்வது, ஆசையாக பள்ளி சிறுவர்கள் மிட்டாய் கேட்டதிற்கே ஊர் கட்டுப்பாடு உங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று சொல்லும் உலகினை எப்படி சொல்வது, தலித்துகளுக்கு இந்த நாடு இல்லையா?

கிருத்துவர்கள் ஜெபம் செய்வதினை தடுப்பது, அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஏதாவது பொய்யான மதம் மாற்றம் நடக்கின்றது என்ற குற்றச்சாட்டினை அள்ளி வீசுவது போன்றவை கிருத்துவர்களிடையே அச்ச உணர்வு வராமலில்லையே!

கருத்துக் கலந்துரையாடலில் தலையிட்டு கலவரம் செய்வது தான் நாகரீகமா? அதற்கு சட்டம் அனுமதி கொடுத்திருக்கின்றதா ? இல்லையே!

வெளி நாட்டு பத்திரிக்கை, ஐ.நா சபை மனித உரிமை ஆணையம் கூட இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை படம் பிடித்து காட்டியுள்ளது. இதற்குத்தான் அனைத்து மக்களும் இனைந்து பாடுபட்டு சுதந்திர இந்தியாவிற்காக பட்டார்களா? எத்தனை அடக்குமுறை தழும்புகள்  சுதந்திர இந்தியாவினை அந்நியரிடமிருந்து பெற இன் முகத்துடன் பெற்றனர், அது ஏன் என்றால், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கிற்கிணங்கவும், 'பாருக்குள்ளே நல்ல நாடு அது பாரத நாடு' என்ற உணர்வினை உலகிற்கு உணர்த்தவும் தான் அவ்வாறு பாடுபட்டனர். கல்லானாலும் புருஷன், புல்லானாலும் புருஷன் என்று இந்திய தேசீயத்திடன் இனைந்து நின்ற மக்களை இனியும் ஜாதி, மதம், மொழி, இனம் என்று வேறு படுத்தி தனிமைப் படுத்துவது முறையா? அது போன்ற துவேஷமான நடவடிக்கைகள் மூலம் யாரும் சர்வதேச கண்டனத்திற்கு நாம் கொடுக்கலாமா?  இந்திய மக்களுக்கு எந்தவித இழுக்கும்  ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா?

           

           

           

No comments:

Post a Comment